தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

சொல்லாய்வு நோக்கில் திருக்குறள்.-Thirukkural -2


சொல்லாய்வு நோக்கில் திருக்குறள்.

(முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்த்துறைத்தலைவர், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால் - 609 605, உலாப்பேசி : 99406 84775)

தமிழர் மறை எனப் போற்றுதற்குரிய பெருமை கொண்ட நூல் தெய்வப்புலவர் அருளிய திருக்குறள்.  இந்நூல் வெண்பா இலக்கணத்திற்கு மட்டுமேயன்றி வாழ்வியல் நிலைக்கும் எடுத்துக்காட்டாக நின்று மானிட இனத்திற்கே வாழ்வியல் இலக்கணமாகத் திகழ்கின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே படைக்கப்பட்ட நூல் திருக்குறள்  எனப் பொதுவாகக் கூறினாலும் அதற்கும் முற்பட்டதாகவே இந்நூலினை எடுத்துக்காட்ட இயலும். இவ்வாறு நிறுவுதற்கு அந்நூலில் பொதிந்துள்ள சொல்வளமே சான்றாகின்றது. அத்தகைய சொல்வளம் கொண்ட நூலாகத் திருக்குறள் திகழ்வதனை நிறுவவேண்டும் என்னும் விழைவினாலேயே இக்கட்டுரை அமைகிறது. திருக்குறளின் ஒவ்வொரு சொல்லும் விரித்துரைக்கும் வல்லாரைக்கொண்டு பத்து, நூறு, ஆயிரம் என விரிந்துகொண்டே பொருள் விளக்கும் ஆற்றலுடையது. எனவே திருக்குறளில் ‘குறிப்பறிதல்’ என்னும் அதிகாரங்கள் மட்டுமே இக்கட்டுரைக்கு ஆய்வு எல்லையாகக் கொள்ளப்படுகிறது.

சொல்லாய்வு

சொல்லாய்வு என்னும் சொல்லின் நிலையினை மூன்று நிலைகளில் நோக்கமுடிகிறது. சொல்லினை பொருண்மை அடிப்படையிலும் இலக்கண அடிப்படையிலும் வேர்ச்சொல் அடிப்படையிலும் காணமுடிகிறது. 

‘குறிப்பின் குறிப்புணர்வார்” என்னும் சொல்லே ஆய்வு செய்தற்கு அடித்தளமாக அமைகிறது. நோய் என்னும் சொல்லின் வேர்ச்சொல் நொய்யச் செய்யும் ’நொய்’ என்னும் சொல்லிலிருந்து பிறந்தது.  நோயினால் இயற்கை நிலையிலிருந்து குன்றிப்போவதனைக் கொண்டு இவ்வேர்ச்சொல்லினை அறிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறே பொருண்மை அடிப்படையில் நோக்கும் போது காதலின் சிறப்பினை உணர்த்தும் கண்ணின் அருமையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது. ஒரே பெண்ணின் கண் நோயினைத் தருவதாகவும் நோய்க்கு மருந்தாகவும் அமைவதன் வழி அன்பின் அருமையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறே இலக்கண அடிப்படையில் நோக்குதற்கு

அசையியற்கு  உண்டு ஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் மெல்ல நகும் -1098

என்னும் திருக்குறள் எடுத்துக்காட்டாக அமைகிறது.  பெண்பால் விகுதி பெற வேண்டிய நகுவாள் என்பது ’நகும்’ எனக் கூறப்படுவது இங்கு ஆய்வுக்குரிய பொருளாக எடுத்துக்கொள்ளமுடிகிறது. இறுதிச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டின்படி முடிதற்கு ஏதுவாக அமையவேண்டும் என்னும் செய்யுள் இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்ததாகவும் கொள்ளமுடிகிறது.  இவை மூன்றின் அடிப்படையிலும் திருக்குறளை ஆய்தல் சிறப்பெனினும் விரிவு கருதி பொருண்மை அடிப்படையில் ‘குறிப்பறிதல்’ என்னும் அதிகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சொல்லாய்வின் தேவைகள்

மொழியின் வளத்தை அம்மொழியில் உள்ள இலக்கியங்களின் தன்மையைப் பொருத்தே அறிந்துகொள்ளமுடிகிறது. அவ்வகையில் திருக்குறளின் பணி அளப்பரியது. மொழி, இன, நிற வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இயற்றப்பட்ட இந்நூலைப் போல் வேறு நூல் முன்னும் இல்லை பின்னும் இல்லை என்பதனை உணர்ந்துகொள்ள முடிகிறது. எனவே திருக்குறள் சொல்லாய்வின் வழி தமிழ்மொழியின் சிறப்பினை உணர்ந்து தமிழர் தம் அறிவை மென்மேலும் விரிவு செய்துகொள்ள இயலும் எனத் தெளியமுடிகிறது. தெய்வப்புலவரின் உள்ளக்கருத்தினை உணர்ந்துகொள்ளுதல் எவராலும் இயலாது எனினும் எப்பொருளிலெல்லாம் ஒரு குறளைப் புரிந்துகொள்ள இயலும் என்பதற்கான வழிகாட்டுதலைத் தொடர்வதற்கான முயற்சியாகவே இவ் ஆய்வு அமையும் எனக்கொள்ளமுடிகிறது.

பொய்யா விளக்கு

எக்காலத்தும் எவ்விடத்தும் பொய்க்காத உண்மைப் பொருளை உணர்த்தும் சொற்களை உள்ளடக்கியதாக விளங்குவது திருக்குறள். திருக்குறளில் ‘குறிப்பு அறிதல்’ என்னும் அதிகாரம் பொருட்பாலில் மட்டுமின்றி காமத்துப்பாலிலும் இடம்பெறும் சிறப்புடைய ஒரே அதிகாரமாக இடம்பெறுவதனைக் காணமுடிகிறது. குறிப்பினை அறியும் திறன் அக வாழ்விற்கும் புறவாழ்விற்கும் அடிப்படையாகிறது எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். ’நுண்ணுதின் நோக்கும் திறன்’ அற வாழ்விற்கு மட்டுமின்றி புறவாழ்விற்கும் இன்றியமையாதது.  வல்லார்களின் பார்வை எல்லோரும் பார்ப்பது போல் இயல்பாக அமைவதில்லை. எனவே சிலரை எவராலும் வெற்றிகொள்ள இயலுவதில்லை. வீட்டில் தாயும் நாட்டில் தலைவனும் மக்களின் குறிப்பினை அறிந்து செயல்படும் திறத்தினாலேயே அவர்களை இறையோடு ஒப்பிட்டு உயர்த்துவதனைக் காணமுடிகிறது. சான்றோர் இவ்விருவரின் திறத்தையும் உணர்ந்து அறத்தையும் மறத்தையும் போற்றி  வாழ வழிகாட்டுவதனையும் இலக்கியங்கள் உணர்த்தி நிற்கின்றன.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (தி.299)

என்னும் திருக்குறள் வாய்மையின் திறத்தைப் போற்றி நிற்கின்றது. சான்றோர்கள் எக்காலத்தும் பொய்யாத சிறப்புடைய உண்மையின் ஒளியினையே விளக்காகக் கொள்வதனை இக்குறள் எடுத்துரைக்கிறது. இருள் எத்துணை காலத்ததாயினும் எத்துணை வலிமையுடையதாயினும் ஒரு சிறிய ஒளி அத்துணை இருளையும் நீக்கிவிடுவதனைக் காணமுடிகிறது. ஒரு பூட்டப்பட்ட அறைக்கு மட்டுமே இது சான்றாவதில்லை. இருள் நிறைந்த மனதிற்கும் இப்பொருளினை பொருத்திப்பார்ப்பதன் வழி ஒளியின் பெருமையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் மானிடரின் குறிப்பினை அறிந்து செயல்பட்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

திருவள்ளுவரின் குறிப்பறிதல்

        குறிப்பு அறியும் திறத்தை அகத்திணையாகவும் புறத்திணையாகவும் கொள்ள வழி செய்கிறது திருக்குறள். ஏனெனில் முதல் குறிப்பறிதல் (71 ஆவது அதிகாரம்) அரசனை நல்வழிப்படுத்தும் பொருட்பாலிலும் இரண்டாவது குறிப்பறிதல் (110 ஆவது அதிகாரம்) காதல் வாழ்வைப் போற்றும் காமத்துப்பாலிலும் இடம்பெற்றிருப்பதனைக் காணமுடிகிறது. இவ்வாறு இரு வெவ்வேறு வகையான நுட்பங்களை உணர்த்த எவ்வாறு ? எத்தகைய ?  சொற்களைக் கையாண்டார் என்பதனை அறிவதே ஆய்வுக்குரிய முன்னோட்டமாக அமைகிறது. எனினும் திருக்குறளை ஆய்வோர் எத்தகையோர் ? எந்நிலையில் ? எப்படியெல்லாம் பொருள் கூற இயலுமோ அத்துணைக்கும் வாய்ப்பளிக்கிறது. எம்மானுடர்க்கும் பொருந்தும் வகையில் உலகப்பொதுமறையாகத் திருக்குறள் விளங்குவதற்கு ‘ ’குறிப்பறிதல்’ என்னும் அதிகாரமும் சான்றாவதனைக் காணமுடிகிறது.

வாழ்வியல் சூத்திரங்கள்

        ஒலியினைக் காட்டிலும் ஒளியின் வேகமும் சிறப்புடையது எனச் சான்றோர் குறிப்பிடுவர். அவ்வாறே வாயொலியினைக் காட்டிலும் கண்ணின் ஒளி சிறப்புடையதாக அமைகிறது என்பதனையே சூத்திரமாக்கி எடுத்துரைக்கிறார் தெய்வப்புலவர்.

        ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு (தி. 642)

என்னும் திருக்குறள் சொல்லே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாக விளங்குவதனை எடுத்துரைக்கிறது. எனவே அரசாட்சி  செய்வதற்கும் மனையாட்சி செய்வதற்கும் உரியோர் பேச்சில் கவனம் கொண்டு குறிப்பினை அறியும் திறனுடையவர்களாக விளங்கவேண்டியதன் அடிப்படையினை இக்குறளின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

உலகிற்கு அணி

        வீட்டின் அழகு நாட்டினை அழகாக்குவது போலவே நாட்டின் அழகு உலகினை அழகாக்குகின்றது. இவ்வாறு நலம் விளைவிக்கும் சிறப்பினை, அந்நாட்டினையும் வீட்டினையும் காக்கும் பொறுப்புடைய தலைமக்களாலேயே நிகழ்வதனைக் காணமுடிகிறது.

        அக வாழ்வாயினும் புறவாழ்வாயினும் உணர்ச்சிப்பெருக்கே காதல் மிகுவதற்கும் மோதல் மிகுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பதனைக் காணமுடிகிறது. எனவே நாட்டை ஆளும் அரசனாயினும் வீட்டை ஆளும் பெண்ணாயினும் பொறுமையோடு தம் கடமையை செய்வதனைப் பொருத்தே சிறப்படைகின்றனர்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி (தி. 701)

என்னும் திருக்குறள் பேசாது நின்று குறிப்பறியும் திறனுடையாரே சிறப்புடையர் எனத் தெளிவுறுத்துவதனைக் காணமுடிகிறது. உணர்ச்சிவயப்பட்டு சொற்கள் வெளிப்படும்போது அதில் பிழைகள் ஏற்படுவது இயல்பானதாகவே அமைகிறது. அத்தகைய சூழலில் குறிப்பறியும் திறமுடையோரே ஒருவரின் நிலையினை அறிந்து உறுதுணைசெய்தல் வேண்டும். அத்தகைய நுட்பத்தினை அறிந்தவரையே “கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்” எனக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். இவ்வுலகின் இயல்பினைக் கூறும் போது ”மாறாநீர் வையம்” எனக் குறிப்பிடுகிறார். இவ்வுலகில் நான்கில் மூன்று பங்கு நீர் என்றும் மாறாது நிற்கும் நிலையினையும் ”வை” என்பது இவ்வுலகில் இறைவன் உயிர்களை வைத்த நிலையினையும் குறிப்பிட்டுள்ள திறத்தின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

     இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து (தி. 1091)

நோய்க்கு மருந்தாவது பிறிதொன்றே ; ஆனால் இங்கு நோய் தரும் நோக்கே மருந்தினையும் தருகிறது எனக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். உயிர் நீக்கும் குறிப்பும் உயிர் காக்கும் குறிப்பும் உடையது தலைவியின் நோக்கு என்பதனையே “இருநோக்கு” என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது. இவ்விரண்டு குறளும் குறிப்பு அறியும் திறமுடையோரே தம் கடமையில் அணியாகத் திகழும் சிறப்புடையராகின்றனர் எனத் திருவள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளதனை எண்ணி மகிழலாம்.







குறிப்பறிவோர் தெய்வமாவர்

        பிறர் உணர்வை புரிந்துகொண்டு செயலாற்றும் நல்லோரை தெய்வத்துக்கு இணையாகப் போற்றுவதனைக் காணமுடிகிறது. தாம் கூற வந்த பொருள் எவ்வகையிலேனும் தாழ்நிலையினை உண்டாக்கிவிடுமோ என எண்ணித் தயங்குவாரின் நிலையினை உணர்வானை “ஐயப்படாது அகத்தது உணர்வான்” எனக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். உள்ளத்தின் நிலையினை உண்டாக்கிய தெய்வம் மட்டுமேயன்றிஉடன் நிற்கும் ஆள்வோரும் அறிவாராயின் அவர்கள் தெய்வத்தோடு ஒப்பிட்டுக் கருதப்படுவர் என்பதனை

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (தி. 702)

என்னும் குறள் உணர்த்தி நிற்கின்றது. அவ்வாறே தன் உள்ளத்தின் நிலையை வெளிப்படுத்த விழையும் தலைவி சொற்களால் கூறின் பிழை ஏற்பட்டுவிடுமோ எனக் குறிப்பால் சிறு நோக்கு நோக்குகிறாள். அந்நோக்கினை உணர்ந்துகொள்ளும் தலைவனின் இன்பம் காமத்தால் பெறும் இன்பத்தில் செம்பாதியாக இல்லாமல் மிகுந்து நிற்கிறது. இதனை

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று ; பெரிது (தி. 1092)

என்னும் குறள் உணர்த்தி நிற்கின்றது. “செம்பாகம்” என்னும் சொல் காமத்தால் பெறும் இன்பத்தின் அரை நிலை என்பதனை உணர்த்துகிறது. செம்பாகத்தை விட மிகுதி எனத் தலைவியின் நோக்கினை அருமையினை புலப்படுத்த விழையும் சொல்லாக அமைவதனையும் காணமுடிகிறது. களவு காலத்தில் தலைவியின் நோக்கு சிறிதாகவே அமைவதும் அந்நோக்கே பெருங்காதலை ஏற்படுத்தும் அழகினையும் “சிறு நோக்கம்” என்னும் சொல்லால் புலப்படுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது. தலைவியின் நோக்கு காதலின் நோக்கத்தினை நிறைவேற்றும் அழகினையும் இங்கு எண்ணி மகிழலாம்.

குறிப்புணர்வாரே விரும்பத்தக்கார்

        ஒருவரின் மனக்குறிப்பினை உணர்ந்துகொண்டு செயல்படும் அறிவுடையோரை அவையில் அமர்த்திக்கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். “யாது கொடுத்தும் கொளல்” என்னும் சொற்களின் வழி குறிப்பறிவோரின் சிறப்பினைத் தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர். உயிரைக்கொடுத்து அந்நட்பைப் பெறுதல் வேண்டும் என இலக்கிய நோக்காகக் கூறாமல் வேறு எதையும் கொடுத்துக் கொளல் வேண்டும் என இலக்கணம் வகுத்துள்ள திறத்தையும் இங்குக் காணமுடிகிறது. குறிப்பறியும் திறனுடையோரின் விருப்பத்திற்கேற்ப அவரால் விரும்பப்படும் பொருளைக் கொடுத்து இடம்பெறச்செய்தால் அவர்களே நாட்டில் துன்பம் ஏற்படாதவாறு காப்பர் என்கிறார் திருவள்ளுவர். இவ்வாறு மக்கள் உணர்வை உணரும் திறத்தோடு பகைகொண்டு நல்லோர் போல் நடிப்போர் நிலையினையும் அறியும் திறத்தாரையே “குறிப்பின் குறிப்புணர்வார்” எனக் குறிப்பிடுவதாகக் கொள்ளமுடிகிறது.    

குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் (தி. 703)

என்னும் குறள் “உறுப்பினுள்” எனக்குறிப்பிடுவதன் வழி எவ்வுறுப்பாயினும் கொடுத்தல் நன்று என்னும் நுட்பத்தினையும் உணர்த்தி நிற்கின்றது.

        அகவாழ்வில் குறிப்பினால் தன் உள்ளக்கருத்தினை வெளிப்படுத்தும் தலைவி இறைஞ்சி நிற்பதனை குறிப்பினால் குறிப்பறியும் திறனோடு ஒப்பிட்டுக் காணமுடிகிறது. இத்தகைய செயல் தலைவியில் காதலை வளர்க்கும் திறத்தினை “யாப்பினுள் அட்டிய நீர்” என்னும் சொற்களால் உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர்.

நோக்கினாள் ; நோக்கி இறைஞ்சினாள் ; அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் (தி. 1093)

என்னும் திருக்குறள் பயிர் வளர பாத்தியில் நீர் வார்த்தல் போல் காதல் வளரத் தலைவியின் நோக்கும் இறைஞ்சி நிற்கும் பண்பும் உரம் சேர்ப்பதனை உணர்த்தி நிற்கிறது.

பொறியும் புலனும்

        ஐம்பொறிகளும் ஐம்புலன்களின் திறத்தைக்கொண்டே மதிப்பிடமுடிகிறது. கண்ணிருந்தும் காட்சியறியாதிருப்பினும், செவியிருந்தும் கேளாதிருப்பினும், மூக்கிருந்தும் முகராதிருப்பினும், வாயிருந்தும் சுவையாதிருப்பினும் மெய்யிருந்தும் உற்றறியும் திறனில்லாது இருப்பினும் அப்பொறிகளால் பயனில்லை. எனவே புலனைக்கொண்டே பொறியின் திறத்தை அறியமுடிகிறது. குறிப்புணரும் வல்லமையுடையார் பொறிகளில் பிறரைப்போல் இருப்பினும் புலனறிவால் பிறரை விஞ்சி நிற்பர் என்பதனை “உறுப்போரனையரால் வேறு” எனக் குறிப்பிடுகிறார் தெய்வப்புலவர்.

குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்போ ரனையரால் வேறு (தி. 704)

என்னும் திருக்குறளில் தான் கூற வந்தததைக் கூறாதிருப்பவரின் உள்ளக்குறிப்பை அறியும் ஆற்றலுடையவரைக்  “குறித்தது கூறாமைக் கொள்வார்” எனக் குறிப்பிடுகிறார்.

        தன் விருப்பத்தினைக் கூறாது குறிப்பால் அறிவிக்கும் திறமுடைய தலைவியின் மாண்பினை அறிந்த தலைவன் தலைவியின்  நிலையினை அறிந்து பெருமிதம் கொள்கிறான்.

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் (தி. 1094)

என்னும் திருக்குறள் இந்நிலையினைப் படம்பிடித்துக்காட்டுகிறது. தலைவன் தன்னைக் காணவேண்டும் என்பதற்காகவே நிலத்தை நோக்குவதும் தன்னைக் காணாத போது தலைவனைக் காண்பதும் தலைவியின் அறிவுத்திறத்தைப் புலப்படுத்துகிறது. ”மெல்ல நகும்” என்னும் உடன்பாட்டுச்சொல் தலைவியின் விருப்பினை உணர்த்தும் சொல்லாக நிற்பதனைக் காணமுடிகிறது.

கண்ணே ஆயுதம்

        குறிப்பறிதலில் கண்ணுக்கு இணையான உறுப்பில்லை எனத் திருவள்ளுவர் வரையறுத்துக் கூறியுள்ளதனை

குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் ? (தி. 705)

என்னும் திருக்குறளின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. ”என்ன பயத்தவோ” என்னும் சொற்கள் எதுவும் பயனில்லை என்னும் பொருளை உணர்த்தி நிற்கின்றது. எனவே கண்ணைக் கொண்டே கருத்தை அறிதல் வேண்டும் என்னும் நுட்பமும் இங்கு  உணர்த்தப்படுகிறது.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் (தி. 1095)

என்னும் திருக்குறள் தலைவியின் நாணத்தையும் காதலையும் கண்கள் வெளிப்படுத்தி நிற்கும் நிலையினை எடுத்துரைக்கிறது. தலைவன் தலைவியின் நோக்கைக் கொண்டே குறிப்பினை அறிந்துகொள்வான். எனினும் நாணம் அவளைத் தடுக்கிறது.  குறிப்பினை வெளிப்படுத்தும் கடப்பாடும் இருக்கிறது. எனவே கண்களைச் சுருக்கிச் சிரித்த நிலையினை “சிறக்கணித்தால் போல நகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதன்வழித் திருவள்ளுவரின் உளவியல் நுட்பத்தை வெளிப்படுத்தும் சொல்நயத்தையும் இங்குக் காணமுடிகிறது.

ஒல்லை உணரப்படும்

        பளிங்கு தனக்கென ஒரு நிறமின்றி அதனைச் சார்ந்ததன் வண்ணமாக மாறும் இயல்புடையது என்பர். எண்ணம் - சொல் - செயல் - பழக்கம் - வழக்கம் – குணம் என்னும் படிநிலைகளே மனிதரின் ஆளுமையினை உருவாக்குகின்றன எனக்கொள்ளமுடிகிறது. எனவே முகத்தினைக் கொண்டே ஒருவரின் ஆளுமையினை அறிந்துகொள்ளும் நிலை இருப்பதனை தெய்வப்புலவர் திருவள்ளுவர் உணர்த்துகிறார். இன்றும் ஆளுமையினை முகத்தின் வழி விளங்கிக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படையிலேயே நேர்முகத்தேர்வு நிகழ்வதனைக் காணமுடிகிறது. அரசுக்கு உறுதுணையாகும் குறிப்பறியும் அமைச்சரும் அவ்வாறு தேர்வு செய்யும் நிலையினை உணர்ந்தவராக இருந்ததனையே

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (தி. 706)

என்னும் திருக்குறள் உணர்த்தி நிற்கின்றது. எண்ணத்தை முகம் காட்டுவதனையே “அடுத்தது காட்டும் பளிங்கு” என்னும் சொல்லாக்கத்தின் வழித் தெளிவுபடுத்தியுள்ளார் திருவள்ளுவர். அகவாழ்விலும் அவ்வாறே முகத்தைக் கொண்டு குறிப்பறியும் தன்மையினைக் காணமுடிகிறது. தலைவியின் சொல் கடுஞ்சொல்லாயினும் உண்மைக்காதல் உண்டாயின் பகைமை இல்லாத்தன்மையினை எளிதில் அவள் முகமே வெளிப்படுத்திவிடுகிறது என்பதனை 

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப்படும் (தி. 1096)

என்னும் திருக்குறள் உணர்த்தி நிற்கின்றது. காதல் கொண்டு வெளிப்படும் கடுஞ்சொல்லினை “செறாஅர் சொல்” எனக்குறிப்பிட்டுள்ள திறனை இங்குக் காணமுடிகிறது. முகத்தின் அழகைக் கொண்டு அகத்தின் குறிப்பினை உடனே அறியும் திறனை “ஒல்லை உணரப்படும்” என்னும் சொல்லின் வழி உணர்த்தியுள்ள திறமும் புலப்படுகிறது.

உறாஅர் போன்று உற்றார்

        அகத்தின் சிறப்பினை முகத்தின் சிறப்பே காட்டிவிடும் என்பதனை உணர்த்திய திருவள்ளுவர்

அம்முகத்தினும் குறிப்பறியும் சிறப்பு வேறு உறுப்பிற்கு இல்லை என்பதனை



முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ ? உவப்பினும் காயினும் தான்முந்துறும் (தி. 707)

என்னும் திருக்குறளின் வழி உணர்த்தியுள்ளார்.  இன்பத்தையும் துன்பத்தையும் வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகமே முன்னின்று உரைப்பதனை “தான் முந்துறும்” என்னும் சொற்களால் உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது. காதலிலும்மாற்றத்தை உற்றார் அறிந்துகொள்ளும் நிலையினை

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர் போன்றுஉற்றார் குறிப்பு (தி. 1097)

என்னும் திருக்குறளின் வழி உணர்த்துகிறார் திருவள்ளுவர். சிறுமையான சொற்களைப் பேசுதலும் பகைவர் போல் நோக்குதலும், நடந்துகொள்ளுதலும் அன்பினைக் குறிப்பால் உணர்த்துவதற்காகச் செய்யும் தலைவியின் செயலே என்பதனை “உறாஅர் போன்று உற்றார்” என்னும் சொல்லின் வழி உணர்த்திக்காட்டியுள்ளார் திருவள்ளுவர்.

முகமே அகமாகும்

        குறிப்பறியும் திறனுடையார் முகத்தின் வழியே அகத்தினை அறிந்துகொள்வர். அவர்களுக்கு சொல்லோ செயலோ தேவையில்லை என்பதனை

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் (தி. 708)

என்னும் திருக்குறளின் வழி எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர். அவ்வாறே காதலியின் முகத்தில் உண்டாகும் புன்னகை அவள் அழகினை வெளிப்படுத்துவதோடு அன்பையும் குறிப்பால் உணர்த்தும் என்பதனை

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் (தி. 1098)

என்னும் திருக்குறள் எடுத்துரைக்கிறது. தலைவியின் மென்மையான புன்னகையே அவளின் அழகினையும் காதலுக்குரிய உள்ளக்குறிப்பினையும் தலைவனுக்கு எடுத்துரைக்கும் என்பதனை “பசையினள் பைய நகும்” என்னும் சொற்களின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

பகைமையும் கேண்மையும்

        அகம் புறம் என்னும் இரு வாழ்விலும் பகையும் நட்பும் இயல்பானதாகவே அமைகிறது. குறிப்பறியும் திறனுடையார் கண்களையே அளவிடும் கருவியாகக் கொண்டு அளவிட்டு விடுவதனை

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்(தி. 709)

என்னும் திருக்குறளின் வழி உணர்த்துகிறார் திருவள்ளுவர். கண்களைப் பார்த்துப்பேசும் மனிதர்களையே நேர்மையானவர்களாகக் குறிப்பிடும் வழக்கமும் இங்கு எண்ணத்தக்கது. அவ்வாறே காதலிப்போரும் கண்ணைப் பாராது அயலவர் போல கண்டுகொள்ளாது நடக்கும் தன்மையினை

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள (தி. 1099)

என்னும் திருக்குறள் எடுத்துரைக்கிறது. தம் காதலை உற்றார் ,பகைவர் என்னும் வேறுபாடின்றி அனைவரிடமும் மறைப்பதே காதலரின் தன்மையாகிறது. அவ்வாறு காதலிப்போர் பிறர் முன் தம் காதலரை அறியாதார் போல் கண்டுகொள்ளாது நிற்கும் நிலையினை இக்குறள்  “ஏதிலார் போலப் பொது நோக்கு” என்னும் சொற்றொடரால் உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

சொற்களால் பயனில்லை

        கண்ணைப் பார்த்துப் பேசும் வழக்கமே உயர்ந்தது என்னும் வழக்கம் உலகளவில் பின்பற்றப்படும் அறநெறியாக விளங்குகிறது. திருவள்ளுவர் இக் கண்களையே குறிப்பறியும் அளவுகோலாகக் காட்டும் நிலையினை

நுண்ணியம் என்பர் அளக்கும்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற (தி. 710)

என்னும் திருக்குறள் எடுத்துக்காட்டுகிறது. குறிப்பினைக் கண்களால் அறியும் திறமுடையாரை “நுண்ணியம் என்பார்” என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது. அவ்வாறே காதலுக்கும் கண்ணே சிறந்த உறுப்பாக நின்று உள்ளக்கருத்தினை அறிந்துகொள்ளத் துணைசெய்கிறது என்பதனை

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல (தி. 1100)

என்னும் திருக்குறள் உணர்த்துகிறது. சொற்கள் கூறாததையும் கண்கள் கூறிவிடும் நுட்பத்தினை ”கண்ணொடு கண்ணினை நோக்கு” என்னும் சொல்லாட்சி உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

தமிழர் மறை

        குறிப்பறிதல் என்னும் ஒரு நிலையிலேயே திருவள்ளுவரின் நுண்மாண்நுழைபுலத்தினை அறிந்துகொள்ளமுடிகிறது. இக் குறிப்பறியும் திறன் எந்நாட்டவர்க்கும் எம்மனிதர்க்கும் உரிய பொது வழக்காகவே நிலவுவதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது. எனவே, உலகத்திலேயே எத்தகைய வேறுபாடுமின்றி எக்காலத்தவர்க்கும் வழிகாட்டும் பெருமையுடைய ஒரே நூலாகத் திருக்குறள் திகழ்வதனைக் காணமுடிகிறது. இன்று உலகமே திருக்குறளைத் தலைமேல்வைத்துக் கொண்டாடுவதன் வழி இதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளெல்லாம் இந்நூலினை மொழிபெயர்த்துக் கற்பிப்பதன் வழி இந்நூலின் பெருமையினை அறிந்துகொள்ளமுடிகிறது. தெய்வப்புலவர் அருளிய இத்திருக்குறள் ஒவ்வொரு பொருளுக்கும் ஏழே சீரில் இலக்கணம் வகுத்த பெருமைக்குரிய நூலாகத் திகழ்வதாலேயே இந்நூல் ‘உலகப் பொதுமறை’  எனப் போற்றப்படுவதனைக் காணமுடிகிறது. உலகத்திற்கே பொதுமறையாக விளங்கும் பெருமையுடைய இந்நூலினை ‘தமிழர் மறை’யாக ஏற்றிப் போற்றுதல் தமிழர் கடன் எனத் தெளியமுடிகிறது.

நிறைவாக

கண்டாரால் விரும்பப்படும் தன்மை எனக் குறிப்பிடப்பெறும் ’திரு’ என்னும் அடைமொழியைக் கொண்டே தெய்வப்புலவர் அருளிய குறள் ’திருக்குறள்’ என்னும் சிறப்புடன் விளங்குவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றின் இருண்ட காலத்தில் தோன்றிய அற விளக்கான திருக்குறள் எக்காலத்தவர்க்கும் ஒளியினை ஊட்ட வல்லதாக விளங்குவதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

அற வாழ்விற்கான சூத்திரங்களாக அமையும் திருக்குறளில் சொல்லாய்வு என்பது திருக்குறளின் சொல்வளத்தைக் காணும் முயற்சியாகவே அமைகிறது. இம் முயற்சிக்கும் பயிற்சிக்கும் வழிகாட்டும் சிறப்புடைய நூலாகத் திருக்குறள் திகழ்கிறது எனத் தெளியமுடிகிறது.

திருக்குறளில் சொல்லாய்வு என்பது தெய்வப்புலவரின் உள்ளத்திறனை அறிந்துகொள்ளும் முயற்சியாகாது ; ஏனெனில் அறிதலும் இயலாது என்னும் வாய்மையையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

’குறிப்பறிதல்’ என்னும் தலைப்பு இரு வேறு அதிகாரங்களுக்குக்கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நுட்பமே இந்நூலின் பெருமைக்குச் சான்றாவதையும் உணரமுடிகிறது. இவ்வழியில் திருக்குறளை மேன்மேலும் ஆய்ந்தால் சொல்வளத்தையும் பொருள்வளத்தையும் கையாண்ட திறம் புலப்படும் என உணரமுடிகிறது.

அரசாட்சி செய்யும் அரசனுக்கு மட்டுமின்றி காதல் வழி நிற்கும் காதலர்க்கும் குறிப்பறியும் திறனாலேயே சிறப்பும் வெற்றியும் உண்டாகும் என்பது புலப்படுத்தப்படுகிறது.

குறிப்பறிதலுக்கு முகமும் ; முகத்தில் கண்ணும் அளவீட்டுக் கருவியாக நிற்பதனை உணர்த்துகிறார் திருவள்ளுவர். எனவே அக்கருவிகளால் மனிதர்களை அளந்து விழிப்புடன் வாழ வழிகாட்டியுள்ளதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

குறிப்பறியும் திறனுடையாரின் இயல்பினையும் குறிப்பறியும் திறனுக்குரிய நுட்பத்தினையும் திருவள்ளுவர் பல்வேறு சூழல்களில் விளக்கியுள்ள திறத்தின் வழி சொல்லாட்சித் திறன் புலப்படுகிறது.

        காலத்திற்கேற்ப வெவ்வேறு பொருள் கொடுக்கும் வல்லமை கொண்ட சொற்களால் புனையப்பட்ட நூலாகத் திருக்குறள் விளங்குவதனை ’குறிப்பறிதல்’ என்னும் அதிகாரங்கள் மெய்ப்பித்துள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது. 

திருக்குறளின் அருமையினை ஆய்வதன் வழி இக்காலத்து மாணாக்கர் தமிழ்மொழியிடமிருந்து விலகி நிற்கும் போக்கும் பிறமொழியை அரவணைத்துக்கொள்ளும் மாயையும் விலகி தமிழுணர்வுடையோராவர் எனத் தெளியமுடிகிறது.

***********






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக