தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

சிறுபஞ்ச மூலத்தில் அணிநலன்கள் - Classical Literature Cirupanja moolam


சிறுபஞ்ச மூலத்தில் அணிநலன்கள்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப் பேராசிரியர் (துணை), புதுச்சேரி
உலாப்பேசி : 9940684775

        சங்க இலக்கியங்கள் தங்க இலக்கியங்கள் எனப் போற்றப் பெறுவதற்கான காரணங்கள் பல. தங்கம் என்றும் தனித்தன்மை வாய்ந்ததாக தீயில் கூட மெருகேறும் தன்மையுடையதாக விளங்குவதைப்போலவே எக்காலத்தும் நிலைத்து நிற்கும் பெருமையுடையனவாக சங்க இலக்கியங்கள் திகழ்ந்தன ;திகழ்கின்றன ; திகழும். அத்தகைய இலக்கியங்களின் பெருமைக்கு அணி சேர்க்கும் சிறப்புடையனவாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அமைந்துள்ளன. அத்தகைய இலக்கியங்களுள் சிறுபஞ்ச மூலத்தின் அணிநலன்களைக் காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.
சிறுபஞ்ச மூலம்
        சிறுமையை உண்டாக்கக் கூடிய பஞ்சத்தின் (வற்கடம்) கொடுமையினை அறுக்கும் மாரி போல் பெருமையுடையதாதலால் இந்நூல் சிறுபஞ்ச மூலம் எனக் குறிக்கப்படுகிறது.மழை வந்தால் எல்லா வளமும் தானே கிடைக்கும் என்பதும் மழை பொய்ப்பின் எத்தகைய வளமுடைய நாடும் குன்றும் என்பதும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்கு.
        கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
        எடுப்பதூஉம் எல்லாம் மழை                                  (திருக்குறள் – 15)

என்னும் குறள் மழை எவ்வாறு கெடுக்கும் எவ்வாறு கொடுக்கும் என்பதன் பெருமையினை அளபெடையின் வழி விளக்கியுள்ளதும் இங்கு எண்ணத்தக்கது.இக்கூற்றினை நன்கு உணர்ந்த காரியாசான் உடல் நிலையின் வறுமையைப் போக்க மழை பொழிவதுபோல் உள்ள நிலையின் வறுமையைப் போக்கும் வழிமுறைகளைப் பாடல்களாகப் பொழிந்துள்ளார். இதனை
        ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால்களவொடு
        ஒத்த இவைஅல ஓர்நால்இட்டு – ஒத்த
        உறுபஞ்ச மூலம்தீர் மாரிபோல் கூறீர்
        சிறுபஞ்ச மூலம் சிறந்து              (சி.ப.மூ. பா – 2)

என்னும் பாடல் வழி புலப்படுத்துகிறார்.சிறுபஞ்ச மூலம் என்பது சிறிய ஐந்து வேர்களைக் (கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி) கொண்ட மூலிகை.அது எப்படி உடலுக்கு நன்மை செய்யுமோ அப்படி இந்நூலிலுள்ள வெண்பா ஒவ்வொன்றிலும் ஐந்து கருத்துக்கள் உளத்திற்கு நன்மை செய்கின்றன எனவும்குறிப்பிடப்படுகிறது.இப்பாடலில் நூலின் இயல்பினைக் குறிக்கும் போதே மாரி போல் பஞ்சத்தைத் தீர்க்கும் எனக் கூறியுள்ளதன் வழி எடுத்துக்காட்டு உவமை பொருந்தியுள்ளதனையும் காணமுடிகிறது.
காரியாசானின் கவித்துவம்
        சிறுபஞ்சமூலத்தை இயற்றிய காரியாசான் இலக்கிய நிலையில் சிறந்திருப்பதற்குக் காரணம் அந்நூலில் அமைந்துள்ள இலக்கணக் கட்டமைப்பே என்பதனை உணரமுடிகிறது. தொகை நிலைச் செய்யுளுக்குரிய இலக்கணத்தை
        தொகை நிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
        ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
        பொருள் இடம் காலம் தொழில் என நான்கினும்
        பாட்டினும் அளவினும் கூட்டிய வாகும்                       (தண்டி-பொது :5)
என்னும் பாடல் வரையறுக்கிறது.அவ்வகையில் ஒரே பொருளான அறநெறிகளை மையமாகக் கொண்டு அளவடி வெண்பா வடிவில் பாடப்பெற்றுள்ளதனையும் காணமுடிகிறது.சிறுபஞ்சமூலத்தின் பாடல்கள் செய்யுள் அமைப்பு முறையால் மட்டுமின்றி பொருளாலும் சிறந்து விளங்குவதனைக் காணமுடிகிறது.இவ் இரண்டிற்கு அப்பாலும் அணிநயத்திலும் சிறப்புறும் வகையில் பாடலைப் புனைந்துள்ளார் காரியாசான். தன்னுடைய நூல் அறியாமை என்னும் இருளிலிருந்து அறிவுடைமை என்னும் நிலைக்கு அழைத்துச் சென்றதனை
        மல்லிவர்தோண் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
        பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால் – கல்லா
        மறுபஞ்சந் தீர் மழைக்கை மாக்காரி யாசான்
        சிறுபஞ்ச மூலஞ்செய் தான்.                          (சி.ப.மூ. பா – 7)

என்னும் பாயிரப் பாடல் எடுத்துக்காட்டியுள்ளது.இப்பாடலில் வேற்றுமையணி பொதிந்துள்ளதனைக் காணமுடிகிறது.கொடுக்கும் பண்பால் மாரியும்
(மழை) காரியும் (காரியாசான்) ஒன்றுபோல் இருப்பதனை எடுத்துக்காட்டி மாரி பயிர்களைக் காப்பதனையும்  காரி உயிர்களைக் காப்பதனையும் எடுத்துக்காட்டுகிறார். முதலில் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையைக் கூறி பின்னர் வேறுபடுத்தும் பெருமையினை எடுத்துக்கூறுவது என்னும் நிலையினைக் காணமுடிகிறது.
        கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
        வேற்றுமைப் படவரின் வேற்றுமை அதுவே
(தண்டி –பொரு – வேற்றுமை : 1)
என்னும் தண்டி  இலக்கண நூற்பா வேற்றுமையணிக்கு வரையறை கூறியுள்ளதும் இங்கு எண்ணத்தக்கது.
அணி நயம்
        மொழியின் பெருமை சொல்லாலும் பொருளாலும் மட்டுமின்றி அதனை எடுத்துரைக்கும் முறையாலும் சிறப்படைகிறது.அத்தகைய சிறப்பினையே அணி இலக்கணம் எனத் தனி இலக்கணம் அமைத்தனர் தமிழர்.மொழி வளம் உடையோரால் மட்டுமே அணி நலத்துடன் கூடிய பாடலைப் படைக்க இயலும்.அணிநயம் உடைய பாடலே காலம் கடந்து நிற்கும் பெருமையுடையனவாகத் திகழும் என்பதற்கு இலக்கணமாக சிறுபஞ்சமூலம் இயற்றப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் உவமை அணியின் நிலையினை
        உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை (தொல்.:1224)
என்னும் நூற்பா எடுத்துரைக்கிறது.உவமை என்பது எல்லோர்க்கும் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் அமைவதோடு மட்டுமின்றி உயர்ந்த பொருளுடனே ஒப்பிடவேண்டும் எனவும் வரையறுக்கிறது தொல்காப்பியம். அவ்வாறு உவமிக்கப்படும்போது பெருமை சிறுமை என்னும் நோக்கில் இல்லாது மனக் குறிப்பின் வழி தோன்றும் நிலையினை
பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடுடைய (தொல். :1231)

என்னும் நூற்பாவின் வழி புலப்படுத்துகிறார் தொல்காப்பியர்.  காரியாசானும் அவ்வாறே தம் குறிப்பிற்கேற்றவாறு உவமையைக் கையாண்டுள்ளதனை
        குளந்தொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
        உளந்தொட் டுழுவயல் ஆக்கி – வளந்தொட்டு
        பாகு படுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
        ஏகுஞ் சுவர்க்கத் தினிது                               (சி.ப.மூ. பா – 66)

என்னும் பாடலின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. மக்களுக்கும் விலங்குகளுக்கும் பயனளிக்கும் - குளங்களை வெட்டி ; மரங்களை நட்டு ;  நடந்து செல்வதற்கான பாதையினை சீர்செய்து ; தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றி, கிணற்றை உண்டாக்கும் செயலைச் செய்பவன் உயர் நிலையினை அடைவான் எனக் கூற விழைகிறார் காரியாசான். அத்தகைய பண்புடையோர் பெருமை அடையும் நிலையினைத் தாம் குறிப்பால் அறிந்த சுவர்க்கத்தை அடைவர் எனக் குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது.அறியாத ஒன்றினை அறிந்ததன் வழி சொல்வதே உவமையின் பெருமையாகும்.அத்தகையநற்பண்புடையோர் சுவர்க்கத்தினை அடைவர் எனக் குறிப்பிட்டுள்ளதனையும் உணரமுடிகிறது.
உருவக அணி
        உவமிக்கப்படும் பொருளுக்கும் உவமைப் பொருளுக்கும் வேற்றுமை இல்லாதவாறு கூறுவது உருவகம் எனக் குறிக்கப்படுகிறது.
        உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
        ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும்           (தண்டி- பொரு :35)

என்னும் நூற்பா உருவகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளதனைக் காணமுடிகிறது. தன்மானம் என்பது குடும்ப மானமே என்பதனை உணர்ந்து தன்னலம் விழையாது தன்னைச் சார்ந்தார் நலமே பெரிதென எண்ணும் கற்புடைய பெண்ணானவள் கணவனுக்கு அமிர்து ; கற்ற செருக்கின்றி கற்றதன் பயனறிந்து பணிவுடன் வாழ்பவன் உலகத்தார்க்கு அமிர்து ; நன்மையை மட்டுமே செய்யக்கூடிய நாடு அங்குள்ள அனைத்து உயிர்களுக்கும் அமிர்து ; மேகத்தைத் தொடும் கொடியுடைய வேந்தன் அந்நாட்டிற்கே அமிர்து. சேவகனும் மன்னனின் எண்ணமறிந்து செயல்படத்தக்கானாயின் அவன் வேந்தனுக்கு அமிர்து  என்பதனை
        கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்து
        நற்புடைய நாடமிர்து நாட்டுக்கு – நற்புடைய
        மேகமே சேர்கொடி வேந்துஅமிர்து சேவகனும்
        ஆகவே செய்யின் அமிர்து                     (சி.ப.மூ. பா – 4)

என்னும் பாடலின் வழி உணர்த்தியுள்ளார்.அமுது போன்ற பெண் எனக்குறிப்பிடாது அமிர்தே பெண் எனவும் அமிர்து போன்ற நாடெனாது நாடமிர்துஎனவும்உருவகப்படுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது.
பின்வரு நிலை அணி
        ஒரு செய்யுளில் முதன்மை அழகாவது சொல்லழகே.இதனை வலியுறுத்தும் வகையிலேயே எதுகை, மோனை, இயைபு, முரண் எனப் பல நயங்கள் கையாளப்படுள்ளதனைக் காணமுடிகிறது.ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து அப்பாடலின் சிறப்புக்குப் பெருந்துணையாக நிற்பதனையும் காணமுடிகிறது.அவ்வாறு செய்யுளில் அழகு சேர்க்கும் நயத்தை பின்வருநிலையணி எனக் குறிப்பிடப்படுகிறது. இதனை
        முன்வரும் சொல்லும் பொருளும் பலவயிற்
        பின்வரும் என்னிற்பின்வரு நிலையே                        (தண்டி- பொரு : 41)

எனத் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது.அவ்வாறு வரும் சொற்கள் ஒன்றுபோலிருப்பினும் பொருளால் மாறுபடுவதுண்டு.அவ்வாறு அமையும் அணி சொற்பின் வருநிலையணி எனக் குறிப்பிடப்படுகிறது.

        உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டு
        இடம்பொழிய வேண்டுமேல் ஈகை – மடம்பொழிய
        வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை
        யீண்டின் இயையும் திரு                                       (சி.ப.மூ. பா – 6)

என்னும் சிறுபஞ்சமுலப் பாடல் உடம்பு (பிறப்பு) ஒழிய (பொழிய) வேண்டுமெனில் உயர் தவத்தைச் செய்ய வேண்டும். இருக்கும் இடம் புகழ் பெருக (பொழிய) வேண்டுமாயின் மற்றவர்களுக்குக் கொடுத்து வாழ வேண்டும் எனவும் கருணை நிறைய (பொழிய) வேண்டுமாயின் அறிவின் வழி நடத்தல் வேண்டும் எனவும்  மூன்று இடங்களில் பொழிய என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. பொழிய என்பது ஒழிய, பெருக, நிறைய என்னும் பொருளைக் குறித்து இப்பாடல் சிறப்புற புனையப்பட்டுள்ளது தெளிவாகிறது.
        சொல்லும் பொருளும் ஒன்று போலவே அமைந்து பாடல் சிறப்புறத் துணை செய்யும் நயத்தினை சொற்பொருட்பின்வரு நிலையணி எனக் குறிப்பிடுவர்.
        படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாக் – நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவகர்க்கு
வாடாத வன்கண் வனப்பு                             (சி.ப.மூ. பா – 7)

என்னும் இப்பாடலில் நால்வகைப் படைக்கு யானைப்படை அழகாகும் (வனப்பாகும்).பெண்ணின் இடைக்கு மெல்லிய தன்மை அழகாகும் (வனப்பாகும்).ஒழுக்கத்திற்கு மாறாத சொல் அழகாகும் (வனப்பாகும்).ஆட்சி நடத்தும் செங்கோலுக்கும் கூறியதை நிறைவேற்றும் மாறாத சொல்லே அழகாகும் (வனப்பாகும்).படை வீரர்க்கு வாடாத வீரமே அழகாகும் (வனப்பாகும்) எனக் கூறுகிறார் காரியாசான்.இப்பாடலில் வனப்பு என்னும் சொல் சொல்லாலும் பொருளாலும் ஒன்று போலவே அமைந்து பாடலுக்கு நயம் சேர்த்துள்ளதனைக் காணமுடிகிறது. அவ்வாறே கண்ணுக்கு அழகு கருணையால் என்றும்  காலுக்கு அழகு இரப்பதற்குப் பிறரிடம் செல்லாததால் என்றும் ஆய்வுக்கு அழகு முடிவைனைத் தெளியக் கூறுதல் என்றும் இசைக்கு அழகு நன்றெனக் கூறுதல் என்றும் புகழுடைய வேந்தனுக்கு அழகு மக்களை வாட்டாது வளமாகக் காத்தல் என்றும் காரியாசான் அறிவுறுத்துவதனை

கண்வனப்பு கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண் வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு                      (சி.ப.மூ. பா – 9)

என்னும் பாடல் எடுத்துக்காட்டுகிறது.இப்பாடலிலும் அழகு என்னும் பொருளுடைய வனப்பு என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து அணி சேர்த்துள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

முரண் அணி
        முரண் என்பது ஒரு சொல்லுடன் அதற்கு எதிர்மாறான சொல்லினை அமைத்தல்.செய்யுளின் நயத்திற்கு முரண் தொடையும் சிறப்பு சேர்ப்பதனாலேயே கீழ்க்கணக்கு  நூல்கள் முரண் தொடையினைக் கையாண்டு சிறப்புற்றிருப்பதனைக் காணமுடிகிறது. முரண் என்பதனைத் தண்டி ஆசிரியர் விரோதம் எனக் குறிப்பிட்டு
        மாறுபடு சொற்பொருள் மாறுபாட்டு இயற்கை
        விளைவுதர உரைப்பது விரோதம் ஆகும்     (தண்டி- பொரு :81)

என இலக்கணம் வரையறுத்துள்ளதனைக் காணமுடிகிறது. காரியாசானும்  சொல், பொருள் என்னும் இரு நிலைகளில் முரணை அமைத்து பாடியுள்ளதற்கு
               
பூத்தாலும் காயா மரமுள நன்றறியார்
மூத்தாலு மூவார்நூல் தேற்றாதார் – பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
உரைத்தாலுஞ் செல்லாது உணர்வு                   (சி.ப.மூ. பா – 23)

என்னும் பாடல் சான்றாகின்றது.பூத்தால் காய்க்க வேண்டும் என்பது இயற்கையின் பொது இயல்பு.அவ் இயற்கையினின்று மாறுபட்ட சில மரங்களும் உண்டு.அம்மரங்களைப் போல் கற்றுத் தெளியாதவர் மூத்தாலும் அறிவினால் முதிர்ச்சி அடையாதவராகவே இருப்பர். கடினப்பட்டு பாத்தி கட்டி விதைத்தாலும் முளைக்காத வித்தும் உண்டு .அவ்வாறே எதையும் ஏற்க மனமில்லாத ஆணவம் உடைய பேதைகள் எத்தனை நன்மை தரக்கூடிய சொற்களை எவ்வளவு உணர்ச்சியுடன் எடுத்துரைப்பினும் உணர்வற்றவராக இருப்பர். இப்பாடலில் பூத்தாலும் என்னும் சொல்லுக்கு முரணாக பூக்காது என்னும் சொல் அமையாது காயாது என்றும் மூத்தாலும் என்னும் சொல்லுக்கு முரணாக மூவாது என்றும் புதைத்தாலும் என்னும் சொல்லுக்கு முரணாக எழுகின்ற என்னும் சொல் அமையாது நாறாத என்றும் உரைத்தாலும் என்னும் சொல்லுக்கு முரணாக உரைக்காத என்னும் சொல் இடம்பெறாது  செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதனைக்  காணமுடிகிறது. இதன் வழி ஒரே பாடலில் சொல்லாலும் பொருளாலும் முரண் நயத்தைக் காரியாசன் கையாண்டுள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

இயல்பு நவிற்சி அணி

        செய்யுளுக்கு அழகு என்பது அதன் எளிமைத் தன்மையினாலும் அமைதல் உண்டு.உள்ளதைக் கூறுதல் என்பதும் செய்யுளுக்கு அணி சேர்க்கும் என்பதனைப் புலவர்கள் தங்கள் செய்யுளின் வழி நிறுவியுள்ளனர்.இவ்வகைச் செய்யுளை தன்மை அணி எனத் தண்டி ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
       
        எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
        சொன்முறை தொடுப்பது தன்மையாகும்                      (தண்டி- பொரு : 28)

என இயல்பான நிலையினை அதற்குரிய சொற்களால் உரைக்கும் நயத்தையே தன்மை அணிக்குரிய இலக்கணமாக தண்டியாசிரியர் வரையறுத்துள்ளதனைக் காணமுடிகிறது.நாக்கின் சுவையினைக் கட்டுப்படுத்த இயலாது அளவுக்கு அதிகமாக உண்பது தீமையினையே உண்டாக்கும் இதனை உணர்ந்து உண்ணாது நோற்பது உடலுக்கும் மனதுக்கும் இயல்பான நன்மையை உண்டாக்கும். விருந்தினர் மனம் நோகாதவாறு வரவேற்பது இல்லறத்தார்க்கு இயல்பாகும்.எளியாரை இகழ்ந்துரைத்தல் தீய குணமுடையோர்க்கு இயல்பாகும்.பிறருடைய இல்லத்தை (மனைவியை) நாடாதது நன்று தீதுணர்ந்த அரியவர்க்கு இயல்பாகும்.பிறர் கையிலிருந்து பெற்று உண்ணாத கொள்கை பெரியவர்க்கு இயல்பாகும் என்கிறார் காரியாசான்.

        உண்ணாமை நன்றுஅவா நீக்கி விருந்துகண்மாறு
        எண்ணாமை நன்றுஇகழல் தீதெளியார் – எண்ணின்
        அரியர்ஆ வார்பிறர்இல் செல்லாரே உண்ணார்
பெரியார் ஆவார்பிறர் கைத்து                                        (சி.ப.மூ. பா – 52)

என்னும் இப்பாடல் உடல் மற்றும் மனதின் இயல்பினையும், இல்லறத்தாரின் இயல்பினையும், தீயோரின் இயல்பினையும், அரியவரின் இயல்பினையும் பெரியவரின் இயல்பினையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்பாடலில் உள்ளதை உள்ளவாறே எடுத்தியம்புள்ள திறத்தினை அறியமுடிகிறது.

நிறைவாக

        இலக்கண வகையுள் அணி இலக்கணமே இலக்கியத்தின் நயத்திற்குப் பெருந்துணையாக நிற்பதனால் புலவர்கள் அணி இலக்கணத்துடன் பாடல்களைப் புனைந்துள்ளதனைக் காணமுடிகிறது.
அவ்வரிசையில் காரியாசான் அறத்தின் பொருளை அணிநயத்துடன் பாடியுள்ள திறத்திற்குச் சான்றாக
சிறுபஞ்சமூலம் படைக்கப்பட்டுள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

        சிறுபஞ்சமூல நூலின் இயல்பினைக் கூற வந்த காரியாசான் மாரி போல் இந்நூல் உலகத்தவர்க்கு நன்மையைச் செய்யும் என்னும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளதனைக் குறிப்பிட்டுள்ளதன் வழி உவமையணியினைத் தொடக்கம் முதலே கையாண்டுள்ளதனைக் காணமுடிகிறது.
       
        இந்நூலின் பாயிரமானது உடலுக்கு மருந்து நன்மை செய்வது போல் உளத்திற்கு மருந்தாக சிறுபஞ்சமூலப் பாடல்கள் அமைந்துள்ளதனை எடுத்துக்காட்டுகிறது.இதன்வழி பாயிரப் பாடலும் அணிநலத்துடனே அமைந்துள்ளதனையும் அறிந்துகொள்ள முடிகிறது.

        உள்ளதை உள்ளவாறே கூறும் இயல்பு நவிற்சி முதல் அணிகளுக்குத் தாயாக விளங்கும் உவமை அணி வரை பல்வேறு அணி நயங்களைக் கொண்டதாக சிறுபஞ்ச மூலம் சிறப்பதனைக் காணமுடிகிறது.

        சொல்லால் மட்டுமின்றி பொருளாலும் சிறக்கச் செய்யும் அணி நலன்களான பின்வரு நிலை, முரண், உருவகம் எனப் பல அணிநலன்களைக் கையாண்டுள்ளதன் வழி சிறுபஞ்சமூலம்சிறந்த அற இலக்கியமாக மட்டுமின்றி அணி இலக்கியமாகவும் சிறக்கிறது எனத் தெளியமுடிகிறது.

******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக