தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

சித்தர்கள் வாக்கே வாழ்வு - Siddhar taught how they live

 

சித்தர் பாடல்களில் வாழ்வியல் நெறிகள்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், இணைப் பேராசிரியர், காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி. உலாப்பேசி: 99406 84775

       சித்தர்களை – அறிவர்கள் எனவும் குறிப்பிடுவர். சித்தினை உணர்ந்தவர்கள் சித்தர்கள் என்றும், அறிவினை அறிந்தவர்கள் அறிவர்கள் என்றும் போற்றப்படுகின்றனர். சித்தர்கள் அறிவின் அருமையினை உணர்த்தியவர்கள். அறிவுச்சொத்து இருந்தால் பிற சொத்துக்கள் அனைத்தும் தானே கிடைக்கும் என்பதனைத் தம்பாடல்களின் வழி விளக்கியவர்கள். பொருளுடைய வாழ்வு உயர்ந்ததுதான். அவ்வாழ்வைப் பொருளுடையதாக வாழ்வது அதனைவிட உயர்ந்தது. வசதியாக வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள் தான் . ஆனால் அந்த வசதிகளை எல்லாம் துறந்து மெய்யான இறைவனைத் தேடிய சித்தர்கள் அவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள்தானே. உலகியலுக்காபொருளினைத் தேடுபவர்கள் இயல்பான மனிதர்கள். அருளியலுக்கான பொருளினைத் தேடுபவர்கள் சிறப்பான சித்தர்கள்.

சிந்தை தெளிந்திருப்பவன் சித்தன் ; செகமெல்லாம் சிவனென்றே தெளிந்திருப்பவன் சித்தன் என்றும் சித்தர்களின் வாழ்வினைக் குறிப்பிடுவர். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்றால் எந்த உயிர் மீதும் வெறுப்பு வருமா? விருப்பம் விலகுமா? அப்படி எல்லா உயிர்களிடமும் இரக்கம்கொண்டு வாழ்ந்தவர்கள் சித்தர்கள்

சித்தர்கள் என்போர் சித்தினை அடைந்தவர்கள். தூய அறிவாகிய இறை நிலையை அடைந்தவர்க்கே சித்தர்கள் எனவும் பெரியோர் விளக்கம் தருவர். சித்தியாகிவிட்டதா? எனக்கேட்பது நடைமுறை வழக்கத்திலும் இருப்பதனைக் காணலாம். அவர்கள் காட்டிய வாழ்வியல் நெறிகளைக் காண்போமா?

       அறிவோடு வாழ்ந்தால் நீண்டநாள் உயிர்வாழமுடியும்தானே. தலைக்கவசம் மட்டுமல்ல முகக்கவசமும் உயிர்காக்கும். விலகி நின்றால் மரணம் நெருங்கிவராது. கை சுத்தம் பெருமைக்குரியது மட்டுமல்ல ; உயிரைக் காப்பதும் அதுவே. இவற்றையெல்லாம் அறிந்து நடந்தால் நீண்டநாள் உயிர்வாழமுடியும் என்றுதானே வானொலி அடிக்கடி அறிவுறுத்துகிறது.   இவ்வாறு உயிர் காக்கும் செயலை சித்தர்கள் அன்றே எளிமையான பாடல்களாக வகுத்தனர்.

உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே

       ஆமென்றே இருபத்தோ ராயிரத்தோடு

அறுநூறு சுவாசமல்லோ ஒரு நாளைக்கு

போம் என்று போனதால்நாள் குறைந்துபோச்சுது

போகாவிட்டால்போவதில்லை

தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான்நினைந்த

தன்மை அல்லோ விதிகள் தாமே

 

என்னும் பாடல் மூச்சுப்பயிற்சியின் அருமையினை எடுத்துக்காட்டுகிறது. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எளிமையாக நூறாண்டுகள் வாழமுடியும் என்பதும். ஒரு நாளைக்கு 21600 முறை மூச்சு வாங்குகிறோம் என்பதனையும்  இந்த உரோம முனிச்சித்தர் பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. இது குறையாமலும் அதிகமாகாமலும் பார்த்துக்கொண்டால் நீண்டநாள் வாழமுடியும் என்கிறார். இந்த நிகழ்ச்சியைக் கேட்போர் நூறு நாள் வாழ்வதற்கான இரகசியத்தை உரோமமுனி சொல்லிவிட்டார்.

 

       மனம் அமைதியாக இருந்தால் போதும். வாழ்க்கை எல்லாவற்றையும் அழகாக்கிவிடும். ஏதோ ஒரு இடத்தில் விழுந்த விதையானது இந்த இடத்தில் விழுந்துவிட்டோமோ என எண்ணி வருந்துகிறதா? அங்கேயே செடியாகவோ, மரமாகவோ வளர்ந்துவிடுகிறது. மனிதர்களும் அவ்வாறு வாழக்கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் பூத்து, காய்த்து, கனிந்து வாழமுடியும் தானே.

      

       சித்தர்கள் அப்படிப்பட்டவர்கள் தான். 140 வயதிலும் உடல் ஒட்டி இருக்குமே தவிர முகம் பொலிவுடன் பொன்னிறம் மாறாது இருக்கும். அத்தகைய அழகுக்குக் காரணம் அவர்களுடைய குழந்தை மனமே. குழந்தை ஏன் அழகாக இருக்கிறது. அது கடந்த காலத்தை நினைத்துக்கவலைப்படுவதும் இல்லை. வரக்கூடிய எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதும் இல்லை. அதுபோலவே சித்தர்கள் அந்தந்த நொடிப்பொழுதில் வாழ்ந்தவர்கள்.

 

       பாபம்செய்யாதிரு மனமே – நாளைக்

       கோபம் செய்தே எமன் கொண்டோடிப்போவான்

       பாபஞ் செய்யாதிரு மனமே

 

எனக் கடுவெளிச்சித்தர் பாடியுள்ளார். பாவம் செய்தால் கோவம் வரும். கோபம் வந்தால் எமன் வருவான்.  என்பது சித்தர் காட்டும் அழகிய தத்துவம். கோபம் எப்போது வரும். தான் தவறு செய்யும்போது தான் கோபம் வரும். தவறு செய்யாதவர்கள் கோபம் கொள்வதில்லை. அன்புடையவர்கள் கோபம் கொள்வார்களா? தாயனவள், முதியோர் இல்லத்தில் சேர்த்த மகன்கூட நன்றாக வாழவேண்டும் என்றுதானே தினமும் வேண்டுவாள். கோபப்படுபவர்கள் எப்போதும் சத்தமாகப் பேசுவார்கள் தானே. ஏன்? அவர்கள் பேசுவதை எதிராளிகள் காது கொடுத்து கேட்கமாட்டார்கள் என்ற அச்சம்தான். ஆனால், அன்புடையவர்கள் மென்மையாகப் பேசுவார்கள். அது எவ்வளவு அழகான மொழியாக இருக்கும். எனவே, எப்போதும் அன்பாக வாழவேண்டும் என எடுத்துக்காட்டுகிறார்.

 

       ஒரு சித்தர் மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். மன்னன் அவருடைய புகழைக் கேட்டு வருகிறான். நான் நாட்டிற்கே தலைவன். நான் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யமுடியும். என்னை விட நீங்கள் எப்படி உயர்ந்தவர்கள்?  எனக் கேட்கிறான். “யாம் இருக்க. நீ நிற்க” என்கிறார் சித்தர். அப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது. இதன்வழி யாருக்கும் அஞ்சாதவர்கள் சித்தர்கள் ; எந்நிலையிலும் தன்னிலை மாறாதவர்கள் எனத் தெளியலாம் தானே.  அப்படி அச்சத்தை நீக்கி பணிவுடன் வாழ்வதற்கான இரகசியத்தைக் கற்றுக்கொடுக்கின்றனர் சித்தர்கள்.

மனிதர்கள் என்றால் ஆறறிவுடையவர்கள்தானே. அவர்களுள்  அறிவுடையவர்கள் என ஒரு சிலர்தானே பாராட்டப்படுகிறார்கள். ஏன்? அறிவுடையவர்கள் யார் எனப் புரிந்துகொண்டால் இதற்கான விடையினையும் புரிந்துகொள்ளமுடியும். அறிவுடையார் ஆவது அறிவார். என்ன நிகழப்போகிறது என்பதனை முன்னமே உணர்ந்தவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் அல்லவா? இந்த நேரத்திற்குப் பேருந்துவரும் ; இந்த நேரத்திற்கு இரயில் வரும் எனத் தெரிந்தவர்கள் தெளிவாக இருப்பார்கள். தெரியாதவர்கள் பதற்றத்தில்தானே இருப்பார்கள். இப்போது அறிவுடையவர்களுக்கு பதற்றம் ஏற்படுவதில்லை எனத் தெரிகிறதல்லவா. அதனால் நெஞ்சடைப்பு, இரத்தக்கொதிப்ப்பு என எந்த நோயும் வராமல் தடுக்கமுடியும்தானே. சித்தர்கள் சொல்லும் வழியில் நடந்தால் நலமாக வாழமுடியும்தானே.

       அறிவுடையவர்களுக்கு என்ன கிடைக்கும்? எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா. அறிவு எனப்படுவது என்ன என்றுதானே கேட்கிறீர்கள். சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. தீய நெறியில் செல்வதைத் தடுத்து நல்ல நெறியில் செல்ல வழிகாட்டுவது அறிவு என்கிறார் தெய்வப்புலவர். எவ்வளவு எளிமையான செய்தி. ஆனால் அதனைச் செயல்படுத்தும்போதுதான் அதன் அருமை தெரியும். தவறு எனத்தெரிந்தாலும் அதை மாற்றிக்கொள்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது. காலாட்டும் பழக்கம் உள்ளவர்கள் காலினை ஆட்டாமல் கட்டுப்படுத்தி வைப்பது எத்தனைக் கடினம்? அப்பழக்கம் உள்ளவர்களைக் கேட்டால் தெரியும். இவ்வாறு தன்னைக் கட்டுப்படுத்தி எவ்வாறு வாழ்வது எனக் காகபுஜண்டர் என்னும் சித்தர் மிக எளிமையாக வழிகாட்டியுள்ளார்.

‘தாம் என்ற உலகத்தில் மனிதரோடே

சஞ்சாரம் செய்யாதே தனித்து நில்லே

ஓமென்று ஊண்மிகுத்து உண்டிடாதே

ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே

ஆமென்ற அட்சரத்தை மறந்திடாதே

ஆயசமாகவும் தான் திரிந்திடாதே

காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே

காரணத்தைக் கண்டு விளையாடுவாயே

 

என்கிறார். வாழ்க்கை என்பது பூந்தோட்டம். அதில் மகிழ்ச்சியாக வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கைப் போராடுவதற்காக அல்ல ; கொண்டாடுவதற்காக என்கிறார். ரோஜாவை சுற்றி முள் இருக்கிறதே என வருந்தாமல்,  முள்ளில்  ரோஜா பூத்திருக்கிறதே என மகிழ்ச்சியடைய வேண்டும்.

       சித்தர்கள் தமிழின் அருமையினையும் மெய்ப்பொருளையும் ஒருங்கே உணர்த்தியவர்கள். எளிய நடையில் அருமையான கருத்துக்களை உணர்த்தியவர்கள். அறிவியல், தொழில் நுட்பம், வானவியல் இலக்கியம், கலை, இசை, நாடகம், என அனைத்துத் துறைகளிலும் முத்திரைப்பதித்தவர்கள். சிவவாக்கியருடைய பாடல்கள் சந்த நயத்துடன் சொந்தம் கொண்டாடும் அழகினைப் பார்க்கமுடியும்.

       தீர்த்தம் ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்

       தீர்த்தம் ஆடல் எவ்விடத் தெளிந்து நீர் இயம்புவீர்

       தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்

       தீர்த்தமாக உள்ளதும் சிவாய அஞ்செழுத்துமே

 

நீர் என்ன செய்யும். தூய்மை தானே. புறத்தை தூய்மை செய்ய நீர் பயன்படும். அகத்தை தூய்மை செய்ய என்ன செய்யவேண்டும். வாய்மை பொருளான ; உண்மை பொருளான இறைவனே தூய்மை செய்வார். மனத்தூய்மைப் படுத்தாமல் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று தெளிவடைவது எவ்வாறு? எனக் கேள்வி கேட்கிறார். சிவாய அஞ்செழுத்து என்னும் தீர்த்தமே தூய்மை செய்யும் என்னும் விடையினையும் தருகிறார். இதனை அழகான சந்த நயத்துடன் பாடும் அழகு பாடப்பாடப் புலப்படும். எதற்காக இப்படி சந்த நயத்துடன் பாடினார்கள். எளிதில் நாம் மனப்பாடம் செய்துகொண்டு நாளும் நினைவில்கொண்டு இறைச்சிந்தனையை வளர்த்துக்கொள்ள வழிகாட்டியுள்ளனர். சித்தர்களுடைய தமிழை உணர்ந்துகொண்டால் தெளிவுடன் வாழலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது அல்லவா.

       தமிழ் தெய்வமொழி. ழகரம் தமிழின் தனிச்சிறப்பு. ‘ழ்’ என்பது  யோகத்தின்பொழுது நாக்கினை மடக்கி அண்ணத்தில் ஒட்டிவைக்கும் நிலை. இறைவனை அடைவதற்கான முயற்சிக்கும் பயிற்சிக்கும் துணை நிற்கும் நிலை அது என அருளாளர்கள் குறிப்பிடுவர். எனவே தமிழின் ஒலிப்பு முறையின் பெருமையினை அறிதல் வேண்டும். தமிழ்மொழி பேசினால் நீண்டநாள் உயிர்வாழமுடியும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்  தமிழ்மொழியின் இன எழுத்துக்கள் இந்த அருமையினை உணர்த்தும். தமிழ் என்பது மொழி மட்டுமல்ல அது மனிதரைக் காக்கும் அற்புத மந்திரம். எனவே, இம்மந்திரத்தை முறையாகக் கற்றவர்களுக்கு மற்றவை எல்லாம் சத்தங்களே.

முத்தமிழ் கற்று முயங்கு மெய்ஞ் ஞானிக்கு

சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்

சத்தங்கள் ஏதுக்கடி

என்கிறார் குதம்பைச் சித்தர். அசுணமா என்னும் பறவை இனிய சத்தங்களுக்கு மயங்கிவரும். வேறு ஏதேனும் வன்மையான ஒலி கேட்டால் இறந்துவிடும்.  இனியமொழியாம் தமிழ்மொழியின் அருமை அறிந்தவர்களுக்கு மற்றவை எல்லாம் சத்தங்களே எனக் கூறுவதன் அழகினையும் எண்ணிப்பார்க்கலாம்.

       இறைவனின் பெருமை அளவிடற்கரியது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குத் தேவையான உணவை அங்கேயே இறைவன் படைத்திருக்கிறான். அதனை உணர்ந்துகொள்ளும் அறிவினைப் பெற வேண்டியது அவசியம். அவ்வாறே மருத்துவம் செய்தவர்களே சித்தர்கள். மருத்துவத் துறையிலும் அவர்கள் காட்டிய வழி அருமையானது. ஒவ்வொரு மரத்தின் வேர், பட்டை, இலை, கனி, காய், விதை என அனைத்தையும் உணர்ந்தவர்கள். அதனை முறையாகப் பயன்படுத்தி எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்து உடலைக் காத்தவர்கள் ; உயிரையும் காத்தவர்கள். பெருந்தொற்று ஏற்படாமல் இருக்கவும் கபசுரக்குடி நீர், மஞ்சள் பூச்சு, மஞ்சள் நீர் என எத்தனையோ வழி முறைகளைக் கற்றுக்கொடுத்தனர். இந்த மஞ்சள் நீரைத் தான் ‘கோல்டன் மில்க்’ என உலகமே கொண்டாடி வருகிறது. பழைய சோற்றின் மகத்துவத்தையும் இன்று உலகம் புரிந்துகொண்டது. குடல் அழற்சிக்கும் பழைய சோறு நல்லது என 2 கோடி செலவு செய்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுபோலவே கீழாநெல்லி, கரிசாலை எனப் பல மருத்துவக் கீரைகளையும் எடுத்துக்காட்டியுள்ளனர். சித்தர்கள் மிக அருமையாத் தங்கள் பாடல்களில் இலைமறைகாயாக இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டியுள்ளார்கள். உயிர்களிடம் கருணைகொண்ட இறைவனின் அருமையினை

       மண்ணளவிட்டாலும் வத்துப் பெருமைக்கே

       எண்ணளவு இல்லையடி குதம்பாய்

       எண்ணளவு இல்லையடி

 

எனக் குதம்பைச் சித்தர் பாடுகிறார். மண்ணைக் கூட எண்ணிவிடலாம். இறைவனின் பெருமையினை எண்ணமுடியாது. வஸ்து – உயர்ந்த பொருள் அதனையே வத்து எனப் பாடியுள்ளார். இறைவனின் புகழையும் இத்தனை என எண்ணவும் முடியாது. எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்குக் கருணை கொண்டவனாகவும் விளங்குகிறான் எனக் கூறியுள்ள அழகினையும்…… எண்ணிப்பார்க்கலாம்தானே. 

       அறத்தை மட்டுமின்றி மறத்தையும் கற்றுக்கொடுத்தவர்கள் சித்தர்கள். அறத்திற்கு, கொடைச்செயலுக்கு மட்டுமே அன்பு வேண்டும் என நினைத்தல் கூடாது. வீரத்திற்கும் அன்பே அடிப்படை. ஒரு சிறுத்தைக்குட்டி கிணற்றில் விழுந்துவிடுகிறது. கயிற்றுவழி ஒருவரை இறக்கி காப்பாற்ற தீயணைப்பு படை வீரர்கள் வருகிறார்கள்.  கயிற்றில் தொங்கிக்கொண்டு ஒருவர் இறங்குகிறார். சிறுத்தையை கூண்டிற்குள் அனுப்ப குச்சியால் தட்டி  உள்ளே கூண்டுக்குள் செல்லும்படி  செய்கிறார். அதுதன்னை அடிப்பதாக எண்ணி அவர் மீது பாய்கிறது. உடனே அவரை மேலே இழுத்துவிடுகிறார்கள். பல மனிதர்களின் பல மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தை கூண்டுக்குள் சென்றுவிடுகிறது. பின்னால் கூண்டினைப் பூட்டி மேலே இழுத்துக் காப்பாற்றுகிறார்கள். பலருடைய முயற்சியால் சிறுத்தைக் காப்பாற்றப்படுகிறது.வீரம் இல்லாமல் காப்பாற்ற முடியுமா. எனவே யாருக்கும் அஞ்சாத வீரத்துடன் நின்று மக்களை ஆபத்திலிருந்து காத்தவர்கள் சித்தர்கள்.

       மனவுறுதி தானிலாத மட்டிப் பிண மாடுகள்

சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்

தினம் தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்

இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள்

 

என்னும் சிவ வாக்கியர் பாடல் துணிவின் அருமையினை எடுத்துக்காட்டும். தன்னுடைய தேவைக்கான பொருளை மட்டுமே ஒருவர் வைத்துக்கொள்ளவேண்டும். தனக்கு ; தன் குடும்பத்திற்கு எனச் சேகரித்து வைத்தல் தவறில்லை. ஆனால் பல தலைமுறைக்கும் சொத்து சேர்த்துவைத்தால் அது உணவில்லாமல்வாடும் ஏழைகளுக்குச் செய்யும் துரோகமாகும். பிறர் பசியில் இருக்கும்போது தான் மட்டும் உண்ணுபவனை மனிதனாகக் கருத முடியுமா? தான் நன்றாக வாழும்பொழுது தன்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்றாக வாழவேண்டும் என நினைத்து உதவிசெய்யவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தன்னுடைய உறவுகளுக்கு ; நட்புகளுக்கு என உதவி செய்யத் தொடங்கிவிட்டால் நாட்டில் ஒருவருக்கும் ஏழ்மை இருக்காது. சிலரிடம் செல்வம் குவிவதே பலர் ஏழ்மையில்வாடக் காரணமாகிறது. கடவுள் எல்லோருக்காகவும் கொடுத்ததை மனிதன் தன் தேவைக்கேற்ப வேலிபோட்டு சொந்தம் கொண்டாடுகிறான். இவ்வாறு இது தன்னுடைய நிலம் என ஒருவன் சொல்லிக்கொள்ளும்போது அதனைக் கேட்டு இறைவன் சிரிக்கிறான். இவனுக்கு ஆறடி மண் தானே சொந்தம் என்பதனை உணராதவனாக இருக்கிறானே என எண்ணுவதும் உண்டு என்பதனை இப்பாடல் விளக்கிச் செல்கிறது. தன்னுடைய தேவைக்கதிகமாக ஏதாவது பொருள் இருந்தாலும் அது பிறர்க்கானது என உணரவேண்டும். அள்ளிக்கொடுக்கத் தயங்கக்கூடாது. தனக்கானது என எண்ணி பிறரையும் உண்ணவிடாது தடுப்பது கஞ்சகுணம். அப்படி இல்லாமல் எல்லோருக்கும் அள்ளிக்கொடுப்பது தெய்வீக குணம். இதனால் ஒரு நொடியில் ஒரு மனிதன் விலங்காகவும் தெய்வமாகவும் மாறிவிடுவதனைக் காணமுடிகிறது.

       ஒரு மன்னன் ஒரு சித்தரைக் கண்டு வணங்கி தனக்கு அருளுமாறு கேட்கிறான். அவரும் ஆசி  கூறுகிறார். தனக்கு ஒரு ஐயம் இருப்பதாகவும் தெளிவு செய்யவும் வேண்டுகிறான். விலங்கிற்கும், தெய்வ மனத்திருக்கும் என்ன வேறுபாடு? எனக்கேட்கிறான்.  உடனே மன்னனிடம், ஒரு முட்டாளை எப்படி உங்கள் மக்கள் மன்னனாக தேர்ந்தெடுத்தார்கள் எனக் கேட்டார். தன்னை முட்டாள் எனக்கூறிவிட்டாரே எனக் கோபம் கொள்கிறான். யாரங்கே? இந்தக் கயவனை கைது செய்யுங்கள். என்றான். உடனே அந்தச  சித்தர் இதுதான் விலங்கு குணம் என்றார். அவன்  வெட்கப்பட்டு தலைகுனிந்து அவருடைய காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்கிறான். இதுதான் தெய்வ குணம் என்றார். உண்மையை உணர்ந்தான். விடைபெறுகிறேன் எனக் கூறி மன நிறைவுடன் விடைபெறுகிறான்.

       தம் பாடல்களில் அழகிய அணிகளைப் பயன்படுத்தியவரை அழகுஅணிசித்தர் என்று குறிப்பிடுவர். எனினும் பேச்சுவழக்கில் அழகுணிசித்தர் எனக் குறிப்பிடப்படுகிறார். இவரே ‘கண்ணம்மா’ என விளித்துப் பாடல் பாடினார். இவர் அவ்வாறு அழைத்துப்பாடியதைப் போலவே மகாகவி பாரதியாரும் கண்ணம்மா என விளித்துப்பாடி இருக்கிறார்.

வாழைப் பழந்தின்றால் வாய் நோகுமென்று சொல்லித்

தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி

தாழைப்பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ

வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா

வாழ்வெனக்கு வாராதோ

 

எனப் பாடுகிறார். வாழைப்பழம் தின்றால் வாய் வலிக்கும் என்று நினைத்து தாழைப்பழத்தைத் தின்றேன். அதனால் விளைந்த துன்பம் பெரிது. இதில் இடம்பெறும் வாழைப்பழம் என்பது இறைவனை அடையும் மரணமிலாப் பெருவாழ்வு. ஒழுக்கத்தால் கிடைப்பது. நேர்வழியில் செல்வதால் கிடைப்பது. அதனை அடைவது நன்று. அவ்வாறின்றி தாழைப்பழம் என்னும் தாழ்வான வழியில் செல்வதுதான் சுகம் என நினைத்து வாழ்ந்ததால் சாவுக்கான வலி மட்டுமே வந்தது. இப்போது உண்மையினை உணர்ந்துகொண்டேன். வாழைப்பழம் தின்றேன். இறைவனை அடைந்துவிட்டேன். இனி வாழ்வு தானேவரும் எனப் பாடுகிறார் அழுகுணிச்சித்தர்.  

       பானை செய்யச்சொன்னால் யானை வருகிறது. அப்படியென்றால்  பழக்கம் இல்லை என்றுதானே பொருள். அப்படி பானையைச் சீராக வனையும் குயவனைப் போல் ஒவ்வொரு உயிரையும் வனைகிறார் என்பது எத்தனை அழகு.

       அழகிலிருந்து அழகினைக் கொண்டுவரமுடியும். தங்கத்திலிருந்து அணிகலன் செய்வது போல. ஆனால் அழுக்கிலிருந்து அழகினைச் செய்யும் கலை இறைவனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது என்பதனை உணர்ந்து பாடுகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே

வாய்த்த குயவனால் பண்ணும் பாண்டம்

வறகு ஓட்டுக்கும் ஆகாதென்று ஆடாய் பாம்பே

 

என்னும் பாடல் சாக்கடையில் தூய்மை செய்யப்படும் வெள்ளாடைபோல் மனிதன் அழுக்குகளிலிருந்து தூய்மையானவனாக பிறப்பிக்கும் இறைவனின் பெருமையினை எடுத்துக்காட்டுகிறார். உடலின் மேல் தோலினைப் போத்திய அழகும். அதுவும் மென்மையான தோலை உடல்முழுதும் போத்திவிட்டு உடலைத் தாங்கும் பாதத்தையும், கையின் உள்ளங்கையையும் வலிமையாகப் படைத்தனை எண்ணி எண்ணி வியக்கலாம் தானே. உயிர் இருக்கும் வரை அழகிய ஆடை, அணிகலன் என ஜொலிக்கும் இந்த உடம்பாகிய வீடு இறந்தபின் உடனடியாக மண்ணுக்குள் புதைத்து விடுவதனைக் காணமுடிகிறது. நெருங்கிய உறவு என தன்னுடனேயே பிணத்தை வைத்துக்கொள்ளமுடியுமா? முடியாதல்லவா? நாறிவிடும். எனவே வறகு ஓட்டுக்கும் ஆகாதென்றுப் பாடுகிறார். அறுந்த் செருப்பை ஒரு வீட்டில் விட்டுவிட்டு நாளை எடுத்துக்கொள்கிறேன் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால் பிணத்தை வைத்துக்கொள்ளச்சொன்னால் விடுவார்களா?. எனவே தன் உடலைப்போற்ற பிற உயிர்களுக்கு தீங்கு செய்தல் கூடாது என்பதனையும் உணர்த்துகிறார்.

       தண்ணீர் பானையிடம் சலவைப்பெட்டி “நீ எப்படி எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறாய்” எனக் கேட்டது. நான் பிறந்தது மண்ணில் ; உடைந்த பின் கலப்பது மண்ணில் என்னும் உண்மை தெரிந்ததால் குளிர்ச்சியாக இருக்கிறேன் என்றதாம். உண்மை அறிந்தவர்களுக்குத் தண்மை தானே வந்துவிடும்தானே.

       அழுகிய காய்கறிகளைக் கொண்டு நல்ல சமையலை எவ்வாறு செய்யமுடியும் என்பதற்கான விடையாகவே இம்மனிதப் பிறவி படைக்கப்பட்டுள்ளதனையும் எடுத்துக்காட்டுகிறார். அப்படியென்றால் இறைவன் அதிசய சமையல்காரர்தானே. உணவு சமைத்துவிட்டார்கள். உண்பது நம் கடன். வயிறார சுவைப்போம். மனமார விதைப்போம்.

சித்தர்களின் வாழ்வியல் நெறிகளை ; தமிழை ; தத்துவங்களை ; அறிவுரைகளை ; அறவுரைகளை ; முறையாகப் படித்தும் கேட்டும் ; கற்றும் கற்பித்தும் ; கேட்டும் கேட்பித்தும் ; உணர்ந்தும் உணர்த்தியும் நாமும் வளமாக வாழலாம் ; பிறரையும் வளமாக வாழவைக்கலாம்.

 

      

x