தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டும் சுந்தரர் -Nambiran Thozhar Sundarar


இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டும் சுந்தரர்

முனைவர்ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப்பேராசிரியர் (துணை), புதுச்சேரி.உலாப்பேசி : 99406 84775

                                                                       
        சுந்தரர், ஆலால சுந்தரர், ஆருரன், வன் தொண்டர் எனப் போற்றப்படுபவர் தம்பிரான் தோழர். இவர் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் ; சைவசமயக் குரவர் நால்வரில் ஒருவர் ;  தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.

        இறைவன் இருக்கிறாரா? அருளாளர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? எனக் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையாக பக்தி இலக்கியங்களும் கோயில்களுமே சான்றாக விளங்குகின்றன. இவற்றை உண்மையில்லை என மறுக்க முடியாது. இறைவன் நம் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என எண்ணி அவன் எங்கோ இருப்பதாக எண்ணுவதனாலேயே நாட்டில் குற்றங்கள் நிகழ்கின்றன. இறைவன் எப்போதும் நம்முடன் இருப்பதாக எண்ணினால் எவரும் எக்குற்றமும் செய்யாது உடல் நலத்துடன் வாழ இயலும். இறைவனைப் பார்க்க இயலுமா? இறைவன் எப்படி இருப்பார் ? எனக் கேட்போருக்கு விடையாகவே சைவசமயக் குரவர்கள் இப்புவியில் பிறந்து வழிகாட்டியுள்ளதனை பக்தி இலக்கியங்களின்வழி அறியமுடிகிறது.

        இறைவன் தாயாக தந்தையாக தோழனாக குருவாக இருப்பதனை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்  மற்றும் மாணிக்கவாசகர் வாழ்க்கையின் வழி தெளியலாம். இறைவன் யாதேனும் ஒரு உருவில்வந்து வழிகாட்டும் பெருமையுடையவன் என்பதனை அருளாளர்களின் வரலாறு காட்டுகிறது. இறைவன் காட்சி அளிப்பாரா என்னும் கேள்வியே எழ இயலாதவாறு அவர் உறவாகவே வாழ்ந்த அருளாளர்களின் வழி உணரமுடிகிறது. இப்பெருமையினை உணர்த்தும் வகையில் பன்னிரு திருமுறைகள் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்வதனைக் காணமுடிகிறது.இறை அன்பும் அருளும் மட்டுமே வாழ்க்கையின் மெய்ப்பொருள் என்பதனை இன்றைய தலைமுறைக்கு சுந்தரரின் வாழ்வின் வழி எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

கயிலாயத்தில் சுந்தரர்

        சிவபெருமான் வேறு சுந்தரர் வேறு என்று குறிப்பிடப்படுவதில்லை. சிவபெருமான் ஆடியில் தமது உருவத்தைப் பார்த்தபோது மனத்தை வென்ற அவருக்கே அந்த அழகின்மீது விருப்பம் வந்துவிட்டது. அந்த உருவத்தைக் கண்டு சுந்தரா வா ! என்று அழைக்க ஆடியில் இருந்த உருவமே உடலைப் பெற்றுவந்தது. அதனால் அவர் சுந்தரரானார் எனக் கச்சியப்பச்சிவாச்சாரியார் தம் தேரூர் புராணத்தில் குறிப்பிடுகிறார்.

        சுந்தரர் பிறப்பிறப்பில்லாத இறைவனிடம் கையிலாயத்தில் பணி செய்து கொண்டிருந்த போது அநிந்திதை கமலினி என்னும் இரு பெண்கள் மீது ஆசை கொண்டார். ஆசை என்பது பூலோகத்திற்கே உரியது அதனால் தான் மாயையினை அறிந்து கொள்ள இயலாது. அதனாலேயே உலகத்தவர் அனைவரும் ஏதேனும் ஒரு துன்பத்தில் சிக்கி வருந்துகின்றனர். அந்த ஆசையை அனுபவித்தால் ஒழிய அந்த ஆசையின் தன்மையினை அறிதல் இயலாது. அதனை அனுபவித்து ஒன்றுமில்லாத நிலையினை உணர்ந்த பின்னரே இறைவனின் பெருமையினை மெய்ப்பொருளை அறிதல் இயலும். அதுவரை எவ்வளவு தான் எடுத்துக்கூறினாலும் மாயையின் கொடுமையினை அறிதல் இயலாது. மாயை அறிவுக்கண்ணை மறைக்கும். இதனை உணர்ந்தே அருளாளர்கள் வாழ்ந்து காட்டினரேயன்றி யாரையும் திருத்துவதனை தம் நோக்கமாகக் கொண்டுவரவில்லை. இவ் உண்மையினை உணர்த்தும் வகையில் பூவுலகிற்கு சுந்தரரை அனுப்புகிறார் சிவபெருமான்.பிறப்பு வினையின் பயன். ஒவ்வொரு செயலாலும் வினைப்பயன் அமைகிறது. எனவே எண்ணத்தின் பயனாக வாழ்க்கை அமைகிறது என உணர்த்தியுள்ளதனைத் தெளியமுடிகிறது.

தடுத்தாட்கொள்ள வேண்டல்

        சிவபெருமான் அருளிய பிறப்பினை மறுக்க இயலாத சுந்தரர் பூவுலகத்தில் மாயையால் வேறொரு பெண்ணை மணக்க நேர்ந்தால் என்ன செய்வது எனக் கேட்க, யாம் ஆட்கொள்வோம் எனக் கூறுகிறார். இதனைக் கேட்ட பின்னரே பூவுலகில் பிறக்கிறார் சுந்தரர். பிறப்பு என்பது முன்னிருந்த பிறவியின் அடிச்சுவடு ஒரு துளியும் அறியாது இருப்பது. அதனாலேயே அந்த பிறப்பு வினைப்பயன் எனக் கூறப்படுகிறது. அனைத்துப் பிறவி உறவுகளையும் செயல்களையும் நினைவு கொள்ள நேர்ந்தால் இன்பமாக வாழ இயலாது ; மனநிலையும் சீராக அமையாது. அவ்வாறு படைக்கவும் இயலாது என்பதை உணர்ந்தே சுந்தரர் பிறப்புக்கு முன்னரே தம்முடைய திருமண நிலை குறித்து இறைவனிடம் தெளிவுபடுத்திக் கொள்கிறார்.இறைவனின்அருளைப்பெற்றவராயினும்வினைப்பயனிலிருந்துமீளமுடியாது.எனவேஎண்ணம், சொல், செயல்எனஅனைத்திலும்விழிப்போடுஇருக்கவேண்டியஅவசியத்தினைஉணர்ந்துகொள்ளமுடிகிறது.

ஆலால சுந்தரர்

        ஆலத்தை (விடத்தை) ஆண்ட சுந்தரர் என்பதன் சுருக்கமாக அமைவதே இத்திருப்பெயர். திருப்பாற்கடலைக் கடையும்போது வெளிவந்த விடத்தின் அருமையால் செந்நிறம் கொண்ட திருமாலே கருநீல வண்ணனார். சிவபெருமான் ஆலத்தை விழுங்கியபோது விடம் கழுத்துக்குக் கீழே இறங்காதவாறு உமையம்மை கழுத்தைப் பிடித்தாள். அனைவருடைய கண்டத்தையும் நீக்கும் சிவபெருமான் திருநீலகண்டரானார். திருமாலையும் சிவபெருமானையும் தாக்கிய அவ் விடம் அவருடைய ஆணைப்படி அதனை உள்ளங்கையில் எடுத்துச்சென்ற சுந்தரரை ஒன்றும் செய்யாததால் அவர் ஆலால சுந்தரரானார்.கடும் வழியைக் காலால் நடந்து கடப்பதற்கும் பல்லக்கில் அமர்ந்து கடப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு இறையருளால் வாழ்வது என்பதனையும் இங்கு எண்ணமுடிகிறது. இறை அன்பினைப்பெற்றால் எத்தகைய துன்பத்தையும் தாங்கிக்கொள்ள இயலும் என்னும் அருமையினையும் இங்கு உணரமுடிகிறது.


திருநாவலூரில் சுந்தரர்

        இறைவன் அருளால் பிறந்த சுந்தரரே பெருமையுடையவர் எனில் அவருடைய பெற்றோர் எத்தகைய பெருமையுடையவராக இருக்க வேண்டும் என எவரும் எண்ணுதல் இயல்பு. முப்பொழுதும் திருமேனி தீண்டி பூசை செய்யும் ஆதிசைவ அந்தணராக இருக்கும் சடையனாரும் விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் இசைஞானியருக்கும் சுந்தரர் ஆருரராகப் பிறக்கிறார்.இவ்வாறு சிவபெருமான் அருளால் திருநாவலூரில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் ஆரூரார் பிறக்கிறார். அந்தணர்க்குரிய திருமறைகளைக் கற்ற ஆரூராரை நரசிங்கமுனையர் தத்தெடுத்துக் கொள்கிறார். இதனால் சத்ரியருக்குரிய கலைகளையும் கற்றுக் கொண்ட பெருமையுடையவராக வளர்கிறார் ஆரூரர். நல்ல குழந்தைகளை நற்செயல்களாலும் நற்தவத்தாலும் மட்டுமே பெற இயலும் என்பதனை இங்கு உணரமுடிகிறது.

சுந்தரர் படைப்பு நோக்கம்

        அடியார்களின் பெருமையினை உலகுக்கு உணர்த்தினாலன்றி இவ் உலக மாயையிலிருந்து உலகத்தவரை மீட்க இயலாது என்பதனாலேயே சுந்தரரை இவ்வுலகிற்கு அனுப்பினார். வினைப் பயனை அனுபவித்து வரும் உயிர்கள் தம் வினையைக் கழிக்க (இருவினைஒப்பு பெற) வழிகாட்டும் வகையிலேயே அடியார்களின் வாழ்வை அருளச்செய்தார். அடியார்களின் பெருமையினை அடியார்களே அறிய முடியும் என்பதனாலேயே நான் உனக்கு அடிமையில்லை என அறியாது சொன்னதற்காகவே அனைவர்க்கும் அடியேன் எனப் பாடவைத்தார்.  பிறவாமையினைப் பெறவிழைவோர் பணிவினைப் பெறவேண்டும் என்பதனாலேயே சுந்தரருக்கு “தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியேன்  என அடியெடுத்துக் கொடுத்தார். பித்தா எனப் பாடக்கேட்டு மகிழ்ந்தவர் அனைவர்க்கும் அடியேன்  எனப்பாடக்கேட்டும் மகிழ்ந்தார். தன்னை  அடியார் திட்டுவதும் தம் அடியாரைப் போற்றுவதும் கண்டு பெருமிதம் கொள்ளும் இறைவனின் பெருமையினை இதன்வழி அறியலாம். குழந்தை தாயைத் திட்டினால் தாய் மகிழ்ச்சி கொள்வதுபோலவும் குழந்தையின் பெருமையினைக் கூறும் போது தாய் மகிழ்வதுபோல மகிழும் தாயுமானவரின் (சிவபெருமானின்) பெருமையினை உணரலாம்.இறைவனின் அன்பு தாயன்பு என்பதனை உணர்ந்து அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டி வாழவேண்டியதன் அவசியத்தினை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

வன்தொண்டரான மென் தொண்டர்

        சிவபெருமானை மலர்களால் பூசித்து வந்த ஆரூரர் மென் தொண்டராகவே தம் வாழ்வைத் தொடங்குகிறார். அவருக்கு 16 வயது ஆனவுடன் சடங்கவி சிவாச்சாரியார் மகளுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்போது முதியவர் வேடம் கொண்டு சிவபெருமான் ‘நீ எனக்கு அடிமைஎனக் கூறி அந்தத் திருமணத்தை நிறுத்திவிடுகிறார். அந்தணர் ஒருவர் மற்றவருக்கு அடிமையாவதில்லை எனக் கூறுகிறார். இல்லாததையெல்லாம் கூறும் நீர் ஒரு பித்தன் எனக் கூற அதனை முதியவர் ஓலை காட்டி மறுக்கிறார். அதனை கிழித்துப் போட்டு விடுகிறார் சுந்தரர். குற்றவாளியே தடயங்களை அழிக்க நினைப்பான் எனவே ஓலையைக் கிழித்துப்போட்டதனாலேயே இவன் குற்றவாளி என்பதனை உணரலாம் எனக்கூறி திறமையாக வாதாடுகிறார்

        முதிய வேடத்தில் வந்த இறைவன். எனவே சேக்கிழாரும் இறைவனை ‘பழைய மன்றாடிஎனக் கூறுவார். திருவெண்ணெய்நல்லூருக்கு வந்தால் மூல ஓலையைக் காட்டுவேன் எனக் கூறி அனைவரையும் அழைத்துச் செல்கிறார். திருமணத்தை தடுத்து சுந்தரரைத் தடுத்தாட்கொண்டார். சடங்கவி சிவாச்சாரியாரின் மகள் சுந்தரரின் பெயரைச் சொல்லியே திருவடி அடைகிறாள்.  திருவெண்ணெய் நல்லூருக்கு வந்தவுடன் சுந்தரருக்கு ஆதரவாக் வந்தோரும் ஓலையில் இருந்த கைச்சாந்தினை அவ் ஊரிலிருந்த கருவூலத்தில் இருந்த கைச்சாந்துடன் ஒப்பிட்டு அவ் ஓலையின் வழி சுந்தரர் பரம்பரையே அடிமையாவதனை ஒப்புக்கொண்டனர். இருப்பினும் உங்களுடைய இருப்பிடம் யாதென வினவ முதியவர் வடிவில் வந்த இறைவன் கோயிலுக்குள்ளே சென்று மறைந்து சிவபெருமானாக காட்சி தருகிறார். அப்போது சுந்தரரைப் சிவபெருமான் பாடச் சொல்ல  சுந்தரர் எவ்வாறு பாடுவதெனக் கேட்கிறார். பித்தா எனக் கூறியதால் அவ்வாறே தொடங்குமாறு சிவபெருமான் கூறுகிறார். இறைவனுக்கு அடிமையில்லை என வாதிட்ட தம் அறியாமையை எண்ணி வருந்த எப்போதும் அடிமையான திறத்தை எண்ணி பாடத்தொடங்குகிறார்.

‘பித்தா பிறைசூடிபெருமானே அருளாளா
எத்தாளும் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைதென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்காளாய் இனியல்லேன் எனலாமே

இவ்வாறு இறைவனைப் பாடி இறையருளைப் பெற்றதனால் இவர் வன் தொண்டரானார். பதினாறு வகை வழிபாட்டு முறைகளில் பாடல் பாடுவது என்பது தலையாயது. அதனாலேயே ‘சொற்றமிழ் பாடுகஎன்றும் அர்ச்சனைப் பாட்டேயாகும்எனவும் கூறப்படுகிறது. சிவபெருமானைப் மென்மொழியால் புகழ்ந்துபாடி அருளைப் பெற்றவர் மென் தொண்டரானவர் பலர். அவர்களினின்று மாறுபட்டுசுந்தரர் சிவபெருமான் என அறியாது வன்மொழியால் இகழ்ந்தே இறையருளைப் பெற்றதனால் வன் தொண்டரானதையும் மேற்கூறிய செய்திகளின் வழி உணரலாம்.இறைவன் அருளால் மட்டுமே இறைவனையே வணங்க இயலும் என்பதனையும் அதற்குரிய பண்போடு வாழ்தல் மட்டுமே மானிடர் கடன் என்பதனையும் இதன் வழி தெளிவுறுத்துகிறார். பாத்திரம் தூய்மையானதாக இருந்தால்தான் அதில் பாலை ஊற்றமுடியும் என்பதுபோல் இறையருளைப் பெறுவதற்கான பாத்திரமாக இவ் உடலைத் தூய்மையானதாக வைத்திருத்தல் வேண்டும் என உணர்த்தியுள்ளதனையும் காணமுடிகிறது.

நண்பருக்கு நண்பர்

        இறைவனை ,கடவுளாக பார்க்கும் காலம் மாறி இறைவனையே நண்பராகப் பார்க்கும் போக்கு பரவிவிட்டது. இறைவனைக் காணவே முடியாது என்னும் நிலை மாறி இறைவனை உறவாக்கிக் காட்டிய இனம் தமிழினம். ஏயர்கோன் கலிக்காமநாயனார் இறைவனிடம் கொண்ட அன்பின் காரணமாக இறைவனின் தூது அனுப்பிய சுந்தரனைக் காண மனமில்லாது வெறுப்புடன் இருந்தார். இறைவன் அவ் வருத்தத்தைக் களையும் வகையில் ஏயர்கோன் கலிக்காமநாயனாருக்குச் சூலை நோய் தந்து அதனை சுந்தரன் தீர்ப்பான் என இறைவனே கூறுகிறார். சுந்தரன் கையால் நோய் தீர்ந்து வாழ்வதைவிட இறப்பதே மேல் என எண்ணி குறுவாளால் உயிர் விட துணிந்து குறுவாளால் தன்னைக் குத்திக்கொள்கிறார். அன்பரின் வருத்தத்திற்கு தான் காரணமாகி விட்டதனை எண்ணி சுந்தரரும் குறுவாளால் தன்னைக் குத்திக் கொள்கிறார். இறைவன் தோன்றி சவமாக இருந்த இருவரையும் சிவமாக்கி தனது நண்பரான சுந்தரருக்கு ஏயர்கோன் கலிக்காம நாயனாரை நண்பராக்கினார்.

        இறை அன்பின் பெயரால் ஒருவர் மற்றவரை பகைத்துக் கொள்ளலாகாது. ஒவ்வொரு நதியும் கடலிலேயே கலத்தல் போல எல்லா உயிர்களும் இறைவனையே சென்றடைகின்றன என்பதனை உணர்ந்து வாழவேண்டியதன் அவசியத்தினையும் இவ்வரலாற்று எடுத்துரைக்கிறது.

சேரமான் பெருமாள் நாயனார்

        சேரமான்பெருமாள்நாயனார்  பறவைகள் கழறுவதையும் (பேசுவதையும்) புரிந்துகொள்ளும் வல்லமையுடையவராக இருந்ததனால் இவர் கழறிற்றறிவார் எனக் குறிப்பிடப்பட்டார். திருவஞ்சைக்களத்தில் உறையும் இறைவனை வணங்கிப் பின் இறைவனுடைய அருளாலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஒருமுறை உவர்மண் எடுத்து வந்த வண்ணான் உடல்முழுதும் உவர்மண்ணாகி விடுகிறது. இவரைக் கண்ட நாயனார் இருகரம் கூப்பி வணங்குகிறார். வண்ணானை மன்னன் வணங்குவதா எனத் தயங்குகிறான் வண்ணான். நீர் வண்ணானாயின் யாம் விரும்பும் அடியவர் கோலம் கொண்டீர் எனவே நான் வணங்குவதற்குரிய பெருமையுடையவரே நீர் எனக் கூறி ஐயம் தெளிவிக்கிறார். இதன்வழி நாயனாரின் பக்தித் திறத்தை அறியலாம். நாயனாருக்கும் சுந்தரருக்கும் நட்பினை ஏற்படுத்தும் வகையில் இறைவன் ஒரு திருவிளையாடலை மேற்கொள்கிறார். இறைவனின் அருளால் வழிபாட்டின் போது எப்போதும் இறைவனுடைய சிலம்பொலி கேட்கும் வகையில் வணங்கி வந்தார். ஒருநாள் சிலம்பொலி கேட்காமல் போகவே வருந்தி இறைவனிடம் முறையிடுகிறார். சுந்தரரின் பெருமையினை உணர்த்தும் வகையில் சுந்தரரின் பாடலைக் கேட்டு மெய்ப்பொருளான இறைவன் மெய் மறந்ததாகக் கூறுகிறார். அதனைக் கேட்டு தில்லையிலிருந்து திருவாரூர் சென்று சுந்தரரிடம் நட்பு கொண்டு பல நாட்கள் இருவரும் இணைந்தே பல தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்குகின்றனர்.

        ஒருவனின் இயல்பு அவன் சார்ந்த இடத்தைப் பொருத்தே அமைகிறது. எனவே அத்தகைய சூழலை அமைத்துக்கொள்ள முயற்சித்தல் வேண்டும். இதனை சேரமான்பெருமாள் நாயனார் சுந்தரருடன் கயிலாயத்தை அடைந்த செய்தியின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

இறைநம்பிக்கை

        உலக வாழ்வில் பிறப்பு இறப்பு எவ்வாறு அறியமுடியாததோ அவ்வாறே அனைத்துச் செயல்களும் அறிய இயலாததாகவே அமைகிறது. அத்தகைய புதிரான வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தனக்கும் தன்னைச் சார்ந்தார்க்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுடைய செயல்களையே செய்து வாழ்தல் வேண்டும். அன்பு, கருணை கொண்டு தம்மால் இயன்ற அளவிற்குப் பிறருக்குத் துணைசெய்து வாழவேண்டும். உறவு என்பது துன்பத்தில் தோள் கொடுப்பது. துன்பத்தைத் தீர்க்கும் வல்லமை இறைவனைத் தவிர வேறு எவர்க்கும் இல்லை. எனவே, உயிர் காத்த மருத்துவரையும் கடவுளாக்கிக் கூறும் வழக்கம் உள்ளது. இறைவன் ஏதேனும் ஒரு உருவில்வந்து காப்பாற்றுவாரேயன்றி  அவன் அருளின்றி ஒன்றும் நிகழ்தல் இல்லை. இதனை அனைவர்க்கும் உணர்த்தும் வகையில்

        அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய்
        ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

எனப் பாடுகிறார். இறைவனை நண்பனாகக் கொண்டாராயினும் துன்பம் வரும்போது தாய்போன்று துணைசெய்வார் ஒருவருமில்லை என்பதனை உணர்ந்து நெகிழ்ந்து பாடுகிறார்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் வேறு யாரை நினைக்கேனே

எனப்பாடுகிறார் சுந்தரர். எல்லா உயிர்களும் இறைக்கொடை என்பதனை உணர்ந்து வாழ்ந்தால் அனைவருடைய அன்பினையும் பெற்று வளமாக வாழமுடியும் என்பதனை சுந்தரரின் வாழ்வின் வழி தெள்ளிதின் உணரமுடிகிறது.


நிறைவாக

        இறைப்பற்று என்பது அனைத்து உயிர்களிடம் கொள்ளும் பற்று. இதனை அருளாளர்கள் தம் வாழ்ந்த வாழ்வின் வழி அறிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

        தன்னலத்துடன் வாழாது பொது நலத்துடன் வாழ வழிகாட்டிய பக்தி இலக்கியங்களை இன்றைய தலைமுறை உணர்ந்தால் நாட்டில் எத்தகைய குற்றமும் நிகழாத வளமான சமுதாய்த்தைப் பெறமுடியும் எனத் தெளியமுடிகிறது.
       
        இறைவனின் பெயரால் வேற்றுமை பாராட்டாது பிற உயிர்களுக்கு நல்வழிகாட்டிய அருளாளர்களின் அருட்செயலைப் பின்பற்றி வாழ்வதே இன்றைய தலைமுறைக்கு உரிய வழிகாட்டுதலாக அமைகிறது.
       
        ஞானத்திலிருந்து பிறந்தது விஞ்ஞானம் என்பதனை உணர்ந்து இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். விஞ்ஞானம் தான் பெரிது என எண்ணுவராயின் ஞானத்தின் அருமையினை உணராது மன அமைதியின்றி துன்பத்தில் சிக்கிக்கொள்ளவே நேரிடும் என்பதனை அருளாளர்கள் வாழ்வு தெளிவுறுத்துகிறது.

        தம்பிரான் தோழரே ஆயினும் வினைக்கேற்ப பிறவித்துன்பத்தினை முறையாக அனுபவித்து வாழவேண்டிய நிலையினையும் காணமுடிகிறது. எனவே எண்ணம், சொல், செயல் என அனைத்து நிலைகளிலும் தூய்மையாக வாழ வேண்டியதன் அவசியத்தினை சுந்தரரின் வாழ்வின் வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது.      
                                                                                _______________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக