தொல்காப்பியம் – ஓர் அறிவியல்
நோக்கு
முனைவர் ம.ஏ.
கிருட்டினகுமார், தமிழ்ப் பேராசிரியர்
(துணை), தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி.
தொல்காப்பியம் தமிழிலக்கண நூல்களுள்
முதன்மையானது. ஏனெனில் அதற்கு முன்னர் எழுந்த இலக்கண நூல்கள்
கிடைத்தில. தொல்கப்பியத்தின் காலம் ஈராயிரத்து ஐந்நூறு
ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஒருவாறு ஆய்வறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட
அண்மை எல்லையை எடுத்துக்கொண்டாலே தமிழரின் பெருமைகளை நன்கு உணரலாம். இலக்கண நோக்கில் மட்டுமன்றி அறிவியல் நோக்கிலும் முதன்மையாகத் திகழ்வது தொல்காப்பியம்
என்பதனைதக் காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை
எழுகிறது.
அறிவியல்
நோக்கு
எவராலும் ஆய்வு செய்து ஒப்புக்கொள்ளக்
கூடிய நோக்கினையே அறிவியல் நோக்கு எனக் குறிப்பிடுவர். தமிழ்
நூல்களில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் ஏராளம். தமிழறிவும்
பிற துறை அறிவும் கொண்ட ஆர்வலர்கள் இல்லாததனாலேயே அப்பெருமைகளை வெளிக்கொணர்வதில் சிக்கல்
ஏற்படுகிறது. செவ்வாய் எனப் பெயரிடப்பட்ட கோள் உண்மையில் செம்மை
நிறம் உடையதனை அக்கோளைக் கண்டறிந்த பின்னரே தமிழரின் பெருமையினை உலகத்தவர் உணர்ந்தனர். இவ்வாறு தொல்காப்பியத்தில் புதைந்துள்ள அறிவியல்
கருத்துக்களை இனி காண்போம்.
இயற்பியல்
நிறுத்தல் அளவை முகத்தல் அளவை
என்பன ஒரு பொருளின் நிறையைக் குறிக்கத் துணைநிற்பன. ஃப்ரான்ஸ்
நாடு 1799 ஆம் ஆண்டு அளவுகள் குறித்தும் அளக்கும் கருவிகள் குறித்தும்
உலகிற்கு அறிமுகம் செய்தது. ஆனால் தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே முறையாக அளக்கும் வழக்கத்தை வாழ்க்கை முறையாகக் கொண்டு
இருந்தனர், கழஞ்சு, கலம் என்னும் சொற்கள்
இதனை உணர்த்துகின்றன.
அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி
உளவென மொழிப உணர்ந்தசி னோரே
(தொல்
-601)
என்னும் நூற்பா தமிழர்கள்
நாழி,
உழக்கு, தொடி எனத் தங்கள்
அன்றாட வாழ்க்கையில் அளவைகளைக் கொண்டு வாழ்ந்துள்ளதனை தொல்காப்பியர் இந்நூற்பாவின்
வழி தெளிவுறுத்துகிறார்.
மரபியல்
மரபியல் துறை இன்று மருத்துவத்துறையில்
பெரும்பங்காற்றி வருகிறது. க்ளோனிங் முறையால் மரபணுக்களைக் கொண்டு
உயிர்களைத் தோற்றுவிக்கும் நிலைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆனால் இத்தகைய முயற்சிகளுக்கு அடிப்படையாக அமையும் உயிர்ப்பாகுபாட்டினை
தெளிவுறுத்தியவர் தொல்காப்பியர்.
ஒன்று அறிவதுவே
உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே
அதனொடு நாவே
மூன்று அறிவதுவே
அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே
அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு
மனனே
நேரிதின் உணர்ந்தோர்
நெறிப்படுத்தினரே (தொல்
– 1526)
தொடுதல், சுவைத்தல்,
முகர்தல், காணல், கேட்டல்,
மனத்தால் அறிதல் என்னும் வரிசைப்படி அறிவின் வளர்ச்சி நிலையினைக் கொண்டு
உயிர்களை ஆறறிவாக வகுத்த நுட்பத்தை தொல்காப்பியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்நூற்பாவின்வழி தமிழரின் உயிர்நிலை குறித்த கோட்பாடுகளைக் காணமுடிகிறது.
பொறியியல்
தமிழர் கட்டடக்கலையிலும் சிறந்து
விளங்கினர் என்பதற்கு கோட்டைகளும் கோவில்களுமே சான்றாகின்றன. ஊழிக்காலமாயினும் போர்க்காலமாயினும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பன இவை இரண்டுமே.
எனவே இவற்றை மிகுந்த நுட்பத்துடன் கட்டினர் அக்கால
மன்னர்கள்.
முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்று ஆகும் என்ப
(தொல்-
1011)
என்னும் நூற்பாவின் வழி
உழிஞைத் திணைக்குரிய இருநெறிகளைக் (முற்றுகை, கைக்கொள்ளல்) குறிப்பிடும் தொல்காப்பியர் அரண்மனைகள் வலிமையான அடித்தளத்துடன் கட்டப்பட்ட
தமிழரின் கட்டடக் கலை நுட்பத்தினை எடுத்துரைக்கிறார். அவ்வாறே
மக்களின் உயிர் காக்கும் நீர்வளங்களைப் பாதுகாக்கவும் வெள்ளம் பெருக்கெடுத்து பெருந்துயரம் ஏற்படுத்தா வகையிலும் அணைகளைக் கட்டினர்.
இதனை
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
(தொல்-
1009 : 7)
என்னும் நூற்பா அடியின்
வழி அறியலாம்.
வஞ்சிப்போர் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் இவ் உவமைக் கூற்று போர் செய்யும் வீரன் கற்சிலைப் போல் எதிரிகளைத் தாங்கும் வல்லமை கொண்டதனை
எடுத்துரைக்கிறது. இதன் வழி வீரனின் பெருமையினையும் கற்சிறைகள் வைத்து
விசைப்புனலைக் கட்டுப்படுத்திய திறத்தையும் ஒருவாறு உணரலாம்.
புவியியல்
நிலப்பாகுபாட்டை வகுத்த இனம்
தமிழினம். நிலத்தை அடிப்படையாகக் கொண்டே ஒழுக்கம் அமைவதனை உணர்ந்தே
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களை வகுத்தனர். அந் நிலங்களுக்குப் பின்
திணையினை இணைத்து காலத்துடன் நிலத்தையும் முதற் பொருளாக்கினர். எந்தெந்த நிலத்தில் எவையெவை கிடைக்கும் என்பதனைக் கருப்பொருளாக வகுத்துக் காட்டினர்.
இவ் இரு பொருளையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் தலைமக்களின் ஒழுக்கத்தினை
உரிப்பொருளாக்கினர்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
எனச்
சொல்லிய முறையால் சொல்லவும்
படுமே (தொல்- 951)
என்னும் இந்நூற்பா
நிலங்களை காடு,
மலை, வயல், கடல் சார்ந்த
பகுதிகள் என சிறப்பு
நிலையில் வகைப்படுத்தியுள்ளது. பொதுத்தன்மையுடைய பாலை நிலத்தை
இங்கு குறிப்பிடவில்லை. மக்கள் வாழும் நிலைக்கேற்ப அமைந்த நிலங்களையே
நால் வகை நிலங்களாக வகுத்து வாழ்ந்த முன்னோரின் நிலையினைச் சுட்டிக்காட்டியுள்ளார்
தொல்காப்பியர்.
புவியியல் அறிஞர்கள் நில வளங்கள்
குறித்து ஆய்ந்து வருவதைப் போன்று அன்றே நிலத்தை வகுத்து குடியமைத்த நிலையினை இந்நூற்பாவின்
வழி அறியலாம். நிலத்தின் மேலிருந்தே குச்சியின் சுழற்சியைக் கொண்டு நீரின் போக்கினைக் கண்டறிந்த தமிழரின்
திறத்தினை இன்று நிலத்தை
ஊடுருவும் எந்திரங்களைக் கொண்டு நீரின் போக்கினைக் கண்டறியும் நிலையோடு ஒப்பிட்டும்
தமிழரின் பெருமையினை உணரலாம்.
1905 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
சார்பு நிலை குறித்த தம் ஆய்வின் முடிவில் நிலமும் பொழுதுமே
அனைத்து இயக்கத்திற்கும் அடிப்படையாவதனை உலகுக்கு உணர்த்தினார்.
தமிழர்கள் நிலத்தையும் பொழுதையுமேதுமே முதற்பொருளாகக் கொண்டு வாழ்ந்த்தனை
”முதல் எனப்படுவது நிலம்பொழுது
இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே
(தொல்.950)
என்னும் நூற்பா வழி சுட்டிக்காட்டியுள்ளார் தொல்காப்பியர். வாழ்வில் முதன்மையானது நிலமும் பொழுதுமே என வகுத்திருந்த
தமிழர் மரபினை இங்கு எண்ணி வியக்கலாம்.
உலகின்
தோற்றம்
புவியின் தோற்றத்தைக் கண்டறிவதற்கே
பல ஆண்டுகளாயின. புவியானது 4.6 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன் வாயுக்களாலும் தூசுகளாலும் ஆனது என நிறுவியுள்ளனர் அறிவியலாளர்கள்.
புவி அழியாத் தன்மை கொண்டது. செயற்கையாக அழித்தாலும்
மீண்டும் தானே உருவாகும் தன்மையது என இன்றைய அறிவியல் உலகம் குறிப்பிடுகிறது.
புவியின் தோற்றத்திற்கும் மேலான உலகத்தின் தோற்றத்தையே
வரையறுக்கிறார் தொல்காப்பியர்.
நிலம் தீ நீர் வளி விசும்போடு
ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
.. . . (தொல்-
1589 : 1-2)
என்னும் இந்நூற்பா அடிகள்
நிலம்,
தீ, நீர், வளி, வானம் என்னும் ஐந்து பூதங்களாலேயே (இயற்கை ஆற்றலின் வழி
பூத்ததனால் பூதங்கள்) உலகம் தோன்றியதனை எடுத்துரைக்கிறது.
தாவரவியல்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த
தமிழர்கள் கருப்பொருளின் வழி பாடலின் திணைகளை உணர்த்திப் பாடினர். புலவர்கள் தாவரங்கள், விலங்குகள் குறித்த நுட்பங்களை
அறிந்திருந்ததனை சங்க இலக்கியப் பாடல்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு
புலவர்கள் தாவரங்கள் குறித்த நுட்பங்களை அறிந்திருந்த திறத்தினை
புறக் காழனவே புல் என மொழிப
அகக் காழனவே மரம் என மொழிப
(தொல்- 1585)
என்னும் நூற்பாவின் வழி
உணர்த்துகிறார்
தொல்காப்பியர். புறத்தே உறுதியுடையனவும் உட்பகுதியில்
துளையுடையவனானவை (மூங்கில்) அனைத்தையும்
புல் என்றும் உள்ளும்
புறமும் உறுதியுடையனவற்றை மரம் எனவும் வகுத்த தாவரவியல் பாகுபாட்டினைக் குறிப்பிட்டுள்ள
திறத்தினை இங்கு காணமுடிகிறது.
தாவரங்களுக்கு உயிருண்டு எனக்கண்டறிந்தவர்
ஜே.சி. போஸ் அவர்கள். தாவரங்கள் மனிதரைப் போலவே உணவு உண்டு இரவில் உறங்கி காலையில் விழித்து மகிழ்ச்சி
துன்பம் என்னும் உணர்வுகளோடு பிறப்பும் இறப்பும் கொண்டுள்ள உயிர் என நிறுவினார்.
இந் நிலையினைக் கண்டு உலகத்தவர் வியந்தனர். தொல்காப்பியர்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓரறிவுயிர் எனத் தாவரங்களை வகுத்துள்ளதை உலகத்தவர்
அறிந்தால் தமிழரின் பெருமையினை எண்ணி வியப்பர் என்பதில் ஐயமில்லை.
உளவியல்
உள்ளத்தினை அறியும் அறிவியல்
முறையே உளவியல் ஆயிற்று. இன்று இத்துறை பெரிதும் வளர்ச்சியடைந்து
கல்வித்துறை மருத்துவத்துறை
என அனைத்துத் துறைகளிலும் பரவலாகிவிட்டது. ஏனெனில் மனத்தைப் பொருத்தே
வாழ்க்கை அமைகிறது. மனத்தின் அடிப்படையிலேயே சொல்லும் செயலும்
அமைவதனால் அவ் ஒழுக்கமே பழக்கமாகவும் பண்புமாகவும் நிலைத்துவிடுகிறது. தமிழ்ப் புலவர்கள் இந்நுட்பத்தினை தலைவன் தலைவி, தோழி
இவர்களின் கூற்றின் வழி வெளிப்படுத்தியுள்ள அருமையினை சங்க இலக்கியங்களின் வழி அறியலாம்.
காதல் வயப்பட்டவர்களின் நிலையினை
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்
சிறப்புடை மரபி னவை களவு என
மொழிப (தொல்- 1046)
என்னும் நூற்பா வழி தெளிவுபடுத்தியுள்ளார்
தொல்காப்பியர்.
ஒருவன் எதை நினைக்கிறானோ அதையே எங்கும் காணும் நிலை ஏற்படுவது இயற்கை
என்னும் இன்றைய உளவியல் அறிஞர்களின் கருத்துக்களை அன்றே ’நோக்குவ
எல்லாம் அவையே போறல்’ என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய
பெருமையினைத் தொல்காப்பியர் சுட்டிக்காட்டியுள்ளதனை எண்ணி மகிழலாம்.
சூழ்நிலை மனிதனின் உளத்தை மாற்றும் தன்மையது என்பதனை இன்றைய உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் உடலைச் சீராக வைத்துக்கொள்ள
முடியும் எனவும் அறிவுறுத்துகின்றனர். செல்வம், மகிழ்ச்சி, விருப்பு வெறுப்பின்றி வாழ்தல், கனிவுடன் வாழ்தல் குடிப்பிறப்பு, அடக்கம், மன உறுதி , அன்புடைமை ஆகியன அழகிய மெய்ப்பாட்டின் வெளிப்பாடாக
அமைவதனை
உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல்
தன்மை அடக்கம் வரைதல் அன்பு
எனாஅக். (தொல்
– 1206 : 3-4)
என்னும் நூற்பா எடுத்துரைக்கிறது. அவ்வாறே
தவறான வழியில் செல்வோரின் மெய்ப்பாடு எச்செயலிலும் கட்டுப்பாடின்மை, இகழ்தல், தீமை செய்யும் எண்ணத்தின் வழி அறிந்துகொள்ளலாம்.
இம் மெய்ப்பாட்டினை
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி…. (தொல் -1206 : 5)
எனக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். ஒருவருடைய
மெய்ப்பாட்டினைக் கண்டறிந்தாலே குற்றங்களைத் தடுத்துவிட முடியும் என்னும் இன்றைய உளவியல்
சிந்தனைகளுக்கு அடிப்படையாக மெய்ப்பாடுகளை வரையறுத்துள்ளதனைக் காணமுடிகிறது.
மகப்பேற்றியல்
இன்றைய கணினி காலத்தில் மகப்பேற்றுக்குரிய
மருத்துவமனைகளும் விழிப்புணர்வும் பெருகிவருகின்றன. உணவு முறைகளாலும்
எந்திர வாழ்க்கை முறையினாலும் மகப்பேற்றின் இயல்பு நிலை சிக்கலாகிவிடுகிறது.
எனவே மருத்துவர்கள் மகப்பேறு பெறுவதற்குரிய காலத்தில் பணிக்கு விடுப்பெடுத்து
சலனமின்றி ஓய்வு நிலையில் ஆணும் பெண்ணும் இருக்க அறிவுறுத்துகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மகப்பேறுக்குரிய காலத்தை அறிந்து தமிழர்கள் வாழ்ந்திருந்த
நிலையினை புலவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதனை
பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்து அகன்று உறையார் என்மனார்
புலவர் . . . (தொல்- 1133)
என்னும் நூற்பா அடிகளின்
வழி தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர். தலைவி கருவுற விரும்பும் தலைவன்
அவள் மாதப் பூப்படையும் காலத்திற்குப் பின் வரும் பன்னிரண்டு நாள் தலைவியை விட்டுப்
பிரிந்து பரத்தையை நாடமாட்டான் எனக் கூறுவதன் வழி தமிழ் மக்கள் கருவுறுதல் குறித்த
விழிப்புணர்வுடன் இருந்த நிலையினை அறிந்துகொள்ள முடிகிறது.
நிறைவாக
மொழிப்புலமை மட்டுமின்றி பிற
துறை சார்ந்த கல்வி அறிவோடு உலகியல் அறிவும் ஒருங்கே பெற்ற தொல்காப்பியரின் புலமையினை
1610 நூற்பாக்களின் வழியும் அறிந்துகொள்ள முடிகிறது.
தொல்காப்பியத்தில் புதைந்திருக்கும்
பிற துறை சார்ந்திருக்கும் கருத்துக்களை அவ்வத் துறை புலமையுடைய தமிழார்வலர்களாலேயே
காணுதல் இயலும்.
தமிழர்கள் அறிவியல் நோக்கு என
வகுக்காமலேயே அறிவியல் நுட்பங்களோடு வாழ்ந்துள்ளனர் என்பதனைத் தொல்காப்பிய நூற்பாவில்
பொதிந்துள்ள கருத்துக்கள் எடுத்துரைக்கின்றன.
இயற்பியல், மரபியல், உளவியல், புவியியல்,
தாவரவியல், என அனைத்துத் துறைகளுக்கும் முன்னோடியாகத்
தமிழர் வாழ்ந்திருந்தனர் எனபதனைத் தொல்காப்பியர் நிறுவியுள்ளார்.
தொல்காப்பியம் என்னும் இலக்கணப்
புதையலை முறையாக ஆய்ந்தால் தமிழரின் பெருமையினைத் தரணியெங்கும்
நிலைநிறுத்த இயலும் எனத் தெளியமுடிகிறது.
******************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக