படிப்பு எதற்கு ? - கடவுளே சொன்ன கதை
“கடவுளே ! படிக்காத குழந்தையா கொடு” மருத்துவமனையில்
பிரசவப்பிரிவுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த கணவன் வேண்டுகிறான். “குழந்தை பிறக்க
வைப்பதுதான் என் பொறுப்பு. அதற்குப் பின் நீதான் குழந்தையை வளர்க்கிறாய். படிக்கவைப்பதும்
மறுப்பதும் உன் பொறுப்பு. புரிகிறதா” என்றார் கடவுள். “என்ன கடவுளே. இப்படி சொல்லிவிட்டீர்”
என்றான் அந்த பக்தன். “சரி! கவலைப் படாதே ! அந்த வேலையைத் திரைப்படமும் தொடர்களும்
பார்த்துக்கொள்ளும். இல்லாவிட்டால் மதுவும், புகையும் பார்த்துக்கொள்ளும். அதுவும்
இல்லையெனில் தீய பழக்கமுடைய நண்பர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கடவுள் சொல்கிறார்.
“அப்படியென்றால் என்மகனை நீ இந்த நிலையிலிருந்து காப்பாற்றமாட்டாயா?” எனக்கேட்கிறான்.
“யார் என்ன கேட்கிறார்களோ அதைத்தான் கொடுப்பேன். எது நல்லது? எது கெட்டது ? யாரை நம்பவேண்டும்?
யாரை நம்பக்கூடாது? என்னும் தெளிவையும் கொடுத்துவிட்டேன். வேறு என்ன செய்யவேண்டும்”
எனக் கடவுள் கேட்டார். வேறு எதுவும் பேசமுடியாமல் திகைத்துவிடுகிறான் பக்தன்.
அந்த இடைவெளியில் கடவுள் கேட்கிறார் “நான்
ஒன்று உன்னைக் கேட்கட்டுமா?”. “கேளுங்கள்” என்றான் பக்தன். “நீ எதற்குப் படிக்காத குழந்தையைக்
கேட்கிறாய்” என்றார் கடவுள். “படித்தால் வேறு எந்த வேலையும் செய்யமாட்டன். குழந்தை
படிக்கிறான் என எந்த வேலையும் சொல்லவும் முடியாது. கடைக்குச் செல்லவும், திருமணம்,
விழாக்கள் என எந்த விழாக்களுக்கு அழைத்துச்செல்லவும் முடியாது. திருநீறு அணிவது, கயிறுகட்டுவது
பொட்டுவைத்துக்கொள்வது என எந்தப் பழக்கவழக்கமும் பின்பற்றமுடியாது. தாய்மொழியில் பேசமுடியாது.
பிறமொழியில் பேசத்திணறவேண்டும். தாய்மொழியில் பேசினால் தண்டம் விதிப்பார்கள். எந்தக்கேள்வியும்
கேட்கமுடியாது. கேட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என அச்சுறுத்துவார்கள். படித்தால்
இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன” எனக் கூறினான் பக்தன். “அடடா ! இவ்வளவு
பிரச்சினைகளா ! இது எதுவும் தெரியாமல் நாள்தோறும் எத்தனையோபேர் என்னிடம் வந்து என்
பிள்ளைக்கு நல்ல படிப்பைக்கொடு” என என்னிடம் வேண்டுகிறார்களே” என்றார் கடவுள்.
“அப்படித்தான் வேண்டுவார்கள் கடவுளே. காலம் போகப்போகத்தான்
குழந்தைகளின் மனநிலையை சரியாக்குதல் எத்தனை கடினம் என்பது புரியும். குழந்தையாக இருக்கும்போதுதான்
அவர்களைப் பாதுகாப்பது கடினம். ‘வளர்ந்தபின்னாலே நிம்மதியாக இருக்கலாம்’ என எண்ணுவார்கள்.
ஆனால் காலம் செல்லச்செல்ல அவர்களுக்கு பிரச்சினைகள் பெருகிக்கொண்டுதான் இருக்குமேயன்றி
குறைவதில்லை. அப்போதுதான் உன்னிடம் வருவார்கள் கடவுளே” என்றான். “நீ மட்டும் எப்படி
பிறப்பதற்கு முன்னரே கேட்டுவிட்டாய்” என்றார் கடவுள்.
“அதுவா! நேற்று எங்கள் வீட்டுப் பக்கத்துவீட்டில்
ஒரு கோடீஸ்வரர் இறந்துவிட்டார். அவர் பிணத்தை எரித்து சடங்குகளைச்செய்ய வெளிநாட்டில்
பணிசெய்துகொண்டிருந்த மகனை வரச்சொன்னார்கள். “வீடியோ காலில் வாருங்கள். இங்கிருந்தே
கொள்ளிவைத்துவிடுகிறேன். நீங்கள் தொடர்ந்து சடங்குகளைச் செய்துவிடுங்கள்” எனக் கூறினான்.
அதனைக்கேட்டு அவனுடைய தாய் அழுதுஅழுது கன்னங்கள் வீங்கி காய்ச்சல்வந்து மருத்துவமனையில்
இருக்கிறார். அப்போதுதான் பணம் எவ்வளவு இருந்தாலும் குணம்தான் முக்கியம் என்பது தெரிந்தது.
அதுமட்டுமன்று படித்ததால்தானே வெளிநாட்டுக்குச் செல்கிறான். படிக்காவிட்டால் தாய்தந்தையோடு
நிலத்தையும் ஆடுமாடுகளையும் பார்த்துக்கொள்வான். இயற்கையான உணவு உண்பான். உடல் நலமும்
நன்றாக இருக்கும். நாள்தோறும் கடவுளை வணங்கமுடியும். திருநீறு அணியமுடியும். கையிலும்
கழுத்திலும் கயிறு அணிந்துகொள்ளமுடியும். யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக வாழமுடியும்”
என்றான். “படிப்பதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?” என்றார் கடவுள்.
“நீங்கள் பள்ளிக்கூடம் சேர்ந்தால்தான் தெரியும்.
காலையில் ஆட்டோவிலோ வேனிலோ உங்களை அடைத்துச்செல்லும் ஒரே நாளில் அவ்வளவுதான். நீங்கள்
தனியாக ஒரு அறையில் இருந்து பழக்கப்பட்டவராயிற்றே. உங்களால் முடியுமா? அதுவும் நல்ல
ஆட்டோ ஓட்டுநராக இருந்தால் தப்பித்தீர். இல்லாவிட்டால் ஆட்டுகிற ஆட்டத்தில் பள்ளிக்குச்சேர்வதற்குள்
அவ்வளவுதான்” என்றான் பக்தன். “சரி! உன் புலம்பலைக்கேட்டு வந்தால் என்னையே நீ பள்ளியில்
சேர்த்துவிடுகிறாய். நான் வருகிறேன்” எனக்கூறிவிட்டு கடவுள் புறப்படுகிறார்.
“கடவுளே கொஞ்சம் நில்லுங்கள். எங்கள் உணவுக்குத்
தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்” என்றான் பக்தன். “மனிதர்களின்
தேவைக்கு மேலாகவே உணவு கொடுத்துவிட்டேன். அதனை ஒளித்துவைத்துக்கொள்ளாமல் இருந்தால்
ஒருவர்கூட வறுமையில் சாகமாட்டார்கள். தன்னலத்தால் திருட்டுத்தனமாக ஒளித்துவைப்பவர்களால்தான்
நாள்தோறும் பலர் வறுமையால் இறக்கிறார்கள்.
இதையெல்லாம் என்னால் பார்க்கமுடியவில்லை. கோவிலுக்குள் இருப்பதே நன்றாக இருக்கிறது.
அன்புடையவர்கள் மட்டுமே அங்குவருவதால் அவர்களுக்கு அருள்வது எளிமையாகவும் இருக்கிறது”
என்றார் கடவுள். “அப்படியென்றால் வறுமையில் சாவது உங்களுக்குச் சம்மதமா?”எனக்கேட்டான்
பக்தன்.
“நான் ஒருகதை சொல்லட்டுமா” எனக்கேட்டார் கடவுள்.
“சொல்லுங்களேன்” என்றான் பக்தன். ஒரு ஓட்டலுக்கு நான்குபேர் குடும்பத்துடன் செல்கின்றனர்.
செல்வந்தர்கள் போல நால்வர் சாப்பிட எட்டுபேர் சாப்பிடுவதுபோல் பல உணவுகளைக் கேட்டார்கள்.
பணிவுடன் பரிமாறப்படுகிறது. விருப்பமான உணவுகளை உண்டுவிட்டனர். மீதமுள்ள உணவை அப்படியே
விட்டுவிட்டார்கள். கடைசியில் கட்டணத்திற்கான
சீட்டினைக் கொடுத்தார்கள். இரண்டு சீட்டு இருந்தது ஒன்றில் முந்நூறு என்றும் இரண்டாவது
சீட்டில் அறுநூறு என்றும் இருந்தது. மொத்தம் தொள்ளாயிரம் என்றனர். “ஏன்” எனக்கேட்டார்
செல்வந்தர். “இந்த முந்நூறு ரூபாய் சீட்டு நீங்கள் உண்ட உணவிற்கு. அறுநூறு ரூபாய் நீங்கள்
வீண்செய்த உணவிற்கான தண்டம்” என்றார் உணவு பரிமாறியவர் கூறினார். “ஏன்” எனக்கேட்டார்
செல்வந்தர். நீங்கள் உண்ட உணவு கடவுள் உங்களுக்காக கொடுத்த உணவு . நீங்கள் வீண்செய்த
உணவானது, வேறு ஒருவருக்கான உணவு. அதனால் அதற்கு
இருபங்கு கட்டணம். மேலும் இனி உங்களுக்கு இந்த ஓட்டலில் உணவு வழங்கத்தடையும் விதிக்கப்பட்டுவிட்டது.
இனி தயவுசெய்து இந்த ஓட்டலுக்கு வரவேண்டாம் என்றனர். “ஏன்” எனக் கேட்டார் செல்வந்தர்.
“இந்த ஓட்டல் கடவுளின் கருணையால் நடைபெறுவது. எத்தனை ஏழைகளின் உழைப்பை வீணாக்கினீர்”
என்றார் பணியாளர். “பொறுத்தருள்க” என்றார் செல்வந்தர். “பெரிய சொற்களையெல்லாம் சொல்லாதீர்கள்.
இந்த வீணான உணவை நீங்கள் விரும்பினால் கட்டிக்கொடுக்கிறோம். அதை யாராவது ஏழைகளுக்குக்
கொடுத்துவிட்டால் உங்களை அடுத்தமுறை வரவேற்போம்” என்றார். “அப்படியா கொண்டுவந்துகொடுங்கள்.
யாருக்காவது கொடுத்துவிடுகிறேன்” என்றார் செல்வந்தர். புன்னகையுடன் கட்டிக்கொடுத்தனர்.
இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புடன் வாழ்ந்தால் வறுமை இருக்குமா?” எனக்கேட்டார் கடவுள்.
எல்லாவற்றிற்கும் நாங்களே காரணமாகிவிட்டு உன்னைக் குறைசொல்கிறோம் பொறுத்தருள்க கடவுளே”
என்றான் பக்தன்.
“சரி நான் செல்லட்டுமா?”. என்றார் கடவுள்.
உள்ளே “குவா குவா” என்று புதிய உயிரின் ஓசை கேட்கிறது.