தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

செம்மொழியான தமிழ்மொழி - Tamil is a Classical Language


செம்மொழியான தமிழ்மொழி

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி :9940684775)
          
       எம்மொழிக்கும் முதல்மொழியாய் நிற்கும் மொழி தம் தாய்மொழி எனக் கூறும் மொழியினர் பலர்.அவ்வாறு கூறுதற்கு அவரவர்களுடைய தாய்மொழிப்பற்றே காரணம் என்பதே தெளிவு. எனினும் தமிழர் தம் தமிழ்மொழிசெம்மொழிக்குரிய அனைத்துத் தன்மைக்கும் பொருத்தமுடையதாயிருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவ்வாறு நிறுவ முயலாததும் அதற்கான முயற்சியில் ஈடுபடாமலும் இருந்ததற்கான காரணங்களை அறியமுடியவில்லை. ஈராயிரம் ஆண்டுகளாக இடையறாத இலக்கியவளத்தினைக்கொண்டே தமிழ்மொழியினைச் செம்மொழியாகக்கொள்ள இயலும்  என எண்ணுவதும் மறுப்புக்குரியதாகாது. எனினும் செம்மொழிக்குரிய தகுதிகள் எவைஎவையென வரையறுத்த வரையறைகளைக்கொண்டு தமிழ்மொழியினை அவ்வரையறைக்கு உரியதாகவும் அவ்வரையறையினையும் விஞ்சி நிற்கும் பெருமையுடையதாகவும் விளங்கும் சீர்த்தியினை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலேயே இக்கருத்தரங்கப்பொருள் அமைந்துள்ளது வெள்ளிடைமலை. அவ்வகையில் தமிழ்மொழியினை அற இலக்கியங்களான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வழி செம்மொழியாகக் காட்ட வேண்டும் என எண்ணியதன் விழைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

செம்மொழி வரையறை

        திருந்திய பண்புஞ்சீர்த்தநாகரிகமும், பொருந்தியதூய்மொழிபுகல்செம்மொழியாம் என்பதுஇலக்கணம். இம்மொழிநூலிலக்கணம்தமிழ்மொழியின்கண்ணும்அமைந்திருத்தல்தேற்றம்.என்னை?

இடர்ப்பட்டசொன்முடிபுகளும்பொருண்முடிபுகளுமின்றிச்சொற்றான்கருதியபொருளைக்கேட்டான்தெள்ளிதினுணரவல்லாதாய்ப்பழையனகழிந்துபுதியனபுகுந்துதிருத்தமெய்திநிற்றலேதிருந்தியபண்பெனப்படுவது. இதுதமிழ்மொழியின்கண்முற்றும்அமைந்திருத்தல்காண்க.

நாட்டின்நாகரிகமுதிர்ச்சிக்கேற்பச்சொற்களும்ஏற்பட்டுப்பாஷைக்கும்நாகரிகநலம்விளைத்தல்வேண்டும்.

அவ்வாறுசொற்களேற்படுமிடத்துப்பிறபாஷைச்சொற்களன்றித்தன்சொற்களேமிகுதல்வேண்டும்.

இவையும்உயர்தனிதமிழ்மொழிக்குப்பொருந்துவனவாம். ஆகவேதமிழ்தூய்மொழியுமாம்

எனவேதமிழ்செம்மொழியென்பதுதிண்ணம். இதுபற்றியன்றேதொன்றுதொட்டுத்தமிழ்மொழிசெந்தமிழ்எனநல்லிசைப்புலவரால்நவின்றோதப்பெறுவதாயிற்று.

ஆகவேதென்னாட்டின்கட்சிறந்தொளிராநின்றஅமிழ்தினுமினியதமிழ்மொழிஎவ்வாற்றான்ஆராய்ந்தவழியும்உயர்தனிச்செம்மொழியேயாம்என்பதுநிச்சயம்”(தமிழ்மொழியின்வரலாறுபக். 95-96)
  எனப்பரிதிமாற்கலைஞர்கூறியுள்ளதன்வழிதமிழ்மொழியின்பெருமையினைஎளிதில்உணரலாம்.எனினும் இன்றைய செம்மொழிக்குரிய வரையறைகளான பழமை, வளமை, தனித்தியங்கும் தன்மை, என்பன போன்றவை திருந்திய பண்போடும் சீர்த்த நாகரிகத்தோடும் உள்ளடங்கியனவாகவே எடுத்துக்கொள்ளமுடிகிறது. இவற்றோடு இயைந்து இக்கூற்றிற்கு எடுத்துக்காட்டாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சான்றாக நிற்பதனைக் காணமுடிகிறது.

திருந்திய பண்பு

          இனம், மொழி, நிறம் என்னும் வேறுபாடின்றி அனைவர்க்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களை உடைய நூல்கள் உலக இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்களுக்கெனத் தனியிடமுண்டு.தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் உலக இலக்கியங்களுள் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதென்பதே இதற்குச் சான்று.இவ்வாறு எக்காலத்தவரும் உணர்ந்துகொள்ளும் பெருமையுடைய சங்ககாலஇலக்கியங்கள் பல தமிழில் உண்டெனினும் அவற்றை முறையாக எடுத்துச் செல்லாத குறை தமிழர்க்குண்டு.எனவே அந்நூல்களின் பெருமையினை உலகம் அறியாமலே தமிழ் மொழியின் அருமை குறித்து ஐயப்படும் நிலையினையும் காணமுடிகிறது.

          விண்ணும் மண்ணும் கடலும் காற்றும் தீயும் ஆய்ந்தாய்ந்து அதன் பெருமையினை வியக்கும் தன்மை போலவே தமிழ்மொழியின் பெருமையும் இன்று ஆய்ந்தாய்ந்து வியக்கத்தக்கதாகப் போற்றப்படுகிறது. இயற்கையான மொழி தமிழ் என்பதற்கு ’அ’ கரத்தில் அம்மொழி தொடங்குவதன் வழியே அறிந்துகொள்ளமுடிகிறது.தமிழ் மொழியினை உணர்த்தி நிற்கும் வகையில் திருக்குறள் அகரத்தில் தொடங்கி  னகரத்தில் முடிவதனையும் இங்கு எண்ணி வியக்கமுடிகிறது. எழுத்துக்களால் மட்டுமின்றி கூறும் அறக்கருத்துக்களாலும் தமிழர்களைப் பண்படுத்தியுள்ளதும் கண்கூடு. அக ஒழுக்கத்தைப் புலப்படுத்தும் பண்பாட்டினையும் புற ஒழுக்கத்தைப் புலப்படுத்தும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்திடும் வகையில் முதல்,கரு, உரி என வாழ்க்கையை வகுத்துவாழ்ந்த தன்மையின் வழியும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
உயிர்மொழி

          உயிர் தான் உடலை இயக்குவது.அவ்வாறே மக்களை இயக்குவதில் மொழியின் பங்கு அளப்பரியது.அவ்வாறு எழுத்துக்களை இயக்குவதற்குரிய எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்றும் அவற்றோடு சேர்ந்து இயங்கக்கூடிய எழுத்துக்களை மெய்யெழுத்துக்கள் என்றும் இவை இரண்டும் இணைந்து சார்ந்து வரக்கூடிய எழுத்துக்களை சார்பெழுத்துக்கள் என்றும் தனிநிலையாகும் எழுத்தினை ஆய்தம் என்றும் வறையறுத்த பெருமை உலகில் தமிழ்மொழியைத் தவிர வேறு மொழிக்கு உரியதன்று. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உரித்து என்பதனை மறுத்தற்கில்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் சொல்லையும் பொருளையும் உணர்ந்துகொள்ளும் பெருமையுடைய மொழி தமிழ்மொழி மட்டுமே என்பதற்குரிய சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துரைக்கும் வகையில் இலக்கியங்கள் வரிசைகட்டி நிற்பதனைக் காணமுடிகிறது.

ஒவ்வொரு எழுத்தினையும் ஆய்ந்து இவை இவை இவ்வாறு இவ்வெவ்விடத்திலிருந்து ஒலிப்பதனைக் கொண்டு இன எழுத்துக்கள் என வரையறுத்துள்ள பெருமையினை உரக்கக்கூறி உணர்ந்தாலன்றி சொல்லால் விளக்குதல் ஏற்புடையதாகாது. ஏட்டுக்கல்வி நிலையில் ஆய்தம் என்பது முப்பாற்புள்ளி எனக் குறிப்பிடப்பெறும்.மெய்யறிவு நிலையில் நின்று பார்ப்பினும் முப்பாற்புள்ளி என்பது மூன்றாவது கண்ணாகிய புருவத்திடையே நிற்கும் கண்ணினைத் திறப்பதே.அச்செயலே கல்வியின் நிறைவாகும் என்பதனை முப்பாற்புள்ளியின் வழி தமிழ்மொழி உணர்த்தியுள்ள சிறப்பினைமெய்யறிவாளர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.

கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (திருக்குறள்:2)

என்னும் திருக்குறள் கல்வியின் பயனை எடுத்துரைக்கிறது.கல்வி கற்றவரே கண்ணுடையவர்.இல்லாவிடில் இவ்வுலகில் பார்வையில்லாதவரைப் போல் கடினப்பட்டு இருளிலேயே வாழ வேண்டி வரும்.

          கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
          புண்ணுடையார் கல்லா தவர் (திருக்குறள் :393)

இது பொருளுடைய வாழ்விற்கும் அருளுடைய வாழ்விற்கும் பொருத்தமுடையதாக நின்று விளக்குமாற்றினை தமிழ் மொழியின் திருந்திய பண்பிற்குச் சான்றாக எடுத்துரைக்கமுடிகிறது.

ஓரடியில் ஓராயிரம்

          தமிழ் இலக்கியங்களில் அற இலக்கியங்கள் பெரும்பான்மையாக உலகுக்கு ஒத்த கருத்துக்களை எழிலுற எடுத்தியம்பியுள்ளதன் வழி திருந்திய பண்பினை ஊட்டும் மொழியாகத் தமிழ் மொழி விளங்குவதனை அறிந்துகொள்ளமுடிகிறது. பல இலக்கியங்களை உலகிற்கு எடுத்துக்காட்ட இயலும் எனினும் தமிழகம் வந்த பிறநாட்டு இலக்கிய அறிஞர்கள் சமயவாதிகள் திருக்குறளிலேயே மனம் செலுத்தினர்.ஏனெனில் அதனைச் சமயம் சாராத நூலாகக் கண்டதொடு ஈரடியில் அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய பெட்டகமாகவும் உணர்ந்திருந்ததனை அறிந்துகொள்ளமுடிகிறது.எனினும் ஓரடியிலேயே தமிழில் பாடிய பெருமை தமிழ் மூதாட்டியான ஔவையாருக்கு உண்டென்பது இங்கு எண்ணத்தக்கது.

          அவ்வாறே மதுரைக் கூடலூரி கிழார் இயற்றிய முதுமொழிக்காஞ்சி சிறந்த பத்து முதலாக தண்டாப்பத்து  ஈறாக பத்துப்பத்துப் பாடல்களாக நூறு பாடல்களை உடையதாகச் சிறக்கிறது. ஒரு பாடல் என்பது ஒரு வரியினையே குறிக்கிறது.ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் எனக் கூறி பத்து அறக்கருத்துக்களை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வரியினையும் ஒவ்வொரு பாடலாகக் கொண்டு பொருள்கொள்ள முடிகிறது. இவ்வாறு வழங்கப்பெறும் ஓரடியானது ஓராயிரம் கருத்துக்களை உணர்த்தி நிற்பதற்குச் சான்றாக   

          இயைவது கரத்தலிற் கொடுமை இல்லை (முதுமொழிக்காஞ்சி : 6 :5)
          நசையிற் பெரியதோர் நல்கிரவில்லை    (முதுமொழிக்காஞ்சி : 6 : 7)
          இசையிற் பெரியதோர் எச்சமில்லை (முதுமொழிக்காஞ்சி : 6 : 8)

என்னும் அடிகளைக் காணமுடிகிறது.காக்கை கரவாது உண்ணும் தன்மைத்து எனில் மனிதன் கரந்து வாழ்தல் நன்றாகாது எனக் கூறாது கொடுமையானது என உணர்த்துகிறார் கூடலூர்கிழார். அவ்வாறே ஆசையை விட வறுமை வேறொன்று எனக் கூறியுள்ளதனையும் தன் குலத்திற்குக் கொடுப்பதற்குப் புகழை விட சிறந்த செல்வம் வேறில்லை எனக் கூறியுள்ளதனையும் பல்வேறு சிந்தனைகளின் வழி விரித்துணர முடிவதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

          அவ்வாறே முன்றுரையரையனார் இயற்றிய பழமொழி ஓரடியில் பழமொழியினை ஈறாக வைத்து அதற்குரிய விளக்கமாக மூன்றடியை முன்னே வைத்து உரைக்கப்பெற்றது. ஓரடியில் ஓராயிரம் கருத்துக்களை உணர்ந்துகொள்ளும் வகையில் புனையப்பட்டிருக்கும் சிறப்பிற்கு

          திங்களை நாய் குரைத்தன்று (பழமொழி நானூறு :107:4)

என்னும் அடிகளே சான்றாக நிற்கின்றன.இவ்வுலகில் பிறர் நன்றாக வாழ்வதைப் பார்த்து மகிழ்வோரைக்காட்டிலும் பிறர் நலிவதைப் பார்த்து மகிழ்வோரே பெரும்பாலோனராக இருப்பதனைக் காணமுடிகிறது.அவ்வாறு பிறருக்குத் துன்பம் செய்து மகிழும் இயல்புடையோரைக் கண்டும் காணாதது போல் வாழ்தலே நன்றாகும். அவ்வாறின்றி அவர்களுக்கு விடையளிப்பதையே பணியாகக் கொண்டிருப்பின் முறையாக செய்ய வேண்டிய செயலை மறந்து முன்னேற்றமின்றி வருந்தியே வாழ நேரிடும் என்பதனை இங்கு எடுத்துரைத்துள்ளதன் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறு மட்டுமின்றி பகைவரின் ஏளனச் சொற்கள் எவ்வகையிலும் நம்மைக் காயப்படுத்தப்போவதில்லை என்பதனை உணர்ந்து செயல்பட்டாலே பகைவர் மீண்டும் தொல்லைக் கொடுப்பதனைத் தவிர்த்துவிடுவர். இவ்வாறு வாழ்வதன் வழி மனவருத்தமின்றியும் அதனால் நோய்நொடியின்றி வளமாகவும் வாழ இயலும் என்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.மேலும்மேலும் இது போன்று நானூறு (400) அடிகளை விளக்க ஆயிரத்து அறுநூறு (1600) வரிகளைப் புனைந்துள்ள திறமும் இங்கு எண்ணத்தக்கது.

மாணாக்கர் பண்பு

          பொருளை இழப்பதும் உடல் நலத்தை இழப்பதும் பெரிதன்று.அது இயற்கையாகவே அமையும்.அதனை மீட்டெடுத்தலும் இயல்பே.அது முயற்சியாலும் பயிற்சியாலும் அடைதல் இயலும்.ஆனால் பண்பினை மீட்டெடுத்தல் எக்காலத்தும் இயலாது.வடு போல் வாழ் நாள் முழுதும் ஒட்டிக்கொள்ளும் இயல்பினை உடையது.

          ஆணாக்கம் வேண்டாதான் ஆசான் அவற்கியைந்த
          மாணாக்கன் அன்பான் வழிபடுவான் – மாணாக்கன்
          கற்பனைத்து மூன்றுங் கடிந்தான் கடியாதான்
          நிற்பனைத்தும் நெஞ்சிற்கோர் நோய் (சிறுபஞ்சமூலம் :29)

என்னும் பாடலில் காரியாசான் மாணாக்கர் பெருமையினையும் சிறுமையினையும் எடுத்துரைக்கிறார்.காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றையும் ஒழித்து ஆசானை அன்பால் வழிபட்டு வாழ்வோரே நல் மாணாக்கராவர். அவ்வாறின்றி இம்மூன்றையும் ஒழிக்காது ஆசானிடம் கற்க வருபவன் தனக்குத்தானே துன்பம் செய்துக்கொள்வதோடு ஆசானுக்கும் நோயாகி நிற்பதனை எடுத்துக்காட்டியுள்ள சிறப்பினை இப்பாடலின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.இது எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் பாடப்பட்டிருக்கும் சிறப்பினை இங்கு எண்ணி எண்ணி வியக்கமுடிகிறது.

சீர்த்த நாகரிகம்

          தமிழர்கள் எக்காலத்தும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதையே தம்மியல்பாகக்கொண்ட பெருந்தன்மையினை உடையவர்கள்.அவ்வாறே நாகரிகத்தையும் பிறர்க்குக் கற்றுக்கொடுக்கும் வகையினாலேயே கற்றுக்கொடுக்கும் இனமாகத் தமிழினம் நிலைப்பதனைக் காணமுடிகிறது.கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் முதல் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் எனத்தொடரும் தமிழர் பெருமை இன்றைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது அவசியமாகின்றது.எக்காலத்தும் தமிழரே கப்பலைச் செலுத்தும் முறைக்கும் இமயம் தொடும் முயற்சிக்கும் உலகிற்கே முன்னோடியாக நின்று வழிகாட்டுவதும் தெளிவாகிறது. அவ்வாறே கோயிற்கலை முதல் சிற்பக்கலை வரை அனைத்துக்கலைகளுக்கும் முன்னோடியாக பெருவுடையார் கோயில் முதல் அனைத்துக்கோயில்களும் தமிழர்தம் பெருமையினை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது. அவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் மக்களைக்காத்து வாழ்ந்த பெருமையினை உலகிற்கே எடுத்துரைக்கும் வகையில் சீர்த்த நாகரிகத்தை புலப்படுத்துகிறது.அவ்வாறே எக்காலத்தவர்க்கும் உணர்த்தி நிற்கும் நாகரிக மொழி நடையாக தமிழ் இருப்பதற்கு எடுத்துக்காட்டாக ஆசாரக்கோவை இயற்றபட்டுள்ளது. இந்நூலில்

          விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
          இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
          ஒழுக்கம் பிழையாதவர்  (ஆசாரக்கோவை :21)

என்னும் அடிகளில் பெருவாயின் முள்ளியார் மக்கள் பண்பை எடுத்துரைக்கிறார். தான் மட்டும் உண்டால் மட்டும் போதும் என எண்ணாது விருந்தினர் முதியோர்கள், பசுக்கள், பறவைகள்,பிள்ளைகள்ஆகிய அனைத்திற்கும் உணவிட்டு வாழும் தமிழர்களின் ஒழுக்க நிலையினைக் காணமுடிகிறது. வீடு தேடி வந்த விருந்தினர், பசி தாங்க இயலாத முதியவர், தன் பாலைக் கொடுத்து பிள்ளைகளை வளர்க்கும் பசுக்கள், தம்மை அண்டி வாழும் பறவைகள், பிள்ளைகள் என அனைத்திற்கும் உணவு கொடுத்த பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தைக்கொண்டிருந்த தமிழர் வாழ்வின் பெருமையினை இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது.

நாகரிகத்தின் இனிமை

          நாகரிகம் என்பது நகரத்தின் கண் தோன்றுவது என்று குறிப்பிடப்படுகிறது.ஆற்றோரங்களிலேயே மனிதன் வாழத்தொடங்கி நாகரிகத்தை வளர்த்துக்கொண்டான் என்றும் வரலாறு எடுத்தியம்புகிறது.அவ்வாறு உலகத்திற்கே முன்னோடியாக நின்று தீயினை உண்டாக்கியவன் தமிழன் என்பதனை பழங்கால ஆய்வுகளின் வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது.இரும்பினைக் காய்ச்சி வளைத்து கட்டிடங்கள் கட்டியதும் உலகம் முழுதும் பரவியிருந்த சிறப்புக்குரியவரும் தமிழரே என்பதனையும் இன்றைய ஆய்வுகள் உணர்த்தி வருகின்றன.உலகின் பழமையான மொழி தமிழ் என்பதனை அமெரிக்கா அறிவித்துள்ளதும்.ஆஸ்திரேலியா தமிழின் அருமையினை உணர்ந்து ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தியுள்ள சிறப்பும் தமிழரின் பெருமைக்கு மேலும் சிறப்புச்சேர்ப்பதாகவே அமைகிறது.

பழங்காலத்தில் நால்வகைப்படைகளைக் கொண்டு நாட்டை ஆளக் கற்றிருந்தவன் தமிழன் என்பதனையும் உலகிற்கு உணர்த்துவதும் தமிழரின் திறத்தை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.வலிமையுடைய யானையைப் போர்க்களத்திற்குரிய படையில் சேர்க்கும் அளவிற்கு தமிழர் வலிமையில் சிறந்திருந்ததனை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. யானையை அடக்கும் வலிமையுடைய தமிழர் உணவுக்காகப் பிற உயிர்களைக் கொல்லாது வாழ்ந்த நிலையினையும் ஆற்றங்கரையில் முறையாக வீடு சமைத்து நின்ற சிறப்பினையும் எந்நிலையிலும் மானம் குறையாது வாழ்ந்த தனிப்பெருமையினையும் உடையவராக வாழ்ந்த நிலையினை

யானையுடைய படை காண்டன் முன்னினிதே
யூனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே
கான்யாற் றடைகரை யூரினி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு. (இனியவை நாற்பது :4 )

எனப் பூதஞ்சேந்தனார் பாடி மகிழ்கிறார்.இவையெல்லாம் இனிது எனத் தம் வாழ்வை வகுத்துக்கொண்டதைக் கண்டு பாடியதாகவே இப்பாடலை உணர்ந்துகொள்ளமுடிகிறது.இவ்வாறு வளர்ச்சி பெற்ற நாகரிகமான வாழ்வு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதனையும் நாகரிகமான இப்பாடல் உணர்த்தியுள்ளதனையும் காணமுடிகிறது.

நிறைவாக

          தமிழ் இலக்கியங்கள் செம்மொழி இலக்கியங்களுக்குரிய வரையறைக்குப் பெரிதும் பொருந்தி நிற்பதற்கு அற இலக்கியங்களே போதுமான சான்றாக நிற்பதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

      தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் அடியால் குறுகியிருப்பதனாலும் அருமையினால் சிறந்திருப்பதனாலும் உலக அளவில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகத் திகழ்வதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது. அவ்வகையில் பிற அற இலக்கியங்களையும் கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாடு தமிழர்க்கே உரியது எனத் தெளியமுடிகிறது.

         திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் உடைய மொழியே செம்மொழி என வரையறுத்த பரிதிமாற்கலைஞரின் கூற்றுக்கேற்றவாறு பதினெண்கீழ்க்கணக்கின் அற இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

          எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களை வளரும் மொழியாக நின்று உயிர்ப்புடன் வழிகாட்டும் பெருமையுடைய மொழியாகத் தமிழ் மொழி விளங்குகிறது என்பதற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சான்றாக நிற்பதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
          மொழியின் எளிமையும் அருமையும் அவற்றின் இலக்கியவளத்தைக் கொண்டே அளந்தறிய முடிகிறது. அவ்வாறு சிறியோர் முதல் பெரியோர் வரை கற்றுப் பயனடையும் வகையில் இயற்றப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எளிமைக்கு எளிமையாகவும் அருமைக்கு அருமையாகவும் நின்று தமிழ்மொழி செம்மொழி என்பதனை நிறுவியுள்ளதனைத் தெள்ளிதின் உணரமுடிகிறது.
*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக