புதுச்சேரி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தேவிதாசனாரின்
பங்களிப்பு
மகாகவியின் பாரதியின் வழி வந்தவர்
பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தரின் வழி வந்தவர் கவிஞரேறு வாணிதாசன்.
கவிஞரேறுவின் வழி வந்தவர் தேவிதாசன். இலக்கியங்கள்
காலந்தோறும் இடையறாது தோன்றும் பெருமையுடைய தமிழ் மொழியின் பெருமையினை தமிழ் இலக்கிய
வரலாறு எடுத்தியம்பும். அவ்வாறே புதுச்சேரியின் தமிழ் இலக்கிய
வளர்ச்சியில் புரட்சிப்பாவலரான தேவிதாசனாரின் பங்கினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை
அமைகிறது.
கவிஞன் மிகவும் மென்மையானவன்.
எனவே அவன் இயல்பான மனிதனைப் போலே சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளைக்
கண்டும் காணாதது போல் செல்வதில்லை. இக்கூற்று கவிஞனுக்கு மட்டுமன்றி
படைப்புலகத்தைச் சார்ந்த அனைவருக்கும் உரியது. எனவே அந்நிகழ்வுகளின்
தாக்கத்தைக் கவிதையாக வடிக்கத் தொடங்குகிறான். அவ்வாறு தம்மை படைப்புலகத்திற்கு அறிமுகம் செய்து கொள்கிறார்
கவிஞர் (தேவிதாசன்). “சமுதாயம் விளக்கம்
பெற வேண்டும்; அதுதான் எழுத்தாளனின் நோக்கம். அதற்காக மெழுகுவர்த்தியாக உருகிப் போவதற்கும் தயங்குவதில்லை” (தேவிதாசன் கதைகள் ப.3) எனக் குறிப்பிடுகிறார் கவிஞர்.
படைப்பாளியின்
உலகம்
வீட்டைச் சீராக்கி மகிழ்ச்சியாக
வாழ எண்ணுபவன் இயல்பான மனிதன். நாட்டைச் சீராக்கி மகிழ்ச்சியாக
வாழ எண்ணுபவன் படைப்பாளி. இலக்கியப் படைப்பாளிகள் நாட்டையும்
மக்களையும் மட்டுமின்றி மொழியையும் காதலிப்பர். எனவே படைப்பாளர்கள்
ஒவ்வொரு சொல்லையும் எண்ணி எண்ணி படைப்புகளைப் படைப்பதுண்டு. அவ்வாறு படைத்த படைப்புகளே மக்கள் நெஞ்சி நீங்கா இடம் பெற்று விடுகின்றன.
அவ்வாறு கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, ஆய்வு எனப் பல
படைப்புகள் படைத்து மக்களை நல்வழிப்படுத்த விழைகிறார் கவிஞர்
(தேவிதாசன்). 1980 ஆம் ஆண்டில் ‘கலம்பக்க் காட்சிகள்’ என்னும் முதல் நூலை வெளியிட்ட கவிஞர்
பின்னர் ‘ஞான ரதம்- ஒரு கண்ணோட்டம்’
என்னும் நூலை வெளியிட்டார். இவ்வாறு அவருடைய இலக்கியப் படைப்புப்
பணி தொடர்கிறது.
கவிஞரின்
வாழ்க்கை
அரங்க. திருக்காமுக்கும், சுப்பம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்
(16-11-1936) தெய்வநாயகம். தனம்மாளை வாழ்க்கைத்
துணைநலமாக்கிக் கொண்டவர்.– திருநிலா, திருவளவன்,
திருமலர் என்னும் நன்மக்களைப் பெற்றவர். தி.தேவிதாசன் என்கிற தெய்வநாயகம்
பி.லிட். பி.எட்.
எம்.ஏ. டிப் ஃப்ரெஞ்சு,
ஆங்கிலம், எனப் பல பட்டங்களைப்
பெற்றவர். ஆண்டியார் பாளையம் அரசுப்பள்ளி, வில்லியனூர் அரசுப்பள்ளி, கூனிச்சம்பட்டு அரசுப்பள்ளி,
வ.உ.சி. பள்ளி எனப் பல பள்ளிகளில் ஆசிரியப் பணியினை செம்மையுறச்
செய்தவர். கோவில் விழாக்கள், கவியரங்குகள்,
இலக்கிய விழாக்கள் பலவற்றில் தலைமேயேற்று பலருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
1999 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 28 ஆம் நாள்
தமது இலக்கியப் பணியினை நிறைவு செய்து கொண்டார்.
’நெருநல் இருந்தவன் இன்றில்லை’ என்னும் ; உலகின் பெருமையை நிலைநிறுத்தி நீ
மறைந்தனை என்பர் மற்றவர், ஆனால்
; இங்குன் எச்சமென்று இலங்கிடும் மகனாய்
இலக்கியம், இலக்கணம்,
ஆய்வுரை என நீ ; படைத்த நூல்களாய் பாரில்
என்றும் நீ இருப்பாய் என்பேன் யானே (தி.தேவிதாசனார் நினைவு மலர் ப. 39)
என்னும் இரா.திருமுருகன் அவர்களின் கூற்று அவர் மறைந்தாலும் அவருடைய வழிகாட்டுதலில் தொடர்ந்து
இலக்கியப் பணிகள் தொடரும் என்னும் நம்பிக்கையினை ஊட்டி மன அமைதியைக்
கொடுக்கிறது.
ஆசிரியராக
பணிகளில் தலையாயது ஆசிரியப்
பணி. ஆசிரியர்கள் எல்லா இடத்திலும் ஆசிரியராக இருக்க வேண்டும்
என்பது சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. அதனால்தான் ஆசிரியப்பணி மிகவும்
தூய்மையானதாகப் போற்றப்படுகிறது. கவிஞர் தம் படைப்புகளிலும் ஆசிரியராகவே
இடம்பெறுகிறார். ஒரு படைப்பாளி சுவைஞன் என இல்லாமல் ஆசிரியர் மாணாக்கர் என்னும் நிலையிலேயே ”இலக்கணம்
எதற்கு’ என்னும் நூலின் வழி இலக்கணம் கற்பிக்கிறார். அவ்வாறே கவிதையின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் மாணாக்கரை கவிஞராக்கும்
வகையில் வினா விடை அமைப்பில் ‘கவிதை எழுத வேண்டுமா’ என்னும் நூலைப் படைத்துள்ளார். ஆசிரியப் பணியில் தன்னை
முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் அருமையினை கவிஞரின் படைப்புகளில் திரிபற அமைந்த
விளக்கங்கள் வழி அறியலாம்.
ஆசிரியரின் பெருமை மாணாக்கர்களின்
ஐயத்தை நீக்குவதைப் பொருத்தே அமைகிறது. சினம் கொள்ளாது பொறுமையுடன் கற்பிக்கும் ஆற்றலுடைய ஆசிரியரே பெருமைக்குரிய
ஆசிரியராகத் திகழ்வார். அவ்வாறு திகழ்ந்தவர் கவிஞர் என்பதனைத்
தாம் இலக்கணம் கற்பிப்பதன் வழி வெளிப்படுத்துகிறார். இலக்கண வகுப்பென்றாலே மாணாக்கர் மட்டுமின்றி
ஆசிரியரும் முக இறுக்கத்துடன் காணப்படுவர். எனவே அனைவரும் சுவையில்லாத
வகுப்பு என எண்ணும் நிலை வந்துவிட்டது. அதனாலேயே முதல் பாடவேளை
தான் இலக்கண வகுப்பாக இருக்கவேண்டும் என வழக்கப்படுத்திவிட்டனர். அவ்வாறின்றி கடைசி பாடவேளையிலும் இலக்கணம் கற்பித்த தமிழாசிரியர்கள் உண்டு.
அவ் வகுப்பில் ஆர்வமுடன் மாணாக்கர்கள் பாடம் கேட்டதும் உண்டு.
அவ்வாறு மாணாக்கர்களுக்கு ஆர்வமூட்டிக் கற்பித்தவர் கவிஞர். தன்னிடம் துணிவாகப் பேசிய மாணாக்கரிடம் சினம் கொள்ளாது “பாரதி கூறும் துணிவு உன்னிடம் உள்ளது ? உன்னைப் போன்றவர்கள்
தெளிவாக இருக்க வேண்டும். இப்படிப் பிழை செய்தல் கூடாது”
(இலக்கணம் எதற்கு ப. 27) எனக் கூறி ஐயத்தைக் களைகிறார்
கவிஞர். இவ்வாறு மாணாக்கர்க்கு ஊக்கமூட்டினால் இலக்கண வகுப்பு
கூட இனிக்கும் வகுப்பாகத் தான் அமையும் என அறிவுறுத்துகிறார் கவிஞர்.
மாணாக்கர்கள் இலக்கண வகுப்பில்
ஆர்வம் இல்லாததற்குக் காரணம் அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்துக்காட்டுகளை
எடுத்துக்கூறாத நிலையே என்பதனை உணரலாம். முன்னர் சிறப்புப் பெயரும்
பின்னர் பொதுப்பெயரும் இணைந்து அமையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையினைக் கற்பிக்கிறார்
கவிஞர். காலம் காலமாக
எடுத்துக்காட்டும் சாரைப் பாம்பினைக் கூறாமல் ”காந்தி மகான்”
(இலக்கணம் எதற்கு ப. 74) எனக் கூறி மாணாக்கர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இலக்கணம்
கற்பிக்கிறார். இவ்வாறு கற்பித்தால் தமிழ் இலக்கணத்தை அனைவரும்
கற்று பிழையில்லாத வருங்காலத்தை உருவாக்க இயலும் எனத் தெளியலாம்.
கவிஞராக
கவிதை இயற்றுவதில் தனக்கென தனி
முத்திரைக் கொண்டவர் கவிஞர். தமிழை உயிரெனப் போற்றுவதில் பெருமை
கொள்வோரில் முதன்மையானவர்கள் கவிஞர்களே. எனவே தம் கவி நலத்தைக்
காட்டும் முன் தமிழ் நலத்தை உரைப்பதனையே வழக்காகக் கொண்டிருந்தனர். முன்னோரை வணங்கி பின் பாடலைப் பாடுவது தமிழர் மரபு. அவ்வாறு
மகாகவியிடம் ஈர்ப்பை உருவாக்கிய புரட்சிக்கவிஞரையும், கவிதை நாட்டத்தை
உருவாக்கிய கவிஞரேறுவினையும் மறவாது கவி பாடும் கவிஞர் திறத்தினை
பூவேந்தி வண்டூதிப் பொன்பரப்பி மெல்லப்
பூந்தென்றல் காற்றதனின் நறுமணத்தில் தோய்ந்தே
மூவேந்தர் மடிதவழ்ந்த முத்தமிழைப் போற்றி
முறையாகப் பாட்டிசைத்து உணர்வூட்டி வந்தப்
பாவேந்தன் புரட்சிப் பாவலன் வழிவந் திட்ட
பழகுதமிழ்ச் சுவைதேர்ந்த புதுமைப்பா தந்த
நாவேந்தன் வாணிதாசன் பின் பிறந்ததாலே
நானுந்தான் பாடவந்தேன் தேவிதாசன் என்பேர் (மேகங்கள் ப.62)
என்னும் கவிதை எடுத்துரைக்கிறது. கவி பாடும் முன் கவிஞன் தன்னை எவ்வாறு அறிமுகம் செய்து கொள்ளவேண்டும் என்னும்
அழகினையும் இப்பாடல் வழி அறியலாம்.
கவிதையின்
போக்கு
கவிதையின் போக்கு கவிஞனின் உள்ளத்தைப் படம்பிடித்துக்காட்டும். தன்னைச் சுற்றி நிகழும்
அவலங்களை மறைத்து கவிபாடுதல் இயலாது. அவ்வாறு பாடினால் அவன் கவிஞனாக
இருக்க முடியாது. கச்சத்தீவினை இழந்து தமிழர்கள் நாளும் இலங்கை
கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் நிலையினை
படகுமில்லே மீனுமில்ல முத்தம்மா- ரொம்ப ; ஒடிஞ்சுபோச்சு மனசுதாண்டி முத்தம்மா
சிங்கராசா ஒனக்கு என்ன மச்சானே – உன்னை ; எந்தப்பய என்ன பண்ணான் மச்சானே
ஒண்டியாகப் பத்துப்பேரைப் பாப்பேண்டி- அந்தச் ; சிங்களவன் சுத்தி நூறா வந்தாண்டி
சுண்டைக்காயை நசுக்கிடாமே மச்சானே- நீ ; வந்துட்டியே வக்கில்லாமே மச்சானே
வாளைமீனைப் புடிக்கப்போன முத்தம்மா – சுட்டு ; ஆளைபொசுக்கிப் போடறாண்டி முத்தம்மா
ஆ ! அந்தமுட்டும் வந்துட்டானா
மச்சானே நம்ம ; சொந்தக் கடலில் முந்துறானா மச்சானே
கச்சத்தீவை கடன்கொடுத்தோம் முத்தம்மா- இன்னும் ; மிச்சத்தையும் முழுங்குறாண்டி முத்தம்மா (மேகங்கள் ப.66)
என்னும் கவிதையின் வழி எடுத்துரைக்கிறார்
கவிஞர். தொடரும் இவ் அவலத்தைக் கண்டும் காணாதிருக்க
அரசியல்வாதிகளால் முடியும் கவிஞர்களால் முடிவதில்லை என்பதற்குச் சான்றாக இக்கவிதை அமைந்துள்ளது.
புலமை
நலம்
முத்தாய்ப்பான கவிதைகளை எழுதி
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடமிருந்து புரட்சிப் பாவலர் என்னும் பட்டம் பெற்றவர் கவிஞர்.
சமுதாய அவலங்களைச் சாடும் கவிஞரின் திறத்தை கவியோகி சுத்தானந்த பாரதி
தித்திக்கும் செந்தமிழில் தேவிதாசன் கவிகள்
புத்திக்கும் மருந்தாகி புலமையைச் சேர்த்து
முத்திக்கும் வழிசெய்யும் முத்திரையைப் பதித்தே
எத்திக்கும் புகழோங்கி இலங்கிடுக நன்றே
எனப் பாராட்டியுள்ளதனையும் இங்கு
எண்ணி மகிழலாம்.. தமிழில் மட்டுமின்றி ஃப்ரெஞ்சு,
தெலுங்கு மொழிகளிலும் கவிதைகளை இயற்றிய கவிஞர் பன்மொழிக்கவிஞராகத் திகழ்ந்தவர். இவ்வாறு பல படைப்புகள்
படைத்து புதுச்சேரி தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெறுபவராகத்
திகழ்பவர் கவிஞர் எனத் தெளியலாம். அவருடைய படைப்புகளின் சிறப்பினை
இனி காணலாம்.
கவிஞன் வறுமையில் இருந்தாலும்
அவனைச் சுற்றி வறுமை இருந்தாலும் அவனுடைய கவிதை வறுமையுடையதாக அமையாது. கவிஞர் தாம் பிறந்த சேலியமேட்டின் வளத்தினை
காலேறி முழங்கால் மூடாக் கந்தையில் வாடுவோரும்
சேலேறிப்பாயும் சேலியமே டதனில் காண்பீர் (பாட்டோவியம் ப.
23)
என்னும் கவிதையின்வழி வெளிப்படுத்தியுள்ளார். உழவர்களோடு ஒன்றி வாழ்ந்த கவிஞரின் இக்கவிதையின்வழி தாம் பிறந்த நிலத்தில் வாழும்
மக்களின் வறுமையினையும் நில வளத்தையும் அழகாகச்
சுட்டிக்காட்டியுள்ளார்..
கம்பரைக்
காணும் அழகு
கவிதைக்குக் கொம்பனாகிய கம்பனைப்
படிக்காமல் எவரும் தன்னைக் கவிஞன் எனக் கூறிக்கொள்வதில் உண்மை இருக்கமுடியாது.
கம்பன் காவியத்தில் மூழ்கிய கவிஞர் இராமனைக் காட்டுக்கு அனுப்பும்
கைகேயின் கொடுஞ்செயலைக் கண்டு இரவும் ஒளிந்து கொண்ட
காட்சியினைக் காண்கிறார்
வாணிலா நகை மாதராள் செயல் ; கண்டு மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் ; நளிர்
கங்குலாகிய நங்கையே
என்னும் பாடலில் உள்ள நயத்தைக்
கண்டு அந்த விடியலின் அவல நிலையினைச் சுட்டிக்காட்டும் கம்பனின் கவிநயத்தை எடுத்துரைக்கிறார்
கவிஞர். பலருக்கும் உயிர் போன்று விளங்கும் இராமனை காட்டுக்கு
அனுப்பும் அழகிய புன்னகையை உடைய கைகேயின் நகையினை வாணிலா எனக் குறிப்பிட்டுள்ளார் கம்பர்.
பலரை வருத்துவதனால் கைகேயின் நகையினை வாள் நிலா நகை எனக் கூறுகிறார்
கவிஞர். ”மன்னன் உயிருக்கு முடிவு தேடிய கூரிய வாள் போன்ற கொடிய
நகையை (தன்மையை) உடைய கைகேயி என்பது மிகமிகப்
பொருந்தும்”. (முழுநிலாமுற்றம் ப.58) எனக்
கூறியுள்ள கவிஞரின் கவி நுட்பத்தினை இங்கு காணமுடிகிறது.
சிறுகதை ஆசிரியராக
படைப்பாளி தன்னுடைய உயர்ந்த கருத்துக்களை மக்களுக்கு எவ்வாறேனும் கொண்டு செல்ல வேண்டும் என்னும்
விழைவுடன் செயல்படுவான். படைப்பாளிகளுள் சிலர் ஒரே வடிவத்தையே
பின்பற்றுவர். ஆனால் கவிஞர் கவிதைகளின் வழிமட்டுமின்றி சிறுகதைகளின்
வழியும் நற்சிந்தனைகளை விதைக்கிறார். ஏழைகளை நல்லவர்களாகவும்
செல்வந்தர்களை தீயவர்களாகவும் காட்டுவதே படைப்புகளின் தன்மையாகிவிட்டது.
பாலியல் கொடுமைகள் பெருகி விட்ட
இன்றைய சூழலில் எவரைப் பார்த்தாலும் அஞ்ச வேண்டிய சூழல்பெருகி விட்டது. எனினும் நல்லோர்களும் இவ்வுலகத்தில் வாழ்கின்றனர் என்பதனை ‘எதிர்பாராதது’ என்னும் சிறுகதையின் வழி எடுத்துக்காட்டுகிறார். பண்ணையார் குப்பத்து வெள்ளச்சி சீலையைப்
பிடித்து இழுத்ததை தன் பட்டாளத்து அண்ணனிடம் கூறுகிறாள். பட்டாளத்து அண்ணனின் சீற்றத்தைக் கண்ட பண்ணையாரின் மகன் தனது மனநிலை சரியில்லாத
தந்தையாரின் நிலையைக் கூறுகிறான். பிறகு யாரும் எதிர்பாரா வகையில்
அவளைத் தானே திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறான். ”ஊர்மக்கள்
எல்லோரும் அப்படியே சிலையானார்கள். பட்டாளத்தானின் துப்பாக்கி
கை தளர்ந்து கீழே விழுந்தது! வெள்ளச்சிக்கு மின்சாரம் தாக்கியது
போல் இருந்தது. வெட்கத்தால் இன்னும் வெளுத்துக் காணப்பட்டாள்”.(பிறந்த நாள் ப.16). இக்கதையின் வழி மனித நேயத்தின் பெருமையினை எடுத்துக்காட்டுகிறார்
கவிஞர்.
பொருள் வாழ்க்கைக்கு அவசியம்
என்றாலும் உறவுகள் அதை விட அவசியம். தாய் தந்தையை மறந்து பொருள்
ஈட்டுவதால் என்ன பயன் இருக்க முடியும்? என்பதனை ’பிழைப்பைத் தேடி’ என்னும் சிறுகதையின் வழி விளக்குகிறார்.
தாயைக் காப்பாற்றுவதற்காக பள்ளிக்குப் போகாமல் வேலைக்குச் செல்கிறான்
அங்கப்பன். இதனை அறியாது அவருடைய ஆசிரியர் மாதவன் அடித்து விடுகிறார்.
படித்த ஆசிரியர் கல்விக்கு முதலிடம் தருகிறார். அங்கப்பனை நன்கு அறிந்த பாட்டி உறவுக்கே முதலிடம் கொடுக்கிறார். “அது சரி பாட்டி ! இப்படி அவன் ஸ்கூலுக்கு வராம மட்டம்
போட்டா எப்படி கிளாஸு மார்றது ? என்று சற்று கண்டிப்புடன் சொன்ன
மாதவனைப் பார்த்துக் கிழவி இலேசாக சிரித்துவிட்டு ’மொதல்ல அப்பன்
ஆத்தாளுக்கு ஆதரவா இருந்தான்னா அது போதும். வவுத்துப் பொழைப்பப்
பார்த்தாலே போதும். அதுக்கப்புறம் அந்த தெண்டச் சோத்துப் பள்ளிக்
கோடத்த பாத்துக்கலாம்’ என்று சொன்னாளே பார்க்கனும் அதற்கு மேல்
அங்கே நிற்க முடியாமல் குனிந்த தலையுடன் நடக்க ஆரம்பித்தான் மாதவன்” (தேவிதாசன் கதைகள் ப. 23) என்னும் இக்கதை முடிவின் வழி
உறவுகளை மதித்துவாழ வேண்டியதன் அவசியத்தினை உணர்த்துகிறார் கவிஞர்.
உழைப்பால் பெறும் செல்வமே நிலையானது.
வறுமையிலும் பிறர் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது என்பதனை ‘நல்ல முடிவு’ என்னும் கதையின் வழி எடுத்துக்காட்டுகிறார்.
“உன் கால்ல விழறேன் மச்சான் ! நான் உயிரோட இருக்கணும்
இன்னு நீ நினைச்சா, அந்தப் புதையல் இங்கே இருக்கக் கூடாது.
உன்னால் முடியலேனா நானே எடுத்துவறேன். இதுதான்
என் முடிவு ! என்று கூறிக்கொண்டே வள்ளி புதையல் மூட்டையைத் தோண்டி
எடுத்துக்கொண்டு அவ்வூர்க் காவல்நிலையம் நோக்கி நடந்தாள்; மரமேறியும்
முணுமுணுத்துக் கொண்டே வள்ளியைத் தொடர்ந்தான்” (பிறந்தநாள் ப.61) என்னும் இம் முடிவின் வழி சீரான வாழ்வுக்கு
அறநெறியில் வாழ்வதே நன்று என வழிகாட்டியுள்ளதனைக் காணமுடிகிறது. வீட்டில் தொடங்கும்
பேராசையே நாட்டில் ஊழலாக வடிவெடுத்து நாட்டின் முன்னேற்றத்திற்கே முட்டுக்கட்டையாக
நிற்பதனை இக்கதையின் வழி உணர்த்தியுள்ளார் கவிஞர்.
ஒரு சிறுகதையானது பந்தயக் குதிரையின்
ஒட்டத்தைப் போல் தொய்வின்றி எதிர்பாராத திருப்பத்தைக் கொண்டு சுவைஞர்களின் ஆர்வத்தை
கூட்டுவதாக அமைதல் வேண்டும். இக் கூற்றுக்கேற்றவாறு சிறுகதைகளைப்
படைத்து மக்களை நல்வழிப்படுத்தும் சிறுகதையாசிரியராகவும் கவிஞர்
திகழ்கிறார் எனத் தெளியலாம்.
தமிழ்ப்
பற்று
மொழி வளமுடைய தமிழனே மொழிப்
பற்று இல்லாமல் பிற மொழி மோகத்தில் தன்னை இழந்து வருகிறான். அதன்
விளைவாக இன்றைய மழலைகளின் பெயர்களில் தமிழைக் காணமுடியவில்லை. இந்நிலையினை மாற்றி மொழி உணர்வை ஊட்டுவதில் கவிஞர்களுக்குப்
பெரும்பங்குண்டு. கவிஞரும் மொழி உணர்வை ஊட்டுவதில்
முன்னிற்கிறார். தமிழ்
இலக்கணம் என்றாலே வேப்பங்காயினையும் விளக்கெண்ணையையும் எடுத்துக்காட்டும் போக்கு மலிந்துவிட்டது.
உவமைக்கே எனினும் அவையும் நன்மையே செய்வதனை எண்ணி ஒருவாறு அமைதி கொள்ளலாம்.
எனினும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே இனிக்கும் இலக்கணத்தின் பெருமையினை
அறியாதிருப்பதனை எண்ணி வருந்துகிறார் கவிஞர். “வர வர இளைஞர்களின்
போக்கு திக்குத்தெரியாத மரக்கலம் போல் எங்கோ சென்று கொண்டிருக்கிறது” (இலக்கணம் எதற்கு ப. 5) என இன்றைய இளைஞர்களின் நிலையை எண்ணி வருந்துகிறார். எனவே
அவர்களுக்கு வழி காட்டும் வகையில் ”இலக்கணம் எதற்கு
?” என்னும் நூலைப் படைத்தார். அந்நூல் புனையப்பட்ட
அழகினை “நம் முன்னோர்களின் பட்டறிவில் விளைந்த நன்முத்துக்களைத்
தேடிக் கண்டறிந்து கண்ணில் படுமாறு உணர்த்த விழைந்தேன்” (இலக்கணம்
எதற்கு ப. 5) என்னும்
கூற்றின் வழி தெளிவுபடுத்துகிறார் கவிஞர்.
உலக மயமாக்கம் என்னும் நிலை
உலகெங்கும் பரவிவிட்ட பிறகு எதற்குத் தமிழ் தமிழ் எனக் கூவிக் கொண்டிருக்கிறீர்கள்
என இன்றைய இளைஞர்கள் தம் நிலை உணராமலே பேசி வருகின்றனர். தமிழரைத்
தவிர வேறு எவரும் தாய்மொழியை விட்டுக்கொடுப்பதில்லை. அவர்கள்
மொழி எத்தகைய சிறப்பும் இல்லாவிடினும் அவர்கள் மொழியைக் காக்க விழைகின்றனர்.
தங்கள் மொழிக் கலப்பில்லாமல் பேசும் சீனர்கள். ஃப்ரெஞ்சு மக்கள். ஆங்கிலேயர்கள் எனப் பலரும் முன்னேறிக்
கொண்டே இருக்கின்றனர். ஆனால் தமிழர்கள் தனித்தமிழில் பேசுவதை
மட்டும் குறுகிய நோக்கம் எனக் குறை கூறுகின்றனர். அத்தகையோரின்
அறியாமையைப் போக்கும் வகையில் “அப்படிப் பார்த்தால் நமக்காக உண்பதும்
உடுப்பதும் கூடக் குறுகிய நோக்கம்தான். அவரவர் தாய்மொழி மேல்
பற்று வைப்பது குறுகிய நோக்கமாகாது. அவரவர் தாய்மொழியை அவரவர்
போற்றி காப்பது கடமை” (இலக்கணம் எதற்கு ப.11) எனக் கூறித் தாய்மொழிப் பற்றை ஊட்டுகிறார்
கவிஞர்.
தமிழன் மொழி உணர்வின்றி வாழும்
நிலையைக் கண்டு வருந்துகிறார் கவிஞர்.
விளம்பரத்திலும் செந்தமிழில்லை நீதி அரசு நெறிமுறை ஆங்கிலத்தில்
வேதியர் சூழ் ஆலயத்தில் வடமொழி
குடிதழுவிக் கோலாச்சும் கொள்கையை மாண்பைப்
படிப்படியாய் வாழ்வியற் பண்புகளைக் கூறி
வடித்திட்டார் முப்பாலை வள்ளுவனார் இன்னும்
இடித்த புளியாய் இருக்கின்றோம் இன்று வரை (பாட்டோவியம் ப. 138)
எனத் தமிழர்களின் பொறுப்பற்ற நிலையினை
எடுத்துக்காட்டியுள்ளார்.
தமிழ்ப் பணி
புத்திலக்கியங்களை வரவேற்கும் கவிஞர் பழம்பெரும் இலக்கியங்களைப் பெரிதும் போற்றி மகிழ்கிறார். “குழந்தை உணவுகள் அங்காடிகளில் மலிந்து விட்ட போதிலும் தாய்ப்பாலைப் போல் வேறு
சிறந்த உனவைக் குழந்தைக்குத் தரவியலாது. அவ்வாறே புதினங்கள் குன்று
போல் குவிந்த போதிலும் அவை மிகப் பழைய இலக்கியங்களுக்கு ஈடாகாது (முழுநிலா முற்றம் ப. III ) என்கிறார் கவிஞர்.
மாணவர் காலம் முதல் பணி நிறைவுக்குப் பின்னரும் இலக்கியப் பணியினை இடையறாது
செய்தவர் கவிஞர். “வ.உ.சி. மேனிலைப் பள்ளியில் தமிழ் விரிவுரையாளராக இருந்த
தேவிதாசனார் 1996 நவம்பர்த் திங்களில் அரசுப்பணியில் இருந்து
ஓய்வு பெற்றார். இருந்தாலும் அவர்தம் தமிழ்ப்பணி ஓய்வு பெறவில்லை.
பணி ஓய்வுக்குப் பின்னர் தாம் தேவிதாசனாரின் தமிழ் வளர்ச்சிப் பணிகள்
இன்னும் அதிகமாயின” (தி.தேவிதாசனார் நினைவு
மலர் ப.14) என்னும் கூற்றின் வழி கவிஞர் தமிழ்ப்பணியில் கொண்டிருந்த
ஈடுபாட்டை அறியலாம். தமிழ் இலக்கியப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட
அனைவர்க்கும் துணைநின்றார் கவிஞர்.
முட்டாளைத் திருத்தவந்த முதியவர் பெரியார் போலக்
கட்டாயத் தேவை ஓர்ந்து கயமையைக் கடிந்து கேட்கத்
தட்டாமல் திங்கள் தோறும் தவழ்ந்திடு ஏடே வாழ்க
(பாட்டோவியம் ப.
34)
என்னும் கவிதையின் வழி இலக்கியப்
பணியினைச் செம்மையுறச் செய்த ’ஏப்ரல்’
இதழை வாழ்த்துகிறார் கவிஞர். கவிஞர்களுக்கே உரிய மிடுக்குடன்
பெரியாரின் பெருமையினை எடுத்துக்காட்டியுள்ள திறத்தையும் இங்கு எண்ணி மகிழலாம்.
இல்லற
மாண்பு
வினையே ஆடவர்க்கு உயிரெனக் கூறிய
தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் ’முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை’
எனவும் கூறியுள்ளது. மகளிரின் உடல்நலம் கருதியும்
பாதுகாப்பு கருதியும் இவ்வாறு கூறப்பட்டதெனக் கூறுவோர் உண்டு. ஆனால் குடும்பத்தின் இலக்கணம் கூட்டுக் குடும்பமாக வாழ்வதே என வரையறுக்கிறார்.
“மனைவி வீட்டிலிருக்க கணவன் கடல் கடந்து வெளிநாடு சென்றால் மனைவியை நாடி
மீண்டும் தாய் நாட்டிற்குத் திரும்பி வருவான். மனைவியும் உடன்
இருப்பாள் எனில் தாய் நாட்டிற்குத் திரும்பும் எண்ணம் ஏற்படாமலே போவதற்குக் கூட வாய்ப்புண்டு!
எனவே தான் மகடூவோடு முந்நீர் வாழ்க்கையைத் தடை செய்தனர் போலும் தமிழர்கள்
?” (முழுநிலாமுற்றம் ப.23) எனக் கூறியுள்ளதன் வழி
தாய்நாட்டுப் பற்றுடனும் வாழ வேண்டும் எனத் தமிழர்கள் எண்ணிய திறத்தினையும் புலப்படுத்துகிறார் கவிஞர்.
அன்பின்
பெருமை
உலகம் சிறக்க வழி யாது
? என்னும் வினாவிற்கு அன்பினை விடையாகத் தருகிறார் கவிஞர். தமது குடும்பத்தாரிடம் மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்திடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்
கவிஞர். அப்பண்பினாலேயே அவரால் கவிஞராகச் சிறக்க முடிந்தது.
அவர் அன்பிற்குரிய அடையாளம் எது எனக் கேட்கும் போது திருவள்ளுவர்
வழிநின்று ஆர்வலர் கண்ணீர் என்கிறார் கவிஞர். ”கண்ணுக்குக் கண் என காளத்தியப்பருக்கு கண் கொடுத்த கண்ணப்பரை எடுத்துக் காட்டுகிறார்”
(முழுநிலாமுற்றம் ப.11).
கவிஞர். அன்பு என்பையும் உருக்கும் வல்லமை கொண்டது
என்பதனை வள்ளலார் வழியும் மகாகவி பாரதி வழியும் எடுத்துக்காட்டியுள்ளதன் வழி கவிஞரின்
அன்புள்ளத்தினை அறியலாம்.
வாழும்
முறை
வாழ்க்கை மிகவும் குறுகியது
என்பதனை உணர்ந்து வாழ்ந்தால் பிறர்க்குக் கேடு செய்யும் எண்ணம் தோன்றவே தோன்றாது.
தன்னலம் தோன்றாது வாழ வேண்டுமெனில் நிலையாமையினை உணர்ந்து வாழ வேண்டுமென்பதனை
பூட்டில் உள்ளவரை சாவி – பக்குவச்
சூட்டில் உள்ளவரைச் சோறு
கூட்டில் உள்ளவரை மூச்சு – கால்
நீட்டிப் படுத்ததுமே போச்சு (பாட்டோவியம் ப. 113)
என்னும் கவிதை வரிகளின் வழி எளிமையாகச்
சுட்டிக்காட்டியுள்ளார் கவிஞர். வாழும் வரைதான்
பிறர்க்குத் துணை செய்வதே மனித மாண்பு என்பதனை அழகாக எடுத்துக்காட்டியுள்ள
அருமையினை இக்கவிதையில் காணமுடிகிறது.
உண்மையின் வலிமை
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினில் ஒளியுண்டு என்பது மகாகவி வாக்கு. அவ்வாறு கவிஞரின்
பாடல்கள் ஒளியுடையதாக அமைவதற்கு அவருடைய உண்மை வாழ்வே காரணமாயிற்று. உண்மைக்கு இலக்கணமாக வாழ்ந்த கவிஞரை இன்று நாம் எண்ணிப் பார்ப்பதற்கான காரணத்தைத்
திருக்குறளின் வழி அவரே எடுத்துக்காட்டுகிறார்.
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்தால் எல்லாம் உளன்:
என்னும் திருக்குறளின் வழியில்
வாழ்ந்தால் எல்லோராலும் நினைக்கப்படுவர் என்னும் உண்மையினை எடுத்துக்காட்டியுள்ளார். ”ஆயிரம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்திருப்பதைவிட உண்மை ஒன்றுக்காகவே ஒரே ஒரு நொடி வாழ்ந்தாலே போதும்” (முழுநிலாமுற்றம் ப.23) எனக் கவிஞர் கூறியுள்ளதன் வழி
உண்மைக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தினை அறியலாம். உயிரை விட
உண்மை பெரிதென வாழ்ந்த கவிஞர் கவிஞர்களுக்கே உரிய மிடுக்குடன்
வாழ்ந்த மகாகவி, புரட்சிக்கவி, கவிஞரேறுவின்
வழித் தோன்றல் எனத் தெளியலாம்.
எத்தனை இடர்வந்துற்றே ஏளனம் எய்தினாலும்
உத்தமனாய் வாழ்ந்த்தல்லால் உலுத்தனாய் வாழ்ந்ததில்லை (பாட்டோவியம் ப. 17)
என்னும் கவிஞரின் கூற்று கவிஞர்களுக்கே
உரிய பெருமிதத்தினை எடுத்துரைப்பதனை இங்கு எண்ணி மகிழலாம்.
அமைப்புகளில்
கவிஞர்
இலக்கிய அமைப்புகளில் மட்டுமின்றி தமிழ் மொழிக்கு
தமிழ் இனத்துக்குப் போராடும் அனைத்து அமைப்புகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் கவிஞர்.
விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம்,
எல்லைப் போராட்டம், சமுதாய சீர்திருத்தம் என நாடு,
சமூகம் இனம், மொழி என அனைத்து நிலைகளிலும் போராடியவர்.
’நாம் தமிழர்’ இயக்கப்பணி, ’ஆசிரியர் சங்கப் பணி’ எனப் பல பொறுப்புகளை ஏற்று தமிழ்
வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். ’ஆசிரியர் நெஞ்சம்’ இதழினை நிறுவி தமிழருமையினை எடுத்துரைத்தவர்.
புதுவைத் தமிழ்ச்சங்கச் செயலர், இலக்கியக் கூடல்
அமைப்பாளர், புதுவைக் குறளாயச் செயலர் என்னும் பல தமிழமைப்புகளில்
தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தமிழறிஞர்களை பெருமைபடுத்தியதோடு தமிழ் ஆர்வலர்களையும் படைப்பாளிகளையும்
உருவாக்கியவர்.
இமிழ்கடல் சூழ் புதுவையிலே இருந்து தம்மை
இன்றமிழின் வளர்ச்சிக்கே தொண்ட ராக்கித்
தமிழ்ச்சங்கம் தோற்றுவித்துத் தலைமையேற் றார்
தனித் தமிழுக்குயிராகத் திகழ்ந்தார் வாழ்க
(பாட்டோவியம் ப.
96)
என
சிவ. கண்ணப்பர் கவிஞரைப் பாராட்டியுள்ளதனை
இங்கு எண்ணி மகிழலாம். தமிழருமை உணர்ந்தவர்களுக்கு வழிகாட்டியாகத்
திகழ்ந்த கவிஞர் நூலால் ஆனஆடை மானத்தைக் காப்பதுபோல் தம் நூல்களால் தமிழர் மானம் காக்க
விழைந்தவர் என்பதனை அவருடைய படைப்புகளின் வழி காணமுடிகிறது.
களப்பணியில்
கவிஞர்
சமுதாயத்தைப் புரட்டிப்போடும்
படைப்புகளைப் படைக்கும் படைப்பாளியே மக்களால் நினைக்கப்படுவான். விடுதலை உணர்வும் தமிழுணர்வும் இளமைப்
பருவம் முதலே கவிஞரிடம் குடிகொண்டிருந்தது. எனவே விடுதலைப் போராட்ட
காலத்தில் விடுதலைப் போராட்ட செய்தி தொடர்பாளராகப் பணியாற்றினார் கவிஞர். நாட்டுப்பற்று கொண்ட கவிஞர் ஃப்ரெஞ்சு குடியுரிமையினை புறக்கணித்தார்.
தமிழ் அமைப்புகளை உருவாக்கியதோடு
பல அமைப்புகள் அமைப்பதற்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். “1979-80 ஆம் ஆண்டுகளில் இலக்கியக் கூடலை ஒரு தோளிலும் தமிழ்ச்சங்கத்தை இன்னொரு தோளிலும்
சுமந்து இடையறாது பணி செய்தார் தேவிதாசன்” (தி.தேவிதாசனார் நினைவு மலர் ப.8) என்னும் கூற்று கவிஞரின்
தலைமைப் பண்பினை எடுத்துரைக்கிறது. 1973 இல் வெளிவந்த
‘ஆசிரியர் நெஞ்சம்’ என்னும் இதழில் ‘இதயம் கவர்ந்த ஏந்தல்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியதோடு
அவ் இதழ் சிறப்புற பெரிதும் துணை நின்றார் கவிஞர்.
எல்லைப்
போராட்டத்தில்
தமிழுக்கான மொழிக் களத்தில்
மட்டுமின்றி தமிழர்களுக்கான களத்தையும் காக்கப் போராடியவர் கவிஞர்.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவர் கவிஞர் என்பதனை “பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், “தேவிகுளம் பீர்மேடு”
தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும்! என்று கூறி,
அறப்போர் நடந்த நேரம்; புதுவையில் அந்தப் போராட்டத்தை
முன்னின்று தலைமையேற்று நடத்தியவர் நம் புரட்சிக்கவிஞர் அவர்களே! கவிஞர் தலைமையில் நானும் உப்பளத்தைச் சேர்ந்த இப்பொழுது, பாரீசில் இருக்கும் “தமிழரங்கன்” என்பவரும் அக்குழுவில் முக்கிய இடம்பெற்றுத் தொண்டாற்றினோம். மாபெரும் ஊர்வலம் நடத்திச் செஞ்சி சாலைத் திடலில் கூட்டம் போட்டோம்,
கடையடைப்பும் நடத்தினோம்” (முழுநிலாமுற்றம் ப.108)
என்னும் கூற்று தெளிவுறுத்துகிறது. கவிஞர் ஏடுகளில்
மட்டுமின்றி போராட்டக்
களத்திலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திறத்தினைக் காணமுடிகிறது.
பொதுவுடைமையாளராக
பொதுவுடைமை கவிஞர்களின் தனியுடைமை
எனக் கூறும் அளவிற்கு கவிதைகளில் மட்டுமே பொதுவுடைமை வாழ்கிறது. ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதும் செல்வந்தர்கள்
செல்வந்தர்களாகவே இருப்பதனையும் கண்ட கவிஞர்
தொழிலாளியின் தேய்மானந்தான் ; தொழிற்சாலையின் வருமானம்
உற்பத்தியில் ஆலை ; முதலாளிகளுக்கே
; ஏகபோக உரிமை
பாட்டாளிகளுக்கும் பங்குண்டு
; நட்டத்தில் (கவிதை எழுத வேண்டுமா. ப.63)
எனப் பாடுகிறார். உடல் உழைப்பினை மதித்து அதற்கேற்றவாறு கூலி கொடுக்கும் நிலை உருவானால் அன்றி
பொதுவுடைமைச் சமுதாயம் மலராது என்கிறார் கவிஞர். சமூகம் வல்லாரை வாழவைக்கிறது.
நல்லோரை வீழவைக்கிறது என்பதனை
செந்நீரை உறிஞ்சும் செல்வம்
கொஞ்சமும் இரக்கம் இன்றிக்கொடுமைகள் இழைப்பார் அந்தோ
பஞ்சத்தில் கிடப்பார் கண்டு பரிதாபப் படவும் மாட்டார்
தஞ்சமாய்ச் சரண் வந்தார்க்கும் தயவுகள் புரியார்
! வல்ல
செஞ்சொலால் சிரிக்கப் பேசிச் செந்நீரை உறுஞ்சி வாழ்வார்
(பாட்டோவியம் ப.
126)
என்னும் கவிதையின் வழி தெளிவுறுத்துகிறார். வறுமையினைத் தமக்கு உடன்பாடாக்கிக்கொண்டு ஏழைகளை உறிஞ்சி வாழும் கயவர்களை இங்கு
படம்பிடித்துக் காட்டியுள்ளார் கவிஞர்.
தமிழர்களின்
அச்சம்
தமிழர்கள் பழம் பெருமைகளைப்
பேசுவதில் கவனம் செலுத்தினரேயன்றி துறைதோறும் தமிழை வளர்ப்பதற்கான வழி வகைகளைச் செய்யவில்லை. ஆங்கிலம் அனைத்து மொழிகளையும் தன்வயப்படுத்திக்
கொண்டு இன்று உலகையே இணைக்கும் மொழியாக வளர்ந்துவிட்டது. மொழி
வளமுடைய தமிழில் கலப்பு ஏற்படின் மொழித்தூய்மை பாழ்படுமோ எனத் தமிழர் அஞ்சினர்.
இவ் அச்சமே தமிழர்களைத் தாழ்த்தியது என்கிறார் கவிஞர். தமிழ் மொழி செம்மொழிக்கான அனைத்துப்பெருமைகளையும் பெற்றிருந்தும் அதற்குரிய
இடத்தைப் பெறாததற்குக் காரணம் தமிழர்களே என்பதனை “தமிழ்ப் புலவர்களுள்
பலர் தங்கள் முன்னோரின் பாடல் வரிகளை நெட்டுருச் செய்து ஒப்பிப்பதிலேயே மகிழ்ந்து காலம்
கடத்துகின்றனர். புதுமையைக் கண்டு மருள்கின்றனர்; வேற்று நாட்டுப் புதுமைகளைக் கேட்கவும்
அஞ்சுகின்றனர். இதனால் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பு”
(முழுநிலாமுற்றம் ப.90) என்னும் திரு.வி.க.வின் கூற்று வழி எடுத்துகாட்டுகிறார்
கவிஞர். தமிழ் நாட்டின் முன்னேற்றம் தமிழ்மொழியின் முன்னேற்றம்
அனைத்தும் தமிழரின் முன்னேற்றத்தைப் பொருத்தே அமைவதனை இங்குச் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர். காலத்திற்கேற்ப தன்னைப்
புதுப்பித்துக் கொண்டு வாழ்ந்தால் தான் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க முடியும்
என அறிவுறுத்துகிறார் கவிஞர்.
புரட்சிப்
பாவலர்
நெல்மணிகள் விளைய வேண்டுமானால்
களைகள் களையப்பட வேண்டும். தீமைகள் தலைவிரித்தாடும்போது புரட்சி
வெடிக்கும். நல்ல சமுதாயம் மலரும். புதிய
உலகம் படைக்க கவிஞர்கள் புரட்சி விதைகளைத் தூவி புதிய சமுதாயத்தை மலரவைப்பார்கள்.
காலந்தோறும் நாட்டில் நிலவும் கொடுமைகளை எதிர்ப்பதில் கவிஞர்களுக்கு
மிகப் பெரிய பங்குண்டு. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் புரட்சிக்கான
நிலையினை கண்ணகியின் வழி எடுத்துக்காட்டியுள்ளார். கண்ணகி கோவலன்
குடும்பப்பிரச்சினையில் மதுரையை ஏன் எரிக்க வேண்டும் என வினா தொடுப்போர் இந்நாளில்
பெருகி வருகின்றனர். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என உணர்த்தியது தமிழினம். மன்னன் சினம் கொள்வானாயின் அது அவனைச் சேர்ந்தாரையும் கொல்லும் என்பது திருவள்ளுவர்
வாக்கு. இதனை இக்கால மக்கள் அறியும் வகையில் ”நச்சுக் கொடிகளை சுட்டெரிக்குங்கால் உடனுறை சந்தன மரமும் காய்ந்து கருகத் தானே
செய்யும்” என்கிறார். இவ்வாறு முன்னோர்
சொல்லைப் பொன்னே போல் போற்றும் பெருந்தகையாகத் திகழ்கிறார் கவிஞர் என்பதனை இக்கூற்று
உறுதி செய்துள்ளதனைக் காணமுடிகிறது.
தமிழ் மொழியின் பெருமையினை அறியாதிருந்தால்
பிற மொழியின் பெருமையினையே கற்க வேண்டி இருக்கும். தன் தாயை மலடி
எனக் கூறும் பிற மொழியாளர் சொல்லை உண்மையென நினைக்கும்போக்கு
பரவி உள்ளதனாலேயே தமிழ் மொழியால் பாடங்களைக் கற்க முடியாது என்னும் எண்ணம் தோன்றிவிட்டது.
அதன் விளைவாகவே தமிழுக்கு எதிராகத் தமிழரே போராடும் நிலை வந்துவிட்ட்து.
இத்தகைய சூழலைக் கண்டு பதைத்த கவிஞர் இனியேனும் அந்நிலை தொடராதிருக்க
மானமுடன் வாழ அறிவுறுத்துகிறார் கவிஞர்.
எழடாஇளந் தமிழாநெடுந் ; துயில்
நீங்கிட எழடா !
தொழடாதமிழ் மொழியைநனி ; முயன்றாலினி
உயர்வாய் !
அழலாயிரு ! தணலாயிரு
! ; அரியேறென நடடா!
அழகானஉன் மொழிவாழ்ந்திட அறிவோடிரு தமிழா ! (மேகங்கள் ப. 51)
என்னும்
இப்பாடலில் புரட்சி விதைகளை இளைஞர்களின் உள்ளத்தில் புதைக்கிறார். அறிவொன்றினால் மட்டுமே இருளை ஒழிக்க முடியும் என்பதனை உணர்த்தி மொழி வாழ பாடுபட
வேண்டியதன் அவசியத்தினை உணர்த்துகிறார் கவிஞர். கவிஞரின் எழில்
நடையினை ’சிறு துண்டான
கரும்பெனவே எழுத்து நடை’ என அரிமதி தென்னகனார் பாராட்டுவது இங்கு
எண்ணத்தக்கது.
மக்களின்
வலிமை
மக்கள் வாழ்வதற்காக மக்களால்
உருவாக்கப்பட்டவையே சட்டங்கள். இதனை உணராது மக்களை ஏமாற்றி வாழ்வோர்
பெருகி வர ஏமாறுவோரும் பெருகி வருகின்றனர். இதனைக் கண்டு மனம் வருந்தும் கவிஞர்களின் உள்ளக் குமுறலே கவிதைகளாகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் முடியாட்சி வீழ்ந்து மக்களாட்சி மலர்வதற்கு மக்களின் போராட்டமே காரணமாகும். மக்களின் நலன் கருதாது மக்களுக்கே
தீங்கு விளைவிக்கும் நிலையினைக் கண்டு வருந்தும் கவிஞர்
பொதுமக்கள் கொதித்தெ ழுந்தால் ; புயல் கூட ஓய்ந்து போகும்
எதுசரி தப்பு என்றே ; எதனையும்
எடுத்துக் காட்டும்
அதிகாரம் மாந்தர்க்(கு)
உண்டு ; அரசியலைப் பற்றிக் கூடக்
கொதிப்புடன் எழுதப் பேச ; துணிச்சலும்
இவர்க்கே உண்டு! (மேகங்கள் ப.37)
எனப் பாடுகிறார். ஒவ்வொருவரும் தனக்கென்ன எனப் போகும் சூழலால் கொள்ளை அடிப்பவர்கள் கொள்ளை அடித்துக்
கொண்டிருக்க ஒரு வேளை உணவின்றி தவிப்போர் வறுமையில் செத்துக்கொண்டிருக்கும் நிலையும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனைக் கண்டு பொங்குகிறார் கவிஞர்.
அன்றிருந்த பொதுமக்கள் ஆற்றின் ஓரம்
அணைகட்டி நீர்தேக்கிச் ’செய்வி’ ளைத்தார்
இன்றிருக்கும் பொதுமக்கள் கிளர்ச்சி என்றால்
இதையுடைத்து அதையுடைத்து கடையை மூடும்
நன்றிகெட்டச் செயலைத்தான் நாளும் செய்தே
மாணவரும் அதைச் செய்யத் தூண்டி வந்தால்
என்றினிமேல் கல்விப்பணி தழைக்கு மிங்கே?
இனியேனும் பொதுமக்கள் திருந்த வேண்டும் (மேகங்கள் ப.39)
என்னும் இப்பாடலின் வழி இன்றைய
மாணாக்கர்களின் நிலையினையும் முறையற்ற போராட்டக்காரர்களின்
மனநிலையினையும் எடுத்துரைக்கிறார் கவிஞர்.
மகாகவியே
வருக
பாட்டுத் திறத்தால் தமிழரின்
திறத்தை உலகுக்கு உணர்த்திய மகாகவி பாரதியாரிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டவர் கவிஞர். எனவே புதுவை அரசின் ‘பாரதி
பட்டயத்தைப்’ பெற்றதைப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.
மகாகவி வாழ்ந்த நாட்டில் வாழும் தமிழன் இன்னும் தனது பெருமைகளை உணராது
வாழும் நிலையைக் கண்டு வருந்துகிறார் கவிஞர். யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி தான் இனிதானது எனக் கூறிய மகாகவியின் சொற்கள் இன்றைய மக்களின் மனதில் மட்டுமன்று
செவியிலும் விழவில்லை. இதனைக் கண்டு வருந்தும் கவிஞர் மகாகவி
மீண்டும் பிறந்து வந்தால்தான் இந்நிலை மாறும் என்பதனை
தமிழ்நாடதில் தமிழோங்கிட ; உணர்வோங்கிட
உயிராம்
அமிழ்தாகிடு மொழியோடையில் ; அடடா ! பிறமொழியை
இனியாவது கலவாதுநம் ; இனம்வாழ்ந்திட
இனிதாய்
இமையாதிருந் தெமையாண்டிட; எழில்பாரதி
வருவான் (மேகங்கள்
ப.84)
என்னும் பாடலிலன் வழி உணர்த்துகிறார். மகாகவியைப் போல் தன்மானத்துடன் வாழ
தமிழினம் தவறிவிட்டதனைக் கண்ட கவிஞர்
பாரதி இன்றியே பாரில் தமிழகம் – நோயில் ; சிக்கித் தவிக்குது இங்கே !
தக்கத் தாம்தரிகிட ! தாம்தரிகிட!
; தாம்தரிகிட ! தாம்தரிகிட ! தித்தோம்! (மேகங்கள் ப.85)
எனப் பாடுகிறார். தமிழினம் வாழ வேண்டுமானால் தமிழ்மொழி வாழவேண்டும் தமிழ்மொழி வாழ வேண்டுமானால்
தமிழுணர்வுடன் வாழ வேண்டும் என உணர்த்தும் கவிஞரின் எண்ணத்தினை இப்பாடல் ஆழமாக உணர்த்தியுள்ளது.
பாவேந்தர்
வழியில்
”புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்
பாசறையில் பயின்ற மாணவர்களின் அடியேனும் ஒருவன். பாரதிதாசனாரை
நான் வெறும் பள்ளி ஆசிரியராகப் பார்க்கவில்லை. அவரை ஒப்புயர்வற்ற
பாவேந்தராகவே கண்டு மதித்து வந்தேன். அவரோடு நெருங்கிப் பழகி
வந்திருக்கிறேன். நேரில் கண்டறியாத பாரதியிடத்திலே எனக்கு மிகுந்த
பற்றுண்டாவதற்குப் பாரதிதாசனாரே பெரிதும் காரணமானார்” (முழுநிலாமுற்றம்
ப.107) என்னும் கூற்றின் வழி பாவேந்தரிடம் கொண்டிருந்த ஈடுபாட்டினைப்
புலப்படுத்துகிறார் கவிஞர். கல்வி ஒன்று தான் மனிதனின் தரத்தை
உயர்த்துகிறது. ஆணை விடப் பெண்கள் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம்
கொடுத்திட வேண்டும் என எண்ணிய பாவேந்தரின் கூற்றினை வழிமொழிகிறார் கவிஞர்.
கல்வியை உடைய பெண்கள் ; திருந்திய
கழனி ! அங்கே
நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்?
எனக் கல்வி கற்ற பெண்களின் பெருமையினை குடும்ப விளக்கில் எடுத்துரைக்கும் பாவேந்தர்
இருண்ட வீட்டில் சோம்பலுடன் இருக்கும் பெண்ணை
சிறுவிரல் தன்னைத் தின்ற திருட்டெலி
பெருவிரல் தன்னைப் பிடுங்கும் போதுதான் ; தலைவி விழித்தாள்
என இருண்ட வீட்டில் குறிப்பிடுவதனையும் (முழுநிலாமுற்றம் பக்.36-37)- எடுத்துரைக்கிறார் கவிஞர்.
கல்வி அறிவுடைய பெண் எந்நிலையிலும் விழிப்புடன் இருப்பதனையும் கல்வி
அறிவு இல்லா பெண் மந்த நிலையிலும் இருப்பதனை பாவேந்தரின் வரிகளின் வழி எடுத்துரைத்து
பெண்களுக்கு கல்வியின் அவசியத்தினை எடுத்துக்காட்டுகிறார்.
கவிஞரேறு
வாணிதாசன்
கவிஞரின் தமையனார் கவிஞரேறு
வாணிதாசன். வாணிதாசனாரிடம் கொண்ட மதிப்பு உறவுமுறையால் மட்டும் விளைந்ததன்று
; தமிழுணர்வாலேயே செழித்திருந்தது. இலக்கிய உலகிற்கு அண்ணன் காட்டிய வழியில் சென்று
அண்ணணின் பாராட்டுதலைப் பெற்றவர் கவிஞர். அவ் அன்பின் அடையாளமாக
‘வாணிதாசன் கதை’ என்னும் நூலினைப் படைத்து அந்நூலை
அவருக்கே காணிக்கையாக்கியுள்ளார் கவிஞர். கவிஞரேறின் முதல் பாடலான
பாரதி நாள் இன்றடா ;
பாட்டிசைத்து ஆடடா
என்னும்
பாடலை அரங்கசாமி என்னும் பெயரின் சுருக்கவடிவான ரமி என்னும் பெயரில் வெளியிட்டதனைச்
சுட்டிக்காட்டியுள்ளார். தமிழன் இதழின் ஆசிரியர் வாணிதாசன்
என்னும் பெயரில் எழுதக் கூற அதனையே பெயராக்கிக் கொண்டதனை பாரதிக்கு தாசன் பாரதிதாசன்
என அமைந்தது போல் கலைவாணியின் தாசன் எனப் பெயர் பொருத்தமானதனைச்( கவிஞர் வாணிதாசன் கதை ப.82) சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
வாணிதாசனாரின் கவித் திறத்தால் வளர்ந்த கவிஞரின்
நிலையினை
அனல் பறக்கும் பேச்சாற்றல் கவிபுனையும் ஆற்றல்
அவர் தந்தார் ; அவரென்றன் ஒளிவிளக்காம்
! . . . `(பாட்டோவியம் ப.
56)
என்னும் கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன. மகாகவி பாரதியாரைப் போலவே காக்கையையும் குருவியையும் அழைக்கும் வாணிதாசனாரின்
அருமைப் பண்பினை
காக்கா காக்கா ஓடி வா ; கத்தி
கத்தி நடந்து வா
குருவி குருவி ஓடி வா ; நெல்லைக்
கொத்தித் தின்ன வா
.(கவிஞர் வாணிதாசன் கதை ப.109)
என்னும்
கவிதை வரிகளின் வழி வெளிப்படுத்துகிறார் கவிஞர். கொடிமுல்லைப் பாடிய வாணிதாசனார் குழந்தைகளுக்காகவும்
பாடிய திறத்தினை இப்பாடலின் வழி சுட்டிக்காட்டுகிறார்
கவிஞர்
நேருவின்
நூற் பயணம்
சங்க காலத்தில் அரசனை நல்வழிப்படுத்தும்
வகையில் அறிவுரைக் கூறி பாடுவதுண்டு. ஆனால் புலவனிடம் கொண்டிருந்த மதிப்பினை
கவிஞனுக்குக் கொடுக்கக் காலம் தவறி விட்டது. எனினும் கவிஞர்கள்
தங்கள் கடமையிலிருந்து தவறவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் கவிஞர்.
நூலின் பெருமையினை நன்குணர்த்தும் ஆசிரியப் பணியில் தம்மை இணைத்துக்
கொண்ட கவிஞர் நம்நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு புத்தகங்கள் மீது கொண்டிருந்த
ஈடுபாட்டினை “ அவர் சிறு வயதிலிருந்தே புத்தகப் பைத்தியம்
! ஏராளமான புத்தகங்களை, இதழ்களை வாங்கிப் படிப்பதிலேயே
கவனம் செலுத்தி வந்தார். 1904-ஆம் ஆண்டு அவர் கோடை விடுமுறைக்கு
நைநிடாலுக்கு அனுப்பப்பட்ட போது படிப்பதற்குப் புத்தங்கள் வேண்டும் என்று கேட்டுத்
தம் தாய்க்குக் கடிதம் எழுதினார்” (முழுநிலாமுற்றம் ப.85)
என்னும் கூற்றின் வழி புலப்படுத்துகிறார். இதன்வழி
கற்கும் ஆர்வத்தை ஊட்ட எண்ணிய கவிஞரின் பொறுப்புணர்வினைக் காணலாம்.
தமிழ்த்
தென்றல் திரு.வி.க.
”அவர் தூயவர்; அறநெறி சிறிதும் பிறழா நோன்புடைப் பண்பாளர்; அருங்குணச்
செம்மல்; எளிமையின் தோற்றமான தமிழ்த் தென்றல் பொய்யறியாப் புனிதர்”
(முழுநிலாமுற்றம் ப.88) எனத் திரு.வி.க.வைப் போற்றுகிறார் கவிஞர்.
தமிழுக்காக மட்டுமின்றி தமிழர் நலனுக்காகவும் பாடுபட்ட திரு.வி.க. வின் பெருமைகளை அவருடைய எழுத்துக்களின்
வழி எடுத்துரைக்கிறார் கவிஞர். சமுதாயத்தில் ஏழைகள் மட்டுமே ஏமாந்து
போகும் சூழலைக் கண்டு பொங்காத கவிஞனில்லை. அவ்வாறே கவிஞரும் பாட்டில்
மட்டுமின்றி உரையிலும் ஏழைகளுக்கு நேரும் கொடுமையினை திரு.வி.க.
வின் கூற்றின் வழி எடுத்துரைக்கிறார் கவிஞர். “சாதிகளுக்குள் பிளவும் பூசலும் கொதித்தெழுந்து கொழுந்து விட்டு எரிகின்றன.
இவ்வெறியைப் பற்றிய கவலை இயக்கங்களைத் தோற்றுவித்தவர்களுக்குச் சிறிதும்
கிடையாது. அவர்கள் சுகமாக மாடியில் உறங்கிக் களிப்புகளில் விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமா..? சமயம்
நேரும் போதெல்லாம் அவர்கள் எரியும் தீயில் நெய்யைச் சொரிகிறார்கள். வீணே சண்டையிட்டுக் கொண்டு சாகிறவர்கள் ஏழைமக்களே” (முழுநிலாமுற்றம்
ப.91) என்னும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் கூற்றினை எடுத்துக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு
திரு.வி.க. வின் பெருமைகளையும் எடுத்துரைக்கிறார் கவிஞர்.
முனைவர்
மு.வ.
”மு.வ.வின் சிறுகதை, தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு அல்லது
தூய இனிய எளிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. இன்று, திங்கள் ஏடுகளில் கதைப்போக்கில் காணப்படும் அவலநிலைகளை
மு.வ.வின் சிறுகதைகளிலோ நாவல்களிலோ கடுகளவேனும்
காணமுடியாது. வரிக்கு வரி பிறமொழிச் சொற்களை வலிந்துகொண்டு வந்துபெய்து
எழுதுவதும் கீழ்த்தரமான கற்பனைகளுக்கு முதலிடம் தருவதும் இன்றைய நடைமுறைகள் ஆகிவிட்டன.
மு.வ.வின் படைப்புகளில் இப்படிப்பட்ட
அவலநிலைகளைக் காணமுடியாது” (முழுநிலாமுற்றம் ப.99) என தமிழில் முதல்முனைவர் பட்டம் பெற்ற
மு.வரதராசனாரைக் குறிப்பிடுகிறார் கவிஞர். இக்கூற்றின் வழி ஓர் எழுத்தாளனுக்குரிய தகுதியினை மு.வ.வின் வழி எடுத்துக்காட்டி இன்றைய படைப்பாளிகளுக்கு
வழிகாட்டியுள்ளார் கவிஞர்.
கர்ம
வீரர் காமராசர்
கல்விக்கண் திறந்த காமராசரைக்
குறித்துப் பேசாத ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியரான கவிஞர் காமராசர்
குறித்துக் கவிதைகள் பல படைத்துள்ளார். படிக்காத மேதையான காமராசர்
படித்த மேதைகளை உருவாக்க கல்விச் சாலைகளை உருவாக்கினார். பசியை
நீக்கினால் தான் கல்வி கற்க இயலும் என எண்ணிய சூழலில் மதிய உணவுத்திட்ட்த்தைனைக் கொண்டு
வந்தார். தமிழனின் அறம் பசி நீக்கல், அறிவூட்டல்
என்னும் நிலையினை உலக்குக்கு உணர்த்தும் வகையில் செயல்பட்ட காமராசரின்
நிலையினை
உண்மைத் தமிழர் என்றார் ; உயர்தந்தைப்
பெரியார்
விண்ணுக்கே விருந்தானாலும் ; மண்ணுக்குள் நிலைத்து விட்டார்
(மேகங்கள் ப.54)
என்னும்
கவிதையின் வழி புலப்படுத்துகிறார்.
ஆனந்தரங்கரின்
அருஞ்செயல்
கவிஞன் என்பவன் காலத்தைப் படம்பிடித்துக்காட்டும்
கண்ணாடி போன்றவன். எனவே அவனுடைய இலக்கியம் வரலாற்றை எடுத்துரைக்கும்
ஆவணமாவதும் உண்டு. அவ்வாறே ஆனந்தரங்கம் குறித்த செய்திகளையும்
பதிவு செய்துள்ளார் கவிஞர். தமிழர்களின் இலக்கியப் பழமையினையே
அறியமுடியாமல் சான்றோர்களின் ஒட்டுமொத்தக் கருத்தினைக் கொண்டே தமிழ் இலக்கியங்களின்
காலம் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனை எண்ணி வருந்திய கவிஞர்
“உலகத்திலேயே தம்மைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்பு இல்லாத மக்கள் நம் பழந்தமிழர்களே
ஆவர்” (முழுநிலாமுற்றம் ப.74) எனக் குறிப்பிடுகிறார்.
ஆனந்தரங்கம்பிள்ளையின் பெருமையினை ”பிள்ளையவர்கள்
எழுதிவைத்த நாட்குறிப்பு பிரஞ்சிந்திய வரலாற்றுக்கும் ஆங்கில இந்திய வரலாற்றுக்கும்
சாசனமாக அமைந்தது. ஒருபடி மேலே சென்று பார்த்தோமானால் பதினெட்டாம்
நூற்றாண்டில் உலக வரலாற்றுச் சூழலுக்கு ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு பெருந்துணையாக உள்ளது
எனலாம். எனவே இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே புதுவைக்குப் புகழ்
சேர்த்த பெரியார் திரு. ஆனந்தரங்கர் என்பதில் ஐயமில்லை”
(முழுநிலாமுற்றம் ப.75)
எனக் குறிப்பிடுகிறார் கவிஞர்.
புதுக்கவிதைக்கு
வரவேற்பு
புதுமையைக் கண்டு அஞ்சும் நிலைக்குத்
புதுக்கவிதையும் தப்பவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள்
மட்டுமன்று. கலைகளும் புதுமையை எதிர்த்தன. ஆனால் புதுக்கவிதை தனது வீரியத்தால் நிலைபெற்றுவிட்டது. அதனை முறையாக அரவணைத்திருந்தால் மரபுக்கவிஞர்களே புதுக்கவிதையைப் படைத்துத்
தரமான கருத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்திருக்கலாம்.
ஆனால் மரபுக் கவிஞர்கள் ஒதுங்கிவிட்டதனால் எழுதுவதெல்லாம் புதுக்கவிதை
என்னும் பெயரில் வெளிவந்து புதுக்கவிதையின் தரத்தைக் குறைத்து வருகின்றன. எனினும் தரமான கவிதையால் புதுக்கவிதை மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று புகழ்
பெறுவதனையும் காணமுடிகிறது. கவிஞர் பழமைக்கு பழமையாகவும் புதுமைக்குப்புதுமையாகவும்
கவிதை புனைவதில் வல்லவராகத் திகழ்ந்ததற்குக் காரணம் அவர் புதுமையைப் போற்றிய பண்பே என்பதனை உணரலாம். புதுக்கவிதை எதிர்கொண்ட
சூழலினை “இந்தப் புதுக்கவிதைக்குத் தான் எத்தனை எதிர்ப்புகள்;
எத்தனை அர்ச்சனைகள் ! அரைப் பிரசவம், ஆணுமன்று, பெண்ணுமன்று; அலி;
வசனகவிதை; உரை வீச்சு; நமுட்டுச்
சிரிப்பு, கேலி, கிண்டல்! இத்தனையும் தாங்கி நானும் இருக்கிறேன் என்று புதுக்கவிதை இடம்பிடித்துக் கொண்ட்து.
அதுமட்டுமல்ல இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பகுதியும்
ஆகிவிட்டது – புதுக்கவிதை” (கவிதை எழுத
வேண்டுமா பக். 49-50) என்னும் அடிகளில் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
ஊடகத்
தமிழ்
மாணாக்கர்களுக்கு இலக்கியத்தைக்
கற்பித்தல் எளிது. ஏனெனில் அவர்களுடைய ஆர்வத்தை அறிந்து அதற்கேற்ப
விளக்கம் தர இயலும். வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இலக்கியக் காட்சியைக்
கூறும் போது சுவைப்போரின் நிலையினை அறிய இயலாது. எனவே பல வகையான
சுவைஞர்களை எண்ணி கவனமாக விளக்குதல் வேண்டும். தொலைக்காட்சியை
விட வானொலியின் வழி இலக்கியத்தைக் கற்பித்தல் அல்லது காட்சிப்படுத்தல் கடினமான செயலாகும்.
ஏனெனில் வானொலியில் பேச்சால் மட்டுமே சுவைஞர்களை ஈர்க்க முடியும்.
எவ்வாறு வானொலியில் இலக்கியக் காட்சியினைக் காட்ட முடியும் என்பதனை தமிழ்
இலக்கிய மாணாக்கர்களுக்கு மட்டுமின்றி ஊடகத்துறைக்கு செல்ல விரும்புவோர்க்கு வழிகாட்டும்
வகையில் “முழு நிலா முற்றம்” என்னும் நூலைப்
படைத்துள்ளார் கவிஞர். .
தமிழாசானாக மட்டுமின்றி கவிஞராகவும்
திகழ்ந்ததனால் சங்க இலக்கியக் காட்சியினைப் ஊடகத்தில் படம் பிடித்துக்காட்டும் அழகினைக்
காணமுடிகிறது. சங்க இலக்கியக் காட்சியினை சுவைத்த கவிஞர் தாம்
பட்டறிந்த இன்பத்தினைச் சுவைஞர்களும்
அறியும் வகையில் காட்சிப்படுத்துகிறார்.
காட்டு யானை ஒன்று தன்னெதிரில்
வந்த வேங்கையைத் தாக்கியது. வேங்கையும் தன்னால் இயன்ற அளவிற்கு
யானையைத் தாக்கிவிட்டு ஓடி விட்டது. இதனை எண்ணிக்கொண்டே உறங்கிய
யானைக்கு வேங்கை எதிர்ப்பது போல் கனவு வந்தது. கனவிலிருந்து விழித்த
யானையானது வேங்கை என எண்ணி வேங்கை மரத்தை முறித்தது. இக்காட்சியினைக்
காண்கிறாள் தலைவி. பின்னொரு நாளில் தலைவனைக் காணாத தலைவியின்
மாறுபாடான செயலைக் கண்ட நற்றாய் தலைவியை இல்லச் சிறையில் அடைக்கிறாள். தோழி தான் இதற்குக் காரணம் என எண்ணி தலைவி தோழியை சினந்து கொள்கிறாள். தன் நலனையே பெரிதாக எண்ணும் தோழியின் நலம் அறிந்து பின்னர் வருந்துகிறாள்
தலைவி.
இக்கலித்தொகைக் காட்சியினை “அஃதோர் அழகிய மலைச்சாரல்” எனத் தொடங்கி நம்மைக் காட்டுக்கு
அழைத்துச் செல்கிறார் கவிஞர். “எங்கிருந்தோ வளைந்த கோடுகளை உடைய
வரிப்புலியொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது” என வேங்கையினைக்
காட்சிப்படுத்துகிறார். கடுஞ்சினங் கொண்ட களிறொன்று எதிர் வந்தது
எனக் கூறி தாக்குதலுக்கான களத்தை கட்டமைக்கிறார். “யானை பெரிய
உருவமல்லவா? விரைவில் களைத்துப் போய்விட்டது. அண்டையில் இருந்த மரநிழலைக் கண்டது. அங்கே நின்றது.
அமர்ந்தது. சோர்வு மேலிட்டால் அப்படியே அயர்ந்து
தூங்கியும் விட்டது” (முழுநிலாமுற்றம் பக்.1-2) எனக் கவிஞர் எடுத்துரைக்கும் அழகு சுவைப்போர்க்கு கண் முன்னே காட்சியைக் கொண்டு
வந்து காட்டுவதனை உணரலாம்.
தலைவி மடமையால் தோழியிடம் கொண்ட
சினத்தை எண்ணி வெட்கப்படுவதனையும் வேங்கை மரத்தை முறித்த யானை மடமையை எண்ணி வெட்கப்படும்
செயலோடு ஒப்பிட்டுக்காட்டும் இலக்கியக் காட்சியினை அருமையாக காட்சிப் படுத்தியுள்ளார் கவிஞர். இக்காட்சியின்
வழி சினம் மானத்தை அழிக்கும் நிலையினை ”அடடா ! என்ன காரியம் செய்துவிட்டேன் ! தாவா வேங்கையினைத் தவறாக
வேங்கை என்றெண்ணி வெகுண்டேனே ! என் வீரமெல்லாம் இந்தப் பூத்துக்
குலுங்கிச் சுடர்விட்டுக் காணப்படும் வேங்கை மரத்தினிடம் தானா சென்றது ! தேய்ந்தது ! என்னே என் மடமை ! இவ்வாறு
எண்ணி அவ்வேங்கை மரத்தினைக் காணவே நாணிற்று. யானை அந்தப் பக்கமே
தன் பார்வையைச் செலுத்த வெட்கப்பட்டது” (முழுநிலா முற்றம் ப.
3) என்னும் இக் கூற்றின் வழி
தெளிவுறுத்தியுள்ளார். கனவின் வழி இப்பாடலை எடுத்துரைக்கும் நிலையினை
உணர்ந்த கவிஞர் ‘கனவு’ என்னும் தலைப்பினைக்
கொடுத்திருப்பது முத்தாய்ப்பாக அமைந்துள்ளதனையும் இங்கு எண்ணி மகிழலாம். இலக்கியக்காட்சியினை எவ்வாறு வானொலியில் காட்சிப்படுத்துவது என எடுத்துரைக்கும்
எழிலினையும் இங்கு காணமுடிகிறது.
ஊடகத்திற்கேற்றவாறு சொற்களைச்
சிதைக்கும் நிலை நாளடைவில் பரவி வருகிறது. ”முதல்வர் மதுரை வருகை”
என்னும் போது வேற்றுமை இல்லாததால் மதுரை என்னும் முதலமைச்சர் வருகை
என எண்ணுவதற்கு வாய்ப்புண்டு. அவ்வாறின்றி
”முதல்வர் மதுரைக்கு வருகை’ என்னும் தொடரில் ஐயம்
ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு ஊடகத்தார் மொழி குறித்த கவலையின்றி
செயல்படுவதனை மாற்றும் வகையில் சான்றோர்கள் வழங்கும் இலக்கியக்
காட்சிகள் வானொலியில் இடம் பெறுகின்றன. கவிஞரின் மொழி நடை அவ்வாறு
சிறந்திருப்பதனை ‘முழு நிலா முற்றம்” எடுத்துரைத்துள்ளது. இந்நூலை முறையாகப் படித்தால் ஊடகத்திற்கேற்றவாறு
மொழியினைச் சிதைக்கும் மக்களிடையே ஊடகத்திற்கேற்றவாறு மொழியினைச் செதுக்கியவர் கவிஞர்
எனத் தெளியலாம்.
இறை
நெறியில்
இறை நெறியினை மறுப்பதையே புரட்சிக்குரிய
நெறியாக எண்ணி தம்மைப் புரட்சியாளராகக் காட்டிக்கொள்ளும் கவிஞர்கள் உண்டு. உயிர்களுக்குள் இருக்கும் ஆன்மாவைப் போற்றுதலே இறைநெறி. இவ் இறைநெறியைப் போற்றினால் நாட்டில் எவ்வித கேடுகளும் குற்றங்களும் நிகழாது.
உள்ள நலத்தை மட்டுமின்றி உடல்நலத்தையும் போற்ற வேண்டியதன் அவசியத்தினை
உணர்த்தியவர்கள் இறைநெறியாளர்களே. வேதபுரி என அழைக்கப்பெறும்
புதுவைக்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவ்வரிசையிலும்
தமக்கெனெ ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளார் கவிஞர். ’தியானப் பெருவெளி’
என்னும் நூலின் வழி தியானத்தின் அருமையினை எடுத்துரைக்கிறார் கவிஞர்.
”உலகிற்கு அன்பு செய்யச் செய்ய
உள்ளமென்னும் ஆன்மா உலகளாவியதாக விரியும். … “நாம் எதுவோ அதுவே
உயிர்களும்” (தியானப் பெருவெளி ப.60) என
அறிவுறுத்துவதன் வழி இறை நெறியை அடைய எல்லையற்ற அன்புடன் திகழவேண்டும் என வழிகாட்டுகிறார்
கவிஞர். இவ் இறைநெறியைப் பின்பற்ற மனிதன் மனிதப் பண்புடன் வாழ்ந்தாலே
போதும் என்பதனை “அகந்தை உணர்வு உயிரினங்களில் மனிதனைத் தவிர வேறு
எந்த உயிரினத்துக்கும் இல்லை.. . அகந்தை உணர்வென்பது மனிதனை ஆன்மீகப்
பாதையில் தொடர்ந்து சொல்லாதவாறு தடுக்கும் தடைக்கல்லாம் (தியானப்
பெருவெளி ப. 74) எனக் கூறுகிறார் கவிஞர். எல்லையுடைய பொருளைப் பாடும் கவிஞர்கள் வரிசையில் இடம்பெறும் கவிஞர் வாழ்வை
நிறைவாக்கும் எல்லையில்லா பொருளான இறை நெறியினைப் போற்றுவதிலும் தம்
பங்கினை அளித்துள்ளதனைக் காணமுடிகிறது.
புகழ்தேவி தாசன் புனிதத் தமிழால் ; திகழும்பாட் டோவியம் செய்தான் – குகனருளால்
கற்றோர் இனிதுவப்பர் ; கண்டார்
களிப்புறுவார் ; மற்றோரும் வாழ்வார் மகிழ்ந்து
என அருள்மொழி அரசர் திருமுருக
கிருபானந்தவாரியார் அவர்கள் கவிஞரைப் போற்றுவது இங்கு எண்ணத்தக்கது.
நிறைவாக
கவிதையால் அடையாளம் காட்டப்படக்
கூடிய கவிஞர்கள் சிலருள் ஒருவராகத் திகழ்பவர் தான் புரட்சிப்
பாவலர் கவிஞர் தேவிதாசனார்.
கவிஞர், தம் படைப்புகளின் வழி
புதுவைக்குப் பெருமை சேர்த்த கவிஞர்களை மட்டுமின்றி அதிகாரிகளையும் தமிழறிஞர்களையும்
தலைவர்களையும் எடுத்துக்காட்டியுள்ளார். எனவே கவிஞரின் இலக்கியப்
பணியும் இயக்கப் பணியும் எக்காலத்துக்கும் போற்றுதற்குரியனவாகத் திகழ்கின்றன.
தமிழாசிரியராக, கவிஞராக, சிறுகதையாசிரியாக, ஆய்வாளராக, கட்டுரையாசிரியாக, சொற்பொழிவாளராக, பன்மொழிக் கவிஞராக இறை நெறியாளராக வாழ்ந்த
கவிஞரின் கொடை புதுவைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமின்றி சமுதாய மாற்றத்திற்கும்
பெரிதும் துணைநின்று வழிகாட்டிக் கொண்டிருப்பதனைக் காணமுடிகிறது.
தமிழ் இலக்கியம் படிப்போர் தமிழை
எங்கெல்லாம் சிறக்கச் செய்ய இயலுமோ அங்கெல்லாம் அதற்கான முயற்சியினை செய்தல் வேண்டும்
என்னும் எண்ணம் கொண்டவர். அவ் எண்ணத்திற்கு எழுத்து வடிவம் கொடுத்தவர்
என்பதற்கு அவருடைய படைப்புகளே சான்றாகின்றன.
இவை அனைத்துக்கும் மேலாக வாழ்ந்து
வழி காட்டியவர் கவிஞர் என்பதனை எண்ணி எண்ணி இன்புறலாம்.
***********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக