தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

அகநானூற்று முல்லை நிலப்பாடல்களில் தமிழர் மாண்பு - Agananooru


அகநானூற்று முல்லை நிலப்பாடல்களில் தமிழர் மாண்பு
முனைவர் ம..கிருட்டினகுமார், தமிழ்ப் பேராசிரியர்(துணை), புதுவை-605008. உலாப்பேசி :9940684775

        அகநானூறு பெயராலும் எண்வைப்பு முறையாலும் தனித்துவம் உடையது. அகநானூறு அகம், அகப்பொருள், நெடுந்தொகை எனக் குறிக்கப்படுவதன் வழி இந்நூல் அகப்பொருளுடைய சிறந்த 400 பாடல்களை உள்ளடக்கியது என்பதனையும் எட்டுத்தொகை நூல்களில் நெடுமையான அடிகளையுடையதுமாக (சிற்றெல்லை 13 பேரெல்லை 31) விளங்குவதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இலக்கிய நயமில்லாத எவ்வகை படைப்பும் காலத்தை வென்று நிற்காது. சங்க இலக்கியங்கள் அனைத்தும் தமிழரின் வாழ்க்கை முறையினைக் காட்டும் ஆடியாக மட்டுமின்றி புலவர்களின் புலமை வளத்தினையும் வெளிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. மலரினைப் பொன் தட்டில் வைத்து இறைவனுக்குப் படைத்தல் போல மலர்ந்த தமிழர் வாழ்வினைத் தங்க இலக்கியமாம் சங்க இலக்கியத்தின்வழி எடுத்துரைத்தனர். சங்க இலக்கிய ஆரத்தில் அகநானூறு என்னும் ஒரு மணியினை மட்டும் எடுத்து அதன் ஒரு கூறான முல்லைநிலப் பாடல்களை (4,14,24… என அமையும் 40 பாடல்கள்) மட்டும் ஆய விழைந்ததன் விளைவாகவே இக் கட்டுரை அமைகிறது
.  
முல்லை நிலப்பாடல்களின் சிறப்பு
        உலகிலேயே தமிழர்கள் மட்டுமே தம்முடைய பாடல்களில் முதல், கரு, உரிப்பொருளை வைத்துப்பாடினர். இவ்வாறு பாடுவது கடினமாயினும் அதனை எளிமையாக்கிக் கொடுத்த பெருமை தமிழர்க்கே உரியது. இதன்வழி படைப்பாளி என்பவன் எதனையும் முழுமையாக அறிந்து நன்கு உணர்ந்து அவ்இலக்கியத்தில் தோய்ந்து படைப்பை உருவாக்க வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் சங்க இலக்கியங்களை பாடியுள்ள நிலையினைக் காணலாம். செய்யுள் அமைப்புகளுடன் மட்டுமின்றி பாடக் கூடிய வகையின் இனிய பண்களையும் அமைத்துப் பொருளால் மட்டுமின்றி சொல்லாலும் இனிக்கச் செய்த பெருமை சங்கப் புலவர்களுக்கே உரியது. அவ்வரிசையில் முல்லை நிலப் பாடல்களும் அதற்குரிய  முதல்,கரு, உரிப்பொருள்களைக் கொண்டே படைக்கப்பட்டுள்ள சிறப்பினை ஒவ்வொரு பாடலிலும் காணமுடிகிறது  இப்பெருமை அகநானூற்றிலுள்ள அனைத்துத் திணைகளுக்கும் உரியதாயினும் முல்லைத் திணைப் பாடல் மட்டுமே முல்லை என்னும் சொல்லுடனே தொடங்கி அந்நிலத்தின் பெருமையினை உணர்த்துவதனை
        முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
        பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ             (. நா. 4 : 1-2)   

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. முல்லையின் கூரிய நுனியினையுடைய அரும்புகள் தோன்ற என முல்லை நிலப் பாடல்கள் அரும்புவதனையும் அவை பின்னால் விரிந்து செழிக்கப் போவதனை உணர்த்தும் வகையில் கொன்றை மரத்தின் முகைகள் கட்டு அவிழ்ந்து விரிய என்னும் தொடராக அமைத்துள்ளதனை எண்ணி மகிழலாம்.

        முல்லை நிலத்திற்குரிய காலம் கார்காலம். இந்த கார்காலத்தில் மலை மீது அச்சம் தரும் வில்லாக வானவில் தோன்றுகிறது. முரசு போன்று மேகம் முழங்குகிறது. கடல் நீரை முகந்து உலகையே வலப்பக்கமாக வளைத்துத் தாழ்ந்து பெய்யும் மழையானது திசையையே மறைத்து விடுகிறது.  அவ்வாறு பெய்யும் மழையால் அம்முல்லை நிலமே காட்சிக்கு அழகாகவும் இன்பம் தரக்கூடியதாகவும் விளங்கியதனை

        மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
        பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித்
        தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
        மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
        இருநிலங் கவினிய ஏமுறு காலை           (. நா. 84 : 1-5)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. மேகம் என்னும் முரசொலிக்க வானவில்லிருந்து பெய்யும் அம்பு மழையால் உலகமே வளைக்கப்பட்டுவிடுவதனை இப்பாடலாசிரியர் எழிலுற காட்சிப்படுத்தியுள்ளார். முல்லை நிலத்தில் முல்லைப் பூக்களோடு பல பூக்கள் பரந்து கிடக்கிறது. இவ் அழகு சிறந்த ஒவியத்தின் அழகு போல காட்சியளிப்பதனை

        …………………………………………………………………….. நன்பல
        முல்லை வீகழல் தாஅய் வல்லோன்
        செய்கை அன்ன செந்நிலப் புறவின்           (. நா. 134 : 4-6)

என்னும் அடிகள் படம்பிடித்துக்காட்டுகின்றன. இவ் அடிகள் இயற்கையைப் படைத்த இறைவனை ஓவியனாகக் காட்டியுள்ள திறத்தினை எண்ணி மகிழலாம். தம் ஒழுக்க வாழ்வால் மழையைப் பெய்விக்கும் திறமுடைய கற்புடை மகளிர் முல்லை மலரை விரும்பி அணிந்ததனை

        முல்லை சான்ற கற்பின்
        மெல்லியற் குறுமகள் ………………….                 (. நா. 274 : 13-14)       

என்னும் அடிகள் எடுத்துரைத்து முல்லையின் பெருமையினைச் சுட்டிக்காட்டுகின்றன.

தொடக்கமே தொடக்கம்

        தமிழர் வாழ்க்கை அன்பில் தொடங்குகிறது. அன்பில் வளர்கிறது. அன்பில் தழைத்து அன்பில் முடிகிறது. முல்லை நிலப் பாடலின் தொடக்கம் அன்பின் முதிர்ச்சியால் விளையும் அருளில் தொடங்குகிறது. தலைவன் தலைவி மீதுள்ள அன்பினை வண்டுகளிடம் காண்கிறான். அவை தேரிலிருந்து எழும் ஒலியால் அஞ்சும் என எண்ணியவனாய் தேர் மணியினை ஒலிக்காதவாறு கட்டுகிறான். இதனை

        பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
        தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
        மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்               (. நா. 4 : 10-12) 

என்னும் அடிகள் வழி உணர்த்துகிறார் குறுங்குடி மருதனார். பகைவரைக் கண்டு அஞ்சாத தலைமகன் வண்டினை கண்டு அஞ்சுவதாகக் கூறுவது அந்த வண்டின் மீது கொண்ட அருள் காரணமாகத் தோன்றிய அச்சம் என உரையாசிரியர்கள் (.மு.வேங்கடசாமி நாட்டார் ,ரா.வேங்கடாசலம்பிள்ளை) கூறுவது இங்கு எண்ணத்தக்கது. இவ்வாறு முதல் பாடலே தலைவனின் அன்பினை எடுத்துரைத்து அன்பிலேயே வாழ்க்கைத் தொடங்க வேண்டும் என்பதனை அறிவுறுத்துகிறது. வண்டிற்கு செவியறிவு உண்டு என்பதனை உணர்ந்து செயல்பட்ட தலைவனின் அன்பை புலப்படுத்தியதன்வழி புலவரின் அறிவியல் அறிவினையும் அறிந்துகொள்ள இயலும்.

தலைவன் மாண்பு

        தலைவன் தலைவியிடம் மிகுந்த அன்பினையுடையவன். வினை ஆடவர்க்கு உயிர் என்பதனால் போர் செய்து முடித்து வந்தவன் அதற்குரிய பரிசினையும் பெறாது தலைவியைக் காண வந்த நிலையினை

        செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறலெனப்
        பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கி          (. நா. 174 : 3-4)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. வெற்றியாகிய செல்வம் உடையவர்க்கு  பெருமை என்றும் நிலைக்கும். அத்தகையோர்க்கு தண்ணுமை முழக்குடன் பொன்னாலான பூவினை அரசன் அளித்து சிறப்பு செய்வான். அந்த சிறப்பினைப் பெறாது தலைவன் தலைவியைக் காண வருகிறான். இதன்வழி தலைவனின் அன்பை  புலப்படுத்தும் நயத்தைக் காணலாம். தலைவன் தன் துணையின்றி வாழத் தெரியாதவன் என்பதை உணர்ந்தவள் தலைவி. எனவே, தன் வருத்தம் அறியாது இருப்பினும் அவனுடைய வருத்தத்தை அறிவான் எனத் தலைவி கூறுவதனை

        நம்நிலை அறியா ராயினும் தம்நிலை
        அறிந்தனர் கொல்லோ தாமே ……………….         (. நா. 264 : 10-11)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. இதன்வழி தலைவிக்கு விளையும் துன்பம் தலைவனுக்கே உரியதாகக் கருதும் தலைவனின் காதல் நிலையினை உணரலாம்.

தலைவி மாண்பு
        தலைவி இல்லற மாண்பினை காக்கும் பெருமைக்குரியவள். தலைவி தனக்கு விளையும் துன்பத்தினை மறைத்து தலைவனின் புகழைக் காப்பவள். துன்பமானது சொல்லக் கூடிய அளவினைக் கடந்தாலும் அதனைக் குறைவாகச் சொல்லும் பக்குவமுடையவள் என்பதனைத் தலைவனின் கூற்றாகப் புலப்படுத்துவதனை

சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும்         (. நா. 144 : 8)

என்னும் அடி எடுத்துரைக்கிறது. தலைவனைப் பிரிந்ததால் உண்டான துன்பத்தை தன் புதல்வனிடம் மறைத்து புன்முறுவல் காட்டியதனை

        பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
        வருகுவை யாயின் தருகுவென் பாலென
        விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்        (. நா. 54 : 18-20)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. பொன்னாலான தாலியினை அணிந்த மகனை அன்புடன் விரலால்  அழைப்பதனைப் பயிலச்செய்து ஒருக்கணித்து நோக்கும் அமரிய கண்களையுடையவளாய் தலைவி இருந்ததனை இப்பாடல் புலப்படுத்துகிறது. இப்பாடலின்வழி மகன் தாலி அணிந்திருந்தனையும் அறியலாம் வினைமேற் சென்ற தலைவன் வருகைக்காக்க் காத்திருக்கும் தலைவி அவன் வராதிருப்பினும் நலமாக இருந்தால் போதும் என எண்ணக்கூடியவளாக இருந்ததனை

        வரினும் வாரா ராயினும் ஆண்டவர்க்கு
        இனிது கொல்  வாழி தோழி ……………………..                (. நா. 244 : 7-8)

எனும் அடிகள் புலப்படுத்துகின்றன. இதன்வழி தலைவியின் எல்லையில்லா அன்பினை உணரமுடிகிறது.

ஆற்றுப்படுத்தும் தோழி

        தோழி தலைவியினிடம் மிகுந்த அன்புடையவள். தலைவியினுடைய பிரிவுத் துயரைத் தீர்க்கும் நுட்பமுடையவள். தலைவன் முதல் ஊரார் வரை அனைவருடைய உள்ளத்தினை அறிந்து செயல்படும் திறமுடையவள் தோழி. அவ்வாறே  இங்கும் தலைவியைத் தேற்றுவதனை

        மருண்டமான் நோக்கம் காண்டொறும் நின்னினைந்து
        திண்டேர் வலவ கடவெனக் கடைஇ
        இன்றே வருவர் ஆன்றிகம் பனியென        (. நா. 74 : 10-11)        

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. இதன் வழி தலைவன் மானைக் கண்டு தலைவியை நினைத்து வருதலையும், அன்புடையவனாதலால் தேரை விரைவாகச் செலுத்தக் கூறுவானெனவும் இன்றைக்கே வருவானெனவும் கூறி தலைவியின் துயரைக் களைய முனையும் சிறப்பினைக் காணலாம்.

அரசனும் தானையும்

        அரசனே போரினை நடத்தவதிலும் வெற்றியைக் கொண்டாடுவதிலும் முதன்மையானவன்.   தானைக்கு விளையும் வெற்றியும் தோல்வியும் அரசனுக்குரியதாகவே அமைகிறது. எனவே பொறுப்புடன் தன் கடமையைச் செய்யும் பொறுப்புடையவனாகத் திகழ்ந்ததனை

        அடுபுகழ் மேவலோடு கண்படை யிலனே
        அமரும் நம்வயின் அதுவே ……………………..          (. நா. 214 : 7-8)
       
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. இதன்வழி அரசன் வெற்றி என்னும் புகழைப் பெற போரைச் செம்மையாக நடத்தும் பொருட்டு உறக்கமின்றி இருந்ததனை அறியலாம். யானை மறத்தின் பெருமையினை விளக்கவந்த புலவர் அதன் பிளிறலைக் கொண்டே அதன் ஆற்றலை எடுத்துரைக்கிறார். வானில் இடி முழங்கினாலும் அதற்கு ஈடாக முழங்கும் வலிமையுடைய களிறுகள் பாசறையில் சுற்றிவந்ததனை

        ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும்
        கடாஅ யானை கொட்கும் பாசறை            (. நா. 144 : 12-13)

என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன. போர் வீர்ர்கள் பலநாளும் தூக்கமின்றி கடுமையாகப் போர் செய்ததனால் இறந்தவர்ப் போல உறங்குவதனையும் முழுமையான வெற்றி கிடைக்காததனால் அரசனின் சினம் அடங்காதிருத்தலையும்

        இரவுத்துயில் மடிந்த தானை
        உரவுச்சின வேந்தன் பாசறை யேமே                 (. நா. 24 : 17-18)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. வேந்தன் தாம் கருதி வந்த திறையைக் கொடுத்தால் அப்பகைவரையும் நட்பாக்கிக் கொள்ளும் பெருமிதத்துடன் இருந்ததனை

        வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
        தந்திறை கொடுத்துத் தமராயினரே           (. நா. 44 : 1-2)

என்னும் அடிகளின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. பகைமை இன்றி பொருளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட நிலையினையும் உணரலாம்.

தேரும் பாகனும்

        தலைவன், தன்னிடம் மிகுந்த அன்புடையவனாகவும் குறிப்பறிந்து செயல்படும் திறமுடையவனாகவும் இருப்பவனையே தேர்ப்பாகனாக அமர்த்தியிருந்தான். எனவே முல்லைநிலப் பாடல்களில் 19 பாடல்கள் தேர்ப்பாகனிடம் தலைவன் கூறுவதாக அமைந்துள்ளன. தேர்ப்பாகன் திறமுடையவனாக இருந்தாலே தலைவன் தன் பணியைச் சிறப்பாகச் செய்யமுடியும். தேரும் , தேரில் பூட்டப்பட்ட குதிரையும் சிறப்பாக இருந்தால்தான் தேர்ப்பாகன் தனது பணியைச் செம்மையாகச் செய்ய இயலும்.  உலகத்தையே கடக்கும் வல்லமை வாய்ந்ததாகவும் பறவையைப் போல் விரைந்து செல்லக்கூடியதாகவும்  வனப்பான குதிரையினை ஆராய்ந்து செலுத்தும் வல்லமையுடையவனாகத் தேர்ப்பாகன் இருந்ததனை

        ………………………………………… பாக உளை அணி
        உலகுகடப் பன்ன புள்ளியற் கலிமா
        வகையமை வனப்பின் வள்புநீ தெரிய        (. நா. 64 : 1-3)          

என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன. தேர்ப்பாகன் தேரினை செலுத்துவதில் மட்டுமின்றி நூலறிவுடையவனாகவும் இருந்ததனை

        நூலறி வலவ  கடவுமதி உவக்காண்         (. நா. 114 : 8)

என்னும் அடி எடுத்துக்காட்டுகிறது. தேர்கள் நூலறிவுடன் புனையப்பட்டிருந்ததனையும் அதன் வேகம் கண்ணால் காண இயலாதவாறு விரைந்த சிறப்பினை

        காலென மருள ஏறி நூலியற்
        கண்ணோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர்     (. நா. 234 : 8-9)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. இதன்வழி  தேரைச் செம்மையாகச் செய்யும் வல்லமையினைப் பெற்றிருந்த பெருமையினை உணரலாம். தேர்ப்பாகன் தலைவன் மகிழும் வகையில் தேரினை விரைவாகச் செலுத்திய திறனை

        இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே
        வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ
        மானுரு வாகநின் மனம்பூட் டினையோ
        உரைமதி வாழியோ வலவ ……………………..                 (. நா. 384 : 8-11)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. இவ்வளவு விரைவாகத் தேரை ஓட்டி வருவதற்கு குதிரைக்கு ஈடாக காற்றைப் பூட்டினாயா அல்லது மனத்தைப் பூட்டினாயா எனப் பாகனை வியக்கும் தலைவனின் நிலையினையும் இங்கு காணலாம்.

தமிழர் வாழ்க்கை

        தமிழர் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர். தலைவனின்றி தலைவி விருந்தோம்புதல் இல்லை. வினைமேற்சென்ற தலைவன் வருகையால் இனி விருந்தோம்பல் நிகழும் என்பதனை

        விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழை   (. நா. 324 : 1)

என்னும் இவ் அடி எடுத்துக்காட்டுகிறது. தலைவன் வருகையை விருந்தால் புலப்படுத்தும் நயத்தினை இங்கு காணலாம். முட்களும் கற்களும் நிறைந்த இடங்களில் வேடர்கள் எவ்வாறு நடந்தனர் என்னும் ஐயத்தைக் களையும் வகையில் வேட்டுவன் செருப்பணிந்திருந்தனை

        தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன (. நா. 34 : 3)
என்னும் அடி எடுத்துக்காட்டுகிறது. மானிடருக்கு மட்டுமின்றி விலங்குகளும் பசியாறும் வகையில் அகன்ற குளம் அமைத்து  இருந்த சிறப்பினை
        பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை                (. நா. 44 : 17)
என்னும் அடி எடுத்துரைக்கிறது. இதன்வழி யானை படியும் குளத்தினையும் நெருங்கிய காடுகளையும் உடையதாக ஊர்கள் இருந்ததனை  அறியலாம். அனைத்து விலங்குகளைக் காட்டிலும் பெரிய அடியினை உடையதால் பொங்கடி எனக் குறிப்பிட்டுள்ள திறத்தினையும் காணலாம். தமிழருடைய இசைக் கருவிகளுள் முரசம் சிறப்புடையது. அதனை முறையாகச் செய்த திறத்தினை
        ஓடா நல்லேற் றுரிவை தைஇய
        ஆடுகொண் முரசம் இழுமென முழங்க              (. நா. 334 : 1-2)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. பின்வாங்காது வீர்முடைய நல்ல ஏற்றினது தோலால் செய்யப்பட்டுஇழும்எனச் சிறக்க ஒலிக்கும் முரசு எனக் குறிப்பிடுவதன்வழி தமிழரின் பெருமையினை அறியலாம்.

இசைந்த வாழ்வினர்

        தமிழர் இசையுடன் இரண்டறக் கலந்திருந்தனர். எனவே ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு பண்ணினை அமைத்துப் பாடிய பெருமை தமிழருக்குண்டு. முல்லை நிலத்திற்குரிய மாலைக் காலத்தில் அழகிய குழலிசையினை இடையறாது இசைக்கும் கோவலரின் இசைத்திறனை
        அந்திக் கோவலர்  அம்பணை யிமிழிசை             (. நா. 124 : 14)
என்னும் அடி எடுத்துரைக்கிறது. இவ் அடியினை அந்திப்பொழுதில் காத்தல் செய்யும் காவலரது அழகிய முரசு எனவும் பொருள்கொள்ள  உரையாசியர்கள் வழிவகுக்கின்றனர். பிரிந்தவர்க்குத் துன்பம் தரும் செவ்வழிப்பண்ணை யாழில் இசைக்கும் சிறப்பினை
        பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப  2.(பிறப்ப) (. நா. 214 : 13) 2.(. நா. 314 : 12)

என இரண்டு இடங்களில்  பாடியுள்ளதன் வழி செவ்வழிப்பண்ணின் அருமையினை உணரலாம்.

இலக்கிய நயங்கள்

        வீரனுக்குப் புகழ் சேர்க்கும் எவையும் பெருமையுடையனவே. அது புண்ணாயினும் விழுப்புண் எனக் குறித்த பெருமை புலவர்க்கே உரியது. அவ்வகையில் தலைவனுக்குண்டான விழுப்புண்ணை புலவர் புகழ் குறி எனக் குறிப்பிடும் நயத்தினை

        ………………………………………………………… புலவர்
        புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்து                    (. நா. 354 : 8-9)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. போர்க்கருவிகளை நெஞ்சத்துத் தாங்கிய தலைவனின் பெருமையினை எழிலுற புலப்படுத்தியுள்ள திறன் வெளிப்படுகிறது. கொல்லும் வில் ஆயுத்தை வெல்லும் கலைக் கருவியாக்கிய தமிழர், சீழ்க்கை ஒலியினையும் பாதுகாப்புக் கருவியாகக் கொண்டதனை
        மடிவிடு வீளை கடிதுசென் றிசைப்பத்
        தெறிமறி பார்க்குங் குறுநரி வெரீஇ
        முள்ளுடை குறுந்தூறு இரியப் போக         (. நா. 274 : 9-10)

என்னும் அடிகள் எழிலுறக் காட்சிப்படுத்துகின்றன. இதன்வழி துள்ளி விளையாடும்  மறிக் குட்டிகளைக் கவரப் பார்க்கும் குள்ளநரி இடையனின் சீழ்க்கை ஒலிகேட்டு அஞ்சி முட்களுடைய புதரில் ஓடி மறைவதனைக் காணமுடிகிறது.      

சொல் நயங்கள்

        தமிழ்மொழியில் வழக்கிலிருந்த பல தமிழ்ச்சொற்கள் காணாது போய்விட்டன. சங்க இலக்கியங்களைப் படித்தாலே பல சொற்களை மீட்டுக் கொணர இயலும் என்பதற்கு அகநானூறே சான்றாகின்றது. அங்கு, இங்கு என்னும் சொற்கள் சேய்மை, அண்மையினைச் சுட்டுகின்றன. இவற்றிற்கு இடைப்பட்ட இடத்தைக் குறிக்க உங்கே என்னும் சொல் பயன்பட்டு வந்ததனை

        உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன் (. நா. 4 : 13)
       
என்னும் அடி உணர்த்துகிறது. உதோ என்னும் சொல் பேச்சு வழக்கில் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் நிலவி வருவதனை இங்கு நினைவில் கொள்ளலாம். தமிழில் காரணப்பெயர்களே மிகுதி. மேற்குறிப்பிட்ட பாடலிலேயே வண்டினைதாதுண் பறவைஎனக் குறிப்பிட்டுள்ள நயத்தினையும் காணமுடிகிறது. நளவெண்பாவில் வண்டினைஅறுகால் சிறுபறவைஎனக் குறிப்பிடுவதனையும் இங்கு எண்ணி மகிழலாம். அவ்வாறே ஐதியம்புதல்  என்பது  நடக்க நடக்க விட்டிசைத்தல் என்னும் பொருளைத் தரும். மாடுகள் நடக்கும் போது அவற்றின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் ஓசை விட்டு விட்டு ஒலிக்கும் அழகினை

        ஆபூண் தெண்மணி ஐதியம் பின்னிசை               (. நா. 64 : 15)  

என்னும்  அடி எடுத்துரைக்கிறது. இவ்வாறு சொல்லும் பொருளும் இயைந்துவந்து பாடலுக்கு அழகுசேர்ப்பதனைக் காணலாம்.   

நிறைவாக

        அகநானூற்று முல்லை நிலப் பாடல்கள் முல்லை நிலத்திற்குரிய முதல்,கரு, உரிப் பொருட்களை முறையாக எடுத்துரைக்கின்றன. இதன் வழி முல்லை நிலத்தின் வளத்தினை மட்டுமின்றி முல்லைநில மக்களின் மாண்பினையும் அறிந்துகொள்ளமுடிகிறது. முல்லைநில மக்கள் மேற்கொண்டிருந்த ஒழுக்கங்கள் அனைவர்க்கும் வழிகாட்டும் வகையில் நற்றிறன்களையும் உயர் பண்புகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது.  முல்லை நிலப்பாடல்களில் தலைவன் தலைவியினுடைய காதலை மட்டுமின்றி வினைச் சிறப்பு கலைச் சிறப்பு எனப் பல செய்திகளை இலக்கிய நயத்தோடு புலப்படுத்தியுள்ள அகநானூறு தமிழர் மாண்பினை ஆவணமாக்கிய பேறுடையது எனத் தெளியலாம். 

*******************
       
       





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக