இளைய தலைமுறைக்கு வழிகாட்டும்
வள்ளுவம்
முனைவர்
ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப்பேராசிரியர் (துணை), புதுச்சேரி
: 605008 உலாப்பேசி : 9940684775
மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது’ என்னும்
வழக்குமொழிக்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். தமிழர்க்குப் பெருமை சேர்க்கும்
இலக்கியங்களுள் அற இலக்கியங்களின் பங்கு அளப்பரியது. அவற்றுள் திருக்குறள் தலையாயது.இந்நூல்
உலகம் முழுதும் ஆட்சி செய்யும் பெருமைக்குரியது என உலகத்தவர் பகர்வதனைக் கொண்டே இந்நூலின்
பெருமிதத்தை அளவிடமுடிகிறது. உலக அளவில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்னும்
பெருமையில் விவிலியத்துக்கு அடுத்து நிற்பது திருக்குறள் எனக் குறிப்பிடப்படுகிறது.
முன்னது சமயச் சார்புடைத்து. பின்னது மானுட இனத்திற்கே வழிகாட்டும் பொதுமறை. அவ்வகையில்
திருக்குறள் இன்றைய இளைய தலைமுறையின் வாழ்வியலுக்கு உரம் சேர்க்கும் நிலை குறித்து
ஆயவிழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது. இளைய தலைமுறையினர்க்கு அறநெறிகள் எளிதில்
எட்டும் வகையில் கூற எட்டுக் குறளே போதுமானது என எண்ணியதாலும் பக்க வரையறையினைக் கருத்தில்
கொண்டும் அறத்துப்பாலில் உள்ள எட்டுத் திருக்குறள்கள் மட்டுமே இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அருள்
வாழ்வே பொருள் வாழ்வு
உடலையும் உயிரையும் ஒரு சேரக் காக்கக் கற்றுக்கொடுத்த
பெருமை தமிழ் இலக்கியங்களுக்கே உண்டு. எனவே திருக்குறளையும் திருமந்திரத்தையும் மொழிபெயர்த்துத்
தம் இனத்தைக் காப்பதில் பிறநாட்டார் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர். கடவுள் என்னும்
பெயரில் உயர் ஒழுக்கங்களை கற்றுக் கொடுத்த பெருமை அருளாளர்களுக்கே உரியது. மார்கழித்
திங்களில் நீண்ட நேரம் கோலம் போடுவது அழகியல் கலை மட்டுமன்று அக்காலத்தில் உடல்நலத்தைப்
போற்றும் ஓசோன் காற்றை சுவாசிக்க வழிவகை செய்ததுமே. அவ்வாறே கோயிலை காலையிலும் மாலையிலும்
சுற்றுவதும் நடைபயிற்சியினால் உடல்நலத்தோடு மனநலத்தையும் காக்கும் பயிற்சியே. இவ்வாறு
ஒவ்வொரு வழக்கத்திலும் தமிழர் உடலையும் உயிரையும் போற்றிய நிலையினை உணர்ந்து அருள்வாழ்வில்
ஈடுபடவேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையிலேயே கடவுள்வாழ்த்தினை முதல் அதிகாரமாக்கினார்
திருவள்ளுவர்.
படைத்தவனை நம்புவதை விட்டு படைப்புகளையே நம்பும்
அவலநிலையாலேயே இன்று குற்றங்கள் தொடர்கின்றன. அருளியலுக்கு மட்டுமின்றி உலகியலுக்கும்
துணை செய்யும் இறைவன் தாளை; அடியை; பாதத்தை; கழலைப்பற்றினால் துன்பமே நிறைந்த இவ்வாழ்வை
இன்ப நிலையிலேயே கடப்பர் என்பதனை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார் (திருக்குறள்
-10)
என்னும்
குறளின் வழி தெளிவுறுத்துகிறார். அவ் அடியை மறந்தார் என்றுமே இவ் உலகவாழ்வில் சிக்குண்டு
வருந்துவர் என்பதனையும் உணர்த்தியுள்ளார். ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவதில்லை’
என்னும் முதுமொழியில் அடிக்கு ஈடாக இறையடியைப் பொருத்திப் பொருள் கண்டுமகிழலாம். பொருளை
விழைவோர் அருள் நாட்டத்தை விழையாதவராயும் அருளை விழைவோர் பொருள் நாட்டத்தை விழையாதவராயும்
இருப்பதனை இக்குறள் தெளிவுறுத்தி உள்ளதனை உணர்வுடையோர் உணர்வர்.
உயிர் கடவுள் கொடுத்த கொடை. உடல் கடவுள் வழி
பெற்றோர் கொடுத்த கொடை. எனவே பிறப்பும் இறப்பும் எந்நிலையிலும் எவராலும் வரையறுத்துக்
கூறிவிட இயலாது. பூமி எப்படி உருவானது என்னும் ஆய்வுக்காக பல லட்சம் கிலோ மீட்டர் ஆழம்
தோண்டி ‘கடவுள்துகள்’ குறித்து ஆய விழைந்தனர். இதனால் பூமிக்குக் கேடு நிகழக் கூடும்
என அஞ்சிய விஞ்ஞானிகள் (ஃப்ராங்காய்ஸ் எங்க்லர், பீட்டர் ஹிக்ஸ்) முன்னாள் குடியரசுத்தலைவர்
அப்துல்கலாம் அறிவுரையின்படி நடராசர் சிலையை முன்னிறுத்தி ஆய்வினை நிகழ்த்தினர். ஆய்வில்
வெற்றிபெற்று நோபல்பரிசும் பெற்றனர். (ப.35.கவனகர் முழக்கம் நவம்பர் 2013). இந்து சமயக்
கடவுள் சிலையை நிறுவ அறிவுரைத்த முகமதியரின் சொல்லைக் கேட்டு கிறித்துவர்கள் செயல்பட்ட
நிலையினை இங்கு எண்ணி மகிழலாம். வழியும்இறையருளால்தான் அனைத்தும் நிகழ்கின்றன என்பதனை
உணர்ந்த சான்றோர்களின் பெருமிதமும் இங்கு எண்ணத்தக்கது.
அறவாழ்வே
பெருவாழ்வு
எவ் உயிரும் தம் உயிர்போல் எண்ணும்போது அன்பும்
அறனும் இயல்பாகிறது. அன்பு தாயால் சிறப்பது ; அறம் தந்தையால் சிறப்பது இவை இரண்டும்
சிறக்கும்போது குருவால் கற்பிக்கப்படும் பண்பும் இறையால் கொடுக்கப்படும் பயனும் தானே
சிறக்கும் என்பதனை உணர்த்தும் வகையில்
அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது (திருக்குறள் -10)
எனக்
கூறியுள்ளார் திருவள்ளுவர். இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாவது அன்புடைய அற வாழ்வு வாழ்வதே. இவ்வாறு வாழ்வோர் தம்மை மட்டுமின்றி
அச்சூழலில் வளர்வோரையும் பண்புகளில் சிறக்கச்செய்து இல்லத்திற்கும் நாட்டிற்கும் பயன்
விளைக்கும் வகையில் நன்மை விளைப்பர். அவ்வாழ்வே சீரான வாழ்வாகும் என்பதனையும் இக்குறளின்
வழி உணரமுடிகிறது. இக்குறள் அனைவர்க்கும் பொருத்தமுடையதாயினும் நெறி தவறிச் செல்லும்
இன்றைய தலைமுறைக்குப் பெரிதும் பொருத்தப்பாடுடையதாகத் திகழ்கிறது. நண்பர்க்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தினை இல்லத்தில் உள்ளோரிடம் காட்டத் தவறிவிடுகின்றனர். இல்வாழ்க்கையில்
அன்பும் அறனும் தழைக்கச்செய்ய வேண்டியது ஒவ்வொரு தனிமனித அறமாவதனை திருவள்ளுவர் இக்குறளின்
வழி வலியுறுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது.
மனைமாட்சியே
மாட்சி
மனை என்பது இல்லத்தைக் குறிக்காமல் அவ் இல்லத்துக்குரிய
பெண்ணைக் குறிக்கிறது. தமிழில் உள்ள பல சிறப்புக்களுள் இதுவும் ஒன்று. பெண்ணை முன்னிறுத்திய
சமூகம் தமிழ்ச்சமூகம் என்பதனை
மங்கலம்
என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம்
நன்மக்கட் பேறு (திருக்குறள்
-60)
இக்குறளின்
வழி தெளியலாம். பெண்ணே குடும்ப வளத்தைக் காப்பதில் முன்னிற்கிறாள். பொருள் நிலையால்
குடும்பத்தைச் செழிக்க வைப்பதில் மட்டுமின்றி தாய்மைப் பேறாலும் செழிக்கவைக்கும் பெருமை
பெண்மைக்கே உரியது பெண் குடும்பத்துக்கு அணிகலானவது
போல் அப்பெண்ணுக்கே அணிகலானவது மக்கட்பேறு என்பதனையும் தெளிவுறுத்தி இல்லறத்தின் பெருமையினை
தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர். திருமணத்தின் அருமையினை உணராது மக்கட்பேறின் பெருமையினை
உணராது பொருளில் மட்டுமே நாட்டம் கொண்டு தனித்து வாழும் மேற்கத்திய ஆடம்பரநிலை இன்றைய
இளையதலைமுறையினரிடம் பரவலாகி வருகிறது. தமிழர் வாழ்வை உலகமே பெருமிதத்துடன் நோக்குவது
தமிழ்க்குடும்ப அமைப்பினையே என்பதனை உணர வேண்டும். வாழ்க்கைப் பொருளுடையதாக (செல்வம்)
மட்டும் இருந்தால் போதாது. பொருளுடையதாகவும் (பெருமை) அமைதல் வேண்டும். தன்னலம் கருதியும்
சமூக நலன் கருதியும் இல்லற ஒழுக்கத்துடன் வாழ்வதே வாழ்வாகும் என அறிவுறுத்தியுள்ள திறனையும் இக்குறளின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.
அன்பால்
விளையும் நட்பு
அன்பை அடிப்படையாகக் கொண்ட வாழ்வே அழகாகும்.
ஆடம்பரத்தால் விளையும் நட்பு மனத்துக்கும் உடலுக்கும் கேட்டினையே உண்டாக்கும். மகிழ்ச்சி
என்பது எந்நாளும் வெறும் பொருளால் நிகழ்வதன்று பெறும் அன்பால் நிகழ்வது. குழந்தையானது
பிறர் வாயில் ஊட்டும் இனிப்பை விட இனிப்பானது அக்குழந்தை காட்டும் அன்பே என்பதனை உணராதார் ஒருவரும் இலர். எனவே அன்புடைய பண்பை வளர்த்துக்கொள்ளும்
நிலை வேண்டுமென்பதனை
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு (திருக்குறள்
-74)
என்னும்
குறளின் வழி தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர். பிற உயிர்களிடத்துக் காட்டும் அன்பு
இவ் உலகத்தில் வாழ்வதற்கான விருப்பத்தை உண்டாக்கும். தன்னலத்துடன் வாழ்வோரே மனக்குறையால்
தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர். பொதுநலத்தில் ஈடுபடுவோர் தமக்குரிய கடமையினை எண்ணி
அனைத்து உயிர்க்கும் நன்மை செய்ய பல்லாண்டு வாழ எண்ணுவர். அத்தகைய ஒத்த அன்புடையவரின்
நட்பு பெருமையினையும் சிறப்பையும் உண்டாக்கும்.
சமூகசேவை செய்யும் இளைஞர் குழுக்களால் நாட்டின் பல நன்மைகள் நிகழ்வதனைக் காணமுடிகிறது.
பொழுதுபோக்குவதனை விட்டொழித்து இயன்ற அளவில் பிறர் வறுமையை ; அறியாமையை நீக்க முயலும்
வகையில் பொழுதை ஆக்கப்படுத்தல் வேண்டும் என
வழிகாட்டும் நிலையினையும் இங்கு எண்ணிமகிழலாம்.
பணிவே
அணி
கணினி யுகத்தில் எல்லோரும் இயந்திரங்களுடன்
பழகக் கற்றுக்கொண்டுள்ளனர். எனவே மனிதப் பண்புகள் மறைந்து வருவதனையும் காணமுடிகிறது.
எல்லோரும் ஆடை ; உணவு ; பேச்சு ; பொருள் ஈட்டல் ; என அனைத்திலும் வேகத்தையே விரும்புகின்றனர்.
இதனாலேயே உறவுகளை விட்டுப் பிரிந்து வாழும் சூழல் பெருகிவிட்டது. பதவி வெறி பணிவையும்
பண வெறி இன்சொல்லையும் தொலைத்துவிடுகிறது. வாழ்க்கைக்கு அழகு சேர்க்கும் பணிவையும்
இன்சொல்லையும் கற்றுக்கொண்டால் மட்டுமே வாழ்க்கை அழகானதாகும் என்பதனை
பணிவுடையன்
இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல
மற்றுப் பிற (திருக்குறள்
- 95)
என்னும்
குறளின் வழி தெளிவுறுத்துகிறார். பணிவும் அன்புமே சிறந்த அணிகலன்களாகும். இவை இரண்டுமின்றி
எத்தகைய அணிகலன் அணிந்தாலும் அதனால் அழகு உண்டாகாது. வருத்தமே உண்டாகும் எனத் தெளியமுடிகிறது. உறவுகளைப் போற்றி அரவணைத்து வாழ இவை இரண்டும் அவசியமாகின்றன.
அன்று வீடுகள் தனித்தனியாக இருந்தன. ஆனால் மக்கள் நெருக்கமாக வாழ்ந்தனர். இன்று வீடுகள்
நெருக்கமாக இருக்கின்றன. மனிதர்கள் தனித்தனியாக வாழ்கின்றனர் என்னும் நிலையும் இங்கு
எண்ணத்தக்கது.
பெரியோரைப்
போற்றுக
நீரை ஊற்றிய அன்புக்கு மாற்றாகத் தென்னை இளநீரைக்
கொடுத்து நன்றியைத் தெரிவிக்கிறது. மனிதனோ முதியோர் இல்லங்களில் தன்னை வளர்த்த பெற்றோர்களைச்
சேர்க்க விழைகிறான். தன் வருத்தம் பாராது வயிற்றில் சுமந்த தாயையும் தோளில் சுமந்த
தந்தையையும் காக்கத் தவறிய பிள்ளைக்கு உண்டாகும் கேட்டினை
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (திருக்குறள்
-110)
என்னும்
திருக்குறளின் வழி தெளிவுறுத்துகிறார். எந்நன்றி என்னும் சொல்லுக்கு, தம்மை வருத்திக்கொள்ளாது
பிறர்க்கு இயல்பாக செய்த உதவி எனவும் செய்ந்நன்றி என்னும் சொல்லுக்கு, தம்முடைய கடமைகள்
இவை என எண்ணி பிறர்க்காகத் தம்மை வருத்திக்கொண்டு செய்த உதவி எனவும் பொருள்கொள்ளலாம்.
இக் குறளின்வழி செய்ந்நன்றி மறவாது நன்றியுணர்வுடன் வாழ்ந்தால் சிறக்க வாழலாம் என அறிவுறுத்துகிறார்
திருவள்ளுவர்.
நுழைந்து
பார்க்கும் அறம்
அறம் வாழ்த்தவும் வல்லது ; வீழ்த்தவும் வல்லது.
விதை விதைத்தவன் அறுவடைக்கு அணியமாவதைப் போல் அறமானது தீயோர்க்கும் நல்லோர்க்கும் அவ்வவர்
பண்புக்கேற்றபடி பயனைத் தரவல்லது. அறம் வாழ்த்த வேண்டுமாயின் சினத்தை அடக்க வேண்டும்.
சினத்தை அடக்க ஆணவத்தை ஒழிக்கும் கல்வியைக் கற்க வேண்டும். அவ்வாறு கற்று அறிவுச்செருக்கின்றி
அடங்கி வாழும் பெருமையுடையோர் அறத்தைத் தேட வேண்டாம் அறமே அவரைத் தேடி வந்தடையும் என்பதனை
கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (திருக்குறள் -130)
என்னும்
குறளின் வழி தெளிவுறுத்துகிறார். அன்புடன் கூடிய பொறுமை சினத்தை ஒழிக்கும். அருளுடன்
கூடிய கல்வி ஆணவத்தை ஒழிக்கும். எனவே இவற்றைத் தம் வாழ்நெறியாகக் கொண்டு வாழும் தலைமுறையால்
நாடும் வீடும் செழிக்கும் என்பதனைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளதனைக்
காணமுடிகிறது.
நிறைவாக
திருக்குறள் குறுகிய வடிவத்தில் நின்று மக்கள்
உள்ளத்தில் பேரொளியை ஊட்டி மானுட இனத்தின் ஒற்றுமைக்கே வழிகாட்டியாய் விளங்குவது தெளிவாகின்றது.
திருக்குறளின் இரண்டடியை நினைவில் கொண்டு ஒவ்வொரு
அடியினையும் எடுத்துவைத்தால் பெருமையுடன் வாழமுடியும் என உணரமுடிகிறது.
எளியமுறையில் வழிகாட்டிய திறத்தாலேயே தமிழ்
இலக்கிய வரலாற்றில் தெய்வப்புலவர் என்னும் அடை திருவள்ளுவரைப் பற்றிக்கொண்டுள்ளதனை
உணரமுடிகிறது.
இன்றைய இளைய தலைமுறையினர்தனிமனிதன்- குடும்பம்
– சமூகம் என அனைத்து நிலைகளிலும் சிறக்க வழிகாட்டும்
வகையில் திருக்குறளை அருளியுள்ளார் திருவள்ளுவர் என்பதனை இளைய தலைமுறையினர்க்கான நோக்கில்
திருக்குறளைக் காணும்போது தெள்ளிதின் புலனாகின்றது.
அறத்திற்குரிய நெறிமுறைகளைஇளைய தலைமுறையினர்க்கும்
உணர்த்தும் வகையில் செறிவாக இயற்றப்பட்டுள்ளதானால் ‘எல்லாப் பாலும் இதன்பால் உள” என்னும்
கூற்று பொருத்தப்பாடுடையதாகவே அமைகிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் திருக்குறளின் வழி
நின்றால் உடல் மற்றும் மனச்சோர்வின்றி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்து தமிழினத்தின் பெருமையினை
நிலைநாட்டுவர் எனத் தெளியமுடிகிறது.
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக