தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

ஐங்குறு நூற்றில் மருதம் - Classical Sangam literature


ஐங்குறு நூற்றில் மருதம்

        சங்க இலக்கியக் கருத்துக்கள் என்றும் மதிப்புடையதாகப் போற்றப்படுகிறது. சங்ககால மக்கள் வாழ்க்கை முறையினைப் படம்பிடித்துக் காட்டும் வரலாற்றுப்பெட்டகமாகத் திகழ்வதனாலேயே சங்க இலக்கியங்கள் தங்க இலக்கியங்கள் எனப் போற்றப்பெறுவதனைக் காணமுடிகிறது.

யானைக் கொண்டு காத்தல்

காய்நெற் கவளந் தீற்றிக் காவுதொறும்

கடுங்கண் யானை காப்பன ரன்றி  (புறநானூறு 337, 14-16)

விளைந்த நெல்லிடத்துப் பெற்ற அரிசியாலுண்டாகிய கவளத்தை உண்பித்து காக்கள் தோறும் வன்கண்மையுடைய யானைகளைக் காப்பதல்லது என்னும் பொருள்படும் இக்கூற்றின் வழி வளமான நெல்லினையே யானைக்கும் கவளமாகக் கொடுத்துள்ளதனைக் காணமுடிகிறது.

மன்று நிறையு நிரையென்கோ

மனைக்களமரொடு களமென்கோ

ஆங்கவை கனவென மருள வல்லே நனவின்

நல்கியோனே ……… ……… (புறநானூறு 387, 24-27)



செல்வக்கடுங்கோ வாழியாதனின் கொடைப்பண்பினை குன்றுகட்பாலியாதனார் இவ்வாறு பாடுகிறார். இதன் வழி உழவுத்தொழிலுக்குத் தேவையான நிரைகளையும் அதற்குரிய கருவிகளையும் கொடுத்து பெறுபவர்கள் இது கனவா என நினைக்கும் வகையில் கொடுத்த சிறப்பினைப் பாடியுள்ளார்.

அரசு என்பது உழவு செழிக்க வழிவகை செய்ய வேண்டுமேயன்றி அவ் உழவிற்கு மாற்றாக வேறு தொழில் செய்ய ஊக்கமளிப்பது உழவுத்தொழில் அழிய வாய்ப்பளிப்பதாகவே அமையும் என்பதனை உணர்ந்து கொடையளித்த திறத்தைக் காணமுடிகிறது.



சங்க இலக்கியத்தில் மூன்றடி சிற்றெல்லை கொண்ட நுலாகத் திகழும் ஐங்குறுநூற்றின் மருத நிலப்பாடல்கள் உழவர் நிலையை நன்கு எடுத்துரைக்கிறது.



மருதத்திற்கு ஓரம்போகியார் எனப்போற்றப்பெறும் அளவிற்கு மருத நிலப் பாடல்களைப் பாடியவர். தாம் பாடிய 109 அகப்பாடல்களில் 107 (ஐங்குறுநூறு -100, நற்றிணை – 2, அகநானூறு -2, குறுந்தொகை – 3)  பாடல்கள் மருத நிலப் பாடல்களே. எனவே ஐங்குறு நூறு மட்டுமே இக் கட்டுரைக்குரிய எல்லையாக வகுத்துக்கொள்ளப்படுகிறது.



வாழி ஆதன் வாழி அவினி

நெற் பல பொலிக பொன் பெரிது சிறக்க (ஐங்குறு நூறு 1 : 1-2)

என்னும் இம்முதற் பாடலே சேரமன்னனைப் போற்றித்தொடங்குவதாக அமைந்துள்ளது. இவ் இலக்கியத்தை தொகுப்பித்தவரும் தொகுத்தவரும் சேர நாட்டவராதலால் மருதம் முதலாக அமைந்தது எனக் குறிப்பிடப்படுகிறது.



உழவர்கள் உழைப்பாலேயே மக்கள் நலம் அமைகிறது. அவர்கள் உழைப்பின் பயனாக  நெல் பொலிகிறது. இதனையே முதல் கருத்தாக வைத்து முதற்பாடல் பாடப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது. நெல் விளைதல் என்பது நெல்லை மட்டும் குறியாது பிற கூலங்களையும் உள்ளடக்கியது. நெல் வளம் பெற்றால் பசி நீங்கும். உழைப்பு பெருகும். அதன் வழி பிற செல்வங்கள் பெருகும் என்பதனையே பொன் பெரிது சிறக்கும் என்கிறார் புலவர்.

யாணர் ஊரன் வாழ்க (ஐங்குறு நூறு 1 : 5)

இவ்வடிகளில் யாணர் என்பது  என்றும் இடையறாத வருவாய் பெறும் நிலையினைக் குறிக்கும். உழவு செழிப்பால் அனைவரும் வருவாயினைப் பெறுதல் இயலும். அவ்வாறு சிறந்ததால் சிறப்படைந்த உழவர் நிலையினை இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.



நனையக் காஞ்சி சினைய சிறுமீன் (ஐங்குறு நூறு 1 : 4)

இவ்வடிகள் உழவு செய்யும் நிலத்தின் வளத்தை எடுத்துக்காட்டுகிறது. காஞ்சியும் சிறுமீன் வளமுடைய புலத்திற்குச் சான்றாக நிற்பன.



பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்

தண் துறை ஊரன் . . . . (ஐங்குறு நூறு 2 : )



நீலத்தோடு நெய்தலும் ஒப்ப மலரும் குளிர்ச்சி பொருந்திய நிலத்திற்குரிய தலைவனே எனப் போற்றுவதனையும் காணமுடிகிறது.



விளைக வயலே  வருக இரவலர் (ஐங்குறு நூறு 2 : 2)

என்னும் இவ்வடிகள் வயலின் செழிப்பு மக்களின் வளமையை எடுத்துக்காட்டுகிறது. அவ்வளமே கொடையளிக்கும் சிறப்பினையும் அளிக்கிறது. இல்லறம் சிறக்க வேண்டுமாயின் நிலம் சிறக்க வேண்டும் என்பதனை இவ்வடிகள்உணர்த்தி நிற்கின்றன.



பால் பல ஊறுக பகடு பல சிறக்க (ஐங்குறு நூறு 3 : 2)

நிலத்தை உழுதற்கு பகடுகள் வளமுடையதாக இருக்கவேண்டும்.  அத்தகைய பகடுகளை சிறப்பாக போற்றிப்பாதுகாக்க வேண்டிய கடமை உழவர்க்கே உரியது. இயற்கையை வழிபடும் தமிழர் ஆநிரைகளைப்போற்றும் வகையில் பொங்கல் கொண்டாடும் நிகழ்வினையும் இங்கு எண்ணி மகிழலாம். பகடு என்பது மாடுகளை மட்டுமேயன்றி அனைத்து உயிர்களையும் காக்கும் வகையில் ஆட்சி நடத்தும் சிறப்பினையே உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.





வித்திய உழவர் நெல்லொடு பெயரும் (ஐங்குறு நூறு 3 : 4)

உழுபவர்க்கே விளையும் பொருள் உரிமையுடைத்து. அவ்வாறன்றி உழுவோர்க்குப் பயன் கிட்டாதாயின் உழுவோர் தாழ் நிலையில் இருக்க உழுவிப்போர் உயர் நிலையில் இருப்பர். அந்நிலை எந்நாளும் துன்பம் தருவதாகவே அமையும். உழவுத்தொழில் நாளடைவில் குன்றிப் போகும். உழுவோர் அதன் பயனை உடனடியாகப் பெற்று மகிழ்ந்த நிலையினை வித்திய உழவர் நெல்லோடு பெயரும் நிலையினைக் குறிப்பிட்டதன் வழி அறியமுடிகிறது.



மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை (ஐங்குறு நூறு 6 : 4)

பொய்கையும் தாமரையும் மருத நில வளத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டும். பயிர் செழிப்படைய நீர் நிலைகளைக் காத்து நின்ற நிலையினையும் காணமுடிகிறது.

கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் (ஐங்குறு நூறு 9 : 4)

வளமான நீர் நிலையில் கயல் மீன்கள் துள்ளுவதும் அவ்விடத்தைத் தேடி  நாரை வருவதும் இயற்கை. அங்கு நெல் நன்கு விளையுமாதலால் வைக்கோல் போர் மிகுந்திருப்பதனை இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.

மனை நடு வயலை வேழம் சுற்றும் (ஐங்குறு நூறு 11 : 1)

மனையின் கண் நட்டு வளர்க்கப்பட்ட வயலைக் கொடி அயலேயுள்ள நாணல் சுற்றிப் படர்தற்குரிய துறை என இவ்வடிகள் வயலின் சிறப்பை எடுத்துரைக்கிறது.



பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன் (ஐங்குறு நூறு 23 : 2)

பூக்கள் மலர்வதும் நிலத்தின் செழுமைக்கு எடுத்துக்காட்டாகும். அத்தகைய ஊருக்கு அழகு செய்வது புனல் வளமே என்பதனையும் இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.



மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை (ஐங்குறு நூறு 33 : 2)

மழை வளமே மருத நிலவளத்திற்கு அடிப்படை. மரங்கள் மழையினால் சிறப்பதும் மழை மரங்களினால் சிறப்பதும் இயற்கை. அவ்வாறு இரண்டும் ஒத்துச் சிறந்திருந்ததனை மருத மரம் ஓங்கி நின்றதன் வழியும் தாமரை, அல்லி, குவளை என மலர்கள் பூத்திருந்ததன் வழியும் எடுத்துக்காட்டியுள்ளார் புலவர்.



பொய்கை ஆம்பல் நார் உரி மென்கால்

நிறத்தினும் நிழற்றுதல் மன்னே (ஐங்குறு நூறு 35 : 2-3)



ஆம்பல் தண்டு இயல்பாகவே மென்மையும் மினுமினுப்பும் கொண்டது. அதன் நார் உரிக்கப்பட்ட நிலையில் அதன் ஒளி பன்மடங்கு சிறந்திருந்ததனை எடுத்துக்காட்டியுள்ளதன் இயற்கை வளத்தினை எடுத்துக்காட்டியுள்ளார் ஓரம்போகியார்.

கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்

சுரும்பு பசி களையும் பெரும்புனல் ஊர (ஐங்குறு நூறு 65 : 1-2)



கரும்பு முன்பு நடப்பட்டு இப்பொழுது நன்கு வளர்ந்துள்ள பாத்தியில் உழவர் வளர்க்காது தானே வளர்ந்தன அல்லியும் தாமரையும். இயல்பாக அவை இரண்டும் ஆழ் நீர் நிலையிலேயே தழைப்பன. அவை வளர்வதற்கேற்ற நீர் நிரம்பிய பாத்திகளும் அமைந்துள்ளன. இவ்வாறு செழிப்புடன் இருப்பதனால் சுரும்புகள் எளிதாக தம் பசியாறுகின்றன. எனவே பெரும்புனல் ஊர் எனக் குறிக்கப் பெற்றுள்ளதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.



கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து ……..>>

நெடுங்கதிர் நெல்லின் நாள் மேயல் ஆ..>> (ஐங்குறு நூறு 95 : 1-2)



பெரிய கொம்பினை உடைய எருமை தன் கயிற்றை அறுத்துக் கொண்டு சென்று நெல்லின் நெடிய கதிரை

உலகில் கடல் வளம் என்பது 97 விழுக்காடாக இருக்கின்றது. எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு விழுக்காடு பனி மலைகளாகவும்  ஓர் விழுக்காடே குடிநீராகவும் இருப்பதனை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். இவ்வாறு குறுகி இருக்கும் நிலப்பரப்பில் வாழும் உயிர்களையே பெரிதாக எண்ணிப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் கடல் வளம் குறித்து அறிய விழைவது முயற்கொம்பினைக் காணும் முயற்சியாகவே அமையும். எனினும் அக்கடல் குறித்த எண்ணங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆய்ந்து தம் பாடல்களில் இடம்பெறச் செய்த சங்கப் புலவர்களின் புலமைத் திறத்தை எண்ணி வியக்காதிருக்க முடியாது. அவ்வாறு ஆய்ந்த புலவர்களின் திறத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே இவ் ஆய்வுக்கட்டுரை அமைகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக