வள்ளலார் நோக்கில்
கருணை
முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார்,
தமிழ்ப் பேராசிரியர் (துணை), புதுவை – 605008. உலாப்பேசி :
99406 84775)
திரு அருட் பிரகாச வள்ளலார் எனப் போற்றப்பெறும்
இராமலிங்க அடிகளின் (05.10.1823-30.01.1874) இலக்கியக்கொடை அறநெறிக்கு மட்டுமின்றி
அருள்நெறிக்கும் இட்டுச்செல்லும் பெருமையுடைத்து. பக்தி நெறியில் நின்று புரட்சித்
துறவியான வள்ளலாரின் ’திருவருட்பா’ முழுதும் கருணைமயமாகவே திகழ்கின்றது. பக்தி நெறிக்கு
அடித்தளமாகும் உயிர் இரக்கம் குறித்த மிகச்சில குறிப்புகளை மட்டும் எடுத்துக்காட்டி
வள்ளலாரின் இலக்கியக் கொள்கையாக கருணையே முன் நிற்பதை எடுத்துரைக்க எண்ணியதன் விழைவாகவே
இக்கட்டுரை அமைகிறது.
வள்ளலாரும் கருணையும்
வள்ளலார் அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டிருந்ததற்கு
அவருடைய பாடல்களே அகச் சான்றுகளாகின்றன. வள்ளலாருடைய இலக்கியங்களில் கருணையை நீக்கிவிட்டு
பொருள் காண விழைதல் பயனுடைத்தன்று. கருணையுடன் பார்த்தலே கண்ணின் பயன் என்பதனாலேயே
இறையானது கண்ணினை மட்டும் எப்போதும் ஈரத்துடன் படைத்துள்ளது. இவ் உண்மையினை உணர்ந்து
அனைத்து உயிர்களிடமும் இரக்கம் கொள்ள வேண்டும் என்பதனையே வள்ளலார் தம் பாடல்களில் வழி
உணர்த்த விழைகிறார். மனித உயிர்களிடம் மிகுந்த கருணை கொண்ட வள்ளலார் விலங்குகள் மற்றும்
பயிர்களின் வாட்டத்தையும் கண்டு மிகவும் வருந்துகிறார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடி’யது ஏனெனில் பயிர் வாட்டத்தால் உயிர் வாட்டம் நிகழும் என்பதை உணர்ந்தேயாம். இதன்
வழி வள்ளலாரின் கருணையினைத் தெற்றெனத் தெளியலாம்.
பதவி இருந்தால்
– சாவே போ ய்விடும்
வயிற்றைக்
கிள்ளும் பசிக்கொடுமையிலிருந்து மட்டுமின்றி உடலிலிருந்து உயிரைப் பிடுங்கி எறியும்
மரணக் கொடுமையிலிருந்தும் விடுபட வழிகாட்டுகிறார் வள்ளலார்.
வனைந்துவனைந்
தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன்
பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே
(ஞானசரியை – 1:4,5)
என்னும் இப்பாடலின்
வழி மனித உயிர்களிடம் கொண்ட கருணையின் உச்சத்தை அறியமுடிகிறது. மனிதனைக் கடைத்தேற்ற
தம் நிலையிலிருந்து இறங்கி ; இரங்கி சத்தியம் செய்யும் அருமையினையும் காணமுடிகிறது.
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்தால் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம். சாகாக்கலை
வேகாக்கால் போகாப்புனல் இவை மூன்றையும் முறையே பின்பற்றினால் மரணக்
கொடுமையிலிருந்து நீங்க இயலும் என வழிகாட்டுகிறார். காற்றையும் நீரையும் சீராக்கும்
திறத்தில் பயிற்சி பெற்றால் சாகாக் கலை தானே
வாய்க்கும் என்பதனை இதன் வழி உணர்த்தியுள்ளார் வள்ளலார். முதல் மூன்று சொற்களின் பொருளை
உணர்ந்து பின்பற்றினால் அம்முதலெழுத்துக்களே பின் வரக் கூடிய மூன்று சொற்களின் முதலெழுத்துக்களின்
பொருளை அளித்துவிடும் என்னும் சொல்லழகினையும் இங்கு எண்ணி மகிழலாம்.
கடவுள் உள்ளம்
மனிதன் தான் செய்யும் நன்மையாலும் தீமையாலும்
கடவுளும் விலங்குமாக மதிப்பிடப்படுகிறான். மனிதன் மட்டுமே அனைத்து உயிர்களையும் காக்கும்
வல்லமையோடு படைக்கப்பட்டுள்ளான். மாறாக அனைத்து உயிர்களும் மனிதனுக்குத் துணை நிற்கும்
வகையில் மனிதன் தன்னை வடிவமைத்துக் கொண்டது மனிதனுடைய சுயநலப்போக்கின் உச்சமாக அமைகின்றது.
அவ்வாறின்றி மனிதன் கருணையுடன் வாழ வேண்டுமென்பதனை
எவ்வுயிர்த் திரளும்
என்னுயிர் எனவே
எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு
வருமிடை யூற்றை
அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது
திருப்பதம் பாடிச்
சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பா
லழிவுறா திங்கே
ஓங்கவும்
இச்சைகாண் எந்தாய் (பிள்ளைச் சிறு விண்ணப்பம், தி.பெ.தி. பா.6)
என்னும் பாடலின்
வழி உணர்த்தியுள்ளார் வள்ளலார். மனிதன் பிற உயிர்களுக்கு நன்மை செய்யும் உள்ளத்தாலேயே
இவ் வாழ்வு பயனுடை வாழ்வாக அமையும் என்பதனையும்
பிற உயிர்களுக்குக் கேடு செய்யும் வாழ்வு அழிவுறும் வாழ்வு என்பதனையும் தெளிவுறுத்தியுள்ளதைக்
காணமுடிகிறது. தமிழ் இலக்கணத்தில் குழந்தையை அஃறிணை விகுதி கொடுத்து ‘குழந்தை அழுகிறது
; சிரிக்கிறது ; விளையாடுகிறது’ எனக் கூறக் காரணம் அக் குழந்தை மனிதத் தன்மைக்குரிய
கருணையினை அறியாததாலேயே எனக் குறிப்பிடுவதும் இங்கு எண்ணத்தக்கது. “யாரிடத்தில் தயவு
அதிகப் பட்டிருக்கின்றதோ, அவரிடத்தில் கடவுளிருக்கின்றார்.” (சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்,
வள்ளலார் கண்ட சாகாக்கலை.ப.9) என்னும் கூற்றும் இங்கு எண்ணத்தக்கது.
விருப்பு வெறுப்பின்மை
வாழ்க்கை விருப்பினாலும் வெறுப்பினாலும் கேடுடையதாகிறது.
எனவே அருளாளர்கள் பற்றின்றி வாழும் வாழ்வினையே மேற்கொண்டனர். இவ் உலக வாழ்க்கையில்
பற்றின்றி வாழும் பற்றுடையோரிடமே அனைவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். தன்னலத்துடன்
வாழ்வது பர வாழ்வுக்கு மட்டுமின்றி இக வாழ்வுக்கும் கேட்டினை மட்டுமே உண்டாக்கிவிடுகிறது.
எனவே தாமரை இலையின் நீர் போல் வாழ்வோரே வாழ்வில் குறையின்றி வாழ்வதனையும் காணமுடிகிறது.
வள்ளலார் அவ்வாறே உயிர்களிடம் இரக்கம் கொண்டு வாழ்ந்தார். மக்கள் பெரிதும் விரும்பும்
பணத்தில் பற்றின்றி வாழ்ந்த நிலையினை
பணத்திலே
சிறிது மாசையொன் றிலைநான்
படைத்தவப்
பணங்களைப் பலகால்
கிணற்றிலே
எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
கேணியில்
எறிந்தனன் எந்தாய்
குணத்திலே
நீதான் கொடுக்கின்ற பொருளை
எறிகலேன்
கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே
எல்லாங் காட்டுநின் அருளைக்
கண்டனன்
இனிச்சொல்வ தென்னே (பி.சி.வி. தி.பெ.தி. பா.3)
என்னும் பாடலின்
வழி எடுத்துக்காட்டியுள்ளார். இறைப் பற்று ஒன்றே மற்ற பற்றினை எல்லாம் நீக்குமாதலால்
இறைச் சிந்தனையுடன் வாழ வேண்டும் என்பதனையும் இப்பாடலின் வழி புலப்படுத்தியுள்ளார்.
“எந்த ஜீவர்களிடத்தில் தயா விருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில்
கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப
காலங்களில் தவிர மற்ற காலங்களில் கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும்
செலுத்த வேண்டும். பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மன உருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி
; ஆன்ம உருக்கம்” (வ.க.சா. ப.10) என ம.பொ.சி எடுத்துக்காட்டியுள்ளதனையும் இங்கு எண்ணி
மகிழலாம்.
சன்மார்க்கமும்
மரணமிலாப் பெருவாழ்வும்
சன் மார்க்கம் என்பது உண்மை வழி. உண்மை ஒன்றே
என்றும் நிலைபெறுவது. அதன் வழி நின்றாலன்றி எவ்வுயிரையும் காத்தல் இயலாது. எனவே சன்மார்க்கம்
என்னும் நல் மார்க்க சங்கத்தைத் (1865) தோற்றுவித்து
அதில் அனைவரும் சேர வேண்டும் என அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டு வேண்டுகிறார்.
“சிறந்திடும்
சன்மார்க்கம் ஒன்றே பிணி. மூப்பு, மரணம்
சேராமல்
தவிர்த்திடுங்காண் தெரிந்து வம்மின் இங்கே” (திருவருட்பா.ஞானசரியை-25:3)
என்னும் இப்பாடலடிகளின்
வழி உயிர் வாழ்வை நோகச் செய்யும் பிணி, மூப்பு, மரணம் இவை மூன்றிலிருந்து விடுதலை பெற்று
வாழ வழிகாட்டியுள்ளார். “சன் மார்க்கி பெறுகின்ற ஒரே இலாபம் மரணமிலாப் பெருவாழ்வு
– அதாவது செத்துப் பிறவாத பேரின்ப சித்தி நிலை”
(வ.க.சா. ப.10) என்கிறார் ம.பொ.சி. சன்மார்க்கத்தின் நெறி நின்றால் பிறப்பு இறப்புகளை
வென்று பேரின்பப் பெருவாழ்வு வாழ முடியும் எனத் தெளிவுறுத்துகின்றார் வள்ளலார்.
உயிர்களின் சமன்பாடு
வினைப் பயனுக்கேற்ப உலகில் உயிர்கள் தோன்றுவதும்
மறைவதும் இயற்கை. உயிர்களின் பிறப்பு பை, முட்டை, நிலம், வேர்வை என்னும் நான்கு நிலைகளில்
நிகழ்வதனை
பைகளின்
முட்டையிற் பாரினில் வேர்வினில்
ஐபெற வமைத்த வருட்பெருஞ் சோதி (அருட்பெருஞ்சோதி
அகவல், தி.பெ.தி. அடி.361)
என்னும் அடிகளின்
வழி புலப்படுத்துகிறார் வள்ளலார். உயிர்கள் அனைத்தும் ஒன்று தான் உடல் மட்டுமே பிறக்கும்
இடத்தின் வழி வேறுபடுகிறது. எனவே அனைத்து உயிர்களையும் ஒன்றெனப் போற்றி கருணையுடன்
வாழ வேண்டியதன் அவசியத்தினையும் உணர்த்துகிறார்.
சொர்க்கத்திற்கு
வழி
தான் மட்டுமே உலகில் வாழத் தகுதியுடையவர் என
எண்ணி பிற உயிர்களைப் பற்றிய சிந்தனை இல்லாது வாழும் கயவரைக் கண்டு மனம் வருந்துகிறார்
வள்ளலார்.
பட்டினி
கிடப்பாரைப் பார்க்கவு நேரீர்
பழங்கஞ்சி
யாயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல்
வாழ்கின்றீர் கொட்டி போற் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே
(உறுதி கூறல், தி.பெ.தி. பா.2 அடி.3-4)
எனக் கருணையில்லாத
மனம் பித்து மனம் என்பதைத் தெளிவுறுத்துகிறார். ”நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு
அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். இவ்வருள் அன்பினாலல்லது
வேறு வகையால் அடைவது அரிது. அவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறு வகையால் வராது..
.. அந்நிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே
ஜீவகாருண்யம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதற்படியாயிருக்கிறது” (வ.க.சா. ப.15) என
ம.பொ.சி. மேற்கோள் காட்டுவது இங்கு எண்ணத்தக்கது.
உணவும் கருணையும்
வயிற்றுப் பசி தீர்த்தல் தலையாய அறம். நிறைவு
கொடுக்கக் கூடிய ஒரே அறமாகத் திகழும் பசி நீக்குதலையே தம்முடைய அடிப்படைக் கடனாக எண்ணியவர் வள்ளலார். எனவே சத்திய தரும சாலையை நிறுவினார்.
அவர் ஏற்றிய அடுப்பு (1867) இன்றும் பலர் பசியைத் தீர்த்து வருகிறது. எந்நிலையிலும் எவரும் பசித்திருக்கக் கூடாது என
எண்ணி அதற்கான வழி வகை செய்த வெள்ளாடை உடுத்திய துறவியின் அருஞ்செயலை எவராலும் எண்ணிப்பார்க்கக்
கூட இயலாது. இதற்குக் காரணம் உயிர்களிடம் காட்டிய
கருணையே என உணரலாம்.
உணவு அளிக்காதிருத்தல் மட்டும் பாவமன்று. உணவு
அளவுக்கு அதிகமாக உண்ணுவதும் பாவம் எனக் கருதியவர் வள்ளலார். ஏனெனில் அளவுக்கு அதிகமான
உணவு பிற உயிர்களின் உடைமை என எண்ணியவர் வள்ளலார். பசிக்காக மட்டுமே உண்ணவேண்டும்
; சுவைக்காக உண்ணுதல் கூடாதென தன் அடியார்களுக்கு வாழ்ந்து வழிகாட்டியுள்ளதனை
“உற்றதா
ரணியில் எனக்குல குணர்ச்சி
உற்றநாள்
முதல் ஒரு சிலநாள்
பெற்றதாய்
வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப்
பேருண
வுண்டனன் சிலநாள்
உற்றவர்
நேயர் அன்புளார் வாட்டம்
உறுவதற்
கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை
அல்லால் சுக உணாக் கொள்ள
மனநடுங்
கியதுநீ அறிவாய்” (தி.பெ.தி. பிள்ளைப் பெரு
விண்ணப்பம்:43)
என்னும் பாடலின்
வழி உணர்த்தியுள்ளார். தாய் மனமும் விருந்துக்கு அழைத்தோர் மனமும் நோகாதிருக்கவே உணவு
நிறைவாக உண்டதனை எடுத்துக்காட்டியுள்ளார் வள்ளலார். மன வாட்டம் தீர வேண்டுமாயின் வயிற்றின்
வாட்டத்தை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையும் எண்ணத்தக்கது. ’ஜீவகாருண்யமே
மோட்ச வீட்டின் திறவுகோல்’ என்பதை நன்கு உணர்ந்து பிற உயிர்களின் பசியாற்றுதல், நோய்
நொடிகள் அகல உதவி செய்தல், அறியாமையை அகற்றுதல் போன்ற ஜீவ தயவுப் பணிகளை எந்தவித எதிர்பார்ப்பும்
உள்நோக்கமும் இன்றித் தொடர்ந்து செய்ய வேண்டும். (கவனகர் முழக்கம்,திச.2013 ப.27) என்னும்
கொள்கையுடன் வாழ்ந்த வள்ளலாரின் பெருமையினை கனகசுப்புரத்தினம் எடுத்துரைப்பதையும் இங்கு எண்ணி
மகிழலாம்.
நாடாள்வோரின் தகுதி
வீடு சிறக்க மட்டுமின்றி நாடு சிறக்கவும் உலகம்
சிறக்கவும் அடிப்படையாக வேண்டியது கருணையே. அக் கருணை மனப்பான்மை இல்லாததாலேயே போரும்
பூசலும் விரவிகிடக்கிறது. இதனைத் தீர்க்கவே அரசு கோடிக்கணக்கான பொருள் வளத்தையும் உயிர்
வளத்தையும் இழந்து வருகிறது. எனவே அருளுடைய ஆட்சி மலர வேண்டுமென்பதனை
கருணையிலா
ஆட்சி கடுகி ஒழிக
அருணயந்த
சன்மார்க்க ராள்க – தெருணயந்த
நல்லோர்
நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
தெல்லோரும்
வாழ்க விசைந்து (சமரச நிலை, தி.பெ.தி.
பா.4)
என்னும் பாடலின்
வழி தெளிவுறுத்துகிறார் வள்ளலார். நல்லோர் வாழும் வகையில் ஆட்சி நடைபெற்றாலே உயிர்
வளமும் இயற்கை வளமும் செழிக்கும் என்பதனையும் இதன் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.
வள்ளலாரின் பெருங்கருணை
மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற வள்ளலார் தம்முடைய
தவப்பயன் அனைத்து உயிர்களுக்கும் உரியதாக அமையவேண்டும் என எண்ணினார். ’ஆடையிலே மணம்
புரிந்த மணவாளனாகிய’ இறைவன் அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டு காக்க வேண்டுமென
எல்லார்க்குங்
கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
எல்லார்க்குந்
துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும்
பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும்
செய்யாமை யாதுகுறித் திசையெனக்கே (வேண்டுகோள் தி.பெ.தி. பா.67)
என்னும் பாடலின்
வழி வேண்டுகிறார். கடையவனாக இருப்பினும் அனைத்து உயிரிடமும் கருணை கொண்டால் எம்பெருமான்
தானே உவந்து அருள் கொடுப்பான் என்பதனைத் தம் வாழ்வின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.
இறை அச்சம்
இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம்
என இயற்கைப் பேராற்றலின் கருணையினை உணர்ந்த வள்ளலார் அவ் அருட்பெருஞ்ஜோதியின் ஒளியில்
மூழ்கினார். அச் சோதியின் பெருமையினை உலகுக்கு எடுத்துரைத்தார். அப் பேராற்றலிடம் கொண்ட
மதிப்பே அவருக்கு அச்சத்தை உண்டாக்கிற்று. அவ் அச்சமே ஆணவத்தை அழித்து கருணையினைப்
பெருக்கியுள்ளதனை
கையுற
வீசி நடப்பதை நாணிக்
கைகளைக்
கட்டியே நடந்தேன்
மெய்யுறக்
காட்ட வெருவிவெண் துகிலால்
மெய்எலாம்
ஐயகோ மறைத்தேன்
வையமேல்
பிறர்தம் கோலமும் நடையும்
வண்ணமும்
அண்ணலே சிறிதும்
பையநான்
ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல்
பயமிகப் படைப்பேன் (திருவருட்பா :3461)
என்னும் பாடலின்
வழி புலப்படுத்துகிறார் வள்ளலார். பெரியோர்களிடம் கொள்ளும் அச்சம் ’அஞ்சுவது அஞ்சல்’
எனக் குறிப்பிடும் அழகினையும் அதனாலேயே தனிப்பெருங்கருணையின் பெருமையினை உணரமுடியும்
என்பதனையும் தெளிவுறுத்தியுள்ளார்.
நிறைவாக
நோக்கு
என்பதே கருணையுடையதாக அமைய வேண்டும் என்னும் நோக்கிலேயே ’திருவருட்பா’ அருளப்பட்டுள்ளதனை
உணரமுடிகிறது. மனித உயிர், விலங்கு, பயிர் என அனைத்து நிலைகளிலும் அக்கருணை வளர்ச்சியடைவதே
வாழ்வின் பயனாகும் என்பதனை வள்ளலார் தெளிவுறுத்தியுள்ளார்.
எவையெல்லாம்
துன்பமோ அவற்றையெல்லாம் நீக்க எண்ணிய கருணையே வள்ளலாரின் கருணை. மருத்துவர் உடற் பிணியை
நீக்குவர். ஞானிகள் உயிர்ப் பிணியை நீக்குவர். வள்ளலார் இவ் இரண்டுக்குமே மருத்துவராக
நின்று வழிகாட்டியுள்ள திறத்தினை உணரமுடிகிறது.
வீட்டு
நலம் நாட்டு நலம், உலக நலம் என ஒவ்வொரு படிநிலையிலும் கருணை செழிக்க வேண்டியதன் அவசியத்தினை
வள்ளலாரின் பாடல்கள் தெள்ளிதின் உணர்த்துகின்றன.
வாழையடி
வாழை என வந்த திருக்கூட்டத்தின் தலைமையிடத்தைப் பெற்ற திருவள்ளுவர், திருமூலர், திருஞான
சம்பந்தர், மாணிக்க வாசகர், பட்டினத்தார், தாயுமானவர் அருளாளர்கள் வரிசையில் வள்ளலார்
உயிர்களின் கடைத்தேற்றத்திற்குப் பாடுபட்ட கருணையாளராகத் திகழ்கிறார் என்பதனை உணர்வுடையோர்
உணர்வர்.
*****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக