தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

கம்பராமாயணத்தில் பல் துறை நோக்கின் தேவை - Kambaramayanam


கம்பராமாயணத்தில் பல் துறை நோக்கின் தேவை

(முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப்பேராசிரியர்(துணை), புதுச்சேரி –8. உலாப்பேசி : 9940684775)

          தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்ப்பன தமிழ் இலக்கியங்களே. இலக்கியங்களே வரலாற்றுக் கருவூலங்களாகவும் பண்பாட்டுப் பெட்டகங்களாகவும் திகழ்வது வெள்ளிடைமலை. அவ்வரிசையில் கம்பராமாயணத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய பெருமையுடைய கம்பராமாயணத்தில் அரச குலத்தின் வாழ்வு மட்டுமின்றி மக்கள் வாழ்வும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே உளவியல், சமூகவியல், நிர்வாகவியல், போரியல், வானியல், அரசியல் எனப் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகிறது. இலக்கிய நோக்கில் மட்டுமின்றி பிற துறை நோக்கில் அவற்றை அணுகுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

பொறியியல் நோக்கில்

          பொறியியல் என்பது மனிதன் சுகமாய் வாழ புதிய கண்டுபிடிப்புகளை அன்றாடம் கண்டுபிடித்துத் தருவது. இவ்வாராய்ச்சி இன்று பல நிலைகளில் பெருகி வருகிறது. இதற்கான வாய்ப்புகளையும் தேவைகளையும் உணர்ந்து நாளுக்கு நாள் உலகத்தவர்கள் ஒன்று கூடி பல நிலைகளை ஆய்ந்து வருகின்றனர். அவ்வாறு இன்று ஒன்று கூடி எண்ண முடியாதவற்றை எல்லாம் அன்றே கம்பர் பதிவு செய்துள்ள பொறியியல் நுட்பங்கள் பலவற்றைக் காணமுடிகிறது.

சினத்தயில் கொலைவாள் சக்கரந் தண்டு சிலைமழுத் தோமர முலக்கை
கனத்திடை யுருமின் வெருவருங் கவண்க லென்றிவை கணிப்பில் கொதுகின்
இனத்தையு முவணத் திறையையு மியக்குங் காலையு மிதமல நினைவார்
மனத்தையு மெறியும் பொறியுள வென்றான் மற்றினி யுணர்த்துவ தெவனோ   (நகரப் படலம் : 12)

நுண்ணுருவம் உடைய பொருட்களைத் துண்டிக்கும். பொறியினைக் கொதுகின் இனத்தையும் மிக உயர்ந்து செல்வனவற்றைத் துணிக்கும் பொறிக்கு கருடனையும் விரைந்து செல்வனவற்றைத் பரிசமாத்திரமுடையனவாய் அருவமான பொருள்களைத் துணிக்கும் பொறிக்குக் காற்றையும்  அணுவளவான அருவப்பொருட்களையும் துணித்து விடும் என்பதற்கு மனத்தையும் எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளார் கம்பர். அம்மதிலுக்கு எதிராக மனத்தில் எண்ணுவோரையும் தாக்கும் தன்மையுடைய மதில் என்பதனை  ’இதமல நினைவார்’ எனக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளதன் வழி கம்பனின் பொறியியல் நுட்பத்தின் அருமை நிலையினையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

          இரும்பை உருக்கும் உலைகளையும் பழந்தமிழர்கள் நன்கு பயன்பாட்டில் வைத்திருந்தனர். இதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களே அரண்களாக நின்று நிறுவுகின்றன. மேலும் அரண்களே பகைவரிடமிருந்து காக்கும் ஆயுதங்களாக நின்றதனை

சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரங் கரிய செம்மல்
அல்லொக்கு நிறத்தினாண் மேல் விடுத்தலும் வயிரக் குன்றக்
கல்லொக்கு நெஞ்சில் தங்கா தப்புறங் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே      (தாடகை வதைப் படலம் : 71)

பகழியின் அருமையினை சரம் என்றும் சுடுசரம் என்றும் வேகச் சுடுசரம் என்றும் கடிய வேகச் சுடுசரம் என்றும் சொல்லொக்கும் கடியவேகசுடுசரம் என்றும் அடைமொழிகளை வரிசைப்படுத்தி நிற்கும் எழிலினைக் காணமுடிகிறது. இவை அடைக்காக மட்டுமின்றி அக்கால அம்பின் வன்மையினையும் குறிப்பிடுவதாக அமைகிறது. சுடுசரம் என்பது வினைத்தொகையாக நின்று அவ்வாறு எக்காலத்தும் சுடும் நிலையில் வார்க்கப்பட்ட அம்பே வைரம் போன்ற வலிமையான பொருட்களை ஊடுருவும் என்பதனையும் புலப்படுத்தியுள்ளார் கம்பர். மேலும் அணு துளைத்த பிறகு உள்ளே சென்று சிதறி துன்பம் செய்வதனை சொல்லொக்கும் எனக் குறிப்பிட்டுள்ளதன் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. அத்தகைய வலிமையுடைய அம்பு எத்தனை வேகமாக வெளியில் நழுவி வந்தது என்பதனை புல்லோர்க்கு சொன்ன பொருள் போல் எவ்வித தடையுமின்ற் வெளியே வந்ததனைச் சுட்டிக்காட்டியுள்ளதன் வழி பொறியாளர்களுக்கு வழி காட்டும் பொறியாளராகவும் இலக்கிய வல்லார்க்கு வழிகாட்டும் கவி வல்லாராகவும் திகழ்வதனையும் காணமுடிகிறது. இதன்வழி வைரத்தை அறுக்கும் வலிமையான கருவிகளை எல்லாம் மக்கள் பயன்படுத்தி வந்துள்ள நிலைமையினையும் கம்பராமாயணம் எடுத்துரைக்கிறது.

நினைத்தாலே இயங்கும்

          இராவணன் தேர் நினைத்தாலே நினைத்த இடத்திற்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்ததனை

வருக தேரென வந்தது வையமும் வானும்
உரக தேயமு மொருங்குட னேறினு முச்சிச்
சொருகு பூவன்ன சுமையது துரகமின் றெனினும்
நிருதர் கோமக னினைந்துழிச் செல்வதோர் நினைப்பில் (இராவணன் தேரேறு படலம் : 18)

என்னும் பாடல் எடுத்துக்காட்டுகிறது. பூமியிலுள்ளாரும் வானுலகத்தாரும் நாகர்கள் வசிக்கின்ற பாதாள லோகத்தாரும் ஒருசேர ஏககாலத்தில் ஏறினாலும் உச்சியிற் செருகுகின்ற உச்சிப் பூ என்னும் அணியைப் போன்ற சுமையை உடையதும் குதிரை இல்லாவிட்டாலும் அரக்கர் தலைவனான இராவணன் நினைந்தவிடத்தில் நினைந்த அந்த ஓர் கணத்தே போகவல்லதுமாகிய தேரானது வருக என வந்த நிலையினை இப்பாடல் புலப்படுத்துகிறது.

ஏவிய கணையும் ஏவுகணையும்

          ஏவிய கணையின் செயல்பாட்டினைக் கொண்டே இன்றைய ஏவுகணைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது. அவ்வாறு இலக்கி நோக்கித் தாவும் ஏவுகணைகள் இன்று பலவாறு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதனைக் காணமுடிகிறது. கம்பரோ இலக்கை நோக்கி தாக்கும் ஏவுகணையாக மட்டுமின்றி பின்னர் தன் பணியினை முடித்துக்கொண்டு புறப்பட்ட இடத்துக்கே வந்துவிடும் ஏவுகணையின் சிறப்பினையும் எடுத்துக்காட்டுகிறார்.

ஆர்க்கின்ற வானவரும் மந்தணரும் முனிவர்களு மாசி கூறித்
தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய்ப் பாற்கடலிற் றூய்நீ ராடித்
தேர்க்குன்ற இராவணன்தன் சென்ழுங்குருதிப் பெரும்பரவைத் திரைமேற் சென்று
கார்க்குன்ற மனையான்றன் கடுங்கணை புட்டிலி னடுவட் கரந்ததம்மா (இராவணன் வதைப் படலம் : 199)

கரிய குன்றையொத்தவனான இராமனுடைய அம்பு ஆரவாரம் செய்கின்ற வானவரும் அந்தணர்களும் முனிவர்களும் வாழ்த்துக்கூறி பாற்கடலிற் பரிசுத்தமாக நீராடித் திரும்பிக் குன்றம் போன்ற தேரையுடைய இராவணனுடைய வளனுள்ள இரத்தப் பெருங்கடலின் அலைமேற்சென்று புட்டிலினுட் புக்கு ஒளித்தது எனக் கூறுகிறார் கம்பர். மீண்டும் கரை படாத நிலையினை உணர்த்த ’திரை மேற்சென்று’ எனக் குறிப்பிட்ட அழகினையும் இங்கு எண்ணி மகிழலாம்.

விமானவியல் நோக்கில்

          வானியலை நன்கு உணராது விமானத்தை இயக்க இயலாது. ஒரு விமானி ஒரு விமானத்தை செலுத்துகிறார் எனில் அவருக்குப் பின்னால் பலருடைய செயல்பாடுகள் நிறைந்திருக்கிறது என்பதனை உணரவேண்டியது அவசியமாகின்றது.  வான் வழி பாதைகள் , வான் தடைகள், சூழல்கள், வானிலை நிலை, இறங்குவதற்கான சூழல் ஆகிய அனைத்தையும் கண்காணிக்கும் சூழலைக் கொண்டே விமானத்தின் செயல்பாடு அமைகிறது. இவ்வனைத்தையும் முறையாக அறிந்து அவ்வச் சூழலுக்கேற்ப விமானத்தை வடிவமைத்திருந்த நிலையினையும் கம்பராமாயணத்தின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.  
அண்டமே போன்ற தையன் புட்பகம் அண்டத் தும்பர்
எண்டருங் குணங்க ளின்றி முதலிடை யீறின் றாகிப்
பண்டை நான் மறைக்கு மெட்டாப் பரஞ்சுடர் பொலிவதே போற்
புண்டரீ கக்கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ (மீட்சிப் படலம் : 161)

இராமன் ஏறிய புட்பக விமானமானது உலக உருண்டையை ஒத்திருந்தது. அவ் விமானத்தின் மேல் தாமரை மலர் போன்ற கண்களை உடையவனும் வெற்றிபெற்ற காக்குந் தொழிற் கடவுளுமான இராமன் எல்லா உலகங்களுக்கும் மேலே நான்கு வேதங்களுக்கும் புலனாகாத சிறந்த ஒளி வடிவமான பரமாத்மா விளங்குவது போல பொலிந்தான் எனக் குறிப்பிட்டுள்ளதன் வழி விமானியாக நின்று இராமன் செயல்பட்ட நிலையினையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

அண்டம் என்பது உலகம். அண்டம் என்பது முட்டையைக் குறிக்கும். முட்டை வடிவமுடையதை அண்டம் எனக் குறிப்பிட்ட நுட்பத்தையும் இங்கு எண்ணி வியக்கலாம்.

உள உணர்வு விமானம்

          விமானத்தை விமானி விமானத்திலிருந்து இயக்குவதும், விமானத்தின் புறத்தே நின்று இயக்குவதும் எனப் பல்வேறு நிலைகளில் விமானத்தை இயக்கும் நிலை இன்று இருந்துவருவதனைக் காணமுடிகிறது. கம்பன் காட்டும் விமானமோ விமானியின் உளத்திற்கேற்ப இயங்கும் தன்மை உடையதாக இருப்பதனை

உன்னு மாத்திரத் துலகினை யெடுத்தும்ப ரோங்கும்
பொன்னி னாடுவந் திழிந்தெனப் புட்பகந் தாழ
என்னை யாளுடை நாயகன் வல்லையி நெதிர்ப்போய்ப்
பன்னு மாமறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான் (மீட்சிப் படலம் : 185)

என்னும் பாடல் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. இராமன் நினைத்தளவில் புட்பகம் உலகத்திலுள்ள மக்களை சுமந்துகொண்டு ஆகாயத்தில் உயர்ந்து பொன்மயமான தேவலோகம் வந்து இறங்கினாற் போலத் தரையில் இறங்க இரான் விரைவாகச் சென்று பரத்துவாச முனிவரது காலில் விழுந்து வணங்கினான் என்னும் செய்தியின் வழி உளத்தினை அறிந்து செயல்படும் விமனத்தின் செயல்பாட்டை உணரமுடிகிறது.

மருத்துவ நோக்கில்

          தமிழர்கள் நாடி பிடித்து மருத்துவம் கண்டவர்கள். உலகம் முழுதும் உணவையும் மருந்தையும் தனித்தனியாகப் பகுத்திருப்பதை இன்றும் காணமுடிகிறது. ஆனால் தமிழர்கள் உணவையே மருந்தாகப் போற்றிய பெருமைக்கு உரியவர்கள். தேனையும், வாழைச் சாறையும், இலை,கனி,காய்,வேர் என அனைத்திலும் உள்ள குணங்களை நன்கு அறிந்து உயிர்களைக் காத்துள்ளனர். இன்றும் பின்விளைவு ஏற்படுத்தாத மருத்துவமாக இயற்கை மருத்துவம் விளங்குவதனாலேயே பலரும் இம்மருத்துவத்தை இன்றும் நாடிச் செல்வதனைக் காணமுடிகிறது.

          உயிர் காக்கும் மருந்துகள் பல இருந்ததனாலேயே பழங்கால மக்கள் பல நஞ்சுகளிலிருந்து காத்துக்கொண்டனர். கம்பராமாயணத்தில் மருத்துமலைப்படலம் எனத் தனிப் படலமே மருத்துவ மூலிகைகள் குறித்துக் கூறியுள்ளதனைக் காணமுடிகிறது. சாம்பவான் இறந்தவர்களை மீட்பதற்கான மருந்துகள் குறித்து அநுமனுக்கு கூறுவதனை

          மாண்டரை யுய்விக்கு மருந்தொன்று மெய்வேறு வகிர்க ளாகக்
          கீண்டாலும் பொருந்துவிப்ப தொருமருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்ப தொன்றும்
          மீண்டேயுந் தம்முருவே யருளுவ தோர் மெய்ம்மருந்தும் முளநீ வீர
ஆண்டேகிக் கொணர்தியென அடை யாளத் தொடுமுரைத்தா னறிவின் மிக்கான்   
     (மருத்துமலைப் படலம் : 27)
என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. அறிவின் மிக்கானாகிய சாம்பவான், இறந்தவரை உயிர்ப்பிக்கும் மருந்து ஒன்றும், உடம்பு வெவ்வேறு பிளவுகளாக பிளந்திட்டாலும் பொருந்தச் செய்வதொரு மருந்தும் படைக்கலங்களை வெளிப்படுத்துவதொரு மருந்தும், உருவம் மாறி விட்டாலும் மீண்டும் தம்முருவையே அடையச் செய்யவல்ல மெய் மருந்தும் உள்ளன எனக் கூறுவதன் வழி மருத்துவம் குறித்த தெளிவினை அறிந்த மக்களின் நிலையினைக் காணமுடிகிறது. அம் மருத்துவ முறைகளை முறையாக ஆய்ந்தால் பல நோய்களுக்கு அருமையான தீர்வுகளைக் காண இயலும் எனத் தெளியமுடிகிறது. தமிழ் மூதாட்டி ஔவைக்கு கருநெல்லிக்கனியை ஈந்த அதியமானையும் இங்கு எண்ணி மகிழலாம்.

உளவியல் நோக்கில்

          தமிழ்மொழி மட்டுமே தனது இலக்கணத்தில் பொருள் இலக்கணம் என்னும் கூறுகளுடன் மக்களுடைய அக வாழ்வையும் புறவாழ்வையும் வரையறுத்துக்காட்டுகிறது. அவ்வாறு இலக்கணத்துடன் வாழ்ந்த மக்களையே இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டியுள்ளதையும் காணமுடிகிறது. இலக்கியத்தின் வழியே உளவியலை அறிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்குமான கூறுகள் நிறைந்துள்ளன. கம்பராமாயணம் பாத்திரங்களின் அணிவகுப்பு. எனவே பல பாத்திரங்களின் பண்பு நலன்களின் வழி உளவியல் கூறுகளைக் காண்பதற்கான கூறுகள் நிறைந்துள்ளதனைக் காணமுடிகிறது.

இராவணன் இறந்த பின்னர் அவன் உடல் இருக்கும் இடம் தேடி வருகிறாள் மண்டோதரி. இலட்சக்கணக்கான அரக்க மங்கைகள் முடிந்த பூங்குழலை விரித்து அரற்றுகின்றனர். கதறிக்கொண்டே கூட்டமாக அவளைத் தொடர்ந்து வந்தனர். இக்காட்சியை

அனந்தம் நூறாயிர மரக்கர் மங்கைமார்
புனைந்தபூங் குழல்விரித் தரற்றும் பூசலார்
இனந் தொடர்ந் துடன்வர வேகி னாளென்ப
நினைந்தது மறந்தது மிலாத நெஞ்சினாள்              (இராவணன் வதைப்படலம்-228)

என்னும் பாடல் எடுத்துக்காட்டுகிறது. இதில் மண்டோதரியின் காதல் உள்ளத்தின் உள நிலையினையும் அறிந்துகொள்ள முடிகிறது. நற்பண்புடைய கணவனை எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பதற்கான தேவையினை விட தீய ஒழுக்கமுடைய கணவனை எண்ணிக் கொண்டிருப்பதற்கான தேவையே மனைவிமார்க்கு மிகுதியாக இருப்பதனை இவ்வடிகள் உணர்த்திக் காட்டுகின்றன. நினைப்பதும் மறந்ததும் இலாத நெஞ்சினளாக மண்டோதரி வாழ்ந்ததன் வழி இராவணனது  நிலையும் அவன்பால் கொண்ட காதலின் நிலையும் நன்கு புலனாகிறது.

உயிரினும் மானம் பெரிது

        தான் சீதையை விடுதலை செய்து விடுவது பெரும் செய்தியன்று. ஆனால் அவ்வாறு விடுவேனானால் அது எம் வீரத்திற்கு இழுக்காகும் என்னும் நிலை வந்துவிட்டதனை

        விட்டனன் சீதை தன்னை யென்றலும் விண்ணோர் நண்ணிக்
        கட்டுவ தல்லா லென்னை யானெனக் கருதுவாரோ
        பட்டன னென்றபோதும் எளிமையிற் படுகிலேன்யான்
எட்டினோ டிரண்டு மான திசைகளை யெறிந்து வென்றேன் ((இந்திரசித்து வதைப்படலம் : 11)

என்னும் பாடலின் வழி இராவணனின் கருத்தினை அறியமுடிகிறது. இராவணன் என்னும் பெயருக்குரிய அச்சம் மறைந்து போவதை விரும்பவில்லை.  மேலும் பத்துத்திசைகளை வென்ற நான் அவர்களை எதிர்த்து என் வீரத்தைக் காட்டி வீழ்வேனல்லாது வெற்றென வீழேன் எனக் கூறியுள்ளதன் வழி இராவணனின் தன்மானப் பிரச்சினையே அழிவுக்குக் காரணமாக நின்றதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

சமூகவியல்

          சமூக வரலாற்றினை அறிந்து கொள்வதன் வழியே ஓர் இனத்தின் மக்கள் வாழ்வை அறிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறு சமூகத்தைப் படம்பிடித்துக்காட்டும் ஆவணங்களாக இலக்கியங்கள் திகழ்கின்றன. அவ்வாறு கம்பன் காட்டும் சமூகம் அக்காலத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

          மக்கள் விரும்பும் வகையில் நல்லாட்சி நடத்திய மன்னனை இறை எனக் குறிப்பிட்டனர்.  அவன் வாழும் இல்லம் கோவில் எனவும் வழங்கப்பெற்றது. இறைவனுக்கு நிகரான மன்னனை எண்ணிய சமூகத்தினை இதன் வழி உணரமுடிகிறது. அவ்வாறு இராமனிடம் அன்பு காட்டி வாழ்ந்த மக்களின் நிலையினை

தாயருக் கன்று சார்ந்த கன்றெனுந் தகைய னானான்
மாயையிற் பிரிந்தார்க்கெல்லா மனோலயம் வந்த தொத்தான்
ஆயிளை யர்க்குக் கண்ணு ளாடிரும் பாவை யானான்
நோயுறுத் துலர்ந்த யாக்கைக் குயிர்புகுந் தாலு மொத்தான் (மீட்சிப்படலம் : 337)

தாயருக்கு அப்பொழுது சேர்ந்த கன்றென்று சொல்லத்தக்க தன்மை உடையவனாயினான். மாயையினின்று நீங்கினவர்களுக்கெல்லாம் மனம் ஒன்றுமிடம் நேர்ந்ததை ஒத்தான். சிறந்த  தம்பியரான பரத சத்ருகன்னர்களுக்குக் கண்களினுள் அசைகின்ற கருவிழியை ஒத்து விளங்கினார்ன்.வியாதி பொருந்தி உயிர் நீங்கிப் போன உடம்புக்கு மீண்டும் உயிர் புகுந்தாற் போன்ற தன்மையையும் ஒத்திருந்தான். இதன்வழி மக்களுக்காக வாழும் அரசனை மக்கள் போற்றி வாழ்ந்த சமூகத்தைப் படம்பிடித்துக்காட்டியுள்ளார் கம்பர்.

கணவன் இறந்தவுடன் மனைவி வாழ்வதனை இச்சமூகம் ஏற்காத நிலை இருந்தது. மேலும் அப்பெண் இறப்பதனையே பெருமிதமான வாழ்வாகக் கருதிய நிலையினை மண்டோதரியின் வாழ்வின் வழி அறிந்துகொள்ள முடிகிறது
          வான மங்கையர் விஞ்சையர் மற்றுமத்
          தான மங்கைய ருந்தவப் பாலவர்
          ஆன மங்கைய ரும்அருங் கற்புடை
மான மங்கையர் தாமும் வழுத்தினார் (இராவணன் வதைப்படலம் : 247)

மண்டோதரி இராவணனைத் தழுவி உயிர்விட்டதைக் கண்ட வான நாட்டிலுள்ள மகளிரும் விஞ்சையரும் மற்றும் அவ்விடத்திலுள்ள மங்கையரும் தவத்தின் கூற்றிலே பொருந்திய முனிவரின் பத்தினிமாரும் அரிய கற்புடைய பெண்களும் கொண்டாடியதை இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது.

மானுடவியல்

          மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை காட்டும் வரலாறாகவே மானுடவியல் திகழ்கிறது. அவ்வாறு பண்பாட்டின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் வாழ்ந்த வாழ்வை அறிந்துகொள்ள இவ்வியல் பெரிதும் துணை நிற்கிறது.

போருக்கு முன் கொடை

          வாழ்க்கை நிலையானது என எண்ணி தன்னலத்துடன் பொருட் சேர்த்தலாலேயே நாட்டில் வறுமையும் துன்பமும் தலை விரித்தாடுகிறது. எனவே அச்சம் வரும்போதெல்லாம் பிற உயிர்களுக்கு நன்மை செய்யத் தோன்றுவதும் இயல்பாகும். அவ்வாறே இராவணன் போருக்குச் செல்லும் போது பல நற் செயல்களை செய்யும் நிலையினை

          ஈசனை யிமையா முக்க ணிறைவனை யிருமைக் கேற்ற
          பூசனை முறையிற் செய்து திருமறை புகன்ற தானம்
          வீசன னியற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க் கெல்லாம்
          ஆசற நல்கி யொல்காப் போர்த்தொழிற் கமைவ தானான் (இராவணன் தேரேறு படலம் : 3)

இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. சிவபெருமானுக்குரிய இம்மை மறுமைகளுக்குரிய பூசைகளை முறையாகச் செய்து சிறந்த வேதங்களில் கூறுகின்ற தானங்களைக் கொடுத்துப் பின்னும் விரும்பினவைகளை விரும்பினோர்க்கெல்லாம் குற்றமறக் கொடுத்துத் தளர்தல் இல்லாத போர் செய்யும் தொழிலுக்குப் பொருந்தியவனானான் என இராவணன் போர்க்களத்துக்குச் செல்லும் நிலையினை கம்பர் படம்பிடித்துக்காட்டியுள்ளதன் வழி அறத்தின் பெருமை புலனாகிறது.

நிறைவாக

          கம்பரை இலக்கிய நோக்கில் கண்டதாலேயே கவிச் சக்கரவர்த்தியாகத் திகழ்கிறார். அவ்வாறு மட்டும் நோக்காது பொறியியல் நோக்கில் நோக்கினால் பொறியியல் வல்லுநராகவும், விமானவியல் நோக்கில் நோக்கின் வானவியல் வல்லுநராகவும் மருத்துவ நோக்கில் நோக்கினால் மருத்துவ வல்லுநராகவும் உளவியல் நோக்கில் நோக்கின் உளவியல் அறிஞராகவும் சமூக நிலையின் வழி நோக்கில் சமூகவியல் அறிஞராகவும் திகழ்வதனை அவருடைய பாடல்களின் வழி உணர்ந்துகொள்ள முடிகிறது.

கற்பனை தான் இவை எனப் புறந்தள்ள இயலாத அளவிற்கு நுட்பமுடைய செய்திகளைப் படம்பிடித்துக்காட்டும் பாடல்களாக கம்பராமாயணப் பாடல்கள் திகழ்வதனைக் காணமுடிகிறது.

கம்பன் பாடல்களை அறிவியல் நோக்கில் ஆய மனமில்லாது வெறும் கற்பனை என மறுத்துக் கூறுவோர் உளராயின் அவர்களுக்கு கற்பனையினின்றே அனைத்துக் கருவிகளும் ஆக்கப்பட்ட நிலையினை உணர்த்தி கம்பராமாயணத்தின் நுட்பங்களை உணரத்த இயலும் எனத் தெளியமுடிகிறது.

கம்பராமாயணத்தின் கவிச்சுவைக்காக மட்டுமே கற்காது அதில் உள்ள பல்வேறு துறைகளின் நுட்பங்களை அவ்வத் துறையில் உள்ளோர் ஆய்வு செய்வாராயின் இச்சமூகத்திற்கு பயன் விளைக்கக் கூடிய பல கண்டுபிடிப்புகளை மீட்டுக் கொணர இயலும் என்பது தெளிவாகிறது.

தமிழரின் பெருமை பழமை பேசுவதிலேயே அடங்கியிருக்கிறது எனக் குற்றஞ்சாட்டுவோர் பலர். அப் பழம்பெருமைகளை உரிய ஆய்வின் வழி அறிவியல் நிலையில் மெய்ப்பிக்க வேண்டிய அவசியத்தினை கம்பராமாயணத்தின் வழி உணரமுடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக