தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கடவுளுக்கு உங்களைப் பார்க்கவேண்டுமே

 


கடவுளுக்கு  உங்களைப் பார்க்கவேண்டுமே

“யாராவது காப்பாத்துங்க” எனச் சொல்லி முடிப்பதற்குள் மூழ்கி விடுகிறான் ஒரு சிறுவன் அவனுடன் விளையாடியவன் திரும்பிப்பார்ப்பதற்குள் கைமட்டும் ஆடிக்கொண்டிருந்தது. உடனே மற்றொருவன் அந்தக் கையைப் பிடித்துவிட்டான். ஆனால் அவனையும் இழுத்துவிட்டான் முதலில் மூழ்கியவன். மூன்றாவது ஒருவன் கைகொடுக்க, அவனும் உள்ளுக்கு இழுக்கப்பட்டான். கடைசியாக இவர்கள் மூவர் விளையாடுவதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கையைக்கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து இழுத்தான். ஒவ்வொருவருவராய் வெளியில் வந்தார்கள். முதலில் சென்றவன் மயங்கிக்கிடந்தான். தண்ணீர் தெளித்து கன்னத்தில் தட்டி வயிற்றை அழுத்தி போனஉயிரை ஒரு சிறுவன் கொண்டுவந்துவிட்டான். ஒருவர்பின் ஒருவர் மூழ்கினாலும் ஒருவர் மற்றொருவரை விடாமல் இருந்ததுதான் ஒவ்வொருவரும்செய்த புண்ணியம். கடைசியில் இருந்த சிறுவனை அனைவரும் தெய்வமாகவே பார்த்தார்கள். ஆம், அந்த நான்கு சிறுவர்களும் வெளியூரிலிருந்து கோவிலுக்கு வந்தவர்கள்.

கோயிலுக்குப்பக்கத்தில் வயல்வெளி. கொஞ்சமாக சேற்றுநிலத்தில் தண்ணீர். தாய் தந்தை செல்லவேண்டாம் எனக் கூறினாலும் கேட்காமல் சென்றனர். அங்கு மகிழ்ச்சியாக விளையாடியபோது நடந்த நிகழ்வுதான் இது. அந்நிகழ்வுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால்தான் அந்தக்கோவிலில் கூழு கொடுத்தார்கள். கூழினை விரும்பாது மூவர் ஓடிப்போனார்கள். சிறுவன் மட்டும் கூழ் குடித்தான். அதனால், அம்மன் அருள்தான் இந்தச்சிறுவனாக வந்து எங்களைக் காப்பாற்றியது எனத் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடினர். தாயும் தந்தையும் காப்பாற்றிய சிறுவனுக்கு கண்ணேறு கழித்தனர். சென்றவாரம் நடந்த நிகழ்வு இது.

 “கோவிலுக்குச் சென்று வா” எனப் பெரியோர்கள் கூறினாலும் இளையோர்கள் “நான் வரல” என்கிறார்கள். என்ன செய்வது? பெற்ற பாவத்திற்காக பெற்றோரே கோவிலுக்குச் சென்று பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என அர்ச்சனை செய்கின்றனர். உள்ளத்தை மென்மையாக மாற்றும் கலை பக்திக்குத்தானே உண்டு. மகிழ்ச்சி வெளியே கிடைக்கும் பொருளா? உள்ளிருந்து வருவதுதானே மகிழ்ச்சி.  உணர்வுகள் எத்தனை அருமையானவை. அதனை இன்று இளைஞர்கள் கைப்பேசிகளிடம் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். எப்போதாவது அவர்கள் மன அமைதியுடன் இருப்பதைக் காணமுடிகிறதா? எப்போதும் கைப்பேசியில் பதற்றத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது கண்ட நிகழ்ச்சிகளைக்கண்டு மனதைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களை மாற்றவேண்டியது பெரியோர்கடமைதானே.

உடைமைகளும் பதவிகளும் பெறுவதற்காக உழைப்பவர்கள்கூட மன அமைதிக்காகக் கோவிலுக்குச் செல்வதனைக் காணமுடிகிறது. எனவே, நாள்தோறும் கோவிலுக்குச்செல்லவேண்டும். நடைபயிற்சியும் மனப்பயிற்சியும் நலம்தரும். எல்லா உயிரினங்களையும் விட அழகாக, அறிவாக மனிதனைப் படைத்த கடவுளுக்கு நன்றி கூற வேண்டாமா? நன்றியுணர்வுக்காக இன்னொரு இனிய நிகழ்ச்சி ஒன்றைக் கூறட்டுமா?

ஒரு யானை பள்ளத்தில் விழுந்து எழமுடியாமல் தவிக்கிறது. அந்தப்பக்கம் பொக்லைன் எந்திரம் ஓட்டிவந்த ஒருவர் யானை தவிப்பதைப் பார்க்கிறார்.  கை போன்ற அள்ளும் அந்த கருவியை பின் பக்கமாகத் திருப்பி யானையின் பின்னேமுட்டி தூக்கிவிடுகிறார். யானை மேலேறிவிடுகிறது. மேலேறி வந்தயானை உடனே அந்த இடத்தைவிட்டுப்போய்விடவில்லை. யானை அந்த எந்திரத்தை திரும்பிவந்து முட்டி அன்பை வெளிப்படுத்துகிறது. யானை எப்படி தலையை ஆட்டுமோ அந்த பொக்லைன் ஓட்டுநரும் அந்தக்கருவியை ஆட்டுகிறார். என்ன அருமையான நிகழ்ச்சி. இதுவும் யாரோ படம்பிடித்த அருமையான நிகழ்வுதான். நன்றியுணர்வுக்கு இதனைக் கூறலாம்தானே?

     பாரா ஒலிம்பிக் என்னும் ஒரு போட்டி. மாற்றுத்திறனாளிக்காக நடைபெறும்போட்டி. இதில் எத்தனைத்துணிவுடன் போட்டி போடுகிறார்கள். அனைத்து உறுப்புகளையும் இயல்பாகக் கொண்டவர்கள் சிலர் சோம்பலால் தண்ணீர் கூட எடுத்துக்கொடுக்க பிறரை அழைப்பர். இந்நிகழ்வை வீடுகளில் பார்க்கலாம்தானே. எனவே, கடவுளுக்கு நாளும் நன்றி கூறும் பழக்கத்தினை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்

     கோயிலுக்கு எதற்குப் போகவேண்டும். கோவிலுக்குச் சென்று நீங்கள் இறைவனைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அன்று. கடவுளுக்கு உங்களைப்பார்க்கவேண்டும் எனத்தோன்றும்தானே.

     உங்களுக்காக மட்டுமே நீங்கள் படைக்கப்படவில்லை. எத்தனைபேர் உங்களால் பயன்பெறவேண்டியிருக்கும் என அறிவீரா? ஒரு சிலர் இலட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள், பலர் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள். இன்னும் பலர் நூற்றுக்கணக்கான ; பத்துக்கணக்கான மக்களுக்கு வேலைகொடுக்கிறார்கள். ஏன் ஒருவரை வாழவைத்தாலும் அது எவ்வளவு பெரிய பெருமை. அப்படி சிலர் வேலை கொடுப்பதற்காகப் பிறந்திருப்பார்கள் ; சிலர் வேலை செய்யப் பிறந்திருப்பார்கள். இருவரும் பெருமைக்குரியவர்கள்தான். கடவுள் யாருக்கு என்ன கடமை கொடுத்திருக்கிறார் என்பதை உணரமுடியாதே !

     குளத்தை வெட்டினால் மழைநீர் தேங்கும். குளம் கட்ட வேண்டிய இடத்தில் மணலை அள்ளிவிட்டாலோ, வீடுகட்டி விட்டாலே மழைநீர் என்னாகும்?. அதுபோலத்தான், கடவுளின் கருணை. ஏற்றுக்கொள்ளும் வகையில் கருணையோடு வாழவேண்டும். எப்போது யாருக்குக் என்ன கிடைக்கும் எனக் கூறமுடியாது. எவர் வழியாவது நன்மை நிகழும். அந்த ஒருவர் நீங்களாகக் கூட இருக்கலாம்தானே.

     அனைத்து உயிர்களும் கடவுளின் படைப்பு என்பதனை உணர்ந்தாலே கடவுள் உங்களை கவனிக்கத்தொடங்குவார். ஆனால் உண்மையான கருணையாக இருக்கவேண்டும். யாரேனும் ஏழையைப் பார்த்து ‘உச்’ கொட்டிவிட்டு கார் கண்ணாடியை மேலேற்றிவிட்டு படம்பார்த்துக்கொண்டு செல்வதில்  என்ன இருக்கிறது. துளியேனும் பயனுண்டா. அப்படி பலபேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் படித்த ஒருநிகழ்வைக் கூறினால் நீங்களே வியப்பீர்கள்.

     ஒரு வடை விற்கும் சிறுவன் தொடர்வண்டியில் ஏறினான். (சமோசா நம் உணவன்று என்பதால் வடைக்கு மாற்றிவிட்டேன்) அவனைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த இளைஞன் பக்கத்தில் அழைத்தான். “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகிறாயே. என்னைப்போல் படித்திருந்தால் மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பாதிக்கலாமே” எனக்கேட்டான். உடனே அந்த சிறுவன் “நானும் படித்திருக்கிறேன். இந்த வேலை பிடித்திருப்பதால் செய்கிறேன்” என்றான். “சரி! ஒரு நாளைக்கு எத்தனை வடை விற்பாய்?” எனக் கேட்கிறான் இளைஞன். “ஒரு வண்டிக்கு இருநூறு வடை விற்றுவிடுவேன். ஒரு நாளைக்கு இருபதுவண்டி. நாலாயிரம் வடை விற்றுவிடுவேன்” என்றான். “அப்படியா ! என வாயைப்பிளந்துமூடி “எவ்வளவு பணம் இலாபம் கிடைக்கும்” எனக் கேட்கிறான். “ஒரு வடைக்கு ஒருரூபாய்” என் முதலாளி கொடுப்பார் எனச்சிறுவன் கூற இளைஞன் “நான்தான் சிறுவனிடம் பாடம் கற்க வேண்டும்” என நினைக்கிறான். வெற்று சொற்களை மட்டுமே சொல்வதை விட்டுவிட்டு முடிந்த செயலை ஆற்றுவதில்தான் பெருமை இருக்கிறது என்பதனை கூறாமல் கூறிச்செல்கிறான் சிறுவன்.

“நம்மால் இது முடியுமா? முடியாது” என அந்தச் சிறுவன் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கடவுளின் கணக்கினை அறிவார் யார்?

 

 

 

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

இந்தியா உலகுக்கு வழிகாட்டும்

 


உலகுக்கு வழிகாட்டும் இந்தியா

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் அடிதடிதான். ஆனால், இங்குமட்டும் அமைதியாக வாழமுடிகிறதே எப்படி? இதுதான் புண்ணியபூமி. எண்ணிப்பாருங்கள் நமது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாடம் அப்படி.

     வீரச்சிறுவர்களுக்கு விருதளிக்கும் விழா நடந்துகொண்டிருக்கிறது.  விருதுவாங்கவந்த குழந்தைகளைக்கண்டு விருதளிக்கும்விழாவிற்கு வந்தோர் வியப்படைந்தனர். யார் இவர்கள் எலும்பும் தோலுமாய்? என கேட்டபோதுதான் தெரிந்தது. அந்தக் குழந்தைகள், ஏரியின் நீரைக் கடத்திச்செல்ல செய்யப்பட்ட குழாய்களையே வீடாகக் கொண்டவர்கள் என்பது. இவர்களுக்கு ஏன் வீர விருது.  அந்த சின்ன வட்டத்திற்குள் இவர்கள் வாழ்க்கை வட்டம் அமைந்துள்ளதே அதற்காகவா? என்றுதானே கேட்கிறீர்கள். இல்லை. அப்படியென்றால் விருதுக்கு ஆயிரக்கணக்கானோர் தகுதியாகிவிடுவார்கள். சுனாமி வெள்ளத்தின்போது வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மாடிக்கு ஓடிப்போய் உயிரைக்காப்பாற்றிக்கொண்டார்கள் நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்த நேரத்தில் விமானத்திலிருந்தும் உலங்கு (ஹெலிகாப்டர்) ஊர்தியிலிருந்தும் உணவுப்பொட்டலங்களை வீசினார்களே நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்நேரத்தில் மாடியில் விழாமல் வெள்ளத்தில் விழுந்த பொட்டலங்களை எடுத்துக்கொடுத்த குழந்தைகள்தான் இவர்கள். அதற்காகத்தான் இந்த விருது. அவர்களின் உண்மையான அன்பினை அரசு பாராட்டுவது சிறப்புதானே !

     ஒட்டிய வயிறுடன் நிற்கும் அந்தக் குழந்தைகளிடம், “நீங்கள் உணவுப்பொட்டலங்களையெல்லாம் எங்களுக்குக் கொடுக்கிறீர்களே. நீங்கள் சாப்பிடவில்லையா?” என மாடியில்நின்றுகொண்டு பசியில்தவித்த ஒருவர் கேட்கிறார். “நீங்க பசிதாங்க மாட்டீங்க சாமி. எங்களுக்குப் பட்டினி பழகிவிட்டது” எனக் கூறி சிரித்த முகத்துடன் அடுத்த பொட்டலத்தை எடுக்க தண்ணீருக்குள் பாய்ந்தான் அந்த வீரச்சிறுவன். இங்கு, “யார் சாமி?” என்றுதானே எண்ணுகிறீர்கள். உண்மைதான். எத்தனையோ இயல்பான நாட்களில் எல்லாம் அவர்கள் சோறுகேட்டார்கள். இவர்கள் துரத்திவிட்டார்கள். ஆனால், இன்று அவர்கள் கேட்காமலே இவர்கள் சோறு போடுகிறார்கள். கடவுள் எப்போதும் யார் வழியாகவே படி அளக்கிறார். பாடமும் அளிக்கிறார்தானே. இப்படிப்பட்ட மண் நம் மண். நம்புகிறீர்களா? இல்லையா? மேலே நடந்த நிகழ்வினைப் படம்பிடித்துக்காட்டியவர் ஒரு சிறந்தசொற்பொழிவாளர். நீங்கள் நம்பினால் நன்றி. முன்னரே நம்பியிருந்தால் மிக்க நன்றி.

     இந்தப்பொன்னான பூமியில் விளைவதை உண்டுகொண்டே இந்நாட்டினை இழிவாகப் பேசுவோரைக்கண்டால்தான் கவலையாக இருக்கிறது. பெற்றதாயையே குறைசொல்லும் மகனை என்னென்பது?. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் திறமையைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு அவரைக் கைதுசெய்தது. மொட்டை அடித்தது. கோணியில் ஆடைசெய்து அணியச்செய்தது. செக்கிழுக்க வைத்து சாட்டையில் அடித்தது. கயிறு திரிக்கவைத்து கைகளைப் புண்ணாக்கியது. புழுக்கள் நெளியும் உணவைக் கொடுத்தது.

நாள்தோறும் பலருக்கு உணவிட்டு வேலைகொடுத்து மகிழ்வித்த பெருமகனை இவ்வாறெல்லாம் இழிவுபடுத்தியது ஆங்கிலேய அரசு. தன்மானத்துடன் எதிர்த்தவர்களை எல்லாம் பறவைகளைச் சுட்டுத்தள்ளியதுபோல் தள்ளினர். பறவைகளாவது பறக்கமுடியும். ஆனால், விடுதலை வீரர்களை (கை, கால்களில்) சங்கிலியால் பிணைத்திருந்தனர். தன்னலம் பெரிதென எண்ணியிருந்தால் வக்கீல் தொழிலில் பெரும் பணக்காரராக வாழ்ந்திருக்கலாம். மக்களை அடிமை நிலையிலிருந்து காக்கவேண்டும் என எண்ணினார். அதனால் கொடுமைக்கு உள்ளானார். வக்கீல் தொழில் செய்யக்கூடாதென்று உரிமையைப் பறித்துக்கொண்டனர் ஆங்கிலேயர்கள். அரிசி கடையில் வேலைசெய்து அரிசியினைக் கூலியாகப் பெற்றார். அதனைக்கண்டு பொறுக்கமுடியாமல் அவருக்கு வேலைக்கொடுத்த கடைக்குப் பூட்டுபோட்டனர். இப்படி வாழ்நாள் முழுதும் தலைவணங்கி வாழவேண்டிய தலைவரை இழிவுபடுத்தி மகிழ்ந்தனர். கப்பலோட்டிய தமிழர் வழியில் தேசத்திற்காக தனது இன்ப வாழ்வை துன்பமாக்கிக்கொண்டவர்கள் பலர்.

உலகையே ஆண்ட தமிழினம் ; கடல் கடந்துசெல்ல கற்றுக்கொடுத்த தமிழினம் ; கோவில்களையும் அணைகளையும் கட்டி உலகமே வியக்கவாழ்ந்த தமிழினத்தை ஆங்கிலேயர்கள் வஞ்சகத்தால் அடிமையாக்கினர். தமிழர்கள் வீரத்தைக்கண்டு மிரண்டவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால்தான் தங்களால் எதிர்க்கமுடியாத நிலையில் பல நாட்டவருடன் கூட்டுசேர்ந்து சதிசெய்து வீழ்த்தினர். திப்புசுல்தானை வெல்லமுடியாத ஆங்கிலேயர்கள் நெப்போலியனின் துணைகொண்டு வீழ்த்தினார்கள். ஆனால், அதற்குப் பின் தீரன் சின்னமலையுடன் போரிட்டு தோற்றோடினார்கள். நம் முன்னோர்கள், மாவீரன் நெப்போலியன் எனப்பாடம் சொல்லிக்கொடுத்தார்களேயன்றி ‘மாவீரன்’ தீரன் சின்னமலை எனப் பாடம்சொல்லிக்கொடுக்க மறந்தனர்.

ஒவ்வொருவரும் தேசியகீதத்தை நாள்தோறும் பாட வேண்டும். தேச உறுதிமொழியை நாள்தோறும் ஒரு முறையாவது முழங்கவேண்டும். அப்பொழுதுதான் தேசப்பற்றுவளரும். தேசப்பற்று வளர்ந்தால்தான் நாட்டினை முன்னிறுத்த வேண்டும் என உழைக்கும் எண்ணம் ஏற்படும். குடும்பமும் நலம்பெறும். நாடும் நலம்பெறும்.

தேசியகவி இரவீந்திரநாத்தாகூருக்கு ‘சர்’ பட்டம் என்னும் உயரிய பட்டத்தை வழங்கினார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலையில் அப்பாவி மக்களைக் கொன்றான் டயர். ஈவு இரக்கமற்ற அச்செயலைக்கண்ட ‘தேசியகவி’ அந்தப்பட்டத்தைத் திருப்பிக்கொடுத்தார். ஒவ்வொரு குடிமகனும் தம்மால் இயன்ற செயலைச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும். வெளிநாடுகளுக்கு இது பொறுக்குமா? பொறுக்காது. அதனால்தான் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பெண்களுக்கு தொலைக்காட்சி, குழந்தைகளுக்கு விளையாட்டு, இளைஞர்களுக்குப் போதை, தவறான உணவுப்பழக்கம்  என தீய பழக்கங்களை இறக்குமதி செய்துவருகின்றனர். மக்கள் அறியாமையால் சிக்கிக்கொண்டு உடல் வலிமையை இழந்துவிடுகின்றனர். 

தங்களுடைய நாட்டு மக்களுக்கு, விளையாட்டுப்பயிற்சியளிக்க தொழில் நுட்ப விஞ்ஞானிகளையும் வல்லுநர்களையும் தொழில் நிறுவனங்களையும், வானவியல் தொழில்நுட்பத்தையும் கொண்டு பயிற்சியளிக்கின்றனர். உலக நாடுகள் வளர்வதில் தவறில்லை. ஆனால், நம்மை வளரவிடாமல் செய்வது எத்தனை தவறு. இதனை இன்றைய தலைமுறை நன்குணரவேண்டும். உங்கள்மீது வீசப்படும் வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. உங்கள் நலமே முக்கியம் ; உங்கள் குடும்பம் முக்கியம் ; உங்கள் தலைமுறை முக்கியம் என்பதனை உணரவேண்டும்

உலகமே இன்று இந்தியாவை வியந்துபார்க்கிறது. அதற்குக்காரணம் வேகம் மட்டுமன்று ; விவேகமும்தான்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தியான்சந்த் – ஹாக்கியின் கதாநாயகன்

 


தியான்சந்த் – ஹாக்கியின் கதாநாயகன்

     தியான்சந்த் ஆடக்கூடிய  ஹாக்கி (வளைதடி) கட்டையை ‘மந்திரக்கட்டை’ என நினைத்தனர். அதனை வாங்கி உடைத்தும்பார்த்தனர். அதில் ஏதாவது பந்தை ஈர்க்கும் காந்தம் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். ‘இல்லை’யென அறிந்தபின்னர் அவருடைய விளையாட்டுத்திறனைக்கண்டு தலைவணங்கினர். அந்த அளவிற்குப் பந்தை எடுத்துச்செல்லும் திறன் வியக்கத்தக்கது. எதிர்நிலையில் நிற்கும் வீரர்களுக்குப் பந்து மாயமாவதே தெரியாமல் திணறுவர். வெறுங்காலோடு ; சீரற்ற விளையாட்டுத்திடலில் ; அந்நியர் ஆண்ட இந்தியாவில் இத்தனை திறமைகளுடன் ஒருவர் விளையாடினார் எனில், அவரை இந்தியர் ஒவ்வொருவரும் தலைமேல்வைத்துத்தானே கொண்டாடவேண்டும்.

இவருடைய ஆட்டம் ஐரோப்பியநாடுகளுக்கு அச்சமூட்டியது. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியது. அன்று அவர்தொடங்கிய ஆட்டமே இன்று தேசிய விளையாட்டாக்கும் பெருமையினைக் கொண்டதாகத் திகழ்கிறது. இப்போட்டியில் இந்தியாவைக் கண்டு அனைத்து நாடுகளும் அஞ்சின. 1928 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நெதர்லாந்தை  மூன்றுக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப் படைத்தது. பின்னர் 1932 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இருபத்துநான்குக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது. 1936 ஆம் ஆண்டு எட்டுக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது. இவ்வெற்றிக்குப் பின்னால் நின்றவர் தியான்சந்த். இவர் விளையாடிய பன்னிரண்டு ஒலிம்பிக் போட்டியில் முப்பத்துமூன்று கோல்கள் அடித்தார்.

1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற விளையாட்டில், உலகமே கண்டு அஞ்சிய ஜெர்மனியின் தலைவர் ஹிட்லர் தியான்சந்தின் ஆட்டத்திறனில் மயங்கினார். தியான்சந்தை அழைத்து ஜெர்மனியின் குடிமகனாக மாறவும் தரைப்படையின் உயர்ந்தபதவியான கர்னல் பதவியைத் தருவதாகவும் கூறினார். “உங்கள் நாடு மிஞ்சிப்போனால் என்ன பதவியை அளித்துவிடப்போகிறது. என்னைப்போல் உன்னை உயர்த்தும் கடமையினை உன்னுடைய நாடு செய்யாது” என்றார். அதற்கு தியான்சந்த “என்னுடைய நாட்டிற்கு என்னை உயர்த்துவது மட்டும் பொறுப்பில்லை. அங்கு கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு என் நாட்டைப் உயர்த்தும் பொறுப்பு இருக்கிறது” எனக் கூறினார். கொடுங்கோலரான ஹிட்லர்,  தியான்சந்தின் ஆட்டத்தை மட்டுமில்லாமல் நாட்டுப்பற்றைக் கண்டு வியந்துநின்றார்.

ஐரோப்பியர்களின் அடிமைப்பிடியில் இருந்த இந்தியர்கள், தியான்சந்த் விளையாட்டில் ஐரோப்பியர்களை திணறடிப்பதைக் கண்டு மகிழ்ந்தனர் ; பெருமை கொண்டனர்.

மேஜர் தியான்சந்த் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் இருபத்தொன்பதாம் நாள் இராஜபுத்திரவம்சத்தில் அலகாபாத்தில் பிறந்தார். தந்தை இராணுவத்தில் பணிசெய்தார். பணிமாற்றம் பெற்றதால் உத்தரப்பிரதேச மாநில ஜான்சியில் வளர்ந்தார். ஹாக்கி வீரரின் மகனாகப் பிறந்ததால் இயல்பாகவே அவ்விளையாட்டில் திறமையுடையவராக விளங்கினார். இதனை அவர் உணராமல் மலியுத்தம் குத்துச்சண்டை விளையாட்டுகளில்தான் ஆர்வமுடையவராக விளங்கினார். பதினாறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் நடைபெற்ற ஹாக்கிப்போட்டியில் இவருடைய திறமையை அனைவரும் கண்டு வியந்தனர்.

தியான்சந்த் இரவு நேரத்தில் பணிக்குப்பின் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவார். சந்திரன் வெளிச்சத்தில் விளையாடிய அவரை அனைவரும் ‘சந்த்’  என்றே அழைத்தனர். என்ன அழகான பெயர்பொருத்தம் பாருங்கள்.

புதிதாகத் தொடங்கிய இந்திய ஹாக்கி கூட்டமைப்பு 1928 ஆம் ஆண்டு தியான்சந்தைத் தேர்வு செய்து ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியது. அங்கு நடைபெற்ற ஐந்து போட்டியில் பதினான்கு கோல்கள் அடித்தார். 1932 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இவருடைய சகோதரர் ரூப் சிங்கும் பங்கேற்றார். 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்குத் தலைமைப்பொறுப்பேற்று கலந்து கொண்டார். இப்போட்டியில் இரண்டாவது சுற்றில்  வெறுங்காலோடு ஆடிவெற்றிபெற்றார்.  

 

ஹாக்கியின் மந்திரவாதியாகவே மதிக்கப்பட்டார். 1926 முதல் 1949 வரை அவர் விளையாடிய 185 போட்டிகளில் 570 கோல்களை அடித்தார்.

     தியான்சந்த் பிறந்த ஆகஸ்டு 29 ஆம் நாள் தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. தலைநகரில் உள்ள தேசிய அரங்கம் “மேஜர் தயான் சந்த்’ தேசிய அரங்கமாக ஒளிர்கிறது.  

1928 இல்  இந்தியா ஒலிம்பிக்கின் எட்டுத்தங்கப்பதக்கங்களில் ஏழினை வெற்றிப்பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இந்தியாவின் பெருமையினை உலகறியச்செய்தார். அவர் 1979 ஆம் ஆண்டு திசம்பர் மூன்றாம் நாள் மறைந்தாலும் 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிப் பாராட்டியது.  

     இப்பொழுது சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அவருடைய பெயரால் விருது தரப்படுகிறதென்றால் பொற்குடத்தில் வைரக்கல் வைப்பதுபோலத்தானே.

சனி, 7 ஆகஸ்ட், 2021

ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே - தியாகிகள்

 



ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே  - தியாகிகள்

 ஒரு குடிகாரன் குடித்துவிட்டு நடுசாலையில் அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கிறான். கட்டுப்படுத்தமுடியவில்லை. காவல்காரர் வருகிறார். அவருடைய கையைப்பிடித்துக்கொண்டு நடனமாடுகிறான். அவருக்கு அடிக்க மனம்வரவில்லை. அடித்துவிட்டால் இறந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு. குடும்பத்திற்கு யார் விடைசொல்வது என்னும் அச்சத்தின் காரணமாகவும் பொறுத்துக்கொண்டிருக்கலாம்தானே. யாருக்கும் அடங்காமல் அங்கேயே ஆடிக்கொண்டிருந்தவன் திடீரென காவலர் கையை உதறிவிட்டு ஓடினான். “என்ன ஆயிற்று?” என எல்லோரும் திரும்பிப்பார்க்கையில் அங்கு ஒருபெண்மணி தூய்மை செய்யும் ஆயுதம்தாங்கி வேகமாக முன்னேறி வருகிறாள். “யாரம்மா நீ” எனக் காவலர் கேட்க, அதோ அந்த மைக்கல் ஜாக்சனோட மனைவி என்றாள். எல்லோரும் சிரிப்பை வெளிப்படுத்தாமல் “வீட்டுக்குக் கூட்டிட்டுப்போம்மா” என்றனர். குடும்பத்திற்க்காகத் தன்னையே கரைத்துக்கொள்ளும் பெண்களுக்கு குடியின் கொடுமை வேறு. பாவம்தானே?

     டோக்கியோவில் நடந்த ஹாக்கிப்போட்டியில் முதலில் ஜெர்மன் கோல் அடித்தது. பின்னர் இந்தியர்கள் கோல் அடிக்க ஒன்றுக்கு ஒன்று எனப்புள்ளிகள் இருந்தன. அடுத்து இரண்டு கோல்களை ஜெர்மனி அடிக்கவே இந்தியா ஒன்றுக்கு மூன்று என்னும் நிலையில் பின் தங்கியது. அடுத்து, இந்தியா இரண்டு கோல்களை அடிக்கவே மூன்றுக்கு மூன்று என்றானது. அடுத்து, இரண்டு கோல்களை இந்தியா அடிக்க ஐந்து மூன்று என்னும் நிலையாயிற்று. ஜெர்மனி அணி மிகுந்த வேகத்துடன் நாற்பத்தெட்டாவது நிமிடத்தில் ஒருகோல்போட்டது. இந்தியா ஐந்து ; ஜெர்மனி நான்கு என்னும் நிலையில் இருந்தது. போட்டியைக்காண்போருக்கும் அனைவருக்கும் ஆர்வம் கூடிற்று. ஜெர்மானியர் அடித்தகோலை கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுக்கிறார். இந்திய அணியினர் வெற்றிக்கனியைப் பறித்தனர். நாற்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம். 1980 மாஸ்கோவில் தங்கம் வென்ற இந்தியா இன்று வெண்கலத்தைப் பெற்றிருக்கிறது. பதக்கக்கனவு நிறைவேறியது. தொடக்கத்தில் புள்ளிகளை இழந்தாலும் முடிவில் வெற்றி கிடைத்தது. இந்த அணியின் தலைவர் மன்பிரீத்சிங் “பதினைந்து மாதக் கடுமுயற்சியின் பலன் இது” எனக்கூறி, இந்த வெற்றியினை கொரோனோவில் மக்களைக்காத்த மருத்துவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் காணிக்கையாக்கினார்.

     முதல் கதையில், நாயகனுக்கு முதலில் வெற்றிக்களிப்பு. பின் தோல்வி. இரண்டாவது நிகழ்வில்,  முதலில் நாயகர்களுக்குத் தோல்வி பின் வெற்றி. எது வரலாற்றில் நிலைபெறும் என்பதனை  அறிவோம்தானே. எந்தச் செயலுக்குப் பின்னால் உண்மையும் உழைப்பும் உள்ளதோ அதுவே வரலாறாகும் ; வழிகாட்டும்.

     முதலில் சிறுமையைப் பார்த்தோம் ; இரண்டாவது பெருமையைப் பார்த்தோம். இனி அருமையைப் பார்ப்போமா?

     இந்த வாரம் தாய்ப்பால்வாரம் . ஆகஸ்டு ஒன்று முதல் எட்டு வரை. தாய்ப்பாலின் அருமையினைக்கூட கொண்டாடவேண்டியிருக்கிறது. “மழை நீரைப் போற்றுங்கள்” எனக் கூறுவதைப்போல “தாய்ப்பாலினைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்” எனச்சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது கொடுமைதானே. கலப்படப்பொருட்களை ; மசாலா பொருட்களை ; இனிப்புகளை (சாக்லெட்) ; பனிக்கூழினை (ஐஸ்க்ரீம்) தூய்மையில்லாத கடைஉணவுகளை உண்டு உடலைக்கெடுத்துக்கொள்ளும் பெண்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள். அத்தகைய பெண்களின் குழந்தை பாலுக்கு அழும்தானே. அத்தகைய குழந்தைகளுக்காகவே தாய்ப்பாலைச் சேமித்துவைக்கும் மருத்துவமனைகள் இருக்கின்றன. சில கொடையுள்ளம்கொண்ட தாய்மார்கள் தம்குழந்தைக்குக் கொடுத்து எஞ்சியபாலை கொடையளித்தனர் ; அளிக்கின்றனர். இந்நிகழ்வு தாயுள்ளத்தின் அருமையினை எடுத்துக்காட்டுகிறதுதானே? இது கலியுக தியாகம்.

     தாயுள்ளம் கொண்டு எத்தனையோ ஆண்கள் சமைக்கின்றனர் ; உணவிடுகின்றனர். நளபாகம் , பீம பாகம் என அவர்கள் சுவையுடன் சமைப்பதனைப் பாராட்டுவதனையும் காணமுடிகிறது. சரி அதற்கென்ன? என்றுதானே கேட்கிறீர். உணவளிப்பவரை தாயாக எண்ணுவதுதானே தமிழர் இயல்பு. அவ்வாறு எண்ணி மடிந்த வீரனைத் தெரியுமா? அவர்தான் தீரன் சின்னமலை.

     பெயரைக் கூறினாலே வீரம் பொங்கும் பெயர். சிலையைக் கண்டாலே வீரம்பொங்குகிறதே. அடுத்தமுறை தீரன் சின்னமலையின் சிலையைக் கண்டால் உற்றுப்பாருங்கள். அந்நியர்கள் அஞ்சியதில் தவறில்லை எனத்தோன்றும். திப்பு சுல்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்கள், தீரன் சின்னமலையை எளிதாக வென்றுவிடலாம் என எண்ணி போரிட்டனர். அறச்சலூர் போரில் தீரன்சின்னமலை கர்னல் ஹாரிஸை துரத்தியடித்தார். “இத்தகைய வீரனை எதிர்கொள்ளமுடியாது” என எண்ணிய ஆங்கிலேயர்கள் மிரண்டனர். துரோகிகள் யாரென ஆய்ந்தாய்ந்து அவர்கள்வழியாக அப்பாவித்தமிழர்களை வென்றனர் ; கொன்றனர். அப்படித்தான் தீரன் சின்னமலையின் சமையல்காரனுக்கு ஆசையைமூட்டி காட்டிக்கொடுக்கச்செய்தனர். 1805 ஆம் ஆண்டு ஜூலை முப்பத்தோராம் நாள் தீரன் சின்னமலையை உடன்பிறந்தோரையும் தூக்கிலிட்டுக் கொன்றனர். நேருக்குநேர் நின்று போர்செய்யாமல் துரோகத்தால் கொன்றவர்களை என்னென்பது?

     பக்கத்து நாடுகளில் கொள்ளையடித்துச்சென்றாலும் அவர்களைத் தடுத்து “எங்களுடைய செல்வங்களை நீங்கள் கொள்ளையடிக்கக் கூடாது” எனக்கூறி அஞ்சாமல் எதிர்நின்ற தீரம் தீரன்சின்னமலைக்கு உண்டு.  மறக்கருணையோடு அறக்கருணை கொண்டவராகவும் தீரன்சின்னமலை விளங்கினார். “சென்னி மலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை இருக்கிறது. அதுதான் செல்வங்களை எடுத்துக்கொண்டது. என உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்” என வீரத்துடன் எதிரிகளை எதிர்கொண்ட பெருமையே தமிழர்பெருமைக்கு எடுத்துக்காட்டு.

     துரோகம் என்பதனை அறியாத தமிழ் மன்னர்கள் எளிதில் ஏமாந்திருக்கின்றனர். உன் மனதையே உன்னால் அறியமுடியாதபோது எப்படி எதிரிகளை அறிந்துகொள்ளமுடியும் என ஆங்கிலேயன் தூரோகத்தின் பாடத்தைக் கற்பித்தான். தமிழர்கள் அந்நியர்களுக்கு எப்படி அன்புடன் வாழவேண்டும் எனக் கற்பிக்க, அந்நியர்கள் எப்படி அன்புடன் வாழக்கூடாதெனக் கற்பித்தனர்.

     தொடக்கத்தில் எது நன்மை? எது தீமை? என்று அறியாமல் ; எந்தப்பக்கம் நிற்கவேண்டும் என்பது புரியாமல் மக்கள் தவித்தனர். ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகி நல்லோர்களைக் காட்டிக்கொடுப்பதா? விடுதலை வீரர்களின் பக்கம் நின்று நாட்டு விடுதலைக்காகப் போராடுவதா? என எண்ணினர். கோடாலிக்காம்புகளையும் தந்தங்களையும் ஒன்றாக ஒப்பிடுவது சரியில்லைதானே.

     இப்படி மக்களைக்காக்க தமிழ் மன்னர்களும் , மன்னர்களைக்காக்க மக்களும் போராடிய போராட்டமாகவே விடுதலைப்போராட்டம் அமைந்தது. எண்ணற்றதியாகிகளின் உழைப்பெல்லாம் வீணாகவில்லை. இன்று கல்வி கற்பதற்கும் பணிக்குச் செல்வதற்கும் முழுமையான விடுதலை கிடைத்திருக்கிறது. தொய்வின்றி உழைத்தால் வறுமை ஓடும் ; வளமை கூடும் என்பதில் ஐயமில்லை.  அவர்களுடைய வீழ்வு அடுத்த தலைமுறைக்கான வாழ்வாக அமைந்திருக்கிறதுதானே?

     ஆட்டத்தின் தொடக்கம் எப்படி இருந்தாலும் முடிவைக்கொண்டுதான் உங்கள் திறமையினை உலகம் அறியும் என வாழ்ந்துகாட்டியோர் பலர். வெற்றிபெறாதவரை வீண்முயற்சி என்பதும் வெற்றி பெற்றுவிட்டால் விடாமுயற்சி என்பதும் உலகத்தின் இயல்புதானே? எனவே தொடக்கத்தைக் குறித்த கவலையின்றி இலக்கினை அடைய துணிந்து நிற்போம் ; வழிகாட்டியாக வாழ்வோம்

    

    

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

என் மனைவி ஊருக்குப் போயிட்டா

 



“என் மனைவி ஊருக்குப் போயிட்டா”

“என் மனைவி ஊருக்குப் போயிட்டா” எனச் சொல்வதில் ஆனந்தப்படுவோர் எத்தனைபேர் . சிலபேர் மட்டுமே கை உயர்த்துகிறீர்கள். மற்றவர்கள் அமைதியாகப் பக்கத்தில் பார்க்கிறார்கள்.  கைதூக்கியவர்களின் மனைவிமார்கள் இவர்கள் பக்கத்தில் இல்லை என்றுதானே. அந்த மனைவிமார்கள் இவர்களுக்காக எதையோ வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

     மனைவி ஊருக்குச்செல்லும் நாளில்கூட, அன்றைய உணவு சமையலறையிலும் குளிரூட்டியிலும் வைக்கப்பட்டிருப்பதனைக் கூறிவிட்டேசெல்வாள். அப்படியென்றால் எத்தனை அன்பு என்பதனை எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?

     பெண்ணுக்கு மட்டுமே கயிறில்லாமல் கட்டிப்போடும் வித்தை தெரிந்திருக்கிறது. அத்தகைய அறிவினைப் பெற்றிருப்பதால்தான் பெண்ணைக்கேட்டே ஆண்கள் செயல்படுவதனைக் காணமுடிகிறது.

     ஆண்கள் நடுரோட்டில் பெண்களை அடிப்பதனைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அத்தகைய ஆணை பெண்கள் திருப்பி அடிப்பதில்லை. காரணம் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா? அடியைக் கொடுப்பதைவிட அடியைப் பொறுத்துக்கொள்வதற்குத்தானே வீரம் வேண்டும்.

     விடுதலைப் போராட்டத்தைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். உடல்வலிமை பெற்றிருந்தாலும் தம்மைவிட உடல்பலம் குன்றிய ஆங்கிலேயரிடம் அடிவாங்கிக்கொண்டு கொடியினைக் கூட விடாமல் “எவ்வளவு வேண்டுமானலும் அடி ; கையிலிருந்து விழாது கொடி” எனத் துணிந்து நின்றவீரம் போற்றத்தக்கதுதானே. புழு பூச்சிகூட எதிரியை எதிர்த்துப்போராடும். ஆனாலும் விடுதலை வீரர்கள் திறமை இருந்தும் ; ஆயுதம் இருந்தும் ; அடிவாங்கியது எத்தனை பொறுமை. அத்தகைய பொறுமையானகுணம் படைத்தவர்களை அடிக்க வேண்டுமென்றால் அவன் விலங்கினும் கீழாகவன்றோ இருந்திருக்கவேண்டும்.

     மனைவியை அடிப்பவனுக்கும் இது பொருந்தும்தானே. அவர்களுக்காக 1098 என்னும் எண் எப்பொழுதும் விழிப்புடன் காத்திருக்கிறது. இருப்பினும் கணவன், குடும்பம் என்னும் அமைப்பிற்காக எவ்வளவு பொறுமையுடன் புகாரளிக்காமல் செயல்படுகிறார்கள்.

     அத்தனை பொறுமையுடன் விஞ்சிநிற்பதால்தானே, குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க பெண்களே ஆசிரியர்களாக முன்வருகிறார்கள். ஒரு குழந்தையாக இருந்தாலும் ; ஒருவகுப்புக்குரிய குழந்தைகளானாலும் ஈடுகட்ட பெண்ணால்மட்டுமே முடிகிறது. நலமான குழந்தையானாலும் உடல்நலம் குறைந்த குழந்தைகளாயினும் செவிலித்தாயானவள் எவ்வளவு அழகாகப் பார்த்துக்கொள்கிறாள்.

      ஒரு ஆண் வெற்றிபெறுவதற்காக உழைக்கும் உழைப்பைவிட பெண்ணுக்கான போராட்டம் பெரிதுதானே. ஒரு பெண் வெற்றிபெற்றால் அது நல்லூழ் (அதிர்ஷ்டம்) எனக்கூறிவிடுவோரும் உண்டு. அதற்காக உழைத்த உழைப்பை (பெற்றோரோ/ கணவரோ) உடனிருந்தோர் மட்டுமே அறிவர். எனவேதான் ஒருமுறை வெற்றிபெறுவதனைவிட ஒவ்வொரு முறையும் வெற்றிபெறவேண்டும் என்பார் ஏவுகணை நாயகரும் முன்னாள் குடியரசுத்தலைவருமான அப்துல்கலாம்.

     விண்வெளியில் ராக்கெட்டை செலுத்துவதுபோல் ‘பெண்கல்வி’யானது பெருமுயற்சியாக இருந்தநிலைமாறிவிட்டதுதானே. அதனால்தான் நன்றாகக் கல்விகற்ற பெண்ணாயினும் கணவனின் தவறினை நேரடியாகச் சொல்வதில்லை. ஏனென்றால் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கணவனுக்கு இருக்காது ; இருந்தாலும் தன்முனைப்பு அவனை ஏற்றுக்கொள்ளவிடாது. அதனால்தான் ‘இவன் எது கூறினாலும் கேட்கமாட்டான்” எதற்குச்சொல்லவேண்டும் எனப் பெண்கள் அமைதியாகவே இருந்துவிடுவதனைக் காணமுடிகிறது. “தலைக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்” எனக் கூறினாள். “அதெல்லாம் தேவையில்லை” எனக்கூறிவிடுவான். தான் மறந்ததை ஒத்துக்கொள்ளமாட்டான். வழியில் போக்குவரத்துக்காவலரிடம் சிக்கித்தண்டம் கட்டியபிறகு அசடுவழிவான்.

     பெண்களை தேனீக்களுடன் ஒப்பிடலாம்தானே. ‘இ’கரம் பெண்பால் விகுதிதானே. ரேவதி, செல்வி, தேவி, ராணி இப்படி சொல்லிப்பாருங்கள் புரிந்துவிடும். இலக்கியப்பார்வையிலும் தேனீதான். ‘தேனீ’ எப்படி உழைக்குமோ அப்படித்தானே பெண்கள் உழைக்கிறார்கள். எந்தத் தேனீயாவது நான் இவ்வளவு கடினப்படுகிறேன் என்று கூறியதுண்டா. அது இயல்பான ஈக்களைக் காட்டிலும் கடினமாக உழைப்பதால்தானே அது கெடாத தேனை உருவாக்கிவிடுகிறது. சாகாமருந்தாகும் தேனை உணவாகக்கொடுக்கும் அரிய பூச்சாக இருக்கும் தேனீ எத்தனை அழகு. அப்படித்தானே பெண்ணும் வாழ்நாள் முழுதும் உணவினைச் சமைத்துத்தருகிறாள்.

     விடுப்பின்றி கடுப்பின்றி அடுப்பில் இடுப்பொடிய வேலைசெய்யும் துடிப்புடைய பெண்களால்தானே குடும்பம் குடும்பமாக இருக்கிறது.

     கடவுளும் மனைவியும் ஒன்றுதானே. எவ்வளவு கொடுத்தாலும் திட்டுவது அவர்களைத்தான். அவர்கள்மட்டுமே காதுகொடுத்து கேட்பார்கள், பிறரிடம் குறைகளைச் சொல்லமாட்டார்கள். அப்படியே கேட்காவிட்டாலும் அவர்களிடம் சொல்வதில் ஏதோஒரு மகிழ்ச்சி இருக்கிறதுதானே? மனக்குறை நீங்கிவிடுகிறது. தெளிவாக செயல்படமுடிகிறது.

     பெண்ணுக்காகவே வாழும் ஆண் போருக்குச் செல்கிறான். போரில் சண்டையிட்டு முகத்தில் காயப்படுகிறான். மீண்டும் தன் மனைவியின் முகத்தைக்காண வெட்கப்படுகிறான். மனைவி அவனை ஏற்பாளா? என்னும் அச்சத்துடன் ஒதுங்கி நிற்கிறான். அவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவி முன்பிருந்த காதலைவிட பல மடங்கு பெருகிய காதலோடு அவனை அணைத்துக்கொள்கிறாள். அப்படியென்றால் மனைவியின் பேரன்பு பெருமையுடையதுதானே. இக்காட்சி தமிழ் இலக்கியத்தில் களிறு என்னும் ஆண் யானையையும் பிடி என்னும் பெண்யானையையும்கொண்டு விளக்கப்படும். களிறானது போரில் எதிரிகளுடைய கோட்டையை தந்தத்தால் தகர்த்துவிடுகிறது. எதிர்த்துநின்ற யானைகளை வீழ்த்துகிறது. இதனால் தந்தம் உடைந்து அழகுகுன்றி இருக்கிறது. பிடி என்னும் தன் பெண்யானையைக் காண வெட்கப்படுகிறது. என்பது எத்தனை அழகான காட்சி. விருப்புடன் பெண்யானை நோக்குகிறது. இது எத்தனையோ பாதுகாப்புபடை வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுதான்.

     அத்தகைய பெண்யானையைப் போன்றவர்களே பெண்கள். எத்தனை இடர்வரினும் அன்பு நிறைந்த கணவனுடன் இல்வாழ்க்கையில் சிறப்புற்று விளங்கும்பேறு சிறப்புடையது. ஆணுக்கும் இக்கூற்று பொருந்தும் என்பதில் ஐயமில்லை.

 

     இனி “என் மனைவி ஊருக்குப் போயிட்டா” எனச் சொல்வதற்குமுன் ஒருமுறை உறவுகள் அனைத்தையும் விட்டுவந்த தியாகத்தை எண்ணிப்பார்ப்பீர்கள்தானே?

         

 

 

               

புதன், 4 ஆகஸ்ட், 2021

பிர்ஸா முண்டா - வனம் காத்த வல்லவர்

 


பிர்ஸா முண்டா 


“விடுதலை ! விடுதலை ! விடுதலை ! என மூன்று முறை சொல்லிப்பாருங்கள். உங்கள் மனம் புத்துணர்வு பெறும் முடங்கிக்கிடப்பதில் பெருமையில்லை.  உழைத்துச் சோர்வதில் சிறுமையில்லை. சந்தனம் வாழும்வரை வாசம் தருகிறது. தென்றல் வீசும்வரை இன்பம் தருகிறது. மலர்கள்  வாடும்வரை வாசம் தருகிறது. ஆறானது வாழும்வரை தாகம் தீர்க்கிறது. அப்படி வாழும்வரை , ஆறாக ; சந்தனமாக ; தென்றலாக ; மலர்களாக நாட்டின் நலனுக்காக வாழ்ந்த நல்லோர்கள் குறித்தே இன்று சிந்திக்க இருக்கிறோம்.

மகாகவி பாரதியார் பாடிய “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் எனப் பாடியது போலவே “நீர் நமது ; நிலம் நமது வனம் நமது” என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார,.  பிர்ஸா முண்டா, மலைவாழ் மக்களில் ஒருவரான விடுதலைப் போராட்டவீரர். ராஜஸ்தான் மாநிலத்தில் மலைவாழ் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். 1875 ஆம் ஆண்டு பிறந்தவர்.  சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு இவரது பெற்றோர்.

திறமையாகப் படித்த இவரை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்க எண்ணினர். ஆனால் அங்கு படிக்கவேண்டுமானால் ஆங்கிலேயர்கள் தங்கள் சமயத்திற்கு மாறவேண்டும் எனக் கூறினர். படித்தாகவே வேண்டுமே என ‘பிர்ஸா டேவிட்’ என மாறினார். பின்னர் சர்தார் வல்லபாய்படேல் இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலேயருக்கு அடிமையாகும் மலைவாழ்மக்களைக் காக்கவேண்டும் என எண்ணினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1895 ஆம்ஆண்டு தமது பத்தொன்பதாம் வயதிலேயே  மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடங்கினார். “ஆங்கிலேய அரசு முடியட்டும். நம் அரசு மலரட்டும்” என்பதே அவருடைய முழக்கமாக நின்றது. இத்தகைய வீர முழக்கமிட்டு ஓர் இனத்தையே நாட்டின் வளர்ச்சிக்காக வழிநடத்திய பெருமையுடைய இவருடைய படம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்புதானே.

ஆங்கிலேய அரசாங்கம் எப்படியெல்லாம் நிலத்தைக் கொள்ளையடிக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தது.  வாரிசு இல்லாத நிலத்தை தனக்குச் சொந்தம் என அறிவித்தது. வாரிசுகளைத் தத்து எடுக்கவும் தடைவிதித்தது. எதைப்பயிரிடவேண்டும் என ஆங்கில அரசே முடிவு செய்து மக்கள் வறுமையில் சாக வழி செய்தது.

“வனங்கள் அனைத்தும் இனி ஆங்கில அரசுக்கே சொந்தம்” என்னும் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதனை எதிர்த்துப் போராடியவர்தான் இந்த பிர்ஸா முண்டா. வணிகம் செய்ய வந்தவர்கள் இயற்கை அன்னை கொடுத்ததை உரிமை கொள்வது கொடுமை எனப் போராடினார். ஜமீந்தார்களையும் நிலவுடைமையாளர்களையும் மிரட்டியும் பொருள்கொடுத்தும் அச்சுறுத்தியும் தன்வசமாக்கியது ஆங்கிலேய அரசு.  “தனி மரம் தோப்பாகாது” என மக்களைத் திரட்டி நாட்டைக்காக்கப் போராடினார். மண்ணைக் காக்கப் போராடியதால் இவருடன் மலைவாழ் மக்களும் இணைந்து போராடினர். “மண்ணின் தந்தை’ எனக் கொண்டாடினர்.

ஆங்கிலேயர்கள், இந்தியர்களை எப்போதும் வெல்ல முடியாத அளவிற்கு வீரத்தில் குன்றியே இருந்தனர். ஆனால், ஆயுதங்களைக்கொண்டே இந்தியர்களை வீழ்த்தினர்.. துப்பாக்கி, பீரங்கி குறித்து அறியாத மக்களிடம் வீரத்தைக் காட்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அறநெறியாகப் போர்செய்தே பழக்கப்பட்ட இனமாக இருந்த இந்தியர்கள், அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடித்த இத்தகைய வெடிக்கும் ஆயுதங்களைப் புரிந்துகொள்ளமுடியாமலே தோற்றனர். இதனைக் கண்டு பலரும் அஞ்சினர். அஞ்சுவது இயல்புதானே. ஆனால் அஞ்சாது போராடிய வல்லவர்களும் இருந்தனர். அவர்கள் முண்டாவுடன் இணைந்து போராடினார். 1899 ஆம் ஆண்டு கொரில்லா முறையில் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டனர். தம்மிடமிருந்த வில், அம்புகளைக் கொண்டு போராடினர்.  ‘உல்குலான்; என இப்போர் அழைக்கப்பட்டது.  உல்குலான் என்பது புரட்சியைக் குறிக்கும். 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் நாள் இவரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். கொடுமையாகத் தண்டித்தனர்.

ஆங்கிலேயர்கள் மக்களை அச்சுறுத்தசெய்த முதல் காரியம், மக்களிடம் செல்வாக்கு மிகுந்தவர்களை மிகவும் இழிவாக நடத்துவது. சாலையில் ஆடைகளின்றி அடித்து இழுத்துச்செல்வது, சாட்டையால் அடிப்பது, எட்டி உதைப்பது, மக்களுக்கு நடுவே தூக்கிலிடுவது. தலையை வெட்டுவது எனப் பல கொடுமைகள் செய்தனர். ஒவ்வொரு ஊரிலும் எதிர்த்த அல்லது ஒன்றுகூட்டிய தலைவர்களையே இவ்வாறு கொடுமை செய்தனர். ஆனால், நயவஞ்சகமாகச் சிலர் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சொந்த தாய்நாட்டுக்கு எதிராக நின்றனர் ; வீரத்துடன் போராடிய தலைவர்களைக் காட்டிக்கொடுத்து பணத்தையும் ; பதவியையும் பெற்றனர். அத்தகைய துரோகிகளால் வீரர்கள் தோல்வியடைந்தனர் ; உயிரிழந்தனர்.

சிறையில் கொடுமைக்குள்ளான அவ்வீரர் இரத்த வாந்தியெடுத்து கடும் நோயால் பாதிக்கப்பட்டார். இக்கொடுமைகளால் இறந்ததனை மக்கள் அறிந்தால் போராட்டம் எழக்கூடும் என எண்ணிய ஆங்கில அரசு “காலரா பெருந்தொற்று நோயால் இறந்தார்” என அறிவித்தது. அப்போது அவருடைய வயது இருபத்தைந்துதான். இருபத்தைந்து வயதிலேயே நாட்டுப்பற்று கொண்டு மக்களின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களைப் போற்றுவது நம்கடமைதானே. அவர் அன்றுபோராடியதால்தான், பஞ்சமர் நிலத்தை யாரும் கையகப்படுத்தக்கூடாது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனவும் போராடியவர்.

       நம்முடைய நாடு எத்தனை ஆண்டுகள் ஆயினும் இத்தகைய பொன்னான மனிதர்களின் உழைப்பினைப் போற்ற மறந்ததில்லை. இன்று அவருடைய பெயரில் கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. ஜார்கண்ட் விமான நிலையத்துக்கே அவருடைய பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்

என்னும் மகாகவியின் சொற்களுக்கு செயல்வடிவமாக நின்றவர் இந்த பிர்ஸாமுண்டா. தேசத்தைக்காக்கப் போராடியமுன்னோர்களைப்போல் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்.

       மானம் மட்டுமல்ல தேசமும் உயிரை விடப்பெரிது என்பதனை உணர்த்துவோம்.

சனி, 31 ஜூலை, 2021

விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

 


விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

     வீட்டில் இருக்கும்போது, விடுதலை உணர்வுடன் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் விரும்பும் ஆடை, நாம் விரும்பும் பணி, நாம் விரும்பும் பேச்சு என அத்தனை வாய்ப்புகளையும் மொத்தமாய்க் கொடுப்பது வீடுதானே. அதனால்தானே வீட்டிற்குள் எப்போது நுழைவோம் என ஏங்கியிருப்போம். ஆனால், இன்று வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என அடைத்துவிட்டால், எப்போது வெளியே சுதந்திரமாக நடக்கமுடியும் என்றுதானே மனம் அலைகிறது.  அனைத்துமே விடுதலை உணர்வுதானே?

     சுதந்திரமான நாட்டில் இருக்கும் நமக்கே விடுதலையாக வாழ்வதில் எத்தனை விருப்பம் இருக்கின்றதெனில் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் நிலையினை எண்ணிப்பாருங்கள். தன்னை மதிக்கவில்லை என்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றான் ஜெனரல் டயர். பதவியைக் கூறினால்தான் உங்களுக்குப் புரியும் என்பதால் அப்படிக்குறிப்பிட்டேன். பொறுத்தருள்க !. கொடுங்கோலன் டயர் என்றே குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாறுகள் எல்லாம் உயிர்களை வேட்டையாடிய கொடுங்கோலர்களை, ஜெனரல், துரை, கவர்னர் என உயர்வான பெயர்களால் குறிப்பிட்டுள்ளன. இது வரலாற்றுப்பிழைதானே. இல்லையென்கிறீர்களா? இதோ அவர்கள் நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி கூறுகிறேன். ஒத்துக்கொள்வீர்கள்.

     பஞ்சாப் மக்களின் சமூகவிழாவான பைசாகி விழா 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிமூன்றாம் நாள் கொண்டாடப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.  எத்தகைய முன்னறிவிப்புமின்றி ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூட்டை நடத்தினான். பெண்கள், குழந்தைகள் என ஈவு இரக்கமின்றி ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுகுவித்தான் கொடுங்கோலன். மக்கள் அங்கும் இங்கும் ஓடுவதைக்கண்டு மகிழ்ந்த கயவனை, ஒருவரும் எதுவும் கேட்கமுடியவில்லை. ஆனால், அவனை அனுப்பிய ஆங்கிலஅரசு கேட்டது. “என்பேச்சை கேட்காததால் சுட்டேன்” என ஆணவமாக விடைகூறினான். என்னிடம் இருந்த தோட்டாக்கள் முழுவதையும் சுட்டுவிட்டேன். இன்னும் இருந்திருந்தால் இன்னும் நிறைய இந்தியர்களைக் கொன்றிருப்பேன்” என்றான்.  டயரின் ஆணவப் பேச்சினைக் கேட்ட ஆங்கிலேய அரசு உடனே அவனுக்குப் பதவி உயர்வு வழங்கியது.

பெற்றோருடன் வாழ்ந்தவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆதரவற்ற உத்தம்சிங் என்னும் இளைஞன் இந்தியர்களைக் கொன்ற டயரினைக் கொல்லவேண்டும் என முடிவுசெய்கிறார். இருபது ஆண்டுகள் அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு மார்ச் பதிமூன்றாம் நாள் இலண்டனில் ஒரு விழாவில் சிறப்புப்பேச்சாளராகப் பங்கேற்கிறார். அவ்விழாவிற்கு உத்தம்சிங் ஒரு புத்தகத்தோடு செல்கிறார். புத்தகத்தின் நடுவே பக்கங்களுக்கு மாற்றாகத் துப்பாக்கி இருக்கிறது. புத்தகம் மிகச்சிறந்த ஆயுதம் என்பதனை உணர்த்தினார். “வறுமையில் நின்றவர்க்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?” என்றுதானே கேட்கிறீர். அவர் கப்பலில் பயணம் செய்யும்போது பாத்திரங்கள் கழுவினார். பெற்ற சம்பளத்தில் துப்பாக்கி வாங்குகிறார். இருபது வருட தவம் ; இந்தியத்தாயிடம் கொண்ட பற்று ; இந்திய மக்களிடம் கொண்டபற்று தன்னலத்தை மறக்கச் செய்தது.  தன்னலமே நாட்டு நலம் என மாறியது. கனவு நினைவானது.

பெயருக்கேற்றார்போல் வாழ்ந்துகாட்டினார். உத்தமர் என்பவர் பிறர்வாழ தன்னைக்கொடுப்பவர்தானே. ‘உத்தம் சிங்’ என்னும் பெயர் பின்னாளில் வைக்கப்பட்டது அதுவும் பொருத்தமாயிற்று. அவருடைய இயற்பெயர் ஷேர்சிங். ஷேர் என்றால் சிங்கம். அதுவும் பொருத்தம்தானே. அவருடைய செயலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மிகவும் பாராட்டினார். இலண்டன் நாளிதழான “டைம்ஸ் ஆஃப் லண்டன்” உத்தம் சிங் சுதந்திரப் போராட்ட வீரர். ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு எனப் பாராட்டியது.

ஷேர்சிங் சுட்டுவிட்டு ஓடவில்லை. பெயருக்கேற்றார் போல் சிங்கம் போலவே நின்றார்.  ரோம் நகர் இதனை ‘தீரச்செயல்’ எனப் பாராட்டியது. ஜெர்மனி வானொலி இந்தியர்கள் யானையைப்போன்று மறக்காமல் பழிவாங்கும் திறமுடையவர்கள். உத்தம்சிங் இருபது ஆண்டுகள் கழித்துப் பழிதீர்த்துக்கொண்டார் எனப் பாராட்டியது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊக்கச்செயலாகவே உத்தம்சிங்கின் செயல்பாடு அமைந்தது.

முத்தாய்ப்பாக ஒன்று சொல்லவேண்டுமானால், உத்தம்சிங்கின் சொல்லைத்தான் சொல்லவேண்டும். “என் தாய்நாட்டிற்காக உயிரைவிடுவதைவிட வேறுபெருமை என்ன இருக்கிறது” என எழுதிச்சென்றிருக்கிறார். அதுமட்டுமன்று, தான் தூக்கிலிடப்படுவதை முன்னரே அறிந்த உத்தம்சிங், சாவினைக் கண்டு அஞ்சவில்லை. “என்னை நீங்கள் தூக்கிலிட்ட பிறகு எனது உடலை லண்டனிலேயே புதையுங்கள். எங்கள் மண்ணை நீங்கள் பிடித்துக்கொண்டீர். உங்கள் மண்ணின் ஆறடி மண்ணை நான் ஆள்வேன்” என்றார். பொன்னேடுகளில் பொறிக்கவேண்டிய சொற்களைத் தன் கடைசி ஆசையாகக் கூறினார் உத்தம்சிங்.

தாய்நாட்டில் விளையும் பொருட்களை உண்டு உடல்வளர்க்கும் ஒவ்வொருவரும் தாய்நாட்டிடம்பற்றுகொண்டுதானே வாழவேண்டும். நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு வெட்டினால் விழுவது யார்?. “பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்த தாயைக் காப்பாற்றாவிட்டால், மகனுடைய மகளுடைய சம்பளத்தைப் பிடித்தம்செய்து நேரடியாக பெற்றோருக்கு அனுப்பிவிடுவோம்” எனச் சில மாநிலங்களில் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அவ்வாறே தாய்நாட்டைப் பழிப்போருக்கும் உரிய தண்டனை வழங்கவேண்டும். தண்டனை அவர்களை வருத்துவதற்கன்று ; திருத்துவதற்கே. நன்றியுணர்வின் அருமையினைச் சொல்லிக்கொடுக்காததால் வந்தவிளைவு அது

ஒரு பேருந்தில்  எண்பது பேர் பயணம் செய்கிறார்கள். எட்டு குண்டர்கள் நடுவழியில் பேருந்தை மறித்து கொள்ளை அடிக்கிறார்கள். எட்டுபேரை எண்பதுபேரால் ஒன்றும் செய்யமுடியாது. ஆயுதம் இருக்கிறது என்ன செய்வது? எனக் கூறாதீர்கள். ஆயுதம் இல்லாவிட்டாலும் ஒன்றுபட்டுவிட்டால் ஒழிந்துபோய்விடுவார்கள் எதிரிகள். நாம் செய்கின்ற தவறினைப் புரிந்துகொள்ள நான் படித்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?

     ஒரு விடுதியில் பல நாட்கள் உப்புமா தான் சிற்றுண்டி. நூறு பேரில் எண்பது பேர்  எதிர்த்தனர். காப்பாளர் ஓட்டெடுப்பு நிகழ்த்தினார். பெருவாக்குப்படியே சிற்றுண்டி என்றார். மீண்டும் உப்புமாவே தேர்வாகிறது. “எப்படி?” என்றுதானே கேட்கிறீர். உப்புமா விரும்பிகளின் ஓட்டு இருபதும் சரியாக விழுந்தது. மற்ற எண்பதுபேர்  இட்லி – 19, தோசை -19, பூரி -19, பரோட்டோ-19, சப்பாத்தி -4 என விழுந்தது. இப்படி விழுந்தால் காப்பாளர் என்ன செய்வார்? ஒன்றுபடுவோம். நாட்டைக்காப்போம்.

 

 

வெள்ளி, 23 ஜூலை, 2021

தாய் கடவுளன்று ; தாய் தாய் தான்

 


தாய் கடவுளன்று ; தாய் தாய் தான்

     பலாப்பழத்தையே அறியாதவனிடம், மாம்பழம்போல் பலா இனிக்கும் எனக்கூறினால், அது உண்மையாகவா இருக்கும்? இல்லைதானே !. ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளைக் கூறிவிட்டால் அப்பொருளினை முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது ; அறிந்தாலும் தவறாகிவிடும். கடவுள் அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல்காப்பவர் ; தாய் அப்படியன்று. தன்னுடைய குழந்தை என்னும் தன்னலம் எப்போதும் அவளுக்குள் உயிர்போல் ஒளிந்திருக்கும். இன்னொரு குழந்தையை தன் குழந்தை அடித்துவிட்டாலும் தவறென ஒப்புக்கொள்ளாத மனம் தாய்மனம்.   தன்குழந்தை யாரையாவது அடித்துவிட்டால், அப்போதும் வேறுகுழந்தையே தவறு செய்ததாகப் பேசுவதே தாயுள்ளம்.

     ஒரு தாயனவள் பள்ளி முதல்வரிடம், “என்மகனை அவன் வகுப்புத்தோழன் ஒருவன் நகத்தால் முகத்திலே கீறிவிட்டிருக்கிறான். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என வேகமாகப் பேசினாள். மகனோ திருவிழாவில் காணாமல்போனவன்போல் விழித்துக்கொண்டிருந்தான். முதல்வர் உடனடியாக வகுப்பாசிரியரை அழைத்தார். “நானே உங்களிடம் சொல்லலாம் என்றுதான் வந்துகொண்டிருந்தேன். இப்போதுதான் இவனுடன் சண்டையிட்ட மாணவனுக்குக் கையில்கொட்டிய குருதியைத் (ரத்தத்தை) துடைத்துவிட்டு வந்தேன். இவன் அவனுடைய கையை கடித்ததிலே அப்படியாகிவிட்டது” என்று தாயுடன் நின்றிருந்த சிறுவனைப் பார்த்துக்கொண்டே கூறினார் ஆசிரியர். அதுவரை வானைக் கிழித்த தாயின் குரல் மெலிதானது. மகனைப் பார்த்து, “என்ன கண்ணா! ஏன் அவன் கையைக் கடித்தாய்” எனக்கேட்டாள். அப்போதும் முழித்துக்கொண்டிருந்தான். பின் முதல்வரைப் பார்த்து ‘குழந்தைகள் அப்படித்தான் அடித்துக்கொள்வார்கள்” எனச்சொல்லி அமைதியாக அங்கிருந்து நழுவிச்சென்றாள். “அடுத்து வரும் பெற்றோர்க்கு என்சொல்வேன்” என முதல்வரும் பெருமூச்சு வாங்கினார். இதுவும் தாயன்புதானே?

     ஒரு கலைஞர்,  தாயன்பின் வலிமையினை படம் வழியே காட்டிச்சென்றார். சொல்லட்டுமா?. ஒருவர் ஆட்டினை முழுமையாகவாங்கினார். மகிழ்வுந்துக்குள் வைக்க மனமில்லாமல் அதனைச் சாகடித்து காருக்குப் பின்னாலே கட்டிவிடச்சொல்கின்றார். அதனைக்காரில்கட்டி இழுத்துக்கொண்டுபோகையிலே அந்த ஆட்டின் குட்டி கொஞ்சதூரம் பின்னால் ஓடி .. ஓடி முடியாமல் நின்றது. அது ‘மே ! மே’ எனத்தாய் உடல் தரையில் இழுத்துக்கொண்டுபோவதனைப் பார்த்து வருந்தியது. கொஞ்சநேரத்தில் மகிழ்வுந்து காணாமல்போனது. அந்தக் குட்டியின் ஒவ்வொரு குரலும் “இது இறைச்சியல்ல. என் தாய்” என்று உணர்த்துவதனைப் படம்பிடித்துக்காட்டினார். இக்குறும்படம், தாயன்பினை காட்சியின் வழியே புலப்படுத்திவிடுகிறது. அந்தக்குட்டி,  பால் குடிக்க முடியாமல் எங்கு செல்லும்? தாயின்றி வாழ்வேது? சாகும் வரை வாழ்வதற்குக் கற்றுக்கொடுப்பவள் தாய்தானே? இவ்வாறு, பல எண்ணங்கள் வந்துபோகும்.

     தாயில்லாத ஒரு உயிர் உலகில் உண்டா? இல்லைதானே. எத்தனை துயரம் இருந்தாலும் குழந்தைமுகம் பார்த்தபின்னே அத்தனை துயரத்தையும் மறந்துவிடுபவள் தாய்தானே. அதனால் பத்து ; எட்டு ; ஐந்து  ; இரண்டு என எத்தனையோ தாய்மார்கள் குழந்தைகளைப் பெற்றதனை ;  பெறுவதனைக் காணமுடிகிறது. பத்துத்திங்கள் குழந்தைகாக உணவுண்டு ; ஒருபக்கமாக உறங்கி ; நடைதளர்ந்து வாழ்ந்த பெருமைக்கு ஈடேது. அவளின்றி  இவ்வுலகம் செழித்திடுமா? எனவே, நம்நாட்டை ‘தந்தைநாடு’ எனக்கூறாமல் ‘தாய்நாடு’ எனச்சான்றோர்கள் குறிப்பிட்டனர்.  போராடிக்காத்தால்தான் நாடு வளமாகும் என எண்ணியே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் என எண்ணத்தோன்றுகிறது.

      “காதற்ற ஊசி கூட நீ இந்த உலகை விட்டுச்செல்லும்போது வராது” என மகனாய் வந்த குருவின் சொல்கேட்டு பொன்னை ; பொருளை ; உறவை ; வரவை  என அனைத்தையும் துறந்தார் பட்டினத்தார்.  ‘துறந்தால் பட்டினத்துப்பிள்ளையைப்போல் துறத்தல் அரிதெனச்’ சான்றோர்கள் பாடும் அளவிற்குத் துறந்தவர் பட்டினத்தார். அத்தகைய பட்டினத்தாரே தாயன்பிலிருந்து விடுபடமுடியாதவர் ஆனார். அத்தகைய பெருமையினை உடையவள் தாய். அவளைப் போற்றவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை.

     வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

     கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்

     சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

     விறகிலிட்டுத் தீமூட்டு வேன்           (பட்டினத்தார்)

 

என்னும் பாடலே தாயன்பினை விளக்கிச்சொல்லும். கோழியானது தன் சிறகிடையே குஞ்சுகளைவைத்துக்காப்பதுபோல, தாயானவள் முந்தானை என்னும் சிறகால்மூடி வெயிலிலும் மழையிலும் காத்த அன்பினை பட்டினத்தார் பாடியுள்ளது எத்தனை அழகு.

     இப்படி வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் இட்டு என்னைப் பாதுகாத்தவளை, விறகில் இட்டு தீ மூட்டுகிறேன் எனப்பட்டினத்தார் பாடுவது தாயன்பில் இமயம்தானே?

     காதல் என்பது உயர்ந்தவகையான அன்பு. அச்சொல்லையே தாயன்பிற்கு எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ள அழகினையும் காணலாம்.

     தேசபக்தர்கள்  எத்தனையோபேர் பூமியினையே தாயாக எண்ணி செருப்பணியாமல் நடப்பதனையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். அத்தகையோர் பேரன்பினை ; நன்றியுணர்வை என்சொல்வது?. இதுவும் தாயன்புதானே.

     தாயென்பவள் தாயாக மட்டுமின்றி முதல் ஆசிரியையாகவும் திகழ்கிறாள்தானே. அவள் கற்பிக்காத பாடமில்லை. ‘உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்’ என்னும் சொல்லுக்கு இலக்கணம் அவள். வறுமை தனக்கிருப்பினும் குழந்தைகளின் பெருமைக்கு உழைப்பவள் அவள். ஜோத்பூரில்  ‘ஆஷா கந்தாரா’  என்னும் பெண்மணி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறார். கணவன், விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். குழந்தைகளைக் காப்பாற்ற என்செய்வது? என வருந்துகிறார். தெருக்களைச் சுத்தம்செய்யும் துப்புரவுப்பணிசெய்கிறார்.  ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் படித்து, அஞ்சல் வழியில் பட்டம்முடித்து ;ஆட்சியர் தேர்வும் எழுதி வெற்றிபெறுகிறார். இன்று துணை ஆட்சியராகப் பணிசெய்கிறார். இதுவும் தாயின் பெருமைதானே !

புதன், 21 ஜூலை, 2021

பட்டிமண்டபம்

 


பட்டிமண்டபம்

தலைப்பு : மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?

நடுவர்: மலையைக் குடைந்து ; கடலைக் கடந்து ; விண்ணை அளந்து ; மண்ணை அறிந்து ; காற்றைப் புரிந்து அனைத்துக்கலைகளிலும் பிறநாட்டார்க்கு தாயாய் விளங்கும் அன்னைத்தமிழே ! உன்னை வணங்கி இப்பட்டிமண்டபத்தைத் தொடங்குகின்றோம்.

     வாய்பேசும் மொழியைவிட கண்கள்பேசும் மொழி அழகானது. அதனை, அன்புடையவர்கள்மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும். கொடுக்கும் கைகளை விட கண்ணீரைத் துடைக்கும் கைகள் மேலானவைதானே. பேச்சினைப்புரிந்துகொள்வதைவிட மௌனத்தைப் புரிந்துகொள்வோர் பெருமையானவர்கள்தானே. சரி, இப்படி மற்றவர்களைப்புரிந்துகொள்வதில் வல்லவர்கள் யார்? “ஆண்களே!” என என்னும் அணியில் மூவரும் “பெண்களே !” என்னும் அணியில் மூவரும் என ஆறு அறிஞர்கள். அறுசுவையுடன் பேசுவர்.

‘ஆண்களே’ என்னும் அணியில் அணித்தலைவர் உட்பட மூவேந்தராய் மூவர். ‘பெண்களே’ அணியில் முக்கனிபோல் மூவர்.  இனி தமிழைச் சுவைக்கலாம்தானே? முதலில் அணித்தலைவர். அடுத்து, அணியுளுள்ளவர் ஒருவர்பின் ஒருவராகத் தங்கள் கருத்தை முன்வைக்கலாம்.

ஆண்களே ! அணித்தலைவர் : தமிழ் படித்த தலைவரே !. நீங்கள் ஓர் ஆண். நாங்கள் எப்படி பேசினாலும் உங்களைப் பாராட்டுவார்கள். “எப்படி? என்று கேட்கிறீரா?” நீங்கள்தான் தொடக்கத்திலேயே ‘அறுசுவை’ யுடன் பேசுவார்கள் எனக்கூறிவிட்டீர்களே. அப்படி என்றால் எப்படியும் விடை சொல்லலாம் என்பதுதானே பொருள்.

எங்களுடைய குழந்தை பள்ளியில் பெற்றோர் நாள் கொண்டாடினார்கள். தாய், தந்தை இருவரும் வரவேண்டும். பெயர் கொடுத்துவிட்டுவர என் மனைவி கூறினாள். போனேன். எனக்கு முன்னால் இருவர் சென்று திரும்பினார்கள். “என்ன கேட்டார்கள்?” எனக் கேட்டேன். “திருப்பி அனுப்பிட்டாங்க.” என்றனர். பதிவிடத்தில் இரு ஆடவர் அமர்ந்திருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் அமரச்சொன்னார்கள். “இப்போட்டியில், கணவன், மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். யார் நிறைய தூரம் ஓடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்” என்றனர். “சரி !” என்று பெயர் கொடுத்தேன். “எனக்கு முன்னால் இருவர் வந்தார்களே ஏன் திருப்பி அனுப்பிவிட்டீர்கள்” எனக்கேட்டேன். முதலில் வந்தவர் “எனக்கு இரண்டு மனைவி’ எந்த மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்?” எனக் கேட்டார். அதனால் திருப்பி அனுப்பிட்டோம். இரண்டாவது வந்தவர், “மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்” என்றதும் “யாருடைய மனைவியை?” என்றார். அதனால் அவரையும் திருப்பி அனுப்பிட்டோம் என்றார். இப்படிப்பட்டவர்களை எல்லாம் அழைத்துப் போட்டி நடத்தமுடியுமா? அதனால்தான் திருப்பி அனுப்பிவிட்டோம் என்றார். பிரச்சினைகள் எவரால் வரும் எனஆய்ந்து முன்னரே தவிர்த்த அந்த ஆசிரியர் மற்றவர்களைப் புரிந்துகொண்டவர்தானே. “நானும் அவர்கள் வருந்தக்கூடாது” என்றுதான் பெயர்கொடுத்தேன். எனக்கும் விருப்பமில்லை. பெயர்கொடுக்காவிட்டால் மனைவி திட்டுவாள். “இப்போட்டி ஒத்துவராது போய்விடலாம்” என்று போட்டியைச் சொன்னேன். ஒத்துக்கொண்டாள் ; தப்பித்தேன் ; வீடுவந்து சேர்ந்தேன். “அப்படி என்ன சொன்னீர்கள்” எனக் கேட்கிறீர்களா?. “மனைவி கணவனைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும் என்று கொஞ்சம் மாற்றிச்சொன்னேன் அவ்வளவுதான். என்னைப்போல் பலரும் காணாமல் போனார்கள் என்றால் ஆண்கள்தானே பெண்களை நன்கறிந்து இருக்கிறார்கள். அதனால், ஆண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி.

பெண்களே ! அணித்தலைவர் : பெண்கள் பொருத்தமான கணவனா என்பதனைக் காதலிக்கும்போதே அறிந்துகொள்வார்கள். காத்திருக்கவைப்பது? “அது ஒரு சுகம்” எனக் கவிஞர்கள் பாடுவார்கள்?. சுகமா அது,  போவோர் வருவோர் எல்லாம், வேலைவெட்டி இல்லாதவன் போலப் பார்ப்பார்கள். ஆனால், பெண் அப்படித்தான் சோதிப்பாள். திருமணத்திற்குப் பின் துணிக்கடைக்குப்போனால் காத்திருக்கவேண்டும். பாத்திரக்கடைக்குப் போனால் காத்திருக்கவேண்டும். கல்யாணத்துக்குப் போனால் காத்திருக்கவேண்டும். எங்கு போனாலும் காத்திருக்கவேண்டும். அதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான் காக்கவைப்பார்கள். அப்படியென்றால் மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் பெண்தானே?

     மிகவும் பொறுமையுடையவரைத்தான் திருமணம் செய்வேன், என என்னுடைய தோழி நீண்டநாள் திருமணமாகாமலே இருந்தாள். பல வருடங்கள்கழித்து அவளைப் வழியில் பார்த்தபோது திருமணமாகிவிட்டது என்றாள். “இப்பதாண்டி மகிழ்ச்சியா இருக்கு. கணவன் என்ன செய்றார்?” எனக்கேட்டேன். “புடவை கடையில் வேலை செய்கிறார்” என்றாள். அதனால் பெண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி!

ஆண்களே -2 : நான் மனைவியிடம் “பள்ளிவிளையாட்டுவிழாவுக்கு விளையாட்டுவீரரை அழைக்கச்செல்கிறேன். எப்படி பேசுவார்ன்னு தெரியலை” என்றேன். உடனே அவள், “கால்பந்து வீரரா- திறமையாபேசுவார், இறகுபந்து வீரரா - மென்மையா பேசுவார். பூப்பந்து வீரரா - மணமாகப் பேசுவார். ஓட்டப்பந்தய வீரரா - பாய்ச்சல் பாய்ச்சலா பேசுவார். நீளம் தாண்டும் வீரரா - குதிச்சுகுதிச்சுப் பேசுவார். உயரம் தாண்டும் வீரரா -எகிறிஎகிறிப் பேசுவார். குத்துச்சண்டை வீரரா - அடிச்சு அடிச்சுப் பேசுவார்.” என்றாள். இப்படிச்சொன்ன என் மனைவிதான் மற்றவர்களைப் புரிந்துகொண்டு பேசுகிறாள் எனச் சொல்லாதீர்கள். இவர்கள் அத்தனைப்பேர் மாதிரியும் என் மனைவி பேசுவாள் எனப் புரிந்துகொண்டவன் நான்தானே. அதனால் ஆண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி !

பெண்களே-2: ஆன்லைனில் வகுப்பெடுப்பது பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? குழந்தைகளோட பெற்றோர் மனநிலையையும் தெரிந்து வகுப்பெடுக்கவேண்டும். சில நேரம் குடித்துவிட்டு குழந்தைகளின் தந்தைகள் குறுக்கே பேசுவர்.  ஒரு பழக்கூடையில் இருபது மாம்பழம் மூன்றுபேருக்கு சரிசமமாகக் கொடுக்கமுடியுமா? மீதி எவ்வளவு இருக்கும்.” எனக்கேட்டார். பெற்றோர் ஒருவர் இடைபுகுந்து “சாறு பிழிந்து மூன்று குவளையில் கொடுக்கலாமே” என்றார். ஆசிரியர் பொறுத்துக்கொண்டார். அந்த ஆசிரியரை மடக்கிவிடலாம் எனப்பெற்றோர் ஒருவர் ஒரு மாம்பழம் 5 ரூபாய்னா எனக்கு என்ன வயது?” எனக்கேட்டார். “உங்களுக்கு ஐம்பது வயது” என்றார் ஆசிரியர். அவர் “சரி” எனக் காணாமல்போனார். வகுப்பு முடிந்த பிறகு முதல்வர், “எப்படி அவருடைய வயதைச் சொன்னீர்கள்?” என்றார். “எங்க வீட்டருகே அரைகுறையாக மனநிலைபாதிக்கப்பட்ட ஒருவர்க்கு இருபத்தைந்து வயது” என்றார் ஆசிரியர். அதனால் பெண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி !

ஆண்களே- 3: கணவன் குடிச்சுட்டு வந்து மனைவியை அடிச்சார். “ஏன்யா அடிக்கிற? மனுஷன் தானா நீ? உன்னை நம்பி வந்த பொண்ண இப்படியா அடிப்ப” எனக் கேட்டனர். உடனே அவன், “எனக்கு மட்டும் பாசம் இல்லைனா நெனக்கிறீங்க . அவதாங்க என் உயிரு”. “அப்ப ஏன்யா அடிக்கிற” எனக்கேட்டனர் “இல்லாட்டி அவ அடிப்பாயா ! அதான்” என்றான். இப்படியும் மனைவியைப் புரிந்துகொள்கின்ற கணவனும் உண்டுதானே.

“அம்மா சமையல் செய்றாங்களான்னு ஆயா,  கைப்பேசியில் கேட்டாங்களே’ ஏன் சொல்லலே.” எனக் கேட்டான் மகன். “சொன்னால், உங்கம்மா என்ன கேட்பாங்கன்னு தெரியாதா? மத்த மருமக எல்லாம் வேலைக்குப் போறா. நான் வீட்ல சமையல் செய்றேன்னு குத்திக்காட்டத்தான் ‘சமைக்கிறாளான்னு’ கேட்டிருப்பாங்க. என அம்மாவைத் திட்டுவாள். இது தேவையா?” என்றான். அதனால், மற்றவர்களை ஆண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். நன்றி.

பெண்களே- 3 :

     தாயானவள் நினைத்தால் ஒரு மகனை வெற்றியாளனாக மாற்றிவிடமுடிகிறது. வீர சிவாஜியை ; மகாத்மா காந்தியை  என எத்தனையோ பேருண்டு.   

“என்னிடம் பத்து மரத்துப் பெயர் கேட்டாங்க. பதில் சொன்னேன். வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்றான் கணவன். “நீங்க என்ன பதில் சொல்லி இருப்பீங்கன்னு எனக்குத்தெரியும். “ஐந்து வேப்பமரம் ஐந்து புளியமரமுன்னுதானே சொன்னீங்க”. என்றாள்.

மகனுடைய நண்பன் ஒருவன் :’அம்மா ! உங்க மகனுக்கு எங்க கம்பெனியில வேலை கெடச்சிடுச்சு. என்றான். “தெரியும். இப்பதான் ஜோசியன் அவன் ஜாதகப்படி இந்த மாதம் எதுவும் உருப்படாது” எனச்சொன்னார். இப்படி கணவரையும் மகனையும் புரிந்துகொண்டவள் பெண்தானே? அதனால் மற்றவர்களைப் பெண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி.

நடுவர்: பட்டிமண்டபத்து நடுவர் என்றால் நல்ல கருத்துக்களை நடுபவர் என்றே பொருள். அவ்வகையில் நல்ல கருத்துக்களை எல்லாம் இப்போது பேசிய, அறுவர் அல்ல ஆறுபேரும் அழகாகத் தம் கருத்தை முன்வைத்தனர்.

     மனைவியிடம் சண்டைபோட்ட கணவன், சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே போனான். “வெயிலில் வெளியே போகாதே” எனத் தாய் சொல்கிறாள். கேட்காமல் போகிறான். உடனே மருமகளிடம் “என் புள்ளய கெடுத்து வெச்சுருக்க” என்றாள். “நானா கெடுத்தேன். அவர்தான் கெடுத்தார். அதனால்தான் நாலு பேரக்குழந்தைங்க. என்பேச்சைக் கேட்டு இரண்டோட நிறுத்தி இருக்கலாம். காசு பிரச்சினை இல்லாம இருந்திருக்கும். இப்ப சண்டைனா என்ன பண்றது. சாப்பாட்டு செலவுக்காவது பணம் கொடுக்கணும் இல்லையா?”. என்றாள். “அதுக்கு இப்படியா திட்டி வெயிலில் அனுப்புவ. அவன மடிமேல பூவாட்டம் தாங்கினேன். தெரியுமா” என்றாள் மாமியார். “நீங்க தாங்கும்போது ஐந்துகிலோ. இப்ப அவர் எவ்வளவு கிலோ தெரியுமா? வீட்டுத்தேவைக்கு காசு கொடுத்தா நான் ஏன் அவரை குறை சொல்லப்போறேன்” என்றாள். கணவனையும் மாமியாரையும் கையாள்வது  ஒரு கலை தானே.

     புகுந்தவீட்டினையே சொந்தவீடாக மாற்றும் திறமை ஆணைவிட பெண்ணுக்குத்தானே அதிகம். தனியாக வந்து அனைவரையும் புரிந்துகொண்டு செயலாற்றும் திறனுடையவளாகப் பெண்தானே இருக்கிறாள் ; சிறக்கிறாள்.

எனவே, மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் பெண்களே என உங்கள் கரவொலியைக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறேன். நன்றி ! வணக்கம் !

 

 

 

புதன், 14 ஜூலை, 2021

நொதுமல் என்னும் பழிச்சொல்

 


நொதுமல் என்னும் பழிச்சொல்

“நாலுபேர் பாத்தா ஏதாவது சொல்லுவாங்க” என்னும் வழக்கம் நம்மிடையே நிலவி வருவது உண்மைதானே. ஒருவர், மிதிவண்டியில் (ஈருருளி) செல்லும்போது தவறி விழுந்துவிட்டால்கூட, யாரும் பார்க்குமுன்னே எழுந்துவிடவேண்டும் என எண்ணுவதால்தானே விரைந்து எழுகிறார். ஏனென்றால், மிதிவண்டி கூட ஒழுங்காக ஓட்டத்தெரியவில்லை  என்னும் பழிச்சொல் யார் வாயிலிருந்தும் வந்துவிடக்கூடாது என அவர் எண்ணியதால்தானே? என்ன அருமையான எண்ணம். இந்த ஒன்றிற்காகவே அவரை நீங்கள் பாராட்டவேண்டும்தானே?

     ஆனால் இன்று, “யார் என்ன நினைத்தால் என்ன? என விரும்பியபடி அணில்வால்போல் தலைமுடியை வெட்டிக்கொள்வது ; தலையில் படம் வரைந்துகொள்வது ; உள்ளாடை போலிருக்கும் மெல்லிய ஆடை அணிவது ; கிழிந்த கோணிப்பை(ஜீன்ஸ்) அணிவது என வழக்கமாகிவிட்டதெல்லாம் பழிக்கு அஞ்சாததால்தானே. அன்று தலைப்பாகை. வேட்டி, சட்டை எனக் கம்பீரமாக நடந்துவந்ததற்குக் காரணம், தங்கள் மதிப்பு உயரவேண்டும் என்பதனால் மட்டுமன்று. சுற்றியிருந்த பெண்களுக்கு, தங்களது ஆடை அச்சுறுத்துவதாகவோ, கூச்சம் தரக்கூடியதாகவோ அமையக்கூடாது என்பதுவே. எத்தனை உயர்வான எண்ணம். ஆங்கிலேயர் வரவால் ஆடை அலங்காரமும் அவதாரமாகிவிட்டது. பழிச்சொற்களும் பெருகிவிட்டது.  உண்மைதானே.

ஒரு அழகான குறும்படம்.  முதலில் நடுத்தர வயதில் இருபது நபர்கள் கொண்டகுழு அரங்கத்திற்கு வருகிறது. நிகழ்ச்சி நடத்துபவர், ஒவ்வொருவரிடமும் படம் வரையத்தக்க வெண்மையான தாளினை கொடுக்கிறார். “நீங்கள் இயற்கை குறித்து படம் வரையவேண்டும். உங்களுக்காக இருபது மேசைகள் உள்ளன. அங்கு அனைத்து வண்ணக் கரிக்கோல்களும்(பென்சில்) உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு அடுத்து ஒரு குழுவரும்” எனக்கூறி அந்த நிகழ்ச்சி நடத்துகிறார். அரைமணி நேரத்தில் வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்துவிடுகின்றனர். அவர்களைக் காத்திருப்பு அறைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த குழுவை வரையச்சொல்கிறார்கள். அவர்கள்  சராசரியாகப் பத்துவயது குழந்தைகள். குழந்தைகள் அரைமணி நேரத்தில் படம் வரைந்துவிடுகிறார்கள்.

இப்போது வலப்பக்கம் ஒரு குழுவும் , இடப்பக்கம் இரண்டாவது குழுவும் கரவொலி எழுப்புகின்றனர். நிகழ்ச்சியை நகர்த்துபவர் முதலில் நடுத்தரவயதுள்ளோரின் படத்தைக் காண்பிக்கச்சொல்கிறார். அவர்கள் வண்ணப்படங்களைக்காட்ட, குழந்தைகள் வாயைப் பிளந்து கரவொலி எழுப்புகின்றனர். பெரியவர்களும் புன்னகையோடு அவர்களுடைய கரவொலியை ஏற்கின்றனர். அடுத்து, குழந்தைகள் படத்தைக் காட்டச்சொல்கிறார் நிகழ்ச்சி நடத்துபவர். குழந்தைகள் கூச்சத்துடன் தாங்கள் வரைந்த படத்தைக் காட்டுகிறார்கள். எல்லாம் கருப்பு நிறம் மட்டுமே. மற்ற வண்ணங்களை முதல் குழு தீர்த்துவிட்டதால் வண்ணமில்லை. எங்கும் சோகம் பரவிவிடுகிறது. பெரியவர்களின் கண்களில் கண்ணீர் வெளியேவராமல் குரல் தழுதழுக்கிறது. குற்ற உணர்வுக்கு மனம் அஞ்சுகிறது. இதுதான் இன்றைய சுற்றுச்சூழலைக் காக்கும் நிலை என அந்த 'டாடா' நிறுவனத்தின் குறும்படம் அழகாகப் படம்பிடித்துக்காட்டிவிட்டது. பழிச்சொல் ஏற்படாமல் வாழ்வதுதானே அழகு. அழகு மட்டுமன்று அறிவும்தான்.

“மரங்களை நாங்கள் போற்றுகிறோம். நீங்கள் எளிதாக வெட்டிவிடுகிறீர்கள்” என அந்நியர்கள் நம்மைக் குறைகூறுகின்றனர். அவர்கள் மரங்களை வெட்டுவதில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறார்கள். அதனால் நம்மைக் குறைகூறுகிறார்கள். இது இன்றைய நிலைதான். முந்நாளில், மரங்களை மரங்களாக அல்ல, தெய்வங்களாகப் போற்றினர் தமிழர். ஒவ்வொரு கோவிலிலும் ‘தல விருட்சம்’ என வணங்கினர். மீண்டும் மரங்களை வளர்த்தால் பழிச்சொல் நீங்கும்தானே.

“பழைய தமிழகம் தாய் ;  புதிய தமிழகம் ஒரு சேய். தாயிடமிருந்து சேய் கற்க வேண்டியவை பல உள்ளன. பழைய தமிழகமாகிய அன்னையின் அனுபவ அறிவுரைகளைப் புறக்கணிக்கமுடியாது. அந்த அறிவுரைகளைப் புதிய தமிழகம் எவ்வளவிற்கு ஏற்கின்றது” (மு.வ. அன்னைக்கு, முன்னுரை) எனத் தமிழறிஞர் மு.வரதராசனார் கூறுவது இப்பழிச்சொல்லை நீக்கவும் துணைசெய்யும்தானே?

புலவர்கள், மக்களுக்கு வழிகாட்டியதோடு மன்னர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினர். புலவர் மன்னரிடம் ‘இப்படி செய்வாயாக’ எனக்கூறமுடியாதுதானே? அதனால் ‘இதுதான் இயல்பு’ எனக்கூறுகிறார். இதுவே ‘ஓம்படை” எனப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் தெளிவுபடுத்துகிறார்.  மன்னர்  எவ்வாறு பழிச்சொல் நீக்கி வாழவேண்டுமென்பதனை,

ஒன்றில் இரண்டாய்ந்து மூன்று அடக்கி நான்கினால்

வென்று களங்கொண்ட வேல்வேந்தே – சென்றுலாம்

ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்துவென்று ஆறு அகற்றி

ஏழ்கடிந்து இன்புற்று இரு

                                        (புறப்பொருள்வெண்பாமாலை; பாடாண்திணை:36)

என்னும் ‘ஓம்படைக்கான” வெண்பா எடுத்துக்காட்டுகிறது.

“ஒன்றாகிய உண்மை ஞானத்தை உணர்ந்து ; இரண்டாகிய வினைகளை ஆய்ந்து ; மூன்றாகிய பகை, நட்பு, நொதுமல் என்னும் மூன்றினையும் எண்ணி ; யானை, தேர், புரவி, காலாள் என்னும் நால்வகைப் படையால் போர்க்களத்தில் வெற்றிகொள்கின்ற வேந்தனே!, ஆழ்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில்  மெய்,வாய்,கண்,முக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் வென்று, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும்  ஆறு உறுப்புகளையும் பெருக்கி, பேராசை ; கடுஞ்சொல் ; மிகுதண்டம் ; சூது ; பொருளீட்டம் ; கள் ; காமம் இவை ஏழு குற்றங்களையும் நீக்கி நெடுங்காலம் வாழ்வாயாக” என வாழ்த்துகிறார்.

ஒன்று முதல் ஏழு வரை அடுக்கி பாடப்பட்டுள்ள இவ்வெண்பாவில் அறிவுரை மட்டுமின்றி அழகுரையும் உள்ளதுதானே?

வெள்ளி, 9 ஜூலை, 2021

தமிழில் விளையாடிய ஔவையார்

 


தமிழில் விளையாட்டு

     ‘தமிழ்’ மூன்றெழுத்து முத்து. அது மூவுலகையும் மகிழ்விக்கும் அருமொழி. அதனால்தான், எவ்வளவு காலமாகவோ தமிழ்மொழியை, தமிழரே படிக்கக் கூடாதென எத்தனையோ ஆங்கிலப்பள்ளிகள் தடுத்து நின்றாலும் தமிழின் பெருமையினைக் குறைக்கமுடியவில்லை. ஏனெனில், இது தெய்வத்தமிழ். தமிழுக்கு எதிராக நின்றோரெல்லாம் தமிழ்ப்படித்து மயங்கி நின்றார் ; தமிழுக்கு உறவானார் ; நூல் படைத்தார்.  உருகி நின்றார் ; தமிழராக இறப்பதிலே பெருமை கொண்டார் ; அடுத்த பிறவியில் தமிழராகப் பிறந்திடவே வேண்டி நின்றார். உலகமொழிகளிலேயே ஒரு மொழிக்குத்தலைமையாகத் தெய்வமே இருக்கிறதெனில், அது தமிழுக்கு மட்டும்தான். ‘தமிழ்க்கடவுள் முருகன்” சினந்து நின்றபோது தமிழால் திருத்திய ‘தமிழ் மூதாட்டி’ ஔவையின் தமிழறிவை அறியாதார் யார்?

     ஔவையாரின் தமிழ் விளையாட்டு ஒன்றைப்பற்றிப் பேசுவோமா?. இவ்விளையாட்டு கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம். முத்துக்களை இருவரும் வாரி இரைத்தால் மகிழாதார் யார்?

  கம்பன் ஔவையைக் கண்டு புதிர்போடுகிறார். அதனை விடுவிக்கவேண்டும் என்பதே விளையாட்டு.

ஒருபுதிரை – இரு பார்வையில் நோக்குவோம்

முதல் பார்வை:

     “ஒரு காலடி நாலிலைப் பந்தலடி” இதுவே புதிர்.

ஒரு காலுடையது. நான்கு இலைகள் உள்ளது எது? என்பதனை ஒரே அடியில் இரண்டு அடி’ போட்டுக் கேட்கிறார்.

விளையாட்டு என்றாலும் விதிமுறைகள் இருக்கும்தானே? விதிமுறை இல்லாத விளையாட்டு ஏது? ஆனால், கம்பன் மகழ்ச்சியில் மதிப்பின்றி விளித்துவிடுகிறார்.

இதைக் கேட்டு ஔவையார் விட்டுவிடுவாரா? மகாகவி காணாத புதுமைப்பெண்ணாயிற்றே அவர்.

எட்டே கால் இலட்சணமே எமன் ஏறும் வாகனமே பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாய் அடாது.  (ஔவையார் பாடல்)

 

எட்டே கால் இலட்சணமே : அகரம் எட்டைக் குறிக்கும். வகரம் கால் அளவினைக்        குறிக்கும். எனவே எட்டேகால் என்பது அ+வ = அவ என வரும்தானே.  எனவே அவலட்சணமே என்பது முதல் வசை.

எமன் ஏறும் வாகனம் : எருமை - இரண்டாம் வசை

பெரியம்மை வாகனம் : ஸ்ரீதேவிக்கு மூத்தவளான மூதேவியின் வாகனம் – கழுதை –   மூன்றாம் வசை.

கூரையில்லா வீடு : குட்டிச்சுவர் – நான்காம் வசை.

குலராமனின் தூதுவன் : குரங்கு – ஐந்தாம் வசை

ஆரையடா  : ‘ஆரைக்கீரை’தான் விடை என்றாள்.

சொன்னாய்? : சொல் நாய் – ஆறாம் வசை

அடா : மதிப்பு குறைவாக சொல்லுதல்.

என்னே புலமை?  ‘ஆரைக்கீரை’ என விடையை நேரடியாகக் கூறாமல் பாடலில் சொல்லும் அழகே அழகுதானே?. ‘முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்’ என இரண்டு ‘அடி’ போட்டு மதிப்பின்றி விளித்துப்பாடிய புலவனை ‘அடா’ என இரு முறை கூறியதோடு ஆறு வசைச்சொற்களுடன் பாடினார்.

இது இருவரும் அரங்கேற்றிய நாடகமாகத்தான் இருக்கும். மக்கள் மதிப்புடன் பேசப்பழகவேண்டும் என உணர்த்துவதற்காகவே இந்நாடகம். இல்லையெனில், ஒழுக்க சீலரான இராமனையும், பொறுமைக்கு பெருமை சேர்த்த சீதையையும் பாடிய கம்பர் தமிழ் மூதாட்டியை இப்படிப் பாடி இருப்பாரா? இல்லைதானே. இப்படி எண்ணுவதால் யாருக்கும் கேடில்லை எனில் இப்படியே எண்ணுவோம்.

இரண்டாவது பார்வை

கவிச்சக்கரவர்த்தி தமிழ்மூதாட்டியை மதிப்பின்றி பேசியிருக்கமாட்டார். “ஔவையார், இவ்வாறு பாடியது தவறு” எனக் கம்பரின் அடியார் ஔவையாரின் அடியாரிடம் கேட்கிறார்.

“ஒரு காலடி நாலிலைப் பந்தலடி”

என்பதன் முதல் ‘அடி’ அளவினைக் குறிக்கும். ஆரைக்கீரையினது காம்பு ‘கால் அடி’ என்னும் அளவினைத்தானே குறிப்பிட்டார். இரண்டாவது ‘அடி’யானது ‘கீழ்’ என்னும் பொருளினைக் குறிக்கிறது. நான்கு இலைகள் கீழே அந்த காம்பு உள்ளது என்பதனை உணர்த்தவே அவ்வாறு பாடினார் எனக் கூறுகிறார்.

 உடனே ஔவையாரின் அடியார் விடையளித்தார். அவர்மட்டும் புலமையில் குறைந்தவராகவா இருப்பார்?. கம்பரைப் போலத்தான் ஔவையாரும் மதிப்புடன் பாடியுள்ளார் எனக் கூறினார்.  “ஔவையாருடைய பாட்டில் குற்றம் இல்லை. உம் நோக்கில்தான் குற்றம் இருக்கிறது.” என்றார்.

     எட்டே கால் இலட்சணமே : எட்டி அடிவைத்து விரைந்து நடக்கும் கால் அழகன்.-                                                                                   முதல் வாழ்த்து

     எமன் : எமக்கு உற்றவனே – இரண்டாம் வாழ்த்து

ஏறும் வாகனம் : வளர்கின்ற செல்வம் உடையவனே - மூன்றாம் வாழ்த்து

முட்டமேல் கூரையில்லா வீடு : இணையற்ற உலகமாகிய தேவலோகம்                                        போன்றவனே –நான்காம் வாழ்த்து

குலராமனின் தூதுவன் :  இராமனின் பெருமைகளை எடுத்தியம்பியவனே –

ஐந்தாம் வாழ்த்து

ஆரையடா  சொன்னாய் : ஆரைக்கீரை புதிரை என்னிடமா சொன்னாய் ?

அடா : வெற்றிகொள்ளமுடியுமா? முடியாது.

என வாழ்த்தித்தானே பாடியுள்ளார். சரியாகப் பாருங்கள் என்றார்.

     புலவர்கள் தமிழில் விளையாடுவதும், புலவரின் வழித்தோன்றல்கள் தமிழில் விளையாடுவது அழகுதானே. பாடல் இயற்றிய புலவரின் உள்ளத்தை அவரன்றி யாரறிவார்? எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொண்டு மகிழலாம். ஆனால், அது ‘பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ?” என வருந்தும் அளவிற்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல் நன்று. வள்ளலார் வழியில் சென்றால் அனைவருக்கும் நன்மைதானே?

 

************