அறவியல்
நோக்கில் சிலப்பதிகாரம்
முனைவர்
ம.ஏ. கிருட்டினகுமார். தமிழ்ப்பேராசிரியர் (துணை), புதுச்சேரி
-8 உலாப்பேசி – 99406 84775
சிலம்பினால் எழுந்த அதிகாரத்தின் நிலையினைக்
கூறுவது சிலப்பதிகாரக் காப்பியம்.அறமே வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் முடிவு செய்கிறது.அறத்தின்நிலையினைக்
கொண்டு வாழ்வைக் கணக்கிட இயலாததால் எச்செயலையும் ஊழ்வினையால் விளைந்தது என எண்ணிக்கொள்வதே
மானிட இயல்பாகி விடுகிறது.
இயற்கை அறம் பொய்ப்பின் சமூகம் பொய்க்கும்
; நாடு பொய்க்கும் ; உலகம் பொய்க்கும். இயற்கைஅறம் செழிக்குமாயின் சமூகமும் நாடும்
உலகமும் பெருமை பெறும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.எனவே அறத்தைப் போற்றி வாழும் வாழ்வே
அறவாழ்வாகிறது.இந்நிலையினைச் சிலப்பதிகாரச் சூழலின் வழி நோக்க விழைந்தததன் விளைவாகவே
இக்கட்டுரை அமைகிறது.
அறமாவது
எண்ணம் - சொல் – செயல் - பழக்கம் – ஒழுக்கம்
-ஆளுமை - சான்றாண்மை என்னும் வளர்ச்சி நிலைகளே மானிடப் பண்பை உணர்த்தி நிற்கும் அறத்தினை
வரையறுக்கின்றன.இது காலந்தோறும் மாறுபட்ட வளர்ச்சியினைக் கொண்டிருப்பினும் சான்றோரின்
வழக்கைக் கொண்டே அறத்தின் நிலை வரையறுக்கப்படுகிறது.நல்வினை தீவினை எவ்வினையாயினும்
அறத்தின் சார்பு கொண்டே கணக்கிடப்படுகிறது.நல்லார் ஒருவர் பொருட்டு உலகமே மழை பெறுவதை
உணர்த்தி அறவழி நிற்க அறிவுறுத்திய பெருமை தமிழினத்திற்கே உண்டு.
’மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம்’ என்னும் தெய்வப்புலவர்
திருவள்ளுவரின் வரையறையே அறவியலுக்கான உலகியல் கோட்பாடாகக் கொண்டு ஒழுக வேண்டும்.இவ்
வரையறையை விடுத்து வேறு வரையறையை பொருந்தக் கூறுதல் இயலாதெனவே எண்ணத் தோன்றுகிறது.அறக்
கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே சிலப்பதிகாரம் படைக்கப்பட்டுள்ளது.ஏனெனில் இக்காப்பியம்
உணர்த்தும் மூன்று உண்மைகள் பதிகத்திலேயே முறையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இவ் வரையறையைக்
கொண்டு சிலப்பதிகாரத்தை நோக்குவதனால் அறத்தின் நிலையினையும் இக்காப்பியத்தின் நிலையினையும்
மேலும் சுவைக்க இயலும் எனத் தெளியமுடிகிறது.
சிலம்பில்
அறம்
உலகில் நின்ற இலக்கியங்கள் பலவும் தலைவனையோ
தலைவியையோ காப்பியப் பெயராக இட்ட காலத்தில் கதை நிகழக் காரணாமாக இருந்த சிலம்பினையே
காப்பியப் பெயராக இட்ட பெருமை இளங்கோவடிகளுக்கே உரியது. சிலம்பே அறத்தை உணர்த்தும்
காப்பியத்தின் காரியத்துக்குக் காரணமாவதனால் சிலப்பதிகாரம் எனப் பெயரிட்டிருக்கக் கூடும்
எனவும் எண்ணமுடிகிறது.அச் சிலம்பின் வழி தனி மனித அறம், இல்லறம், துறவறம், அரசியல்
அறம் சமூக அறம் எனப் பல அறங்களை உணர்த்தும் வகையிலேயே இக்காப்பியம் புனையப்பட்டுள்ளதனைக்
காப்பியக் கூறுகளின் வழி நன்கு உணரமுடிகிறது.
அரசியல்
பிழைத்தோர்
அரசு அறத்தின் ஆணி வேர்.அரசே குடிமக்களுக்கு
நெறி காட்டி திறம் ஊட்டி வளம் நாட்டி வாழச் செய்வது.மன்னவன் கோல் நோக்கி வாழும் குடியைக்
காக்க வேண்டிய கடமை அரசனுக்கே உண்டு.அரசு எனின் அரசாளும் அரசன் மட்டுமன்று.அரசுக்குத்
துணை நிற்கும் அனைவருக்கும் இக் கூற்று பொருந்தும்.அரசு செயல்பாட்டில் தளர்வு உண்டாகத்
தொடங்கும் நிலையினைக் கொண்டே நாட்டின் தளர்வும் தொடங்கி விடுகிறது.இதனைப்பொறுப்பில்
உள்ளோர் உணர்ந்து வாழ்ந்தால் நாட்டில் எக்குற்றமும் நிகழ்வதற்கான வாய்ப்பின்றிப் போகும். அவ்வாறின்றி அறத்திற்கு மாறுபாடாகச் செயல்படின் அவ் அறமே
கூற்றாக நின்று வருத்தும் என்பதனை
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
(சிலம்பு. பதிகம் அடி:55)
என்னும்
அடியின் வழிசுட்டிக் காட்டுகிறது சிலப்பதிகாரம்.அரசன் எச்செயலையும் ஆய்ந்து செய்ய வேண்டிய
கடப்பாடுடையவன்.உணர்ச்சி வயப்படுபவனுக்கு அறிவு வேலை செய்வதில்லை.அறிவு வயப்படுபவன்
உணர்ச்சிக்கு ஆட்படுவதில்லை.எனவே உயர்ந்த பதவிக்கு உடல் வலிமையைக் காட்டிலும் அறிவு
வளமைக்கே முதன்மை இடம் கொடுக்கப்படுவதனை இங்கு எண்ண வேண்டியுள்ளது.இக்கருத்து முடியாட்சி
முதல் குடியாட்சி வரை எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைகிறது. இவ் அறத்தை நிலை நிறுத்தும்
வகையில் பாண்டிய மன்னன் என்ன கூறுகிறோம் எனஆராயாது உணர்ச்சிவயப்பட்டு
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கென (கொலைகளக்காதை
அ.151-153)
எனக்
கூறினான். மன்னன் கூற்று வெறும் உரையல்ல ;ஆணை என்பதனைக் கோவலனிடம் கருணை கொண்ட காவலர்களுக்குஉணர்த்துகிறான்பொற்கொல்லன்.
இதன்வழி மன்னனின் கூற்றையே ஆயுதமாக்கிக் கோவலனைக் கொன்றான். இதன் விளைவாக பின்னாளில்
தான் செய்த தவறினை கண்ணகியின் வழி உணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன்
“யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுளென
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே ...(வழக். காதை அ:75-78)
எனக்
கூறி தன் உயிரை அறத்திற்காக இழக்கிறான்.அற நிலையில் நின்று மக்களுக்கு நல்வழி காட்ட
வேண்டியவன் அந்நிலை தவறியதை எண்ணி தன் உயிரைக் கொடுத்து அறத்தை வாழ்விக்கிறான் என்பதனைச்
சிலப்பதிகாரம் தெள்ளிதின் உணர்த்துகிறது.
உரை
சால் பத்தினி
துறவறத்தை விட இல்லறம் பெரிது.ஏனெனில் இல்லறமே
துறவையும் போற்றிப் பாதுகாக்கிறது.கண்ணகி கோவலனைப் பிரிந்து வருந்திய வருத்தத்திற்கான
காரணங்களில் முதன்மையானதாக பிறரைப் போற்றிப் பாதுகாக்கும் மாண்பினை இழந்ததையே குறிப்பிடுகிறாள்.
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (கொ.க.கா
அ:71-73)
என்னும்
அடிகளின் வழி இதனைப் புலப்படுத்துகிறாள்.பிறர் நலம் போற்றும் தாயுள்ளம் கொண்ட கண்ணகி விருந்தோம்பலில் சிறந்து நின்றதனை இதன்வழி அறியமுடிகிறது.
மேலும் இல்லறத்திலும் அறம் வழுவாது கணவனைப் போற்றிய பண்பிலும் நிறைவாகச் செயல்பட்டதனை
“கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்
கடிமலர் அங்கையில் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள். . .(கொ.க.கா.அ:36-40)
என்னும்
அடிகள் புலப்படுத்துகின்றன.பெண்ணால் நேர்த்தியுடன் செய்யப்பட்ட அழகிய இருக்கையில் அமரச்செய்து
மலர் போன்ற கைகளினால் கோவலனின் கால்களைக் கழுவிவிட்டு அன்புடன் தொழுது உணவிட்ட நிலையினை
எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய பெருமையுடைய கண்ணகி இல்லற வாழ்விலும் செம்மையுற வாழ்ந்த
நிலையினைக் காணமுடிகிறது.
பெண்மைக்குரிய குணங்களாகிய அச்சம், மடம், நாணம்,
பயிர்ப்பு என்னும் குணங்களில் சிறந்து நின்ற கண்ணகி கணவனாகிய கோவலனைக் கொன்ற செய்தி
கேட்டு பொங்கி எழுவதனால் பத்தினித் தெய்வமாக மாறுகிறாள்.
மென்மை குணம் கொண்ட கண்ணகி வன்மையாக மாறுகிறாள்.
சிலம்பில் உள்ள மெல்லினமாகிய ’ம’ கரம் அதிகாரத்துடன் புணரும் போது வல்லினமாகிய ’ப’
கரமாக மாற்றம் பெற்று சிலப்பதிகாரமாக நின்றதனை கண்ணகியின் மாற்றத்தினாலேயே எனக் கூறுவதனையும்
இங்கு எண்ணி மகிழலாம்.
சிறுமுதுக்குறைவி எனப் போற்றப்பெறும் கண்ணகி
எந்நிலையிலும் அறத்தினின்று வழுவாது உண்மையை ஆய்ந்து செயல்படும் பத்தினித் தெய்வமாகத்
திகழ்ந்ததனை கண்ணகியின் செயல்பாட்டினைக் கொண்டு புலப்படுத்துகிறார் இளங்கோவடிகள். தன்
கணவன் நல்லவன் என்பதனை நன்கு உணர்ந்திருப்பினும் ஏதேனும் குற்றம் செய்திருக்கக்கூடுமோ
என அஞ்சி கதிரவனிடம் உண்மை நிலையை அறிவுறுத்த வேண்டுகிறாள். பத்தினியின் வினாவிற்கு
ஒரு குரலின் வழி கதிரவன் விடையளித்த நிலையினை
காய்கதிர் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயல் கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணும் இவ்வூரென்றது ஒருகுரல் (துன்பமாலை
அ:51-53)
என்னும்
அடிகள் உணர்த்தி நிற்கின்றன.உண்மை நிலையினை அறிந்த கண்ணகி தனக்குத் துணை செய்ய சுற்றியுள்ள
அனைவரையும் வேண்டுகிறாள்.எவரும் துணை நிற்காத போதும் மனம் தளராது தனியொருவளாக மன்னனைக்
கண்டு உண்மையை உணர்த்த விரைகிறாள். அறத்தை மன்னனுக்கு உணர்த்திய பின்னரே கணவனைக் காண்பேன்
எனவஞ்சினம் கூறும் கண்ணகியின் நிலையினை
காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கூடேன்
தீவேந்தன் தனைக்கண்டு இத்திறங்கேட்பல் யானென்றாள்
(ஊர்சூழ்வரி அ.:70-71)
என்னும்
அடிகள் எடுத்துரைக்கின்றன.இவ்வாறு அனைத்துச் செயல்பாடுகளிலும் மனைவியாக, மருமகளாக,
குடிமகளாக அனைத்து நிலையிலும் அறம் வழுவாது வாழ்ந்த கண்ணகி அறத்தைக் காக்கும் பத்தினித்
தெய்வமாகச் செயல்பட்டதனாலேயே அவ்வூர் மக்கள் அவளைத் தெய்வமாக வழிபட்டனர். அவள் மதுரையையே எரித்தாலும் அச்செயலில் நிறைவேயன்றி
குறைவில்லை என்பதனை மண்ணோர் மட்டுமின்றி விண்ணோரும் போற்றிப் புகழ்ந்ததனை
“இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ அன்றென
பொங்கெரி வானவர் தொழுதனர் ஏத்தினர் (அழற்படுகாதை அடி134-137)
என்னும்
அடிகள் எடுத்துரைக்கின்றன. பெண்ணானவள் எந்நிலையிலும் தன் கடமையிலிருந்து வழுவாது வாழ்ந்தால்
உலகமே போற்றும் என்னும் அறத்தினை
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
(பதிகம். அ:56)
கண்ணகியின்
வழி சிலப்பதிகாரம் உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.தனது அறத்தினின்று வழுவாது வாழும்
கண்ணகியிடம் நிலமகள் மாறாத அன்பு கொண்டிருந்தாள்.எனவே அவளுக்குப் பின்னால் நிகழும்
துன்பத்தை எண்ணி நிலமகள் வருந்தி மயக்கமுற்றாள்.இவ் அன்பினை எடுத்துரைக்க விழைகிறார்
இளங்கோவடிகள்.
கோவலனுக்கு கண்ணகி சோறிடும் முன் இலை போடும்
இடத்தில் நீர் தெளித்த நிகழ்வினை
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனல் போல்” . (கொ.க.கா.அ:40-41)
எனக்
கூறுகிறார் இளங்கோவடிகள். அறவாழ்வில் சிறந்து விளங்கும் கண்ணகிக்கு துன்பம் நேரப்போவதனை
எண்ணி மயக்குற்ற நிலமகளின் மயக்கத்தைத் தெளிவிப்பது போல் அக்காட்சி இருந்ததாக எடுத்துக்காட்டியுள்ளதனை
இங்கு எண்ணி மகிழலாம்.
ஊழ்வினை
உருத்தும்
வாழ்க்கை எவ்வாறு நடக்கிறதோ அதுவே ஊழ் எனக்
குறிக்கப்பெறுகிறது.வாழ்க்கைப் போக்கிலேயே வாழ்ந்து காட்டுவதும் அவ்வாறின்றி மாற்ற
முயல்வதும் ஊழ் வினைப் பயனே.இதனை உணர்ந்தே சான்றோர்கள் வாழ்வில் இன்பத்தையும் துன்பத்தையும்
ஒன்று போலவே கருதினர். இவ் அறத்தை உணர்த்தும் வகையிலேயே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் ஊழின்
வலிமையை எடுத்துரைக்கிறார்.
கடக் களிறிடம் சிக்குண்ட மறையவனைக் காத்து
கருணை மறவனாக, பாவம் செய்த பார்ப்பனியை விட்டுச் சென்ற கணவனைச் சேர்த்து வைத்த செல்லாச்
செல்வனாக, மகனை இழந்த தாயின் வருத்தம் நீக்க தானே மகன் போல் தாயையும் சுற்றத்தாரையும்
காத்த இல்லோர் செம்மலாகச் செயல்பட்டான் கோவலன். இப்பிறவியில் பெருமைக்குரிய செயல்கள்
பல செய்த கோவலன் முற்பிறவியில் செய்த ஊழ்வினையாலேயே வருந்த நேர்வதனை
”இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் . . . . (அடைக்.காதை அ:91-92)
என்னும்
மாடல மறையோனின் கூற்று வெளிப்படுத்துகிறது.இதன்வழி ஊழின் வலிமையை இளங்கோவடிகள் தெள்ளிதின்
புலப்படுத்துகிறார். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்னும் அச்சத்தை ஊட்டி
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நன்னெறி வழுவாது வாழவேண்டும் என அறிவுறுத்தியுள்ளதனை இதன்
வழி உணரமுடிகிறது.
காதல் மயக்கம் எந்த உறவையும் இழக்கும் துணைவைத்
தருவது.அவ்வாறே கோவலன் கண்ணகியை விடுத்து மாதவியிடம் வாழத் துணிகிறான்.மாதவியிடம் நீங்காத
காதல் மயக்கம் கொண்ட கோவலனின் நிலையினை
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென்
(அரங்கேற்று காதை அ:172-175)
என்னும்
அடிகளின் வழி உணர்த்துகிறார் இளங்கோவடிகள்.காலம் காதலை மட்டுமின்றி எதனையும் மாற்றும்
வல்லமை கொண்டது.விடுதல் அறியா விருப்பினனான கோவலன் ஊழின் வலிமையால் மாதவியை விலகிச்
சென்றதனை
யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததாதலின்
உலவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்
(கானல் வரி
பா - 52 அ.3-4)
என்னும்
அடிகளின் வழி உணர்த்துகிறார்.ஊழ் வினை என்பது எவரையும் எத்தகைய நிலையிலிருந்தும் மாற்றும்
வல்லமை உடையது.இல்லாரை உள்ளோராகவும் உள்ளோரை இல்லாராகவும் மாற்றும் வல்லமை ஊழுக்கு
மட்டுமே உண்டு.எனவே செய்யும் செயல்களை ஆய்ந்து, பிறருக்கு நன்மை உண்டாக்கும் செயல்களை
மட்டுமே செய்தல் வேண்டும்.அவ்வாறு இயலாவிடில் எவ்வகையிலும் கேடு நிகழாத செயல்களைச்
செய்ய வேண்டும்.ஏனெனில் எச்செயலுக்கும் உரிய பலன் கிடைத்தே தீரும் என்னும் அறத்தை
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் (பதிகம்.
அ.55)
என்னும்
அடியின் வழி சிலப்பதிகாரம் உணர்த்துகிறது.
நிறைவாக
’எழுகென எழுந்த’ கண்ணகியின் கற்புத் திறமும்
கருணை மறவனாக நின்ற கோவலனின் ஆண்மைத் திறமும் தலைக்கோல் பட்டம் பெற்றாலும் புத்த சமயம்
தழுவி நின்றமாதவியின் உள்ளத் திறமும் பண்புடை வாழ்வில் வழுவாது நிற்கும் அறத்தின் செழுமையை
எடுத்துரைக்கின்றன.
கோவலன்
கொலையுறுதலும் பாண்டியன் உயிர் துறத்தலும் கோப்பெருந்தேவி உடன் இறத்தலும் மதுரை தீக்கிரையாவதும்
அறத்திலிருந்து வழுவியதால் விளையும் கேட்டினை உணர்த்தி நிற்கின்றன.
தொடக்கத்தில் இல்லோர் செம்மலாக வாழ்ந்தவன்
இடைக்காலத்தில் ஊழ்வினையால் மாதவியின் பின் திரிந்து முடிவில் நல்வினையால் கண்ணகியுடன்
சேர்ந்து வாழும் நிலைபெற்ற அறத்தினால் கோவலனின் புகழ் நின்றதனைக் காணமுடிகிறது.
கண்ணகி துன்புறும் வகையில் கோவலனுடன் சேர்ந்து
வாழ்ந்தாலும் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
கற்றுத்தேர்ந்து தம் குலவழக்கத்துக்கு மாறாக கோவலனைத் தவிர பிற ஆண்மகன் மனத்தில் புகா
அறத்தினால் மாதவியின் புகழ் நின்றதும் புலனாகின்றது.
எந்நிலையிலும் அறத்தில் வழுவாது நின்ற கண்ணகியின்
கற்புத் திறமே காப்பியத்தின் பெருமைக்கு உரமாவதனால் அவளே காப்பியத்தலைவியாகி நீங்கா
புகழுடன் நிலைபெற்றுள்ளதனையும் உணரமுடிகிறது. இதன்வழி அறவாழ்வு வாழும் சிறப்பினைக்
கொண்டே தலைமையிடம் பெறும் நிலை அமைவதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனிதன் தெய்வமாகும் திறம் அறச் செயல்களாலேயே
நிகழ்வதனை கண்ணகியின் வாழ்வின் வழி இளங்கோவடிகள் உணர்த்தியுள்ளதனையும் நன்குணர முடிகிறது.
பாவம் புண்ணியம் என்னும் கணக்கினைக் கொண்டே
வாழ்வமைகிறது என்பதே ஊழ்வினை.இதனைப் பல்வேறு அறவியல் கூறுகளின் வழி எடுத்துக்காட்டி
சிலப்பதிகாரம் மனித சமூகத்திற்கு நல்வழி காட்டியுள்ளது எனத் தெளியமுடிகிறது.
********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக