உழைப்பின் அருமை
இருபதாம்
நூற்றாண்டுக் கடைசியில் பிறந்தவர்கள் “ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்”
என்னும் பாடலையும் “உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” என்னும் பாடலையும்
அறிந்திருப்பார்கள் ; பாடியிருப்பார்கள். அத்தனை அழகான பாடல். அழகு என்பது அறிவுடன்
கூடியது மட்டும்தான். ஏனெனில் புற அழகிற்குக் காலஎல்லை உண்டு. இந்தப்பாடலடிகள் எத்தனை வேகமாகவும் எத்தனை அன்பாகவும் காலம் கடந்தும் கருத்துக்களைப் பதித்துவிட்டிருக்கிறது. அதனால்தான் உழைப்புக்கு முக்கியத்துவம்
கொடுத்து வாழ்ந்தனர். வாழ்க்கை அழகானது. வாழ்வதிலும் விருப்பம் உண்டானது.
இன்றைய இளைஞர்களைப்பற்றி கேட்டுப்பாருங்கள்.
“அவன் சொன்ன பேச்சை கேட்கமாட்றான்” “அவன் இந்த வேலைக்கெல்லாம் போகமாட்டானாம்” “அவன்
எப்பபார்த்தாலும் கைப்பேசியில் படம்பாத்துக்கிட்டு இருக்கான்” “அவன் திறன்பேசியில்
விளையாடிக்கிட்டே இருக்கான்” இப்படித்தான் சொல்வார்கள். அப்படி சொல்லாமலிருந்தால் அவர்களே
தவத்தின் பயனாகப் பிள்ளைகளைப் பெற்றோர் ஆவர். இளைஞர்களிடம் ஒரு குறையும் இல்லை. இந்தச்சூழல்தான்
அவர்களை அவ்வாறு கெடுத்துவிட்டிருக்கிறது.
“உழைப்பது நம்ப உடம்புக்கு ஆகாது” என்று ஒரு திரைப்படத்தில்
கதாநாயகர் சொல்கிறார். அவருக்கு ஒரு துணை நடிகர் “என்னை எங்கம்மா வேலைக்குப் போகச்
சொல்லி கொடுமைப்படுத்துறாங்க” எனக் கிண்டலாகப் பேசுகிறார். இவை, பிஞ்சு மனத்தில் பதியத்தானே
செய்யும். இளைஞர்கள் என்றாலே பல்துலக்காமல் பேருந்து நிலையத்தில் குளிர்க்கண்ணாடியைப்
போட்டுக்கொண்டு (ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் என கண்ணாடியை மாற்றிப்போட்டுக்கொண்டு)
நிற்பதாகக் காட்டுவது எத்தனை அவலம். உலகம் இப்படங்களைப் பார்க்கும்பொழுது என்ன நினைக்கும்?
எதையாவது நினைத்துக்கொண்டு போகட்டும். திரைப்படம் என்பது மாயைதானே. விட்டுவிடலாம் என நினைத்தால் பல மதுக்கடைகளில் இளைஞர்கள் கூட்டம்தான்
அதிகமாக இருக்கிறது.
நாட்டை தலைநிமிர்ந்து நடத்தவேண்டிய தலைமுறை
தெருஓரங்களில் விழுந்துகிடக்கிறது. அவர்களை நம்பிய நாட்டுக்கும் வீட்டுக்கும் எத்தனை
இழப்பு. அதுமட்டுமா? அவர்களுக்கே எத்தனை இழப்பு. திரை நாயகர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக
நடிக்கிறார்களே ஒழிய உண்மையான வாழ்வில் யோகப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்து அழகாகத்
தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். ஏமாற்றுவது அவர்கள் பாத்திரம் ; ஏமாறுவது இளைஞர்களின்
அறியாமை.
“இதையெல்லாம் எப்படிச் சொல்கிறீர்?” என்று நீங்கள்
கேட்பது புரிகிறது. இதோ நான் கண்ட ஒரு அருமையான நேர்காணல், ஒரு தொழிலதிபரிடம் நீங்கள்
தமிழராக இருந்தும் ஏன் தமிழர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கொடுப்பதில்லை. பெரும்பாலும்
வடநாட்டார்தான் வேலைசெய்கிறார்களே” எனக் கேட்டார். “நான் தமிழர்களைத்தான் ஒவ்வொரு மாவட்டமாகச்
சென்றுதேடுகிறேன். ஒருவரும் வேலைக்கென்றால் வருவதில்லை. அதனால் வடமாநிலங்களிலிருந்து
விமானம் வழியாக இலட்சக்கணக்கில் பணம் செலவுசெய்து அழைத்துவருகிறேன்” என்றார். அது மட்டுமன்று
“சனிக்கிழமை கூலிகொடுப்பதால், ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு, திங்கள் கிழமை எழமுடியாமல்,
செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருகிறார்கள்” எனக்கூறுகிறார். இந்நிலையை உருவாக்கியது
யார்?.” இக்குரல் ஒவ்வொரு தாயாரின் குரல் ;
வறுமையில் தவிக்கும் மனைவியின் குரல் ; பசியோடு தவிக்கும் குழந்தைகளின் குரல்.
இதற்குத்தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு
தமிழர்க்கும் உண்டு.
நாயகர்கள் நினைத்தால் மாற்றமுடியும். ஒவ்வொரு
நடிகரும் உழைப்பின் அருமையினை விளக்கவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்னும்
எண்ணத்தைப் பரப்பவேண்டும். குடிப்பது தவறு என்பதனை துணிந்து அனைவர்க்கும் சொல்லவேண்டும்.
பிறநாட்டிலிருந்துவரும் இறக்குமதியைக் குறைக்கவேண்டும். உறபத்தியால் ஏற்றுமதி நிறையவேண்டும்.
செய்வார்களா ?
முன்னைய காலத்தில் இலக்கியங்கள்தான் மக்களுக்கு
நல்வழிகாட்டின. இந்த வேலையைப் புலவர்கள் என்ன அழகாக செய்திருக்கிறார்கள். உலகநாதர்
இயற்றிய ‘உலகநீதி’ சொல்லும் கருத்துக்களைப் பாருங்களேன்.
சேராத இடம் தனிலே சேரவேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம்
ஊரோடும்
குண்டுணியாய்த் திரியவேண்டாம்
உற்றாரை
உதாசினங்கள் சொல்லவேண்டாம்
பேரான காரியத்தைத்
தவிர்க்கவேண்டாம்
பிணைபட்டுத்
துணைபோகித் திரியவேண்டாம்
வாராரும்
குறவரிடை வள்ளிபங்கண்
மயிலேறும்
பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (உலகநீதி:8)
என
எத்தனை வலிமையான கருத்துக்களையெல்லாம் தரமான பூக்களைக்கொண்டு கட்டிய மாலைபோல் கட்டியிருக்கிறார்
உலகநாதர்.
சேராத இடத்தில் சேர்வது முதல் தவறு. அப்படித்
தவறி சேர்ந்தால் உடனே விலகிவிடு. தாய்தந்தை செய்த நன்றியை மறந்துவிடாதே. தேவையில்லாத
செய்திகளை ; பழிச்சொற்களை வீசாதே. நல்வழி சொல்லும் உறவினர்களை இழிவாகப்பேசாதே ; புகழ்தரும்
பணி கிடைக்குமாயின் அதனைத் தவிர்க்காதே. வீணாணவர்களுடன் நின்று பெருமைகளை இழந்துவிடாதே.
இவையெல்லாம் அமையவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்து என்கிறார். அவர் முருகபக்தர் ஆதலால்,
அவர்கண்ட மயிலேறும் பெருமானாகிய முருகப்பெருமானை வாழ்த்தவேண்டும் என்கிறார். அதுவும்
வள்ளி மகளை இணையாகக் கொண்ட முருகப்பெருமானை எனக் கூறியுள்ளார். இதனுள் பெண்களை மதிக்கவேண்டும்
என்னும் குறிப்பும் அடங்கியுள்ளதுதானே.
தாய்,தந்தை சொல்லை மதிக்காமல் இருப்பதிலிருந்து
தவறு தொடங்குகிறது. அதனால் தவறானவர்களின் நட்பு கிடைக்கிறது. தவறுசெய்யும்போது சிக்கிக்கொண்டால்
பொய்சொல்ல நேரிடுகிறது. பிறரைப்பழிசொல்லி ; துன்பம்செய்து தப்ப மனம் நினைக்கிறது. இத்தகைய
தவறுகளைச்செய்யக்கூடாது என எவரேனும் சொல்லிவிட்டால் என்செய்வது என உறவுகளை எதிர்க்கிறது.
தவறான வழியில் செல்வம் சேர்ப்பது எளிதாக இருப்பதனால், புகழான வழியில் வரும் செல்வத்தை
ஏற்க மறுக்கிறது. தீயவர்களுடன் இருப்பதே நல்லதெனத் தோன்றிவிடுகிறது. அதனால் வாழ்க்கைவாழ்வதே
வீணென்று எண்ணத்தோன்றுகிறது. இத்தகைய குற்றங்களிலிருந்து மீளவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும்.
பெற்றோரின் பேச்சைக்கேட்டு உழைத்து வாழவேண்டும் என்கிறார் உலகநாதர்.
உழைப்பில் இருக்கும் உப்பு தான் வாழ்க்கையைப்
பெருமையாக்கும். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே” எனக்கூறியது உழைப்பின்றி உண்பது அனைத்தும்
குப்பை என்பதனை உணர்த்தத்தானோ?