தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

தலையங்கத்தின் சுவடுகள் - Tamil Journalism - 2

தலையங்கத்தின் சுவடுகள் - Tamil Journalism - 2


        ”1921 –ம் ஆண்டு ஒரு பத்திரிகையில் இவர் எழுதிய தலையங்கங்கள் இவர் எப்படி நாட்டுப்பற்றோடு சமயக் கருத்துகளையும் குழைத்துக் கொடுத்தார் என்பதனை எடுத்துக்காட்டும். ’சகோதரிகளே ! சகோதரர்களே எதற்கும் அஞ்ச வேண்டாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை என்ற திருவாக்கு நமது தமிழ் நாட்டில் பிறந்ததன்றோ ? தமிழ் மக்களே ! எழுங்கள் ! அஞ்சாதேயுங்கள். பொன், பொருள், பூமி, காணி, மனைவி, மக்கள், உற்றார், பெற்றார் மீது கவலை வேண்டா. திடீரென மரணம் நேர்ந்தால் நம் உயிர்ச்சார்பும் பொருட் சார்பும் உடன் வருமோ ? எல்லாவற்றையும், எல்லாரையும் காக்க ஓர் ஆண்டவன் இருக்கிறான். அவன்மீது பாரத்தைச் சுமத்தி வந்தேமாதர முழக்கத்தோடுஅஞ்சாமைஎன்னும் ஞான வாளேந்தி எழுங்கள்.
        ஒத்துழையாமை இயக்கத்தில் தலைப்பட்டிருப்போர் உடல் பொருள் ஆவி மூன்றையும் கருதாது சேவை செய்ய முந்துதல் வேண்டும்.  . . . தம் பொருட்டு வாழ்ந்து இறப்போர் அடைவது நரகம். பிறர் பொருட்டு வாழ்ந்து இறப்போர் அடைவது மோட்சம். இவ்வுண்மை உணர்ந்தோர் தேச சுதந்திரத்துக்கு எவ்விதத் துன்பத்தையும் ஏற்க ஒருப்படுவர். தேசத்துக்காகச் சில துன்பங்களை ஏற்றே தீரல் வேண்டும். துன்பங்களுக்கு அஞ்சித் தேசத்தை மறப்பது பெரும் பாவம். (தமிழ்த்தென்றல் திரு.வி.. .23-24) என எழுதியுள்ளதனை டி.எம் சௌந்தரராஜன் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார். உயிரை விட நாடு பெரிதென அவர் ஊட்டிய நெஞ்சுரத்தை அவ்வளவு எளிதில் எவரும் நீக்கி விட முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தலையங்கம் கட்டமைக்கப்பட்டுள்ளதனைக் கண்டு மகிழலாம்.
குடியரசு
        பகுத்தறிவுப் பகலவன் சமூகக் காவலர் எனப்போற்றப்படும் ஈ.வெ.ரா 1925 மே 24 ஆம் நாள் இவ் இதழைத் தொடங்கினார். சமதர்மம் (1934), பகுத்தறிவு (1935) புரட்சி (1934) ரிவோல்ட் (1928) உண்மை (1970). விடுதலை இதழைத் தன்மான இயக்க நாளிதழாக மாற்றினார். அவருடைய ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பேச்சும் சமூக நீதிக்கான விதைகளாகவே அமைந்தன.
        குடியரசு இதழின் தொடக்கத்தில் ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். அதை அறவே விடுத்து வெறும் தேசம் தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று என்றும் மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும் என்றும் உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ் வுணர்ச்சி ஒழித்து அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்” (தமிழ் இதழியல் சுவடுகள் ப.163) என மா.சு. சம்பந்தன் குறிப்பிடுகிறார். இத் தலையங்கத்தின் நாட்டு விடுதலையை சமூக விடுதலைக்கு முக்கியத்துவம் அளித்த பெரியாரின் சிந்தனையைக் காணமுடிகிறது.
        அரசியல் நிலைகளையும்  தாம் எதிர்கொண்ட போராட்ட நிலைகளையும் தலையங்கமாக வடித்தார் பெரியார். “சிறுபான்மையினரின் முன்னேற்றத்தைக் கண்டு கல்வி கற்ற பிராமணரல்லாதாரிடையே ஒருவகை விழிப்புணர்ச்சி தோன்றி பி. தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் முயற்சியில் 1916 ஆம் ஆண்டில் பொதுவாக ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்பட்ட நீதிக்கட்சி உருவெடுத்தது (முதல் நாளிதழ்கள் மூன்று ப.62) என்னும் செய்தி தலையங்கமாக  குடியரசு (18.10.1925) இதழில் வெளிவந்தது. இத் தலையங்கத்தின் வழி ஒரு கட்சியின் பின்னணியினைக் கூறி தமது தொண்டர்களுக்கு விழிப்பூட்டிய நிலையினையும் காணமுடிகிறது.
ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம்
        புதுவை முரசு (வாரம்) , ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் (திங்கள்), குயில் (புத்தகம், பெயர்ப்பன்னூல், திங்கள், தினசரி, கிழமை, திங்களிருமுறை) எனப் பல இதழ்களை நடத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தர் பாரதிதாசன் 1935 ஆண்டு ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம். என்னும் இதழைத் தொடங்கினார். இதில் தலையங்கமாகக் கவிதைகளும்  இடம்பெற்றுள்ளன.

                தனிமைச் சுவையுள்ள சொல்லைஎங்கள்
                தமிழினும் வேறெங்கும் யாங் கண்டதில்லை

என்ற வரிகளும்

        பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெல்லாம்
        கூடித்தொழில் செய்யும் கொள்கையினால் தோழர்களே !
        வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
        கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே

என்ற வரிகளும்

        வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீர்ங்கொள் கூட்டம் ! அன்னார்
        உள்ளத்தால் ஒருவரேமற் றுடலினால் பலராய்க் காண்பார்
        கள்ளத்தால் நெருங்கொணாதே? எனவையம் கலங்கக் கண்டு
        துள்ளும்நாள் எந்நாள் உள்ளம் சொக்கும்நாள் எந்தநாளோ?

என்ற வரிகளும் தலையங்கக் கவிதைகளில் கவிதா மண்டலத்தில் வெளிவந்துள்ளது (இலக்கிய இதழ்கள் ப.26) எனக் க.சந்திரசேகரன் குறிப்பிடுகிறார். இவ்வாறு மக்களுக்கு உணர்ச்சியூட்டும் வகையில் தலையங்கக் கவிதை வடித்த பாவேந்தர் சூழலுக்கேற்றவாறு உரைநடையிலும் உணர்வூட்டிய நிலையினையும் காணமுடிகிறது. ”வாளேந்து மன்னர்களும்  மானியங்கொள் புலவர்களும், மகிழ்வாய், தாளேந்திக் காத்த நறுந்தமிழ் மொழியைத் தாய் மொழியை ஏந்திக் காக்குநர் யார் ? நண்ணுநர் யார் ? என அயலார் நகைக்கும் போதில் தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க எனவும் தமிழ்க்கவியில் உரைநடையில் தனிப்புதுமைச் சுவையூட்டம் தந்து சந்த அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில், நற்காதல் ஆழம் காட்டித் தமைத்தாமே மதியாத தமிழர்க்குத் தமிழறிவில் தறுக்குண்டாக்கிச் சுமப்பரிய புகழ் சுமந்த சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க” ( தமிழ் இதழியல் சுவடுகள், .134) என்று தலையங்கம் எழுதியுள்ளதனைச் சுட்டிக்காட்டுகிறார் டாக்டர் மா. அண்ணாதுரை.  உரைநடையில் கவிதைத் தொனியும், கவிதையில் உரைநடைத் தொனியும் தோன்றும் வகையில் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் தலையங்கம் எழுதியவர் பாவேந்தர் எனத் தெளியலாம்.

திராவிட நாடு

        பேரறிஞர் அண்ணா நா வன்மை நாடாண்டாதாகத் தான் உலகம் அறியும். ஆனால் அவருடைய தலையங்கங்களுக்கு அவரைத் தலைவராக்கியதில் முக்கியப் பங்குண்டு என்பதற்கு அவருடைய இதழ்ப்பணிகளே சான்றாகின்றன. 1936 இல் பாலபாரதி 1937 இல் நவயுகம், 1938 இல் விடுதலை 1942 இல் திராவிட நாடு (வாரம்) 1949 இல் மாலைமணி 1953 இல் நம்நாடு 1958 இல் ஹோம் லாண்ட் 1963 இல் காஞ்சி 1966 இல் ஹோம் ரூல் என அவருடைய இதழாசிரியர் பணி தொடர்ந்தது.

        காற்றடிக்குது கடல் குமுறுது. கப்பலும் பிரயாணம் தொடங்கிவிட்டது ! இருண்ட வானம், சுருண்டு எழும் அலைகள், மை இருட்டு, ஆனாலும் பிரயாணம் நடந்தே தீர வேண்டும் ! கொந்தளிப்பிலும் கப்பல் சென்றுதானாக வேண்டும். கடமை அழைக்கும்போது காலத்தினால் விளையும் கஷ்டத்தைச் சாக்காகக் கூறித் தப்பித்துக்கொள்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே கொந்தளிப்பு மிக்க இவ்வேளையில்திராவிட நாடுதமிழர்க்குப் பணியாற்றப் புறப்படுவதற்காகத் தமிழர் அமைதியும் ஆனந்தமும் குடிகொண்ட காலத்தில் ஆதரிக்கும் அளவை விடச் சற்று அதிகமாகத் தமது ஆதரவை, ‘திராவிட நாட்டுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”- என்று அண்ணாகொந்தளிப்பில்என்ற தலைப்பில் தமதுதிராவிட நாடு (8-3-1942) முதல் தலையங்கத்தின் முதல் பகுதியில் குறித்துள்ளார் (தமிழ் இதழியல் சுவடுகள் ப.176) என சம்பந்தனார் குறிப்பிட்டுள்ளதன் வழி தலையங்கத்தின் வலிமையினையும் அண்ணாவின் சொல்லாற்றலையும் அறியலாம்.

        ஒரு வலிமையான அணியை (ஆட்சியை) நீக்க வேண்டுமானால் அதற்கு எவ்வளவு வலிமையாகப் போராடவேண்டும் என்பதனைத் தம் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறார். இதற்கு உடல் வலிமை மட்டும் போதாது மன வலிமை தான் முதல் தேவை என்பதனை அறிவுறுத்தும் வகையில் தலைப்பாககொந்தளிப்புஎன வைத்துள்ள அருமையினையும் காணலாம். இதன் வழி தமிழருக்கு நேரும் துன்பத்தைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாது என ஒவ்வொருவரையும் கொந்தளிக்க வைத்து திராவிட ஆட்சியினை நிலைநாட்டிய பேரறிஞரின் அண்ணாவின் பெருமையினை இத் தலையங்கத்தின்வழி அறியலாம்.
தினத்தந்தி
        தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் (1905-1981) மதுரையில் தினத்தந்தி இதழின் முதல் பதிப்பினைத் (1942 நவம்பர் திங்களில்) தொடங்கினார். இன்று படிப்படியாக தமிழகமல்லாத பகுதிகளிலும் பதிப்பிக்கும் இதழாக வளர்ந்து விட்ட பெருமைக்குரிய இதழாகத் திகழ்கிறது. ”1940 களில் இந்தியாவில் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு நாளிதழை வாசகர்களுக்கு அளித்த பெருமை தினத்தந்திக்குரியது. பிற மொழிகளில் நாற்பதாண்டுகளுக்குப் பின்னரே நடந்த இத்தகைய முயற்சிகளுக்குத் தினத்தந்தியே முன்னோடி. (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 21)” என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது. இவ்வாறு அனைத்து மொழிகளுக்கும் முன்னோடியாகத் திகழும் தமிழ்ப்போல இதழியல் வரலாற்றில் பிற இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது தினத்தந்தி என்பதனை அறியலாம்.
        எளிய நடைக்கு உரிய இதழாக மட்டுமின்றி  தாளின் தேவைக்கும்  பிறரை எதிர்பாராது தாங்களே உற்பத்தி செய்துக்கொண்ட பெருமைக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது தினத்தந்தி. இதனைத்தினத்தந்தி தனக்கெனக் காகிதத்தைத் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டமை தமிழ் இதழியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். 1962 இல் தினத்தந்தி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரிய நாயகிபுரத்தில் சன் காகித ஆலையை நிறுவியது (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 20)” என்னும் கூற்று உறுதிப்படுத்துகிறது.
        எளிய மக்களும் படித்து மகிழும் வகையில் எளிய நடையில் அமைந்த இதழாக இருந்ததனாலேயே அனைவரையும் சென்றடைந்தது. படிக்காதவரும் இவ் இதழின் வழி படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்ட பெருமையும் இவ் இதழுக்குண்டு. ”பத்திரிகை என்பது இலக்கியமல்ல. அதனை அவசர அவசரமாகப் படிக்க வேண்டியுள்ளது எனவே அதன் மொழிநடை கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் சி.பா. ஆதித்தனார் உறுதிப்பாட்டுடன் இருந்தார். தலையங்கத்திற்குத் தனிநடையும் செய்திகளுக்குத் தனி நடையும் வகுத்த அவரது செயல் மிகப் புதுமையானது. (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 29) என சசிகலா குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது. இந்த எண்ணமே தினந்தந்தியினை எளிய மக்கள் அனைவரும் தம் இதழாக எண்ணிப் போற்றும் நிலைக்கு வழிவகுத்தது.
        தலையங்கம் என்பது எளிமைக்கானது அன்று. அது அருமைக்குரியது. எனவே ஆசிரியர் அதற்குப் பொறுப்பேற்கிறார். தலையங்கம் நாளிதழின் உயிர்நாடியாக இருப்பதனால் அதில் கருத்துப்பிழையோ இலக்கணப்பிழையோ ஏற்படாத வகையில் அமைதல் வேண்டும் என அறிவுறுத்துகிறார் தமிழ் இதழியல் முன்னோடி ஆதித்தனார்.  அவர் கூறிய கூற்றின்வழி இன்றும் எளிய மக்களுக்குரிய வகையில் செய்திகளும் உலக நடப்புகளை அறிந்துகொள்ள விழையும் மக்களுக்குரியதாக தலையங்கமும் வெளிவருவதனைக் காணமுடிகிறது. 
        மதமாற்றம் உலகளவில் மறைவாகவும் வெளிப்படையாகவும் நடந்துவரும் நிலையினை தலையங்கப்பொருளாக எடுத்துக்கொண்டுள்ளதற்கு பின்வரும் தலையங்கம் எடுத்துக்காட்டாகிறது. “இந்தியாவில் சிறுபான்மை மதத்தினர் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எவ்வளவோ சலுகைகள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்ப்பதற்காக இந்தியா நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்குள்ள இந்து மதத்தினரும் கிறிஸ்தவ மதத்தினரும் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரும் படும்பாடுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகளைக் கேட்டால் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. இவர்களை எல்லாம்கபீர்கள்அதாவது இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில்தான் பாகிஸ்தான் வைத்துள்ளது.  இதைவிட பெரிய கொடுமைஇந்து இளம் பெண்களும் கடத்தப்பட்டு அவர்கள் இஸ்லாம் தழுவ வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி அவர்களை மதம் மாற்றி முஸ்லிம் இளைஞர்களுக்கு திருமணம் நட்த்தி வைக்கிறார்கள். சமீபத்தில் ரிங்கள் குமாரி, டாக்டர் லலிதா குமாரி ஆஷாகுமாரி ஆகிய 3 இந்து பெண்கள் கடத்தப்பட்டு முஸ்லிம்களாக மாற்றப்பட்டு இஸ்லாமிய இளைஞர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களின் பெற்றோர் தங்கள் மகள்களை மீட்டுத் தர வழக்குத் தொடர்ந்தனர். அந்தப் பெண்களும் கோர்ட்டில் வந்து கண்ணீர்விட்டுக் கதறி எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எங்கள் பெற்றோருடன் போக விரும்புகிறோம் என்று கெஞ்சினர். ஆனால் நீதிபதிகள் அந்தப் பெண்களைக் காப்பகத்திற்கு அனுப்பிவிட்டனர். . . .
        ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் 800 கிறிஸ்துவப் பெண்களும் 450 இந்து பெண்களும் கடத்தப்பட்டு கட்டாயம் மதம் மாற்றப்படுவதாக செய்திகள் வருகிறது. இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இழைக்கப்படும் கொடுமை யாருக்கும் கேட்கவில்லையா ? அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள் ? இந்து கிறிஸ்துவ அமைப்புகள் கொதித்து எழ வேண்டாமா ? மத்திய அரசாங்கம் தீர விசாரித்து பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து இதுபோல் இனி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க சர்வதேச அமைப்புகளிடம் புகார் செய்திருக்க வேண்டாமா? என்பதுதான் மக்களின் ஆழ்மனதில் இருந்து வெளிவரும் கவலை தோய்ந்த குரல் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் (தினத்தந்தி 28.04.2012) என்னும் தலையங்கப்பகுதி இன்றும் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் பாகிஸ்தானின் கொடுமையினை உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதனைப் படம்பிடித்துக்காட்டுகிறது. எந்த மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் ? எந்த அரசு அதற்கு ஆவன செய்ய வேண்டும் ? எந்த அரசு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது ? யார் ஏமாந்துக் கொண்டிருக்கிறார்கள் ? அதற்குரிய தீர்வென்ன ? என அனைத்தையும் தலையங்கத்தில் உள்ளடக்கிய சிறப்பினை இத் தலையங்கத்தின் வழி அறியலாம்.

தமிழ் முரசு
        சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் தமிழ் முரசு  இதழ் 1946 ஆம் ஆண்டு மே மாதம் புத்தகம் என்னும் பெயரில் வெளிவந்தது. “தமிழ் முரசு பத்திரிகை என்ற பெயரால் முதன்முதலில் வராமல்புத்தகம் எனும் பெயரால் வெளிவரவேண்டியதாயிற்று. ஏன் எனில் அக்காலத்தில் காகிதப் பஞ்சம் காரணமாக, புதிதாகப் பத்திரிகை தொடங்குவதற்குப் பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கவில்லை. மாதம் ஒரு புத்தகம் எனும் பெயரில் பத்திரிகை பற்றிய அறிவிப்பும் நியூஸ் பிரிண்ட் பேப்பரும் இல்லாமல் நடத்தும் ஒரு வழி பின்பற்றப்பட்டது” (இலக்கிய இதழ்கள் ப.92) எனப் பெ.சு. மணி குறிப்பிடுகிறார். இதன்வழி எவ்வகை இடர்ப்பாடு நிகழ்ந்தபோதும் இதழ் தொடங்குவதில் இருந்த நாட்டம் குறையாது செயல்படுத்திய சிலம்புச்செல்வரின் கொள்கை உறுதியினை எண்ணி மகிழலாம்.
        தலையங்கம் அன்றாடச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதாக அமைதல் வேண்டும். மக்கள் மனதில் புலம்பும் புலம்பல்களுக்கு விடை காண்பதாக அமைதல் வேண்டும். இவ்வாறு தேசியகீதம் குறித்த எண்ணங்களை தலையங்கம் ஆக்கினார் ம.பொ.சி.  தமிழகத்தைப் பொறுத்தவரையில் எந்தப் பாடல் தேசிய கீதமாவதானாலும் அதைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடச் செய்ய வேண்டும். அப்போதுதான் பாட்டின் கருத்தை, மக்கள் புரிந்து கொள்ளமுடியும் புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியில் தேசிய கீதத்தை உருப்போட்டு ஒப்புவிக்கச் செய்வதால், யாருக்கும் தேசபக்தி வந்துவிடாது. சென்னை அரசாங்கத்தார் இதைப் பற்றிச் சிந்தித்து ஆவன செய்வார்கள் என்று நம்புகிறோம்” (இலக்கிய இதழ்கள் ப.110) என்னும் 12.09.1948 இல் வெளியானதமிழில் தேசிய கீதம்என்னும் தலையங்கக் கட்டுரை புதுமையானதாகவும் புரட்சிகரமானதாகவும் அமைந்ததாகக் குறிப்பிடுகிறார் பெ.சு.மணி. நாட்டுப்பண்ணை பொருள் புரிந்து படித்தால் ; பாடினால் நாட்டுப்பற்றினை வளர்க்க முடியும் என்னும் கருத்தினைத் தலையங்கத்தில் பதிவு செய்துள்ளமையை இங்கு எண்ணி மகிழலாம்.  தேசிய கீத்த்தைப் பாடுவோர் அதன் பொருள் புரியாமலே அழகாகப் பாடி வருகின்றனர். இதன் பொருளை உணர்ந்து குழந்தைகள் பாடினால் ஒவ்வொரு குழந்தையும் தேசப்பற்றுடன் வாழமுடியும் என்னும் கருத்தினை அன்றே பதிவு செய்துள்ள அருமையினைக் காணமுடிகிறது.
தின மலர்
        டி.வி. ராமசுப்பையர்(1908-1984) அவர்களின் முயற்சியால் உருவான இந்த இதழ் 06.09.1951 இல் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. இதழ் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பதனை உணர்ந்தவர்களே இதழைத் தொடங்கினர். ஏனெனில் பிரச்சினைகளை எதிர்க்கொண்டாலொழிய பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது என்பதனை உணர்ந்திருந்தனர். அவ்வரிசையில் டி.வி.எஸ் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. பிறமொழி பேசும் மாநிலத்திலேயே தமிழ் நாளிதழைத் தொடங்கி வெற்றிகண்டவர் அவர். ”தொடக்கக் காலத்தில் தினமலர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வெகுவாகப் போராடி உள்ளது. மலையாள மொழி பேசும் நாட்டில் தொடங்கப்பட்ட இத்தமிழ் நாளிதழ் அச்சுக்கோர்ப்பவர்களுக்காக மிகுதியும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது” (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 33) என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
        மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்      உலகச் செய்திகளைக் காட்டிலும் உள்ளூர் செய்திகள் முக்கிய இடம் பெறும் என்பதனை உணர்ந்து செயல்பட்டது தினமலர். எனவே எளிதில் மக்களைச் சென்றடைந்தது. ”சுதந்திரத்திற்குப் பின் தோன்றி மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ள தமிழ் நாளிதழ் தினமலர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமலரைப் பற்றிக் குறிப்பிடுகையில் எஸ்.எஸ். சோமையாஜீலு என்னும் இதழாளர்கவர்ச்சிச் செய்திகள் பரபரப்பான செய்திகள் இவையே பத்திரிக்கையின் இலக்கணம் என்று இருந்த காலத்தில் வட்டாரச் செய்திகள், வட்டார மக்களுடைய குரல், தேவைகள், கோரிக்கைகள், வளர்ச்சி இவையே செய்திகள். இவற்றுக்கும் கவர்ச்சியுண்டு என்று மக்களுக்கு ஒரு கல்வியைத் தந்து ருசியை உருவாக்கித் தினமலர் வளர்ந்தது என கடல் தாமரை என்னும் நூல் குறிப்பிடுகிறது. (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 32)
        தினமலர் தனது முதல் தலையங்கத்தில்டி.வி.ஆர். ஜன சமூகம் இன்னல்கள் நீங்கி இன்பநிலை அடைவதற்கு எமது சக்திக்கு இயன்ற அளவு தொண்டாற்றும் ஒரே நோக்கத்துடன் தினமலர்ப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறோம் என்று குறிப்பிடுகிறார்.” (கடல்தாமரை ப.86)  இக்கூற்றின் வழி மக்களுக்குத் தொண்டாற்றும் வகையில் செயல்படுவதே இதழியல் அறம் எனத் தலையங்கத்திலேயே கூறியுள்ளதனைக் காணமுடிகிறது.
தமிழ்ச்செல்வி
        தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அறிவுப்பசியாறும் வகையில் உருவான இவ்விதழ்        1960 ஆம் ஆண்டு இலக்கியத் திங்கள் இதழாக வெளிவந்தது. “ இவ்விதழ் 87 வைசியர் தெரு, புதுச்சேரி என்ற முகவரியிலிருந்து வெளிவந்துள்ளது. இவ்விதழின் உரிமையாளராகவும் பதிப்பாசிரியராகவும் திரு. திவ்வி சந்தனசாமி என்பவர் விளங்கி உள்ளார்” (இலக்கிய இதழ்கள் ப.256).
        தமிழர்கள் தமிழில் சிந்திக்க வாய்ப்பின்றி பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவானபோதே தமிழர்கள் தங்களை உயர்பதவிகளிலிருந்து ஒதுக்கிக்கொள்ளும் நிலை தொடங்கிவிட்டது. ”நாட்டின் நல்லறிஞர் கருத்துரைகளைத் தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்தம் மனநிலையை வளர்க்கவும் அவரைத் தனித்துச் சிந்திக்கவும், செயல்படவும் தூண்டுவதுடன் நற்றமிழ் வழக்கு மக்களிடையே வழங்கச் செய்வதும் தமிழ்ச்செல்வியின் முதல் கடமை. அவற்றிற்கான எல்லாத் தொண்டினையும் தமிழ்ச்செல்வி மேற்கொள்வாள்” (இலக்கிய இதழ்கள் ப.257) எனக் கூறியுள்ளதனை இளங்கோவன் எடுத்துக்காட்டியுள்ளார். இத்தலையங்கம் இந்நாளுக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது. பள்ளியில் நன்கு படித்த முதல் வகுப்பில் தேறிய மாணாக்கர் பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் படிக்க இயலாமல் தற்கொலை செய்துக் கொள்ளும் அவலம் இன்றும் செய்தியாகின்றன. இதற்குக் காரணம் தமிழர்கள் தமிழில் கற்க வாய்ப்பில்லாது போனதே என்பதனை இங்கு எண்ணவேண்டியுள்ளது.
தீபம்
        குறிஞ்சி மலரால் குளிரூட்டிய நா.பார்த்தசாரதி அவர்களால் 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் வெளிவந்த திங்கள் இதழ் தீபம். தீபத்தின் ஒளி தமிழகத்தில் பரவியதால் இவர் தீபம் நா.பா. என்றே இலக்கிய ஆர்வலர்களால் அழைக்கப்பட்டார்.
        நா.பா. தீபம் இதழின் இரண்டாவது தலையங்கத்தில் இவ் இதழுக்காகத் தாம் உழைத்து வரும் அருமையினைமெய் வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கண் துஞ்சாமல் எவ்வெவர் தீமையும் போட்டியும் பொறாமையும் பாராமல் கருமமே கண்ணாக நான் என்தீபத்தைமேலும் மேலும் நன்றாகப் பிரகாசிக்கச் செய்யும் காரியங்களைச் செய்து விடாப்பிடியாக முயன்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இன்றும்இனி என்றும் இது ஒரு நோன்புதவம்” (இலக்கிய இதழ்கள் ப.276) எனக் கூறியுள்ளதனை எடுத்துக்காட்டுகிறார் சுப்புலட்சுமி இராசமுருகன். ஒவ்வொரு இதழாசிரியரும் தமிழர் நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதற்காகவே தம் வாழ்வை முழுதும் அர்ப்பணித்துக்கொண்ட நிலையினை இத் தலையங்கத்தின் வழி அறியலாம்.
நிறைவாக
        தலையங்கங்கள் மக்களின் வழித்தடத்தைச் செதுக்கிச் செம்மையாக்கியதில் முக்கிய இடம் பெற்றுள்ளதனைக் காணமுடிகிறது. தமிழ் மக்களின் நெஞ்சத்தில் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் விதைப்பதிலேயே தலையங்கங்கள் கண்ணும் கருத்துமாய் இருந்ததனை அறிந்துகொள்ளமுடிகிறது. ஒவ்வொரு இதழாசிரியரும் தமிழ்மக்களின் நலனில் ஈடுபாடு கொண்டு  எழுதப்பட்ட தலையங்கங்கள்தான் நாட்டுவிடுதலைக்கும் சமூகவிடுதலைக்கும் துணைநின்றன எனத் தெளியலாம்.
******************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக