தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

மொழிக்கு அரணாகும் வேற்றுமைக் கோட்பாடுகள் - Language Castle


மொழிக்கு அரணாகும் வேற்றுமைக் கோட்பாடுகள்
(முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்

      ”யாப்பு மொழியின் காப்பு” என்பர் சான்றோர்.அவ்வழி மொழிப் பயிரைக் காக்கும் வேலியாக நிற்பது இலக்கணமே எனத் தெளியமுடிகிறது.மொழியின் இயல்பையும் பெருமையினையும் உணர்த்தி நிற்கும் இலக்கணக்கூறுகள் பல.இலக்கணக் கூறுகளைக் கொண்டே மொழியின் பழமையினையும் வளமையினையும் அறிந்துகொள்ளமுடிகிறது.அவ்வகையில் தொல்காப்பியத்தின் வேற்றுமைக் கோட்பாடுகளின் இன்றியமையாமையினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

வேற்றுமை இலக்கணம்

வேற்றுமை என்னும் சொல்லின் பொருள் இலக்கணத்தில் மட்டுமே இனிக்கக் கூடியதாக அமைகிறது. ஒரு பெயருக்கும் அடுத்து வரும் சொல்லுக்கும் இடையே பொருள் வேறுபடும் தன்மையை வேறுபடுத்திக் காட்டும் பண்பினைக் கொண்டதாலேயே வேற்றுமை எனக் குறிப்பிடப்படுகிறது. “எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் எழிலினையும் இங்கு எண்ணி மகிழலாம்.சொல்லின் ஆக்கத்திற்கு எழுத்துக்களின் சேர்க்கை துணைபுரிவது போலவே தொடரின் ஆக்கத்திற்கு வேற்றுமை உருபுகள் துணையாகின்றன.எனவே இலக்கண முன்னோடியான தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் கிளவியாக்கத்திற்குப் பின் வேற்றுமையியலைக் கட்டமைத்துள்ளதனைக் காணமுடிகிறது.

இதன் இதன் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதன் அவன் விடல்

என்னும் தொடர் எவ்வகையிலும் பொருளுடையதாகக் கொள்ளுதற்கு இயலவில்லை.ஏனெனில் வேற்றுமை உருபுகள் இங்கு இடம்பெறாதாதே காரணம் எனத் தெளியலாம். இத்திருக்குறளை

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

எனச் சீராக எழுதிப் பயிலும் போது அத்திருக்குறளின் சொல்லழகும் பொருளழகும் விஞ்சி நிற்பதனைக் காணமுடிகிறது. இங்கு இரண்டாம் வேற்றுமையும், மூன்றாம் வேற்றுமையும், ஏழாம் வேற்றுமையும் பெயருடன் கூடுங் காலத்து அப்பெயருக்கு பின் நின்று பொருளுணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே (தொல்காப்பியம் : 116)
என்னும் நூற்பா வேற்றுமை உருபுகள் அமையும் நிலையினைத் தெளிவுபடுத்துகிறது.


ஒட்டுக்களே உருபுகள்

        பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையே பொதிந்துள்ள பொருளினைத் தெளிவுபடுத்தும் வகையில் பெயர்ச்சொல்லோடு பின் ஒட்டுக்கள் அமையும்.அவ்வாறு அமையும் ஒட்டுக்களையே உருபுகள் என இலக்கணவியலார் குறிப்பிடுவதனைக் காணமுடிகிறது. அவ்வேற்றுமைகளை

வேற்றுமை தாமே ஏழென மொழிப (தொல்காப்பியம் : 546)
விளிகொள் வதன்கண் விளியொடு எட்டே (தொல்காப்பியம் : 547)
அவை தாம் /பெயர் ஐ ஒடு கு /இன்அது கண்விளி என்னும் ஈற்ற(தொல்காப்பியம் : 548)

என வரையறுக்கிறார் தொல்காப்பியர்.

எ.கா.கந்தன், கந்தன் + ஐ, கந்தன் + ஒடு, கந்தன் + கு, கந்தன் + இன், கந்தன் + அது, கந்தன்+ கண், கந்தனே.

எழுவாய் வேற்றுமை

எவ்வகையிலும் மாறுதல் இன்றி நிற்கும் பெயரே எழுவாய் என்னும் முதல் வேற்றுமையாக அமைகிறது.ஒரு தொடர் எழுவதற்கு வாயிலாக அமையும் பெயரே எழுவாய் எனக் குறிப்பிடப்படுகிறது.  உருபின்றி பெயர் மட்டுமே நிற்கும் வேற்றுமை எழுவாய் என்பதனை

அவற்றுள் ./ எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே (தொல்காப்பியம் : 549)
என்னும் நூற்பாவின் வழி தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர்.
”கந்தன் இலக்கணம் படித்தான்”. என்னும் சொற்றொடர் கந்தனின்றி செயபடுபொருளும் காரியமும் (படித்தான் என்னும் பயன் நிலை பெறும் இடமான பயனிலையும்) தொடர இயலாது என்பதனை இங்கு  உணர்த்தி நிற்கின்றது. எழுவாய் இன்றி தொடர் எழுதல் இல்லை எனத் தெளியமுடிகிறது.ஒரு தொடர் முழுமை பெற எழுவாய் அமைதல் வேண்டும் என வரையறுத்துள்ளதனையும் இதன்வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

தோன்றா எழுவாய்

        எழுத்து வழக்கில் மட்டுமின்றி பேச்சு வழக்கிலும் இயல்பாகவே தோன்றா எழுவாய் இன்றியே பயன்படுத்தும் போக்கு நிலவி வருவதனைக்காணமுடிகிறது. “கந்தன் கல்லூரிக்குச் சென்றானா ?என்னும் வினாவிற்குச் “சென்றான்” என்னும் விடையே நிறைவானதாக அமைந்துவிடுகிறது. இங்கு  எழுவாய் தோன்றாவிடினும் பொருளை உணர்த்தி விடுகிறது. இவ்வாறு உணர்வதற்கும் யார் ? எங்கு ?என்னும் வினாக்கள் ஒளிந்து நிற்பதனையும் அதற்கு வேற்றுமை உருபுகளே விடையாகத் தொக்கி விளக்குவதனையும் காணமுடிகிறது.


செயப்படு பொருள் வேற்றுமை – ஐ

ஐ என்னும் ஒரெழுத்தொரு மொழி தலைவனைக் குறித்து நிற்பது போல் வேற்றுமையிலும் சிறப்பிடத்தைப் பெற்று நிற்கிறது.செயப்படும் பொருளை உணர்த்தி நிற்கும் வேற்றுமையாதலால் செயப்படுபொருள் வேற்றுமை எனக் குறிப்பிடப்படுவதனையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இரண்டாகுவதே , ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி / எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு / அவ்விரு முதலின் தோன்றும் அதுவே (தொல்காப்பியம் : 555)
என்னும் நூற்பா வினை மற்றும் வினைக்குறிப்பு என்னும் நிலைக்களத்தில் தோன்றுவதனைத் தெளிவுறுத்துகிறது.

        ”கந்தன் இலக்கணத்தைப் படித்தான்” என்னும் தொடரில் செயபடுபொருள் வேற்றுமையான ஐ செய்யப்படும் பொருளான வினையை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

உடனிகழ்வு - கருவி வேற்றுமை – ஒடு

        உடன் நிகழும் நிகழ்வுக்குரிய வேற்றுமையாக ‘ஒடு’ வேற்றுமை அமைவதனால் இப்பெயர் பெற்றுள்ளதனைக் காணமுடிகிறது.கந்தனொடு வந்தான் என்னும் சொற்றொடொருக்கு உரிய வேற்றுமையின் தெளிவினை இங்கு உணர்த்தியுள்ளார் தொல்காப்பியர்.ஒரு சொற்றொடரில் செய்யப்படும் தொழிலில் பயன்படுத்தப்படும் கருவியினை உணர்த்தும் வேற்றுமையாதலால் கருவி வேற்றுமை எனவும் ‘ஒடு’ குறிப்பிடப்படுகிறது.

மூன்றாகுவதே / ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி / வினைமுதல் கருவி அனைமுதற்று அதுவே (தொல்காப்பியம் : 557)

என்னும் நூற்பா இதனை வரையறுக்கிறது. வினை முதலையும்  கருவியையும் அடிப்படையாகக் கொண்டு இவ் வேற்றுமை அமைகிறது.

”கந்தன் வேலொடு போர் செய்தான்” என்னும் சொற்றொடர் ’ஒடு’ என்னும் வேற்றுமையின் நிலைக்களனை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.ஒடு என்னும் வேற்றுமையின் செல்வாக்கு இன்றைய பயன்பாட்டில் மறைந்து ஆல் என்னும் உருபே பயன்பாட்டில் நிற்பதனையும் காணமுடிகிறது.‘கந்தன் வேலால் போர் செய்தான்’ எனக் குறிப்பிடுவதன் வழி இக்கால வழக்காக ’ஒடு’ என்னும் வேற்றுமை ‘ஆல்’ என மாற்றம் பெற்றுள்ளதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

கொடை - குறி வேற்றுமை – கு

        கொடைப்பொருளுக்கு உரிய வேற்றுமையாகக் ‘கு’ அமைவதனால் கொடை வேற்றுமை எனப்படுகிறது.ஒன்றற்கு பயன்படுமாறு அமைவதனால் இவ்வேற்றுமை கொடைப்பொருளாவதனையும் இங்கு எண்ணத்தக்கது.அவ்வகையில் மட்டுமின்றி சொற்றொடர்க்குரிய குறிக்கோளினை உணர்த்தி நிற்கும் வேற்றுமையாவதனாலும் குறி வேற்றுமை எனவும் குறிப்பிடப்படுகிறது. “கு” என்னும்  வேற்றுமை உருபு பெயரினைச் சுட்டுதலையே நோக்கமாகக் கொண்டு ஏற்றுக் கோடல் பொருளில் அமைகிறது.

நான்காகுவதே / கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி / எப்பொரு ளாயினும் / கொள்ளும் / அதுவே (தொல்காப்பியம் : 559)

”புகழுக்குப் படித்தான்” என்னும் சொற்றொடர் புகழினைப் பெறும்  வினையுடைமையை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

ஐந்தாம் வேற்றுமை – இன்

ஒப்புமைப் பொருளை உணர்த்தியும் ஒப்புமைப் பொருளால் வேறுபடுத்தியும்  நிற்கும் வேற்றுமை உருபாகின்றது.

ஐந்தாகுவதே /இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி /இதனின் இற்றுஇது என்னும் அதுவே                                                                     (தொல்காப்பியம் : 561)
என்னும் நூற்பா இதனைப் போன்றது, இதனினும் சிறந்தது, இதனை நீங்கியது என ஒப்புமைப் படுத்தி வேறுபடுத்திக்காட்டும் சிறப்பினை உணர்த்தி நிற்கின்றது.

உடைமை வேற்றுமை – அது

அன்புடைமை, அறிவுடைமை, அருளுடைமை என்னும் உடைமைகள் மனிதர்க்கு வேண்டிய அடிப்படையான உடைமைகள்.என்பதனாலேயே உடைமை எனத் திருவள்ளுவர் சுட்டியுள்ளதனைக் காணமுடிகிறது.அவ்வாறு அமையும் உடைமைகளை உணர்த்தி நிற்கும் வேற்றுமைச் சொல்லாகவே ‘அது’ என்னும் உருபு நிற்கின்றது.

ஆறாகுவதே / அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி / தன்னினும் பிறிதினும் இதனது இது எனும் / அன்ன கிளவிக் கிழமைத் ததுவே (தொல்காப்பியம் : 563)

தன்னுடன் ஒட்டிய உடைமையை உணர்த்தி நிற்பதனை தற்கிழமை என்றும் (முகத்தது பொலிவு) தன்னிடமிருந்து பிரிந்து நிற்கும் உடைமையை உணர்த்தி நிற்பதனை பிறிதின் கிழமை (செவியது தோடு) என்றும் குறிப்பிடுவர்.

இட வேற்றுமை – கண்

        செயல் நடைபெறும் இடத்தினை உணர்த்தி நிற்கும் வேற்றுமையினை இட வேற்றுமை எனக் குறிப்பிடுவர்.‘மலைக் கண் அருவி” என்னும் சொற்றொடரில் இடத்தை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

ஏழா குவதே / கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி /வினைசெய்  இடத்தின்  நிலத்தின்  காலத்தின் / அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே         (தொல்காப்பியம் : 565)

என வரையறுக்கிறார் தொல்காப்பியர். வினை நிகழும் பின்னணியினையும்  நிலத்தையும்  காலத்தையும் குறிப்பாக வெளிப்படுத்தும் தன்மையினை உணர்த்தி நிற்கும் எனத் தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர்.

விளி வேற்றுமை

தனி உருபின்றி விளியை ஏற்கும் பெயரிலேயே தெளிவாகத் தோன்றும் வேற்றுமையே விளி வேற்றுமை என்பதனை

விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு / தெளியத் தோன்றும் இயற்கைய என்ப
(தொல்காப்பியம் : 603)
என்னும் நூற்பாவின் வழித் தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர். ஈறு திரிதல்
(கந்தனே),  ஈற்றயல் நீடல் (கந்தா), கெடுதல் (கந்த) , இயல்பாதல் (கந்தன்) என விளி உருபுகள் அமையும் முறையையும் தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர்.

உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை

        வேற்றுமைப் பொருளை விரித்துக் கூறும் பொழுது உருபுகளின் தன்மைக்கேற்ப பெயர்ச்சொல்லின் ஈற்றில் தொகையாக நிற்கும் சொற்கள் பலவாறு பிரிந்து பொருள் தரும் என்கிறார் தொல்காப்பியர்.
வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை / ஈற்றுநின்று இயலும் தொகைவயின் பிரிந்து / பல்ஆ றாகப் பொருள்புணர்ந்து இசைக்கும் / எல்லாச் சொல்லும் உரிய என்ப (தொல்காப்பியம் : 567)
என்னும் நூற்பா உருபுகள் மட்டுமின்றி சொற்களும் பொருளுடன் புணர்ந்து வரும் எனத் தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர்.தயிருக்கு உரிய குடம், என உருபும் பயனும் உடன் தொக்கி வருவதனைக் காணமுடிகிறது.இதனையே உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை என இலக்கணவியலார் பின்னாளில் குறிப்பிட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

வேற்றுமைப் பொருட்பாகுபாடுகள்

        வேற்றுமை உருபுகள் இவையென்றும் அவற்றிற்குரிய பொருள் இவை என்றும் வரையறுத்த தொல்காப்பியர் அவற்றை உரிய வகையில் பயன்படுத்தும் வகையில் பொருட்பாகுபாடுகளையும் வரையறுத்துள்ளதனைக் காணமுடிகிறது.

இரண்டாம் வேற்றுமை – ஐ – காப்பு முதலாக 28 பொருளும் அன்ன பிறவும்
மூன்றாம் வேற்றுமை – ஒடு – அதனின் இயறல் முதலாக 11 பொருளும் அன்ன பிறவும்
நான்காம் வேற்றுமை – கு – வினையுடைமை முதலாக 10 பொருளும் அன்னபிறவும்
ஐந்தாம் வேற்றுமை – இன் – வண்ணம் முதலாக 17 பொருளும் அன்ன பிறவும்
ஆறாம் வேற்றுமை – கண் – கண் முதலாக 19 பொருளும் அன்ன பிறவும்

என வரையறுத்துள்ள சிறப்பு தமிழ் இலக்கணத்தின் சீரான இயல்பினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.இதன்வழி தொடர்களை அமைக்கும் முறையையும் பொருள்களை உணர்த்தும் முறையையும் தொல்காப்பியர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திறம் மொழிக்கு அரணாகும் எனத் தெளியமுடிகிறது.

நிறைவாக

        தொல்காப்பியரின் வேற்றுமையியலின் வழி எச்சொற்கள் எவ்வாறு எவ்வுருபுகளுடன் எப்பொருளில் புணரும் என இலக்கணம் வகுத்த நிலையின் வழி வேற்றுமைகள் மொழிக்கு அரணாவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

        எழுவாய் செயபடுபொருள் பயனிலை எனத் சொற்றொடரமைப்பு முறையாக அமைவதைப் போன்றே அவற்றிற்கு உரிய உருபுகளின் வழி மேலும் தொடரின் பொருளைத் தெளிவுறுத்த முடிவதனைக் காணமுடிகிறது. தொல்காப்பியர் வரையறுத்துள்ள படி முறையாக உருபுகளைக் கையாளும் சிறப்பினைப் பொருத்தே மொழியின் இயல்பும்  கட்டமைப்பும் சீராக அமையும் எனத் தெளியமுடிகிறது.

        தொல்காப்பியர் முன்னோர்  வழி நின்று இலக்கணம் அமைத்ததோடு நில்லாமல் பின்னோர் இலக்கண வரையறை செய்யவும் வழிவகுத்துள்ளார். ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரிய வகையில் பிற பொருட்பாகுபாடுகளையும் ஏற்றுக்கொள்ள வழிவகை செய்து ’அன்ன பிறவும்’ எனக் கூறியுள்ளதனைக் காணமுடிகிறது.காலத்திற்கேற்ப மொழி மாற்றம் தேவைப்படும் என்பதனை நன்குணர்ந்தவர் தொல்காப்பியர் என இதன்வழி அறிந்துகொள்ள முடிகிறது.

வேற்றுமையின்றி தொடருக்குரிய பொருள் முழுமை பெறாது என்பதனால் முறையாக ஒவ்வொரு வேற்றுமையினையும் அதற்குரிய பொருளினையும் பொருட்பாகுபாடுகளையும் உணர்த்தியுள்ளதன் வழி மொழியினைக் கையாளும் முறையினைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

        இலக்கணமின்றி மொழியினைக் காத்தல் இயலாது என்பதனை உணர்ந்தே தொல்காப்பியர் தொல்காப்பியத்தைப் படைத்துள்ளார் என்பதற்குச் சான்றாக வேற்றுமைக்கோட்பாடுகள் அமைந்துள்ளது எனத் தெளியமுடிகிறது.
***********
     







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக