தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

மாணிக்கவாசகர் வாக்கில் அவா அறுத்தல் - Saint Manickavasagar


மாணிக்கவாசகர் வாக்கில் அவா அறுத்தல்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி – 99406 84775

திருமுறை என்பது திருவை அடையும் முறை எனச் சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.உண்மை அறிவே ஆனந்தம் என்பதே சைவ சித்தாந்தப் பொருளாக அமைந்து சத்சித் ஆனந்தம் எனக் குறிப்பிடப் பெறுவதனையும் உணரமுடிகிறது.இவ்வாறு உண்மையினை அறிந்த பின் பொய்யானவை எல்லாம் வெளிப்பட்டும் விடுபட்டும் போவதனையே அவா அறுத்தல் எனக் குறிப்பிடப்படுகிறது.ஒளி உள்ளே நுழையும் போது இருள் மறைந்து விடுவதும் ஒளி விலகியதும் இருள் இயல்பாகவே வெளிப்படுவது போலவே மாயையானது பிறவிப்பிணியில் சிக்குண்டு விலகாது நிற்கிறது.அதனை உணர்ந்த அருளாளர்கள் அம் முடிச்சை அவிழ்த்தும் பிடித்துப் பிசைந்தும் தாம் அருளொளியில் கலந்துவிடுவர்.அவ்வாறு அவர்கள் மட்டுமின்றி தம் வழி நிற்போர்க்கும் இருள் விலக வழிகாட்டியுள்ளதனை அடியார்களின் வரலாற்றின் வழி உணரமுடிகிறது.தெய்வப் புலவர் திருவள்ளுவர் வழி நின்று நடைபெறும் இம்மாபெரும் கருத்தரங்கில் அவர் வழி நின்று திருவாசகத்தை நோக்கும் முயற்சியாகவே இக் கட்டுரையாக மலர்கிறது.

தெய்வப்புலவரும் மாணிக்கவாசகரும்

        தெய்வப்புலவர் திருவள்ளுவர் ’எல்லா பொருளும் இதன் பாலுள’ என்னும் வகையில் திருக்குறள் படைத்துள்ளார்.அவ்வாறு கல் மனத்தையும் கரைக்கும் வாசகத்தால் பக்தியினை ஊட்டி இறையருளைப் பெற நல்வழி காட்டியவர் மாணிக்கவாசகர். எனவே தமிழ்த்திருமறையில் ஞானத் திருமறையாகத் திருக்குறளும் பக்தி  திருமறையாக திருவாசகமும் திகழ்வதாக பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்கள் குறிப்பிடுவதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.

        தெய்வப்புலவர் திருவள்ளுவருடைய திருக்குறள் கற்றோர்க்கு அகராதியாக நின்று வழிகாட்டுகிறது.வள்ளுவம் மொழியும் வரையறையினை உலகமே கொண்டாடும் வகையில் யாக்கப்பட்டதே அதன் தனிச்சிறப்பு என்பதும் வெள்ளிடைமலை.

                        ’அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ (திருக்குறள் – 49)
                        ’அற வினை யாதெனில் கொல்லாமை’ (திருக்குறள் – 321)
                        ’இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
                        நல்லாற்றின் நின்ற துணை’ (திருக்குறள் – 41)
                        உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
                        விழிப்பது போலும் பிறப்பு (திருக்குறள் – 339)
                        அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
                        தவாஅப் பிறப்பீனும் வித்து (திருக்குறள் – 361)

என்னும் வரையறைகள் பெருங்கடலின் சில துளிகள். அவா அறுத்தல் என்னும் நிலை அருளாளர்களிடம் அடிப்படைக் கொள்கையாயிருந்ததற்குக் காரணம் அது பிறவிப் பிணிக்கு வித்து என்பதனாலேயே என்பதனை மேற்கூறிய வரையறையின் வழி உணரமுடிகிறது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் ((திருக்குறள் – 362)

என்னும் திருக்குறளும் அக்கருத்தை வழிமொழிகின்றது.

                        தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
                        விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
                        ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
                        நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி (காருணியத்திரங்கல்- 61)

என மாணிக்கவாசகர் இறைவனிடம் உடல் வாழ்க்கையை வாழ முடியாத நிலையினைக் கூறி அருள் வேண்டுவதனையும் காணமுடிகிறது. இறையடியை அடைய முடியும் என எண்ணுவதும் இறைவன் தன்னுள்ளே இருப்பதனை உணர்வதுவும் தமிழர் தம் நெறியாக நின்றதனையும்

கறங்கோலைப் போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவமென் றிரண்டச்சந் தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத்
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ (திருக்கோத்தும்பி -8)

என்னும் மாணிக்க வாசகமாம் திருவாசகத்தின் வழி உணரமுடிகிறது. இறைவன்  பாவ புண்ணியத்தால் ஏற்படும் பிறப்பு அச்சத்தை நீக்கி ஆண்டுகொண்ட அருமையினை இங்கு புலப்படுத்துகிறார் மாணிக்க வாசகர்.

அவாவை அறுக்கும் சிவா

        ’சிவாய சிவ” என்னும் மந்திரமும் ’சிவாய வசி’ என்னும் மந்திரமும் பிறவிக்கடலில் சிக்கலின்றி கடக்கத் துணைசெய்யவும் இப்பூவுலகை மகிழ்ச்சியாகக் கடக்கும் தோணிகளாய் நிற்கின்றன. சிவ சக்தியாய் நிற்கும் சிகரமும் வகரமும் நரகம் அடையாது துன்பத்தில் உழலாது காக்கும் என்பதனை உணரமுடிகிறது.  எனவே இறைவனின் திருவடியைப் பற்றி இவ் உலக வாழ்வை நீத்த அருமையினை

நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே (திருவேசறவு – 10)

என்னும் பாடலின் வழி தெளிவுறுத்துகிறார். இவ் உலக வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் தன்னலமின்றி பிற உயிர்களிடம் பற்று கொண்டு வாழ்வதும் அவ் உலக வாழ்வை அடைய வேண்டுமெனில் இவ் உலக வாழ்வையே துறக்க வேண்டுமென்பதனையும்  உணரமுடிகிறது. வேண்டாமை என்னும் மனநலமே மனத்தை மகிழ்வாக வைத்திருக்கும் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் துணைசெய்யும் என்பதனை

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல் (திருக்குறள் – 363)

என்னும் திருக்குறள் உணர்த்தி நிற்கின்றது.விழுச்செல்வம் என்பது மனம் கொண்ட பொருளின் தன்மையைப் பொருத்தே அமைவதனையும் இங்கு எண்ண வேண்டியுள்ளது.

உலகியல் பயணம்

        பேருந்தில் பயணம் செய்ய விரும்புவோர் அப்பேருந்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி அப்பேருந்தைக் கண்டவுடன் ; காணாததைக் கண்டது போல் மகிழ்ந்து ; மகிழ்ச்சியுடன் ஏறி இருக்கையில் அமர்ந்து ; பெருமூச்சு விட்டு பின் அப்பேருந்தில்  விரும்பி பயணம் செய்து தான் இறங்கும் இடம் வந்தபின் அந்தப் பேருந்தைத் திரும்பிக் கூடப் பார்க்காது தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போவது இயல்பு. இந் நிகழ்வின் வழி அப்பேருந்திடம் கொண்ட பற்று உண்மையானது போல் தோன்றிடினும் அது மெய்யன்று.தாம் நினைத்த இல்லத்திற்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டுமென்பதே அவர்களின் இலக்கு.அவ்விலக்கினை அடையும் நிலையினைக் கொண்டே அவர்கள் பயணத்தை இன்பமாக எண்ணியதனை எண்ணிப்பார்த்தால் உணரமுடியும்.இவ் உலக வாழ்வும் அத்தகையதே என்பதனை உணர்ந்தவர்களே ஞானிகள் ; இறையடியார்கள் ; அருளாளர்கள். அவ்வாறே இவ் உலக வாழ்வில் உரிய கடமைகளை தாமரை இலையின் தண்ணீர் போல் உலகப் பற்றுடன் ஒட்டி வாழ்வது போலவே-  ஒட்டாது வாழ்ந்து இறைப்பற்றுடனே கடமையை ஆற்றவேண்டும் என்பதனை

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு . (திருக்குறள் – 350)

எனத் தெய்வப்புலவர் உணர்த்தி நிற்கின்றார்.உலகப் பற்றினை நீக்குதல் எளிதன்று.அதனை இறைப்பற்றாலேயே நீக்குதல் இயலும் என்பதனையும் தெளிவுறுத்துகிறார்.தம்முடைய உண்மையான நோக்கத்தை அறிந்தவர்கள் பிற எல்லாவற்றையும் இறைவனின் விளையாட்டாக எண்ணி தம் கடமையை பல்லக்குப் பயணம் போல் எளிதாகக் கடப்பர் என்பதனை

வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே (குழைத்தபத்து -6)

என்னும் பாடலின் வழி நெறிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.அவனருளாலே அவன் தாள் வணங்கும் சிறப்பினையும் இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது.

சேற்றில் சிக்குதல்

        தேனில் சிக்கிக்கொள்ளும் எறும்பு போல் இவ் உலகச் சேற்றில் சிக்கிக்கொண்டு வந்த வேலையை விட்டுவிட்டு பந்தக்காலை பிடித்துக் கொண்டிருப்போர் பலர்.பலரும் பந்தங்களையே பெரிதென்று எண்ணுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனையே இன்றி வாழ்வதுமே இயல்பாகி விட்டது.சிலரே மெய்ப்பொருளை உணர்ந்து மெய்வாழ்வு வாழ்வதனையும் காணமுடிகிறது.

இலர் பலராகிய  காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் (திருக்குறள் – 270)

என்னும் தெய்வப்புலவரின் கூற்றினை இங்கு எண்ணி மகிழலாம்.எல்லோருக்கும் இலக்கு என்பது இயல்பாகவே அமைந்திருப்பனும் அதனை உணராது தவத்தை மறந்து அவத்தையே தம் வாழ்வாகக் கொண்டு வாழ்வதனை இங்கு தெளிவுறுத்துகிறார். கருவிலே திருவுடையாரான மாணிக்கவாசகரும் அவ்வாறே வாழ்ந்ததனையும் அதிலிருந்து இறையருள் மீட்டதனையும்

நானாரென் உள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பி  (திருக்கோத்தும்பி -1)

என்னும் மாணிக்கவாசகத்தின் வழி உணர்த்தியுள்ளார் ஆளுடைய நம்பி. இறையருள் தன்னை ஆட்கொள்ளவில்லையெனில் நான் என்னும் அகப் பற்றும்;உள்ளம் என்னும் மாயப்பற்றும் ; ஞானம் என்னும் பொய்ப்பற்றுமே குடிகொண்டிருக்கும். இறையாற்றலின் ஒரு துளியேநான்என்பதனையும் ;இறைச்சிந்தனை  உடையதே உள்ளம்என்பதனையும் ; மெய்யறிவேஞானம்என்பதனையும் அறியாது வாழ்வதுமே மாயை என்னும் சேற்றிலே சிக்குண்டிருக்கும் வாழ்வு என்பதனையும் தெளிவுறுத்தியுள்ளார். தலை என்னும் மண்டை ஓட்டினைக் கொண்டு பிச்சை ஏற்கும் சிவபெருமானின் பெருமையினை எடுத்துக்காட்டி தலையாகிய ஆணவப்பகட்டை அறவே ஒழித்து அதனை ஒன்றுமில்லாததாக்கி அவ் உண்மையை உள்ளத்திற்கு உணர்த்தி பாவத்தை நீக்கி மெய்யறிவை உணர்த்தி அருள்புரியும் தன்மையை இப்பாடலின் வழி புலப்படுத்தியுள்ளார் மாணிக்கவாசகர்.

நன்றே செய்வாய்

        தான் விரும்பிய பொருளை உயிரென எண்ணிப் போற்றிப் பாதுகாத்தவன் வேறொரு முக்கியத் (உண்மை) தேவைக்காக அப்பொருளை அடகுவைத்து விடுகிறான். அவ்வாறு அடகு வைத்த பொருள் குறித்து அடகு வைத்தவனுக்கு ஒரு கவனமும் துளியும் தேவையில்லாதது போலவே இறைவனிடம் தன்னை அடைக்கலம் கொடுத்தவர்க்கு இவ் உலக வாழ்வில் கவனம் துளியும் தேவையில்லாததாகிவிடுகிறது. அதனால் அனைத்துச் செயல்பாடுகளும் இறையருள் என்பதனை உணர்ந்து அனைத்தும் நன்மைக்கே என்பதனை உணர்ந்து வாழும் அடியார்களுக்கு துன்பம் சிறுதும் இல்லை என்பதனை
                   அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
                   குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ
                   இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண் தோள் முக்கண் எம்மானே
                   நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே (குழைத்த பத்து – 7)

என்னும் பாடலின் வழி உணர்த்தியுள்ளார் திருவாதவூரார்.இவ்வுலகில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்குமான காரணத்தை ஆராய்வது என்பது இயலாது.குறிப்பிட்ட சில நிகழ்வுகளுக்கான காரணங்களை ஓரளவு கண்டறிந்த விஞ்ஞானம் அம்முடிவுகளையே கொண்டாடி மகிழ்கிறது. மெய்ஞ்ஞானம் அளவிலாப் பெறாத அருட்பெருஞ்ஜோதியாகவும் அருட்பெருங்கருணையாகவும் இருப்பதனை இயற்கை எனக் குறிப்பிட்டு பேராற்றலின் பெருமையினை ஒத்துக்கொள்வதனையும் காணமுடிகிறது. இவ்வாறு மெய்ப்பொருளான இறையாற்றல் ஒன்றே நிலையான பொருள் என்றெண்ணி அவா அறுத்து வாழ வேண்டியதன் அவசியத்தினை தம் பாடலின் வழி நெறிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.

தனிப்பெருங்கருணை

        அவா என்பது நான் என்னும் அகப்பற்றையும் எனது என்னும் புறப்பற்றையும் உள்ளடக்கியது.எனவே இப்பற்றை உண்டாக்கிய பொய்ப்பொருளை எண்ணத் துணியும் போது அம்மாயை விலகி மெய்ப்பொருள் புலனாகிறது. பாசி விலகிய பின் நீர் தெளிவதும் மீண்டும் பாசி சேர்ந்துகொள்ளும்போது நீரின் தெளிவைக் காண இயலாதது போலவும் வாழ்வில் மெய்ப்பொருளைக் காண இயலாது அவா என்னும் மாயை பற்றிக்கொள்வதனைக் காணமுடிகிறது. இப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விழைந்த மாணிக்க வாசகர் இறையருளை வேண்டியதனை

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே ( பிடித்தபத்து – 3)

என்னும் பாடல் தெளிவுறுத்துகிறது. இறையருள் கிடைப்பது அரிதெனினும் கிடைத்த அருளை  தக்கவைத்துக் கொள்ளுதல் அரிதினும் அரிது. இதனை உணர்த்தும் வகையில் சிக்கெனப் பிடித்துக்கொண்டதனைஎடுத்துக்காட்டி நல்வழிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.இறைப்பற்று ஒன்றே நிலையானது என அறிந்து பிறபற்றுக்களை எல்லாம் அறுத்தொழிந்த நிலையினையும் புலப்படுத்துகிறார். அன்பு வடிவமான அன்னையையும் அறிவுக்கு வழிகாட்டும் அப்பனையும்  இறைவனாகக் காணும் நிலையினையும் இங்கு காணமுடிகிறது. அவ்வாறு நினையும் போது இறையருள் தனிப்பெருணை கொண்டு அருள் புரிவதனையும் புலப்படுத்தியுள்ளார். காற்றினைக் கைக்குள் பிடித்துவிட்டதாக எண்ணும் குழந்தை பெருமிதம் கொண்டு அக்காற்று வேறுஎங்கும் செல்ல இயலாது போகும் என எண்ணுவது போல பக்தி உணர்வினால் வேறு எங்கும் எழுந்தருள இயலாது இறைவனை சிக்கெனப்பிடித்துக்கொண்ட மாணிக்கவாசகரின் பக்தி உணர்வினையும் இங்கு கண்டு மகிழலாம்.

இருள் மனமும் அருள் மணமும்

        உலகப் பற்றானது ஏதேனும் ஒரு உருவில் மானிடரைச்சூழ்ந்து இறைப்பற்றிலிருந்து விலக்கிவிடவே முயலும் நிலை உள்ளதனைக் காணமுடிகிறது.இம்மாயையில் சிக்குண்டால் அருளொளியை உணராது இருளிலேயே மனம் சிக்குண்டு மகிழ்கிறது.அவ் இருளில் இருந்து விலக அதற்கான முயற்சியில் ஈடுபடுவதே முதல் வழி. அவ்வாறு எம்முயற்சியில் செய்யாமல் இருக்கும் மனத்தை

ஆடுகின்றலை கூத்துடையான் கழற்கன்பிலை என்புருகிப்
பாடுகின்றலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றலை சூட்டுகின்றதுமிலை துணையிலி பிணநெஞ்சே
தேடுகின்றலை தெருவுதோறலறிலை செய்வதொன் றறியேனே (ஆத்தும சுத்தி – 1)

என்னும் பாடலின் வழி புலப்படுத்துகிறார். இறைவனைக் காண என்புருகும் அன்பும், எப்போது காணப்போகிறோம் என்னும் பதைப்பும் திருவடி கண்டு மயங்கும் பணிவும் இறைவனை ஏத்திப்பாடும் செயலும் எல்லா இடங்களிலும் தேடும் ஊக்கமும் என எதுவும் இன்றி பிணம் போன்று திரியும் மனத்தை எண்ணி வருந்துகிறார் மாணிக்கவாசகர். இம்மாயையின் தொல்லையிலிருந்து விடுபட தில்லையே வழி என்பதனைக் கண்டறிந்து வழிகாட்டும் நிலையினை

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில முதானானைக் குலாவுதில்லை கண்டேனே (கண்ட பத்து – 5)

என்னும் பாடல்  உணர்த்தி நிற்கிறது. பேய் போன்ற மாய உலகில் நாய் போல் திரிந்து இருந்ததனையும் தாய் போன்ற இறைப் பொருளைக் கண்டவுடன் அவை அனைத்தும் நீங்கி விடுவதனையும் இப்பாடலின் வழி புலப்படுத்துகிறார் மாணிக்கவாசகர். குற்றமில்லாத குணமுடையானைக் கண்டதும் பொய்யழுக்கு நீங்கி விடுவதனையும் இங்கு உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.இருள் மனம் சுற்றத்தாரை நினைக்க அருள் மனம் இறைவனையே உற்றாராக எண்ணுகிறது. இருள் மனம் தாம் வாழும் ஊரினையும் தம்மைப்புகழும் பேரினையும் கற்றாரையுமே பெரிதாக எண்ண அருள் மனமோ தில்லையையும் சிவபெருமானையும் மெய்ப்பொருளையுமே எண்ணுவதனை

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே (திருப்புலம்பல் – 3)

என்னும் பாடலின் வழி புலப்படுத்துகிறது.கற்ற மனம் ஏன்?எதற்கு என ஆயும் தன்மைத்து. எனவே கற்றாவின் மனம் அன்பு மிகுதியால் வேறெதனையும் உள்ளத்தின் நினையாது தாயை நாடி ஓடுவது போலவே தான் கசிந்துருகுவதனை எடுத்துக்காட்டி அவ்வாறு வாழ நெறிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.

நிறைவாக

        இறையருள் பொய்ந்நெறியாம் அவாவினை நீக்கி மெய்யறிவாம் அன்பினில் விளைந்த ஆரமுதான இறைவழிக்கு நெறிப்படுத்துவதனை மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

        சைவ நெறி அன்பு நெறி.அவ் அன்பே ஆசையினை அறுத்து அனைத்து உயிர்களையும் ஒன்று 
போலவே காணச் செய்கிறது.சிவமே அன்பாதலால் அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டி இறையருளைப் பெற்று இறைவனோடே கலத்தல் இயலும் என்பதே சைவ சித்தாந்தம்.எனவே பிற சமயத்தைப் பரப்ப வந்த ஜி.யு.போப் அவர்களும் சைவ சித்தாந்தமே உலகில் உள்ள சித்தாந்தங்களுக்கெல்லாம் தலையாயது எனச் சான்றளித்துள்ளதனையும் காணமுடிகிறது.

        அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் இறையாற்றல் அனைத்து உயிர்களிலும் தழைத்துள்ளதனை திருவாசகம் உணர்த்தியுள்ளது.எனவே திருவாசகத்தின் பெருமை சமய வேறுபாடின்றி அனைத்து சமயத்தாரும் பின் பற்ற வேண்டிய அன்பு நெறியையே புலப்படுத்துவதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.திரு என்னும் சொல்லுக்குக் கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்னும் பேராசிரியரும் கூற்றும் இங்கு எண்ணத்தக்கது.

        கருவிலேயே திருவுடையாராக விளங்கிய திருவாதவூரர் தம் புலமையால் தென்னவன் பிரம்மராய பட்டம் பெற்று பகட்டான வாழ்வு வாழ்ந்து உலக மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்தார்.  இறையருள் பெற்ற பின் பொருட்செல்வப் பற்று நீங்கி அருட்செல்வப் பற்று நிறைந்தது.பட்டாடை துறவாடையானது.அணிகலன் உருத்திராக்கமானது.இறைப்பற்றன்றி பிற பற்றுக்கள் யாவும் இறைவனின் திருவிளையாடலே என உணர்ந்து அவாவினை அறுத்தொழித்த மாணிக்கவாசகர் சிறப்பினையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.

        இறையருளன்றி எப்பற்றையும் நீக்குதல் இயலாது என்பதனை உணர்ந்து இறைபக்தி செலுத்தி அனைத்துப் பற்றுக்களையும் துறந்தார் மாணிக்கவாசகர்.அதனாலேயே காளை வாகனனாகிய இறைவன் மாணிக்கவாசகர்க்காக குதிரை வாகனத்தில் வந்து அருள் புரிந்தனையும் காணமுடிகிறது.இதன்வழி அவாவினை அறுத்தால் இறையருள் பெற முடியும் எனத் தெளிவுறுத்தியுள்ளதனையும் உணர்வுடையார் உணர்வர் எனத் தெளியமுடிகிறது.

************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக