தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

குமரகுருபரரின் சைவத் தொண்டும் தமிழ்ப்பற்றும் - Kumara Gurubarar


குமரகுருபரரின் சைவத் தொண்டும் தமிழ்ப்பற்றும்

முனைவர் ம.. கிருட்டினகுமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

புதுச்சேரி :605008, உலாப்பேசி : 99406 84775



        குட்டித் திருஞானசம்பந்தர் எனப் புகழப் பெறும் குமரகுருபரர் சைவ சமயத்துக்கு மட்டுமின்றி தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பெருமைக்கும் வித்திட்ட பெரியோர்களில் ஒருவர்.      சிவநெறியில் நின்ற சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி சுந்தரியாருக்கும் திருச்செந்தூர் முருகன் அருளால் தவப்புதல்வனாகத் தோன்றியவர் குமரகுருபரர். தவமிருந்து பெற்ற பிள்ளை ஐந்து வயது வரை பேச்சில்லாததால் பெற்றோர் முன்னிருந்த வருத்தத்தை விட மிகுந்த வருத்தம் கொண்டனர். நாற்பத்தெட்டு (ஒரு மண்டலம்) நாளில் பிள்ளைக்குப் பேச்சு வராவிட்டால் தம் உயிரை மாய்த்துக் கொள்வோம் எனப் பெற்றோர் கூறிய அன்பினை உண்ணி முருகப்பெருமான் எழுந்தருளினார். குமரகுருபரா என அழைத்து நாவில் ஆறெழுத்து மந்திரத்தை எழுதி பேச வைத்தார். ஐந்து வயதிலேயே முருகப்பெருமானின் ஆசியினைப் பெற்றார் குமரகுருபரர். இறையருளாலேயே பிறந்து, பேசும் திறன் பெற்று நூல்கள் அருளி முத்தி பெற்ற குமரகுருபரரின் சைவத்தொண்டையும் தமிழ்ப்பற்றையும் அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை மலர்ந்தது.



பன்மொழிப் புலமை



        பன்மொழிப்புலமை பெற்ற குமரகுருபரர் இந்துஸ்தானி மொழியில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றிச் சமயத்தையும் தமிழையும் வளர்த்தார். இவர் சொற்பொழிவைக் கேட்டு பல தமிழ் இலக்கியங்கள் பிறமொழிகளில் தோன்றியுள்ளன. இவருடைய ஆழ்ந்த புலமையைக் கண்டு வடநாட்டவரும் மயங்கியதன் விளைவாகவே காசியில் மடத்தை நிறுவமுடிந்தது. அம் மடத்தில் இன்றும் சமயப்பணியும் தமிழ்ப்பணியும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது போற்றுதற்குரியது.  தாமிர பரணி ஆற்றங்கரையில் பிறந்துதவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங்கரையிலும் கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தவர் குமரகுருபரர். இயற்கையழகு மிக்க இத்தகு சூழலும் கங்கைபோல் காவிரிபோல் வற்றாது வளஞ்சுரக்கும் இவரது கவிதைகளின் கற்பனையூற்றுக்குக் காரணமாயிற்று எனலாம். (கு.கு. கற்பனை ப.9) என ஆ. கந்தசாமி குமரகுருபரர் கற்பனைஎன்னும் தமது நூலில் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.



காலத்தினாற் செய்த நன்றி

        தமிழக வரலாற்றில் பாண்டியருக்குப் பின் தமிழினத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது.  தெலுங்கு மொழி இனத்தவரான நாயக்கர்களும் உருது மொழி இனத்தவரான முகம்மதியர்களும் ஆட்சி செய்யத்தொடங்கிய பின்னர் சைவ சமயத்தின் வளர்ச்சிப் பணிகள் முடங்கிவிட்டன. அத்தகைய இக்கட்டானச் சூழலில் பாடல் பாடி மடம் நிறுவி நூல்கள் அருளி சைவ சமயத்தின் பெருமையினை நிலைநாட்டிய பெருமை குமரகுருபரருக்கே உரியது.



        தமிழர்கள் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே ஆண்ட பெருமைக்குரியவர்கள். சங்க காலத்திலேயே இமயத்தைக் கடந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். கனகவிசயரின் முடிதலை தெறிந்து இமயத்திலிருந்து கல் சுமக்கச்செய்து கண்ணகிக்கு சிலை வடித்தான் சேரன். ”தற்காலத்தில் உத்திரப்பிரதேசத்தில் இன்றும் இரண்டு கயலையும் ஒரு வில்லையும் அரசுச் சின்னமாகக் கொண்டிருப்பதும் சான்றாகும்.” (கு.கு. கற்பனை ப.7). அவ்வாறு தமிழும் தமிழரும் செழித்திருந்த நிலையினை ஆரியர்கள் வடமொழியினைப் புகுத்திச் சிதைக்கத் தொடங்கினர்.  தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் புறத்தில் ஆட்சி செய்யும் மன்னர்களிடமும் அகத்தில் ஆட்சி செய்யும் இறைவன் உறையும் கோவில்களிலும் வடமொழியைப் பரப்பிவிட்டனர். தமிழர்களின் அறியாமையினை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஆரியர்களின் வலுவான நிலையைக் கண்டு தமிழர்கள், நாளடைவில் புரியாத அம்மொழியையே ஏற்றுக்கொண்டு வாழும் நிலை உண்டானது. இந் நிலையினை மாற்றும் வகையில் தமிழறிஞர்களும் சமயப்பற்றாளர்களும் தமக்குரிய பணியினைச் செய்யத் துணிந்தனர். அப் பணியினைச் செய்வதற்குப் பன்மொழிப் புலமை அவசியமாயிற்று. தமிழர் மட்டுமின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடமொழி கலந்து எழுத வேண்டியது அவசியமாயிற்று. அவ்வழியிலேயே தமிழ்மொழியின் பெருமையினை நிலை நாட்டும் அவசியம் உண்டானது. சைவசமயத்துக்கும் அதே நிலைதான் உண்டானது. அந்நிலையினையும் மாற்றும் வகையில் சைவசிந்தாந்தக் கருத்துகளை உணர்த்தும் அவசியம் உண்டானது. அந்நிலையில் தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டு செய்தவரே குமரகுருபரர்.



        குமரகுருபரரும் சைவ சமயக் கொள்கையை நிலைநாட்ட வடநாட்டில் மடத்தை நிறுவினார். அவர் அமைத்த நெறியைத் தொடர்ந்து பின்பற்றாமையால் நேர்ந்த இழப்பை அடிகட்குப் பின்வந்தோர், காசியிலே செந்நெறி கடைப்பிடித்துச் சைவத்தை நிலைநாட்டியிருப்பின் இன்று வடநாடு முழுவதும் சைவசித்தாந்தம் பரவியிருத்தல் கூடும். பின்வந்தோர் பொருளீட்டத்தையும் பாதுகாப்பையும் கருதித் தென்னாட்டிலே தமக்கு நிலையான இடத்தையமைத்துக் கொண்டனர் போலும் என்ற கா. சுப்பிரமணியப்பிள்ளை கூற்று உணர்த்தும். (கு.கு. கற்பனை ப.7) இக்கூற்று குமரகுருபரரின் பரந்த சிந்தனையையும் சமயத்துக்காகத் துணிந்து செயல்பட்டத் திறத்தையும் எடுத்துக்காட்டுகிறது.



குரு பக்தி



        ஞானாசிரியராக விளங்கிய மாசிலாமணி தேசிகரையே இறைவனாக எண்ணி பண்டார மும்மணிக்கோவை பாடி அருளினார். ஞானாசிரியரின் அருளால் சீவனாக நின்ற நிலையிலிருந்து சிவனாக மாறிப்போனப் பெருமித நிலையினை



        எற்குஅமலம் செய்யும் எழில்மாசி லாமணிதன்

        பொற்கமலம் சென்னி பொலிவித்தேன்நல்கமலை

        ஊரிற் குறுகினேன் ஓர்  மாத்திரையளவென்

        பேரிற் குறுகினேன் பின்                                (பண்டார மும்மணிக் கோவை பா.24)



என்னும் அடிகளின்வழி எடுத்துக்காட்டியுள்ளார். இப்பாடலின்வழி தமது குருவின் திருவடியைச் சென்னியில் வைத்துப்போற்றும் குமரகுருபரரின் குரு பக்தியினை அறியலாம். குருவின் வழியிலே இறைவனை அடைதல் எளிது என்னும் நுட்பத்தினையும் இங்கு புலப்படுத்தியுள்ளார் குமரகுருபரர்.



தன்னம்பிக்கையும் பொதுநலமும்



        சுயநலம் ஒழிந்து பொதுநலம் எழும்போதுதான் வளர்ச்சிப் பணிகள் கைக்கூடும். அவ்வாறு தம்மைப் பொதுநலத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர்களே சமயத்துக்கும் மொழிக்கும் நாட்டுக்கும் தொண்டு செய்தோராகப் புகழப்படுகின்றனர். அவ்வரிசையில் சைவ சமயத்தின் பெருமையினை உலகறியச் செய்த பெருமையுடையவராகத் திகழ்பவர் குமரகுருபரர். உயிருக்கு அஞ்சி சைவசமயத்தின் பெருமையினைப் பரப்பப் பலரும் தயங்கி நின்றபோது காசி மன்னரிடம் துணிந்து நின்று சைவசமயத்தின் பெருமையினை உணர்த்தி மடத்தை நிறுவினார்.



தொண்டே சமயம்



        சமயத்தால் தம்மைச் சமைத்துக்கொண்ட மெய்யுணர்வுடையோர், நன்றாக ஏவல் செய்யும் தம் உடம்பினை விட்டுச்செல்வதில் கவலை கொள்ளாதிருந்தனர். ஆனால் எத்துணைப் பிணியிருப்பினும் தம் உடம்பை விட்டுச் செல்ல மனமில்லாது உயிர்வாழத் துடிக்கும் அறியாமையுடையோரை



        புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறுங்

        கழிமுடை நாற்றத்த வேனும்விழலர்

        விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்

        சுளியார் சுமைபோடு தற்கு                             (நீதிநெறி விளக்கம் பா.43)



என்னும் பாடலின் வழி எடுத்துரைக்கிறார் குமரகுருபரர். மாயையால் சிக்குண்ட மனிதர் இறைவனை அறியும் மெய்யுணர்வில் கவனம் கொள்ளார் என்பதனை இதன் வழி தெளிவுறுத்துகிறார். இறையருளே மெய்யானது என உணர்ந்தோர் சமயப் பணியிலும் பொதுப்பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உலகம் வாழ வழி செய்வர் என்பதனை இதன்வழி புலப்படுத்தியுள்ளார்.



இறையருளும் சமயப்பணியும்

       

        மெய்யறிவு என்பது இறைவனைக் குறித்த அறிவே. அவ் அறிவை எண்ணம், சொல், செயல் என்னும் மூன்று நிலைகளிலும் தூய்மையாக வாழ்தலாலேயே பெற இயலும். எனினும் உலகியலுக்குத் தேவையான அற்புதங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போது அற்புதங்களைச் செய்துகாட்டவேண்டியது அவசியமானது. முகமதியர் கோலோச்சியிருந்த நிலத்தில் தம்முடைய ஆற்றலை நிறுவப் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையிலேந்தினார். அரசன் குமரகுருபரரின் ஆற்றலை உணராது சிங்காசனத்தில் மீதிருந்து சோதிக்க அவனெதிரே உண்மையான சிங்கத்தின் மீதமர்ந்து வந்தார். இவ்வாறு சமயத்தைப் பாதுகாக்க எவ்வாறெ;ல்லாம் பிறரைக் கைக்கொள்ள இயலுமோ அவ்வாறு அற்புதங்கள் செய்து தம் வசப்படுத்தினார் குமரகுருபரர்.



        சைவத்தின் பெருமையினை இடையறாது நிலை நாட்ட அருளாளர்கள் இப்புனித பூமியில் தோன்றியவண்ணம் இருந்தனர். அவ்வாறு தோன்றியவரே குமரகுருபரர். எனவே முருகப்பெருமான் அருளால் பேசிய குமரகுருபரரின் பாடலில் மயங்கி (மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் பாடியதில் மனம் மகிழ்ந்து) மீனாட்சி அம்மையே காட்சி தந்தார்.         முருகப்பெருமான்  குமரகுருபரர் பேச வரமளித்ததோடு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடபொன் பூத்த குடுமிஎன முருகப்பெருமானே அடி எடுத்துக்கொடு;த்தார்.      



        குமரகுருபரர் தாம் செய்த அற்புதங்கள் இறையன்புடைய எவர்க்கும் எளிதாகும் என்பதனையும் உணர்த்தியுள்ளார். இறைவனைப் போற்றினால் கூற்றினையே வெல்லமுடியும் என்பதனை



        போற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்

        கூற்றங் குமைக்க வருமுன் நமரங்காள்

        ஏற்று வந்தான் பொற்றாளிணை               (சிதம்பர செய்யுட் கோவை பா.26)



என்னும் பாடலடிகளின் வழி எடுத்துக்காட்டியுள்ளார். தாளினைப் பற்றினால் பிறவி நோயிலிருந்தே விடுபட முடியுமெனில் மற்ற நோயிலிருந்து விடுபடுதல் எத்துணை எளிமை என்பதனை இப்பாடலின் வழி எடுத்துக்காட்டி இறையடியைச் சிக்கெனப் பிடித்து வாழ அறிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.    ஜி.யு. போப் இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவசித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயமில்லை (இந்திய தத்துவ ஞானம் ப. 403) எனக் கி.லட்சுமணன் எடுத்துக்காட்டியுள்ளதனை இங்கு எண்ணி மகிழலாம்.



சைவமும் வழிபாடும்



        பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானை வணங்கும் சமயமான சைவம் முத்திப் பேறினை அளிக்கவல்லது. பாசத்திலிருந்து நீங்கினால் பதியை பசு அடைய முடியும் என்னும் கொள்கையினை உலகுக்குணர்த்திய சமயத்தின் பெருமையினை நிலைநிறுத்தியவர் குமரகுருபரர். வாழ்வின் பயன் இறையடியை அடைவதே. இறைவனை வணங்குவதன் நோக்கம் இப்பிறவியிலிருந்து விடுதலை அடைவதே என்பதனை



        நெஞ்சகங் குழைந்து நெக்குநெக் குருகநின்

        குஞ்சித சரணம் அஞ்சலித் திறைஞ்சுதும்

        மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில்

        செம்மாந் திருப்பது தீர்ந்து

        மெய்ம்மையிற் பொலிந்த வீடு பெறற் பொருட்டே      (சிதம்பரச் செய்யுட் கோவை பா.68)



என்னும் பாடலின் வழி எடுத்துரைக்கிறார் குமரகுருபரர். அவனருளாலே அவன் தாள் வணங்கும் சிறப்பினையும் இங்கு உணர்த்தியுள்ளார். மறுமைப் பேறுக்கு வழிகாட்டிய குமரகுருபரர் இப்பிறவியில் சீருற்ற வாழவும்  வழிகாட்டியுள்ளார்.  ஆசை தான் வறுமைக்குக் காரணமாம் என்பதனை



        செல்வ மென்பது சிந்தையின் நிறைவே

        யல்கா நல்குர வவானெப்படுமே                       (சிதம்பர மும்மணிக்கோவை பா.26)



என்னும் அடிகளின்வழி எடுத்துக்காட்டியுள்ளார். மனம் அமைதியுற்றால்தான் இப்பிறவியில் இன்பமும் அதன்வழி மறுமைப்பேறுக்குரிய வழியும் கிட்டும் என்பதனைப் புலப்படுத்தியுள்ளார் குமரகுருபரர். மனம் அமைதியுற்றால் ஒழிய ஆன்மக் கடைத்தேற்றம் நிகழாது என்பதனை உணர்த்தும் வகையில் இப்பாடலைப் பாடியுள்ளதனை உணரலாம்.



குருவின் செயல்

        ஒரு கால்பந்து வீரன் எப்படி ஒரு கால்பந்து வீரனை உருவாக்கி விடுகிறானோ அவ்வாறே குருவும் அமைதல் வேண்டும். ஒரு நல்ல குரு என்பவர் பல சீடர்களை பெற்றதில் பெருமையடைவது இல்லை. பல  குருமார்களை உருவாக்குதல் வேண்டும். அவ்வாறு தம்  சீடருள் ஒருவரான சொக்கநாத முனிவரையே காசி மடத்தின் பொறுப்புக்குரியவராக்கினார். தரமான சீடர்களை உருவாக்கி அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து பெருமைபடுத்தியவர் குமரகுருபரர்.

செயற்கரிய செயல்



        தமிழ் மொழியின் பெருமையினை உலகறியச் செய்தாலொழிய தமிழரின் பெருமையினையும் தமிழர் சமயத்தின் பெருமையினையும் உணர இயலாது. அப் பணியினைச் செம்மையாகச் செய்தவர் குமரகுருபரர்.



        குமர குருபரரின் காலமான 17 ஆம் நூற்றாண்டு வடமொழியின் ஆதிக்கம் மிகுந்திருந்த காலம். எனவே மணிப்பிரவாள நடையும் வடமொழி நடையுமே பெருமைக்குரியவனவாக இருந்தன.   தமிழ் மொழியின் மீது தணியாத காதல் கொண்டிருந்த குமரகுருபரர் தேவையான இடங்களிலெல்லாம் தமிழ் மொழியின் பெருமையினை நிலைநாட்டியுள்ளார்.



        தமிழ் மொழி இறைவன் பேசிய மொழி ; இறைவன் அடி எடுத்துக்கொடுத்த மொழி ; இறைவன் மயங்கிப் பின்சென்ற மொழி என அருளாளர்கள் பலர் பாடி நிற்க குமரகுருபரரோ தமிழ்த்தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவள் திருமகள் என்பதனை



        முதுதமி ழுததியில் வருமொரு திருமகள்

                முத்தம ளித்தருளே            (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முத்தப்பருவம்-10)



என்னும் பாடலடிகளில் வழி உணர்த்துகிறார். இதன்வழி தமிழ்மொழியிலிருந்து பிறக்கும் அழகினை ; அறிவினை உணர்ந்து தமிழ்ப்பற்றுடன் வாழ வழிகாட்டுகிறார் குமரகுருபரர்.



        பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற

                பசுங் கொண்டலே             (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் காப்புப் பருவம்-1)



எனப்பாடி வேதங்கள் முறையிட்டுக்கொண்டே இறைவன் பின் செல்ல இறைவன் தமிழ் பின் செல்லும் அழகினை எடுத்துக்காட்டித் தமிழ்மொழியின் பெருமையினை உணர்த்தியுள்ளார்..



        தெய்வத்தமிழ் எனவும், முத்தமிழ் எனவும் கொழிதமிழ் எனவும் தருசுவை அமுதெழ மதுரமது ஒழுகு பசுந்தமிழ் எனவும் தெளிதமிழ் எனவும் புத்தமுதம் வழிந்தொழுகு தீந்தமிழ் எனவும் பைந்தமிழ் எனவும் மும்மைத் தமிழ் எனவும் வண்டமிழ்க் கடல் எனவும் வளமார்ந்த தமிழ்மொழியை வாயாரப் புகழ்ந்தோதுகின்றார் குமரகுருபரர். (சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள், முதலாவது மாநாடு ப.287) என்னும் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை அவர்களின் கூற்றின் வழி தமிழ் மொழியிடம் குமரகுருபரர் கொண்டிருந்த ஈடுபாட்டினை அறிந்துகொள்ளலாம்..



அடக்கம் அமரருள்



        ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணம் உண்டு. அவ் இலக்கணம் எம்மொழியைச் சார்ந்தவரும் ஒரு வரையறைக்குள் நின்று கற்றுக்கொள்ளும் வகையில் முறையாக அமைதல் வேண்டும். அவ்வாறு சிறந்த கட்டுக்கோப்புடன் அமைந்த மொழி தமிழ்மொழி. அவ்வாறு உயர்தனிச்செம்மொழியாகத் திகழ்ந்த தமிழ்மொழியில் புலமை பெற்றோர் அம்மொழி அறிந்த மிடுக்குடனே வாழ்ந்தனர். அவ்வாறு வாழ்ந்த புலவருள் ஒருவர் குமரகுருபரரின் தமிழ்ப்புலமையை அறியாது இலக்கணக் கவிக்கு மட்டுமே யாம் மதிப்பளிப்போம் வரகவிக்கு அல்ல எனக்கூறிய கூற்றினை ஏற்று சிதம்பரச் செய்யுட்கோவை பாடினார். இறையருள் பெற்ற நம்மை பிறர் குறை கூறுவதோ என எண்ணாது கோவை நூல் பாடி குமரகுருபரர் தம் புலமையை நிறுவியதால் வழக்காடிய புலவரின் அறியாமை நீங்கியது. தமிழுலகுக்கு அரியதொரு கோவை நூல் கிடைத்தது. 



தமிழ்க் கொடை



        அருளாளர் அனைவருமே இறைவன் வருவிக்க வந்தவர்கள். எனவே எவராலும் எண்ணிப்பார்க்க இயலாத செயல்களைச் செய்து உலகம் உய்ய வழி வகுத்தனர். அவ்வாறு இடையறாது தோன்றும் தமிழ்மொழியின் இலக்கியத்தின் பெருமைக்கு வளம் சேர்த்தவர் குமரகுருபரர்.  தமிழகத்தில் மட்டுமின்றி வடநாட்டிற்குச் சென்று சமயப் பணியினையும் தமிழ்ப்பணிக்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பெருமைக்குரியவராகத் திகழ்பவர் குமரகுருபரர் இலக்கியத் துறையில் அடிகளின் சிறப்பைக் காண்கையில்தமிழ்ப் புலவர்களுள் வடநாடு சென்று தங்கியிருந்து தமிழ் நூல்கள் பாடியவர் அவர் ஒருவரேஎன மு.. கூறுகின்றார். அவர் பாடிய கயிலைக் கலம்பகம் முற்றுங் கிடைத்திலதாயினும் அதனையும் சேர்த்து மொத்தம் பதினாறு பிரபந்தங்கள் பாடியதாக அறியப்படுகின்றது. இதனால் பிரபந்த மன்னர் என்ற சிறப்பையும் பெறுகிறார். (குமரகுருபரர் கற்பனை, .8) எனப்போற்றப்படுவதனை கந்தசாமி அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளதன் வழி அறியமுடிகிறது.



குமரகுருபரர் அருளிய நூல்கள்



        1.திருச்செந்தூர் கலி வெண்பா , 2. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் 3. மதுரைக் கலம்பகம் 4. நீதிநெறிவிளக்கம் 5. மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை 6. மதுரை மீனாட்சியம்மை குறம் 7. திருவாரூர் நான்மணி மாலை 8. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 9. சிதம்பர மும்மணிக் கோவை 10. சிதம்பர செய்யுட்கோவை 11. தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை 12. பண்டார மும்மணிக்கோவை 13. காசிக் கலம்பகம் 14. சகலகலாவல்லி மாலை 15. கைலைக் கலம்பகம்.



குமரகுருபரரால் எழுந்த நூல்கள்.



        1.மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் குமரகுருபரசுவாமிகள் புராணம் : 2. ரா. சுப்பிரமணியக் கவிராயரின் குமரகுருபரசுவாமிகள் புராணம், 3. கா. சுப்பிரமணியப் பிள்ளையின் குமரகுருபர அடிகள் வரலாறு 4. திருப்பனந்தாள் காசி மடத்தின் குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு



        இவை மட்டுமின்றி குமரகுருபரரின் தனிப்பாடல், குமரகுருபரரின் குறிப்புகள்  பல நிலைகளில்  நூல் வடிவம் பெற்றுள்ளன.  ஆய்வு நூல்களாகவும் பல தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.      



நிறைவாக



        மொழியும்  பண்பாடுமே ஓர் இனத்தின் பெருமையினை எடுத்துக்காட்டுகின்றன. அவற்றை எடுத்துரைப்பதில் நூல்களே முதலிடம் பெறுகின்றன. இதன்வழி தமிழினத்தின் பெருமைகளை உலகுக்கு உணர்த்தியதில் குமரகுருபரரின் பணி தலையாயது என்பதனை உணரமுடிகிறது.



        சமயத்தில் தலையாயது சைவசித்தாந்தம் என பிற சமயத்தாவராலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட சைவசமயத்தின் பெருமையினைத் தம் பாடல்கள் வழி நிலைநாட்டிய பெருமை குமரகுருபரர்க்கு உரியது. இதற்கு அவருடைய நூல்களே சான்றாவதனை அறியமுடிகிறது.



        சமயப் பற்றினையும் மொழிப்பற்றினையும் தம் பாடல்களில் இயன்ற இடங்களிலெல்லாம் வெளிப்படுத்தியுள்ள குமரகுருபரர் தமிழினத்தின் பெருமையினைக் காத்த அருளாளர் எனத் தெளியமுடிகிறது.



        பெரியோரை மதித்து வாழ்வதே தமிழர் வாழ்வு. அவ்வாறு வாழ்வதனாலேயே வாழ்க்கை சிறக்கும்.  குரு பக்தியின் வழி வாழ்வில் எதனையும் பெறமுடியும் என்பதனைத் தம் குருவுக்காக பாடிய பண்டாரமும்மணிக்கோவையின் வழி தெளிவுறுத்தியுள்ளார் குமரகுருபரர். இத்தகைய இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டிய கடப்பாடு அனைவர்க்கும் உரியது எனக் கொள்ளமுடிகிறது.

        பேரின்பக் கருத்துக்களை எல்லாம் சிற்றிலக்கியங்களின் வழி எடுத்துக்காட்டிய குமரகுருபரரை சைவ சமயமும் தமிழ்ச் சமுதாயமும் என்றும் நினைவில் வைத்துப் போற்றும் எனத் தெளியலாம்.





***************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக