தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடைக் கற்களும்
தீர்வுகளும்
முனைவர் ம.ஏ.
கிருட்டினகுமார், உலாப்பேசி - 9940684775
தமிழ் மொழி உலக மொழி என்பதற்குச்
சான்று அது உலகலாவிய செய்திகளை உள்ளடக்கியதனாலேயே எனக் கூறலாம். நிலப்பகுப்பு முதல் உயிரினத் தோற்றம் முதல் அனைத்தும் எவ் உலகத்தாரும் ஏற்கும்
வகையில் அனைத்துக் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
உலகம் யாவையும் எனக் கம்பரும்
உலகெலாம் எனச் சேக்கிழாரும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என ஔவையாரும் எவ்வத்துறைவது உலகம்
எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் காக்கைக் குருவி எங்கள் ஜாதி என மகாகவி பாரதியாரும்
பாடியுள்ளனர். இக் கூற்றுக்கள் தமிழர்கள் உலகத்தையே தமது நாடாக
எண்ணிய திறத்தினை உணர்த்தி நிற்கின்றன.
மொழிச் செல்வாக்கு
தமிழன் தன்னை முன்னிறுத்திக்
கொள்ள விரும்பாததனால் தமிழ் இலக்கியங்கள் பல பிற மொழியில் பெயர்க்கப்பட்டு அம்மொழிக்குரிய
சொத்தாகவே மாற்றப்பட்டுவிட்டது.
உயர்ந்த கருத்துக்களை
(மருத்துவம் சோதிடம்,) தமிழ் மொழியில் எளிமையாகக்
கூறியதனால் அதன் அருமையினை உணராமலே அக்கருத்துக்களுக்குச் செயல்வடிவம் கொடுத்தனர்.
அத்தகையோரின் முயற்சியும் பயிற்சியும் அற்ற போக்கால் மக்கள் வருந்தினர்.
இதனைக் கண்டு மனம் வருந்திய சான்றோர் மறைமொழியில் கூறுவதை வழக்காகக்
(இரு குரங்கின் சாறு – முசுமுசுக்கையின் சாறு)
கொண்டனர். இதனால் நாளடைவில் அக்குறிப்புகளை தமிழர்களாலேயே
பின்னாளில் அறிய இயலாது போனது. இதனால் பல செல்வங்கள் நாளடைவில் மறந்தும் மறைந்தும் போயின.
வடமொழி இலக்கியங்கள் செல்வாக்குப்
பெற்றிருந்த காலத்தில் தமிழர்கள் வடமொழியில் எழுதுவதையே பெருமையாக எண்ணினர்.
தமிழர் மருத்துவம், சோதிடம் பரதக்கலை போன்ற பல அரிய நுட்பங்களை
வட மொழியில் எழுதினர். இக்காலத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதைப்
பெருமையாகக் கருதுவதுபோல் அக்காலத்தில் வடமொழியில் எழுதினர். இவ்வாறு வடமொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் நாளடைவில் வடமொழி இலக்கியங்களாயின.
இக்கோணத்தில் எண்ணிப்பார்த்துத் தமிழர் தம் சொத்தினை இழந்த நிலையினை
ஒருவாறு உணரலாம்.
சமயச்
செல்வாக்கு
தமிழகத்தில் தமிழ் மண்ணில் தோன்றிய
சமயங்களைவிட பிற சமயங்களின் செல்வாக்கு நாளடைவில் வளரலாயிற்று. அவ்வாறு பரவிய சமயங்களே சிறுபான்மை சமயங்கள் என்னும் நிலையில் மக்களை மாற்றி
ஆதிக்க சக்தியாக கோலோச்சின. அச் சமயங்களின் மறை மொழி வேறொன்றாய்
இருந்ததனால் தமிழ்மொழி ஈடுபாடு குறைந்தே காணப்பட்டது. எனவே தமிழ் மொழியின் பெருமை ஒடுங்கும்
நிலை ஏற்பட்டது.
தமிழில் உள்ள அருமையான சொற்கள் ஒரு சமயத்தார்க்கு உரியது என அறியும்
வகையில் தமிழ்ச்சொற்களை கையகப்படுத்தினர். வணங்கும் தொழிலைக்
குறிக்கும் தொழுகை என்னும் சொல்லும் தலைவரைக் குறிக்கும் கருத்தன் என்னும் சொல்லும்
இன்று சிறுபான்மை சமயத்துக்குரிய சொற்களாக மாறிவிட்டதனை எண்ணிப் பார்க்கலாம்.
ஒழுகும்
பானைகள்
செல்வம் வாழ்க்கைக்குத் தேவையானது
என்பதனை அனைவரும் உணர்வர். ஆனால் பண்பிலான் பெற்ற செல்வம் எவருக்கும்
பயன்படாது வீணாகும். அடிப் பண்புகளைடையான பண்பினை ஊட்டும் தாய்மொழிக்
கல்வியை தமிழருக்கு ஊட்டுவதனை விட்டுவிட்டு சட்டம் சீர் குலைந்து வருகிறது எனக் கூறுவதனால்
ஒரு பயனும் இருக்கமுடியாது. பண்பினை ஊட்டும் பக்தி இலக்கியங்களை சமயத்தின் பெயரால் பிற சமயத் தொடர்புடைய
கல்வி நிறுவனங்கள் மறுத்து விடுகின்றன. தமிழ்மொழிக்குப் பெருமை
சேர்க்கும் அறம் செழிக்கும் பக்தி இலக்கியங்களை ஒதுக்கிவிட்டு தமிழைக் கற்பிப்பது ஒழுகும்
பானையில் நீருற்றி நிரப்பும் முயற்சிக்கு நிகராகும்.
எச்சமயத்தாராயினும் தமிழ் மொழியைக்
கற்பதில் ஏற்றத்தாழ்வு இருத்தல் கூடாது. மூத்த மொழியான தமிழ்
மொழியின் வளத்தை எடுத்துரைக்கும் பக்தி இலக்கியங்களை முறையாகக் கற்காமல் தமிழ்மொழியினைக்
கற்றுக்கொண்டதாகக் கூறுவது அறியாமையே. எனவே தமிழ் வாழும் இலக்கியங்களை
முறையாகக் கற்றாலே தமிழின் பெருமையினை உணரமுடியும்.
மொழியும்
இனமும்
தமிழர்கள் என்னும் உணர்வு தமிழ்
நாட்டில் வாழும் அனைவருக்கும் ஏற்பட்டால் தான் தமிழ் மொழியின் வளர்ச்சி சிறப்புடையதாகும்.
தமிழ்நாட்டில் வாழ்வோர் மட்டுமின்றி தமிழால் வாழும் அனைவரும் தமிழ் உணர்வுடன்
வாழ்தல் வேண்டும். பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது அம்மொழிக்கு
அஞ்சி வாழ்வது போல் தமிழ் மொழியினைக் கற்றுக்கொள்ள ஆவன செய்ய வேண்டும். தமிழருக்குள்ளேயே ஆரியர்கள், திராவிடர்கள் என்னும் வேறுபாட்டுடன்
தமிழ் இலக்கியங்களைக் குறை கூறுவது தமிழ் வளர்ச்சிக்கு ஏற்றதாகாது. தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மொழி உணர்வுடன் நோக்க வேண்டுமேயன்றி இன உணர்வுடன்
நோக்குதல் கூடாது. செம்மொழியான
தமிழ் இன்று எல்லை பரப்பில் குறுகி விட்டதற்குக் காரணம் தமிழரிடையே காணும் வேறுபாடே
ஆகும்.
குடிகளைத் தழுவிய கோவில்கள்,
கோவில்களைத் தழுவிய குடிகள் என்னும் நிலையிலேயே கோவில்கள் அமைந்ததனை
குன்றக்குடி அடிகளார் தெளிவுறுத்துவார். ஆனால் அக்கோவில்களையே
நாத்திகர்கள் தம்மால் இயன்ற அளவிற்குக் குறை கூறி தமிழரின் பெருமையினை தம் இனத்தாரே
அறியா வகையில் பணியாற்றி வருவது வருந்தத் தக்கது. அவ்வாறே வடமொழிப்பற்றுள்ள
ஆத்திகர்கள் தமிழ் மொழியினை இயன்ற அளவிற்கு மறைக்க முயற்சி செய்துள்ளனர். “ஆலயங்களைக் கோயில்கள் என அழைக்கும் வழக்கங்கூட மாறி ‘ஸ்தளி’ என்கிற வட சொல்லின் திரிபாகிய ‘தளி’ என்றும் இராசஇராசனுக்குப் பின் ‘ஈசுவரம்’ என்றும் அழைக்கப்படலாயின” என தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் சுரேஷ் பிள்ளை (தமிழியல்
ஆய்வுகள் ப. 176) குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.
ஆங்கிலத்
தாக்கம்
கட்டை மரம் என்பதைச் சொல்ல முடியாமல்
கட்ட மரான் என ஆங்கிலேயன் கூறிய வழக்கு ஆங்கில மொழியாகவே நின்று விட்டது. அதைப் போல நம் தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் வழக்கில் வருமானால் அதனை
தமிழாக்கிக்கொள்வதே மொழி வளர்ச்சிக்குரியதாக அமையும். அவ்வாறின்றி
தமிழில் சொல் இருக்க ஆங்கிலச் சொற்களை ஏற்பதோ அச்சொல்லுக்கேற்றவாறு மொழிபெயர்ப்பதோ
மொழிச் சிதைவிற்கே வழி வகுக்கும். அருவி என்னும் அழகான சொல்லிருக்க
நீர் வீழ்ச்சி (வாட்ட ஃபால்ஸ்) என மொழிப்பெயர்த்திருப்பது
இங்கு எண்ணத்தக்கது.
ஆங்கிலம் பிற மொழிகளின் கூட்டு
மொழியாகவே அமைந்துள்ளது. எனினும் அது வணிக மொழியாக உலகளவில் ஏற்றுக்
கொள்ளப்பட்டதற்குக் காரணம் அம்மொழி பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளும் எளிமையினாலேயே
எனத் தெளியலாம். கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி தன்னுடைய எழுத்துக்களிலேயே எம்மொழிச் சொற்களையும் தன்வயப்படுத்திக்
கொள்ளும் வகையில் அம்மொழியாளர்கள் கூடுதல் எழுத்துக்களைச் சேர்க்காது மிகுந்த கவனத்துடன்
செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழ் மொழியில் ஷ, ஹ ஸ க்ஷ் ஸ்ரீ என்னும் வடமொழி எழுத்துக்கள் தமிழ் மொழியில் ஏற்கப்பட்டுள்ளது.
“பிற மொழிச் சொற்களை ஆங்கிலம் ஏற்றுக் கொள்கிறது என்றால், அது தன் 26 எழுத்துக்களை நீட்டித்தான் ஏற்றுக் கொள்கின்றது.
இதுவே, ஆங்கிலத்தின் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும்
ரகசியம். ஆங்கிலேயர் இருநூறு ஆண்டுகள் ஆண்டிருந்தும் கூடத் தமிழ்
மொழியின் பெயரையோ பழனி என்ற ஊரின் பெயரையோ சாட்சி நலத்தை முன்னிட்டு இல்லாவிட்டாலும்
ஆட்சி நலத்தை முன்னிட்டாவது எழுதுவதற்கு இருபத்து ஏழாவது எழுத்தாக ‘ழ’ கரத்தையோ அல்லது திருவரங்கம், திருவில்லிபுத்தூர் என்று எழுதுவதற்காக இருபத்து எட்டாவது எழுத்தாக ஸ்ரீ யையோ
சுவீகாரம் செய்யவில்லை (செ.வை. சண்முகம், இக்கால எழுத்துத் தமிழ் ப. 84) என்னும் மகாதேவனின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
சீர்ப்படுத்த
வேண்டிய கல்வி நிலைகள்
கல்வி நிலையங்களில் தாய்மொழியில்
கற்கும் நிலை மாறிப்போனதனாலேயே தமிழ் மொழிக்குரிய செல்வாக்கு நாளடைவில் குறையத் தொடங்கிற்று.
சென்ற தலைமுறையில் உயர்ந்து விளங்கியவர்கள் தமிழ் மொழியில் படித்தவர்களே. அவர்கள் ஆங்கில மொழி பேசுவதில் மட்டுமின்றி நிர்வாகத் திறனிலும் சிறந்து விளங்கினர்.
ஒன்பதாம் வகுப்பு வரை ஆங்கில எழுத்துக்களை அறியாதவர்களே இந்நாளில் ஆங்கிலத்தை
மொழிபெயர்க்கும் அறிஞர்களாகவும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அறிஞர்களாகவும் திகழ்வதனையும்
காணலாம். ஆனால் இன்று ஆங்கில மொழி பயிற்று மொழியான பின் பிழையில்லாமல்
கடிதம் எழுத எந்த மொழியும் துணை நிற்பதில்லை என்பதனையும் காணமுடிகின்றது.
தமிழ்மொழியின் பெருமையைக் காக்கவேண்டுமாயின்
தமிழ் மொழியைப் பயிற்றும் மொழியாக்க வேண்டும். சீனம்,
ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் உயர் கல்வியை தாய்மொழியில் படிப்பது போன்றே
தமிழகத்திலும் தமிழ்மொழியில் பயில ஆவண செய்ய வேண்டும். பள்ளிக்
கல்வி தாய்மொழி வழியும் மேல்நிலை கல்வி ஆங்கில மொழி வழியிலும் படித்தால் தற்கொலைகள்
தான் பெருகும் எனபதனை ஊடகங்கள் அன்றாடம் மெய்ப்பித்து வருகின்றன.
உயிர் போன்ற தாய்மொழியையும்
மதிக்காமல் மனித உயிர்களையும் மதிக்காமல் இன்றைய கல்வி ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது.
வெள்ளையர்களுக்குப் பணி செய்த அடிமை இந்தியர்களுக்கு மாறாக வெள்ளை மொழிக்கு
அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியர்களாக இன்றைய மக்கள் வாழ்வதனை உணர்ந்தாலொழிய இத்தகைய அடிமை மயக்கத்திலிருந்து
மீள இயலாது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழி.
ஒரு மொழியைப் படித்தல் என்பது அறிவு வளர்வதற்குரிய வழி மட்டுமே.
அதனையே பயிற்றுமொழியாகக் கொள்வதால் மருத்துவமும் பொறியியலும் படிக்க
முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது. இந்நிலை மாறினால் பல கலைச்
சொற்கள் உருவாகும். மேலும் சிந்தனைத்திறனுடைய மருத்துவர்களையும்
பொறியாளர்களையும் உருவாக்க முடியும். இம்முயற்சி தொடருமானால்
தமிழ் மொழி வளர்வதோடு தமிழரும் வளர்வார்கள் எனத் தெளியலாம்.
இன்றைய
தேவை
காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்
கொள்ளும் உயிரினமே வாழும்
என்பது பொதுத்தேற்றம். இக்கூற்று உயிரினங்களுக்கு மட்டுமின்றி
மொழிக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இக்காலக் கல்வி கலைகளையோ பண்பாட்டினையோ
கற்றுக் கொடுக்கும் வகையில் திட்டமிடப்படவில்லை. பொருளீட்டுவதையே மையமாகக் கொண்டே கல்வி
கற்பிக்கப்படுகிறது. எனவே மொழி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய முதல்
பணி அக்கல்விக்குரிய மொழியாகத் தமிழ் மொழியினை ஆக்குதல் வேண்டும். கணினி இன்று பரவலாகி விட்டதனால் கணினி மொழியாகத் தமிழ் ஊட்டப்பட வேண்டும்.
தமிழ்மொழி எக்காலத்திலும் புத்தாக்கம் பெறக்கூடிய மொழிவளம் உடையது. ஆனால் அதற்கான முயற்சியினை எடுக்கத்
தயங்குவதனாலேயே ஆங்கிலத்தின் ஆதிக்கம் நாள்தோறும் பெருகிவருகிறது.
மருத்துவம் , பொறியியல், நிர்வாகவியல் போன்ற துறைகளிலும் தமிழ்வழிக்கல்வி
கற்க வழிவகை செய்ய வேண்டும். இது எவ்வாறு இயலும் எனத் தமிழர்களே
தமிழுக்கு எதிராக நிற்கக் கூடும். அத்தகையோரின் ஐயத்தை நீக்கும்
வகையில் பின் வரும் கூற்று அமைகிறது. ”ஆங்கில மருத்துவத்தைத்
தமிழில் வடித்துத் தமிழர்களுக்குப் பாடம் புகட்டித் தமிழர் நலனுக்காகப் பயன்பட வேண்டுமென்று
முதன் முதலில் விதை விதைத்து அவர் காலத்திலேயே பழத்தையும் உண்டவர் யாழ்ப்பாணத்தின்
வடபால் பருத்தித் துறைக்கு 1847 ஆம் ஆண்டு வந்த அமெரிக்க கிறித்துவப்
பாதிரியான மருத்துவர் சாமுவேல் ஃபிஷ் கிறீன் ஆவார். அவர் ஏறக்குறைய
4650 பக்கங்கள் தமிழில் ஆங்கில மருத்துவத்தைத் தன் மாணவர் உதவியுடன்
மொழி பெயர்த்துள்ளார்.” (தமிழியல் ஆய்வுகள் ப.204 மணிவாசகர் பதிப்பகம்) என மருத்துவர் முனைவர் சு.
நரேந்திரன் குறிப்பிட்டுள்ளதனையும் “டாக்டர் கிறீனின்
மாணவர்கள் மேல்நாட்டு மருத்துவக் கல்வியைத் தமிழில் படித்தால் பயனுண்டா எனச் சற்று
சலனமடைந்தனர். “எனது மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து மாறி தமிழில்
கற்பது பற்றிச் சலனமடைந்துள்ளனர். அரசு சேவையில் ஈடுபட்டுச் சம்பளம்
பெறும் வாய்ப்புக் குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள். உண்மை,
ஆனால் வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலைபெறச் செய்தலே எதிர்கால நோக்கமாகும்.
எனவே பத்து நாட்கள் ஓய்வு கொடுத்து வைத்தியக் கல்வியைத்தொடர்வார்களா
அன்றேல் வேறு தொழிலை நாடுவார்களா எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்
எனக் கூறியுள்ளார்.” (தமிழியல் ஆய்வுகள் ப.220) என நரேந்திரன் அவர்களே எடுத்துக்காட்டியுள்ளதனையும் இங்கு எண்ண வேண்டியுள்ளது.
மருத்துவம் படித்தவர்களே தமிழ் மொழியின் ஆக்கத்திற்கு அமெரிக்க மருத்துவரின்
தொண்டினைக் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார்கள். எனவே இனியும் தமிழ்மொழிக்
கல்விக்குரிய செயற்பாடுகளில் காலம் தாழ்த்துதல் நன்றாகா. சீனம்,
ஃப்ரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளைக் கண்டு தமிழ்வழிக்கல்விக்கு
எதிரானவர்கள் தங்கள் ஐயத்தைப்போக்கிக் கொண்டு அதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்
கொள்வாராயின் வருங்கால மாணாக்கர் சமுதாயம் எந்திர மனிதர்களாக இல்லாமல் சிந்தனையாளர்களாக,
கண்டுபிடிப்பாளர்களாகத் திகழ்வர் எனத் தெளியலாம்.
பிற
மொழித்தாக்கம்
நீரினைக் குறிக்கும் வெள்ளம்
என்னும் தமிழ்ச் சொல் மலையாள மொழியில் நிலைபெற்றது. தமிழர் தண்ணீர்
கொடுங்கள் என்னும் வழக்கத்தினையே மறந்து விட்டனர். வாட்டர் என்னும்
சொல்லே பழகிவிட்டது. மேற்கு என்னும் சொல் படுஞாயிறு என மலையாளத்தில்
குறிப்பிடப்படுகிறது. எற்பாடு என்பதன் எளிய வடிவம் படுஞாயிறு
என்பதனை உணரலாம். ஞாயிறு மறையும் இடம் மேற்காதலால் அப்பெயர் தனித்தமிழ்
பெயராகவே குறிப்பிடப்படுவதனை எண்ணி மகிழலாம்.
சாபம் என்னும் சொல் வெஞ்சினம் என்னும் சொல்லையும் சபதம் என்னும் சொல் வஞ்சினம்
என்னும் சொல்லையும் விழுங்கி விட்டதனைக் காணலாம். மன்னிப்பு என்னும்
சொல் பொறுத்தருள்க என்னும் சொல்லைக் காணாமல் செய்துவிட்டது. கள் என்னும் சொல் இருளைக் குறிப்பது.
அவ் வேர்ச்சொல்லிலிருந்து கள்வன் (இருளில் தொழில்
செய்பவன்), கள் (போதை) என்னும் சொற்கள் உருவாக்கப்பட்டதனையும் உண்மை (உள்ளத்தின்
அறம்) மெய்ம்மை (உடலின் அறம்) வாய்மை (சொல்லின் அறம்) என ஒரே
பொருளை உணர்த்தும் நுட்பங்களை வகுத்துள்ள பெருமையினையும் உணர்ந்தால் தமிழ்மொழியின்
பெருமையினை உணரலாம். பலூன் என்னும் சொல் பிற நாட்டு வருகை என்பதனால்
அச்சொல்லையே பயன்படுத்தினர். ஊதி (ஊதுவதால்
பெருமை அடைவது) அப்பொருளை பெரிதாக்குவதால் ஊதி எனவே வழங்கலாம். எவ்வாறெல்லாம்
கலைச் சொற்களை உருவாக்கிக் கொள்ள இயலுமோ அவ்வாறெல்லாம் சொற்களை உருவாக்குதல் வேண்டும்.
இதற்கான முயற்சியில் பல்கலைக் கழகங்களோ நிறுவனங்களோ தான் முழுமையாகச்
செய்தல் இயலும். எனவே அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
பெருவுடையார் கோயிலை ப்ரகதீஸ்வரர்
கோயில் என மாற்றியதன் விளைவாக ப்ரகதீஷ்வர் என்னும் பெயரைக் குழந்தைகளுக்கு இட்டு வேரிலேயே
தமிழ்மொழியினை சிதைத்துவிடுவதற்கான வழிவகை செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு தமிழ்ப்பெயர்கள் காணாமல் போய்விட்டதனை இன்றைய குழந்தைகளின் பெயர்களை
எண்ணிப்பார்ப்பதன் வழி அறியலாம். தாய்மொழியில் பெயர் வைப்பதை
விரும்பாத ஒரே இனத்தார் தமிழராகவே இருக்கமுடியும். தமிழ்ப் பண்பாட்டினைக்
காத்து குழந்தைகளை நன்னெறியுடன் வளர்க்க விரும்புவோர் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வலியுறுத்த
வேண்டும். தமிழ்ப்பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு
அளிப்பதுபோல் தமிழ்ப் பெயருடைய குழந்தைகளுக்கு அரசு சில சலுகைகளை அளிக்க வேண்டிய சூழல்
ஏற்படுமாயின் அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுதல் நன்று. அச்
செயல் மொழிப் பாதுகாப்பிற்கான செயலாகவே அமையும் எனத் தெளியலாம்.
போராட்டமே
தீர்வு
உலக மொழிக்குரிய தரத்துடன் இலக்கியங்களைப்
படைத்த தமிழ்மொழி எவ்வாறு ஒரு இனத்திற்கு உரியதாகவும் ஒரு குறுகிய நிலத்திற்கு உரியதாகவும்
குறுக்கப்பட்டது என ஆய்ந்தால் அரசன் முதல் ஆண்டி வரை பலரும் இச் செயலுக்குத் துணைநின்றுள்ளதனைக்
காணமுடிகிறது. தமிழ்மொழி தங்களை வளர்த்த மொழி என்பதனை அறியாமலே
அம்மொழிக்குக் கேடு விளைவித்ததனாலேயே இன்று அந்நிய மொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும்
நிலை உருவாகிவிட்டதனைக் காணமுடிகிறது. சொத்துக்காக சகோதரர்களுக்கிடையே
நடைபெறும் கருத்து வேறுபாட்டினைக் களைவதாகக்கூறி வந்த அந்நியன் இருவரையும் கொன்று
தானே அச்சொத்தை அனுபவித்தல் போல் இன்று அந்நிய மொழி வடமொழியையும் தமிழ் மொழியையும்
பின்னுக்குத் தள்ளிவிட்டது. தமிழார்வலர் இடையே வடமொழியின் ஆதிக்கத்
தன்மையினை உணர்த்தியும் வடமொழிப் பற்றாளர் இடையே தமிழ் மொழியின் பெருமைகளைக் குறைக்கும்
வகையில் வடமொழி இலக்கியங்களை இயற்றச் செய்தும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை
வளர்த்து மகிழ்ந்தனர் அந்நியர்.
வடமொழியை உயர்த்த எண்ணுவோர்
தமிழ் மொழியைத் தாழ்த்திக் கூறுவதும் தமிழ் மொழியை உயர்த்துவோர் தமிழ் மொழியைத் தாழ்த்தியது
இரு மொழியின் பெருமையினையும் குன்றச் செய்ததை உணரவேண்டும். இலக்கியம் இலக்கிய நோக்கிலேயே காணப்படும்
பக்குவம் அனைவரிடமும் பரவ வேண்டும். மொழிப் போர் தொடர்கதையானதால்
தமிழ்ச் சிந்தனைகளை வடமொழியில் எழுதிய திறமும் வடமொழி இலக்கியங்களை தமிழாக்கிய சிறப்பும்
நலிந்து பகைமை உணர்வு பெருகிற்று. இதனால் ஒருவர் மற்றொருவரை குற்றம்
கூறுவதிலேயே மகிழ்ந்திருந்தனர். இதனால் தமிழில் சிறந்த நூல்கள்
அனல் வாதம் புனல் வாதம் என்னும் பெயரில் அழிக்கப்பட்டன. இதனால்
தமிழரின் பல் துறை பெருமையினை அறிய இயலாமலே போகும் சூழல் நிலைபெற்றுவிட்டது.
தமிழைக் கோவில்களில் இருந்து துரத்தி விட்ட வடமொழி மக்களிடமிருந்து விலகி
நின்றதனால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டது. வடமொழியின் ஆதிக்க
உணர்வால் கோவில்களில் மட்டும் வாழும் மொழியாக நிலைபெற்றது. எத்தகைய
சூழலையும் எதிர்கொள்ளும் எளிமையான தமிழ்மொழி மீண்டும் கோவில்களுக்குள் குடியேறியது.
தமிழர்கள் கட்டிய கோவிலில் தமிழ் இல்லாத நிலைகண்டு பொங்கிய தமிழரின்
போராட்டத்தால் தமிழின்நிலை பாதுகாக்கப்பட்டது.அவ்வாறே ஒவ்வொரு
துறையிலும் தமிழுக்குரிய நிலையினைப் பாதுகாக்கவேண்டியது தமிழர் ஒவ்வொருவரின் கடமை என்பதனை
உணர்தல் வேண்டும்.
நிறைவாக
தமிழ் நாட்டில் தமிழ் மொழி பேசுவதற்கு
தண்டம் விதிக்கும் பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் அவர்கள் பரிந்துரைக்கும் மொழி
வழங்கும் நாட்டிற்கே சென்று கல்வி நிலையங்களை நடத்த முறையாக அறிவுறுத்தினால் தமிழ்
நாட்டின் பெருமையும் தமிழ்மொழியின் பெருமையும் பாதுகாக்கப்படும்.
கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி
பிற நிறுவனங்களும் தமிழ் மொழிக்குரிய முக்கியத்துவத்தினை அளிக்க வழிவகை செய்தல் வேண்டும்.
ஊடகத்தார் உடலுக்கேற்ற ஆடை என்றில்லாமல் ஆடைக்கேற்ற உடலை மாற்றி அமைக்கும்
வகையில் ஊடகத்துக்கேற்றவாறு மொழியைச் சிதைத்து வருவதனைத் தடைசெய்தல் வேண்டும்.
ஆங்கிலம் உலகம் முழுக்க ஆண்டாளும்
தனது மொழியில் உள்ள எழுத்துக்களைக் காத்துக் கொண்டது. மேலும்
அவ்வெழுத்துக்களுக்குள்ளேயே பிற மொழிச் சொற்களை ஏற்றுக்கொண்ட எளிமையாலேயே உலக மொழியாக
சிறப்பதனை உணரவேண்டும். தமிழ்மொழியையும் அவ்வாறே காக்க இனியேனும்
ஆவன செய்தல் வேண்டும் எனத் தெளியமுடிகிறது.
மதம் இன வேறுபாடின்றி மொழி வளர்ச்சிக்கான
பணியில் ஒவ்வொருவரும் ஈடுபாட்டுடன் செயல்படுவாராயின் தமிழ் மொழி உலகமொழிகளில் முன்னிற்கும்
எனத் தெளியமுடிகிறது.
பிற மொழி வேர்ச்சொற்களை அடிப்படையாகக்
கொண்ட மருத்துவத் துறையிலேயே தமிழ் வழி கல்விக்கான முயற்சி உள்ளதெனில் பிற துறைகளில்
அம்முயற்சியை மேற்கொள்ளுதல் எளிதே என எண்ணத்தோன்றுகிறது.
நாத்திகம் ஆத்திகம் என்னும்
வேறுபாட்டின் வழி மொழிச் செல்வாக்கினை உணர்த்தும் இலக்கியங்களைக் குறை கூறுவதனைத் தவிர்த்து
மொழி உணர்வுடன் வாழ்ந்தால் மொழி வளத்தினை அனைவரும் அறியும் வகையில் செய்தல் இயலும் என
உணரமுடிகிறது.
தமிழ்மொழி வளர்ச்சிக்குரிய திட்டங்களை
முறையாகத் திட்டமிட்டால் தமிழ்மொழி செழிப்பதோடு தமிழன் வாழ்வும் செழிக்கும் என்பதில்
ஐயமில்லை.
*************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக