(முனைவர்
ம.ஏ.கிருஷ்ணகுமார்,உலாப்பேசி : 99406 84775)
தனக்காக வாழாமல் தம் மக்களுக்காவும் நாட்டுக்காகவும்
வாழத் துணிந்தவர்களே மகான்களாகப் போற்றப்படுகின்றனர்.இந்துமதம் போற்றிய அறங்களின் வழி
நாட்டில் ஒற்றுமையையும் பண்பாட்டையும் நிலை நிறுத்த பாடுபட்டவர் சுவாமி விவேகானந்தர்.இந்துமதத்தின்
அருமையான கொள்கைகளின் வழி உலகையே அமைதியான பாதைக்குக் கொண்டு வர இயலும் என உணர்த்த
உலகம் முழுதும் பயணம் மேற்கொண்டார்.அப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அதில் வெற்றியும்
பெற்றவர் சுவாமி விவேகானந்தர்.அவருடைய அரும்பணியினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை
அமைகிறது.
கொல்கொத்தாவில்
உதித்த கதிரவன்
விஸ்வநாத் தத்தாவிற்கும் புவனேஸ்வரி தாய்க்கும்
கொல்கொத்தாவில் 12-01-1863 இல் பிறந்தார் நரேந்திர தத்தா. இந்தியாவில் மட்டுமே மகான்களின்
தோற்றம் தொடர்ந்து வழிவழியாக இருந்துவருவதனைக் .காணமுடிகிறது.அவ்வரிசையில் இடம்பெற்று இந்தியாவின்
வெளிச்சத்தை உலகம் முழுதும் பாய்ச்சிய கதிரவனாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்.எனவே
தேசியக்கவிஞர் தாகூரும் “நீங்கள் இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமெனில் சுவாமி
விவேகானந்தரைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்” என்றார்.
திறமையுடன்
கடைமையைச் செய்வதே யோகம்
வாழ்வைப் போகத்தில் கழித்து வாழ்வோரிடமிருந்து
மாறுபட்டு யோகத்தால் இளமையிலேயே துறவாடை அணிந்து இந்தியாவின் மகத்துவத்தை உலகறியச்செய்தவர்
சுவாமி விவேகானந்தர்.தாம் பெற்ற இன்பத்தை வையகமும் பெறும் வகையில் யோகக்கலையையும் பண்பாட்டுப்
பெருமைகளையும் நிலைநிறுத்தினார்.அவருடைய எளிமையான ஆழமான பேச்சு கேட்போர் மனத்தை மயக்கியது.இதனை
“தங்கக் குடத்தைத் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போல் இனிய குரல் – எனப் போற்றியுள்ளதன்
வழி அறிந்துகொள்ளமுடிகிறது.
வலிமையே
வாழ்வு ; பலவீனமே மரணம்
உலகத்தின் முதல் நாடாகக் கருதப்பெறும் அமெரிக்காவினையே
தன்னுடைய பேச்சால் ஈர்த்த பெருமைக்குரியவர் சுவாமி விவேகானந்தர்.தாய் அழைத்த பெயர்
– வீரேஸ்வரன். உண்மையான வீரம் போர்க்களத்தில் வீரத்தைக்காட்டுவதல்ல..அவையில் அஞ்சாது
பேசுதலே என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.அவ்வாறு ‘சகோதர சகோதரிகளே’ என அழைத்து
அனைவரையும் அன்புப்பிடிக்குள் சிக்கவைத்தவர் சுவாமி விவேகானந்தர்.
வாழ்வது ஒரு முறை.அந்த வாழ்வை எப்படி வாழ வேண்டும்
என முடிவு செய்து வீரத்துடன் வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்.இரும்புத் தசைகளையும்
எஃகு நரம்புகளையும் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். துருப்பிடித்துத்
தேயாதே ; உழைத்துத் தேய்’ என்கிறார். இந்தியாவில் இவ்வளவு வளமிருந்தும் ஏழ்மையில் மக்கள்
வாடுவதனைக் கண்டு வருந்தினார்.உழைப்பால் எதனையும் மாற்ற முடியும் என எண்ணியவர்.“ஈடுபாடுள்ள
நூறு இளைஞர்களைத் தாருங்கள்.நான் புதிய இந்தியாவைக் காட்டுகிறேன்” என முழங்கி இளைஞர்களின்
பெருமையினை உணர்த்தினர்.
தவம்
செய்தால் வரமுண்டு
மனம் உடல் ஒருங்கிணைந்திருத்தலே யோகம்.கர்மம்
வேறு தர்மம் வேறல்ல. தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்கிறார் தெய்வப்புலவர்.சுவாமி
விவேகானந்தர் பேசுவதோடு நில்லாமல் ராஜயோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்னும் மூன்று
யோகத்தையும் கற்றுக்கொடுத்தவர்.கன்னியாகுமரியில் 24.12.1892 முதல் மூன்று நாட்கள் கடுந்தவம்
இயற்றினார்
மனிதர்கள் கூட்டத்தில் இருக்கும் போதும் ஏதோ
ஒன்றை நினைத்துக் கொண்டு தனித்து வாழ்வதனையும் தனிமையில் இருக்கும்போது கூட்டத்தில்
வாழ்ந்ததை எண்ணி நகைத்துக் கொண்டும் இருப்பதனைக் காணமுடிகிறது. அவ்வாறே தவ ஆற்றல் பெற்றவர்கள்
கூட்டத்தில் இருந்தாலும் தனித்து வாழ்வர்.தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என ஒன்றும் இல்லை.எங்கிருந்தாலும்
தவம் செய்ய முடியும் என உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர்.எனவே தான் அலைகள் ஆர்ப்பரிக்கும்
குமரி முனையில் தவம் செய்து வாழ்ந்து வழிகாட்டினார் சுவாமி விவேகானந்தர்.
குருவைக்
கண்ட சீடர்
கொல்கொத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை
முடித்தார்.இசையிலும், உடற்பயிற்சியிலும் கல்வியிலும் தேர்ந்தார்.ஆங்கிலப்பேராசிரியர்
வழி பகவான் இராமகிருஷ்ணரின் பெருமைகளை அறிந்தார்.1881 – இல் தட்சணேஸ்வரில் இராமகிருஷ்ணரை
முதல்முறையாக சந்தித்தார். ‘நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா ?என்னும் கேள்விக்கு
’பார்த்திருக்கிறேன்.நீயும் காணமுடியும்’ என விடையளித்த இராமகிருஷ்ணரிடம் மயங்கி அவரையே
தமது குருவாக ஏற்றுக்கொண்டார் சுவாமி விவேகானந்தர்.
எல்லா இளைஞர்களைப் போல ஆசைகளைத் தேடி ஓடாமல்
(வேலை, பணம்) குருவையே நாடி இருந்தார். தாயாருக்கு உடல் நலமின்றி மருந்து , உணவு தேவைப்பட்ட
போது அதற்கான வழி அறியாது வருந்தினார். குருவிடம் ஏன் இந்த கடவுள் நம்பிக்கை ?– எதற்குப்
பயன்படும் ? தாயைக் காப்பதற்குக் கூட வழி இல்லாத ஆன்மிகம் எதற்கு ?என்றார். “போ !இதனை
கடவுளிடமே கேள் என்றார் குரு – ஒரு மணி நேரம் கடவுளை வணங்கிவிட்டு கேட்க மறந்தேன் என்றார்
சீடர்.மீண்டும் போ என்றார் குரு.நான்கு மணி
நேரம் கடவுளை வணங்கிவிட்டு மீண்டும் கேட்க மறந்தேன் என்றார். மீண்டும் போய் கேள் என்றார்
குரு.எட்டு மணி நேரம் கழித்து திரும்பியவர் கேட்பதற்கான தேவை இல்லை எனக் கூறி இறை ஆற்றலை
உணர்ந்தார்.
நாராயணனே கங்காதரனாக அவதரித்தார் என எண்ணினார்
சுவாமி விவேகானந்தர்.சிவபெருமான் அவதாரமாகவும் கண்டார்.முதல்முறை குரு அவரைத் தொட்டபோது
அந்த சக்தியைப் பெறும் பேராற்றலை உணராது அலறினார்.இரண்டாம் முறை கைகள் தொட்ட போது
– மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தார்.இவரால் தான் தம் கொள்கைகளை அறநெறிகளை மக்களுக்குக்
கொண்டு சேர்க்கமுடியும் என்பதனை உணர்ந்து சிஷ்யனைத் தேடிய குருவாக இராமகிருஷ்ணர் விளங்கினார்.இராமகிருஷ்ணர்
காற்றுடன் கலந்தபோது தம் முழு சக்தியையும் சுவாமி விவேகானந்தருக்கு அளித்து அறப்பணியை
மேற்கொள்ளுமாறு அருளினார்.
மதங்களின்
தாய் இந்துமதம்
தாயானவள் அனைத்துக் குழந்தைகளின் நலத்திலும்
கவனம் செலுத்துவார்.அவ்வாறு அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டு போற்றிப் பாதுகாக்கும்
மதமாக விளங்குவது இந்துமதம்.இயற்கையை (மரங்கள், மலைகள், சூரியன், சந்திரன்) விலங்குகளை
(பசு, யானை) பறவைகளை (கருடன், மயில்) என அனைத்தையும் தெய்வமாக எண்ணி வணங்கிய பெருமை
இந்துமதத்திற்கு உண்டு.
மதம் என்பது கொள்கை.ஒவ்வொருவரும் வாழ்க்கையை
எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை எழுதாச் சட்டமாக அறிவுறுத்துவது மதத்தின் அறநெறியாக அமைகிறது.படைக்கும்
சக்தி படைத்த பெண்ணைத் தெய்வமாகக் காண வேண்டும் என அறிவுறுத்திய மதம் இந்துமதம்.பெண்ணை
சில மதங்கள் ஒதுக்கி வைத்த போது தன்னில் பாதியை அளித்து பெண்ணின் முக்கியத்துவத்தை
உணர்த்திய மதம் இந்துமதம்.எனவே சுவாமி விவேகானந்தரும் சக்தி வடிவமாகவே பெண்ணைப் போற்றினார்.அவ்வாறே
உண்மையாக வாழ்ந்தார்.அதனால் தான் அவரால் ‘சகோதர சகோதரி்களே’ என்னும் இயல்பான சொல் மந்திரச்
சொல்லானது.இந்து மதத்தை ஒருங்கிணைக்க வந்த புதிய சங்கராச்சாரியர்” என்கிறார் வரலாற்றாய்வாளர்பாரிக்கர்.
”மக்களை ஒதுக்கிவிடுவது தேசிய குற்றம்” எனக்
கூறிய சுவாமி விவேகானந்தர் அனைத்து மக்களையும் அரவணைத்துச்சென்றார். இவ்வாறு தொடக்கம்
முதலே அனைத்து மக்களையும் அரவணைத்துச்சென்றிருந்தால் இன்று இந்துமதம் உலகமே போற்றிப் பின்பற்றும் மதமாகவும்
பாதுகாப்புடன் வாழும் நிலையினையும் உருவாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே பகவான்
இராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தரை இந்துமதத்தேரினை ஓட்டிச்செல்லும் தேரோட்டியாகக்
கண்டதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது..
மக்கள்
சேவையே மகேசன் சேவை
மதங்கள் பல ஆறுகளைப் போன்றது. அவை சேரும் இடம்
கடல்..அந்தக் கடல் தான் கடவுள்.அதுவே மெய்ஞ்ஞான வாழ்க்கை என எண்ணி வாழ்ந்தவர்சுவாமி
விவேகானந்தர். வேதம், குரான், விவிலியம் மூன்றிலும் மனிதம் போற்றப்படுவதனை எடுத்துக்காட்டி,
கோயில், தர்கா, தேவாலயம் மூன்றும் ஒன்றுதான் எனக் கூறிய பெருமைக்குரிய தலைவராக விளங்கினார்
சுவாமி விவேகானந்தர். மதங்களைப் புரிந்து கொள்வதில் புதுமையைப் புகுத்தினார்.அறிவியல்
முறையில் – சமயங்கள் முரண்பாடுகளல்ல அது வாழ்க்கைக்குத் துணை நிற்பன என்பதனை நிறுவினார்.மதம்
குறித்த புதிய பார்வையைக் காட்டினார்.”நாம் புனிதமானவர்களாக இருக்க வேண்டும் ஏனெனில்
புனிதம் தாம் நம் இயற்கை” என்றார்.”உன்னை சுற்றியிருப்பவர்களை நேசி.அங்குதான் கடவுள்
இருக்கிறார்” எனத் தெளிவுறுத்தினார்.எனவே, தொண்டு செய்து வாழ்வதே சொர்க்கத்திற்கான
வழி என ‘இராமகிருஷ்ணா மிஷனைத் தொடங்கினார்.
உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை என்பதோடு
நில்லாமல் உயர கல்வி என கல்வியையும் சமூக அறங்களையும் வளர்த்தார் சுவாமி விவேகானந்தர்.அவர்
1897 ஆம் ஆண்டுமே முதல் நாள் இராமகிருஷ்ண மிஷனைத் தொடங்கினார்.வேதாந்த வகுப்புகள்,
சமூகப் பணிகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, தங்கும் விடுதி எனப் பல பணிகளை மேற்கொண்டது.
”தூய்மை ,பொறுமை விடாமுயற்சி – வெற்றிக்கு அடிப்படை இம்மூன்றை விட அன்பு” என்னும் அவருடைய
பொன்மொழிக்கு அவரே இலக்கணமாகத் திகழ்ந்தார். ஏழைகளுக்கு மருத்துவம்,கல்வி, விடுதி,
அநாதை இல்லம் எனப் பல சமூகப் பணிகளுக்காக அமைப்பை ஏற்படுத்தியதன் வழி சுவாமி விவேகானந்தரின்
பெருமைகளை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
மனமே
மாபெரும் சக்தி
உடல் நலம் குன்றினால் சரி செய்து விடலாம்.மன
நலம் குன்றினால் அதனால் ஏற்படும் விளைவு மிகவும் கடுமையானதாக அமையும்.அதனால் உடலைக்
காப்பதில் உள்ள கவனத்தை விட மனத்தைக் காப்பதில் கவனம் வேண்டும்.மனத்தை அடக்கக் கற்றதனாலேயே
புலன்களை அடக்கி அத்தனையையும் தம் ஆன்மிக ஆற்றலாக வெளிப்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்.
வேகமாக வரும் தண்ணீரை தடுத்து முறையே வயலுக்குப்
பாய்ச்சினால் அது வளர்ச்சிக்கு வழியாகும்.முறைப்படுத்தாது விட்டுவிட்டால் அத்தண்ணீர்
நிலத்தையே பாழ்படுத்திவிடும்.அவ்வாறே ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கும் ஆற்றலை
முறைப்படுத்த வேண்டும்.முறைப்படுத்தாதன் விளைவாகவே நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு
போன்ற அவலங்கள் தொடர்கின்றன.ஏழ்மையை ஒழித்தே ஆக வேண்டும் எனப்போராடும் இளைஞர் நன்கு
படித்து உயர்நிலையை அடைகிறார்.அவ்வாறின்றி வாழ்க்கை போன போக்கில் வாழ்பவர் தம் ஆற்றலை
ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபடுத்திக்கொள்கிறார்.இதனால் அவர்தம் வாழ்வு துன்பமானதாக
மாறுகிறது. இதனை உணர்த்தும் வகையில் ”ஞானம் இருக்கும் இடத்தில் காமம் வராது. காமம்
இருக்கும் இடத்தில் ஞானம் வராது”.என உணர்த்தியுள்ளார் சுவாமி விவேகானந்தர்.
முதல்
பண்பாட்டு தூதுவர் – சுவாமி விவேகானந்தர்.
கிழக்கிற்கும் மேற்கிற்குமான பாலத்தைக் கட்டியவர்.சமய
விழிப்புணர்வு மற்றும் பண்பாட்டு மரபு மற்றும் இந்துத்துவத்தை ஒருங்கிணைத்தல் என்னும்
பணிகளைச் செய்வதில் முன்னோடியாக இருந்தவர்.ஒரு பண்பாடு என்பது பூ பறித்துப் பூசை செய்வதல்ல.
அது எத்தனை ஆண்டு காலமாக எவ்வாறு பராமரிக்கப்பட்டு எவ்வாறு செழுமை மாறாது இருந்தது.அதனை
அவ்வாறே பின்பற்றுவதே என்றார் சுவாமி விவேகானந்தர்.
சிகாகோ –வில் 1893 ஆம் ஆண்டு சென்றார்.அந்த
ஆண்டிலேயே செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் பேசினார்.மூன்றரை வருடம் அமெரிக்க
ஐக்கிய நாடுகளிலும் லண்டனிலும் தம் பணியைச் செம்மையுறச் செய்தார். 1897 – இல் இந்தியா
திரும்பினார். 1899 – ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மேற்குப் பகுதிகளிலும் 1900- பேலூர்
மடத்திலும் தம் சமூகப்பணிகளை சிரமேற்கொண்டு சிறப்புறச் செய்தார் .
உன்
மீது நம்பிக்கை வைப்பதே முக்திக்கு வழி
தன்னம்பிக்கையுடன் வாழ்வதே வாழ்வாகும் என உணர்த்தியவர்
சுவாமி விவேகானந்தர்.”உனக்காக எதையும் துறக்கலாம்.எதற்காகவும் உன்னைத் துறக்காதே”.”தீமையின்றி
நம்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்”.”தேசத்தேர்ச்சக்கரத்தை கிளப்ப இளைஞர்களே தோள்கொடுங்கள்”
”நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய். ”நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே
பொறுப்பு” என்னும் பொன்மொழிகளின் வழி இளைஞர்களின் தன்னம்பிக்கையினை வளர்த்த பெருமைக்குரியவர்
சுவாமி விவேகானந்தர்.
எழுமின்
– விழிமின்
இலக்கை அடையும் வரை ஓயக்கூடாது என்பதில் உறுதியாக
நின்றவர்.தம் கையில் பணம் இல்லாத போதும் உலகையே தன்னம்பிக்கையால் வலம் வந்தவர்.அவருடைய
பேராற்றலைக் கண்டு வியந்த பெரியோர்கள் பலரும் அவருடைய பணிக்குத் துணை நின்றனர்.அதன்
விளைவாகவே உலகம் முழுதும் இந்து மதத்தின் பெருமையினை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர்.
உலகில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் விழிப்புணர்வு
இல்லாமையே காரணம் என எண்ணினார் சுவாமி விவேகானந்தர்.அயல்நாடுகளில் வாழும் குழந்தைகள்
நன்கு கல்வி கற்கின்றனர்.நம் குழந்தைகள் மட்டும் அவ்வாறு கற்க முடியாமல் ஏழ்மையிலேயே
வாழ்கின்றனரே என வருந்தினார்.பிறகு அதற்கான வழியினை உருவாக்குதல் நமது கடமை என்பதனை
உணர்த்தும் வகையில் “நாமே நம் கண்களைக் கைகளால் மறைத்துக்கொண்டு இருளாக இருக்கிறது
எனக் கதறுகிறோம்” எனக் கூறினார்.
நீங்கள்
மகத்தான பணி செய்ய வந்தவர்கள்
ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு உயர்ந்த பணிக்காகவே
இந்த உலகத்தில் பிறந்திருக்கிறார்கள் என உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். தான் உண்டு
; தன் வேலை உண்டு என தன்னலத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்வது வாழ்வாகாது. கல்வியின்
பயன் சமூக நலனே என்பதனை உணர்த்தும் வகையில் “வெறும் புத்தகங்களைப் படித்தவன் வறட்சி
அடைகிறான்.துளியளவாவது அன்பை உணர்ந்தவனே படித்தவன்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
கால்பந்து
விளையாடுவது கடவுளுக்கு அருகே அழைத்துச் செல்லும்
முழுமையான ஈடுபாட்டினாலேயே கடவுளை அடைய முடியும்
என்பதனை உணர்த்தினார் மனதை அடக்காமல் எதனையும் அடைய முடியாது என உணர்ந்த சுவாமி விவேகானந்தர்
அதற்கான பக்குவத்தின் நிலையினை அறிவதற்காக சாரதாதேவி அம்மையாரிடம் ஒப்புதல் பெற விழைந்தார்.
துறவு மேற்கொள்ளப்போகிறேன் என்றதும் சமையல் செய்து கொண்டிருந்த சாரதா தேவி அம்மையார்
சுவாமி விவேகானந்தரிடம் ”அங்கிருக்கும் கத்தியை எடுத்து வா என்றார்”. எடுத்து வந்த
பிறகு ”சரி” என்றார். கூர்மையான பக்கத்தை தம்மை நோக்கி வைத்துக்கொண்டு பிடி இருக்கும்
பக்கத்தை அம்மையாரிடம் கொடுத்ததைச் சுட்டிக்காட்டினார் சாரதா தேவி அம்மையார்.– எவன்
தன் நலத்தைப் பாராது பிறர் நலத்தைப் பார்க்கிறானோ அவனே துறவு மேற்கொண்டு சமூகத்தை வழி
நடத்திச் செல்லும் திறமை உடையவன் என அதற்கான விளக்கத்தையும் கூறினார். இதன்வழி துறவின்
பெருமையினையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
முன்னே
செல் – வழி காட்டு
வெற்றி பெற்றால் தலைமை ஏற்பாய்.தோல்வியுற்றால்
வழிகாட்டுவாய்.என இரண்டையும் சமூக நன்மைக்காகவே மாற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார் சுவாமி
விவேகானந்தர்.கடவுளை அடையும் முயற்சி குறித்து எண்ணுதல் அரிது ; அவ்வாறு எண்ணியவர்
அதற்கான முயற்சியில் ஈடுபடுவது அதனினும் அரிது ; அவ்வாறு முயற்சியில் ஈடுபட்டவர் அந்நிலையில்
நிற்பது அரிதினும் அரிது. எனினும் கடவுளை அடைதலே பிறப்பின் பயன் என்பதனை உணர்வுடையோர்
உணர்வர்.
கடவுளை அடைதல் என்பது கடினமான ஒரு செயல் அன்று.இயல்பான
நிகழ்வு என எளிமையாக உணர்த்துகிறார் சுவாமி விவேகானந்தர்.“குழந்தைகள் பொம்மையுடன் விளையாடும்
வரை தாயைத் தெரிவதில்லை.ஏதாவது பயம் வந்துவிட்டால் உடனே தூக்கிப்போட்டுவிட்டுத்தாயைத்
தேடி ஓடும்” என எளிமையாக கடவுளை அடையும் நிலையினை எடுத்துக்காட்டுகிறார் சுவாமி விவேகானந்தர்..
கோழையிடமிருந்து
வீரன் பிறப்பதில்லை. பெண்களே வீரமாக இருங்கள்
ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி
கற்றது போல் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தாயார் புவனேஸ்வரி அம்மையார்.அவருடைய
அன்பாலும் அறிவாலும் பல மொழிகளைக் கற்றதோடு ஆன்மிகத்திலும் ஈடுபாடுடையவரானார்.இறைவழிபாட்டில்
ஈடுபாட்டுடன் வாழ்ந்த அம்மையாரின் வழி சுவாமி விவேகானந்தருக்கும் ஆன்மிகம் எளிதில்
கைகூடியது. சிறுகதை சொல்லும் தாயாரிடமிருந்து குழந்தைகள் ஒழுக்கங்களை எளிதில் கற்றுக்கொண்டு
சிறந்த மனிதராகத் திகழமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர்.
பிரம்ம சமாஜத்தில் உறுப்பினராகி ஆன்மிகத்தில் தனது ஈடுபாட்டினை வளர்த்துக்கொள்ள அந்தத்
தாயின் அறவுரைகளும் அறிவுரைகளுமே துணை நின்றன.பெண்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை
என்று எதுவுமில்லை. நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் போதும். அவர்களே தங்களைத்
தாங்கள் நிலை நிறுத்திக்கொள்வார்கள்” என்றார்.பெண்களின் அறிவுத்திறத்தில் ஆழ்ந்த நம்பிக்கை
உடையவராக சுவாமி விவேகானந்தர் திகழ்ந்ததனை அறியமுடிகிறது.
சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் மயங்கி அவரையே
குருவாக ஏற்றுக்கொண்டவர் மார்கரெட்நோபுல் (சகோதரி நிவேதிதா).அவருடைய போதனைகளின் வழி
துணிவுடன் கொல்கொத்தாவில் பெண் கல்விக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
முப்பத்தொன்பதில்
விண்ணுலகம்
இளைஞர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என வாழ்ந்து
வழிகாட்டியவர் சுவாமி விவேகானந்தர்.1902 ஜீலை திங்கள் நான்காம் நாள் விண்ணுலகை அடைந்தார்.அவருடைய
பிறந்த நாளை ஜனவரி 12 தேசிய இளைஞர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நிறைவாக
நாடு முன்னேற்றம் அடைவதற்காக இன்று மேற்கொண்டு
வரும் பல பணிகளை அன்றே அறிவுறுத்திய தீர்க்கதரிசி (முன்னோக்குப் பார்வை) கொண்டவராக
சுவாமி விவேகானந்தர் திகழ்ந்தனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
குடிசைகளால் தான் நாடு வாழ்கிறது. ஆனால் அந்தக்
குடிசைகளுக்கு நாம் எதுவும் செய்யவில்லை என்னும் கருணை உள்ளத்துடன் சமூகப் பணியினை
மேற்கொண்டவர்
இன்றைய இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் போற்றும்
மதச்சார்பற்ற தன்மையை தாம் வாழும் காலத்திலேயே போற்றிய பெருமைக்குரியவர்.
கல்வி என்பது தொழில்நுட்பப் பயிற்சியினையும்
தொழிற்சாலை பயிற்சியினையும் உள்ளடக்கியதாகவும் அமைதல் வேண்டும் எனக் கூறியவர்.
பட்டினியில் கிடக்கும் மனிதருக்கு மதத்தைப்
போதிப்பது வேடிக்கைக்குரியது என முழங்கியவர்.
ஏழைகளிலும் நோயாளிகளையும் சிவனைக் காணுங்கள்
எனக் கூறி அவர்களுக்குச் சேவை செய்ய அறிவுறுத்தியவர்.
சமூகத்தைத் திருத்த வேண்டியது அனைவருடைய கடமை
என்பதனை உணர்த்தும் வகையில் வழக்கறிஞர்களையும் ஆசிரியர்களையும் ஆட்சியாளர்களையும் தொடர்ந்து
சந்தித்து அதற்கான முயற்சிகளிலேயே தம் வாழ்வை அர்ப்பணித்தவர் எனத் தெளியமுடிகிறது
ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என அவருடைய கருத்துக்களை
ஒதுக்கி விடாது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காக பண்பாட்டுக் கொடியினை ஏந்தி உலகம் முழுதும்
வலம்வந்த செயல்வீரர் சுவாமி விவேகானந்தர் எனத் தெளியமுடிகிறது.
இந்தியப் பண்பாட்டை ; மரபினை உலகமே வியக்கும்
அளவிற்கு சென்று சேர்த்த பெருமைக்குரியவர் சுவாமி விவேகானந்தர். அவர் வழியில் நின்று
தேசத்தின் ஒற்றுமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டால் இந்தியா வளர்ச்சியடைந்த
நாடாகும் என்பதனை உணர்வுடையோர் உணர்வர்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக