தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

சித்தர்கள் காட்டும் சீவன் நிலை - Siddhars - The real guide


சித்தர்கள் காட்டும் சீவன் நிலை

முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்,உலாப்பேசி : 99406 84775

        சித்தர்கள் சீவன் முக்தர்கள் ; சிவத்தைக் கண்டு தெளிந்தவர்கள் ; சீவனை சிவமாக்கியவர்கள் ; சத்தையும் சித்தையும் அறிந்து ஆனந்தமாக்கிய அறிவர்கள் ; என இவ்வாறெல்லாம் போற்றப்பெறும் சித்தர்கள் அரியோர்க்கு அரியோராகவும் அறியார்க்கு அறியாராகவும் தம் ஞானத்தை மறைத்து வாழ்ந்த பெருமைக்கு உரியவர்கள். தம்மை மறைத்துக் கொண்டு சமுதாய வளர்ச்சிக்குத் தம்மால் இயன்றவரை அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை ஊட்டியவர்கள்.உள்ள நலத்தை மட்டுமின்றி உயிர் நலத்தையும் உடல் நலத்தையும் போற்றிய பெருமை சித்தர்களுக்கு மட்டுமே உண்டென்பதனை சித்தர் இலக்கியங்கள் தெளிவுறுத்துகின்றன.அத்தகைய பெருமையுடைய இலக்கியத்தில் சீவன் நிலை குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்காக அமைகிறது.
       

     உலகமே இறவாமை வேண்டும் என வேண்டி நின்ற போது அதற்கு அடிப்படையான பிறவாமை வேண்டும் என வேண்டி நின்றோர் சைவர்கள்.அதற்கும் அடுத்த நிலையாக சீவனை சிவமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு பயிற்சியால் மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற அருளாளர்களும் உளர்.உடல் என்னும் கூட்டினை உயிர் என்னும் பறவை விட்டோடுவதாக அன்றி அக்கூட்டோடே ஒடுங்குவிடுதலே சித்தர் பயணம் அல்லது ஜீவப் பிராயணம் அல்லது ஜீவ சமாதி எனக் குறிப்பிடப்படுகிறது.
     
   பிறப்பு வினைக்கு ஈடாய் அமைவது. எனவே உலகிலுள்ள அனைத்துப் படைப்புக்களும் அதன் வினைக்கேற்பவே அமைந்திருக்கிறது என்பதனை
      
            ”விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு”

என்னும் திருமூலர் வாக்குத் தெளிவுறுத்துகின்றது. எனவே அரிதாக கிடைத்த இம்மானிடப் பிறவியின் அருமையினை உணர்ந்து சீவனை சிவமாக்கல் வேண்டும் என்னும் காரணத்தினாலேயே
     
             ”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”

எனத் தமிழ் மூதாட்டி உணர்த்தியுள்ளார்.
      
            ”என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே”

என இறப்பினை ஒழிக்கும் வழியினை காட்டி அருளினார் அருட்பிரகாச வள்ளலார்.இவ்வாறு சீவன் நிலையினை உயர்த்த வழிகாட்டிய அருளாளர்கள் பலர்.

உடம்பைப்போற்றல்

        உடல் தத்துவம் அரிய தத்துவம்.அண்டமே பிண்டம் எனக் கூறும் அளவிற்கு அருமை உடையது.உடலுக்கு உயிர் விளங்குவது போன்றே உயிருக்கு நிலைக்களனாக உடலும் திகழ்கிறது.விஞ்ஞான முறையில் மட்டுமின்றி மெய்ஞ்ஞான முறையிலும் அதன் அருமையினை உணர்ந்து வெளிப்படுத்தியவர்கள் சித்தர்கள்.  மூன்று நாடிகளின் (இடகலை, பிங்கலை, சுழுமுனை)  வழி குண்டலினி சக்தியை எழுப்பி ஞானக் கனலை எழுப்பும் அருங்கலையினைக் கைக்கொண்டவர்கள் சித்தர்கள்.  ஞானக் கனலை ஆறு ஆதாரங்களில் படிப்படியாக ஏற்றி புருவமத்தியில் ஒடுக்கி ஞான ஒளியினைக் காண  வழி செய்தவர்கள். அத்தகைய அருமையான அனுபவத்தினைப் பெறுதற்கு இவ் உடம்பே அடிப்படையாக இருப்பதனை உணராது செயல்படும் நிலையினை

                நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் :நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
        கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக் :கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி                                                                   (கடுவெளிச் சித்தர் - 5)

என்னும் பாடல் எளிதில் உணர்த்துகிறது.இவ் உயிர் இவ்உலகில் (நந்தவனம்) வாழ இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களைக் கொண்ட உடலை (தோண்டி)  வேண்டிப் பெறுகிறது. உடல் உலக மாயையில் சிக்கி அதன் அருமையினை உணராது ஆற்றலை இழப்பதனை கூத்தாடி உடைத்து விடுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார் கடுவெளிச்சித்தர்.

உடலுக்குள் உயிர்

        உடலுக்குள் உயிர் உறைந்திருத்தல் என்பது பொது விதியன்று ; சிறப்பு விதி. உயிருடன் இணைந்திருத்தல் என்னும் சிறப்பு நிலையினைப் பொறுத்தே  உடலின் மதிப்பு போற்றப்படுகிறது.

        வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
        விடுவனோ அவனைமுன்னர் வெட்டவேணும் என்பனே
        நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
        சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே (சிவவாக்கியர் – 12)

உயிரால் தான் உடலுக்குப் பெருமை உண்டாகிறது. அத்தகைய பெருமை பொருந்திய உயிர் நீங்கின் எப்பெருமையுடையாராயினும் பிணம் என்னும் பெயரிட்டு பிணம் சுடுவோரிடம் கொடுத்து விட்டு நீங்குவதனை இங்கு உணர்த்தியுள்ளார். உயிர் உறைந்த உடலிடம் கொண்ட பாசமானது உயிர் நீங்கியதும் நீங்கிவிடுகிறது.இந்நிலையாமையினை உணர்த்தியதோடு உயிரின் அருமையினையும் புலப்படுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது.சித்தர் இலக்கிய மரபு உயிரையும் உடலையும் போற்றி மெய்ஞ்ஞானத்தை ஊட்டுவதே என்பது இங்கு எண்ணத்தக்கது.

உயிரும் உடம்பும்

        உயிர் நிலையானது ; உடல் நிலையற்றது. எனவே பொய்யான உடலில் மெய்யான ஒரு பொருள் உயிர் (இறைவன்) இருப்பதனாலேயே அதற்கு மெய் எனப் பெயரிட்ட நிலையினையும் இங்கு காணமுடிகிறது.ஒரு கதிரவனின் ஒளி எல்லா இடங்களிலும் பரவி எல்லா நீர் நிலைகளிலும் தனித்தனியாகத் தெரிவது போலவே இறையாற்றல் ஒவ்வொரு உடலிலும் உயிராக நிலைபெற்றிருக்கிறது.இறைவன் தன்னுடைய ஒரு கூறினை உடலுக்குள் இணைத்து அவ் உயிரின் வினைப்பயனுக்கேற்ப உடலுடன் இணைத்து விடுகிறான். இதனை

                உயிரகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்
      உயிர்அகராம்ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்
      உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
      உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன் (சிவவாக்கியர் – 234)

என்னும் பாடல் உணர்த்தி நிற்கிறது.உடம்பின் உள்ளே நிற்கும் உயிர். உடலுடன் உயிர் இணையும் முன் உயிர் அதன் கூறுகளோடும்  உயிருடன் உடல் இணையும் முன் உடல் அதன் கூறுகளோடும் இருந்தன. உயிரையும் உடம்பையும் ஒன்றாக்கியது சிவமே ஆகும்.உயிரினால் தான் உடம்பு பெற்றதனை இனி உரைக்கிறேன் என்கிறார் சிவவாக்கியர்.

உயிரைக் காக்க

        இறைவன் உயிர்களைப் படைக்கும் போது அவ் உயிரின் தன்மைக்கேற்ப உடலையும் கொடுத்து வாழ்வதற்குரிய வாய்ப்பினையும் கொடுத்துள்ளான்.அந்நிலையினை உணர்ந்து அப்பாத்திரத்திற்கேற்ப வாழ்தல் என்பது அறிந்தும் அறியாமலும் தொடர் நிகழ்வாக நடந்து கொண்டே இருக்கிறது. வல்லார் இவ் உண்மையினை உணர்ந்து பிற உயிர்களுக்குத் தீமை எண்ணாது தம்மால் இயன்ற வரை பிறர்க்கு நல்வழி காட்டி வாழ்ந்தனர்; வாழ்கின்றனர் ; வாழ்வர்.அவர்களே சித்தர்களாக நின்று சமயம் பாராது உயிர்களின் ஏற்றத்தாழ்வினைக் காணாது அனைத்து உயிர்களையும் காத்து வந்தனர்.  பிற உயிர்களைப் பாதுகாக்கும் அருமையினை உணர்ந்து தாம் மட்டும் உய்தலோடு பிற உயிர்களும் கடைத்தேற வேண்டும் என்னும் நோக்குடனேயே அறத்தின் பெருமையினையும் உணர்த்தி நின்றதற்கு

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
ஒடியிட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே (சிவவாக்கியர் – 242)

என்னும் பாடல் சான்றாகின்றது.ஆடு நாடு யானை சேனை என எவற்றைத் தேடிப் பெற்றாலும் கோடிக்கணக்கில் பணம் சேர்த்தாலும் அவை உயிரைக் காக்காது. ஆனால் மற்றவரைத் தேடிச் சென்று கொடுக்கும் பிச்சையும் ;மகிழ்வோடு செய்யும் தர்மங்களும் தட்டி உசுப்பிய குதிரை போல் ஓடி வந்து உயிரைக்காக்கும் என்பதனைச் சுட்டுகிறார் சிவவாக்கியர்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு (திருக்குறள்- 231)

என்னும் குறளையும் இங்கு ஒப்பு நோக்கி மகிழலாம்.உடலுக்கு மட்டுமே பல வேளைகள் உணவளித்து ஊதியம் கொடுத்ததற்கு மாறாக உயிருக்கும் ஊதியம் அளிக்க வேண்டும்.பிறருக்கு தம்மால் இயன்ற அறத்தைச் செய்வதே உயிருக்கு ஊதியம் என வழிகாட்டிய தமிழர் திறத்தை எண்ணி வியக்கமுடிகிறது.

சித்தே வித்தாகும்

        இறைவனின் கருணையைப் பெற்றதில் உயர்ந்த உயிரினமாகத் திகழ்வது மானுடமே.ஏனெனில் ஆறறிவின் வழி அனைத்துச் சிறப்புகளையும் பெற்று இறையடியை அடையும் பேறினைப் பெற்றது மானுடமே.எத்தகைய தேவராயினும் மானிடப் பிறவி பெற்ற பின்னரே பிறவாப்பேறு பெறும் இறையடியை அடைய இயலும்.எனவே வித்தில்லாத வாழைக்கனியை இறைவனுக்குப் படைத்து வழிபடும் மரபு நிலவி வருவதனையும் காணமுடிகிறது.அறநெறிகளை உணர்த்தி வாழ்ந்த சித்தர்களை அறிவர்கள் எனக் குறிப்பிடுவது தமிழ் மரபு.

                மறுவில் செய்தி மூவகைக் காலமும்
                நெறியின் ஆற்றிய அறிவன் தேயம் (தொல் – புறத்)

எனத் தொற்றமிழறிஞர் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளதே இதற்குச் சான்று.அறிவின் வழி மெய்யறிவினை ஊட்டியவர்கள் சித்தர்கள் என்பதற்கு தொல்காப்பியமே ஆவணமாகத் திகழ்கிறது.அறிவை வைத்தே உயிரைப் பகுத்தவரும் தொல்காப்பியரே.ஓரறிவு முதல் ஆறறிவு வரை பகுத்து உயிரினங்களை வகைப்படுத்திய பெருமையும் இங்கு எண்ணத்தக்கது.இதன் வழி எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் திகழ்வது சித்தாகிய அறிவே எனத் தெளியமுடிகிறது.சித்தர்களும் இதனை உறுதிப்படுத்தி நல்வழி காட்டும் வகையில் சித்தாலேயே சித்தினை அறிய இயலும் என உறுதிப்படுத்தினர். எனவே சித்தைப் படைத்த சித்தனை சித்தின் வழிய அறிய முயன்ற சித்தர்களுக்கே சிவ ஒளியும் சீவ ஒளியும் சாத்தியமானது

வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாறுஅது எங்ஙனே ?
பெற்றதாயை விற்றுஅடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே ? (சிவவாக்கியர் – 17)

வித்தில்லாமல் விளைவு உண்டாதல் இவ் உலகில் மட்டுமன்று.அவ் உலகிலும் நிகழாது.தச்சு வேலையில்லாமல் மாளிகையை ஆக்க இயலாது.அது போலவே இவ் உடலிலும் பல வேலைகள் நிகழ்கின்றன.குண்டலினி சக்தி உடலினுள் இருப்பதனை உணராது வீணான செயலில் ஈடுபடுவது பெற்ற தாயை விற்று அடிமையாக்கி வாழும் அறியாமைக்கு ஈடாகும்.எனவே சித்து இல்லாமல் சீவன் உருவாவது இல்லை என்பதனை உணர்ந்து உயிரைப் போற்ற வேண்டும் என்கிறார் சிவவாக்கியர்.

உயிர் உறையும் இடம்

        மனித வாழ்க்கையின் தொடக்கமும் இறுதியும் வினாக்களோடே தொடங்கி வினாக்களோடே முடிகிறது.அவ்வாறு அமையும் வினாக்களுக்கு விடை காண முடியாமலே வாழ்வானது இவ் உலகினின்று விடைபெற்றுவிடுகிறது. அவ்வாறு உயிர்  நிலைபெற்றிருக்கும் இடம் குறித்த கேள்வியும் நிலைபெற்று விடை காண இயலாததாக அமைகிறது. எனினும் உயிர் இறைவனின் கொடை என்பதனையும் உணரமுடிகிறது. எனவே உயிர் இருக்கும் இடத்தினை

உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காணவேண்டும் மாந்தரே (சிவவாக்கியர் – 376)

என்னும் பாடல் உணர்த்தி நிற்கின்றது.உயிரின் இருப்பிடம் உள்ளா அல்லது வெளியிலா என அறிய விரும்பும் மானிடர்களே.உயிர் உள்ளிருப்பது குறித்த எண்ணம் தோன்றிய போது நாதம் உடம்பில் தோன்றும்.அந் நாதம் ஒடுங்கும் இடமே இறைவன் அருள் நிறைந்த இடம்.அதுவே உயிரின் இருப்பிடம் என அறியவேண்டும் என உணர்த்தியுள்ளார் சிவவாக்கியர்.இறைவனின் கொடையான இவ் உயிரினைப் போற்றிப் பாதுகாக்கும் அருமையினை இதன் வழி உணர்த்தியுள்ளதனையும் காணமுடிகிறது.

முதுமை மாய இளமை வாழும்

        உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்தவர்கள் சித்தர்கள்.தம் வாழ்நாளைத் தாமே முடிவு செய்தவர்கள்.சமாதி நிலையினை அறிவித்து உலகிற்கு உயிரை ஒடுக்கும் கலையினைக் கற்பித்தவர்கள்.உடலை விட்டுவிட்டு உயிரை மறைத்து காற்றுடன் கலந்து வாழ்பவர்கள்.வாழும் நாளில் உலகம் உய்ய வழிகாட்டியாய்த் தாம் விரும்பிய தேகம் பெற்று வாழ்ந்தவர்கள்.இறைவனின் கருணையினை உணர்த்தும் வகையில் மூலிகைகளைக் கொண்டு பல நோய்களைப் போக்கியவர்கள்.உயிரின் அருமையினை உணர்த்தும் வகையில் வாழ்ந்தே வழி காட்டியவர்கள். காலினை (காற்று) அடக்கி காலனை வெல்லும் அருமையினை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே (சிவவாக்கியர் – 5)

என்னும் பாடலின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.மேலிருந்து கீழ் செல்வது முயற்சியின்மையால் தானே நிகழ்வது.ஆனால் கீழிருந்து மேல் செல்வது முயற்சியினாலும் பயிற்சியினாலும் நிகழ்வது.இது வாழ்நாளுக்கு மட்டுமின்றி எத்தகைய உயர்நிலைக்கும் பொருந்தும் மந்திரமாகவே கொள்ளமுடிகிறது. அவ்வாறு நாடியுள் ஒடுங்கிய  உயிர்க்காற்றை கபாலமாகிய உச்சியில் ஏற்ற வேண்டும் என்னும் பயிற்சியினைச் சித்தர்கள் பின்பற்றிய நிலையினையும் உணரமுடிகிறது.அவ்வாறு செய்ததால் முதுமை ஓடி இளமை கூடியதனையும் மேனி சிவந்ததனையும்அவர்தம் வாழ்வின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. அருள் நிறைந்த அம்மை அப்பன்  பாதம் தலையில் கூடுவதால்  இந்நிகழ்வு  உண்மையாகும் என்கிறார் சிவவாக்கியர். உடலுக்குள் உயிராக நிற்கும் அம்மை அப்பனின் வழி பிறப்பினைப் புதுப்பிக்கும் அரிய நிலையினைச் சித்தர்கள் பெற்றிருந்ததனை இதன்வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது.

உயிர் காக்கும் வழிபாடு

        கல்லைச் செதுக்கி வழிபடுவதிலும் முள்ளைக் கடந்து செல்வதிலும் தம்மை வருத்திக் கொள்வதிலும் நம்பிக்கையினைச் செலுத்தாதவர்கள் சித்தர்கள்.மேலும் அத்தகைய செயல்களைக் கடிந்தவர்கள்.உள்ளத்தைச் செதுக்கி மனத்தை ஒடுக்கி எண்ணத்தால் இறையருளைப் பெற்றவர்கள்.தாம் வேறு இறை வேறு என எண்ணாத அளவிற்கு இறைவனைத் தம்மிடத்தில் கண்டு கொண்டவர்கள்.எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பாக இருக்க உயிர்களைப் பலியிட்டு இறை வழிபாடு செய்யும் அவல நிலையை வெறுத்தார்கள். தாய்க்குப் பிள்ளைகளைப் பலி கொடுத்து அருள் பெறுதல் இயலாதென அறிவுறுத்தி அறச் செயல்களைச் செய்து  வாழ வழிகாட்டியவர்கள். தமக்குள் இருக்கும் இறைவனைக் கண்டுகொள்ள விழிப்புணர்வு ஒன்றே போதுமென அறிவுறுத்தியவர்கள்.

        நந்த வனத்திலே சோதியுண்டு நிலம் ; நித்திய பேருக்கு நெல்லுமுண்டு
   விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில் ; விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே                                                                               (கொங்கணச் சித்தர் - 73)

உடல் உள்ள மனத்தில் இறைவன் சோதியாக உள்ளார்.நிலத்தை நாளும் கண்காணிப்பார்க்கு நெல் கிடைப்பது போல வாலையைப் பூசித்தால் முற்பிறவியில் விட்ட குறையால் சோதியை உணர்ந்து பிறப்பை அறுக்கலாம்.பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளும் முன் வினைப்பயனாலேயே இறை வழிபாடு செய்யும் எண்ணம் தோன்றும் என்பதனைப் புலப்படுத்துகிறார்.அத்தகைய இறையருளாலேயே உயிரைக்காத்துக்கொள்ள இயலும் என்பதனையும் உணர்த்தியுள்ளார் கொங்கணச்சித்தர்.
        
        நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
        மேற்சென்று செய்யப் படும் (திருக்குறள் -335)

என்னும் குறளின்வழி காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் வழிமுறையினை தெய்வப்புலவர் திருவள்ளுவர் எடுத்துக்காட்டுவதும் இங்கு எண்ணத்தக்கது.

சிவமே சீவன்

        ஆசையின் வெளிப்பாடாக அமைவதே ஆணவம்.ஆணவத்தின் வெளிப்பாட்டாலேயே பிறப்பு நிகழ்கிறது.அந்நிலை ஒழியும் வரை வினைப் பயனை அனுபவிக்க வேண்டி பிறப்பு நிகழ்கிறது. எனவே, தான் என்னும் அகப்பற்றும் தனது என்னும் புறப்பற்றையும் உள்ளடக்கியதாக  ஆணவம் நிலைக்கிறது.  அந் நெடில் தன்மையானது பிறப்பே குறை என்னும் நிலையினை அறிந்து தன்னை அடக்கும் போது குறுகிவிடுகிறது.அவ்வாறு தம்மைக் குறிலாக உணர்வதே இறையருளைப் பெறுவதற்கான வழியாகும்.        தம்மைக் குறுக்குவதன் வழி இறையருளைப் பெருக்கிக்கொள்ள இயலும் என்பதனை
” -------------------
   பண்ணான உன்னுயிர் தான்சிவம தாச்சு  ; பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டுவாச்சு   
   கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் ; கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே
                                                                                (அகத்தியர் – 3)

என்னும் அடிகள் உணர்த்தி நிற்கின்றன.பண்பட்ட உயிரே சிவமாகும்.பள்ளி கொண்ட விஷ்ணுவையும் கணபதியையும் மணிப்பூரகம், மூலாதாரம் என்னும் இடங்களில் உணர்ந்தால் ஞானம் உருகி வரும் என்கிறார் அகத்தியர்.உயிரின் பக்குவ நிலையே இறையாக நிற்பதனை இங்கு தெளிவுறுத்துகிறார் அகத்தியர்.

சாகா வரம்

        சித்தர்கள் சாகா வரம் பெற்றவர்கள். தாம் பெற்ற வரத்தை உலகத்தவர்க்கு உணர்த்த தம் நிலையினைத் தாழ்த்திக் கொண்டவர்கள் .தம்மையும் தம் செயலையும் வெளிக்காட்டாது சித்தன் போக்கு சிவன் போக்கு என எவராலும் அறிய இயலாத வகையில் வாழ்க்கையையே விளையாட்டாக வாழ்ந்தவர்கள்.விளையாட்டாகவே தாம் நினைந்ததை உலகத்தவர்க்கு அறிவுறுத்தி நல்வழி காட்டியவர்கள்.தவத்தால் எதையும் பெற இயலும் என்பதனை உணர்த்தும் வகையில் போகத்தை ஒழித்து ஐம்புலன்களை ஒடுக்கும் யோகத்தைச் செய்து அவற்றைப் பின்பற்றி வாழ வழி காட்டினர்.
அந்தக் கரணமெனச் சொன்னால் ஆட்டையும் : அஞ்ஞான மென்னும் அடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன் ; சாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன்
                                                                (இடைக்காட்டுச் சித்தர் (தாந்) – 26)

அங்குமிங்கும் திரியும் அந்தக்கரணமாகிய ஆட்டையும் அறியாமை என்னும் இருளான அஞ்ஞானக் காட்டையும் தவம் என்னும் வாளால் வெட்டியதாக இடைக்காட்டுச் சித்தர் குறிப்பிடுகிறார். தவத்தால் சாகும் அவத்தையை வெல்ல இயலும்.தவத்தால் சாகாது வாழும் கோட்டையைக் கட்டியதாகக் கூறியுள்ளதனையும் இப்பாடல் உணர்த்தி நிற்கிறது.

நிறைவாக    

        உடலையும் உயிரையும் போற்றுவதற்கான வழிமுறைகளைத் தம் இலக்கியங்களின் வழி உணர்த்தியவர்கள் சித்தர்கள். இக்கூற்றுக்கு  அவர்களுடைய பாடல்களே சான்றாக நிற்பதனைக் காணமுடிகிறது.

        மக்களோடு மக்களாக வாழ்ந்த சித்தர்கள் எளிமைக்கு எளிமையாகவும் அருமைக்கு அருமையாகவும் வாழ்ந்த பெருமைக்குரியவர்கள் என்பதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

        உடலையும் உள்ளத்தையும் போற்றி வாழ்வதனாலேயே உயிரின் பயணத்தைச் சீராக்க இயலும் என்பதனைச் சித்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

        உலகியல் சாகும் கல்வியினைப் போற்றும் நிலையிலிருந்து விடுபட்டு சாகாக் கல்வியினைப் போற்றி உய்ய வேண்டியதன் அவசியத்தினை உணர்த்தியவர்கள் சித்தர்கள் எனத் தெளியமுடிகிறது.

        மானிடர் பயனுடைய வாழ்வு வாழ்தல் வேண்டுமாயின் அறியாமையிலிருந்து நீங்கி மெய்யறிவு பெற்றுத் தெளிவுடன் வாழவேண்டும் என்பதனைச் சித்தர் பாடல்களின் வழி தெளிந்துகொள்ளமுடிகிறது.

        தெளிவறி யாதார் சிவனை யறியார்
        தெளிவறி யாதார் சீவனு மாகார்
        தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
        தெளிவறியாதார் தீரார் பிறப்பே

                                                                                                                                        ***********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக