நாடகாசிரியர் அண்ணா - ஒரு நோக்கு
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ் விரிவுரையாளர்,புதுச்சேரி - 605008. பேச: 9940684775
தமிழ் இலக்கிய வரலாற்றில் நாடகத்திற்கான பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்மொழியின் பழம்பெருமையினை நிலைநாட்டுவதில் நாடகத்தமிழ் சிறப்பிடம் பெறுகிறது.
ஏட்டிலக்கியம் இல்லாத காலத்திலேயே கூத்தாகத் தோன்றிய நாடகம் சிலப்பதிகார காலத்தில்தான் (வால சரித நாடகம்) நாடகம் எனப் பெயர்பெற்றதாக நாடகவரலாறு பதிவுசெய்கிறது. நாடகத்துறை இன்று பலவாறாக அமைப்பியல் நோக்கிலும் கருத்து நோக்கிலும் பரவலாக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் சமூகம் சார்ந்த நாடகங்களே மக்களைச் சென்றடைந்தன. அவ் வரிசையில் தமக்கெனத் தனி இடம் அமைத்துக் கொண்டவர் பேரறிஞர் அண்ணா.
நா அசைந்ததால் நாடாண்ட அரசியல்வாதி ; மறப்போம் மன்னிப்போம் என முழங்கிய மேடைத்தமிழ் முன்னோடி ; கத்திமுனையைவிட பேனாமுனை கூர்மையானது என வாழ்ந்த இதழாசிரியர்; சீர்திருத்த சிறுகதைஆசிரியர்; தன்னலம் கருதா அரசியல் தலைவர் ; மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கு மணம் உண்டு எனக்கூறிய சீரிய சிந்தனையாளர் கண் மூடும் வரை கற்பதையே மூச்சாகக் கொண்ட கல்வியாளர் என இத்தனைப் பெருமைக்கும் உரிய பேரறிஞர் அண்ணா நாடகாசிரியராகப் பெறும் இடத்தினை எண்ண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.
அண்ணாவின் நாடகங்கள்
கற்றோர் கல்லார் என்னும் வேறுபாடின்றி அனைவரின் அகம் நாடுவது நாடகம் ஆயிற்று. எனவே நாடகத்துறையினை சிறந்த கருவியாக எண்ணிய அண்ணா நீதிதேவன் மயக்கம் உள்ளிட்ட பல நாடகங்கள் எழுதினார். அவர் சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க எண்ணி புரட்சிகரமான கருத்துகளையே நாடகமாக்க விழைந்தார். நாடக மரபுப்படி மங்கலமான பெயரையே கதைத் தலைப்பாகக் அமைக்கவேண்டும் அதற்கு மாறாக ‘ஓர் இரவு’ எனத்தலைப்பிட்டார். கதைத்தலைவியானவள் உயர்ந்தவளாக இருக்கவேண்டும் அவள் பெயரையே தலைப்பாக வைக்கவேண்டும் என்னும் மரபை மாற்றும் வகையில் ‘வேலைக்காரி’ எனப் பெயரிட்டார். நாடகத்தலைப்பிலேயே இத்தகையே மரபுகளை உடைத்தார் எனில் நாடகக்காட்சிகளில் எவ்வகையான மாற்றங்களைச் செய்திருப்பார் என்னும் எண்ணவிழைவே இவருடைய படைப்புகளுள் நாடகங்களை நாடச்செய்தது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் நோக்கில் அவருடைய வேலைக்காரி நாடகம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒரு நாடகத்தின் வழியே அறிய முனைவதைவிட இரு நாடகங்களின்வழி அறிஞர் அண்ணாவின் நாடகத்திறன் குறித்து அறிதல் எளிதாகும் என்னும் நோக்கில் ‘ஓர் இரவு’ம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நாடகக் கதை:
வேலைக்காரி : வேதாசலமுதலியாருக்கு மூர்த்தி, சரசா என மக்கள் இருவர். சரசா சமத்துவத்தை மேடையில் பேசி வீட்டு வேலைக்காரி அமிர்தத்தை பலவாறு ஏசுபவள். அமிர்தத்துக்கு வயதானவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. மூர்த்தி அதிலிருந்து தப்பிக்கவைத்து தனக்கு அவள் மேலுள்ள காதலை வெளிப்படுத்துகிறான். இதனால் சினந்த வேதாசலம் வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். குடிசையில் வாழ்க்கை நடத்தும் அமிர்தம் பழவியாபாரம் செய்கிறாள். அப்போது மனநிலை குன்றிய பாலு என்னும் செல்வந்தர் தன் மகள் சுகிர்தம் என நினைத்து அவளை வீட்டிற்கு அழைத்துச்சென்று தன் மகளாக்கிக் கொள்கிறார். மூர்த்தி மன அமைதிக்காக ஒரு ஆசிரமத்தில் சேருகிறான். அச்சாமியாரின் போலித்தனத்தைக் கண்டு ஆற்றாது கொலைசெய்கிறான். அச்சாமியார் ஏற்கெனவே காவலரால் தேடப்பட்ட குற்றவாளி என்பதை வக்கீலாக வந்த ஆனந்தன் உறுதி செய்து மூர்த்தியைக் காப்பாற்றுகிறான். பாலுவின் மகள் சுகிர்தத்தை திருமணம் செய்து வைக்கிறான்.
பின் சுகிர்தம் தான் அமிர்தம் என்பதனை மூர்த்தி அறிந்து மகிழ்கிறான்.
சிக்கனமான வேதாசலம் வட்டிக்குப் பணம் கொடுத்து ஏழைகளின் சொத்தைப் பிடுங்குகிறார். மானத்தை உயிராகக் கொண்ட சுந்தரம்பிள்ளை இவருடைய கடனைக் கொடுக்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார். வெளி ஊருக்குச் சென்று பொருள்தேடச் சென்ற அவருடைய மகன் ஆனந்தன் மனம் நொந்து தானும் தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அவனுடைய நண்பன் மணி தற்கொலையைத் தடுத்து பழிவாங்குவதற்கு வழி கூறுகிறான். தன்னைப் போல் ஒருவன் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதை அறிந்து ஆனந்தன் பரமானந்தனாக மாறுகிறான். சரசாவை திருமணம் செய்துகொண்டு வேதாசலத்தைப் பழிவாங்குகிறான். கீழ் சாதி என ஒதுக்கப்பட்ட அமிர்தம்தான் சுகிர்தம் என்பதனை அறிகிறார். வேதாசலம் திருத்தப்படுகிறார். தனது தவறுக்கு வருந்துகிறார்.
பணத்திமிரும் சாதிவெறியும் சமூகத்தை சீரழிக்கின்றன என்பதனை எடுத்துக்காட்டி காதலால் பணமும் சாதியும் ஒழிக்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறார் நாடக ஆசிரியர்.
ஓர் இரவு: கருணாகரத்தேவர் மகள் சுசிலா. சந்தேகத்தால் சுசிலாவின் தாய் பவானியை கொலை செய்தது அவளுக்குத் தெரியாது. இதனை அறிந்த மாமன் ஜெகவீரன் அவரை மிரட்டி பல வழிகளில் ஆதாயம் தேடிக்கொள்கிறான். டாக்டர் சேகர் சுசிலாவைக் காதலிப்பது தெரிந்தும் காமுகனான ஜெகவீரன் சுசிலாவைத் திருமணம் செய்துகொடுக்குமாறு மிரட்டுகிறான். கொலைக்குற்றத்தை மறைக்கவேண்டி திருமணத்துக்கு ஒப்புக் கொண்ட தந்தையைக் காக்க சுசிலாவும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறாள்.
டாக்டர் சேகர் கருணாகரரின் அழைப்பின்படி அங்கு வருகிறான். அவனிடம் தான் சொர்ணம் என்ற ஒரு விதவையைக் காதலித்ததையும் அவளைக் கைவிட்டதையும் ஜெகவீரனின் தூண்டுதலால் பவானி நாடகமாடுவது தெரியாமல் அவளைக் கொலைசெய்ததையும் மாரடைப்பால்தான் அவள் இறந்தாள் என அனைவரையும் நம்பச்செய்ததையும் கூறுகிறார். அதன்பின் சேகர் சுசிலாவைப் பார்க்க வருகிறான். அப்போது திருடனாக வந்த ரத்னத்திடம் காதலான நடிக்கவேண்டுகிறாள். அதைக்கண்டால் ஜெகவீரன் மனம் மாறுவான் என நாடகமாடுகிறாள். நாடகமாடுவது தெரியாமல் சுசிலாவை ஏசி ரத்னத்தை பின்தொடர்கிறான். ரத்னம் நடந்ததை தன் தாய் சொர்ணத்திடம் கூறுவதைக் கேட்ட சேகர் உண்மையை அறிகிறான். பின்னர் சொர்ணம்தான் கருணாகரரால் கைவிடப்பட்டவள் என்பதனை அறிந்து ரத்னத்தின் தங்கைதான் சுசிலா என்பதனை உணர்த்துகிறான். இருவரும் சேர்ந்து அந்த கொலைக்கான ஆதாரமாக விளங்கும் படத்தைக் கைப்பற்றி கருணாகரரைக் காப்பாற்றி விடுகின்றனர். சேகரும் சுசிலாவும் இணைகின்றனர்.
ஒரு பெண்ணை ஏமாற்றி ஒரு பெண்ணைக் கொலை செய்து ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தள்ளும் ஒரு ஆண்மகனின் செயலைக் காட்சிப்படுத்துகிறார். ஆண்களால் பெண்கள் ஏமாற்றப்படுவதும் பெண்ணைப் பொழுதுபோக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுத்துவதனால் சமூகவிரோதிகள் உருவாவதனையும் சுட்டிக்காட்டி சமூக அவலத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
செல்வத்தால் விளையும் ஏற்றத்தாழ்வுகளை ‘வேலைக்காரியிலும்’ பெண்ணடிமைத்தனத்தை ‘ஓர் இரவிலும்’ விளக்கும்வகையில் அக்காலச் சூழலை(1947) படம்பிடித்துக்காட்டும் வகையில் நாடகங்களைப் படைத்துள்ளார்.
தொடக்கம்
கடவுள் பெயராலோ இயற்கையின் வருணனையிலோ உரைநடை போக்கிலோ நாடகக் காட்சி தொடங்கும். வேலைக்காரியில் ‘காளி, மகமாயி, லோகமாதா....’ என வேதாசலமுதலியார் இறைவியை வேண்டுவதாகத் தொடங்குகிறார். கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களைக் கண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக இந்த பக்தரை எடுத்துக்காட்டுகிறார். பக்தி வேடம் போடுபவர்கள் ஒழுக்கமான வாழ்வு வாழாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து பல உயிர்களைக் குடிப்பதைச் சுட்டிக்காட்ட அடித்தளம் இடுகிறார்.
‘ஏமாற்றுவதிலே உங்களுக்கு ஈடு யாரும் கிடையாது’ என ‘ஓர் இரவு’ நாடகக்காட்சி தொடங்குகிறது. காதலர்கள் பேசிக்கொள்வது போல் காட்சி அமைகிறது. புறவாழ்வில் சிலரும் அகவாழ்வில் பலரும் இந்தத் தொடருக்கு உரியவர்களாகின்றனர். சுவைப்போரைத் தூண்டும் வகையில் சுவையான தொடக்கமாக அமைகிறது.
வளர்ச்சி
வேலைக்காரியில் வட்டிக்கு பணம் ஈட்டி ஏழைகளை வருத்துவதே வாழ்க்கை என வாழும் செல்வந்தரின் ஆணவப்போக்குடன் கதை வளர்கிறது.
‘ஓர் இரவில்’ சுசிலா செல்வந்தர் மகள் என்பதனாலும் அவளைக் காதலிக்கும் சேகர் டாக்டர் என்பதனாலும் தடையின்றி கதை வளர்கிறது.
சிக்கல்
வேலைக்காரியில் வேதாசலத்திடம் வாங்கிய கடனுக்காக உயிரை இழந்த தந்தையைப் போலவே ஆனந்தனும் வாழவழியின்றி தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்.
ஒர் இரவில் கருணாகரர் ஜெகவீரனின் மிரட்டலுக்குப் பயந்து தன் மகள் சுசிலாவை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகிறார். தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள்.
திருப்பம்
வேலைக்காரியில் தற்கொலை செய்துகொள்ள முயலும் ஆனந்தனை அவனுடைய நண்பன் மணி தடுத்துவிடுகிறான். கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட பரமானந்தன் ஆனந்தனைப் போலவே தோற்றம்கொண்டு இருக்கிறான். வேதாசலத்தைப் பழிவாங்க ஆனந்தை பரமானந்தனாக மாற்றுகிறான் மணி.
ஒர் இரவில் தற்கொலை செய்துகொள்ள முயலும் சுசிலாவைக் காப்பாற்றுவதற்காக திருடனாக வந்த ரத்னம் காதலனாக மாறுகிறான். தன் மாமன் ஜெகவீரன் வரவேண்டிய சூழலில் சேகர் வந்துவிடுகிறான். இதனால் ரத்னத்தை பின்தொடர்ந்து செல்வதனால் ரத்னம் சுசிலாவின் அண்ணன் என்னும் உண்மை தெரிகிறது.
முடிவு
வேலைக்காரியில் ஆனந்தனாக வந்த பரமானந்தத்தை செல்வந்தன் என சரசாவைத் திருமணம் செய்து கொடுத்த வேதாசலத்தின் ஆணவப்போக்கு அழிகிறது. தன் தவறுகளுக்கு வருந்துகிறார்.
ஓர் இரவில் கருணாகரர் கொலை செய்த படத்தைக் சேகரும் ரத்னமும் ஜெகவீரனிடம் இருந்து கைப்பற்றுகின்றனர். கருணாகரர் மகிழ்ச்சி அடைகிறார். சேகரும் சுசிலாவும் இணைகின்றனர்.
பாத்திரப்படைப்புத்திறன்
முதன்நிலை, துணைநிலை, வளர்நிலை - மாந்தர் என பல மாந்தர்கள் நாடகத்தை நடத்திச்செல்கின்றனர்.
வேதாசலமும் கருணாகரரும்
இவர்கள் இருவருடைய விடுதலையே நாடகக் கருவாக அமைகிறது. மிடுக்குடன் வாழ்பவருடைய வாழ்விலும் குற்றங்கள் இருப்பதை இவர்கள் வழி எடுத்துக்காட்டுகிறார் அண்ணா.
வணிகனுக்கு அழகு கணக்குடன் வாழ்தல் என்பதற்கேற்ப வேதாசலம் இருந்ததை வேலைக்காரன் கணக்கு சரியாகச் சொல்லாதபோது ‘அதென்னடா மேலேயும் கீழேயும் ? கரைக்டா சொல்லுடா கழுதை’ (வே.ப;11) என்னும் கூற்றும் ‘பெரிய கோடீஸவரரு இவரு சரியா..பார்த்து சொல்லுடா கழுதை’(வே.ப;22)என்னும் கூற்றும் அவருடைய மிடுக்கான வாழ்வை எடுத்துக்காட்டுகின்றன.
சொர்ணத்தை ஏமாற்றிவிட்டு மனைவியைக் கொன்றுவிட்டு தன் மகளையும் பலிகொடுக்க விரும்பாத கருணாகரனின் நிலையினை ‘நான் சுசிலாவை வற்புறுத்தினால் அவள் கண்களில் நீர் வழியுமே அது தீயை விடச்சுடுமே’(ஓ.ப:24) என்னும் கூற்றின் வழி திருந்திவாழ விழையும் கருணாகரரின் நிலையினைத் தெளிவுபடுத்துகிறார்.
ஆனந்தனும் சேகரும்
சூழ்நிலையே மனிதரை வீரனாகவும் கோழையாகவும் மாற்றிவிடுகிறது. தோல்வியை வெற்றி கொள்பவன் வீரனாகி விடுகிறான். அவ்வாறு இயல்பான குணம் கொண்டஇவ் இருவரும் எதிர்நிலைமாந்தரைத் திருத்துவதில் முதன்மை இடம் பெற்றுவிடுகின்றனர்.
அயலூரிலிருந்து வரும் ஆனந்தன் ஏழைக்குடும்பத்தைச் சார்ந்த இளைஞன் என்பதனை ‘தேயிலைத் தோட்டத்திலே,இரவும் பகலும் கஷ்டப்பட்டு ஒரு வேளை சாப்பிட்டு மீத்தின பணமப்பா இது’ (வே,ப.14) என்னும் உரையாடல் வழி எடுத்துக்காட்டுகிறார்.
சேகரன் நல்லவன் என்பதனை ‘குணசீலரான சேகரை என்னிடம் அந்த அழகல்லவா அழைத்துக்கொண்டு வந்தது’(ஓ,ப:35) என்னும் சுசிலாவின் கூற்றின்வழி எடுத்துக்காட்டுகிறார்.
மணியும் ரத்னமும்
முதல் நிலை மாந்தருக்குத் துணைசெய்கின்றனர். சில இடங்களில் இவர்களே முதன்நிலை மாந்தர் எனக் கருதக்கூடிய அளவிற்கு அறிவுக்கூர்மையும் துணிவும் உடையவர்களாக விளங்குகின்றனர்.
ஆனந்தனை மணி பரமானந்தனாக மாற்றுகிறான். சூழ்ச்சியை சூழ்ச்சியால்தான் வெல்லவேண்டும் என மணி அறிவுறுத்துவதனை ‘நானும் உன்னைப்போல ஒரு நாடோடி உன் இனம்..நீ உலகம் அறியாதவன். சூதும் சூழ்ச்சியும் நிறைந்த இந்த உலகத்திலே சிக்கிச் சிதைந்து, நான் கற்ற பாடங்களை நீயும் கற்றிருந்தால் இந்த மாதிரி கத்தியும் கையுமாகத் திரியமாட்டாய்’(வே,ப:18) என்னும் கூற்றின்வழி வெளிப்படுத்தி மணியின் குணநலன்களை அறியச்செய்கிறார் அண்ணா.
சேகருடன் இணைந்த ரத்னம் உலகத்தின் கொடுமைக்கான காரணத்தினை ‘எல்லாம் எதனால் வருதுன்னு நினைக்கறீங்க. ஏழ்மை படிப்பில்லாமெ இருக்கிறது; நல்லவங்க நமக்கென்னானு போயிடுவது’(ஓ,ப:104) எனக்கூறுவதன்வழி பிரச்சினைக்குத் தீர்வு காணும் தெளிவுள்ளவனாக படைக்கப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது.
வேதாசலமும் ஜெகவீரனும்
வேலைக்காரியில் வட்டிக்கு விடும் வேதாசலமே எதிர்நிலைமாந்தராகிறார். ‘இவர் ஏன் பிணமானார் தெரியுமா? வேதாசலத்தினுடைய பணத்தாசையினால்தான். கடன்கொடுத்தாராம். கஷ்டப்படுத்தினாராம்.வீடு வாசல்களை ஏலத்தில் எடுத்தாராம். பத்தாக்குறைக்கு வாங்கிய கடனுக்கு ஏசினாராம். மானத்துக்கு பயந்து மரக்கிளையில் பிணமானார்’(வே.ப;16) என்னும் கூற்று வேதாசலத்தின் கொடுங்குணத்தினை படம்பிடித்துக்காட்டுகிறது.
‘ஓர் இரவில்’ ஜெகவீரன் சூழ்ச்சியால் சுசிலாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தன் மாமனையே மிரட்டுவதனைக் கண்டு அவனுடைய கொடிய குணத்தினை ‘கொட்டிவிட்ட தேளாவது ஓடி ஒளியும் அவரைத் துடிக்கச்செய்துவிட்டு தைரியமாக எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே’ (ஓ,ப:33)என்னும் சுசிலாவின் கூற்றின்வழி எதிர்நிலை மாந்தனாவதனை உணர்த்தியுள்ளார்.
நாடகாசிரியர் கூற்று
நாடகத்தை மேடையில் நடத்திச் செல்வதற்கு கட்டியங்காரன் துணைசெய்கிறான். இங்கு ஆசிரியரே சூழலையும் பின்னணியையும் உணர்ச்சிகளையும் குறிப்பிட வேண்டியதாகிறது. அவ்வாறு பல இடங்களில் அண்ணா இடையீடு செய்து நாடக சுவைஞர்களுக்கு மயக்கம் ஏற்படாதவாறு தேவையான இடங்களில் தெளிவாக விளக்கிச் செல்கிறார்.
அமிர்தத்தைத் தன் மகள் சுகிர்தம் என நினைத்த பாலு முதலியார் பின் வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொள்வதை ‘பாலு முதலியார் பைத்தியம் தெளிகிறது’(வே,ப:80) என்கிறார்.
கருணாகரர் தன் மகளிடம் திருமணம் செய்து கொள்ள கெஞ்சுவதனை ‘அருகே சென்று அபயம் அளிக்கும்படி வேண்டும் பாவனையில் நின்றுகொண்டு’(ஓ,ப.31)என்கிறார். இவ்வாறு நாடகக் கதை சீராகச் செல்வதற்காக அண்ணா இடையீடு செய்வதனைக் காணமுடிகிறது.
நடை நயம்
அண்ணாவின் நடை பேச்சில் மட்டுமின்றி எழுத்திலும் தனித்தன்மையுடையது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவருடைய நாடக நடையும் சிறப்பு மிக்கதாக அமைகிறது.
‘நீ குடத்தைத் தூக்கிக்கிட்டு வளைந்து வளைந்து நடப்பாயே, அது மாதிரி வளைந்து வளைந்து பேசுறே’ (வே.ப;29)என மூர்த்தி கூறுவதன்வழி அமிர்தத்தின் பேச்சில் மயங்கி விடுவதனை அழகாக எடுத்துக்காட்டுகிறார்.
‘காதல் சதி அல்ல, வலை; சிக்கினவர் தப்புவதில்லை; வானவில்; ஆனால் இருக்கும் வரையில் அழகு அற்புதமாக இருக்கும். கைகூடினால் விருந்து; இல்லையோ அதுவே விஷம். காதல் சந்திரன் போல ஜோதியாகவும் இருக்கும்; சிலசமயம் நெருப்பாகவும் எரிக்கும்’(ஓ,ப:45) எனக் காதலின் தன்மையினை எடுத்துக்காட்டுகிறார்.
வட்டிக்கு பணம் கொடுத்து பிறரை வருத்தி வாழ்வதன் பயன் ஒன்றுமில்லை என்பதனை உணர்த்தும் வகையில் ‘தங்கத்தினாலே அரிசி செய்து சமைத்து, கோமேதகக் கூட்டும் வைர வறுவலும் முத்துப் பச்சடியும் மோர்க்குழம்பிலே கெம்புமா கலந்து சாப்பிட்டு வந்தீர்’(வே,ப:95) என்னும் கூற்றின்வழி தெளிவுபடுத்துகிறார்.
உழைப்பவனுக்குத்தான் அதன் அருமை தெரியும் என்பதனை ‘மூட்டை சுமப்பவனுக்கல்லவா தெரியும் கழுத்து வலி(வே.ப;16) என்னும் கூற்றின் வழியும் பணமும் குணமும் ஒன்று சேர்வதில்லை என்பதனை ‘இரும்புப்பெட்டிக்கும் இருதயத்துக்கும் ஈஸவரன் சம்பந்தம் வைக்கிறது இல்லை’ என்னும் கூற்றின் வழியும் சுவையாக வெளிப்படுத்தியுள்ளார்.
சமுதாயச் சிந்தனைகள்
நாடகத்தின் கதைக்கோப்பு சமுதாய அவலங்களைப் படம்பிடித்துக்காட்டுவதாக அமைகிறது.
சாதிக் கொடுமையைக் குறித்துக் கூறுகையில் ‘பஞ்சவர்ண்க் கிளியைப் பிடித்துக் கொஞ்சி விளையாடலாம் என்று எண்ணிப் பனைமரம் ஏறும்போது பறந்தோடிவிட்டது, ஜாதிபேதமென்கிற கூண்டுக்கு; தரித்திரக் கம்பிகள் வேறு; என்ன உலகம் இது’(வே.ப;30) என மூர்த்தி புலம்புவதன் வழி சாதிக்கு அடிமையாக வேண்டிய சூழலைச் சுட்டிக்காட்டுகிறார்.
பண உலகத்தில் ‘முட்டாள் புத்திசாலியாகப் போற்றப்படுவான். வீரன் கோழைப் பட்டம் பெறுவான். கோழை வீரன் பட்டம் பெறுவான். அவலட்சணமாக இருந்தாலும் அழகனாகக் கருதப்படுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? (வே.ப;45) என பரமானந்தன் கேட்பதன்வழி சுவைஞர்களை சிந்திக்க வைக்கிறார் அண்ணா.
போலிச்சாமியார்கள் பொருளின் மீது ஆசையில்லாதது போல் நடித்து பொருளைப் பறித்துக் கொள்வதனை ‘சொத்துகள் யாவும் ஆஸரமத்துக்குச் சேரவேண்டுமென்று பத்திரத்தில் கையொப்பமிடச் சித்தமா? (வே,ப;70) என சாமியார் கேட்பதன் வழி உணர்த்துகிறார்.
கள்ளனுக்கும் காமுகனுக்கும் உள்ள வேறுபாட்டினை ‘கள்ளன் எந்த வீடும் நுழைவான். காமுகன் கதியற்ற கன்னிமாடமாகப் பார்த்து நுழைவான்’(ஓ,ப:47) எனக்கூறி பாதுகாப்புடன் வாழ அறிவுறுத்துகிறார்.
சமூகத்தில் விபச்சாரத் தொழிலால் விளையும் பழி பணத்தால் மறைக்கப்பட்டு விடுவதனை ‘பணம் எந்த விதத்திலோ என்னிடம் வந்த பிறகுதான் நான் பரிமளத்துடன் வாழமுடிந்தது. எனக்குத் துரோகம் செய்த சீமானே கண்டு மலைக்கும்படியான மாளிகையிலே உலாவ முடிந்தது’(ஓ,ப:57) என்னும் கூற்றின் வழி எடுத்துக்காட்டுகிறார்.
நகைச்சுவை
தமிழனுடைய வாழ்வு சுவையான வாழ்வு. உணவில் அறுசுவையும் மெய்ப்பாட்டில் எண்சுவையும் உடையவன். எனவே எத்தகைய படைப்பாயினும் அதில் நகைச்சுவை முக்கிய இடம் பெறுகிறது. அதனையும் ஊடாக பிணைத்திருப்பதனைக் காணமுடிகிறது.
‘நான் என்ன சொல்லிக் கர்ப்பூரத்தை அணைச்சேன்? கால்காசு வாங்கலை என்று சொன்னேன். ஆனால் வாங்கினது எவ்வளவு? முள்ளங்கிபத்தை மாதிரி ஐந்து ரூபாய் வாங்கினேன்’(வே.ப;31) என கடனிலிருந்து தப்பிக்க மணி சத்தியம் செய்து கொடுத்ததை சுவையாக வெளிப்படுத்துகிறார். ரத்னம் தன்னை மிரட்டிய குடிகாரனை அடித்த உடன் அவன் மாறியதனை ‘நானு அவனுக்கு அண்ணன்,மாமன், அப்பன்,குரு, இவ்வளவு பந்துவுமாயிட்டேன், ஒரே அறை கொடுத்ததிலே’ எனச்சுவையாக குடிகாரனின் நிலையினை வெளிப்படுத்துகிறார் நாடக ஆசிரியர்.
நிறைவாக
நாடகம் பார்த்துச் சுவைப்பதைவிட படித்துச்சுவைப்பது கடினம். எனினும் அண்ணாவின் நாடகங்கள் பார்த்துச் சுவைப்பதுபோலவே படைத்துள்ளார். நாடகம் திரைப்படம் போலவே அழைத்துச் செல்கிறது. காட்சியை கண்ணில் செதுக்குகிறார். சிறந்த நாடகாசிரியராக வெற்றிபெறுவதனைக் காணமுடிகிறது.
காலத்தைப் படம்பிடித்துக்காட்டுவது இலக்கியம். அவ்வகையில் அறிஞர் அண்ணாவின் நாடகங்கள் செல்வந்தர்களின் ஏமாற்றும் போக்கையும் ஏழைகள் ஏமாறும் போக்கையும் சமூக அவலங்களையும் எழிலுற படம்பிடித்துக் காட்டுகின்றன.
நாடகத்துறையின் வழி மக்களை அடைதல் எளிது என எண்ணிய அண்ணா பல சீர்திருத்தக் கருத்துக்களை நாடகத்தில் புகுத்தி விழிப்புணர்வினை உண்டாக்க விழைகிறார். இதன்வழி பொறுப்புடைய நாடகாசிரியராக சிறப்பதனை அறியமுடிகிறது.
ஓர் இரவில் நடைபெறும் காட்சியாக ஒரு நாடகத்தை அமைத்துள்ளது அண்ணாவின் நாடகப்புனைவுத் திறனை வெளிப்படுத்துகிறது. மேலும் ‘வேலைக்காரி’யில் ஆனந்தன் பரமானந்தனாக நாடகமாடும் வகையிலும் ‘ஓர் இரவில்’ ரத்னம் இறந்தது போல் நாடகமாடும் வகையிலும் அமைத்து நாடகத்துள் நாடகம் அமைத்துள்ளார். இதன்வழியே அவர் சிறந்த நாடகாசிரியர் என்பது தெளிவாகிறது.
திரைப்படத்தை விட நாடகம் படைத்தல் கடினம். நாடகத்தில் ஏற்படும் சிறுதவறுகளையும் சுவைஞர்களால் எளிதில் அறிந்துகொள்ள இயலும். அறிஞர் அண்ணா நாடக அமைப்பினை முறையாகவும் பாத்திரப்படைப்பினை இயல்பாகவும் நடையினைச் சீராகவும் படைத்துள்ளதன்வழி அவர் சிறந்த நாடக ஆசிரியராக விளங்குகிறார் எனத் தெளியமுடிகிறது
------------------------------------------------------------------------------------------------------------------------------
சுருக்கவிளக்கம் : வே :வேலைக்காரி, ஓ : ஓர் இரவு, ப: பக்க எண்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
சாதி தலைவிரித்தாடிய சூழலை எடுத்துக்காட்டும் வகையில் பாத்திரப் பெயர்களுடன் சாதிப்பெயரையும் இணைத்து பெயரிட்டுள்ளமையைக் காணமுடிகிறது. சதிக்குக் கால் முளைத்து சாதியானது என்பதனை உணர்ந்து தமிழினம் தனக்குரிய சாதி அடையாளத்தை பெயரில் இழந்து வருவது பெருமைக்குரியதாயினும் இன்றும் பலர் சாதிப் பெயராலேயே அடையாளப் படுத்தப்படுவதனைக் காணும்போது அது அவசியம்தானோ என எண்ணத்தோன்றுகிறது. இதனால் மீண்டும் சாதிஒழிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.
(கலப்பு மண தம்பதிக்கு பிறந்தால் தந்தையின் ஜாதிதான் குழந்தைக்குப் பொருந்தும் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தீர்ப்பு . தினகரன் 8 டிச. 2008)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக