தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 25 மே, 2019

அவ்வையார் வரலாற்று நாடகக்காப்பியத்தில் தமிழர் நலம் -Historical Drama


அவ்வையார் வரலாற்றுக் நாடகக்காப்பியத்தில் தமிழர் நலம்

முனைவர் ம.. கிருட்டினகுமார், தமிழ்ப்பேராசிரியர் (துணை), காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி – 605 008. உலாப்பேசி – 99406 84775

தமிழ் இலக்கியங்கள் எக்காலத்தும் நிலம், இனம் என்னும் எத்தகைய எல்லையும் இன்றி     மக்களை நெறிப்படுத்தி நிற்பதனை தமிழ் இலக்கிய வரலாறு தெள்ளிதின் உணர்த்தி நிற்கின்றது. அவ்வகையில் முத்தமிழில் முதலிடம் பெற்றுத்திகழும் நாடகத்தமிழின் பங்கு அளப்பரியது. இன்றும் நாடகத்தமிழே திரைத்துறையாக வளர்ச்சிபெற்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் முதலிடம் பெற்றுத் திகழ்வதனைக் காணமுடிகிறது. எனவே மக்களுக்கு அறிவூட்டுவதிலும் மகிழ்விப்பதிலும் முதலிடம் பெற்ற நாடக இலக்கியங்களைப் படைத்து நாடகத்தமிழைக் காக்கவேண்டியது தமிழறிஞர்களின் ; படைப்பாளிகளின்  இன்றியமையாக் கடமையாகிறது.

இருபதாம் நூற்றாண்டில் காப்பியம் படைக்கும் தமிழ்ப்புலமை அரிதினும் அரிதாகவே இருந்துவந்ததனைக் காணமுடிகிறது. எனினும் நாடகப்பாங்கினையும் காப்பிய அழகினையும் எடுத்துரைக்கும் வகையில் நாடக இலக்கியத்தைப் படைத்துப் பெருமை சேர்த்துள்ளவர் கவிஞர் அவ்வை நிர்மலா அவர்கள். தமிழ் மூதாட்டியான அவ்வையின் பெருமையினை இக்காலத்து மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் தமிழ்த்துறைப்பேராசிரியராகவும் தலைவராகவும் சிறக்கப்பணியாற்றும் அவ்வை நிர்மலா அவர்கள் வரலாற்று நாடக்காப்பியமாகப் படைத்துள்ளார். அக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள தமிழர் நலத்தைக் காணவிழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

காப்பிய வடிவம்

                செய்யுள் என்பது உள்ளே நிலைக்கச்செய்யும் திறமுடைத்து. சொல் நயங்களாலும் பொருள் நயங்களாலும் சிறக்கச்செய்யும் திறம் காப்பியத்திற்கே உரிய தனித்தன்மையாகிறது. தமிழ்மொழியின் வளத்தை உணர்த்தும் காப்பிய நெறியினைப் புலப்படுத்த கவிஞர் மரபுக்கவிதையினைத் தேர்வுசெய்துகொண்டதனை

இலக்கண வரம்புடன் இயற்றுவ தாலே ; ஈரா யிரம் ஆண்டு களாக

நிலையாய் நிலத்தில் ஊன்றுத லாலே ; நின்றேன் மரபுக் கவிதையின் பக்கம்


என்னும் அடிகளில் புலப்படுத்துகிறார்.  காப்பியம் என்பது புலவரின் பரந்துபட்ட அறிவினைப் புலப்படுத்தும் இலக்கியப்போக்காக இருப்பதனை பல்வேறு காப்பியங்களின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. காப்பியமே தமிழ்மொழியின் பெருமைகளைத் தமிழர் பண்பாட்டை எடுத்துரைப்பதில் தனித்தன்மையுடன் விளங்குவதனை

சம்பங் கோரையால் வேய்ந்ததோர் சிற்றில் ; கம்பும் வரகும் காய்ந்திடும் முன்றில்

சிம்புள் கோழிகள் நெல்மணி கிளற ; அம்பு விழியார் எறியும் காதணி (..நா.கா. .92)

என்னும் காப்பியத்தின் முதற்காட்சியின் தொடக்க அடிகளே எடுத்துரைக்கின்றன. கிடைக்கும் புல்லை வைத்து வீடுகட்டிய தமிழரின் அறிவுத்திறமும்  சிறுதானியங்கள் எனப்படும் உடல் நலத்தைக்காக்கும் பெருமையுடைய தானியங்களான கம்பு, வரகு ஆகியனவற்றைப் பயிரிட்டு உணவுண்ட நலமும், வளமான கோழிகள் நெல்மணிகளை கிளறும் காட்சியின் வழி பயிர் வளத்தினைப் பேணிக்காத்த வேளாண் வளமும், அங்கு வாழ்ந்த மக்கள் கோழியை விரட்ட காதணிகளை எறிந்த செல்வச்சீரும் எனத் தமிழர் நலத்தினை ஒருங்கே எடுத்துக்காட்டியுள்ளது கவிஞரின் புலமைத் திறத்தினை எடுத்துரைக்கிறது.

பெண்ணுக்குப்பெருமை சேர்த்த தமிழ்நிலம்

                இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்பவரும் நாகரிக மக்கள் எனக் கூறிக்கொள்வோரும் கூட இன்று பல சமூகங்களில் ஆணுக்கு இணையாகப் பெண்ணைக்கொள்ளாத நிலையினைக் காணமுடிகிறது. ஆனால் மன்னர் காலத்திலேயே பெண்பாற்புலவர்களின் புலமைத்திறத்தை நிறுவியவர் தமிழ்மூதாட்டி ஔவையார்.

                ஆண்கள் மட்டுமே அறிவு படைத்தவர் ; என்றொரு எண்ணம் இதுவரை இருந்தால்

                என்னால் அதுதூள் ஆகக் கடவது ; அருகில் இருக்கும் அரசியார் தமையும்

                அப்படி யாக நினைப்பீர் போலும் ……………………………… (..நா.கா. .148)

என்னும் அடிகளின்வழி இதனை தமக்கேயுரிய நடையில் எழிலுற எடுத்துக்காட்டியுள்ளார் கவிஞர். அரசியாரையும் அப்படித்தான் நினைப்பீரெனின் அதுவும் தவறு எனக் கேட்கும் துணிவுடைமையை இங்குணர்த்தி கவிஞர் பெண்ணியச்சிந்தனையாளராகவும் இருப்பதனைப் புலப்படுத்தியுள்ளார்.

அன்புடையார் எல்லாம் தமக்குரியர்

                உலகத்தவரையே தம்மவராக எண்ணும் பண்புடையோர் தமிழர். இதனை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புறநானூற்று அடிகள் தெள்ளிதின் உணர்த்தி நிற்கின்றன. தமிழர்கள் வழிப்போக்கர்களும் ஓய்வெடுத்துக்கொள்ள திண்ணை சமைத்த சிறப்பினையும் இங்கு எண்ணி மகிழலாம். தமிழர்கள் இயல்பாகவே நண்பர்களைச் சுற்றத்தாராகவும், சுற்றத்தாரை உறவினராகவும், உறவினரை உடன்பிறப்புக்களாகவும், உடன்பிறப்புக்களைத் தம் உயிராகவும் எண்ணும் பண்புடையராகச் சிறக்கின்றனர். இதனை

உயிருக் குயிராய்ப் பாசம் கொள்வதில் ; பாலினக் கவர்ச்சியின் பதிவைத் தேடுதல்

பாமரத்தனத்தின் உச்சமாகும் ; பண்பிலார் அழுக்கின் எச்ச மாகும் !

கணவனின் தாயைப் பெண்டிர் அன்புடன் ; அம்மா என்றே விளிப்பது நடைமுறை

அதனைக் கண்டு அண்ணன் தங்கை ; என்றே அறைதல் அறிவிலார் மடமை

(..நா.கா. .119)

என்னும் அடிகளின் வழி உறவுகளை சிறக்கச்செய்யும் தமிழர் பண்பினை எழிலுற எடுத்துரைத்துள்ளார் கவிஞர்.

தமிழர் தொழில்

                செய்யும் தொழிலே தெய்வம் எனத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்த இனம் தமிழினம். கடமைக்காக வேலையைச் செய்யாமல் கடமையெனத் தம் தொழிலை விரும்பிச் செய்தனர். அவர்களுக்குரிய அடிப்படைத் தேவையான நீர் வளத்தைப் பேணிக்காத்துக் கொடுப்பதே அரசின் கடமை. தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை நலன்களைச் செய்துவிட்டால் தொழில் வளரும். தமிழர் திறத்தை உலகமே வியக்கும் என்பதனை உணர்த்தும் வகையில்

குயவன் சேற்றைக் குழைத்துத் தானே ; வழுவழு வென்ற பானைகள் செய்வான்

சேற்றைக் குழைக்கச் செம்புத் தண்ணீர் ; போதும் என்று வாதிடுவீரோ ?

ஊரின் நடுவில் உட்கார்ந் திருந்தால் ; நீங்கள் எப்படி உலைவைப் பீரோ ? (..நா.கா. க்.149-150)

என்னும் அடிகளின்வழிப் புலப்படுத்துகிறார் கவிஞர். மறைந்துபோகும் தமிழர் கலைகளை மீட்டெடுத்தால் தமிழரின் பெருமை தரணியெங்கும் புலனாகும் என்னும் விழைவினையும் இவ்வடிகளின் வழிக் கவிஞர் புலப்படுத்தியுள்ளதனை உணர்ந்துகொள்ள முடிகிறது.

                சங்குகள் சுட்டுச் சுண்ணம் ஆக்கவும் ; தென்னங் கீற்றை வேய்ந்திடப் பின்னவும்

                நாணல் கொண்டு பாயை நெய்யவும் ; மற்றிது போலே எல்லாப் பணியும் …

(..நா.கா. .150)

என்னும் அடிகள் தமிழர்கள் இயற்கை வளத்தைக் கொண்டு பொருள்களைச் சமைத்த திறத்தைப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர். இன்று நாகரிக உலகம் நெகிழியால் பல புதுமையான பொருட்களைச் செய்து அதனால் பல கேடுகளை அடைந்துவந்துள்ளதனைக் காணமுடிகிறது.  இன்று உலகமே மீண்டும் இயற்கைப் பொருட்களுக்கே திரும்பிவருவதனையும் எண்ணும்போது தமிழரின் பெருமையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

உண்மை அழகு

                முக அழகை விட அக அழகே பெருமையுடைத்து என்பதனை காலந்தோறும் தமிழர்கள் உணர்த்திவருகின்றனர். இந்நிலையினை உலகுக்கு உணர்த்துவதில் முன்னோடியாகத் திகழ்பவர் அவ்வையார் என்பதனை உணர்த்துகிறார் கவிஞர்.

                ”திருமணம் பேசிட வந்தவர் முன்னே ; தலையில் சாம்பலை நரையாய்த் தீட்டி

                நெடுங்கோல் ஊன்றி  நடுக்கொடு தோன்றி ; முதுமை வேடம் புனைந்தீர் ஆதலின்

                உங்கள் பெயரை ஊரார் மறந்து அவ்வை என்றே அழைத்திடலானார் (..நா.கா. .157)

என்னும் அடிகளில் அவ்வையின் தோற்றத்தினைப் படம்பிடித்துக்காட்டுகிறார். திருமணம் என்றால் அழகைக் கூட்டிக்கொள்ளும் இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டுத் தம் இளமை அழகை முதுமையாக மாற்றிக்கொண்ட வலிமையினை இங்குப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர்.  மக்கள் பணியாற்ற அழகு தடையாகுமெனில் அதனைத் துறப்பதே நன்று என எண்ணிய தமிழ் மூதாட்டி அவ்வையின் திறத்தையும் இதன்வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது.

தலைமுறை வாழ

                தமிழர்கள் தமக்காக வாழ எண்ணாது பிறர்க்காக வாழும் பொதுநலமுடையவர்களாக வாழ்ந்தனர். எனவே இம்மை மறுமை என இரு உலகத்தையும் கணக்கில்கொண்டு எல்லா உயிர்க்கும் அன்பு செய்து வாழ்ந்ததனைக் காணமுடிகிறது. தாம் நடும் தென்னையும் பனைமரங்களும் தமக்குப் பயன் தராது எனினும் அவற்றை அடுத்த தலைமுறைக்காக நட்ட பெருமை தமிழர்களுக்கே உரித்தானதாகக் கொள்ளமுடிகிறது.

தமிழக மெல்லாம் நன்செய்ப் பயிராய்க் ; கரும்புகள் விளையக் கண்டோம் பலனை

பனையில் இருந்து பெறப்படும் இனிப்பினும் ; கரும்பைக் காய்ச்சிக் கிடைத்திடும் பாகு

பானகம் பாயசம் பலவித இனிப்பாய் ; வானக சொர்க்கம் வாழ்க்கை தந்தது (..நா.கா. .190)

என்னும் அடிகள் தமிழர் உடல்நலத்தைக் காக்கும் பானங்களைக் குடித்து மகிழ்ந்த நிலையினைப் புலப்படுத்துகிறது. இந்நிலையினை ஆங்கிலேயர்கள் மாற்றித் தேநீரைப்பழக்கி அடிமையாக்கிவிட்ட சூழலையும் உணர்த்துகிறார். மக்கள் உடல்நலக்கேட்டினைப் பெருக்கும் பானங்களை உணர்ந்து மீண்டும் தமிழர் தம் முறைக்கே செல்ல அறிவுறுத்துகிறார் கவிஞர்.  

புலமைக்குப் பரிசு

                புலவர்களின் வாழ்வைப் புரவலர்கள் பேணிக்காப்பதும் புரவலர்கள் புகழைப் புலவர்கள் பேணிக்காப்பதும் தமிழர் மரபு. எனினும் புலமைக்கேற்ற பரிசில் அளித்த புரவலர்களின் சிறப்பினையும் அப்பரிசிலை பிறர்க்கு அளித்துவாழ்ந்த புலவர்களின் சிறப்பையும்

பெற்றிடும் பரிசில் புலமையின் அளவுகோல் ; வறுமைப்பிடியில் உள்ளவர்க் கெல்லாம்

வரும்படி தன்னில் உதவலாம் அன்றோ ; நூற்றுக்கணக்கில் மடிவர் பசியால்

உறுபொருள் அளித்தே அவரைக் காக்கலாம் ………………(..நா.கா. .195)

என்னும் அடிகள் உணர்த்தி நிற்கின்றன. கவிஞராக நின்று பல அறப்பணிகளைச் செய்து வரும் இக்காப்பிய ஆசிரியர் தம் கருத்தை ஏற்றிக் கூறுவதாகவும் இவ்வடிகளை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

மனிதம் வளர்த்த தமிழர் மாண்பு

                சங்க இலக்கிய காலம்தொட்டு இக்காலம் வரை அறம் வளர்த்த பெருமையில் முன்னோடியாக நிற்பவர் அவ்வையார். குழந்தைகளுக்கு ஓரடியிலும் பெரியோர்க்கு நான்கடியிலும் அறக்கருத்துக்களை அழகழகாய் கூறிய பெருமை தமிழ்மூதாட்டிக்கே உண்டு என்பதனை அவருடைய ஆத்திச்சூடி முதல் நல்வழி, மூதுரை முதலான நூல்களின் வழி தெள்ளிதின் உணர்ந்துகொள்ளமுடிகிறது. உலகத்தைத் தெளியவைக்கும் எண்ணத்துடன் அவர் பாடிய பாடலுக்குச் சேந்தனாரின் அறிவுரையே அறவுரையாகி தம் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கி நின்றதனை

ஐயா நீங்கள் அளித்த அறிவுரை ; கலங்கிய நீரில் இட்ட படிகமாய்

தெளிவைத் தந்தது, தெளிந்தேன் ஐயா ; ஓரிடம் கிடக்கும் கல்போல் அன்றி

பாரெலாம் உலவும் கால்போல் எழுவேன் ; சேரம், சோழம், பாண்டியம் என்றும்

மனிதன் எழுப்பிய எல்லைகள் கடந்து ; மனிதம் வளர்க்கும் முயற்சியில் வெல்வேன் (..நா.கா. .196)

என்னும் அடிகள் புலப்படுத்தி நிற்கின்றன. அவ்வாறே தம் வாழ்நாள் முழுதும் மனிதம் வளர்ப்பதனையே தம் கடமையாகக் கொண்ட அவ்வையின் சிறப்பினை இவ்வடிகளின் வழி உணர்த்தியுள்ளார் கவிஞர்.  மனிதம் காத்தால் மட்டுமே தலைமுறையை வாழவைத்தல் இயலும்  என்பதனையும் இதன்வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழர் வாழ்வே மலருடை வாழ்வு

                தமிழர்கள் அகவாழ்வில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனவும்  புறவாழ்வில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என மலரின் பெயராலேயே வாழ்வினை வகுத்துள்ளதனைக் கொண்டு தமிழர் வாழ்வு மலர் வாழ்வு எனத்தெள்ளிதின் அறிந்துகொள்ளமுடிகிறது. மலர்கள் மீது மிகுந்த காதல் கொண்ட கவிஞர்

மழைத்துளி பட்டதால் மலர்கள் விரிந்தன ; புதுப்புது மலர்கள் புன்னகை புரிந்தன

முல்லை சண்பகம் முரட்டிதழ் ரஞ்சிதம் ; பன்மலர் பறித்தேன் பாங்காய்த் தொடுக்க

மலரைத் தொடுப்பதில் மனமதை வைத்தேன் ; நிறங்களை வகுத்தொரு நீர்மையில் தொடுக்க

எண்ணம் கொண்டேன் என்னை விடுங்கள் …………………………(..நா.கா. .252)

என்னும் அடிகளில் உப்பை என்னும் பாத்திரத்தின்வழித் தம் கருத்தைப் புலப்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. தமிழர்கள் தோட்டங்கள் அமைத்து மலரினைச் சூடி இயற்கை மணத்துடன் வாழ்ந்த சிறப்பினையும் இவ்வடிகளின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

தூதின் முன்னோடி அவ்வையார்

                தமிழர் சிறப்பினைத் தூதின் வழி வெளிப்படுத்திய பெருமை அவ்வையாரையே சாரும். தூது என்னும் சொல்லே நெடிலையும் குறிலையும் உள்ளடக்கிய ஒரே சொல்லாக அமைந்துள்ளது. அவ்வாறே ஒரே இனமான எதிரெதிர் மன்னர்களைப் பக்குவமாக அமைதிப்படுத்தும் சிறப்புடையவரே சிறந்த தூதராவார். அவ்வரிசையில் முன்னிற்பவர் அவ்வையார் என்பதனை

                அந்தோ அதியன் நிலையோ நேரெதிர் ; தொடர்ந்து போரினில் ஈடுபட் டதனால்

                வேல்களின் முனைபல உடைந்து கிடக்கும் ; வேழம் குத்திய கூரிய ஈட்டிகள்

                மழுங்கிக் கிடக்கும் மலையின் அடுக்காய் ; குந்தப் படைகளின் ஒடுக்கை எடுக்கக்

                கொல்லர் உலைகள் நாளெலாம் பகையும் ; அம்புகள் கூர்மை ஏற்றிட முனையும்

                சம்மட்டி ஓசையில் சாலைகள் அதிரும் ; வியர்வைத் துளிகள் நெருப்பில் பட்டு

                சுர்சுர் என்று பொறிகள் தெறிக்கும் ; உலைகள் தொடர்ந்து எரிவதனாலே

                புகையோ மேகப் பரப்பொடு நெறிக்கும் ……………………..(..நா.கா. .392)

என்னும் அடிகளின்வழிக் கவிஞர் புலப்படுத்துகிறார். சொல்லாலேயே போரினை அடக்கி உயிரைனைக் காத்த அவ்வையின் கருத்தினைத் தம் புலமைத் திறத்தோடு புலப்படுத்தியுள்ள திறத்தினைக் காணமுடிகிறது.

தமிழில் பெயர்கள்

மொழியே இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. எனவே இனத்தை அழிக்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டோரும் இனத்தை அடிமை கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் கொண்டோரும் தமிழ்மொழியை அழித்து தம் மொழியை முன்னிலைப்படுத்தி அடிமை நாடாக்கிய நிலையினை வரலாறு உணர்த்தி நிற்கிறது. எனினும் தமிழ்ப்பெயர்களை இடாத நிலையே நாளும் பெருகிவருகிறது. அந்நிலையினை மாற்றுவதற்கான முயற்சியாக இந்நாடகத்தில் பல தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றிருப்பதனைக் காணமுடிகிறது. அவ்வையார் குறித்த தமிழ் நாடகம் என்பதனால் தமிழில் பெயர்கள் இடம்பெறுதல் இயல்பு தானே என எண்ணுதல் இயல்பு, எனினும் தமிழ்ப்பெயர்கள் வைக்கவேண்டும் என எண்ணுவோர்க்குத் தமிழ்ப்பெயர்களே தெரியாத வகையில் இன்று வடமொழிச் செல்வாக்கு நிலைபெற்றுவிட்டதனைக் காணமுடிகிறது. பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி வருகைப்பதிவேட்டினைக் காண்பதன் வழி இதனை நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. எனவே தமிழ்ப்பெயர்களை எடுத்துக்காட்டித் தமிழர் பண்பினை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் இக்காப்பியம் படைக்கப்பட்டுள்ளதாக எண்ணமுடிகிறது.

                திமிலன், அல்லி, உறுவை, சேயோன், அதியன், கரியன், சேந்தனார், எயினி, வள்ளி, வெள்ளையன், உப்பை, மலையமான் திருமுடிக்காரி, அழகன், எழிலி, கீரன், பாரி, அங்கவை, சங்கவை, மாவெண்கோ, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி,  சோழன் பெருநற்கிள்ளி, வீரன், தொண்டைமான் இளந்திரையன், கபிலர், உட்புரிகுடி கிழார், உருத்திரசன்மனார், அரிசில் கிழார், பரணர், வெள்ளிவீதியார், திருவள்ளுவர், இடைக்காடனார், பெருஞ்சித்திரனார், ஐயூர்மூலங்கிழார், ஒரு சிறைப்பெரியனார், உலோச்சனார், மோசிகீரனார், மருதன் இளநாகனார், பெருஞ்சாத்தனார்  என்னும் பெயர்களை எடுத்துக்காட்டி அவ்வையின் வரலாற்றின் பெருமையினை உணர்த்தியுள்ளார் கவிஞர். ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் தமிழ் வரலாறு இருப்பதனைப் படம்பிடித்துக்காட்டியுள்ளது இக்காப்பியத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் தமிழரின் பெருமிதத்தினை உரைப்பதாகவும் இப்பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது.

நிறைவாக

                நாடகத்தமிழ் மக்களின் பண்பாட்டைப் படம்பிடித்துக்காட்டுவதில் முதலிடம் பெறுகிறது. எனவே நாடகத்தமிழின் வழி தமிழர் பெருமைகளைப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர் அவ்வை நிர்மலா.

                தமிழ் மூதாட்டி அவ்வையார் காலந்தோறும் இலக்கியத்தின் வழி தமிழர் நலத்தைக் காத்து நெறிப்படுத்தியுள்ள திறத்தினை உணர்த்தவிழைந்த கவிஞர் நாடகத்தையே ஊடகமாகக் கொண்டு புனைந்துள்ள திறம் போற்றத்தக்கதாக அமைகிறது.

                தமிழர்கள் தன்னலத்தோடு வாழாது பிறர்க்காக வாழும் நல் மனம் படைத்தவர்கள் என்பதனை நாடகம் முழுதும் பல்வேறு பாத்திரங்களின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

                தமிழர்களின் அருந்தொழில்கள் காலந்தோறும் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்திருப்பதனைக் கண்ட கவிஞர் வருந்தியுள்ளார். அந்நிலை மீட்கப்படவேண்டும் என்னும் விழைவினை தமிழர் தொழில்களை நன்கு விரித்துரைத்துள்ள திறம் சிறப்புடைத்ததாகிறது.

                காப்பியங்கள் படைத்தல் அரிது ; நாடகக் காப்பியங்கள் படைத்தல் அரிதிலும் அரிது; அதனினும் அரிது வரலாற்று நாடகக் காப்பியம் படைத்தல். அவ்வகையில் இன்று அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பியம் படைத்துள்ள கவிஞர் அவ்வை நிர்மலா தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்துள்ள தமிழ்க்கொடை பெருங்கொடை என்பதனைத் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளமுடிகிறது.



*************************





               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக