திருக்குறளில் இரு குறள்
(உளவியல் நோக்கில்)
(முனைவர்
ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப்பேராசிரியர் (துணை), உலாப்பேசி : 9940684775)
ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது
முன்னையோரின் அமுத வாக்கு. இவ்வாக்கு அமுதமானது அதனுள் மறைந்திருக்கும் மறைபொருளாளேயாம்.
அவ்வாறு எதனையும் வெளிப்படையாகவோ தம் விருப்பப்படியோ வலிந்து கூறாது அவரவர் விருப்பிற்கேற்ப
பொருள் கொள்ளும்படி அருளப்பட்டதே தெய்வப்புலவர் அருளிய தெய்வத்திருக்குறள். எக்காலத்தவர்க்கும்,
எந்நாட்டவர்க்கும் எச்சூழலுக்கும் பொருந்தும் வகையில் புனையப்பட்டுள்ள சிறப்பினாலேயே
இக்குறளின் பெருமை நிலைபெற்றுள்ளதனைக் காணமுடிகிறது. அத்தகைய பெருமையுடைய திருக்குறள்
இன்றைய இளையோர்க்கு உளவியல் நோக்கில் எங்ஙனம் துணையாகின்றது என்பதனை இரு குறளின் வழி
காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.
மக்கட்
பேறு
பெறுதல் என்னும் தொழிற்பெயர். பெறு என்னும் முதனிலைத் தொழிற் பெயராகிறது. பின்னர்
பேறு என முதனிலைத் திரிந்த தொழிற் பெயராகிறது என்பது இலக்கணம். குழந்தையைப் பெற்றெடுத்தல்,
பின் தானே தலையெடுத்தல், பின்னர் முன் வினைப் பயனுக்கேற்ப திரிதல் என வாழ்வியல் நிலையாகவும்
இதனை எண்ணிப் பார்க்க இயலும். இவ்வாறு எண்ணுவதனாலேயே நல்ல சமூகத்தைப் படைக்க இயலும்.
’அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்பது வினைப் பயனாலேயே வாழ்க்கை அமைகிறது
என்பதனை உணர்தலாலேயாம். பிற உயிர்களுக்கு எந்நிலையிலும் கேடு செய்யாததோடு மட்டுமின்றி
பிற உயிர்க்கு எந்நிலையிலும் ஆக்கமும் பாதுகாப்பும் அளிப்பதனாலேயே இப்பிறவி அரிதானது
என உணர்த்தியுள்ளதனை உணர்வுடையோர் உணர்வர்.
காலால் நடப்பனவற்றை கால் நடை என அழைப்பது போல்
மனிதர்களை கால் நடை என அழைக்காதது ஏனெனில் அவர்கள் மனத்தின் வழி நடப்பதனாலேயே எனச்
சான்றோர் குறிப்பிடுவர். அம் மனத்தை ’நன்றின் பால் உய்ப்பது அறிவு’ எனத் தெய்வப் புலவர்
திருவள்ளுவர் உளவியல் அறிஞராக நின்று சுட்டிக்காட்டியுள்ளதனையும் இங்கு எண்ணமுடிகிறது.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் (திருக்குறள்
– 67)
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
எந்நோற்றான்
கொல்எனும் சொல் (திருக்குறள்
– 70)
என்னும்
இரு குறளின் வழி திருவள்ளுவர் மானிடப் பிறவியின் கடமையுணர்வினையும் பொறுப்புணர்வினையும்
அறிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.
நன்றியும்
உதவியும்
இயற்கையாக அல்லது நடைமுறையில் இயல்பாக நடக்க
வேண்டிய ஒரு செயலுக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து அச்செயலை விரைவில் நிறைவேற்ற துணை நிற்கும்
செயலுக்குக் கூறுவது நன்றி எனக் குறிப்பிடப்படுகிறது. இயற்கையாக மரம் வளரும் எனினும்
அதற்குத் தேவையான நீரினை ஊற்றி களைகளைக் களைந்து ஆக்கம் செய்வோமாயின் விரைவில் பயன்
அளிப்பதனைக் காணமுடிகிறது. அவ்வாறு வளர்வது நன்றியின் பாற்பட்ட செயலாகவே கொள்ளமுடிகிறது.
குழவியைக் குறிப்பிட்ட வயதுவரை கண்ணுங்கருத்துமாய்
வளர்ப்பதே தாய்மைப் பண்பு எனக் குறிப்பிடப்படுகிறது. பின் அத்தாயைக் காப்பது என்பது
குழவியின் கடைமைஎன எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது எழுதப்படாத மரபாகவே பின்பற்றப்படுகிறது.
இதனை வாழையின் வழி நன்கு உணரலாம். பிறந்தவுடன் வாழும் வகையினை அறியாதே உயிர்கள் பிறக்கின்றன.
தாயின் பாதுகாப்பில் வளரும் குழவி தானே வளரும் நிலை பெற்ற பிறகு அத்தாயே அக்குழவியை
விரட்டி விடுவதனைக் காண இயலும். வளர்ந்த பிறகு அத்தாயைக் காக்க வேண்டும் என்னும் கடமை
எவ்வுயிர்க்கும் இருப்பதாக அறியமுடியவில்லை. இது மனித இனத்துக்கும் பொருந்தும். அதனாலேயே
‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி’ என்கிறார் தெய்வப்புலவர். உதவி என்பது விருப்பத்தால்
வருவதே அன்றி கடமை உணர்வினால் அன்று. கடமை உணர்வினால் அமையும் பாதுகாப்பு வெறுப்புணர்வாகுமேயன்றி
அன்புடைமையாகாது. எனினும் பிற உயிர்களைப் போல் அல்லாமல் மானுட இனம் தன் மக்களை எக்காலத்தும்
அரவணைத்து வாழ்வதனையே மரபாகக் கொண்டுள்ளதே மானுடத்தின் சிறப்பு என உணரமுடிகிறது.
திருவள்ளுவர்
மக்களுக்குக் கற்பிக்கும் உளவியல் பாடம்
மனித இனத்தில் மட்டுமே தாயானவள் குழந்தையை
அரவணைத்துப் பாலூட்டி உயிரைக் காக்கின்றாள். அவ்வாறு அவள் ஊட்டாவிடில் குழந்தை உயிர்வாழ்தல்
இயலாது. பிற உயிர்கள் அனைத்தும் தாய் கற்றுக்கொடுக்காமலே பால் அருந்தும் பெருமை பெற்றன.
அவ்வாறு தாய் அரவணைப்பிலேயே வளரும் மக்கள் பின்னாளில் வாழ்வதற்கான தகுதி பெற்ற பின்னரும்
பெற்றோரின் பாதுகாப்புடனேயே வாழ்வதனைக் காணமுடிகிறது. இவ்வாறு எக்காலத்தும் பிறருடைய
பாதுகாப்பில் வாழவேண்டும் என்னும் எண்ணமே நிலைபெற்று விடுவதனாலேயே துன்பம் மேலிடுகிறது.
அன்புடன் வாழ்வது நன்றே எனினும் பிறரின்றி வாழ்தல் இயலாது என்னும் நிலை வளர்வதனாலேயே
தன்னம்பிக்கையின்றி வாழும் நிலையும் வளர்ந்துவிடுகிறது. இதனால் துன்பங்கள் மிகுதியாகி
விடுவதனையும் காணமுடிகிறது.
மானுட இனத்தில் மட்டுமே பெற்ற பிள்ளைகள் தங்களைக்
காப்பாற்றுவார்கள் என்னும் எண்ணமுடையவர்களாக பெற்றோர்கள் வாழ்கின்றனர். இந்நம்பிக்கை
தான் பின்னாளில் பெரும் துன்பத்தை விளைவித்துவிடுகிறது. இந்நம்பிக்கை நாளுக்கு நாள்
பெருகும் நிலையினைக் கொண்டே முதியோர் இல்லங்களும் பெருகி வருவதனைக் காணமுடிகிறது. முதியோர்
இல்லங்களை ‘குஞ்சு மிதித்து முடமாகிப் போன கோழிகள்’ எனக் குறிப்பிட்டுள்ளதனையும் ‘வீட்டின்
பெயரோ அன்னை இல்லம்- அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்’ எனக் குறிப்பிடப்படும் தொடர்கள்
அனைத்தும் பொறுப்பற்ற மக்களின் கொடுஞ்செயலையே படம்பிடித்துக்காட்டுகிறது.
மன
மாற்றமே வாழ்க்கை மாற்றம்
பெற்றோர் குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையினைக்
கற்றுக்கொடுப்பதனை மறந்துவருகின்றனர். பணம் அல்லது பொருளின் அருமையினையே கற்றுக் கொடுக்க
விழைகின்றனர். பணமில்லாமல் வாழமுடியாது எனக்கற்றுக்கொடுக்கும் சமூகம் அப்பணத்தைப் பிறர்க்குக்
கொடுத்து வாழ்வதலேயே பயன் உண்டு எனக் கற்றுக்கொடுக்கத் தவறிவிடுகிறது. இதனாலேயே நீதிமன்றங்கள்
தோறும் உடன்பிறந்தோரை எதிர்த்தும் உடன் வாழ்வோரை எதிர்த்தும் வழக்குகள் குவிந்து வருவதனைக்
காணமுடிகிறது. குடும்ப நீதிமன்றங்கள் எனத் தனியாகவே நீதிமன்றங்கள் அமைந்துள்ளதே இதற்குச்
சான்று. எனவே உள்ளத்தை மாற்றினால்தான் உலகம்
மாறும் என்னும் உண்மையினைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பெற்றோர்கள் மகனிடம் எதுவும் எதிர்பாராதபோதும்
தனக்காக வாழ்ந்த பெற்றோரை எண்ணி அரவணைத்து வாழும் மக்ககளாலேயே இவ்வுலகம் சிறப்புடையதாகிறது.
செய்ய வேண்டிய தேவை இல்லாத போதும் உதவி செய்வதே பெருமை உடைய செயலாகிறது. எனவே கடமையால் விளையும் பெருமையினைக் காட்டிலும்
உதவி செய்வதால் கிடைக்கும் பெருமையினை உயர்ந்ததாக எண்ணமுடிகிறது.
நன்றி
மறக்கும் உள்ளம்
தோள் மேலும் மார்மேலும் தூக்கி அணைத்த பெற்றோரின்
கரங்கள் கையேந்தி நிற்கவும், குழந்தைக்காக உறக்கத்தை மறந்த கண்கள் வறண்டு குழிந்திருப்பதனையும்
காணமுடிகிறது. பெற்றோரை பல்வேறு காரணங்களால் விரட்டிவிடும் மக்கள் நாளடைவில் அவர்களை
மறந்து வாழ்வதனையும் காணமுடிகிறது. அந்நிலையில் வாழும் பெற்றோரையும் இன்று தெருவோரங்களில்
காணமுடிகிறது. இத்தகைய பெற்றோர் செய்த பாவங்களே மக்கள் என்னும் பெயரில் உலவும் மாக்களாகத்
திரிவதனை மறைமுகமாக உணர்த்துகிறார் தெய்வப்புலவர்.
”இவன் தந்தை எந்நோற்றான் கொல்எனும் சொல்” என்னும்
தொடரை ஆய்ந்து நோக்குவதன் வழி மேற்கூறிய பொருளின் உண்மையை உணரமுடிகிறது. நோற்றல் என்பது
தவமிருத்தல். இம்மை உலகுக்கான துன்பத்திலிருந்து விடுபட்டு வீடுபேறினை அளிக்கும் தவத்தை
மேற்கொள்வதனையே முனிவர் தம் வாழ்வாகக் கொண்டிருந்தனர். பிறவி வேண்டா அத்தவத்தின் பெருமை
நல்ல மகனைப் பெற்றோர்க்கும் உரியதாகிறது. பெற்றோர் செய்யும் தவம் மக்களுக்கு ஆக்கம்
தருவது போல் மக்களின் நல் ஒழுக்கமும் அறிவுமே பெற்றோரைப் போற்றுவதாக அமைகிறது. “மக்களின்
அறிவும் ஒழுக்கமும் கண்டார் இவர் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவஞ் செய்தான் என்று
சொல்லும் சொல்லை நிகழ்த்துதல்” என இக்கூற்றுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் திறத்தினை
இங்கு எண்ணி வியக்கமுடிகிறது.
மக்களின் நல் அறிவாலும் அதன்வழி பெற்ற செல்வத்தாலும்
பயனடையும் பெற்றோர்கள் பலர். தம் ஊரினை விட்டு வெளியே செல்லாத பெற்றோர்கள் கூட இன்று
உலகை வலம் வருவதனைக் காணமுடிகிறது. அத்தகைய பேறு பெற்ற பெற்றோர்களைக் காண்போருக்கு
மகனின் பெருமை புலப்படுவது இயல்பாகிறது. மகன் என்னும் கூற்று மகளுக்கும் பொருந்துமாற்றை
மேற்கூறிய கருத்தோடு ஒப்பிட்டு உணரமுடிகிறது.
திருவள்ளுவர்
பெற்றோர்க்குக் கற்பிக்கும் உளவியல் பாடம்
பெற்றோர்கள் வழிகாட்டும் குறியீடுகளாக இருக்கலாமேயன்றி மக்களுடனேயே செல்லுதல் என்பது அவர்கள் பணியன்று
என்பதனை உணரவேண்டும். இதனால் அவர்களுக்கு நன்மை செய்வது போல் தோன்றினாலும் உண்மையில்
தீமையினையே செய்துவிடுகின்றனர் என்பதனை உணரவேண்டும்.
’அவையத்து முந்தி இருப்பச் செயல்’ என்பது தன்னம்பிக்கையால்
சான்றோர் அவையில் ஒருவர் பெற்ற வெற்றியினையே குறிக்கும். கல்வி கற்க உதவலாமே அன்றி
எப்போதும் பிள்ளைகளுடன் விழித்திருந்து கற்பிக்க வேண்டும் என்னும் தேவையினை உருவாக்கி
விடக்கூடாது. பொறுப்புணர்வினைக் கற்பிக்க வேண்டுமேயன்றி சுமைதாங்கிகளாக இருந்துவிடக்கூடாது.
இதனால் சுமை சுமக்கும் அனுபவம் இன்றி சோம்பேறிகளாக பிள்ளைகள் மாறிவிடுவது கண்கூடு.
ஆட்சியர் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு தேர்வு செய்யும் போது எத்தனைக் கல்விச் சிறப்பு
பெற்றிருந்தாலும் அவர்களை அப்படியே தேர்வு செய்து விடுவதில்லை. அவர்களுடன் குழுவாக
உரையாடும் தேர்வு நடைபெறும். இத் தேர்வை எதிர்கொள்வதற்கு தன்னம்பிக்கையுடன் கூடிய அறிவே
துணை நிற்கும். இத்தேர்வில் கடினமான பிரச்சினையில் ஒருவர் சிந்தித்துத் தானே முடிவெடுக்கும்
சூழலின் திறத்தைக் கொண்டே தேர்வு செய்யப்படுவர். முடிவெடுக்கும் திறனின்றி எத்தகைய
கல்வியும் பயனுடையதாகாது என இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவது காலத்தின் தேவையாகிறது.
இதனையே ‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி’ எனத்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளதனை எண்ணி மகிழலாம்.
தாங்குதலே
தடையாக
தந்தை என்னும் பேறு பெரும்பொருட்டு விருப்பத்தின்
பெயராலேயே மகனைப் பெறுதல் கண்கூடு. தந்தை என்பது தாய்க்கும் மகன் என்பது மகளுக்கும்
பொதுப்பெயராக நிற்பதனை உணர்ந்துகொள்வதே அறிவுடைமை என்பதனைத் இக்குறள் தெளிவுறுத்துகிறது.
எவரும் விருப்பமற்று பிள்ளைகளைப் பெறுதலோ வளர்த்தலோ பொதுவாக நடைமுறையில் இல்லை. அன்பினை
ஊட்டி வளர்க்கும் பொறுப்பு தாயிடம் மிகுதியாகவும் அறிவினை ஊட்டி வளர்க்கும் பொறுப்பு
தந்தையிடம் மிகுதியாகவும் இருப்பதனைக் காணமுடிகிறது. ’தாயைப் போல பிள்ளை’ என்னும் பெருமித
மொழி தாயின் அன்பினையும் ’அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறது’ என்னும் இகழ்ச்சி
மொழி தந்தையின் அறிவுக்குறையினைச் சுட்டுவதாய் அமைவதனையும் காணமுடிகிறது. எனவே அறிவை
வளர்க்கும் பொறுப்புடைய தந்தை எந்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் வாழும் நிலையினை உருவாக்கித்
தருதல் வேண்டும். மகன் எச்செயலைச் செய்தாலும் அதில் சிறப்புற்றவனாக விளங்க வேண்டும்
என வழிகாட்டுவதே சிறப்புடையதாக அமையுமேயன்றி தம் விருப்பப்படியே மக்கள் வாழ வழிவகை
செய்தல் எக்காலத்தும் சிறப்புடையதாக அமையாது.
உள்ள
மாற்றமே மாற்றம்
வாழ்வில் வெற்றி பெற்றோர் அனைவருமே தம் பெற்றோர்
வழி நடந்து சிறந்தவரல்லர். ஒவ்வொரு நிலையிலும்
தம் வாழ்வை விருப்பப்படி அமைத்துக் கொண்டவர்களே தமக்கு மட்டுமின்றி தம் வீட்டுக்கும்
நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர்களாகத் திகழ்வதனைக் காணமுடிகிறது. ஒவ்வொரு குழந்தையுடைய
ஆர்வமும் ஒவ்வொரு நிலையில் மாறுபடும் தன்மையுடையது. இந்தச் செடியில் இந்த மலர் தான்
பூக்க வேண்டும் என்பது இயற்கை விதி. அதனை மறந்து விதை ஒன்றாக இருக்க பலன் வேறொன்றாக
அமைதல் வேண்டும் என எதிர்பார்த்தல் அறிவுடைமையாகாது என்பதனைச் சான்றோர்கள் உணர்த்தியுள்ளனர்.
தவறாக வழி காட்டுவதை விட நன்று வழிகாட்டாதிருத்தலே.
அவ்வாறு எவர் துணையுமின்றி தானே தம் விருப்பப்படி வளரும் குழந்தை வாழ்க்கையில் போராடக்
கற்றுக்கொள்கிறது. அவ்வாறு போராடிப்போராடி மிகச் சிறந்த வெற்றியாளராகச் சிறப்பதனையும்
பல்வேறு சாதனையாளர்களின் வழி உணரமுடிகிறது. உலகியல் சாதனைகளுக்குத் துணை செய்த விஞ்ஞானிகள்
மட்டுமின்றி ஆன்மிகச் சாதனைகளுக்கு வழிகாட்டிய அருளாளர்களின் வாழ்வின் வழியும் இதனை
நன்குணரமுடிகிறது. இவ்வாறு முடிவெடுக்கும் திறனே ஒருவரது வாழ்வுக்குத் தொடக்கமாக அமைவதனை
உணரமுடிகிறது.
நிறைவாக
தெய்வப்புலர் திருவள்ளுவரின் திருக்குறள் மொழி,
இனம், நாடு, மக்கள் என்னும் வேறுபாடின்றி எக்காலத்துக்கும் பயனளிப்பதாக அமைந்துள்ளதனை
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இருகுறள்களின் வழியும் அறிந்துகொள்ளமுடிகிறது.
இளையோர்க்கு வழிகாட்டும் நிலையில் திருக்குறளை
நோக்கும் போது இளையோர்க்காகவே எழுதப்பட்டது உளவியல் நூலகவே திருக்குறளை எண்ணத் தோன்றுகிறது.
எந்நிறக் கண்ணாடியைக் கண்ணுக்கு அணிந்துகொள்கிறோமோ அந்நிறத்தில் உலகம் காணப்படுவது
போல அமைச்சர் நிலையில், அரசர் நிலையில், மக்கள் நிலையில், இளையோர் நிலையில், முதியோர்
நிலையில், மருத்துவர் நிலையில் என எந்நிலையில் நோக்கினும் அவ்வவர்க்குரிய பொருளைத்
தரும் சிறப்புடையதாக திருக்குறளைக் காணமுடிகிறது என்பது இவ்வாய்வின் வழி தெளிவாகிறது.
தந்தையின் கடமையை முதலில் கூறி (67) பின் மகனின்
கடமையை (70) பின்னே கூறியுள்ளதன் வழி தந்தையின் கடமை சிறப்பாக இருப்பின் மகனின் கடமையும்
சிறப்பாக அமையும் என உளவியல் ஆசானாக நின்று திருவள்ளுவர் உணர்த்தியுள்ளதனையும் காணமுடிகிறது.
தந்தை மகனுக்குச் சொல்லால் கற்றுக்கொடுப்பதைக்
காட்டிலும் செயலால் கற்றுக்கொடுப்பதே மிகுதியாக இருப்பதனால் தம் வாழ்வையே ஒழுக்கமாக
மாற்றி கொள்ள வேண்டிய அவசியத்தினைத் திருக்குறள் உளவியல் நோக்கில் புலப்படுத்தியுள்ளதனைக்
காணமுடிகிறது.
மகன் தந்தைக்குச் செய்யும் உதவி என்பது குடிப்பெருமையைக்
காத்து நிற்றலையே குறிக்கிறது. அவ்வாறு குடிப்பெருமையைக் காத்து நிற்கும் மகனின் ஒழுக்கத்தாலேயே
தந்தைக்குப் பெருமை சேர்கிறது. அவ்வாறு மரபினைப் பாதுகாத்து வாழும் பண்புடைய மக்கள்
தம் அறிவுத்திறத்தால் பெருமையுடையவராகத் திகழ்கின்றனர். இவ்வாறு பெருமை அடைவதற்கு தந்தை
கடைப்பிடித்த நோன்பே அடிப்படை எனத் திருவள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தந்தையின் அருமை மக்களைத் தன்னம்பிக்கையுடன்
வாழவைத்தலே என்பதும் மகனின் அருமை பெற்றோரை எந்நிலையிலும் போற்றி அரவணைத்து வாழவைத்தலே
என்பதும் இவ்விருகுறள்களின் வழி நன்கு உணர்த்தப்படுகிறது.
****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக