தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

மெய்கண்டார் - சீடரே குருவானார் - Mei kandaar - Disciple turn into Guru

 

மெய் கண்ட மெய்கண்டார் 

சைவ சமயக் குரவர்கள்  நால்வர். அப்பர் என்னும் திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், ஆளுடைய நம்பி என்னும் சுந்தரர், வாதவூரார் என்னும் மாணிக்க வாசகர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு குருவாக நின்று தம் சீடர்களை வழி நடத்தினர். சந்தானக் குரவர்கள் நால்வர். மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம். இவர்கள் அனைவரும் முறையே குரு, சீடர் என்னும் நிலையில் தொடர்புடையவர்கள். உமாபதி சிவத்தின் குரு மறைஞானசம்பந்தர், மறைஞானசம்பந்தரின் குரு அருணந்தி சிவம், அருணந்தி சிவத்தின் குரு மெய்கண்டார்.

மெய்கண்டாரின் பிறப்பு கி.பி. 1223 எனக்குறிப்பிடப்படுகிறது. அச்சுதக்காப்பாளர் என்னும் சிவபக்தர் நீண்ட காலம் குழந்தைப்பேறின்றி வருந்தினார். எனவே, தம் குருவான சகல ஆகம பண்டிதரிடம் குழந்தைப்பேறு குறித்து கேட்கிறார். குல குருவும், மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கும்படி கூறுகிறார். திருஞானசம்பந்தரின்பேயடையா பிரிவெய்தும்என்னும் அருள் பாடல் வருகிறது. “வரம் பெறுவர். ஐயுற வேண்டாஎன்னும் அடிகள் இடம்பெற்றுள்ளதைக் கொண்டு உமக்குக் குழந்தை பிறக்கும் என ஆசி கூறுகிறார். எவ்வினாவிற்கும் விடையேறும் பெருமானையே கேட்டு வாழ்ந்த பக்தியின் பெருமையை இங்கு நோக்கமுடிகிறது.  அவ்வாறு குருவின் ஆசி பெற்று அச்சுதக்காப்பாளர் தம் மனைவியுடன் திருவெண்காட்டு ஈசனை வழிபடுகிறார். சிவபெருமான் தோன்றி இப்பிறவியில் உமக்குப் பிள்ளைப்பேறு இல்லை. சீகாழிப் பிள்ளையிடம் (திருஞானசம்பந்தர்) கொண்ட நம்பிக்கையாலும் இங்கு வந்து உண்ணாநோன்பு இருந்தமையாலும் சீகாழிப்பிள்ளையைப்போலவே மகன் பிறப்பான் என வாழ்த்தினார். அவ்வாறே குழந்தை பிறக்க, திருவெண்காட்டு ஈசனின் பெயரான ‘சுவேதனப் பெருமான்எனப் பெயரிட்டார்.

 விருத்தாசலத்திற்கு அண்மையில் உள்ள பெண்ணாடத்தில் பிறந்தார் ; வளர்ந்தார். அகச்சந்தான ஆச்சாரியருள் ஒருவரான பரஞ்ஜோதி முனிவர், குழந்தைப்பருவம் முதலே இறை நாட்டம் கொண்ட குழந்தையின் ஞானத்தை உணர்ந்து மெய்கண்டாரிடம் வருகிறார். தம் குருவின் பெயரானசத்தியஞான தரிசினிஎன்னும் பெயரைத் தமிழாக்கிமெய்கண்டார்எனப் பெயரிட்டார். திருக்கயிலாய பரம்பரை என்னும் பதினெட்டு ஆதினங்கள் எழுவதற்கு வித்திட்டவர் இவரே. எனவே திருக்கயிலாயப் பரம்பரையின் முதல் இடத்தில் இவரையே வைத்து வணங்குகின்றனர்.

     மெய்கண்டார் மெய்யறிவை உணர அருணந்தி சிவத்திடம் சீடரானார்.  நாட்கள் வளர்ந்தது. பின்னர் மெய்கண்டார் தானே உபதேசம் செய்யத் தொடங்கினார். சீடன் எப்படி உபதேசம் செய்யலாம்? என எண்ணினார். அவருடைய ஆணவம் அவரை பொறமைகொள்ளச்செய்தது. ஒவ்வொரு சீடராக மெய்கண்டாரின் செயல்பாடுகளை அறிந்துவர னுப்பினார். சென்றவர்கள் அனைவரும் மெய்க்கண்டாரின் உபதேசத்தில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டனர். அருணந்திசிவம், அளவிலா சினம்கொண்டு மெய்கண்டாரைக் கடிந்துகொள்ள சீடரைத் தேடிச் சென்றார். அச்சமயத்தில், ‘ஆணவம் என்னும் அறியாமைகுறித்து மெய்கண்டார் உபதேசம் செய்துகொண்டிருந்ததைக் கேட்டார் ; சுவைத்தார் ; மெய்மறந்தார். மெய்கண்டாரின் உபதேசம் நிறைவுபெற்றபின் அவரிடம் ஆணவத்தின் வடிவம் எது? எனக் கேட்கிறார் அருணந்திசிவம். ஆணவத்திற்கு வடிவம் இல்லை எனத் தெரிந்தும் வினா கேட்கும் நீங்களே ஆணவத்தின் வடிவம் என விடையளித்தார் மெய்கண்டார். புறத்தே புலப்படாத ஆணவத்தை அடையாளம் கண்டுகொண்ட மெய்கண்டாரின் ஞானத்தை உணர்ந்த அருணந்தி சிவம்நீரே எமக்கு குருநாதர். அருள்கூர்ந்து ஏற்கவேண்டும்’ என வேண்டிநின்றார். மெய்கண்டாரும் காழ்ப்புணர்வினை பெரும்பொருட்டாக எண்ணாது சீடராக ஏற்றுக்கொண்டார். சீடரையே குருவாக ஏற்றுக்கொண்டார் அருணந்தி சிவம். இருவரையும் பெருமையினையும் உணர்வுடையோர் உணர்வர்.

குருவின் போதனையைசிவஞானபோதம்என்னும் தத்துவ நூலாக்கினார். இதில் இடம்பெறும் சூத்திரங்கள் – 12, அடிகள் – 40, சொற்கள் – 216, எழுத்துக்கள் – 624. தத்துவ நூல்களில் சிறியதும் பெருமையுடையதும் இந்நூலே. இப்போத நூலை முதன்மையாகக்கொண்டே தத்துவ நூல்களை ‘மெய்கண்ட சாத்திரம்எனப் போற்றுகின்றனர்.

பதி, பசு, பாசம் குறித்து, சிவஞானபோதத்தில் விளக்கப்படுகிறது. மெய்கண்டாரிடம், மனவாசகம் கடந்தார் என்னும் சீடர் வினாக்கள் கேட்டு விளக்கம் பெற்றதுஉண்மை விளக்கம்என்னும் சாத்திர நூலானது. ‘பஞ்சாட்சரம்என்னும் ஐந்தெழுத்து குறித்து விளக்கமும் இதில் இடம்பெற்றுள்ளது சிறப்பு.