தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

அகநானூற்றில் தமிழர் உணவு - Agananooru - Thamizhar food habits


கநானூற்றில் தமிழர் உணவு

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார்
துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை
 புதுச்சேரி-605008
உலாப்பேசி :9940684775

தமிழர்கள் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு செயலிலும் தமக்கென ஒரு உயர்ந்த ஒழுக்கத்தைக் கொண்டிருந்தனர். இப்பெருமையினை உணர்த்தும் பொருட்டே ஒவ்வொரு நிலத்துடனும் திணை என்னும் ஒழுக்கம் இணைந்தே  குறிப்பிடப்படுகிறது. எந்த நிலத்தில் வாழ்ந்தாலும் அந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் அந்தந்த நிலத்திற்குரிய ஒழுக்கத்துடனே வாழ்ந்தனர். இதனைக் குறிப்பதற்காகவே குறிஞ்சித் திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல் திணை, பாலைத்திணை என நிலப்பகுப்பு செய்யப்பட்டுள்ளது. இதனையே பொருள் இலக்கணம் தெளிவாக எடுத்துரைக்கிறது. அகவாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் எனத் தனித்தனி திணைகள் வகுத்த பெருமை தமிழினத்துக்கே உரியது.  அத்தகைய பெருமை கொண்ட தமிழினத்தின் உணவு முறையினை அகநானூற்றின் வழி காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

உணவில் பழங்கள்

        இயற்கையைத் தெய்வமாக எண்ணி வணங்கி வாழ்ந்த தமிழர்கள் தம் உணவு முறையிலும் இயற்கையையே உணவாக உண்டு வாழ்ந்த பெருமையினை அகநானூறு தெளிவுபடுத்துகிறது. தமிழர்கள் பழங்களை உணவின் ஒரு கூறாகக் கொண்டிருந்ததனை

களவும் புளித்தன விளவும் பழுநின          (அ.நா. 394 : 1)

என்னும் தோழி கூற்று வெளிப்படுத்துகிறது. இக்கூற்றின்வழி களாப் பழங்களும் விளாம் பழங்களும் பழுத்துள்ளதனைக் கூறி உணவு பரிமாறுதற்குரிய காலம் வந்துவிட்டதனை தலைவனுக்குத் தோழி உணர்த்தி வரைவுக்கு வழிசெய்யுமாறு குறிப்புடன் உணர்த்துகிறாள். இதன்வழி பழங்களைத் தம் உணவின் முக்கியக் கூறாகக் கொண்ட தமிழரின் பெருமையினை உணரலாம். களாப்பழமும் விளாம் பழமும் பழுத்தால் புளிப்புச் சுவையுடையனவாக அமைவதனையும் அதனை உணவுடன் உட்கொண்ட நிலையினையும் உணர்த்துகிறார் இப்பாடலைப் பாடிய சிறுமேதாவியார். உணவு உண்ணுதற்கு முன்னர் பழச்சாறினை உட்கொள்ளும் பழக்கம்  இருந்ததனை

        முன்றில் நீடிய முழவுறழ் பலவின்
பிழிமகிழ் உவகையன் கிளையொடு கலிசிறந்து     (அ.நா. 172 : 11-12)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இதன்வழி குறிஞ்சி நிலத்தலைவன் உணவு உண்ணுதற்கு முன் தன் சுற்றத்தோடு  இல்லத்தின் முன் இருந்த உயர்ந்த முழவு போன்ற பலாக் கனியிலிருந்து பிழிந்தெடுத்த சாறினை உட்கொண்டு மகிழ்ந்ததனை அறியமுடிகிறது.

வாழையும் பலாவும்

        தமிழர்களை நன்கு வாழ வைத்ததில் வாழைக்குப் பெரும்பங்குண்டு. காலவரையன்றி எப்போதும் அள்ளிக்கொடுக்கும் வாழையினை வளர்த்துவந்த பெருமை தமிழர்க்கு உண்டு. வாழையினம் பரம்பரை தோறும் தொடர்ந்து அள்ளித்தரும் தன்மையுடையதனாலேயே வாழையடி வாழையாக என்னும் தொடர் வாழ்த்துவதற்குப் பயன்படுத்தப்படுவதனைக் காணலாம். தமிழர் முக்கனியில் ஒன்றாக வாழையினை வைத்து அதன் பெருமையினை உணர்த்தினர். வாழை சுவையானது, பலா வாழையை விட சுவையானது , தேன் பலாவைவிட சுவையானது. இவை மூன்றையும் உண்டு வாழ்ந்தனர் குறிஞ்சி நில மக்கள். குறிஞ்சி நிலத்தில் வாழும் குரங்குகளுக்கும் இவை எளிதாகக் கிடைத்தன. இவ்வாறு அங்கு உண்ட குரங்கு மயக்கத்தினால் சந்தனமத்தில் ஏறமுடியாது பூக்கள் சிதறியிருந்த பூக்களாலான படுக்கையில் படுத்திருந்ததனை

        கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
        ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
        சாரற் பலவின் சுளையொ டூழ்படு
        பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
        அறியா துண்ட கடுவன் அயலது
        கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது
        நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்     (அ.நா. 2 : 1-7)

என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன. குறிஞ்சி நிலத்தில் வாழை மரங்கள் வளமான இலைகளுடன் நன்கு முதிர்ச்சியுற்ற இனிய கனிகளையுடையதாக விளைந்திருந்ததனையும் ஒருமுறை உண்டால் பிற எவற்றையும் உண்ணாத அளவிற்கு மிகுந்த சுவையான முற்றிய பலாப்பழங்களையுடைய பலாமரங்கள் நிறைந்திருந்ததனையும் இப்பாடலின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. கனியாலும் சுளையாலும் பாறையிடத்திலுள்ள நெடிய சுனையில் உண்டான தேன் இவை இரண்டையும் விட சுவையாக இருந்ததனை இப் பாடல் பதிவு செய்கிறது. இதன்வழி பலவகையான பழங்களையும் தேனையும் உண்டு குறிஞ்சிநிலமக்கள் வளமோடு வாழ்ந்ததனை அறியமுடிகிறது.

தேனும் பாலும்

        தேனும் பாலும்  மருத்துவ குணம் கொண்டதாகவே எந்நாளும் போற்றப்படுகிறது. தமிழர்கள் இயல்பாகவே இவற்றை உணவாகக் கொண்டனர். தேனுடைய குணம் மிகுதியாக இருப்பதனால் தேன் மருத்துவம் எனத் தனி மருத்துவமே இருப்பதனை உணரலாம். தேனை உட்கொள்ளும் முறையறிந்து உண்டால் உடல் இளைக்கவும் பருக்கவும் செய்யும்.  இத்தகைய அருமருந்தினை இயல்பான உணவாகவே உட்கொண்ட நிலையினை

        தேங்கலந் தளைஇய தீம்பால் ஏந்தி                                  (அ.நா. 207 : 14)

என்னும் அடி எடுத்துக்காட்டுகிறது.
       
சந்தன விறகில் சமைத்தல்

        ராமசேரி என்னும் இடத்தில் செய்யும் இட்லி உலகப்புகழ் பெற்ற இட்லியாகக் கூறப்படுகிறது. இது பல நாள் கெடாமல் மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருப்பது. இத்தகைய பெருமைக்கு அங்கு கிடைக்கும் விறகை வைத்து சமைப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது. இதன்வழி விறகினாலும் உணவின் சுவை கூடும் என்பதனை ஏற்கமுடியவில்லை. இச் செய்தியினை நம்பும் வகையில் சங்கப்பாடல் அமைந்துள்ளது குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் சந்தன விறகில் ஊன் சமைத்த செய்தியினை

        சாந்த ஞெகிழியின் ஊன்புழுக் கயருங்
குன்ற நாடன் ................................                 (அ.நா. 172 : 13-14)

என்னும் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன. இன்றைய நிலையில் சிறிய சந்தனக்கட்டைக் கூட கிடைக்காமல் செயற்கையாக கிடைக்கும் பூச்சினையே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. ஆனால் விறகெரிப்பதற்கும் சந்தனத்தைப் பயன்படுத்திய வளமான வாழ்க்கையினை அகநானூறு எடுத்துக்காட்டுகிறது.




பாலே உலையாக

        உணவு சமைக்க நீரினை உலையாக வைப்பது இன்றைய நடைமுறை. ஆனால் பாலையே உலையாக வைத்துச் சமைக்கும் வழக்கம் இருந்ததனை

        புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
        பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇக்
        கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
        பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை              (அ.நா. 141 : 14-18)

என்னும் அடிகள் தெளிவுறுத்துகின்றன. புதிதாக திருமணமானவள் உணவு நிறைந்திருக்கும் மணமனையில் பல புடைகளுடைய அடுப்பில் பாலை உலையாக வார்த்து அதில் கூழைக் கூந்தலையும் சிறிய வளையல்களையும் அணிந்த மகளிர் பெரிய வயலில் விளைந்த கதிரினை முறித்து பசிய அவலாக குற்றிய அரிசியினை இட்டு சமைத்தாள் எனக் குறிப்பிடப்படுகிறது. பாலையே உலையாக வைத்துச் சமைக்கும் அளவிற்கு பால் வளம் நிறைந்திருந்ததனையும் அதனைக்கொண்டு முறையாக சமைக்கும் வல்லமையினையும் பெற்றிருந்ததனையும் இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது.

உழுத்தங் களி

        இறைச்சியில் உள்ள புரதச்சத்தும் பின்விளைவு ஏற்படுத்தாத செரிக்கும் தன்மையினைக் கொண்டதுமான களியினைத் தமிழர்கள் தம் உணவாகக் கொண்டிருந்தனர். உழுத்தம் பருப்பு உடல் வளத்தைக் கூட்டிவிக்கும் என்பதனாலேயே பெண்களுக்கு உழுத்தம்பருப்பால் செய்த பண்டத்தைக் கொடுப்பர். அகநானூற்றுத் தலைவனுக்குத் தலைவி அன்புடன் சத்தான உழுத்தங்களி அளித்ததனை

உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப .......................      (அ.நா. 86 : 1-2)

என்னும் கூற்று எடுத்துக்காட்டுகிறது.  வாயில் மறுத்த தோழிக்குத் தலைவியின் அன்பைக் கூறி வாயில் விடுக்க வேண்டுகிறான். களி உண்ட உழவர்கள் இன்று   கருந்தேறலையும்(காஃபி) செந்தேறலையும்(தேநீர்) பருகி உடலை வீணாக்கிக் கொள்கின்றனர். எனவே இன்று கிராமத்தில் பலருக்கு இரத்தக்கொதிப்பும் சர்க்கரை நோயும் பரவலாகக் காணப்படுகிறது என இயற்கை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். சர்க்கரை நோயின் தலைமையமாக மாறிக் கொண்டிருக்கும் இந்தியாவை மீட்டெடுக்க இனியாவது இயற்கை உணவை வலியுறுத்துவது அரசின் கடமை மட்டுமன்று. கல்வி கற்ற ஒவ்வொருவரின் கடமை என்பதனை உணரவேண்டும். உழவர்கள் கூழினை உண்பதற்கு இடமாக நிழல் தரும் மரத்தின் கிளைகளை வெட்டாது காத்திருந்த செய்தியினை

        கொல்லை யுழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து        (அ.நா. 194 : 13-14)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. உழவர்கள் நிழலில் கூழுண்டதனால் நிழலுக்கே கூழ் நிழல் எனக் குறித்த நிலையினைக் கொண்டு கூழுக்கு அளித்த முக்கியத்துவத்தினை இங்கு எண்ணி மகிழலாம்.

புளியஞ் சோறு

        புளியஞ் சோறு தமிழர் உணவில் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. அப் புளியஞ்சோறினை எவ்வாறு செய்தனர் என்பதனையும் 394ஆம் பாடலே எடுத்துரைக்கிறது. நீரில் உலை வைத்து சமைக்காது முற்றிய தயிரில் உலை வைத்து அதில் புதுக்கொல்லையில் விளைந்த வரகினது குத்துதல் மாட்சிமைப்பட்ட அரிசியோடு மழைக்காலத்தில் நனைந்த வாயினையுடைய புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈயலை இட்டுச் சமைத்தனர். இனிய புளிப்புச்சுவை நிறைந்த விருப்பம் தரும் சோற்றினை சமைக்கும் நிலையினை

        . . ................................. பழுப்புறு விளைதயிர்
        இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு
        கார்வாய்த் தொழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய் தட்ட இன்புளி வெஞ்சோறு                (அ.நா. 394 : 2-5)

என்னும் பாடல் எடுத்துரைக்கிறது. தமிழர்கள் புளியஞ் சோற்றினைப் பல நாட்களுக்கு வைத்து உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர். இன்றும் வெளியூர் செல்லும்போது கட்டுச்சோறாக புளியஞ்சோற்றினையே கட்டிக்கொடுக்கும் பழக்கம் நிலவிவருகிறது. பணியாளர்கள் சூடான புளியஞ்சோற்றில் சிவந்த பசுவின் வெண்ணெய் உருகும்படி ஊற்றி உண்டதை

        சேதான் வெண்ணெய் வெம்புறத் துருக
இளையர் அருந்தப் பின்றை நீயும்             (அ.நா. 394 : 6-7)       

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த அடிகளின் வழி பணியாளர்கள் உணவுண்ட பின்னரே தலைவனும் தலைவியும் உணவுண்ட நிலையினையும்  அறியமுடிகிறது. இதன்வழி தமிழரின் உயர்பண்பினைய அறிந்துகொள்ள இயலும்.

வரகுச் சமையல்

                வரகரிசியைக் கொண்டு செய்யப்படும் சமையலே உடலுக்கு வலிமை சேர்க்கும். வளமான அரிசியினை முறையாகச் சேமித்து அதனைக் கொண்டு உணவு சமைத்த நிலையினை அகநானூற்றின் 393 ஆம் பாடல் நிரலாக எடுத்துரைக்கிறது. வரகினை பயிரிட்டு அதனை சேமித்த நிலையினை

        இதைச்சுவற் கலித்த ஈரிலை நெடுந்தோட்டுக்
கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி  (அ.நா. 393 : 4-5)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. புதுக்கொல்லையில் தழைத்த ஈரிய இலையின் நீண்ட இதழினையுடைய வரகினைக் கவர்ந்து கதிருடன் கூடிய தட்டைகளை தொகுத்த  பொலியில் சேர்த்துவைக்கப்பட்டது. பின்னர்  மாடுகளின் கவர்த்த குளம்பினால் துவைக்கச்செய்து பல கிளைகளிலிருந்து உதிர்ந்த வரகினை அகன்ற இடத்திலுள்ள பாறையில் தாயர்கள் வளமான உலக்கையால் உரலில் இட்டுத் தீட்டினர்.  மண்ணால் செய்யப்பட்ட பானையில் சுனையிலிருந்து எடுத்த நீரினை ஊற்றி அதனை கற்களை அடுக்கி அமைத்த அடுப்பில் உலையாக இட்டதை

        கவட்டடிப் பொருத பல்சினை உதிர்வை
        அகன்கட் பாறைச் செவ்வயிற் றெறீஇ
        வரியணி பணைத்தோள் வார்செவித் தன்னையர்
பண்ணை வெண்பழத் தரிசி ஏய்ப்பச்
சுழல்மரஞ் சொலித்த சுளகலை வெண்காழ்
தொடிமாண் உலக்கை ஊழிற் போக்கி
உரல்முகங் காட்டிய சுரைநிறை கொள்ளை
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்
களிபடு குழிசிக் கல்லடுப் பேற்றி                             (அ.நா. 393 : 6-14)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. அச்சோறு கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போலானது. இவ்வாறு இடையர் ஆக்கிய சோற்றினை வளமான நல்ல பசுவின் பாலுடன் கூட்டி அளித்ததனை

இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற்
குடவர் புழுக்கிய பொங்கவிழ் புன்கம்
மதர்வை ல்லான் பாலொடு பகுக்கும்                       (அ.நா. 393 : 15-17)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இடையர் குலத்தில் பால் வளம் சிறந்திருப்பது இயல்பே என்பதனைச் சுட்டிக்காட்டும் வகையில்

நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி                        (அ.நா. 393 : 18)

என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன. புல்லி என்பவன் பசு நிரைகளை நிறைவாகப் பெற்று புகழுடன் வாழ்ந்த திறத்தினை இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. பால்வளத்தால் வளமாக வாழ்ந்த பெருமையோடு வரகரசியால் உணவுண்ட சிறப்பினையும் அறிந்துகொள்ள முடிகிறது.

கடல் விளை அமிழ்து

        தமிழர் உணவில் உப்பு முக்கிய இடம் பெறுகிறது. அதனாலேயே ஊர் ஊராகச் சென்று உப்பை வணிகம் செய்த உமணரை

        கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்         (அ.நா. 169 : 6)

எனச் சங்கப்புலவர்கள் குறிப்பிட்டனர். அவ்வாறே உப்பு விளையும் வயலாக கடல் இருந்ததனை மிகவும் நயத்துடன்

        அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்                (அ.நா. 207 : 1)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

இறைச்சியும் மீனும்

உமணர்கள் செல்லும் வழி பாலை நிலமாதலால் அங்கு மறவர் விட்டுச் சென்ற யானைக் கறியினை தீக்கடைக்கோலால் வதக்கி உண்டதனையும் அங்குள்ள சுனைநீரில் உலை வைத்து அக்கறியினை கூட்டி ஆக்கிய நிலையினையும்

        கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை
        ஞெலிகோல் சிறுதீ மாட்டி ஒலிதிரைக்
        கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்
சுனைகொள் தீநீர்ச் சோற்றுலைக் கூட்டுஞ்           (அ.நா. 169 : 4-7)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. உமணர் விட்டுச் சென்ற அடுப்பில் மறவர்கள் சமைத்து உண்பதனையும் மறவர்கள் விட்டுச் சென்ற கறியினை உமணர்கள் சமைத்து உண்பதனையும் இப்பாடலின் வழி அறியமுடிகிறது. வரால் மீனை விரும்பி உண்ணும் பலர் வாழ்ந்தனர். ஆகையினால் மீன் வேட்டையில் கிடைத்த இறால் மீனின் துண்டத்தினை விற்று பணம் பெற்கிறான். அப்பணத்தைக் கொண்டு கள் குடித்து தனது வேலையினை மறந்து உறங்குகிறான். இச் செய்தியினை

        நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து
        நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
        துடிக்கட் கொழுங்குறை நொடுத்துண்டு ஆடி (அ.நா. 196 : 1-3)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. கடற்கரை சார்ந்த இடங்களில் கள் நிறைவாக கிடைத்த செய்தியினை உணர்த்தும் வகையில் நறவு மலி பாக்கம் எனக் குறிப்பிடப்படுகிறது. இதன்வழி மீன் உணவினை விரும்பி உண்ட நிலையினையும் அறிந்துகொள்ள முடிகிறது. கள்ளினை உண்டு தன்னை மறந்த நிலையில் இருக்கும் கணவனுக்கு இனிப்புடன் கூடிய புளிப்புச்சுவை கொண்ட பிரம்பு பழத்தினை சோற்றில் பிசைந்து கொடுத்தததனை

வேட்டம் மறந்து துஞ்சுங் கொழுநர்க்கு பாட்டி
ஆம்பல் அகலிலை அமலைவெஞ் சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து         (அ.நா. 196 : 4-6)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. 

ஊனைப் புழுக்கி உண்ணல்

        பாலை நிலத்தை கடந்து செல்வது வணிகர் இயல்பு. அவ்வாறு உப்பு வணிகர்கள் விட்டுச்சென்ற அடுப்பில் மழவர்கள் ஊனினை புழுக்கி உண்டதனை

        ............................ அத்தம் வெறிகொள
உமண்சாத் திறந்த ஒழிகல் அடுப்பின்
நோன்சிலை மழவர் ஊன்புழுக் கயரும்               (அ.நா. 119 : 7-9)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. பாலை நிலத்தில் வலிய வில்லினை உடைய மறவர்கள் தம் பசித்துன்பம் தீர நாற்றம் உண்டாக்கும் ஊனினைப் புழுக்கி உண்டனர். இத்தகைய கொடும்வழியில் தலைவன் சென்றதாகப் பாடுகிறார் நக்கீரனார். 

உணவுப் பெருங்கொடை

        இல்லோர்க்கு மட்டுமின்றி வந்தோர்க்கும் உணவிட்டு மகிழும் பண்பு தமிழர் பண்பு. அதனால்தான் ஒவ்வொருவரும் தமது இல்லத்தின் முன்னர் திண்ணை கட்டியிருந்தனர்.  தாம் உணவருந்தும் முன் யாரேனும் திண்ணையில் உள்ளனரா எனப் பார்த்து விருந்தோம்பிய பின் உண்ணும் பழக்கத்தினைத் தமிழர் கொண்டிருந்தனர். உலகில் உள்ள அனைவரும் தனக்காக வீடுகட்டிய போது அயலவர் வந்து தங்கும்பொருட்டு திண்ணைக் கட்டிய பெருமை தமிழர்க்கே உரியது. இல்லறத்தார் தமக்குரிய ஒழுக்கத்தினை இவ்வாறு பின்பற்றிய போது வளம்படைத்தவர்கள் அன்னசத்திரங்களைக் கட்டி உணவிட்டு மகிழ்ந்தனர். இவ்வாறு உதியன் என்பவன் எவர்வரினும் எப்போதும் உணவுண்ணும் வகையில் உணவுச்சாலை அமைத்திருந்ததனை

        கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
        உதியன் அட்டில் போல ஒலியெழுந்து
அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்              (அ.நா. 168 : 6-8)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. கொடையினையே தம் கடனாக ஏற்றுக் கொண்டவன் உதியன் எனக் குறிப்பிடுவதன் வழியும் உதியனுடைய அறச்சாலையில் எழும் ஒலி போல் அருவி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது எனக் கூறுவதன் வழியும்  உணவிடும் அறத்தைப் போற்றிய பெருமையினைத் தெளிவாக உணரலாம். அருவியினை அடுக்களையோடு ஒப்பிட்ட நயத்தையும் இங்கு எண்ணி மகிழலாம்.

நிறைவாக

        தமிழர்களின் உணவுமுறையும் தமிழர் பண்பாட்டினைப் போலவே பிறர்க்கு வழிகாட்டுவதாக அமைவதனை அகநானூற்றுப்பாடல்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.  எனவே தமிழர் உணவை தமிழருக்குரிய பண்பாட்டோடு பரிமாறினால் அனைத்துக் குடும்பங்களிலும் அன்பு நிறைவாக இருக்கும் எனத் தெளியலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக