தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

தலையங்கத்தின் சுவடுகள் - Tamil Journalism - 1


தலையங்கத்தின் சுவடுகள் - Tamil Journalism - 1
        ஒரு அரசின் எண்ணங்களையோ ஒரு நிறுவனத்தின் எண்ணங்களையோ மக்களுக்குக் கொண்டு செல்வது என்பது முரசறைவதில் தொடங்கி இன்று கணினி (உலாப்பேசியில்) வழி செல்வது வரை வளர்ந்துவிட்டது. செய்திகளைத் தேடி மக்கள் வந்த நிலை மாறிவிட்டது. மக்களைத்தேடிச் செல்வதில் செய்திகள் முன்னிற்கின்றன. இதற்காக ஒவ்வொரு செய்தி நிறுவனத்தாரும் முந்திக்கொள்ள விழைகின்றனர். காலத்தால் முந்திக்கொள்ளும் நிலையைக் கொண்டே தங்களைத் தரமுடையவர்களாக்க் காட்டிக்கொள்ளும் நிலை இருந்தது. இன்று வானொலி தொலைக்காட்சி ஊடகங்களினால் இத்தகைய நிலை மாறிவிட்டது. மின்னல் செய்தி என்னும் தலைப்பில் நிகழ்வு நடந்த ஒரிரு நிமிடங்களிலேயே செய்திகளைச் சென்று சேர்ப்பதில் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. எவ்வாறெனினும் செய்திகளைச் சென்று சேர்ப்பதே இதழ்களின் பணியாக இருப்பது தெளிவு    கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காகத் தோன்றிய இதழ்களுக்கு கிறித்துவ சமயப் பரப்பலே அடிப்படையாயிற்று. ”1578 ஆம் ஆண்டில் கேரளப் பகுதியில் உள்ள கொல்லத்தில் போர்த்துகீசிய பாதிரிமார்கள் 16 பக்கங்களைக் கொண்டகிறிஸ்டியன் டாக்டிரின்என்ற தமிழ்ப் பிரசுரத்தை வெளியிட்டனர். (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 2-3) என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
இதழாளர்கள்
        செய்திகளைக் கொண்டு சேர்ப்பது இதழ்களின் தொடக்கப்பணியாக இருந்தாலும் பயனுடைய, தரமானச் செய்திகளைத் தருவது அதனுடைய வளர்ச்சி நிலையாக அமைந்தது.       சமூக அக்கறை கொண்டவர்களே இதழாளர்களாவதற்குரிய தகுதியினைப் பெறுகின்றனர். பொருளுக்காகவும் புகழுக்காகவும் இதழ்களைத் தொடங்குவதால் அதன் தரத்தினைப் பாதுகாக்க இயலாது. சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராய் இதழ்களின் வழி சமூகச் சிந்தனைகளுக்கு உரமூட்டினார். இந்திய மொழி இதழியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மிகச் சிறந்த சமூகச் சிந்தனையாளரும் சீர்திருத்தவாதியுமான ராஜாராம் மோகன் ராய்  என நாதிக். கிருஷ்ணமூர்த்தி, இந்திய இதழியலில் (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 1) குறிப்பிடும் கூற்று இங்கு எண்ணத்தக்கது. “தம்முடைய சமுதாயச் சீர்திருத்தப் பணிக்காகவே இராஜராம் மோகன்ராய் 1821-ல் சம்பத் கமுதி என்ற பெயரில் வங்காள இதழைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து மீரத்-அல்-அக்பர் என்ற பாரசிக வார இதழைத் தொடங்கினார். இரு பத்திரிகைக்கும் அவரே ஆசிரியராகப் பொறுப்பேற்று வெற்றியுடன் நடத்தினார் (இதழின் வளர்ச்சியும் மொழி பெயர்ப்பும் ப. 147) எனக் கு.முத்துராசன் குறிப்பிடுகிறார்
புலானாய்வில் இதழ்கள்
        மக்களுக்கு உண்டாகும் குறைகளை நீக்கவே இதழ்கள் தோன்றின. முதலில் தகவலைத் தெரிவிக்கும் ஊடகமாகத் தொடங்கிய இதழ்கள் மக்களுக்குரிய தேவைகளை அரசுக்கும் , அரசுக்குத் தேவையானத் தகவல்களை மக்களுக்கு அளிப்பதற்கும் உரிய கருவிகளாக மாறியுள்ளன. மக்களுக்குரிய குறைகளைத் தீர்க்க வேண்டிய பாதுகாக்க வேண்டியவை தம் நிலையிலிருந்து வழுவியபோது அவர்களுக்கு இதழ்கள் துணைநின்றன. அவற்றுள் புலனாய்வு இதழ்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியாவில் முதலில் தோன்றிய இதழே மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அமைந்தது.      இந்தியாவில் 1780 இல் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் வெளியிடப்பட்ட பெங்கால் கெசட் என்னும் இதழ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழல்களை வெளியிட்டது என்று அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் இதழ் பெங்கால் கெசட் அந்த முதல் இதழிலேயே புலனாய்வு இதழ்களுக்கான விதை ஊன்றப்பட்டது என்று கருதலாம். (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 93) இக் கூற்றின்வழி மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பனவாகவே இதழ்கள் விளங்கியதனை அறிந்துகொள்ள முடிகிறது.
        விடுதலைக்குப் பின்னர் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. எனினும் இந்தியருக்கு எதிராக இந்தியரே செயல்பட்ட நிலையினைக் கண்டிக்கும் வகையில் புலனாய்வு இதழ்கள் பெரும் பங்காற்றின. ஏழைகள் காவல்நிலையங்களுக்குச் செல்வதைக்காட்டிலும் இதழ்களை நாடுவதன் வழி தீர்வு காண இயலும் என எண்ணினர். அவ் எண்ணம் சிறப்பாகச் செயல்பட்டதால் பல புலானாய்வு இதழ்கள் தோன்றின. ”தமிழில் புலனாய்வு இதழை முதன்முதலில் வெளியிட்ட பெருமை ஜுனியர் விகடனைச் சேரும். (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 93)” என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
இதழ்களின் போக்கு
        மக்களுக்கு நன்றியுணர்வுடன் திகழ வேண்டிய இதழ்கள் சில நேரங்களில் ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு நடுவுநிலைமையிலிருந்து வழுவி விடுகின்றன. இன்றைய நிலையிலேயே அவ்வாறெனின் வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில் இதழாளர்களின் நிலை எத்துணைக் கொடுமையுடையதாக இருந்திருக்கும் என்பதனை ஒருவாறு உணரலாம். அரசாட்சி செய்தோர் கடுமையானச் சட்டங்களால் இதழாசிரியர்களை முடக்கிப்போட்டு, அரசுக்கு சாமரம் வீசும் பணிப்பெண்களாக இதழ்களை பயன்படுத்திக் கொண்டனர். ”இந்திய விடுதலைக்குமுன் 1979 இல் வெல்லஸ்லி பிரபு முதன்முதலில் இதழ்களுக்கான ஒழுங்கு முறையினைச் சட்டமாகக் கொணர்ந்தார். அதில் அவர் ஆறுவிதிமுறைகளை வகுத்தார். அதன்படி ஒவ்வொரு இதழிலும் அச்சிடுவோர், ஆசிரியர், உரிமையாளர் பெயர்களை வெளியிடுதல், அரசின் தலைமைச் செயலாளரிடம் தங்களது முகவரியைத் தெரிவித்தல், அச்சிடப்படும் செய்திகளைத் தலைமைச் செயலரிடம் காட்டி ஒப்புதல் பெறுதல் ஆகியன சட்டமாக்கப்பட்டன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதழ் வெளியிடக்கூடாது என்பதும் அரசுச் செயலாளர் இதழ்களின் கட்டுப்பாட்டாளராக இருப்பார் என்றும் சட்டமாக்கப்பட்டது.  இவ் விதிகளை மீறுவோர் நாடு கடத்தப்படுவார் என்ற தண்டனையும் வகுக்கப்பட்டது.” (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 13-14) என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது. இத்தகைய வலிமையானச் சட்டங்களுக்கு உடன்பட்டே இதழினை நடத்த வேண்டிய நிலை இருந்தது.
        மக்களாட்சி மலர்ந்த பிறகு செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக தளர்ந்தன. இதன் விளைவாகவே இதழ்கள் இன்று ஓரளவுக்குச் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. அரசைச் சாராத இதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் கொடுப்பது போன்ற நிலைகளால் மட்டுமே முடக்கப்படுகின்றன. இத்தகைய நிலையினை எதிர்கொள்ள விரும்பாத இதழ்கள் ஆட்சிக்கேற்ப தங்கள் சாயலை மாற்றிக் கொள்ளும் நிலையும் நிலவிவருகிறது.
நடமாடும் செய்தி நிறுவனங்கள்
        செய்திகளைப் பெறுதல் என்பது தொழில்நுட்பம் வளராத காலத்தில் மிகுந்த இடர்ப்பாடாகவே இருந்தது. அத்தகையச் சூழலை எதிர்கொள்வதற்குச் செய்திகளைப் பெறுவதற்கென ஒரு நிறுவனத்தின் தேவை அவசியமானது. அவ் எண்ணத்தின் விளைவாகவே செய்தி நிறுவனங்கள் தோன்றின. ”இந்தியச் செய்தி நிறுவனங்களின் தந்தை என்றழைக்கப்படும் கே.சி.ராய் என்பவர் அசோசியேட்டட் பிரஸ், பிரஸ் ட்ரஸ்ட் ஆகிய செய்தி நிறுவனங்களையும் தோற்றுவித்த முன்னோடி ஆவார். (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 12)” என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
        எல்லா இடங்களிலும் செய்தி இருந்த நிலையினை செய்தியாளர் மட்டுமே அறிவார். அவர் மட்டுமே செய்திகளைச் சேகரித்து அளிக்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று எவர் வேண்டுமானாலும் செய்தியினை அனுப்பும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி நினைத்துப்பார்க்க இயலாத வகையில் வளர்ந்து விட்டது. சமூக ஆர்வம் உடைய ஒவ்வொருவரும் செய்தியாளராக மாற முடியும் என்னும் நிலையினையும் இங்கு எண்ணி மகிழலாம். தொடர்வண்டியில் உணவு ஒழுங்காக வழங்கப்படவில்லை, பேருந்தில் சில்லரை கொடுக்கப்படவில்லை, இரவில் சாலை விளக்கு ஒளியூட்டவில்லை, பகலில் சாலை விளக்கு வீணாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.  இரைச்சல் தொந்தரவு எனப் பல நிலைகளில் செய்திகள் சமூக ஆர்வலர்களின் வழி செய்தி நிறுவனங்களை நோக்கி வருவது வாடிக்கையாகி விட்டதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.
தலையங்கத்தின் தேவை
        காலந்தோறும் செய்திகளும் செய்தியாளர்களும் செய்தி நிறுவன்ங்களும் மக்களின் தேவையினை ஈடுசெய்யும் வகையில் வளர்ந்து வந்துள்ள நிலையினை மேற்கூறிய வளர்ச்சிநிலைகளின் வழி அறியலாம்.  செய்திகள் அறிவித்தல் அறிவுறுத்தல், மகிழ்வித்தல் என்னும் நிலையிலிருந்து இன்று ஆராய்தல் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. ஏனெனில் இன்று செய்திகளை அறிந்து கொள்வதில் இடர்ப்பாடு இருப்பதில்லை.  எனவே உண்மையான நிலவரங்களை மட்டுமே அறிந்து கொள்வதிலேயே மக்கள் ஆர்வம் கொள்கின்றனர். இதழ்களைப் படிப்பவர்கள் ஏற்கெனவே அறிந்த செய்தியின் விவரங்களை அறிவதற்கோ அல்லது நம்பகத்தன்மையை உறுதி செய்துக்கொள்ளவோதான் பெரும்பாலும்  செய்தித்தாள்களை அணுகும் நிலை உண்டாகிவிட்டது.  மக்களுக்குத் தெரிவிக்கும் நிலையிலிருந்து தெளிவிக்கும் சூழலுக்கு இதழ்கள் வந்துவிட்டன. எனவே தலையங்கம் அத்தகையத் தேவையினை நிறைவு செய்வதில் முதலிடம் பெறுகின்றன.
        ஆங்கிலச் செய்தித்தாள்களில் இடம்பெறும் கட்டுரைகளைவிட தமிழ்ச் செய்தித்தாள்களில் கட்டுரைகள் குறைவாக இடம்பெறுகின்றன. கட்டுரைகள் இடம்பெறுவதற்கான கவனம் கூடுதலாகத் தேவைப்படுவதாலும் மக்களின் ஆர்வம் அதிகம் இல்லாது போனதனாலும் இந்நிலையினை இதழாளர்கள் பின்பற்றக்கூடும். எனினும் நாளிதழின் தரம் அத்தகையக் கட்டுரைகளைக் கொண்டே அமைகிறது. இத்தகையத் தரத்தினை மேம்படுத்துவதில் தலையங்கம் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறு தலையங்கத்தின் வழி, தங்களை நிலை நிறுத்திக் கொண்ட ஒரு சில இதழ்களையும்  ஒரு சில இதழாளர்களையும் இனிக் காண்போம்.
சஞ்சிகைகளில் தலையங்கம்
        சஞ்சிகைகள் எனப்படும் வார, திங்கள் இதழ்கள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தன. 1928 இல் ஆனந்தவிகடன் இதழை எஸ்.எஸ்.வாசனும் 1941 இல்- கல்கி இதழைரா. கிருஷ்ண மூர்த்தியும் 1947 இல் குமுதம் இதழைஎஸ்..பி. அண்ணாமலையும் 1948 இல் கல்கண்டு இதழை தமிழ்வாணனும்1977 இல் குங்குமம் இதழை சா. விஸ்வநாதனும் 1978 இல் இதயம் பேசுகிறது இதழை மணியனும் 1978 இல் சாவி இதழை சா.விஸ்வநாதனும் தொடங்கினர்.
        சஞ்சிகைகளின் தலையங்கம் பொதுவாகச் சிறியனவாக இருக்கும். சஞ்சிகையில் ஒதுக்கப்படும் இடம், சஞ்சிகை வெளியிடும் நாள் ஆகியவற்றிற்கேற்பச் சஞ்சிகைகளின் தலையங்கம் அமைவதுண்டு. தலையங்கம், எதைப் பற்றி எப்படி அமைய வேண்டும் என்பதைச் சஞ்சிகை ஆசிரியர் முடிவு செய்வார். ஏனெனில் தலையங்கம் என்பது சஞ்சிகை வெளியீட்டாளரின் அல்லது ஆசிரியரின் கருத்துகளைத் தெளிவாக வகுத்துரைக்கும் கட்டுரையாகும் (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 48) என்கிறார் சசிகலா. சஞ்சிகைகள் எனப்படும் இதழ்கள் நாளிதழ்கள் அல்லாதனவாக இருப்பதனால் அவற்றுக்குரிய காலம் போதுமானதாக அமைந்துவிடுகிறது. எனவே அவ் இதழின் ஆசிரியர் உரிய காலத்தை எடுத்துக்கொண்டு நாளிதழ்களில் வெளிவந்த தலையங்கத்தையும் ஆய்ந்து கருத்தினை வெளியிடமுடிகிறது. எனவே சஞ்சிகைகளின் தலையங்கம் தீர்வினைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைப்பதாக அமைகிறது.
இலக்கிய இதழ்களில் தலையங்கம்
        தமிழர்களின் பண்பாட்டையும் மொழியின் பெருமையினையும் எடுத்தியம்பும் இலக்கியங்களை தமிழர்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு இலக்கியவாதிகளுக்கே உரியது என்னும் நிலை வந்துவிட்டது. தமிழ்மொழியின் பெருமையினை அறியாது பிறமொழிகளைச் சிறப்பாக எண்ணியபோதெல்லாம் தமிழன் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டான். அதனால்தான் வடமொழி செல்வாக்கும் ஆங்கில மொழிச் செல்வாக்கும் தலை தூக்கியது. தமிழர்கள் அடிமைகளாயினர். இந்நிலையைக் கண்ட இலக்கிய ஆர்வலர்கள் இதழ்களில் இலக்கியத்தின் பெருமையினை உணர்த்த விழைந்தனர். அதன் விளைவாகவே இலக்கிய இதழ்கள் முகிழ்த்தன. ஒவ்வொரு இதழும் பிறந்தபோது அவ் இதழின் ஆசிரியர்களின் முழக்கங்களே தலையங்கமாக வெளிவந்தன. அதில் அவ் இதழின் நோக்கமும் பணியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மகளிர் இதழ்களில் தலையங்கம்
        சுகுண போதினி, ஸ்திரி தர்மம், ஜகன் மோகினி, சிந்தாமணி, மாதர் மறுமணம், மங்கை, மங்கையர் மலர், சுமங்கலி, ராஜம், பெண்மணி என மகளிர் இதழ்கள் பல வெளிவந்துள்ளன.
        தலையங்கம் பற்றி மா.ரா. இளங்கோவன் அவர்கள் சுவை பயக்கும் தலைப்புகள் தந்து தலையங்கம் எழுதும் பெரும்பாலான பருவ இதழ்கள் வாசகர்களிடையே மிக்க செல்வாக்குப் பெறுவதைக் காணமுடிகிறது என்கிறார். இக்கருத்து ராஜம் இதழுக்கும் பொருந்துவதாகும்எனக் கஸ்தூரி குறிப்பிடுகிறார் (மகளிர் இதழ்கள்,.266). இதன்வழி மகளிர் இதழ்கள் தலையங்கம் எழுதி வந்த நிலையினை அறிந்துகொள்ள முடிகிறது. இதழ்களின் செல்வாக்குத் தலையங்கத்தின் வழி அமைவதனையும் உணரமுடிகிறது.
சுதேசமித்திரன்
        மனிதன் தான் எத்தகைய உலகில் வாழ்கிறான் எனத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறான். உரிமைகளையும் கடமைகளையும் அறியாத மனிதன் அடிமையாகவே வாழ நேரிடுகிறது. இதனை உணர்ந்த சான்றோர்களின் முயற்சியால் தான் நாடு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்கு  சுதேசமித்திரன் நாளிதழின் பங்கு குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியடிகள் உரிய பயணச்சீட்டு இருந்தும் வெள்ளையராக இல்லாத ஒரே காரணத்தால் இரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டார். அந்தச் சூழல்தான் வெள்ளையனை இந்தியாவையே விட்டு வெளியேற்றும் வலிமையினைக் மகாத்மாவுக்குக் கொடுத்தது. அவ்வாறு ஒரு சூழல்தான் ஜி.சுப்பிரமணிய ஐயரை இந்து நாளிதழைத் தொடங்கத் தூண்டியது. “சர். டி. முத்துசாமி ஐயர் என்பவர் உயர்நீதி மன்ற நடுவணர் பதவி பெற்றதைக் குறித்து ஆங்கிலோஇந்திய இதழ்கள் வெறுப்புக்கணைகளை விடுத்த காரணத்தால்தான் 1878 இல் ஆங்கிலத்தில் இந்து பத்திரிகை தோன்றியது. (முதல் நாளிதழ்கள் மூன்று ப.26). இதனை வெளியிட்டதோடு அமையாமல் தமிழ் மக்களுக்கும் செய்திகளை அறிவிக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்தார் ஐயர். “ ஆங்கிலம் அறியாத மக்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் காரணத்தினால்தான்இந்துவைத் தோற்றுவித்த ஜி.சுப்பிரமணிய ஐயர் தமிழில் சுதேசமித்திரனையும் தோற்றுவித்தார் (முதல் நாளிதழ்கள் மூன்று ப.26) என்னும் கூற்று மக்களுக்கு அறிவூட்டும் கடமை இதழாளர்க்கு இருந்ததனை தெளிவுபடுத்துகிறது.
        ”1889 ஆம் ஆண்டில் வெளிவந்த சுதேசமித்திரன் தான் முதல் தமிழ் நாளிதழ் என்பது தெளிவு. அது 1889 ஆம் ஆண்டு முதல் 1916 ஆம் ஆண்டு வரைச் சுமார் இருபத்தேழாண்டு காலம் போட்டி இதழ்கள் ஏதுமில்லாமல் தனியாட்சி செலுத்தியது. (முதல் நாளிதழ்கள் மூன்று ப.30). இதழ் தொடங்குவதும் அதைத் தொடர்ந்து நடத்துவதும் மிகவும் கடினமானதாக இருந்த காலத்திலேயே சுதேசமித்திரன் தனியாட்சி நடத்தி தமிழர்களுக்கு நாட்டு நடப்பினை அறியவைத்த பெருமையினை அறிந்துகொள்ளமுடிகிறது.
        தென் இந்தியாவில் தேசிய கட்சிக்கு மூலபலமாக சுதேசமித்திரன் பத்திரிகையொன்றுதான் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே நெறியாக நிலை தவறாமல் நின்று வேலை செய்து கொண்டு வருகிறதென்ற செய்தியைத் தமிழ்நாட்டில் யாரும் அறியாதாரில்லை.
        ஸ்ரீ மான் காந்தியின் கூட்டத்தாரும் உண்மையாகவே தேசநலத்தை விரும்புகிறார்களாதலால், சுதேசமித்திரன் பத்திரிகை அவர்களை எவ்வகையிலும் புண்படுத்த மனமில்லாமல், ஸ்வஜனங்களென்ற அன்புமிகுதியால் அவர்களை நாம் மிக மதிப்புடன் நடத்தவேண்டுமென்ற நியாயத்துக்கு இத்தருணத்தில் சுதேசமித்திரன் ஓரிலக்கியமாகத் திகழ்கிறது. (முதல் நாளிதழ்கள் மூன்று ப.53-54) என 30.11.1920 இல் வெளிவந்த இதழில் மகாகவி பாரதியார் தலையங்கம் எழுதியுள்ளார். இதன்வழி இதழ்களின் துணையோடே அக்கால அரசியலும் நகர்ந்ததனை அறியலாம். ஊடகத்தின் துணையின்றி தலைவர்கள் மக்களை அடைதல் இயலாது. எனவே ஊடகத்தை அரசியல்வாதிகள் தம் கைப்பிடியில் வைத்திருக்க எண்ணுவது எக்காலத்தும் நிகழ்ந்து வரும் உண்மை நிலையினை அறிந்துகொள்ள முடிகிறது. தலைவர்களிடையே ஊடகங்கள் இருந்த நிலைமாறி ஊடகங்களுக்கிடையே தலைவர்கள் சிக்கிக்கொண்டுள்ள நிலையின் வழி ஊடகங்களின் பெருக்கத்தினை அறியலாம்.
சித்தாந்த தீபிகை
        சித்தாந்த தீபிகை, கலைக் கதிர், புலமை, மொழியியல், தமிழ்க்கலை, தமிழாய்வு/உயராய்வு, Tamil Culture, நாட்டுப்புறவியல்/ நாட்டார் வழக்காற்றியல், திராவிடவியல் ஆய்விதழ், வரலாறு எனப் பல தமிழ் ஆய்வு இதழ்கள் வெளிவந்துள்ளன.
        சித்தாந்த தீபிகையின் தலையங்களுள் மிக நீண்டதுபழமையும் புதுமையும்எனும் தலைப்பிலானது. இது 1897 நவம்பர் 21 இல் வெளிவந்தது. ஆறு பக்கங்களைக் கொண்டது”(தமிழ் ஆய்வு இதழ்கள்,.14). அன்றைய காலகட்ட்த்தில் தமிழர்களின் வாழ்வில் சடங்குகள் புகுந்து கொண்டு பேயாட்டம் ஆடின. மூடநம்பிக்கையே இறைநம்பிக்கை என்னும் பெயரில் தவறாகப் புகுத்தப்பட்டிருந்த நிலையினைக் கண்டு உள்ளம் வருந்திய சிலர் அச் சடங்குகளை எதிர்த்தனர். பெண்களைக் கல்வி கற்க விடாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்து அவள் அறியாமலேயே அவளுக்கு திருமணம் செய்து அவள் உணராமலேயே அவளைக் கைம்பெண்ணாக்கி அவள் வாழ்க்கை என்றால் என்ன என அறியும் பக்குவம் வந்தபோது சமூகம் அவளை அலங்கோலமாக்கி முடக்கி வைத்த நிலையினை எடுத்துரைக்கும் வகையில் கட்டுரைகள் வெளிவந்தன.
        சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அத்தகைய சிந்தனைகளே தலையங்கமாக எழுதியுள்ளதனைவிதவா விவாஹத்தைப் பற்றிப் பேசுவோமாக. கிரந்தாராய்ச்சி செய்து ஸ்வதந்திராபிப்பிராயமுள்ளவர்களும் பண்டிதர்களும் இந்த வழக்கம் (ஸ்திரி புனர் விவாகம்) முன் காலத்தில் ஹிந்து தேசத்தில் தெரியாததல்லவென்று தாராளமாய் ஒப்புக் கொள்வார்கள் . . . . உயிர்க்கதஞ் செய்தலே பாபம், உயிர்க்கிதஞ் செய்தலே புண்ணியமெனக் கொள்ளப்பட்டிருக்கிறது. பலவந்தமாய் வைதவ்யாசாரத்தையனுஷ்டிக்கும் படி செய்தலினால் அநேக இடங்களில் பெருந்துன்பத்திற்குக் காரணமாய் இருக்கிறதென்று தெரிகிறது.” (தமிழ் ஆய்வு இதழ்கள்,.17) என்னும் தலையங்கம் எடுத்துக்காட்டியுள்ளது. கைம்பெண் மறுமணத்துக்குப் போராடிய சமூகக்காவலர்களின் எண்ணங்களுக்கு இத்தகைய தலையங்கங்கள் துணைசெய்துள்ளதனை எண்ணி மகிழலாம். மக்களிடம் புரையோடிப்போன சிந்தனைகளை வேரோடு அறுத்து பல பெண்களின் வாழ்வைக்காத்த இத்தகையத் தலையங்கங்கள் என்றும் நினைத்துப்பார்க்க வேண்டியன எனத் தெளியலாம்.
கலைமகள் (புதுவை)
        1913 ஆம் ஆண்டு வெளிவந்த இவ் இதழுக்கு புலவர் கி. பங்காருபத்தர் ஆசிரியராக விளங்கினார். தமிழறிஞர்கள் பலர் தம் உயிரை விட தமிழை மிகுதியாக நேசித்தனர். அவ்வாறு வாழ்ந்த காரணத்தால் தமிழர்க்கும் தமிழுக்கும் இன்னல் விளைந்தபோது அவர்களால் அமைதி காக்க இயலவில்லை. அத்தருணத்தில் தமிழர்கள் யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களுக்கே துணைநின்றதைக் கண்டு உள்ளம் வருந்திய தமிழறிஞர்கள் பலர்.  அத்தகைய அடிமை நிலையிலேயே வாழப்பழகி சுகம் கண்ட தமிழர்களுக்காகவும் தம்முடைய வளமானப் பண்பாட்டை மறந்து சமயப்பற்றின்றி வாழும் தமிழர்களுக்காகவும் கலைமகள் இதழைத் தொடங்கினார் பங்காருபத்தர்.
        வேடிக்கையான செய்திகளைச் சொல்லிப் பிறரைக் களிப்பித்தற்காக யாம் பத்திரிகை நட்த்த வந்தோமில்லை. தமிழ் வளர்ச்சி பெற வேண்டுமென்பதும் தமிழ் மக்கள் தமிழறிவு பெற்றுத் தழைக்க வேண்டுமென்பதும் இப்போது நிலைகுலைந்து நிற்கும் தமிழணங்கு முன்போல் தலையெடுக்க வேண்டுமென்பதுமே கலைமகளின் முக்கியக் கருத்தாகும்” (இந்திய விடுதலைக்கு முன் தமிழ் இதழகள் ப. 11) எனக் கூறியுள்ளதனை பழ.அதியமான் எடுத்துரைத்து சைவப்பயிர் தழைக்க வந்த தமிழ் மழை என இவ் இதழைப் போற்றியுள்ளார். சைவமும் தமிழும் தமிழர்களின் பரம்பரைச் சொத்து. அதனைப் பிறர் கொள்ளையடித்துக் கொண்டு போக அறியாமையினால் அதனைப் பார்த்துக்கொண்டு ஏங்கி நிற்கும் தமிழரின் குற்றங்களைக் களையும் வகையிலேயே இவ் இதழ் தோன்றியதனை அறியலாம்.
தேசபக்தன்
        1917ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 17 ஆம் நாள் தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனாரால் தொடங்கப்பட்ட இதழ் தேசபக்தன். 1920 அக்டோபர் திங்கள் 22 ஆம் நாள் நவசக்தி இதழையும் தொடங்கினார். எளிமையே அருமை என்பதனை உணர்ந்து செயல்படுத்திய பெருமைக்குரிய தமிழறிஞர் இவர். தம்முடைய எழுத்து நடையால் அனைவரையும் படிக்கத் தூண்டியவர். அருமையானத் தலையங்கத்திலும் எளிமையைக் கையாண்டவர். “திரு.வி.. தலையங்கத்தை ஆசிரியக் கருத்து அல்லது ஆசிரியக்கட்டுரை  என்றே எழுதுவார்.” (முதல் நாளிதழ்கள் மூன்று ப. 123)
        தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் தம் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் திரு.வி.. எனவே நாட்டுநலன் குறித்து தேசபக்தனில் வெளிவந்த தலையங்கங்களை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என எண்ணி அதனை நூலாக்கினார். “தேசபக்தனில் வெளியானத் தம்முடைய தலையங்கங்களில் பலவற்றைத் தொகுத்துத்தேசபக்தாமிர்தம்என்னும் நூலொன்றும் வெளியிட்டார். (முதல் நாளிதழ்கள் மூன்று ப. 123). இக்கூற்றின் வழி நாளைய தலைமுறையினரிடம் திரு.வி.. கொண்டிருந்த ஈடுபாட்டினை அறியலாம்.
        தாய்மொழிக் குறித்த சிந்தனைகளை விதைக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்த்த விழைந்த திரு.வி.. தமிழர்கள் துளியும் தாய்மொழிப்பற்றின்றி வாழ்வதனைக் கண்டு மனம் வருந்தினார். எனவே தமிழ்ப்பற்றை வலியுறுத்துவதனையே தலையங்கப்பொருளாகக் கொண்டார். ”இங்கிலாந்து தேசமும் இங்கிலீஷ் பாஷையும் என்னும் தலையங்கத்தில் பாஷாபிமானமில்லாதவர் தேசாபிமானம் இல்லாதவர் என்று வற்புறுத்திக் கூறியுள்ளார். மக்கள் தொகையாலும் நிலப்பரப்பாலும் இந்தியாவின் ஒரு மாகாணத்துக்கும் ஈடாகாத அளவுக்குச் சுருங்கியதான இங்கிலாந்து ஆளும் நாடாக மாறியதன் காரணத்தை எண்ண வேண்டும் என்று குறிப்பிடும் அவர், அந்நாட்டு மனவெழுச்சியையும் ஒற்றுமையையும் எண்ணிப்பார்த்து நமக்கும் அந்த இயல்புகள் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். எந்த மொழியையும் எந்த நாட்டவரையும் பழிக்காத மனம் கொண்டவர் அவர். பொதுக்கூட்டங்களில் தேச நலத்தை வேண்டிப் பேசுவோர் தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தில் பேசுவது குறையாகும் என்கிறார். தமிழ் நாட்டுத் தலைவர்கள் பலர், ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டு தமிழில் நன்கு பேசும் ஆற்றல் கொண்டிருந்த போதிலும் ஆங்கிலத்திலேயே பேசுவது உண்மையான பயனைத் தராமல் போகும் என்பதைத் தெளிவுபடுத்த முற்படும் அவர்இத்துணை நாளாக இங்கிலீஷில் பேசிப்பேசி வளர்த்த தேசபக்தி போலியாக முடிவுற்றதைத் தலைவர்கள் உணர்ந்து நடப்பார்களாக (முதல் நாளிதழ்கள் மூன்று ப. 127) எனத் தேசபக்தன் (06.12.1919) நாளிதழில் தலையங்கம் எழுதியுள்ளார். தாய்மொழிப் பற்றால் ஒரு சிறிய நாடு உலகாண்ட நிலையைக்கூறி தாய்மொழிப்பற்றுடன் வாழ அறிவுறுத்தியுள்ள திரு.வி..வின் எழுத்தாற்றலுக்குச் சான்றாக இத்தலையங்கம் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக