தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

இக்கால நோக்கில் மணிமேகலையில் சில மணிகள் - Classical Epic literature - Manimegalai


இக்கால நோக்கில் மணிமேகலையில் சில மணிகள் (அறங்கள்)
முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார், தமிழ்ப்பேராசிரியர் (துணை), புதுச்சேரி – 605008. உலாப்பேசி : 9940684775)

       மணிமேகலை தமிழ் இலக்கியத்தில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் என்னும் பெருமையினையும் முதல் பௌத்தக் காப்பியம் என்னும் சிறப்பினையும் ஒருங்கே பெற்றுள்ளதனை தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தியம்புகிறது. இன்றளவும் இந்நூல் பௌத்த சமயத்தின் ஆவணமாகத் திகழ்வதனை அவ் இலக்கியம் உணர்த்தும் புத்த சமயக் கொள்கைகளின் வழி உணரமுடிகிறது.தண்டமிழாசான் மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச்சாத்தனார் சமயக் கொள்கைகளை மட்டுமின்றி தனிமனித மற்றும் சமுதாய அறநெறிகளையும் இவ்விலக்கியத்தின் வழி  உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

       அறவழியில் நின்று பொருள் ஈட்டி இன்பம் துய்த்து வீடுபேறடைய வழிகாட்டுவதே காப்பியத்தின் நிலையாகிறது.அவ்வாறு அமைந்த காப்பியங்கள் உணர்த்தும் அறநெறிகள் எக்காலத்தும் நல்வழி காட்டுவனவாக விளங்குகின்றன.பெண்ணின் பெருமையை அறிவுத்திறத்தால் மதிப்பிட வேண்டுமேயன்றி பிறக்கும் இனத்தைக்கொண்டு மதிப்பிடலாகாது என்பதனையும், குலத்தின் மாட்சியினை, வாழும் முறைமையால் மதிப்பிட வேண்டுமேயன்றி பிறப்பு முறையால் மதிப்பிடலாகாது என்பதனையும் தெளிவுறுத்திக் கூறியுள்ளதனாலேயே மணிமேகலைக் காப்பியம் ’புரட்சிக் காப்பியம்’ எனக்கொள்வதனையும் தெளியமுடிகிறது.இந்நோக்கிலும் மணிமேகலையை சிலப்பதிகாரத்தோடு ஒப்பிட்டு ’ இரட்டைக் காப்பியம்’ எனக்குறிப்பிடமுடிகிறது.

வாழ்க்கை அறம்
       வீடு பேறுக்கு அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளே அடிநிலையாக இருப்பதனை அற இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஆனால் அது எவ்வகை அறம் , எவ்வகைப் பொருள், எவ்வகை இன்பம் என்னும் எண்ணத்திற்கு விடையளிக்கிறது மணிமேகலை. இந்த உடலை வளர்ப்பதற்காக பொருள் ஈட்டி, உண்டு மகிழ்ந்து அதனால் விளையும் ஆசைகளை உய்த்து, எந்நிலையிலும் நிறைவுபெறாது இவ்வாழ்வில்  முதுமையுற்று நோயுற்று வாழ்வது வாழ்வாகாது. எனவே பிறருக்கு நன்மை செய்து வாழும் அறவாழ்வே வாழ்வாகும் என்பதனை

       பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்
       இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
       மக்கள் யாக்கை இது என உணர்ந்து
       மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்”
                            (உதயகுமரன் அம்பலம் புக்க காதை, அடி :136-139)
என்னும் அடிகளின் வழி உதயகுமரனுக்கு வாழ்வின் பொருளை உணர்த்துகிறாள்மணிமேகலை.மண்ணோடு மண்ணாகும் இவ் உடல் இச்சைக்காக வாழ்வின் உயிர் பொருளான அறத்தை மறக்கலாகாது என உணர்த்திய திறத்தை இதன்வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

பெண்மை அறம்
       எக்காலத்திலும் பெண்களே அறிவில் சிறந்து விளங்கினர் என்பதனைத் தொடக்ககாலத்தில் நிலவிய தாய் வழிச் சமுதாய அமைப்பு முறையின் வழி உணரமுடிகிறது.இன்று தந்தை வழி சமுதாயம் போல் தோன்றிடினும் பெண் எடுக்கும் முடிவினைக்கொண்டே இல்லறம் சிறப்பாக நடைபெறுவதனைக் கண்கூடாகக் காணமுடிகிறது.இதற்குச் சான்றாக செட்டிநாட்டு ஆச்சிமார்களின் திறமான நிர்வாகத்தின் வழி எளிதில் உணரமுடிகிறது.அதனால்தான் பெண் சிசுவைக் கொல்லும் இடங்களிலும் தாய்மையின் சிறப்புப் போற்றப்படுவதனைக் காணமுடிகிறது.எனினும் பரவலாகஆணாதிக்கப் போக்கும் நிலவி வருவதனைக் காணமுடிகிறது.எனவே பெண் எத்தகைய உயர் நிலையில் இருப்பினும் ஆணுக்கு அஞ்சி வாழும் நிலையினையும் காணமுடிகிறது.பெண்ணின் பேச்சை செவி மடுக்கும் நிலை ஆணிடம் இருக்குமாயின் பெண் சீண்டல்களும் குடியினால் விளையும் இறப்பும் நிகழாது நாடு வளம்பெறும் என்பதனை உணரமுடிகிறது.

       மணிமேகலையின் அழகில் மயங்கிய உதயகுமரன்  அவளை அடைந்தே ஆக வேண்டும் என்னும் உறுதியுடன் அவளைக் காணவருகிறான். அவனை எதிர்க்கும் ஆற்றலோ மறுக்கும் ஆற்றலோ இல்லாததனால் சுதமதியிடம் அப்பொறுப்பினை விடுத்து மறைந்து நிற்கிறாள் மணிமேகலை.அறத்திற்கு மாறாக உதயகுமரனானவன் தன்னை மறுக்கும் மணிமேகலையைத் துரத்துகிறான்.அத்தகைய இளவரசனின் இயல்பினை நன்குணர்கிறாள் சுதமதி.எனவே அறத்திற்காக நரை முடித்த தம் முன்னவனான கரிகாற்சோழனின் வழித்தோன்றல் என்பதனை உணர்த்திவிட்டு அறவழி நிற்றலின் அவசியத்தினை உணர்த்துகிறாள். ஆணுக்குப் பெண் அறிவுரைக் கூறுவதனை ஏற்கும் பக்குவம் ஆணுக்கு இல்லாது போகும் என எண்ணியவளாய் தன் நிலையினைத் தாழ்த்திக்கொண்டு உதயகுமரனுக்கு அறிவுறுத்தும் சுதமதியின் திறத்தினை
       இளமை நாணி முதுமை எய்தி ; உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு
       அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் ; செறிவளை மகளிர் செப்பலும்- உண்டோ ?                                              (பளிக்கறை புக்க காதை :107 -110)
என்னும் அடிகளின் வழி முடிகிறது.பின்னர் மணிமேகலையே எதிர்கொள்ளும் சூழல் நிலவுகிறது.       மணிமேகலையானவள் தம் அறிவுத்திறத்தால் வெல்லும் பான்மையுடையவளாய் இருந்தும் உதயகுமரனை எதிர்கொள்ள இயலாமல் பணிந்து பேசும் தன்மையினைக் காணமுடிகிறது. ஆண் தன்மையினை உயர்த்தி பெண் தன்மையைத் தாழ்த்திக்கொண்டு அவனுக்கு அறிவுறுத்தும் நிலையினை
       மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு
       பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டா ?
                                  (உதயகுமரன் அம்பலம் புக்க காதை :140-141)
என்னும் அடிகள்வழி உணரமுடிகிறது. இவ்வாறு அருமையான அறக்கருத்துக்களை நெஞ்சில் பதிப்பதற்காகப் பெண் தன்னை எவ்வாறெல்லாம் தாழ்த்திக்கொள்ள இயலுமோ அவ்வாறெல்லாம் தாழ்த்திக்கொண்டு அறிவுறுத்தும் நிலையினைக் காணமுடிகிறது. இன்றும் தான் செய்வது மட்டுமே சரி என எண்ணும் ஆணாதிக்கப் போக்குத் தொடர்வதனாலேயே மது, மாது என்னும் நிலையில் சமூகம் சீரழிந்து வருவதனையும் காணமுடிகிறது.

தனிமனித அறம்
       அன்பு, காதல், காமம் என்னும் சொற்கள் வெறும் சொற்களாக மட்டுமின்றி உணர்ச்சி நிலையின் வலிமையினை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.இயற்கை நிகழ்வாகவே அமையும் அன்பானது சூழலின் நிலைக்கேற்ப தளர்ச்சி, வளர்ச்சி என்னும் நிலைகளாக மாறுபடுவதனையும் காணமுடிகிறது.அன்பின் வளர்ச்சி நிலை காதலாகவும் பின் அதுவே காமமாகவும் உருப்பெற்று சில நேரங்களில் நீங்காத பழியினையும் பாவத்தையும் உண்டாக்கிவிடுகிறது.ஒருவரிடம் கொள்ளும் விருப்பானது பிறரிடம் வெறுப்பினை உண்டாக்கிவிடுகிறது.உலகியலில் இயற்கையாகவே அத்தகைய பற்று தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.அதனாலேயே ஞானிகள் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் தகைமையுடையராய் விருப்பு வெறுப்பின்றி வாழ்ந்ததனையும் காணமுடிகிறது. துறவு மேற்கொண்ட மணிமேகலைக்கும் இக்காதல் உணர்வு முளைத்ததனை
       கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
       வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
       இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
       புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
       இதுவோ அன்னாய் ! காமத்து இயற்கை
                     (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை : 86-90)
என்னும் அடிகள் வழி அறிந்துணரமுடிகிறது.கற்பிலாள், தவ உணர்விலாள், மரபுக்கேற்ற காவல் இலாள், விலை மகள் என உதயகுமரன் எவ்வளவு இழித்துரைப்பினும் அவள் மனம் அவன் பின்னால் செல்லும் தற்செயல் நிலையினை உணர்கிறாள். இத்தகைய இயற்கை நிலையிலிருந்து விழிப்புணர்வு பெற்று
              ’இதுவே ஆயின் கெடுக தன் திறம் …..‘
                            (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை : 86-90)
எனக் கூறி அக்குற்றத்திலிருந்து விடுபடுவதனையும் காணமுடிகிறது.விழிப்புணர்வு இல்லாது பல இளைஞர்கள் இளமையிலேயே தம் வாழ்வை சீரழித்துக்கொள்கின்றனர்.இப்போக்கிலிருந்து விடுபட வழிகாட்டியுள்ளதாகவும் மணிமேகலையின் இச்செயலினை நோக்கமுடிகிறது.

சமூக அறம்
       தமிழர்கள் கோவில்களை வழிபடுவதற்குரிய இடமாக மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்துக் காக்கும் இடமாகவும் கொண்டிருந்தனர்.அவ்வகையில் குளங்களையும் மரங்களையும் தங்கும் இடங்களையும் அமைத்து உணவுப்பொருள்களையும் வழங்கியுள்ளதனையும் காணமுடிகிறது.கோவில்கள் அறச்சாலைகளாகவே நின்று மக்களுக்கு நன்மை செய்தன என்பதற்குச் சான்றாக மணிமேகலையின் சமயநெறி அமைந்திருந்ததனை உணரமுடிகிறது. எவ்வகை வேறுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் நன்மை செய்த திறத்தினை
       மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்:       உண்டி கொடுத்தோர் உயிர்                              -      கொடுத்தோரே(பாத்திரம் பெற்ற காதை : 95-96)
என்னும் அடிகள் இதனை எடுத்தியம்புகின்றன.அகச்சமயத்தவராயினும் புறச்சமயத்தவராயினும் பசிப்பிணியினை நீக்குதல் முதற்கடன் என வாழ்ந்த அறநெறியினையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.


மொழி அறம்
       மொழியறிவின்றி எவ் அறிவினையும் பெற இயலாது.எனவே மொழி அறிவினை மானிட இனத்திற்கே உரிய தனிச்சிறப்பாகக்கொள்ளமுடிகிறது.தாய்மொழி அறிவின் வழி பிற மொழி அறிவினைப் பெறுதல் எளிதாகவும் சிறப்பாகவும் அமைகிறது.எனவே எம்மொழியினையும் குறைத்து மதிப்பிடாது தாய்மொழியின் அறிவோடு பிறமொழி அறிவைக் கற்றல் மொழியறம் எனப் போற்றமுடிகிறது.அவ்வாறு  மொழி உயிரைக் காக்கும் வல்லமை உடையது என்பதனை சாதுவன் வழி உணர்த்துகிறார் சீத்தலைச்சாத்தனார். நாகரிடம் சிக்கிக்கொண்ட சாதுவனை நாகர்கள் தம் உணவாக்க எண்ணும் நிலையினை
       நக்க சாரணர் நயமிலர் தோன்றி :   பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன்
       தானே தமியன் வந்தனன் அளியன் : ஊன் உடை இவ் உடம்பு உணவு …….
                            (ஆதிரை பிச்சையிட்ட காதை : 56-59)
என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. பின்னர் அவர்களே தங்கள் மொழி அறிந்தவன் சாதுவன் எனத் தெரிந்ததும் அவனிடம் அன்புகொண்டு அறிவுக்கு மயங்கிநின்று தொழுத நிலையினை
       மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின்
       கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள்
       சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி
                                  (ஆதிரை பிச்சையிட்ட காதை : 60-61)
என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. மொழி அறிவினால் விளையும் நன்மைகளை எடுத்துக்காட்டி எவ்வகை பிரிவினையுமின்றி பிற மொழி அறிவு பெற்று வாழ்தலே மொழியறம் என்பதனை மணிமேகலை உணர்த்தியுள்ளதனையும் காணமுடிகிறது.

வினை அறம்
       தீவினை என்பது நல்வினையிலிருந்து வழுவுதலும், நல்வினை என்பது தீவினையிலிருந்து வழுவுதலுமே என்பதனை ஒருவாறு உணரமுடிகிறது.எனினும் இவ்வறம் ஒவ்வொரு சூழலிலும் மாறுபட்டிருப்பதனையும் காணமுடிகிறது.  அவ்வாறு அமையாது உயிர்களுக்கு நன்மை செய்யும் அடிப்படை அறங்களைப் பின்பற்றுதல் நல்வினையாகவும் உயிர்களுக்கு ஊறு செய்யும் கொடுமைகளைத் தீவினைகள் என்றும் உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

கொலையே களவே காமத் தீவிழைவு :     உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல் :சொல்எனச்சொல்லில்தோன்றுவ      -நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று :உள்ளம் தன்னின் உருப்பன-மூன்றும் எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர் :       இத்திறம் படரார் ………………………………
                                  (ஆபுத்திரன் – நாடு அடைந்த காதை : 125-132)
என்னும் அடிகள் கொலை, களவு, காமம் என்பன தளர்ச்சியுடைய உடலில் தோன்றும் குற்றங்கள் எனவும் பொய், புறம் கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்பன சொல்லில் தோன்றும் குற்றங்கள் எனவும் வெஃகுதல், வெகுளல், மயக்கம் இம்மூன்றும் உள்ளத்தில் தோன்றும் குற்றங்கள் எனவும் வகைப்படுத்திக் கூறியுள்ளார் சீத்தனார். நல்வினையை குறிப்பிட வேண்டும் என எண்ணியவர் மேலே குறிபிட்ட தீவினைகளை உணர்ந்து அவற்றிலிருந்து நீங்குதலே எனத் தெளிவுபடுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது.

ஆ அறம்
       தாயானவள் தன்னுடைய பாலைக் கொடுத்து குழந்தையைக் காப்பது போல பசுவும் தன் பாலைக் கொடுத்து தன் கன்றை மட்டுமின்றி மனிதச் சிசுவையும் காப்பதனைக் காணமுடிகிறது.இவ்வருமையினை உணர்ந்து தமிழர்கள் பசுவினைத் தெய்வமாக வணங்கிய நிலையினை அறியமுடிகிறது.ஏர் உழும் மாட்டினையும் மதித்து வணங்கும்(மாட்டுப் பொங்கல்) வழக்கம் இருந்ததனையும் காணமுடிகிறது.பசுவைக் காக்கும் இவ்வுணர்வு மணிமேகலைக் காலத்திலும் வழக்கில் இருந்ததனைக் காணமுடிகிறது.அந்தணர்கள் பசுவினை வேள்வியில் அணியமாக்கி இருந்த நிலையினையும் அந்நிலையிலிருந்து ஆபுத்திரன் அப்பசுவைக் காத்த நிலையினையும்
       அஞ்சி நின்று அழைக்கும் ஆத்துயர்  கண்டு
       நெஞ்சு நடுக்குற்று நெடுங்கணீர் உகுத்து
       கள்ள வினையின் கடுந்துயர் பாழ்பட
       நள் இருள் கொண்டு நடக்குவன்’ என்னும்
       உள்ளம் சுரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
       அல்லிடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன்
                           (ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை : 33—38)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. அந்தணர்கள் பசுவினைக் கொல்லும்  நிலையில் இருந்ததனையும் பசுவைக் ஆபுத்திரன் காத்த நிலையின் வழி உயிர் இரக்கத்தோடு வாழ்ந்த நிலையினையும் மணிமேகலை எடுத்துக்காட்டுகிறது. நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப பிற உயிர்களைக் கொல்லும் போக்கு மாறி அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் நிலை வளர்ந்துள்ளதனையும் உணர்வுடையோர் உணர்வர்.

நிறைவாக
       மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நல்வழிகாட்டவும் விழைந்த சேக்கிழார் புத்த சமயத்தை ஒரு நெறியாகக் கொண்டு மணிமேகலை இலக்கியத்தைப் படைத்துள்ளதனை உணரமுடிகிறது.

       இலக்கினை இயம்புவதே இலக்கியம் என்னும் கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது மணிமேகலை.’மணிமேகலை’ சொற்சுவை பொருட்சுவையோடு அருட்சுவையையும் அறச் சுவையையும் ஊட்டும் வகையில் புனையப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது.புத்த சமயக் கருத்துக்களையும் கொள்கைகளையுமே இலக்காகக் கொண்டு இக்காப்பியம் புனையப்பட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

       எக்காலத்துக்கும் பொருந்தும் அறக்கருத்துக்களையுடைய காப்பியங்களில் படைப்பது அரிது.அதிலும் சமயக்கொள்கைகளை உணர்த்தல் அரிதினும் அரிது.அவ்விரு நிலையிலும் மணி போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய மணிமேகலை எக்காலத்தும் சிறப்புடையதாகப் போற்றப்படும் எனத் தெளியமுடிகிறது.

       காலத்தைன் வளர்ச்சிக்கேற்ப பண்பாடு மற்றும் நாகரிகத்தின் மாறிவருவதனையும் காணமுடிகிறது.அத்தகைய மாற்றம் மானிட இனத்தின் மேன்மையை உணர்த்துவதாக அமையவேண்டும் என மணிமேகலைத் தெளிவுறுத்துகிறது.

       மணிமேகலைக் காப்பியத்தில் அறக்கருத்துக்கள் பழங்காலத்திற்கு மட்டுமின்றி இக்கால இளையோர்க்கும் வழிகாட்டும் வகையில் புனையப்பட்டிருப்பதனை இங்கு எண்ணி வியக்கமுடிகிறது.
----------------








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக