திருக்குறளில் கிளத்தலும் புலத்தலும்
முனைவர்
ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப்பேராசிரியர் (துணை),புதுவை
-8. உலாப்பேசி : 9940684775
உலகப்பொது மறை எனப்போற்றபெறும் பெருமையுடைய
திருக்குறளை அருளியது இறையருளாலேயே நிகழ்ந்துள்ளது என்னும் எண்ணத்தினாலேயே தெய்வப்புலவர்
எனத் திருவள்ளுவர் போற்றப்படுகிறார். உலகில் திருக்குறளுக்கு இணையாக ஒரு நூலைக் காண
இயலாது என்பதற்கு அடிப்படைக் காரணம் இந்நூல் காலம், இடம், இனம்,மொழி கடந்து நிற்பதே.
எனவே மனித இனத்திற்கே வழிகாட்டக் கூடிய அரும்பெரும் நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.
இப்பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடப்பாடு தமிழறிஞர்க்கு மட்டுமின்றி
தமிழர் ஒவ்வொருவர்க்கும் உரிய கடமையாகிறது. எந்நோக்கில் நோக்கினும் அந்நோக்கிற்காக
அருளப்பட்டது என எண்ணக்கூடிய அளவிற்குப் பெருமையுடைய நூலாகவும் இந்நூல் திகழ்கிறது
என்பதனை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்னும் விழைவே இங்கு கட்டுரையாக
மலர்கிறது.
இறை
நெறி
இன்றைய தலைமுறை பெரியோர்களிடம் காட்ட வேண்டிய
அன்பு நிலையில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது. அதற்கு அடிப்படைக் காரணம்
மனிதர்களிடம் இருந்த நெருக்கம் இன்று இயந்திரங்களுடன் ஏற்பட்டுவிட்டதே என்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
நாளுக்கு நாள் அறநெறியினை ஊட்டி வந்த பெரியோர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் அதற்கான காலமும் சூழலும் மாறிவருவதும் இதற்கு முக்கியக் காரணமாகிறது.
உலக உயிர்களைப் படைத்த பேராற்றலின் நிலையினை உணர்ந்தால் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும்
போற்றமுடியும். இக்கருத்தை எளிதில் உணர்த்தும்
வகையில் அமைந்த நூலாகத் திருக்குறள் சிறப்பதனால் அக்குறளின் வழியே இறைநெறி உணர்த்தப்படுகிறது.
அன்பு - எல்லா உயிர்களிடத்தும் உணர்வு அடிப்படையில்
இயற்கையாகவே நிகழ்வது. வன்பு - அறிவால் செயற்கையாக நிகழ்வது. இதற்கு அனைத்து உயிர்களிடத்தும்
அன்பால் நிகழும் தாயன்பையும் பிற உயிர்களிடத்து வன்பால் நிகழும் நோயன்பையும் எடுத்துக்காட்டமுடியும்.
வாழ்வதற்கான தேவை தாயிடம் இருப்பதனால்தான் அன்பு உண்டாகிறது எனக் கூறிடினும் அங்கு
அன்பே அடிப்படை ; அறிவன்று. எனவே அன்பை அடிப்படையாகக்
கொண்டே வாழ்க்கை சிறக்கும் என உணர்ந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். உலகப் பொருள்களில்
காட்டும் அன்பை விட அப்பொருளையெல்லாம் படைத்த இறையன்பைக் காணவேண்டும் என வாழ்ந்தவர்கள்
தமிழர்கள். அவர்களுடைய மெய்யறிவானது உலகம் முழுதும் பரவினால் எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும்
மட்டுமே நிலவும். அவ்வகையில், எப்படி நோக்கினும் அப்படி பொருள்தரும் திருக்குறளில்
கிளத்தலையும் புலத்தலையும் இறை நோக்கில் காணும் முயற்சியாகவே இக்கட்டுரை அமைகிறது.
கிளத்தலும்
புலத்தலும்
கிளத்தல் - புலப்படக் கூறுதல், விதந்துக் கூறுதல்
எனவும் புலத்தல் - கல்வியிற் பிணங்கல், மனம்
வேறுபடுதல், துன்புறுதல், அறிவுறுத்தல், வெறுத்தல் எனவும் கழகத் தமிழகராதி குறிப்பிடுகிறது.(1980).
கிளத்தல் – எழுப்புதல், சொல்லுதல் எனவும் புலத்தல் – கலவியிற் பிணங்கல், புணர்ச்சிக்கு
அமையாதது போல முறையிடல் எனவும் நா.கதிர்வேற்பிள்ளையின் தமிழகராதி (1984) குறிப்பிடுகிறது.
இப்பொருள் அனைத்தையும் ஒருசேர நோக்கும்போது இவை அனைத்தும் காதலுக்கே பொருத்தப்பாடுடையதாக
அமைகிறது. ஆண் (ஓர் உயிர்) பெண்ணிடம் (மற்றொரு உயிர்) கொண்ட காதலுக்கு மட்டுமின்றி
ஓர் உயிர் அவ் உயிரைப் படைத்த இறைவனிடம் கொண்ட காதலுக்கும் பொருத்தப்பாடுடையதாக அமைவதனைக்
காணமுடிகிறது.
நெஞ்சோடு
கிளத்தலில் - மனமும் இறைவனும்
மனமே மனிதனைக் கள்ளனாகவும் கடவுள் தன்மையுடையவனாகவும்
மாற்றுகிறது. எனவே உலகியல் துன்பங்களை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் மனத்தைச் சீராக நிலைப்படுத்துவதன்
வழியே தான் இறைநாட்டத்தை அடைய இயலும் என்பது பெறப்படுகிறது.
நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்துஒன்று
எவ்வநோய் தீர்க்கும் மருந்து (திருக்குறள் : 1241)
என்னும்
இத்திருக்குறள் உலகத் துன்பங்களுக்கு மருந்தாகும் இறைவனை அடையும் வழியினை கூற மாட்டாயோ
என வருந்தும் தலைவியின் நிலையினை எடுத்துக்காட்டுகிறது. பக்தி மார்க்கம் எனப்படும்
இறை நெறியில் உலக உயிர்கள் அனைத்தும் பெண். ஏக இறைவன் மட்டுமே ஆண் என்னும் நெறியே பின்பற்றப்படுவதனையும்
இத் திருக்குறளின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.
மனிதனும்
இறைவனும்
மனிதன் இறைவனிடம் அன்புகொள்ளும் நிலையைக் காட்டிலும்
இறைவன் மனிதனிடம் கொண்ட கருணை அளப்பரியது. துன்பத்தில் திளைக்கும் போது இறையருள் இல்லாதது
போல மனம் எண்ணி இறைவனைக் குறை கூறி மனம் புலம்பும். இதனை
காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு
(திருக்குறள் : 1242)
என்னும்
குறள் எடுத்துக்காட்டுகிறது. அவனருளாலே தான் அவன் தாள் வணங்க முடியும் என உணர்ந்திருப்பினும்
இறைவனிடம் கொண்ட காதல் மிகுதியால் இவ்வாறு கிளத்தல் அடியார்க்கே உரிய அழகு எனத் தெளியமுடிகிறது.
இறை
நாட்டம்
மனம் எளிதில் எதனையும் பற்றிக்கொள்கிறது. நல்லதைக்
காட்டிலும் தீயதைப் பற்றிக்கொள்வது மனம் ஆடும் ஆட்டத்தின் வெளிப்பாடு. அம்மாயையின்
ஆட்டத்தை இறையருள் பெற்றவர் கண்டு கொள்வர். கண்டுகொண்டதை அறிந்த மனம் இறையருளாளர்க்கு
ஏவல் செய்யப் பணிந்துவிடுகிறது. அவ்வாறு இறைவனிடம் அளவற்ற காதல் கொண்ட மனம் அவர் இருப்பதனை
வெளிக்காட்டிக்கொள்ளாது வெறுப்பது போலச் செயல்படும். இவ்வாறு நடத்தல் அவன், இவன் என
உரிமையுடன் பேசும் சித்தர்களின் வாழ்வின் வழி உணரலாம். அவ்வாறு பேசும் அவர்கள் கூட
இறைவனைக் கண்டபின் மனம், மொழி, மெய்யால் ஒன்றுமற்றுப் போய்விடுவதனை
கலந்துணர்த்தும் காதலர் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு (திருக்குறள் : 1246)
என்னும்
திருக்குறள் எழிலுற எடுத்துரைக்கிறது. மெய் மறந்து நிற்றல் என்பது மெய்யான பொருளான
இறையைக் கண்ட பின் நிலையற்றுப் போய் இறையுடன் கலக்கும் நிலையினையே குறிப்பிடுகிறது
எனவும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
சரணடைதல்
இறைவன் படைத்த இவ்வுலகில் அனைத்தும் இறைவனுக்கே
சொந்தம் என நினைப்பவர்கள் கூட தம் உடைமைப் பொருள் எனச் சிலவற்றைக் கருதிக்கொண்டு அவற்றைத்
துறக்கத் துணிவதில்லை. அவ்வாறின்றி இறையன்புக்காக எவற்றையும் துறக்கத் துணிந்தவரே இறைவனை
அடைய இயலும். இறைப்பற்றும் உடைமைப் பற்றும் முரணானவை. இறைப்பற்றைக் காமமாகவும் உலகப்பற்றை
நாணமாகவும் எடுத்துரைக்கும் எழிலினை
காமம் விடுஒன்றோ நாண்விடு நல்நெஞ்சே
யானோ பொறேன்இவ் இரண்டு (திருக்குறள்
: 1247)
என்னும்
அடிகளின் வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது. தன்னைப் பற்றிய அக்கறை கொண்டவரே நாணமுடையவராக
வாழ விரும்புவதனையும் இங்கு ஒப்பிட்டுக் காணமுடிகிறது.
எனக்குள்
ஒருவன் - இறைவன்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடுவதே
மனித இயல்பு. பின் தம் தம் பட்டறிவால் உள்ள நிலையினை அறிந்துகொள்வதே வாழ்க்கைப் பயணமாக
அமைகிறது. இந் நிலையே பல பிறவிகளில் தொடர்ந்துவிடுகிறது. நிறைவாக இறையருளைக் காணும்
போதே பிறவிப் பெருங்கடலை நீந்தும் நிலை உண்டாகிறது. அந்நிலை அடையும் நிலை வரை வினைப்பயனுக்கேற்ப
பிறவி நிகழ்வதனையும் நிறைவாக மனிதப் பிறவியின் வழி இறைநிலை அடைவதனையும் அருளாளர்கள்
வாழ்வின்வழி அறிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறு இறையருளைப் பெறும்வரை மனம் அலையும் நிலையினை
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு (திருக்குறள் : 1249)
என்னும்
திருக்குறள் உணர்த்துகிறது. உள்ளத்தில் இருக்கும் காதலரை அறிந்துகொள்ள இயலாது எங்கு
அலைகிறாய் என உள்ளத்தின் உள்நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டுவதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
நெஞ்சோடு
புலத்தலில் - மனமும் இறைவனும்
எண்ணாத் தன்மை கொண்ட பிற உறுப்புகள் போலன்றியும்
பிற உயிர்கள் போலன்றியும் மனமானது எப்போதும் இறையருளையே எண்ணும் தன்மை கொண்டது. அதனைப்
பாசம் என்னும் மாயை மறைத்துக்கொண்டு இறை எண்ணத்தை மறைத்துவிடுகிறது. மனம் இறைவனிடம்
கொள்ளும் புலத்தல் நிலையினை
அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது (திருக்குறள் : 1291)
என்னும்
திருக்குறள் எடுத்துக்காட்டுகிறது. இறையருள் பெற்றவர்களின் மனம் இறைவனுடன் ஒன்று கலக்க
அவ்வாறு இல்லாதவர்கள் மனம் துன்பத்தில் உழன்று கொண்டு அவ் உயிரையும் வருத்திக் கொண்டிருக்கும்
நிலையினை இக்குறள் புலப்படுத்துகிறது.
மனிதனும்
இறைவனும்
பிறவி வேண்டாம் என மனம் இறையை வேண்டி நிற்பினும்
வினைப்பயனால் மீண்டும் மீண்டும் பிறப்புண்டாகிறது. எனவே அருளாளர்கள் இறைவனிடம் ஊடல்
கொள்ளும் நிலையைக் கண்டு மனம் புலம்பும் நிலையினை
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅர் எனச் சேறிஎன் நெஞ்சு (திருக்குறள் : 1292)
என்னும்
திருக்குறள் எடுத்துக்காட்டுகிறது. இறைவனின்
அன்பற்ற நிலையாலேயே இவ் உலகில் மனிதனுக்கு இப்பிறவி கிடைத்தது என உணர்ந்த பின்னும்
அவ் இறைவனையே மனம் நாடுகிறது. இந் நிலையினைக்
கண்டு புலம்பும் நிலையை இங்குக் காணமுடிகிறது. தாயானவள் குழந்தையை எவ்வளவு அடித்தாலும்
மீண்டும் மீண்டும் அத்தாயிடமே ஒட்டிக்கொள்ளும் நிலையும் இங்கு எண்ணத்தக்கது.
இறை
நாட்டம்
இறைவனிடம் கொள்ளும் அன்பு இயற்கையானது. பொருளிடம்
கொண்ட அன்பு செயற்கையானது. மனிதனின் வளர்ச்சி நிலைக்கேற்ப மாறும் பற்றின் நிலை கொண்டு
இதனை எளிதில் உணரமுடிகிறது. அன்பும் பற்றும் அளவுக்கு அதிகமாகும் போதே அப்பொருளின்
பிரிவு கண்ணீரை வரவழைப்பது முதல் பல்வேறு உணர்வுநிலைகளையும் பெற்று உயிரை வருத்துவதனைக்
காணமுடிகிறது. இது பொருளுக்கும் உறவுமுறைகளுக்கு மட்டுமன்று. அவ் உயிர்களைப் படைத்த
இறைவனுக்கும் ஏற்புடையதாகவே அமைகிறது. அளவற்ற இறையன்பு பிரிவில் மட்டுமின்றி சேர்க்கையிலும்
துன்பத்தை உண்டாக்குவதனை
பெறா அமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு (திருக்குறள் : 1295)
என்னும்
திருக்குறளின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. தன்னோடு இருக்கும்போது பிரிந்துவிடுமோ என
அஞ்சுவதும் பிரிந்தபோது பிரிந்துள்ளதே என அஞ்சுவதும் அன்பின் மிகுதியாலேயே நிகழ்கிறது
எனவும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
சரணடைதல்
இறைவனை அடைதலுக்குப் புறப்பற்றையும் அகப்பற்றையும்
விடுதல் வேண்டும். அவ்வாறு தான் என்னும் நிலை மறந்து வாழாத நிலையினைக் கொண்ட மனத்திடம்
ஊடல் கொள்கிறாள் தலைவி. தான் என்னும் எண்ணத்தை விட்டு நாணத்தை மறந்து இறையருளைப் பெற்ற
நிலையினை
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சில் பட்டு (திருக்குறள்
: 1297)
என்னும்
திருக்குறள் தெள்ளிதின் எடுத்துரைக்கிறது. உலகியல் குறித்த அறிவில்லாத நெஞ்சே இறையன்பை
எளிதில் பற்றிக்கொள்கிறது என்னும் நிலையினையும் இங்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது.
இறைவனை அடைதற்கும் இறையருளே வேண்டும் என்பதனை
மனத்தின் வழியே அறிந்துகொள்ளமுடிகிறது. மனதை அடக்கல் என்பதும் மனத்தின் வழியே மட்டுமே
நிகழக்கூடிய செயலாகும். எனவே மனத்தை அடக்க எல்லாம் அடங்கிப்போகும். இதனை உணராது ஐம்புலன்களும்
தம் விருப்பபடி மனத்தை ஆட்டிவைப்பதாக எண்ணுவதும் அதனால் துன்புறுவதும் அறியாமையே. இதனையே
துன்பத்திற்கு யாரே துணை ஆவர் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி (திருக்குறள் : 1299)
என்னும்
திருக்குறள் தெள்ளிதின் உணர்த்துகிறது. எனவே இறையன்பு என்னும் பெருநிலைப் பெறுதற்கு
மனதையே துணையாகக்கொண்டு செயல்படுதல் வேண்டும் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் உணர்த்தியுள்ளதனைக்
காணமுடிகிறது.
நிறைவாக
பெரியோர்களும் ஆசிரியர்களும் இளைய தலைமுறைக்கு
ஊட்ட வேண்டிய அறநெறிகளை ஊட்ட இயலாவண்ணம் காலமும் சூழலும் மாறிவருகிறது. அக்குறையை நீக்கும்
வகையில் திருக்குறளைக் கொண்டு சேர்க்கவேண்டியது தமிழரின் இன்றியமையாக் கடமையாகிறது.
காதல் நிலையில் நெஞ்சோடு கிளத்தல் முதல் நிலையாகவும்
நெஞ்சோடு புலத்தல் அதன் வளர்ச்சி நிலையாகவும் அமைகிறது. இவ் இரண்டின் படி நிலையாகவே
கலத்தல் நிகழ்தலுக்கான நிலை உண்டாவதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
காதல் என்பது மனித உறவுகளுக்கிடையே நிகழ்வது
தொடக்க நிலையாகவும் உயிர்களுக்கிடையே நிகழ்தல் வளர்ச்சி நிலையாகவும் இறைவனுக்கிடையே
நிகழ்தல் நிறை நிலையாகவும் இருப்பதனை திருக்குறளின் வழி நன்குணர்ந்து கொள்ளமுடிகிறது.
திருக்குறளின் இன்பம் எனக் குறிப்பிடப்படும்
காமத்துப்பால் அருளியல் நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதனை இறை நெறியில் நின்று நோக்கும்போது
தெள்ளிதின் புலப்படுகிறது.
தெய்வப்புலவர் மனிதனுக்கும் இறைநிலைக்கும்
இடையே நிகழும் காதல் நிலையினை வெளிப்படுத்தும் நிலையில் கவிஞராக மட்டுமின்றி மெய்ஞ்ஞானியாகவும்
திகழ்வதனை உணர்வுடையோர் உணர்வர்.
____________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக