கலித்தொகையில் அன்பும் அறனும்
அன்பு
பொதுச் சொத்து ; பண்பு தனிச் சொத்து. அரண் எல்லைக்குள் அமைவது. அறன் எல்லையைக் கடப்பது.
இவ்வாறு சமூகத்தில் அன்பு தழைக்கவும் மனித நேயம் வளரவும் துணை நிற்பன
அன்பும் அறனுமேயாம். இப்பண்புகளை வலியுறுத்தும் வகையிலேயே தமிழ்
இலக்கியங்கள் தோன்றின. இல்லறம் செழிக்க அவை இரண்டும் கண்மணிகளாக
நின்று வழிகாட்டும் எழிலினை எண்ண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.
கால வரையறையினைக் கடந்து நிற்கும் இத்தலைப்புக்கு பக்க வரையறை உள்ளதனால்
கலித்தொகையில் உள்ள பாலைக்கலி 35 பாடல்களில் சில மட்டுமே இக்கட்டுரையில்
எடுத்தாளப்படுகிறது.
இறைவாழ்த் தொன் றேழைந்து பாலைநா லேழொன்
றிறைகுறிஞ்சி யின்மருத மேழைந் – துறைமுல்லை
ஈரெட்டொன் றாநெய்தல் எண்ணான்கொன் றைங்கலியாச்
சேரெண்ணோ மூவைம்பதே
என்னும் வெண்பா 150 பாடலுடைய பகுப்பினை எடுத்துரைக்கிறது. கலித்தொகையில்
2 முதல் 36 வரையுள்ள 35 பாடல்களைப்
பாடியவர் பெருங்கடுங்கோ. இவர் பாடிய. பாலை
நிலத்தைப் பற்றிய பாடல்கள் சிறப்புறப் பாடப்பட்டுள்ளதனால் இவரை சேரமான் பாலைப் பாடிய
பெருங்கடுங்கோ எனச் சிறப்புடன் அழைக்கப்படுவர். இல்லறத்தில் அன்பும்
அறனும் சிறக்க வழி காட்டி நின்ற திறத்தினைஇனி காண்போம்.
அன்பே வாழ்வு
இல்வாழ்க்கை என்பது உறவுகளை வளர்ப்பது. உறவுகளை விடுத்து வெளிநாடு சென்று பொருள் ஈட்டி அப்பொருளை யாருடன் பகிர்ந்துகொள்வது.
உறவுகளைப் போற்றும் காலத்தில் விட்டுவிட்டு அவர்களை இழந்தபின் அப்பொருளைக்
கொண்டு ஏதும் செய்தல் இயலாது. அதனால் அன்புடன் வாழ்வதே உயிர்வாழ்க்கை
எனத் தெளியலாம். தலைவியை விட்டுப் பிரிதல் என்பது அவர் உயிரைப்
பிரித்தலுக்கு நிகராகும் என்பதனை
மறப்ப காத னிவளீண் டொழிய
இறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய (கலித்தொகை
: 2 : 9-10)
என்னும் பாடலடிகளில் எடுத்துக்காட்டுகிறார்
பெருங்கடுங்கோ. மறப்பதும் அறியாத அன்புடைய காதலியை
விட்டுப் பிரிவேன் எனக் கூறுதல் அவளை கொல்வதற்கு நிகரானது எனக்கூறித் தலைவனைச் செல்ல
விடாது தடுக்கிறாள் தோழி.
அறமே வாழ்வு
அறம் அன்பின் வெளிப்பாடு. அவ்
அறத்தைச் செய்தற்கு பொருள் தேவை. அப்பொருளை ஈட்ட வேண்டிய கடப்பாடு
ஆணுக்குரியது. எனவே தனக்காக மட்டுமின்றி பிறர்க்காகவும் பொருளீட்டும்
பண்பு தலைவனுக்குரியதாக இருந்தது. அவ்வாறு வாழ்ந்த வாழ்வே தமிழர்
வாழ்வு. இதனை
தொலைவாகி யிரந்தோர்க்கொன் றீயாமை இளிவென
மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ (கலித்தொகை : 1 :
11-12)
என்னும் பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. இருந்த பொருளைக் கொடுத்ததன் விளைவாக பொருள் தீர்ந்துவிட்டது. கொடுப்பதற்கு பொருளில்லை என மீண்டும் பொருள் தேடச் செல்கிறான் தலைவன்.
இல்லையென்று சொல்லாது வாழ்வதே வாழ்வு என வாழும் மனிதர்களால்தான் இவ்வுலகம்
வாழ்வதனை இவ் அடிகளில் எடுத்துக்காட்டுகிறார் பெருங்கடுங்கோ.
அன்பும் அறனும்
தலைவன் பிறரைக் காக்கப் பொருள் ஈட்டுவதைப் பெருமையாக
எண்ணுகிறான். அதே போல் தலைவியையும் உயிராக எண்ணுபவன்.
பொருள் குறைந்த போது பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தலைவியை விட்டுப்
பிரியநேரும் போது தலைவி உயிர்வாழாள் எனக் கூறி அவன் செலவைத் தவிர்க்கிறாள் தோழி.
தோழியைப் பொறுத்தவரை தலைவியுடன் தலைவி சேர்ந்து வாழ்தலே அறம் எனச் சுட்டுவதனை
நிலைஇய கற்பினாள் நீநீப்பின் வாழாதாள்
முலையாகம் பிரியாமை பொருளாயி னல்லதை (கலித்தொகை : 1 : 11-14)
என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இப்பாடலின் வழி தலைவியிடம் கொண்ட அன்புக்கு நிகராக தலைவன் அறச் செயல்களுக்கு
முக்கியத்துவம் அளித்த திறத்தை அறியலாம்.
அகத்தின்
அழகு
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
என்பது தமிழரின் பொன்மொழி. ஒருவரைக் கண்டவுடன் முகம் மலர்வதும்
கூம்புவதும் காணப்படுபவரின் பண்பின் வெளிப்பாடு. ஒருவரை எப்படி
மற்றொருவர் புரிந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய ஒவ்வொரு செயல்பாடும்
அமையும். முகத்தைத் திருப்பிக்கொள்வதும் சுடுசொற்கள் பேசுவதும்
ஒரு செயலின் வெளிப்பாடன்றி வேறில்லை. அவ்வாறு தலைவனின் செயல்
தலைவிக்கு நோயினை ஏற்படுத்துகிறது. தலைவன் தலைவியை விட்டுப் பிரிகிறான்.
பிரிதல் துன்பத்தின் ஒரு கூறு. அறிவு அதனை உணர்ந்தாலும்
அன்பு அதன் காரணத்தை அறியாது. அவ்வாறே தலைவன் பிரிவை எண்ணி தலைவி
வருந்துகிறாள். அவள் உடல் வருத்தமடைவதனை அவள் முகமே காட்டிவிடும்.
உண்மையான அவ்வருத்தம் அவள் முகத்தில் கண்ணாடியில் பட்ட நீராவி போல பொலிவிழந்து
காணப்படும். அழகின்மையான அவ் அழகு அன்பின் அடையாளமாகிறது. இதனை
இவட்கே செய்வுறு மண்டில மையாப் பதுபோன்
மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே (கலித்தொகை
: 7 : 7-8)
என்னும் அடிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. மதியிடத்தே மேகம் பரவினால் மதியின் ஒளி மங்கியிருத்தல் போல் தலைவியின் பொலிவுடைய
முகம் தலைவனின் பிரிவினால் பசப்பூர்ந்து இருப்பதனை எடுத்துக்காட்டுகிறார். அன்பு பிரிவினை ஏற்காது. அதனால்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவரும்
தீயவருடன் நட்பு கொள்க என்கிறார். ஏனெனில் அவருடைய பிரிவு துன்பத்தைத்
தராது அகம் மகிழுமேயன்றி துன்புறாது எனக் கூறி மகிழ்விப்பதனை இங்கு எண்ணி மகிழலாம்.
அனைத்துயிர்களிடமும் அன்பு
அன்பு அனைத்துயிர்க்கும் உரியது. பொருளாலேயே அன்பு சிதைகிறது. பொருளிடம் நாட்டம் இல்லாத
விலங்குகளிடமும் பறவைகளிடமும் அன்பு குறையாதிருக்கிறது.
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே (கலித்தொகை : 11: 9)
மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே (கலித்தொகை : 11 : 13)
தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவு முரைத்தனரே (கலித்தொகை:
11:17)
என்னும் அடிகள் விலங்குகளின் அன்பினைப்படம்பிடித்துக்காட்டுகிறது. தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் வந்தடைவான் என்பதனைத் தோழி காட்டிடத்தே
நிகழும் இந்நிகழ்வின் வழி எடுத்துரைக்கிறாள்.
பிடிக்கு ஊட்டிப் பின் தான்
உண்ணும் களிறின் அன்பினையும் தன் சிறகால் பெடைக்கு இன்பமளிக்கும் ஆண் புறவின் அன்பினையும்
தன் நிழலைக் கொடுத்து பிணை மானைக் காக்கும் கலை மானின் அன்பினையும் படம்பிடித்துக்காட்டுகிறார்
பெருங்கடுங்கோ. பெண் இனத்தைக் காக்கும் விலங்குகளுக்கு இருக்கும்
அறிவு கூட மனிதனிடம் இல்லாமல் போய்விட்டது. திருமணமானவுடன் தன் குடும்பத்தைத் துறந்துவிடும் பெண்ணை
அடிமையாக எண்ணுவது ஆண்களின் அறியாமையை எடுத்துக்காட்டுவதனை இங்கு எண்ண வேண்டியுள்ளது.
அறத்தில்
சிறந்தது அன்பு
அறம் பொருள் இன்பத்துள் சிறந்தது
அறமே. தலைவியை விட்டுப் பிரிதல் அறமாகாது என எண்ணி மீளி என்னும்
தலைவன் (காவல் பிரிவை) பொருள் ஈட்டத்தை
விட்டு தலைவியுடன் வாழத் துணிகிறான். இந்நிகழ்ச்சி மருத்துவனுடைய
மருந்து போல் யாக்கைக்கு இன்பம் பயக்கிறது. மருந்து கசக்கும்
அது போல் பொருள் ஈட்டாதிருக்கும் துன்பமும் கசக்கிறது. ஆனால்
அது நாளடைவில் மறைந்துவிடும் என்பதனை
பொருந்தியான் றான்வேட்ட பொருள்வயி நினைந்தசொற்
றிருந்திய யாக்கையுண் மருத்துவ னூட்டிய
மருந்துபோன் மருந்தாகி மனனுவப்பப்
பெரும்பெயர் மீளி பெயர்ந்தனள் செலவே (கலித்தொகை : 17 : 17-21)
என்னும் அடிகள் அழகாக எடுத்துக்காட்டுகின்றன. அன்பான சொற்கள் மருந்து போல் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கிறது.
அவ்வாறே மீளியும் செலவைத் தவிர்த்து வாழ்வதனை இப்பாடல் எடுத்தியம்புகிறது.
வருத்தமே
வாழ்வு
தலைவனின் அன்பும் தலைவியின்
அன்பும் பிணைந்ததன் விளைவே மகப்பேறு. அன்பின் வெளிப்பாடாக அமையும்
அப்பேறே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது என்பது தமிழர் மரபு. பெண்கள் அழகினையே உயிராகக் கருதுவதுண்டு. ஆனால் குழந்தைப்
பேறு என்றவுடன் அந்நலத்தைக் குறித்த கவலை மறைந்துவிடுகிறது. அழகைக்
கெடுப்பதோடு வருதத்த்தையும் கொடுக்கும் மகப்பேறினை விரும்பி ஏற்கிறாள் பெண்.
அவள்படும் அத்துணை வருத்தமும் அந்தக்குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகிறது.
இதனை
தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலின்
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கைபோற்
பல்பயம் உதவிய பசுமைதீர் அகன்ஞாலம்
புல்லிய புனிறொரீஇப் புதுநலம் ஏர்தர (கலித்தொகை : 19 : 1-4)
என்னும் பாடலடிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. தாயானவள் குழந்தை பெரிதானவுடன் அக்குலத்தின் பெருமையைக் காக்கும் என எண்ணி
மகிழ்வாள். பயிர் வைப்பதற்காக தன்னை வருத்திக்கொண்ட உழவன் பின்
அந்தப்பயிர் செழித்து உலகின் பசித்துன்பத்தை நீக்கும் பெருமையை எண்ணி மகிழ்வது போல
எனத் தாய்மையினை ஒப்பிடுகிறார் பெருங்கடுங்கோ. தாய்மையினை உழவனுடன் ஒப்பிட்டு இருவரையும் பெருமைபடுத்தும்
அழகினை இங்கு எண்ணி மகிழலாம். வருத்தம் கூடாது என நினைத்தால்
உலகில் எந்த உயிரும் வாழாது என்பதனை எடுத்துக்காட்டி நல்லவர்களுடைய வருத்தத்தால்தான்
இவ் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் அறத்தினை இங்கு எண்ணி மகிழலாம்.
பிரிவும் அறமே
தலைவியானவள் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்கிறாள்.
இதனைக் கண்டு வருத்தமுறும் செவிலித்தாயிடம் (முக்கோல்பகவர்)
துறவி, பெண்ணானவள் அவ்வாறு பிறந்த இடத்தை விட்டு நீங்குதலே அறம் என்பதனை உணர்த்தி
வருத்த்த்தைக் களைகிறார்.
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே ;
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே ;
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும் (கலித்தொகை 9 – 12-19)
எனக்கூறி
வருத்தமடையும் செவிலித் தாயினைத் தேற்றுகிறாள். இம்மையில் தலைமகளின் விருப்பப்படி
அமையும் இல்லறமே அறங்களில் தலையான அறம் எனக்கூறுகிறார் முக்கோற் பகவர். உயர்ந்த
பொருள்களான சந்தனமும், முத்தும், இன்னிசையும் பிற இட்த்துக்கு செல்வதனாலேயே பலன் உண்டாகும் என்பதனையும் இப்பாடலடிகளின்
வழி தெளியலாம்.
இல்லறத்தின்
பெருமை
தலைவனால் தலைவியும் தலைவியால்
தலைவனும் சிறக்க வாழ்வதே இல்லறம். எனவே ஒருவரை ஒருவர் சார்ந்து
வாழ்தலோடு புகழ்ந்தும் வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து வாழும்
வாழ்வே தமிழர் வாழ்வு. தலைவன் பிரிந்து செல்வதைக்கண்டு ஊரார்
இகழ்வார். எனினும் தலைவனின் கடமை உணர்வினை எண்ணி பிரிவு வாட்டத்தை
வெளிப்படுத்தாமல் மறைத்து வாழ்வாள் தலைவி. இதனை
பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவும்
கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி
எரிபொத்தி என்னெஞ்சஞ் சுடுமாயின் எவன்செய்கோ
(கலித்தொகை : 34 : 9-11)
என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. பொய் கூறினால் வாடும் மரம் உண்டு.
அம்மரத்தருகே பொய்கூறி மரத்தின் அழகைக் கெடுத்தல் போல் காலத்தில் வருவேன் எனக்கூறிப் பிரிந்தால்
விளையும் முகவாட்டத்தை என்னால் காத்தல் இயலாது
எனக் கூறி தலைவனின் பிரிவைத் தடுக்கிறாள். இதில் இல்லத்தின் பெருமையைக்
காக்கும் அறன் தனக்கு இருப்பதனையும் தன்னைக்காக்கும் அறன் தலைவனுக்கு இருப்பதனையும்
உணர்த்துகிறாள். தமிழர்கள் சொல்காத்தவர்கள். உண்மையான வாழ்வு வாழ்ந்தவர்கள். தாள்களைக் காட்டிலும்
ஆள்களை மெய்யென்று எண்ணியவர்கள். அதனால் அவர்கள் கூறும் உறுதிமொழியே
பெரிதென வாழ்ந்திருந்த அறத்தையும் இங்கு எண்ணி மகிழலாம்.
காலம்
காத்திருக்காது
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
எனவே காலம் கடந்து செய்யும் செயலால் பலனில்லை. எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை இழந்தவர்கள் பலருண்டு. நிகழ் காலத்தில் வாழத்தெரிந்தவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். முதுமைக்காலத்தை எண்ணி இளமைக்காலத்தை தொலைத்து விடுதல் கூடாதென்பதனை
புரிபுநீ புறமாறிப் போக்கெண்ணிப் புதிதீண்டிப்
பெருகிய செல்வத்தாற் பெயர்த்தர லொல்வதோ (கலித்தொகை : 15 : 10-11)
என்னும் அடிகளில் எடுத்துரைக்கின்றன. புறப் பொருளை விரும்பி அகப்பொருளை
கைவிட்டால் தலைமகளது அழகு கெடும் . அப்பிரிவால் அவளுக்கு பசப்பூறும்.
பிரிவு நோயால் உண்டாகும் வருத்தம் அழகை வருத்தும். பின்னாளில் நீ வரும் போது அவ் அழகு மீண்டும் கிடைக்குமா எனக்கேட்டு தலைவனின்
பிரிவைத் தடுக்க முயல்கிறாள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்னும்
பழமொழியினை இங்கு எண்ணி மகிழலாம்..
கண்ணீரே
அன்பு
எண்சாண் உடம்பிற்கு சிரசே முதல் என்பது
போல். முகத்திற்கு கண்ணே முதல். அதனால் அன்பு பெருகும்போது கண்ணே என அழைத்தல்
காணலாம். அன்பின் அடையாளத்தை கண்ணீரே வெளிப்படுத்தும் என்பது
தெய்வப்புலவர் வாக்கு.
தலைவியின் அன்பினை கண்ணீர் வெளிப்படுத்திவிடும் என்பதனை
மணக்குங்கான் மலரன்ன தகையவாய்ச் சிறுதுநீ
தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவு முளவன்றோ (கலித்தொகை 25 –13-14)
என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. தலைவனே ”நீ தலைவியைப் பிரிந்து போகலாம் ஆனால் ஊரார் உன்னைப் பழிப்பர். ஊராரொடு
உன்னைப் பழிப்பன பிறவும் உண்டு என்கிறாள். அவற்றுள் கண்களும் ஒன்று என்கிறாள்.
ஒருவர் இருக்கும் போது வாழ்த்தியும் அவர் சென்ற பின் தாழ்த்துவதும் இழிமக்கள்
இயல்பு. அவ்வாறு நீ அருகில் இருக்கும்போது மகிழ்வதும் நீ பிரிந்த பின் தூற்றும்
வகையில் எப்போதும் கண்ணீர் விட்டுக்கொண்டே உன்னைப் பழித்துக்கொண்டிருக்கிறது என
கண்ணின் மேன்மையினை பழிப்பது போல உயர்த்திக் கூறுகிறாள் தோழி. தலைவன் அண்மையில்
இருக்கும்போது மலர்ந்த கண்கள் அவன் பிரிவால் கண்ணீர் உகுத்துக் கொண்டே இருப்பதனைப் புலப்படுத்துகிறார் கடுங்கோ.
குறையாத செல்வம்
கொடுத்து
மகிழ்வதே இல்லறத்தின் மாண்பு. துறவோரையும் காக்கும் கடன் இல்லறத்தார்க்கெ உண்டு என்கிறார் தெய்வப்புலவர்.
அத்தகைய அறவாழ்வு வாழ்ந்து சிறப்போரே இல்லறத்தார். அதனை அறிந்து இல்லறம் நடத்தும் பண்புடையவன் செல்வமே தீதிலாத
செல்வம். அது நாளும் பெருகுமன்றி குறையாது.
ஈதலின் குறைகாட்ட தறனறிந் தொழுகிய
தீதிலான் செல்வம்போல் தீங்கரை மரநந்த (கலித்தொகை 27 – 1-2)
என்னும்
அடிகள் எவ்வளவு குறைந்தாலும் வருந்தாமல் மகிழ்வுடனே
வாழும் அறநெறியுடையோரின் பெருமையினை எடுத்தியம்புகிறது. அத்தகையோரின் செயலை ஆற்றங்கரை மரத்தோடு ஒப்பிடுகிறார்
கடுங்கோ. கொடையாளியின் செல்வத்தால் பலரும் நன்மை அடைந்து செழித்திருப்பதைப் போல் ஆற்றங்கரையில் மரங்கள் செழித்திருப்பதனை எடுத்துக்காட்டுகிறார்.
ஆற்றங்கரை கொடையளிப்பவர்க்கும் மரங்கள் கொடை பெற்றவர்க்கும் கொடையாளியின் புகழ் மரத்தின்
செழிப்பிற்கும் எடுத்துக்காட்டாய் திகழ்வதாக உள்ளதனை இங்கு எண்ணி மகிழலாம்.
நன்றி மறவாதே
அனைவரும் விரும்பும் கடன் நன்றிக்கடன் ஒன்றே.
கடனறி மாந்தர் என்பது ஒவ்வொருவரும் தனக்குரிய உறவு நிலையில்
, பதவியில் ஒழுக்கமாக வாழ்வது. ஒவ்வொரு நிலையிலும்
கடனறிந்து வாழ்ந்தால் உலகம் சிறக்கும்.
முன்னொன்றி தமக்காற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல்
பன்மலர் சினையுகச் சுரும்பிமிர்ந்து வண்டார்ப்ப
இன்னமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினாள் (கலித்தொகை 34 – 4-7)
என்னும் அடிகள் முன்னர் செய்த உதவியை எண்ணி ஒருவர்க்கு உதவி செய்யும் செய்யும் நன்றிக்கடனை எடுத்தியம்புகிறது. இந்நிலையினை வண்டுகள் மொய்க்கும் பூக்களையுடைய நீர்நிலையை
ஒப்பிடுகிறார் கடுங்கோ. கொடியானது
தன்னை வளர்த்த நீர்நிலையின் அருமையினை எண்ணி பூக்களைப் பரவி விட்டுள்ளதாகக்
காட்டுவதனை எண்ணி மகிழலாம். இம்மலர்கள் வழி நன்றி மலர்களின்
அருமையினை எடுத்துக்காட்டி நன்றி மறவாது வாழும் அறத்தினை உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.
நிறைவாக
மனிதன் அறத்துடன் வாழ்ந்தால் பொருளும் இன்பமும் தானே வந்தடையும்.
அறமின்றி சேரும் பொருளினால் இன்பம் உண்டாகாது. அறமில்லாத இன்பத்தாலும் நன்மை விளையாது.
கடனை அறிந்து வாழ்தலே அறம் என்பதனைக் பாலைக்கலிப் பாடல்கள் நன்கு எடுத்துரைத்துள்ளன.
கலித்தொகையின் இப்பாடல்களின் வழி அன்புடனும் அறத்துடனும் வாழ்வதே வாழ்வு எனத் தெளியலாம்.
*********************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக