தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

மொழிப் பயன்பாட்டில் கவனம் - Tamil Language skills


மொழிப் பயன்பாட்டில் கவனம்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி :9940684775

மொழி ஓர் இனத்தின் விழி.அவ்விழிகுருடாயினும் கேடில்லை என எண்ணும் நிலையாலேயே தமிழ்மொழி அனைத்து நிலைகளிலும் பின்தங்கியுள்ளதனைக் காணமுடிகிறது.கல்விச்சாலைகளே மொழியறிவை ஊட்டுவதில் முதலிடம் பெறுகின்றன.அத்தகைய பெருமையுடைய கல்வி நிறுவனங்களிலேயே தமிழுக்குரிய இடம் மறுக்கப்பட்டுவிட்டது.தமிழர்க்கு விளைந்த இக்கொடுமைபோல் உலகில் வேறு எவர்க்கும் தாய்மொழி மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.தமிழ்மொழிக்கு எதிராகச் செயல்படுவோரில் சிலர் தமிழராகவே இருப்பது அதனினும் கொடுமை.இந்நிலை மாறவேண்டுமானால் மொழிப் பயன்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியமாகின்றது என எண்ணியதன் விளைவாகவே இக்கட்டுரை எழுகிறது.

மரபை மறத்தலே கேடு

எழுத்துக்களைக் கற்றுணர்ந்து எவ்வகைப் பிழையுமின்றி எழுதும் முயற்சியால் தமிழ் எழுத்துக்கள் நிலைபெற்றுவிட்டன.எழுத்துக்கள் மரபாகிவிட்டது போல் ஒவ்வொரு நிலையிலும் தமிழர்க்குரிய மரபைக் காத்துநின்றால் மட்டுமே மொழிக்குரிய சிறப்பினைக் காத்தல் இயலும். அந்நிய நாகரிகத்தால் தமிழர்ப் பண்பு மாறிவிடுமாயின் அப்பண்பாட்டிற்குரிய சொல்லும் வழக்கிழந்து பின்னாளில் தமிழ்ச்சொல்லா என்னும் ஐயம் ஏற்படும் நிலை உண்டாகும். இந்நிலைக்கு எடுத்துக்காட்டாக இன்று பல சொற்களை அடுக்க இயலும்.

மொழி என்பது செய்தி பரிமாற்றத்திற்குரிய கருவியே. எனவே அம்மொழிக்குரிய இலக்கணம் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை மொழியால் இருவர்க்கிடையே செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்தால் போதுமானது  எனக்கூறும் போக்கினையும் காணமுடிகிறது. இக்கூற்று இலக்கண வளமும் இலக்கிய வளமும் இல்லாத மொழியார்க்கு உரியது.இதனைத் தமிழுக்கு ஏற்புடையதாக ஆக்கிக்கொள்ள விழைதல் தமிழினத்துக்குச் செய்யும் கேடேயாகுமன்றி வேறில்லை.அவ்வாறு மொழியில் கவனம் செலுத்த மறந்ததனாலேயே இன்றைய குழந்தைகளுக்கு அந்நிய மொழிகளைக் காட்டிலும் தாய்மொழி கடுமையானதாகிவிட்டது.

நன்கு வளர்ந்த பயிர் நிலங்களுக்கே வேலி தேவை.தரிசு நிலங்களுக்கு வேலி தேவையில்லை.எனவே தரிசு நிலத்தார் வேலி எவர்க்கும் தேவை இல்லை என்னும் விதியினை பொதுமையாக்கினர். பயிருடையோரிடமிருந்து பயிரைக் களவாடும் முயற்சியாகவும் நிலமுடையோர் செழிப்பதனைத் தடுக்கும் முயற்சியாகவும் மட்டுமே இந்நிலை  அமையும் என்பதனை உணர்வுடையோர் உணர்வர். தமிழ் இலக்கிய நிலத்தினை இலக்கண வேலியிட்டுக் காத்தாலன்றி தமிழ் மொழியைக் காத்தல் இயலாது என்பதனை உணர்ந்து இலக்கணத்தையும் இலக்கியத்தையும் பயிற்றுவிக்க வேண்டியது அவசியமாகின்றது.

        ’மரபு நிலை திரியின் பிறிதி பிறிதாகும்” – (தொல்.நூ. 1591)
என்னும் நூற்பாவின் வழி மரபின் அவசியத்தினை உணர்த்துகிறார் தொல்காப்பியர்.எவ் இடங்களில் எல்லாம் மரபு ஒழிந்ததோ அங்கெல்லாம் தமிழர்க்கான அடையாளங்களும் மறைந்து வருவதனைக் காணமுடிகிறது.தமிழரின் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே தினை, வரகு, சாமை என்பன போன்ற உணவு முறைகள் மறைந்து இன்று அச்சொற்களே அருகிவிட்ட நிலையினையும் காணமுடிகிறது. வீடு கட்டும் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் திண்ணை என்னும் சொல்லே  மறைந்துவிட்டது. இந்நிலைக்குக் காரணம் திண்ணையுடைய வீடுகளைக் கட்டாததனாலேயே என்பதனையும் உணரலாம். இவ்வாறு தமிழருடைய வாழ்க்கை முறையில் இடையூறாகப் புகுந்த மாற்றங்கள் அனைத்தும் தமிழருடைய மரபினை மறைத்து தமிழ்மொழியின் வளத்தைக் குன்றச்செய்வதனை உணர்வுடையோர் உணர்வர். எனவே மொழியைக் காக்க வேண்டுமாயின் மரபைக் காப்பதில் கவனம் வேண்டும் எனத் தெளியமுடிகிறது.

திரை செய்யும் குறை

        தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்ய வேண்டிய திரைப்படங்கள் இன்று தமிழ் மொழியின் வளத்தைச் சிதைத்து வருவதனைக் காணமுடிகிறது.அரை நூற்றாண்டுக்கு முன் திரையிடப்பட்ட திரைப்படங்கள் தமிழைக் கற்றுக்கொடுத்தன.படிக்காதவர்கள் மிகுதியாக வாழ்ந்த அக்காலத்திலேயே திரையின் வழி தமிழ்மொழியை வளர்த்த கலைஞர்கள் உண்டு.இன்றைய திரைத்துறையினர் பிறமொழிக் கலப்போடு உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் மரபு நிலை மாற்றங்களையும் புகுத்துவதையே மரபாகக் கொண்டு செயல்படுகின்றனர். இத்தகைய குறைபாடுகள் சமூகத்தைச் சீர்கெடுக்கும் என்பதனையும் அச்சமூகத்திலேயே திரைத்துறையினரின் தலைமுறைகளும் வாழ்கின்றனர் என்பதனையும் திரைத்துறையினர் எண்ண மறந்துவிடுகின்றனர். இனி வரும் காலங்களிலேனும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் கேடு நிகழாது திரைத்துறைப் பயணிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினால் மட்டுமே மொழிப்பயன்பாடு சீராகும் என்பதனை உணரமுடிகிறது.

        இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே
        அசை திரிந்து இயலா என்மனார் புலவர்   – (தொல்.நூ. 1141)

என்னும் நூற்பா இசை எவ்வாறு அமையினும் பொருள் திரியாது இலக்கியம் படைத்தல் வேண்டும் என்னும்கொள்கையுடையவர்களாக தமிழர்கள் வாழ்ந்திருந்ததனை புலவர்கள் கூற்றின் வழி நிறுவுகிறார் தொல்காப்பியர். இதன் வழி இன்றைய திரைத்துறையினர் மொழிப்பயன்பாட்டில் கவனம்வைத்து பொருளுடைய உரையாடல்களையும் பாடல்களையும் இயற்றி மொழிக்கும் இனத்துக்கும் பெருமை சேர்ப்பாராயின் மொழி வளம் பாதுகாக்கப்படும் எனத் தெளியலாம்.

மொழி வளம்

        தமிழ்மொழி செயற்கை மொழியன்று ; இயற்கை மொழி. வாயைத் திறத்தலால் ஆ – காரம் பிறப்பதன் வழி உலக மக்கள் அனைவர்க்கும் உரிய இயற்கை மொழியாகத் தமிழ் திகழ்வதனை எண்ணி மகிழலாம்.மொழியின் பழமையே மொழி வளத்திற்குச் சான்றாகும்.ஏனெனில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப மொழியும் வளர்ந்துகொண்டே செல்லும் என்பது உலகியல் வழக்கு.அவ்வாறு தமிழ்மொழியில் சொல் வளம் மிகுந்திருந்ததனை தொல்காப்பியர் பல நூற்பாக்களில் எடுத்துக்காட்டுகிறார்.  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்களை வரையறுத்த பெருமை தமிழர்க்கு இருந்ததனை

மாற்றரும் சிறப்பின் மரபியல் கிளப்பின்
பார்ப்பும், பறழும், குட்டியும், குறளும்
கன்றும், பிள்ளையும், மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே – (தொல்.நூ. 1500)

என்னும் நூற்பா தெளிவுற எடுத்துரைக்கிறது.அனைத்து உயிரினங்களின் இளமைப் பெயர்களையும் உள்ளடக்கியுள்ள தமிழரின் பெருமையினை இந்நூற்பாவின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.இதன்வழி மொழிப்பயன்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழரின் திறத்தையும் இங்கு எண்ணிமகிழலாம்.அத்தகைய வளமான சொற்களை மீட்டு மீண்டும் வழக்கில் பயன்படுத்தினால் தமிழரின் மொழிப்பயன்பாடு மேலும் சிறந்து விளங்கும் எனத் தெளியமுடிகிறது..

இயற் பொருளும் குறிப்புப் பொருளும்
சொல்லால் பொருளை அறிதலும் பொருளால் சொல்லை அறிதலும் இயற்கை நிகழ்வு. ஆனால் ஒரே சொல்லானது தெரிநிலையால் ஒரு பொருளினையும் குறிப்பால் வேறொரு பொருளையும் குறிப்பிடும் வகையில் தமிழ் இலக்கியங்களில் இறைச்சி, உள்ளுறை எனப் பல நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இரு பாற்றென்ப பொருண்மை நிலையே  – (தொல்.நூ. 642)

என்னும் நூற்பா ஒரு சொல் இயல்பிற்றாய் மொழிதலின் போது ஒரு பொருளையும் சூழலுக்கேற்றார் போல் மொழிதலின் போது வேறொரு பொருளையும் குறிப்பிடுவதாகக் காட்டுகிறது. ’நீ நல்லா இரு’ , நீ மட்டும் முன்னேறினால் போதும்’ என்னும் இரு சொற்றொடர்களும் வாழ்த்துப் பொருளில் மட்டுமல்லாது இகழ்ச்சிப் பொருளிலும் அமைகிறது. இத்தகைய சொற்கள் இன்றைய நடைமுறை வழக்கிலேயேநிலவிவருகின்றன.அத்தகைய சொற்களை ஆய்ந்து தமிழ் அகராதியில் மதிப்பிற்கேற்ற வகையில் இணைப்பதும் தமிழ்மொழிப் பயன்பாட்டிற்குப் பெரிதும் துணை நிற்கும் எனத் தெளியலாம்.

உயர்திணைப் பயன்பாடு

தமிழர்கள் மட்டுமே உயர்திணைக்கு எதிராகத் தாழ்திணை என வரையறுக்காது அஃறிணை எனப் பெயரிட்டனர்.அவ்வாறு திணை, பால், எண், இடம் என ஒவ்வொன்றிலும் ஓர் ஒழுங்கு முறையினைப் பின்பற்றிய இனம் தமிழினமே. இதற்குச் சான்றாவன எழுத்து ஆவணங்களான  இலக்கணங்களே.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியை வரையறுத்த இனம் தமிழினம் என்பதற்குத் தொல்காப்பியம் அருமையான சான்றாகத் திகழ்வதனைக் காணமுடிகிறது.

அவ்வழி ,
அவன் இவன் உவன்என வரூஉம் பெயரும்
அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்
அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்  – (தொல்.நூ. 647)

என்னும் நூற்பா உகரச் சுட்டு வழக்கில் இருந்ததனை உணர்த்துகிறாது.இன்று ‘உ’ கரச் சுட்டு வழக்கிழந்துவிட்டது.ஆயினும் கிராமங்களில் உதோ வருகிறார் என இடைப்பட்ட இடத்தில் வருவோரைக் குறிப்பிடும் நிலை இருப்பதனைக் காணமுடிகிறது.கற்றோர்க்குரிய மொழி வளம் கல்லாதோரிடையே புதைந்திருப்பதனையும் அதனை மீட்கும் முயற்சியில் மொழியறிஞர்கள் ஈடுபட வேண்டியதன் அவசியத்தினையும் இதன் வழி உணரமுடிகிறது.

ஊடகங்களில் தமிழ்

        நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, கணினி, உலாப்பேசி என நாளுக்கு நாள் ஊடகங்கள் வளர்ந்து வருகின்றன.எனவே மொழியால் இயங்கும் இவ் ஊடகங்களுக்கு மொழியை வளர்ப்பதில் பெரும்பங்குண்டு எனத் தெளியலாம். ஆனால் இவ் ஊடகங்களில் தரமானதாகக் கருதப்படும் செய்திகளிலேயே  செய்திகள் வாசிப்பது, உயர்மட்டக் குழு, பேச்சு வார்த்தை, என்னும் சொற்றொடர்கள் தவறாக வழக்கத்தில் இடம்பெற்று வருகின்றன. இவை போன்ற தவறான சொற்களின் பயன்பாட்டால் இளைய தலைமுறையினர் தவறாகவே மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்.எனவே ஊடகங்களின் மொழிப்பயன்பாட்டிலும் தமிழறிஞர்கள் கவனம் கொண்டு திருத்த வேண்டியதும் அவசியமாகின்றது.

பிழையின்றி எழுதல்

        மொழியைப் பிழையின்றி எழுதவும் படிக்கவும் துணைசெய்வது இலக்கணம்.இலக்கண அறிவைப் பெற்றவரே தகவல் தொடர்புப் பணிகளில் ஈடுபடவேண்டும்.ல – ள – ழ, ர – ற, ன – ந – ண, என்னும் வேறுபாடுகளை முறையாகக் கற்பிக்க வேண்டும்.இன எழுத்துக்களின் துணைகொண்டே பல பிழைகளைத் தவிர்க்க இயலும் என்பதனை

தங்கம் – க –கரத்திற்கு ங – கரம் இணையாதல்
மஞ்சள் – ச – கரத்திற்கு ஞ – கரம் இணையாதல்
பண்டம் – ட – கரத்திற்கு ண – கரம் இணையாதல்
தந்தம் – த – கரத்திற்கு ந – கரம் இணையாதல்

என்பது போன்ற எடுத்துக்காட்டுகளின் வழி விளக்குதல் வேண்டும்.வல்லின எழுத்துக்களின் பின் வல்லின எழுத்துக்கள் வரக்கூடாது எனத் தெளிவுறுத்தவேண்டும்.இத்தகைய அடிப்படையான கூறுகளைக் கற்பித்தாலே மொழிப்பயன்பாடு குறையற்றதாகிவிடும் எனத் தெளியலாம்.

மொழிப்பற்றும் வெறியும்

ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.மொழி வெறி கூடாது என நல்லிணக்கம் குறித்துப் பேசுவோர் அனைவரும் தத்தமது தாய்மொழியின் மீது வெறி கொண்டவர்களே.வஞ்சக எண்ணம் படைத்தோர், பிறர்க்கு அறிவுரை கூறும்போது தாய்மொழிப் பற்றினை வெறியெனக் குறிப்பிடுவர். புத்தகங்களைப் படிப்பதை உயிர்மூச்சாக எண்ணி படித்துக்கொண்டே இருப்பவர் மீது பொறாமை கொண்டு அவர்களை இழிவுபடுத்தும் வகையில் புத்தகப்புழு எனக் குறிப்பிடுவது போன்ற செயலே இது. மனிதநேயத்தால் ஒன்றுபட்டு வாழ வழிகாட்டிய தமிழ்மொழியின் பெருமிதத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது தமிழை அழிக்கப் போராடும் வரலாறு காலந்தோறும் நிகழ்ந்து வருகிறது. எத்தடை வரினும் அத்தடைகளைத் தகர்த்து வாழும் பெருமைக்குரியதாகத் தமிழ்மொழி திகழ்வதனாலேயே தமிழ் ’தெய்வத்தமிழ்’ எனப் போற்றபடுவதனையும் இங்கு எண்ணி மகிழலாம்

நிறைவாக

மொழிப்பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டுமாயின் மொழியை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களை சீர்படுத்தலேமுதல் பணியாக அமைதல் வேண்டும்

தமிழில் பிழையின்றிப் பேசுவது என்பது தமிழர்களுக்கே அரிதாகி விட்ட நிலையினை இன்றைய ஊடகங்கள் மெய்ப்பித்து வருகின்றன.எனவே ஊடகப்பணிகளில் தமிழறிஞர்களையே பணிக்கமர்த்த வழிவகை செய்தல் வேண்டும்.

அனைத்துப் பாடங்களும் ஆங்கில மொழியில் இருக்க மொழிப் பாடம் மட்டும் தாய்மொழியில் இருப்பதனால் மாணாக்கர்களுக்கு மொழிப்பாடம் கடினமானதாகி விடுகிறது.எனவே தற்சிந்தனை வளரும் பருவமான கல்லூரிப் பருவம் வரை தாய்மொழியிலேயே கல்வி கற்க வழிவகை செய்தல் வேண்டும். தாய்மொழிச் சிந்தனையால் எதனையும் கற்றுச் சிறக்க முடியும் என்பதற்குச் சென்ற தலைமுறையினரே சான்றாவதனை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

பிற மொழி பேசும் மக்கள் பெரும்பாலும் பிறமொழிக் கலப்பில்லாமல் பேசுவதனையே கற்றோர்க்குரிய இலக்கணமாகக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் தமிழரோ பிற மொழிக்கலந்து பேசுவதனையே நாகரிகமாகக் கொண்டிருப்பதனை கல்வி நிலையங்களிலேயே காணமுடிகிறது.எனவே தாய்மொழியில் பேசுவதனையே பெருமையாகக் கருதும் வகையில் அரசானது பணிக்குஅமர்த்தும்போது, தமிழ்மொழியில் கற்றோர்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டியுள்ளது.

தமிழ் இனத்தைக்காக்கவேண்டுமாயின் தமிழ் மொழியின் பெருமையினை நிலைநாட்ட வேண்டும்.தமிழ்மொழியின் வளத்தைக் காக்க வேண்டுமாயின் மொழிப்பயன்பாட்டில் தமிழர் அனைவரும்ஒருங்கே கவனம் செலுத்த வேண்டும்.மேலும் அதற்கான மொழியுணர்வுடன்வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெளியமுடிகிறது.
**********




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக