தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

அணிந்துரை - Aninthurai


விதை போடும் கதைகள் - அணிந்துரை



(முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார். உதவிப் பேராசிரியர், புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி-609605.. உலாப்பேசி : 99406 84775)



      சிறுகதை தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருங்கதை. மக்களைச் சென்றடையும் படைப்புக்கலையில் சிறுகதைக்குச் சிறப்பிடமுண்டு. ஒவ்வொரு காலத்திலும் இடையறாது சிறுகதைகளை எழுதி வந்த படைப்பாளிகள் பலர். அவ்வரிசையில் இருபத்தோராம் நூற்றாண்டுச் சிறுகதை ஆசிரியர்களுள் இடம்பெறத்தக்கவர் பேராசிரியர் முனைவர் ச. வளவன் ஐயா அவர்கள்.



மழையின் பெருமை அதன் பின் விளையும் விளைச்சலில் தான் தெரியும் என்பது போல் அவருடைய படைப்புக்களின் பெருமை அவர் விண்ணுலகை எட்டிய பின் தான் சுவைஞர்களாகிய உங்கள் கையினை எட்டுகிறது. இத்தகைய அருமையான பணியைச் சிரமேற்கொண்டு செய்து வருபவர் அவருடைய துணைவியார் பேராசிரியர் முனைவர் க. மைதிலி அம்மையார்.



தமிழ் மொழியின் அருமைகளையும் பெருமைகளையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டிய முயற்சியில் தமிழர்கள் திணறி வருவதனைக் காணமுடிகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தையும் கூட ஆங்கிலத்தில் எழுதிப் படிக்கும் அளவிற்குத் தமிழ்க் குழந்தைகளுக்கு தாய் மொழி விலகிவிட்டதனைக் காணமுடிகிறது.  எனவே இன்றைய தலைமுறைக்குத் தமிழை எடுத்துச்செல்லும் அருமையான ஊடகமாக நிற்பது சிறுகதையே. எந்நெறியையும் கதையாக எடுத்துச் சொல்லும் போது குழந்தைகள் எளிதாக அந்நெறியைக் கற்றுக்கொள்கின்றனர். செவி (கர்ணம்) வழியாக கதை சொல்லும் நிலையே கர்ணப் பரம்பரைக் கதைகள் என அழைக்கப்பட்டது. அந்நிலை வளர்ச்சி பெற்று எழுத்து வடிவில் சிறுகதை அமைப்புடன் 1927 - இல் வ. வே. சு. ஐயரின் ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்னும் கதை வெளிவந்தது  சிறுகதை மன்னன் எனப் போற்றப்பட்ட புதுமைப்பித்தன், கு. ப. ராசகோபாலன், க. நா. சுப்பிரமணியன் , ந. பிச்சமூர்த்தி, சி. சு. செல்லப்பா, மௌனி, ஜெயகாந்தன், ஜெயமோகன். எஸ். ராமகிருஷ்ணன் எனக் காலந்தோறும் தம் படைப்புப் பணிகளால் இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டி வருபவர்கள் பலர். அவ்வரிசையில் இடம்பெறக் கூடிய அளவிற்கு அருமையான சிறுகதைகளை உள்ளடக்கியதாகப் பேராசிரியரின்  ____________________________________________________” என்னும்  சிறுகதைத் தொகுப்பு அமைந்துள்ளது.



     மனித நேயத்துடன் வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பதனை ஒவ்வொரு சிறுகதையிலும் அறிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.



     தமிழில் முதல் முனைவர் பட்டம் பெற்றவரும் தம் படைப்புக்களால் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி இடம் பெற்றவருமாகத் திகழ்பவர் மு. வரதராசனார்.. அவர்தம் சிறுகதைகளில் இடம் பெறும் பாத்திரங்களின் பெயர்களையே சுவைஞர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்வர். அத்தகைய அருமையான பெயர்களை அறிமுகம் செய்தவர் டாக்டர் மு. வ. அவ்வாறே பேராசிரியர் ச.வ. அவர்களும் அருமையான தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.



     முனைவர் பேராசிரியர் ச. வளவன் ஐயா அவர்கள் தொடாத துறையே இல்லை. எல்லோரும் கடினம் என ஒதுங்கி நிற்கும் பாடமான மொழியியல் பாடத்தை விரும்பி ஏற்பார். அனைவருக்கும் நல்ல பேராசிரியர். தொல்காப்பியப் பாடத்தையும் இலக்கணப் பாடத்தையும் அலசுவதில் அவர்க்கு இணை அவரே. எத்தகைய பேராசிரியராயினும் இலக்கணம் கற்பிக்கும் போது அவர்களுடைய முகத்தில் கடுமை வருவது இயல்பு. ஏனெனில் இலக்கணத்தை மாணாக்கர்களுக்குப் புரிய வைப்பதில் மட்டுமே அவர்களுடைய கவனம் இருக்கும். பளு தூக்கும்போது புன்னகைத்தல் இயலாது என்பது போல. ஆனால் அனைவரிடமும் இருந்து மாறுபட்டு புன்னகை மாறாது இலக்கணம் கற்பிக்க முடியும் என்பதற்குப் பேராசிரியர் வளவன் ஐயாவைத் தவிர எவரையும் எடுத்துக்காட்டாகக் கூற முடியாது என்பது என் எண்ணம்.



என்னை நன்னெறிக்கு வழிப்படுத்திய பேராசிரியர் அரங்க. இராமலிங்கத்திற்குப் பேராசிரியர். பச்சையப்பன் கல்லூரியில் இளமுனைவர் பட்டம் பயிலும் போது எனக்குப் பேராசிரியர். நான் விரிவுரையாளராக சென்னைப் பல்கலைக் கழகத் தொலைதூரக் கல்வி மாணாக்கர்ளுக்குப் பாடம் நடத்தும் போது அம்மாணாக்கர்களுக்கும் பாடம் கற்பிக்கும் பேராசிரியராக நின்றவர். இவ்வாறு மூன்று தலைமுறைகளுக்குப் பேராசிரியராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் ச. வளவன் ஐயா அவர்கள்.



அவர் செய்த செலவுகள் எல்லாம் இன்று பலருடைய வாழ்க்கைக்கு வருமானங்களாகி உயர்த்தியிருக்கிறது. எங்கே ? யாரை ? எவ்வாறு ? பரிந்துரைக்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் பரிந்துரைத்து எத்தனையோ குடும்பங்களுக்கு ஒளி விளக்காகத் திகழ்பவர். வலது கை செய்வது இடது கைக்குத் தெரியக் கூடாது என்பதற்கு இலக்கணமாக நின்றவர். துணைவியாரான மைதிலி அம்மையாருக்குக் கூடத் தெரியாமல் பலருக்கு வழி காட்டிய பெருமைக்கு உரியவர்.



வாழும் போது பேராசிரியர்களை மாணாக்கர்கள் பெருமையாகப் பேசுவது இயல்பு. ஆனால் வாழ்ந்தபோது மட்டுமின்றி விண்ணுலகை அடைந்த பின்னும் அவரைப் போற்றும் நல்லோர் பலர். அத்தகைய புகழ் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். இயக்குநர் வசந்த் அவர்கள் ”அக்கா அக்கா” என்று இன்றும் அன்புடன் மைதிலி அம்மையாரை அழைப்பதன் வழி பேராசிரியரிடம் அவர் கொண்ட ஈடுபாட்டினை நன்கு உணரலாம். இப்படி எத்தனையோ மாணாக்கர்கள் அவரைத் தம் வழிகாட்டியாகக் கொண்டு வாழ்கின்றனர்.



பேராசிரியர், நெறியாளர், நிர்வாகி எனப் பல பொறுப்புக்களை மேற்கொண்ட வளவன் ஐயா அவர்கள் தாம் எழுதியதைக் கூட நூலாக வெளியிட நேரமின்றி உழைத்தவர். அவருடைய பட்டறிவு அனைத்தும் காகிதங்களாகி விடக் கூடாதென அவற்றையெல்லாம் முறையாகத் தொகுத்து நூலாக வெளியிடும் அரும் பணியினை செய்து வருகிறார் அவருடைய துணைவியார் க. மைதிலி அம்மையார் அவர்கள்.



நூல் வெளியிடுவது எவ்வளவு கடினம் என்பது பதிப்பகத்தாரை விட நூலாசிரியர்கள் நன்கறிவர். அத்தகைய அருமையான பணியினை மைதிலி அம்மையார் நாளும் ஓய்வின்றி செய்து வருவது வளவன் ஐயா செய்த பெரும்பேறெனவே எண்ண வேண்டியுள்ளது.



எத்தகைய இடர்ப்பாட்டிலும் மனம் தளராது பொருட் செலவு குறித்தும் கவலை கொள்ளாது பேராசிரியரின் தமிழ்ச் செல்வங்களை இன்றைய தலைமுறைக்குச் சென்று சேர்க்க வேண்டியது தம் கடன் என எண்ணும் தமிழ் உள்ளம் கொண்டவராகத் திகழும் மைதிலி அம்மையாரின் பணியினைத் தமிழுலகம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.



அற நெறிகளை அழகாக உணர்த்தியுள்ள இச்சிறுகதைத் தொகுப்பினை தமிழ் உள்ளம் கொண்ட அனைவரும் ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு சேர்ப்பதை விருப்பத்துடன் தம் பணியாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வது பேராசிரியர்க்கு மட்டுமின்றி தமிழுக்குச் செய்யும் பெரும்பேறாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.





மதிப்புடன்,





ம.ஏ. கிருட்டினகுமார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக