தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

புதுமையை நோக்கிய கல்வி நிலை -Tamil Education -2


புதுமையை நோக்கிய கல்வி நிலை
முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார், புதுச்சேரி -8, பேச:9940684775

                தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
                கற்றனைத் தூறு மறிவு.    (திருக்குறள்-396)

கல்வி கல்+வி - அகழ்தல் ; ஆழ்ந்திருக்கக்கூடிய திறனைக் கண்டறிந்து வெளிக்கொணரும் பணியினைச் சீராகச் செய்வதே கல்வி. தொன்மை காலத்தில் கிடைத்த கற்களைக் கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினான் மனிதன். அன்று கல்வி தொடங்கியது.  மனிதன் தன் அறிவு வளர்ச்சியினால் தீயினைக் கண்டறிந்து தன் தேவைகளை நிறைவுசெய்து கொண்டான். அன்று கல்வியின் வளர்ச்சிநிலைத் தொடங்கிற்று. இதன்வழி அந்தந்தக் காலத்திற்குரிய தேவைகளை நிறைவு செய்வதே கல்வியின் தேவையாவதனை உணரமுடிகிறது. இன்றைய தேவைகளுக்குரிய கல்வியின் புதுமை நிலையினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

கல்வி நிலை

        கல்வி பொது சார்புடையது. அதனை பொருளாதார நோக்கில் கையாள்வது துன்பத்தினையே விளைவிக்கும். கல்வியினை வணிகமாக நோக்காது சேவையாகக் கொண்டு செயல்படும் போதே அங்கு கற்றல் சிறப்படையும். சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு என்னும் எவ்வித வேறுபாடுமின்றி அனைவர்க்கும் தொடக்கக்கல்வி அளிக்கப்படுவது போல  உயர்கல்வி வழங்கும் நிலையினை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. எனினும் திறமைக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் வகையில் விதிமுறையினை அமைத்தல் வேண்டும். அவ்வாறின்றி அனைவர்க்கும் வாய்ப்பு வழங்கப்படுமாயின் திறமைக்கு முக்கியத்துவமின்றிப் போகும் சூழல் ஏற்படும்.

தரமான கல்வி

        வேறுபாடற்ற சேர்ப்பு முறை, கற்கும் இட வசதி, தரமான ஆசிரியர்கள் என்னும் சூழலை அமைக்கும் போதுதான் தரமான கல்வியினை அளிக்க இயலும். பொதுவான சீரான கல்வித்திட்டத்தைக் கொண்டே மதிப்பிடப்படல் வேண்டும். அவ்வாறு முறைப்படுத்தும் போதுதான் தரமான மாணவர்களுக்குத் தரமான கல்வியினை அளிக்க இயலும். வேகமாக வளர்ந்துவரும் சூழலைக் கருத்தில் கொண்டு இயன்றவரை வருடத்திற்கு ஒரு முறையோ பருவத்திற்கு ஒருமுறையோ பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தல் அவசியம். இவ்வாறு செய்வதன்வழி மாணாக்கர்கள் அறிவுத் திறம் மேம்படுவதோடு ஆசானும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ள இயலும்.

மனனம் செய்ததை எழுதும் தேர்வு முறையாக மட்டுமின்றி சிந்தனையின் வெளிப்பாடாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளிலும் பயிற்சி பட்டறைகளிலும் வெளியிடப் பயிற்சி அளித்தல் வேண்டும். இம்முறை பள்ளிகளிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். இதன்வழி உயர்கல்வியில் தரமான ஆய்வுகளைப் பெறமுடியும். இவ் ஆய்வுகள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயனளிக்கும் என்பதனைத் தெள்ளிதின் உணரலாம்.

ஆசிரியரும் மாணாக்கரும்

        விடுதலைக் கிடைத்து 60 ஆண்டுகளாகியும் ஆசிரியரின் பங்கினை எப்பொறியினாலும் நிறைவு செய்ய இயலவில்லை. இதன் வழி கற்றலில் ஆசிரியரின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. எடுசாட், கணினி எனப்பல ஊடகங்கள்வழி கற்பிக்கப்பட்டாலும் மனிதன் நேரடியாகக் கற்பிக்கப்படும் கல்விக்கு ஈடு இணையில்லை என்பதனை உணரலாம். இதன்வழி மாணவர் பாடத்தை மட்டும் ஆசிரியரிடம் இருந்து கற்பதில்லை. அவருடைய பண்புநலன்களையும் அவனை அறியாமலே கற்றுக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது என்பதனை உணரமுடிகிறது. விடலைப் பருவத்தில் உள்ள மாணாக்கர்களுக்கு கற்பிக்கும் ஆசானின் பொறுப்பு கூடுதலாகிறது. ஏனெனில், இது பாடத்திட்டத்திற்கு மட்டுமின்றி ஆளுமைத் திறத்தினையும் உள்ளடக்கியதாகிறது.

        ஆசிரியரால் பாடங்களைக் கற்பிக்க இயலுமே அன்றி யார் எவ்வளவு கற்றார்கள் என்பதன் உண்மையான மதிப்பீட்டினை அறியமுடியாது. தேர்வு முடிவுகள் மாணாக்கருடைய கவனித்தல், மனனம் செய்தல், நினைவாற்றலுடன் எழுதுதல் ஆகிய திறனை மட்டுமே மதிப்பிடுவதாக அமையும்.  தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவரும் பிற ஆளுமைத் தேர்வுகளில் தேர்ச்சி அடையாது போகும் சூழலில் சிக்கிக்கொள்வதனையும் காணமுடிகிறது. எனவே மதிப்பிடும் முறையிலேயே மாணாக்கர்களின் திறனை மேம்படுத்த இயலும். கற்கும் பாடங்களை வெளிக்காட்டும் திறனோடு அதன் பயன்பாட்டினைத் தேவையான இடங்களில் வெளிப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் அமைதல் அவசியமாகிறது.

        மாணாக்கர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில் ஒப்படைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியனவற்றை படைத்திடும் வகையில் பாடத்திட்டம் அமைதல் வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்திலேயே இவ்வாறு மாணாக்கரின் சிந்தனையைத் தூண்டுவதன்வழி உயர்கல்வியின் தரமான நிலையினை மாணவர் அடைய வழிகாட்டுவதாக அமையும்.

        மாணாக்கரின் திறனை இவ்வாறு மேம்படுத்துவதனைப் போலவே அதற்கு வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியரின் திறனையும் மேம்படுத்துவதும் அவசியமானதாகும். இதற்காக புத்தாக்கப் பயிற்சியும் புத்தொளி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் கற்பிப்போரின் திறனால் கற்பவரின் திறனும் மேம்பட வாய்ப்புள்ளதனை தெளிவாக உணர இயலும்.

நடைமுறைக் கல்வி

        மனித இனத்திற்குப் பயன் தரும் வகையில் கல்வித்திட்டம் அமைதல் வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் வழிவகை செய்வதாக அமையாமல் அடிப்படையான உடல்நலம், மனநலம் காக்கும் கல்வி முறையினை கட்டமைத்தல் வேண்டும். சட்டங்களால் செய்ய முடியாததனை கல்வியால் மட்டுமே செய்ய இயலும் என்பதனால் பள்ளிப் பருவத்திலேயே ஒழுக்கநெறிகளை பதித்துவிட வேண்டியது கல்வித்திட்டத்தின் முக்கிய பங்காகும். 1929 இல் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. எண்பது ஆண்டுகளான பின்னரும்  45% குழந்தைத்திருமணம் நடைபெறுகிறது என்னும் செய்தி வருத்தத்திற்குரியது. எனவே சட்டங்களை விட மனித மனத்தை மாற்றும் வகையில் பாடத்திட்டங்களைக் கட்டமைப்பது கல்விக்குழுவின் இன்றியமையாத பணியாகிறது.

உணவை உற்பத்தி செய்யும் உழவர், நாட்டின் தரத்தைக் காட்டும் கட்டுமானப்பணிக்குரிய கட்டிடத்தொழிலாளி, வணிகத்திற்கு அடிப்படையான  போக்குவரத்துக்குரிய ஓட்டுநர், நாட்டிற்குரிய சட்டதிட்டங்களைக் கொண்டு வரும் தகுதியுடைய அரசியல்வாதி என முக்கியத்துவம் வாய்ந்த பணியாளர்களுக்கு உரிய கல்விதிட்டங்களையும் தரமான முறையில் அமைத்துக்கொடுத்தால் பல இடர்களைக் களையமுடியும். இத் தொழில் அனைவருக்கும் பொது என்னும் நிலை இருப்பின் அடிப்படைக்கல்விதிட்டத்திலேயே அதற்கான வரையறையினை செய்வதும் அவசியமாகிறது.


தாய்மொழிக்கல்வி

        தாய்மொழிக் கல்வி பரவலாக்கப்படும் நிலையினை பொறுத்தே கல்வி வளர்ச்சியும் அதன் பயனும் முழுமையாகச் சென்றடையும் என்பதனை கல்வியாளர்கள் பல நிலைகளில் உணர்த்தியும் சில நாடுகள் பிறமொழிக் கல்வித்திட்டத்தையே பின்பற்றி வருகின்றன. பிற மொழிக்கல்வித்திட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே வளர்ச்சியடையச் செய்யும். தாய்மொழியில் கற்கும் சப்பான் மற்றும் சீனாவின் மண்ணில் எவரும் கால்பதிக்கமுடியாததற்குக் காரணம் அவர்கள் தாய்மொழிக்கல்வியால் பெற்ற விழிப்புணர்வே. இதன் விளைவாகவே வன்பொருளில் சிறக்கும் சீனா உலகளவில் முதலிடம் பெற முனைந்துவருகிறது. பிறமொழியில் கற்கும் இந்தியரும் இப்போட்டியில் இடம் பெறுவது  சிறப்பு எனினும் தாய்மொழிக் கல்வியால் எளிதில் முன்னேற இயலும். அதற்கு அனைத்து நிலைகளிலும் தாய்மொழிக் கல்வி அவசியமாகிறது.

கல்வியும் பண்பாடும்

        பண்பாடு மனிதரைப் பண்படுத்துவது. ஒவ்வொரு இனத்தவருக்கும் உரிய ஒழுக்க நெறிகளை அம்மொழிக்குரிய இலக்கியங்களாலேயே செம்மையாக வெளிப்படுத்த இயலும். எனவே, நீதி நெறிகளை உடைய இலக்கியங்களை தொடக்க கல்வி, உயர்கல்வி என்னும் வேறுபாடின்றி அனைத்து மாணாக்கர்க்கும் கற்பிக்கப்பட வேண்டும். ஒரு இனத்தவர்க்கு அவ்வாறு சிறப்புடைய இலக்கியங்கள் இல்லையெனில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களைக் கற்பிக்க வழிவகை செய்யவேண்டும். அவ்வாறு கற்பிக்கப்படாவிடில் குற்றங்களைத் தவிர்க்க இயலாது. 11-03-2009 அன்று ஜெர்மனியில் ஒரு மாணவர் 14 உயிர்களைக் கொன்ற செய்தி இதற்கு சான்றாகிறது.


ஆய்வின் பயன்

        உயர்கல்வியில் ஒரு துறை சார்ந்த அறிவு மட்டுமே ஊட்டப்படுகிறது. உயர்கல்வி ஆழ்ந்த அறிவினை வெளிக்கொணர்வதனை  நோக்கமாகக் கொண்டுள்ளதனால்  அவ்வாறு அமைவதே சிறப்பு. எனினும் அக்கல்வி சமூகத்திற்கு பயன்தரும் வகையில் அமைய வேண்டும். உயர்கல்வியில் செய்யப்படும் ஆய்வுகள் பட்டத்திற்காக மட்டும் அமையாமல் சமூகத்திற்கு பயன்படுவதற்கான ஆய்வுகளாக அமையவேண்டும். அறிஞர்கள் சான்றோர்கள் கல்வியாளர்கள் ஆகியோர் முன்னிலையிலேயே ஆய்வுப்பொருள் தேர்வு செய்ய வழிவகை செய்தல் வேண்டும். இந்தியாவில் அரசு சார்ந்த சாராத 1,500 ஆராய்ச்சி நிறுவனங்கள் 380 பல்கலைக்கழகங்கள் 11,000 கல்லூரிகள் இருந்தும் உயிர்காக்கும் பல பொருள்களுக்கு வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.இந்திய அரசு ஆராய்ச்சிக்காக 41,000 கோடி ஒதுக்குகிறது. பிறநாடுகளை எதிர்பார்க்கும் சூழல் இனியும் தொடராமல் ஆய்வுகள் நடத்த வேண்டிய கடமை கல்வி நிலையங்களுக்கு இருப்பதனை கல்வியாளர்கள் உணர்ந்து ஆவன செய்யவேண்டியது அவசியமாகிறது.

நிறைவாக

        காலம் மற்றும் சூழலுக்கேற்ப உலகத்தரத்திற்கு இணையாக வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது பருவத்திற்கு ஒரு முறையோ பாடத்திட்டங்களை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும். .

                உயர் கல்வி தாய்மொழியிலும் பயிலும் வகையில் வழிவகை செய்யப்பட்டால் தரமான ஆய்வுகளை தடையின்றி செய்யும் நிலை உருவாகும். இதனால் சமூகத்தில் மிக அருமையான மாற்றங்கள் விளையும்.

திறமையான ஆசிரியர்கள் தரமான மாணாக்கர்கள் இருந்தும் இன்றும் பல தேவைகளுக்காக பிறநாடுகளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. அத்தகைய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வுகள் பட்டங்களுக்கு மட்டும் பயன்படாமல் நாட்டு நலத்திற்கு பயனளிக்கும் வகையில் தரமான ஆய்வுகள் அமையவேண்டும்.

மனிதமனம் மாறும் தன்மையது. எனவே, தொடக்கநிலை, உயர் நிலை என்னும் வேறுபாடின்றி அனைவருக்கும் நீதிநெறிகள் நிறைந்த உயர்ந்த இலக்கியங்களை பாடத்திட்டத்தில் அமைத்து குற்றங்களைத் தவிர்க்கவேண்டியது கல்வியாளர்களின் கடமையாகும்.

ஒரு இனத்திற்குரிய பண்பாட்டினை அறிந்துகொள்ளவும் தனி மனித சிந்தனை வளர்க்கவும் தாய்மொழியாலேயே இயலும். எனவே தாய்மொழியைக் கற்கவும், தாய்மொழியில் கற்கவும் வழிவகை செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதனால் மட்டுமே தரமான மாணாக்கர்களை மிகுதியான அளவில் முன்னேற்ற இயலும் என்பது தெளிவாகிறது.

புதுமையை நோக்கிய கல்வியானது பழமை வளத்தினை அடிப்படையாகக் கொண்டு, அறிவியல் , தொழில்நுட்பம் போன்ற புதுமைகளைக் கற்பித்து, தாய்மொழியிலேயே சிந்திக்கச்செய்து தரமான ஆய்வுகளைப் படைப்பதனால் மாணாக்கர் நலமும் நாட்டின் வளமும் பெருகும் எனத் தெளியலாம்.


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை  (திருக்குறள்:400) 
         



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக