தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

இலக்கியப் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள் -Feminism in Tamil Literature


இலக்கியப் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள்

(முனைவர் ம.. கிருட்டினகுமார், உதவிப் பேராசிரியர், புதுச்சேரி- 605008.                                                                                        உலாப்பேசி : 99406 84775)

பெண்ணியம் என்பது பெண்களின் நிலையினை நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒரு அழகிய போக்கு. உயிர்களுக்கிடையே வேறுபாடு காணாது வாழ்தலே அறிவு என்னும் போக்கினை வளர்த்த சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். இதனைப் பிறிதின் நோய் தன்னோய் போல் பார்க்கக் கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் வழி அறியலாம். பெண்ணியம் என்னும் பெயரில் அல்லாது பெண்களுக்குரிய உரிமையினை நிலைநாட்டுவதற்குரிய முயற்சியில் இலக்கியவாதிகள் பலரும் தங்களுக்குரிய பங்கினை செய்துள்ளதனை இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இதனை அறிய விழைந்ததன்  விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

எல்லைகளைக் கடப்பதே

இனம், சமூகம், பண்பாடு என்னும் நிலைகளில் பெண்களுக்குரிய அடக்கு முறைத் தொடர்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் பெண்களுக்குரிய எல்லையினை வரையறுப்பதுதான். இதனை அடிமைத்தனம் என வெளிப்படையாகக் கூறாது பெண்ணுக்குரிய ஒழுக்கம் என்னும் நிலையில் கட்டிப்போட்டுவிடும் நிலையினையும் விடுதலை உணர்வினையும் தானாக சிந்திக்கும் திறனையும் முடக்கிப்போட்டு விடுவதனையும் காணலாம். வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ளும் முயற்சியாகவே இது அமையும். இது புரட்சி என்னும் பெயரில் விடுதலைக் காண முயல்வது போலவே பெண்ணியம் என்னும் பெயரும் அமைந்துள்ளது.



சிறை என்பது நடமாடும் வெளியை வரையறுக்கிற வேலைப்பாடுதான்; இந்தியாவில் பெருவாரியான பெண்களுக்கு நாம் வீடுஎன்ற புனைபெயரில் சிறையிலிருக்கிறோம்; வீட்டைக் கழுவுதல், துணி, துவைத்தல், சமையல் செய்தல், பாத்திரம் தேய்த்தல், பிள்ளையை வளர்த்தல் என்ற பெயரில் 24 மணி நேரமும் வேலை செய்கிற அடிமையாக இருக்கிறோம்என்கிற விழிப்புணர்வை நாம் அவர்களுக்கு ஊட்டிவிட முடியுமா ?” . (’தலித்துகள்,பெண்கள் தமிழர்கள்’ (.113)) என முனைவர் க.பஞ்சாங்கம் கேட்பது இங்கு எண்ணத்தக்கது.

பெண் - நிலைமாற்றம்

        உலகம் முழுதும் ஆண்களையே கடவுளாக எண்ணி வணங்கியபோது பெண்ணையே கடவுளாக வணங்கிப் போற்றிய பெருமைக்குரிய நிலம் தமிழ் நிலம். பெண்களையே இனத்தின் குடும்பத்தின் தலைமை இடத்தில் வைத்து வாழ்ந்தவர் தமிழர். அந்நிலையினை மாற்றி பெண்ணை அடிமைப்படுத்தியுள்ள போக்கு பிற்போக்கான ஆண்களின் அச்சத்தாலேயே விளைந்தது. அந்த அச்சமே அடிமைப்படுத்தும் போக்கினை வளர்த்து இன்று அதுவே வழக்கமாகிவிட்டது. அத்தகைய ஆதிக்க உணர்வினை உடையோரை பித்தர் என்கிறார் பாரதியார்

        அறிவு கொண்ட மனித வுயிர்களை -

        அடிமையாக்க முயல்பவர் பித்தராம்                      (புதுமைபெண்.பா.1)



எனக் கடுமையாகச் சாடுகிறார். ஆண் உடம்பை நோக்கப் பெண் உடம்பு, உயிரியல் அடிப்படையிலேயே படைப்பு சக்தி மிக்கதாக அமைந்துள்ளது. தன் உதிரத்தைத் தனக்குள்ளேயே பாய்ச்சி, ’குழந்தைஎன்கிற புதிய உயிரை வடிவமைத்துப் பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்துவிடுவதன் மூலம் இந்த மண்ணுக்குள் ஆழமாக வேர்பரப்பி நிற்கிறது பெண் உடம்பு; ஆனால் ஆண் உடம்பு? இத்தகைய பிடிமானம் ஏதுமின்றி தனக்குப் பிறந்தது எது என்று அடையாளம் காண வழியின்றி , அந்தரத்தில் பாதுகாப்பற்ற ஒரு தளத்தில் தொங்குகிறது. இந்நிலையில் உளவியல் தேவைக்காகப் பாதுகாப்பைத் தேடியும், சொத்துடைமைச் சமூகம் உருவான பிறகு தனது சொத்தைத் தனக்குப் பிறகு, தனக்குப் பிறந்த வாரிசுதான் உரிமை கொள்ள வேண்டும் என்ற உணர்வு உருவான பிறகு தனக்குத்தான் இந்தக் குழந்தை பிறந்தது என்பதை உறுதிசெய்துகொள்ளும் நோக்கிலும் ஒருத்திக்கு ஒருவன்என்ற ஆணாதிக்கக் கண்டுபிடிப்பு நிகழ்கிறது. இந்த ஆதிக்கக் கண்டுபிடிப்பை மனத்தளவில் கொண்டுபோய் நிலைநிறுத்தும் முயற்சிக்குக் கருவியாகத்தான் குடும்பம், காதல், கற்பு, தெய்வீகம் என்ற புனிதக் கோட்பாடுகள் பிறக்கின்றன. இந்தப் புனிதங்களைக் கட்டி எழுப்புகிற பணியில்தான் சங்க இலக்கிய அகப்பாடல்களும் அவற்றிற்கான அகத்திணைக் கோட்பாடுகளும் சமூகத்தில் பிறப்பெடுக்கின்றன. (த.பெ.த. (.90-91) எடுத்துரைக்கிறார்).பஞ்சாங்கம்.



தனக்குத் தானே



        எத்தனை ஆண் இலக்கியவாதிகள் பெண்ணியம் குறித்துப் பேசினாலும் பெண் தனக்கான உரிமை குறித்துப் பேசும் போது அதனால் விளையும் தாக்கம் வலிமையுடையதாகவும் உண்மையானதாகவும் அமையும். இயற்கையான சூழலில் குடும்பத்தில் வாழும் பெண்ணின் நிலையே பல உணர்வுச் சிக்கல்களுடையதாக அமையும் இச்சூழலில் உணர்வுடன் உடலளவிலும் காயப்பட்டுப் போகும் பெண்ணின் நிலை குறித்தும் உணர்த்த வேண்டியது படைப்பாளிகளின் கடமை.



        உடலை விற்கும் பெண்களின் நிலை கொடுமையிலும் கொடுமையாகிப் போன சமூக நிலையினையும் அதற்குப் பின்னால் முகமுடியுடன் திரியும் ஆண்களின் நிலையினையும்



        பதிமூணு வயசில் அப்பா மடியில் முகம் புதைக்காமல்

        அப்பன் வயசுக்காரனை மடியில் புதைத்து யார் கண்டது ? – இவனே

        அப்பனாகவும் இருந்திருக்கலாம் வாரிசு ஆட்சி தானே ? (சுயம் பேசும் கிளி, .63)



என்னும் ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதை எடுத்தியம்புகிறது. பெண்ணின் எத்தகைய இழிநிலைக்கும் ஆண்களே காரணமாக இருப்பதனை இக்கவிதை எளிதாக உணர்த்திவிடுகிறது.  எழுத்தாளர்கள் ஆண்களா, பெண்களா என்பது முக்கியமல்ல. அவர்களின் எழுத்துகள்தான் முக்கியம். ஆனாலும் பெண் என்ற அடையாளம் பெண் என்ற அனுபவம் , பெண் என்னும் உணர்வு நேரடியாக இருக்கும் என்பதால் பெண் எழுத்தாளர்களிடம் பெண்ணியச் சிந்தனையையும் பெண்ணிய மொழியையும் எதிர்பார்ப்பது என்பது இயல்புஎன (திறனாய்வுக் கலை(.221)) முனைவர் தி.சு.நடராசன் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

மணக்காத மணங்கள்

        திருமணங்கள் வாழ்வதற்கான இனிய உடன்படிக்கை. ஆனால் அதில் குழந்தை திருமணம் செய்து சிறுவயதிலேயே வாழாவெட்டி எனக் கூறி அவளை ஒரு மூலையில் வைத்து அவளுடைய தாய் இறந்தபின் வேறொரு திருமணம் செய்துகொண்ட தந்தையின் நிலையினை

        ஏழு வயதின் இளம்பெண் சொல்லுவாள்;  - என்னை விலக்கி என் சிறுதாயிடம்

        தந்தை கொஞ்சுதல் தகுமோ. . .        (பாரதிதாசன் கவிதைகள் ப.98)



என்னும் அடிகளில் குழந்தைமணத்தின் கொடுமையாக எடுத்துரைக்கிறார் பாவேந்தர். இது போன்ற சமூக அவலத்தை மாற்ற விழைகிறார் மகாகவி நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால் நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னப்பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவிசெய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படுஎன முற்றுப்பெறாத நாவலான சந்திரிகையின் கதையில் பாரதியார் கைம்பெண் மணத்தின் நியாயத்தைப் பாத்திரங்களின் வழி கூறுவதைப் (”கதைக்கலைஞர் பாரதியார்” (.66)) புலப்படுத்துகிறார் முனைவர் சிவ.மாதவன்.

       

        இத்தகைய சடங்குகளால் மறுமணங்களோடு முதல் மணங்களே தடைபட்டுப் போகும் நிலை உருவாகிவிட்டது. பெண்கள் எத்தகைய சமூகச்சிக்கலுக்குளெல்லாம் சிக்கியுள்ளனர் என்பதனை



சொல்லுங்கள் என் முந்தானையை மதத்தோடு முடிச்சிட்டது யார்

ஜாதிச் சிலுவையில் என் தங்க தேகத்தை அறந்து போனது யார்

என் புணர்ச்சிக்கு விலை வைத்த பொருளாதாரம் எது ?

என் சூரியனை மறைக்கும் கிரகம் தான் யாது ?

கிளர்ந்து வெளியேறுங்கள் கிளிகளே

இதுவரை பாத்திரத்தைத் தான் துலக்கி வைத்தோம் சாத்திரத்தை

(வைரமுத்துக் கவிதைகள் ப.458)

என்னும் வைரமுத்துவின் முதிர் கன்னிகவிதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் பெண்கள் கடந்து செல்வதற்கான பாதையை சீரமைக்க வேண்டிய நிலையினையும் இக்கவிதை வழிகாட்டுகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு

        பெண் தனக்குரிய பெருமையினைக் காத்துக் கொள்வதற்கு படித்த பெரியோர்களெல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோது சொத்துரிமை கொடுப்பதேடி தீர்வு எனச்சொன்னவர் பெரியார். பொருளாதாரத்தில் பெண்ணின் நிலை தாழ்ந்திருப்பதலேயே அவள் அடங்கி நடக்கும் சூழல் உருவாகிவிட்டது. பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்ட ஆணாதிக்கம் பிடித்த மூடர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பெண்ணை பகடைக்காய்களாக மாற்ற விழைகின்றனர். ஆண்கள் தம்முடைய அதிகாரக் கொழுப்பினால் பெண்களை  ஒரு விலங்கினைப் போல் ஆட்டிவைக்கும் கொடுமை நிலையினை

        பிச்சைக் கேட்டு நின்றாள் குருட்டுச் சிறுமி மச்சு வீட்டு மைனர் சொன்னான்

        பெண்ணே தட்டத்தைத் தூக்கிப் பிடி  (தமிழ்நாடன் கவிதைகள் , .202)



என்னும் தமிழ்நாடனின் காமரூபக் கவிதை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இக்கவிதையின் வழி வறுமை பெண்ணடிமைத்தனத்திற்கு ஒரு காரணமாக இருப்பதனை உணரலாம். “பறையனுக்குப் பார்ப்பானும் கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்கிறேன் என பாரதியார் தன்னுடைய மிளகாய்ப்பழச்சாமியார் கதையில் கூறுவதை எடுத்துக்காட்டி பாரதியார் பெண்விடுதலையின் தேவையினை  வலியுறுத்திய நிலையினை (”.பா. (.65) ) சிவ.மாதவன். எடுத்துக்காட்டுவது இங்கு எண்ணத்தக்கது.

பெண்ணுக்கே அறிவு

                தன்னலம் காக்கும் அறிவு ஆண்களுடையது. பிறர் நலம் போற்றும் அறிவு பெண்ணறிவு. அந்த அறிவே உண்மை அறிவு.  இந்த அறிவினையும் தனக்குரியதாக ஆக்கிக் கொண்டனர் ஆண்கள். எனவே, ஆண்களின் உடைமைப் பொருளாக மாறிய பெண்கள் எதனையும் சாதிக்கும் வல்லமை உடையவர்களாக இருப்பதனை மூடர்கள் உணரவேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில்



பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் -  புவிப்பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சிலமூடர் நல்ல - மாத ரறிவைக் கெடுத்தார் (முரசு, பாடல்-9)



எனப்பாடி பெண்களின் அறிவுத்திறத்தைப் போற்றுகிறார் பாரதியார். பெண்ணை அடிமைப்படுத்திய நேற்றைய தலைமுறைக்கும் பெண்ணுக்கு சரிநிகர் நிலையினைக் கொடுக்கத் தயங்கும் இன்றைய தலைமுறையினருக்கும் ஆண்களை விஞ்சி தம் பெருமையினை நிலைநிறுத்தும் நாளைய பெண்களுடன் வாழவேண்டிய நாளைய தலைமுறையினருக்கும் உணர்த்துவது அவசியம் என்பதனால் முரசு கொட்டு அறிவிக்கிறார் மகாகவி பாரதியார். பெண்களின் பாட்டுத்திறத்தைக் கொண்டே தாம் பாடல் எழுதிய நிலையினைப் புலப்படுத்துகிறார். ”கவிதைத் தேட்டமுடையோர் நமது பெண்களின் பாட்டைத் தேடிப் பார்த்தால் சிற்சிலவிடங்களில் நல்ல கவிதை கிடைக்கும் என்பார். நலங்குப்பாட்டு, கும்மி முதலியவற்றில் கூடச் சில இடங்களிலே முத்துப்போலே வார்த்தைகள் அகப்படும். தொழிற் பெண்களின் பாட்டு மிகவும் ரஸமானது. சந்தமும் இன்பம், ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை எனக் கணக்கிடுகிறார்.” எனப் பாரதியாரின் பண்பினை (பாரதி-பன்முகப்பட்ட ஆளுமை (.58)) முனைவர் செ.போத்திரெட்டியார் கூறுவது இங்கு எண்ணத்தக்கது.



அடிமைப் பெண்



        பெண்கள் ஒரு கட்டமைப்புக்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து மீளமுடியாது தவிக்கின்றனர். கண் அவன் கணவன் என்றும் கொழுகொம்பை சுற்றியுள்ள கொடி தான் என்பதால் கொழுநன் என்றும் கணவனைச் சார்ந்தே வாழமுடியும் என்பதனை இன்றைய சமூகம் ஆழமாகப் பதித்துவிட்டது.



வசந்தா கேவிக்கேவி வார்த்தைகளுக்குள் சிக்கினாள்

அக்கா என் புருஷன் அடிக்கிறான். குடிக்கிறான். தொலையட்டும்

என்னை விட்டா யாருக்கா அவனுக்கு விதி? சாகவும் பயப்படலை நான்

நானும் போயிட்டா அவன யாருக்கா காப்பாத்துவா ?

அதனை நினைத்தே அழுகிறேன் இப்போ

அவளுடைய மாமியார் போலவே தாயாகத் தெரிகிறாள்.



என்னும் கவிக்கோ இரா.மீனாட்சியின் (கொடிவிளக்கு ப.63) கவிதை அடிமைப் பட்டிருக்கும் பெண்ணின் நிலையை அழகாக எடுத்துக்காட்டிருக்கிறது. ”பெண்ணியல் வரலாற்றாசிரியர்கள் பெண்ணியம் சார்ந்த பார்வைக்கு பாலுணர்வு அரசியல் என்னும் நூலுக்கு பெரும்பங்குண்டு என்பர். அந்நூலைப்படைத்த காத்மில்லத் தந்தை சார்ந்த  அதிகார அமைப்பு, குடும்பத்தில் கட்டமைத்து விடுகின்ற இந்தப் பண்பு உருவாக்கம்தான் சமுதாய அமைப்பிற்குள்ளும் நீட்சி பெற்றுப் பெண், மக்களாட்சி முறை எனச் சொல்லப்படும் இன்றைய நவீன உலகிலும் கூடத் தாழ்வாக நடத்தப்படுகிறாள் என விரித்து எழுதியுள்ளார் என (த.பெ.த. (.89) ).பஞ்சாங்கம் கூறுவது இங்கு எண்ணத்தக்கது.



எங்கே தொடக்கம்

தன்னுடைய நடை, உடை, பாவனை அனைத்தையும் முடிவுசெய்யும் உரிமை பெண்ணுக்கு இல்லாததனாலேயே அப் பெண் எளிதில் காதல் வயப்படுகிறாள். அங்கு அவளுக்குரிய உரிமை பாதுக்காக்கப்படுகிறது. போற்றப்படுகிறது. எனவே காதலில் மனம் ஈடுபடுகிறது. அக்காதலும் திருமணம் என்னும் நிலைக்கு வந்தவுடன் மீண்டும் அக்குடும்பத்திற்குரிய எல்லைக்குள் மாட்டிக்கொள்ளும் நிலை அப்பெண்ணை இயற்கையாகவே சிக்கவைத்துவிடும் சூழல் இருக்கிறது. குடும்பச் சூழலில் சிக்கியவுடனேயே கல்லானாலும் கணவன் என்னும் அறுவறுக்கத்தக்க்க் கோட்பாடு புகுத்தப்படுகிறது. கல்லை கல் என்று உணர்வதற்குக் கூட உரிமையில்லாதவளாகப் பெண் நிறுத்தப்படுகிறாள். மகாபாரதத்திலேயே பெண் அடிமையாவதற்குரிய சாசனம் தீட்டப்பட்டுவிடுகிறது.

என்னை முதல் வைத்தி ழந்த பின்பு தன்னையென்

மன்ன ரிழந்தாரா ? மாறித் தமைத்தோற்ற

பின்னரெனைத் தோற்றாரா?                                     (பாஞ்சாலி சபதம் பாடல்:48)



என்னும் அடிகள் ஆண்களுக்குத் தம் மனைவியை (அடிமையை) வைத்துச் சூதாடும் உரிமை  இருந்ததனைச் சுட்டிக்காட்டுகிறார் மகாகவி.  இதன்வழி ஆளப்படக்கூடிய வர்க்கமாக ஆண்வர்க்கம் தன்னை நிலைநிறுத்துக்கொண்ட்தே எனத் தெளியலாம். இதிலிருந்து விடுபட முயலும் போது பிரச்சினைத் தொடங்கிவிடுகிறது. இதனைமனித வாழ்க்கைக்கு எப்படியெல்லாமோ அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டாலும் உயிரியல் நோக்கில் ஒரே அர்த்தம் தான்; அதாவது ஆண் உடம்பும் பெண் உடம்பும் இணைந்து தங்களைப் போல வேறு சில உடம்புகளை உற்பத்தி செய்துவிட்டுப் போவதுதான்; இப்படி உடம்புகள் இணைய நேரும் போது மனித இனத்தைப் பொறுத்தவரை, உடம்போடு வேறு வேறான இரண்டு உள்ளங்களும் இணைய வேண்டிய நெருக்கடி  ஏற்படுகிறது. இந்த நெருக்கடியை எத்துணையோ வகையான முறையில் மனித இனம் எதிர்கொண்டிருக்கிறது. எதிர்கொண்டு வருகிறது. என்றாலும் அடிப்படைச் சிக்கலாக இன்றுவரை தொடர்வது இந்த நெருக்கடிதான்; ஒரு பொருள், இன்னொரு பொருளுடன் உறவு கொள்ள நேரும்போது ஏற்படுகிற மூலாதாரப் பிரச்சனை, எது ஆளுவது? எது ஆளப்படுவது? என்ற அதிகாரப் பிரச்சனைதான் ; இந்த மூலாதாரப் பிரச்சனை தான் ஆண்/பெண் உறவிலும் எழுகிறதுஎன (த.பெ.த. (.89)) எடுத்துரைக்கிறார் க.பஞ்சாங்கம் அழகாக எடுத்துரைக்கிறார்.



பழமையைத் தேடி

       

        புதுமை பழமையைக் காட்டிலும் கொடுமையாக இருக்கும்போது பழமை இனிதாகிறது. திருமணமான பெண்ணின் நிலையும் அவ்வாறு இருக்கும் சூழல் பெண்ணடிமைத்தனத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.



தாய் வீட்டுக்கு வந்தவள் தன்னுடைய கடந்த காலத்தை எண்ணி மகிழ்வதனையும் அதற்குப்பின்னால் அவளுடைய தவிப்பினையும்



சேலை களைந்து தாவணி அணிந்து ரசம்போன கண்ணாடி முன்

நெடுநேரம் நிற்கிறாள் தாவணிக்குப் பொருந்தாமல்

கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது புதிதாய் ஒரு மஞ்சள் தாலி



என்னும் நா.முத்துக்குமாரின் தொலைந்து போனவள்’ (னா ஆவன்னா- .33) கவிதை எடுத்துக்காட்டுகிறது. பெண்களுக்கு தாலி வேலி போட்டு சிக்க வைத்துவிட்டதனை புலப்படுத்துகிறது. இதற்குத் தீர்வு காண வேண்டியது அனைத்து நிலைகளிலும் தொடங்கப்பட வேண்டும் என்பதனை ஆணாதிக்கச் சமூகத்தில் உழைப்புகுறித்து உருவாக்கப்பட்டிருக்கும் ஆணுக்குச் சார்பான புனைவுகளை உடைத்து, அதிலிருந்து விடுதலை பெறுவதுதான் பெண்களின் முதல் கடமையாக இருக்க முடியுமெனப் படுகிறது; அதாவது கருத்தாக்கங்களை உருவாக்கும் கலை, இலக்கியம், மொழி எனப்படும் பண்பாட்டுத் தளங்களில் தீவிரமாகப் படித்த பெண்கள் வினைபுரியும் காலத்தில்தான் பெண்ணுக்கான விடுதலை பெரிய அளவில் சாத்தியமாகுமெனப்படுகிறது.”( (த.பெ.த. (.114)) என்னும் க.பஞ்சாங்கத்தின் கூற்று எண்ணத்தக்கது.



மாயையில் சிக்குண்டு



        பெண்களுக்கு புகழ்ச்சிப் போதையினை உண்டாக்கி அம்மயக்கத்திலிருந்து விடுபடாமல் செய்யவும் இன்றைய ஆணாதிக்க சமுதாயம் நன்கு பழகிவிட்டது. பழக்கிவிட்டது. அதனாலேயே இன்று (முகம், உதடு, கன்னம்,இமை) பூச்சுக்களின் வணிகம் கோடிக்கணக்கில் பெருகி வருகின்றன. இவை அனைத்திலும் நச்சு கலந்திருப்பதை அறியாமலே இதனைப் பயன்படுத்தி வருவதும் வருத்தத்திற்குரியது. பெண்களை உயர்த்திச் சொல்லிச் சொல்லியே அடிமைகளாக வைத்திருக்கும் போக்கினை



பெண்ணை நிலாவென்றனர் இரவுக்கு உபயோகம் என்பதனால்

பெண்ணை விளக்கு என்றனர். . – அணைக்க என்பதனால்

வளைத்துப்போட வாய்ப்புக் கிடைப்பதால் அவளைக் கொடி என்றனர்

அம்புகளிடம் ஆலோசனை நடத்தியபின் அவளை மானே என்றனர்

கால்விலங்கைக் கைகளில் வைத்துக்கொண்டு கலாபமயிலே-என்றனர்

கண்ணே என்றவர்கள், அவள் கண்ணொளி -பெறாமல் இருக்க

தடை விதித்தனர்                              (வார்த்தைகள் கேட்ட வரம் ப.252-253)



என்னும் ஈரோடு தமிழன்பனின் பெண்மை வாழ்கவென்றுஎன்னும் கவிதை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு பெருமையாகக் கூறியே ஆண்கள் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதோடு சுமைகளையும் ஏற்றிவிடும் அவலநிலை தொடர்கிறது. இதனை பெண்ணுக்கு வேலைதான் வாழ்க்கை; வாழ்க்கை என்பது வேலைதான்என்ற புனைவாக்கத்தை மனத்தளவில் பெண் அறியாமலேயே பெண்ணுக்குள் வடிவமைக்கிற முயற்சி, பெண்ணின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது; பெண் பிள்ளையாகப் பிறந்துவிட்டால் வீடு பெருக்குவது, துணி துவைப்பது, சமைப்பது, நீர் எடுப்பது, தாயின் கைப்பிள்ளையை வளர்ப்பது முதலிய அனைத்து வேலைகளையும் அவளுக்குள் அவள் அறியாமலே ஏற்றி விடுகின்றனர். நல்ல பெண் என்று பெயரெடுக்க அந்தச் சிறுமிக்கு வேறு வழியில்லை” (த.பெ.த (.113)) என்னும் க.பஞ்சாங்கத்தின் கூற்றுத் தெளிவுபடுத்துகிறது.



வணிகப்பொருளாக



பெண்கள், பண்பாடு, சடங்கு, புகழ்மொழி என்னும் சிக்கல்களில் இருந்து விடுபடும் அளவிற்கு விழித்துக்கொண்ட்தனால் இன்று பணத்தால் பெண்களை விழுங்கும் போக்கு நிலவிவருகிறது. இதற்கு திரைத்துறை வெளிப்படையான எடுத்துக்காட்டாகிறது. நடிகைகளை பொம்மைகளைப்போல் தம் விருப்பப்படி ஆடைகளைக் குறைத்து இந்தச் சமுதாயத்தைச் சீரழிக்கும் கொழுத்த மனிதர்கள் இருக்கின்றனர்.  நடிகைகள் அக்கயவர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளதனை



        மனிதர்களில் மிருகங்களையே கண்ட வெறுப்பில்தான் நாய்களில்

        மனிதர்களைத் தேடுகிறீர்களா (நிரந்தர மனிதர்கள்-.132)



என்னும் அறிவுமதியின் நடிகைகள்குறித்த கவிதை வரிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. 



விழிப்பு நிலையில்



காலம் மாற்றம் சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது.  சமுதாய மாற்றத்தின் எழுச்சி பல்வேறு காலங்களில் இனம், மொழி, நிறம் ஆகியவற்றிலிருந்த ஏற்றத்தாழ்வுகளை களையும் முயற்சியாகவே அமைந்தது. அவ்வரிசையில் பெண்ணினுடைய நிலையினை ; திறத்தினை அறியும் முயற்சி எடுக்கப்படாமலே முடக்கப்பட்டிருந்தது. இந்தச் சிந்தனை இன்று வேர்விட்டு துளிர்த்து மரமாகியிருக்கிறது.       பெண்கள் தங்கள் கையில் ஆயுதம் ஏந்தாத காரணத்தால் ஏமாற்றும் நிலை தொடர்வதனை



செல்வப் பிள் ளாய் ! இன்று புவியின் பெண்கள்

                சிறுநிலையில் இருக்கவில்லை ; விழித்துக் கொண்டார்

கொல்லவந்த வாளை நீ குறை சொல்லாதே

                கொடுவாள்போல் மற்றொருவாள் உன்ம னைவி

மெல்லிடையில் நீகாணாக் கார ணத்தால்

                விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப்பெண் கள்மேல்

பொல்லாத மானிடனே மனச் சான்றுக்குள்

                புகுந்துகொள்வாய் ! நிற்காதே ! என்றேன்; சென்றான்

                (பாரதிதாசன் கவிதைகள் ப.97)



என்னும் பாவேந்தரின் எழுச்சியுற்ற பெண்கள்கவிதை வெளிப்படுத்துகிறது. இன்று பெண்கள் விழிப்படைந்து விட்டனர் எனப் பாவேந்தர் பாரதிதாசன் பாடி ஆணினத்தை அடக்கத்துடன் வாழ கற்றுக்கொடுக்கிறார். இங்கு தன்னுடைய திறமைக்கும் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப அவளால் ஒரு நிலைப்பாடு எடுக்கமுடியாத ஒரு நிலைமை இருந்தது / இருக்கிறது. இந்நிலைமை இன்று வெகுவாக மாறிவருகிறது. பெண், தன்னை உணர்கிறாள்; தனது இருப்பை உணர்த்துகிறாள். மாறிவரும் இந்நிலையை ஆணும் அறியத்தொடங்கியிருக்கிறான். நடைமுறையில் பெண்விடுதலை பற்றிய உணர்வு, சமூக எழுச்சியின் ஒரு பகுதியாகும். இந்தச் சூழ்நிலையில்தான் பெண்ணியம் உருவாகிறது என்னும் (தி.. (.218-219)) தி.சு.நடராசனின் கருத்து எண்ணத்தக்கது.



தன்மானம் இழப்பல்ல



ஒடுக்கப்பட்டிருக்கும் சூழல்களை உடைப்பது தான் பெண்ணியத்திற்கான அடிப்படைக் கொள்கை. இதனை குடும்பம், சமூகம், பொருளாதாரம் என்னும் மூம்முனைப் போராட்டக் களங்களாகக் கொண்டு பெண்ணியவாதிகள் செயல்படுகின்றனர். இம்மூன்று களங்களிலும் தனக்கான விடுதலையைப் பெறும் முயற்சியே பெண்விடுதலையாக அமைகிறது.



        திருமணத்திற்குப் பின் பெண்கள் அனைத்தையும் இழந்துபோகின்றனர். அந்த இழப்புக்குள்  நட்பும் அடங்கும். இதனை



        கணவர்களிடம் விடைபெற்று நண்பர்களிடம் வர- இந்த உலகம்

        இன்னும் கனியவில்லை                       (மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ப.58)



என்னும் மனுஷ்ய புத்திரனின் கசப்புகவிதை வெளிப்படுத்துகிறது. இதன்வழி, எல்லா செயலுக்கும் பிறரை எதிர்பார்த்து வாழும் புடவைக் கட்டிய குழந்தைகளாக பெண்கள் இருப்பதனையும் இந்தச் சமூகம் அச்செயலுக்கு சாமரம் வீசுவதனையும் கண்டு வருந்துவதனைக் காணமுடிகிறது.



தடைகளுக்கு விடை



        பெண் எதை எல்லாம் சொன்னால் இந்த சமூகம் திருந்துமோ அதையெல்லாம் சொல்லக்கூடாதென இந்தச் சமூகம் தடைவிதித்திருக்கிறது. ஆணுடைய நயவஞ்சகத்தை, சடங்குகளால் சிதைக்கப்பட்ட சரித்திரத்தை, வழக்கம் என்னும் பெயரால் வாழ்விழக்கவைத்த கொடுமையினை எல்லாம் சொல்லக் கூடாத சொற்களாக்கி விட்டது இச்சமூகம். தாய் தன் மகளிடம் கூட சொல்லமுடியாத பல கொடுமைகளை அனுபவித்துள்ள கொடுமையினை



எல்லாவற்றையும் பற்றியும் சொல்கிறேன் என் கதையைப் பற்றி

அவள் கேட்கும்போது மட்டும் ஒரு மூலைக்கு நழுவுகிறேன்

என் முழங்காலில் அவள் தூங்கும் வரை

(இராக்கிய கவிதைகள், தமிழில் நிர்மலா சுரேஷ் ப.86)



என்னும்  நிர்மலா சுரேஷின் கவிதை கடல்கடந்துவாழும் பெண்ணின் நிலையினை எடுத்துரைக்கிறது. இக்கவிதையின்வழி பெண்ணுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க சமுதாயம் பெண்ணுடைய வாய்திறக்காததனால் பாதுகாப்பாக இருப்பதனை உணரமுடிகிறது. இங்கு பெண்கள் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பது மட்டும் போதாது. தாங்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதைத் தாங்களே அறியாத நிலையில் அவர்களிருப்பதையும் அதன் காரணங்களையும் உணர்த்துவது மட்டும் போதாது. சமூக பொருளாதார பண்பாட்டுத் தளங்களில், பெண்களை மவுனங்களாக்கி, மிகச் சவுகரியமாக ஆடவர்கள் ஆதிக்க அரியணைகளில் அமர்ந்திருப்பதையும் காட்டவேண்டும். ஏனெனில், ஆண்களின் தன்னிச்சையான போக்கு என்பது பெண்ணடிமைத் தனத்தின் இன்னொரு நிலையாகும் என்னும் (தி..(.221)) தி.சு.நடராசனின் கூற்று எண்ணத்தக்கது.



நிறைவாக



பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா

பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா                        (பெண்மை,பா.1)



பெண்ணை வாழ்க என்று கூறுவதோடு அவர்கள் வெல்வதற்கான வழிமுறைகளுக்கும் துணைநிற்க வேண்டும் என மகாகவி பாடிய நிலையினை இன்று பல படைப்பாளிகள் கையெடுத்துள்ளனர்.



        சமூகத்தை விழிப்புடன் நோக்குபவனும் அதில் நிலவும் சிக்கல்களுக்குத் தன் எழுத்துக்களின்வழி தீர்வுகாண விழைபவனே படைப்பாளியாகிறான்.  என்பதனை இலக்கியங்கள் நிறுவியுள்ளன.



        காலத்தின் தேவைக்கேற்ப படைப்புகளின் பரிணாமங்களும் பரிமாணங்களும்  மாறிவருவது இயல்பு. எனவே இன்று பெண்ணியம் பேசாத படைப்புகளே இல்லை என்னும் அளவிற்கு பெண்ணியம் குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் எனத் தெளியலாம்.





*****************************************






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக