தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 25 மே, 2019

இக்காலத்தமிழர் வாழ்வில் பாவேந்தர் - Paaventhar Bharathidasan


இக்காலத்தமிழர் வாழ்வில் பாவேந்தர்

(முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்த்துறைத்தலைவர், அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால் – 609 605. உலாப்பேசி : 99406 84775.)

காலத்தை வென்ற கவிஞர்கள் என்போர் காலத்தால் அழிக்க இயலாது இவ்வுலகில் நிலைபெற்றிருப்பவர்களையே குறிக்கிறது. அவ்வாறு வாழ்வதற்கு ; வழிகாட்டுதற்கு அவர்களுடைய எழுத்துக்களே துணையாகின்றன. அவ்வரிசையில் சங்க இலக்கியப் புலவர்கள் முதல் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் வரை பலர் உளர் என்பதனைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.பாவேந்தர் பாரதிதாசனின் எழுத்துக்களும் அவ்வாறு இக்காலத் தமிழர்க்குத் துணைநிற்பதனை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

தமிழரும் மொழிப்போரும்

        இன்றும் பழங்காலம் போலவே உலகம் முழுதும் தமிழர்கள் விரவியுள்ளனர்.அக்காலத்தில் ஆட்சி நடத்துதற்கும் வணிகம் செய்தற்கும் பிற நாட்டிற்குச் சென்ற தமிழர் இன்று பணிக்காக அவ்வாறு விரவியுள்ளதனைக் காணமுடிகிறது. ஆளும் இனமாகவும் ; உழைக்கும் வளமாகவும் நின்ற தமிழர் நாளடைவில் பொருளாதார ; அரசியல்  காரணங்களால் தேய்ந்து குறுகி இன்று நிலப்பரப்பிலும் வளப்பரப்பிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டதனை அறிந்துகொள்ளமுடிகிறது. எனவே இன்று நிலப்பிரச்சினைகளுக்கும் நீர் பிரச்சினைகளுக்கும் பிறரை எதிர்பார்த்து நிற்கும் அவலநிலை பெருகிவிட்டதனையும் காணமுடிகிறது. எனினும் தன்னிலையிலிருந்து தாழாது நிற்கும் தமிழரின் பழம் பெருமையினை

        முதலில் தோன்றிய மனிதன் தமிழன் ; முதல்மொழி தமிழ்மொழி – ஆதலால்

          புதுவாழ்வின் வேர் தமிழர் பண்பாடே – பிறக்கும் போதே ; முதுகிற் புண்படாதவன் தமிழன் – போர் எனில்

          மொய்குழல் முத்தமென் றெண்ணுவான் ; மதிப்போடு வாழ்பவன் தமிழன்

வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்  (பாரதிதாசன் கவிதைகள் ; தமிழன் )

என்னும் அடிகள் புலப்படுத்தி நிற்கின்றன.மனித இனம் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதற்காக பொறுமையுடன் நிற்கும் தமிழரின் வீரத்தைக் கிள்ளிப்பார்க்கும் நிலை இன்று பெருகிவருவதனையும் காணமுடிகிறது. அமெரிக்கா தமிழ்மொழியைப் பழமையான மொழி என அறிவித்தும் ஆஸ்திரேலியா தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்கி ஒப்புதல் அளித்தும் பெருமைபடுத்தி வரும் இன்றைய சூழலில் தமிழகத்தில் பயிற்றுமொழியாகக் கூட தமிழ் மொழியை ஏற்றுக்கொள்ளாத சிலரின் வஞ்சகப்போக்கினைக்காணமுடிகிறது.  அத்தகைய கயவர்களைநல்வழிப்படுத்தும் வகையில்

          தமிழர்க்குத் தமிழே தாய்மொழி என்றோம் ; தமிழகம் தமிழர்க்குத் தாயகம் என்றோம்

          தமிழ் நாட்டில் அயலார்க் கினி என்ன வேலை ? ; தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை ? (புலிக்கு நாய் எந்த மூலை)

எனப் பாடியுள்ளதனைக் காணமுடிகிறது.தாய்நாட்டில் தாய்மொழியினை எதிர்க்கும் அவலம் இங்கன்றி வேறு எங்கும் இல்லை.தமிழ்மொழியின் பெருமையினை உணராததே இதற்குக் காரணம் என்பது தெளிவு.தமிழ்மொழி எந்நிலையிலும் உயர்தனிச்செம்மொழியாக இருப்பதனை நிறுவ இயலாமலே பிறமொழிகளின் பெருமையைப் பேசி வரும் அறியாமை சிலரிடையே நாளுக்கு நாள் பரவி வருவதனையும் அறியமுடிகிறது. இந்நிலையினைக்களைய வேண்டிய கடப்பாடு தமிழர் ஒவ்வொருவர்க்கும் இருப்பதனை இவ்வடிகள் உணர்த்தி நிற்கின்றன.

தாயாம் தமிழில் தரும் கவியின் நற்பயனைச் ; சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை

அயலார் சுவை கண்டறிவித்தார் ; பின்னர் ;பயன் தெரிந்தார் நம் தமிழர் என்றுரைத்தார் பாரதியார்

நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள் – வெல்ல வருந் திருநாள் (தேன் கவிகள் தேவை)

என்னும் அடிகள் தமிழர் தம் பெருமையினை அயலார் வாயிலாகவே அறிந்துகொள்ளும் நிலையில் இருப்பதனை மகாகவி பாரதியாரின் வழி எடுத்துக்காட்டியுள்ளார் பாவேந்தர்.தமிழ்மொழியின் கவி இனிமையினைத் தெளிந்துகொள்ளும் நாளே தமிழன் வெல்லக்கூடிய நாளாக அமையும் என்பதனையும் புலப்படுத்தியுள்ளார்.மேலும் தமிழர் கவி உணர்வோடு வாழ வேண்டியதன் அவசியத்தினையும் உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.தாய்மொழிப்பற்றின்றி வாழ்தல் நிறைவான வாழ்வாகாது. இதன்வழிமொழிப்பற்றுடன் வாழ்வதே இனத்தை உணர்த்தும் ;உயர்த்தும் என்னும் அருமையினையும் உணர்த்தியுள்ளார் பாவேந்தர்.

தமிழச்சியின் வீரநிலை

        பெண்களின்நிலை இன்றும் கேள்விக்குரியதாகவே இருக்கும் நிலையினைக் காணமுடிகிறது. தம்மைக்காத்துக்கொள்வதே பெரிதென எண்ணி வாழும் பெண்களால் பிறரைக்காத்து வாழும் சூழலையும் தம் இனத்தைப் போற்றி வாழும் சூழலையும் எண்ணிப்பார்க்கவேஇயலாதெனத் தெளியலாம். பல சட்டங்களும் திட்டங்களும் பெண்களுக்காகவே இயற்றப்பட்டுள்ள நிலையிலும் பெண்கள் தாழ்ந்து நிற்கும் நிலை மாற வேண்டும் என்னும்நோக்கில் பாவேந்தரின் தமிழச்சியின் வீரம் புலப்படுகிறது. தேசிங்கினை எதிர்த்த சுப்பம்மாவின் வீரத்தினை

        வெற்பை இடித்துவிடும் – உனது ; வீரத்தையும் காணும்

        நிற்க மனமிருந்தால் – நின்றுபார் ; நெஞ்சைப் பிளக்கும் என் கை (தமிழச்சியின் கத்தி)

என்னும் அடிகளின் வழி உணர்த்துகிறார் பாவேந்தர்.மக்களாட்சி நிலவும் இக்காலத்திலும் பெண்கள் பாதுகாப்புமின்றி அச்சத்துடன் வாழ்வதனையும் அங்காங்கே இன்றும் காணமுடிகிறது.

தலை நிமிரும் தமிழினம்

தமிழ் வாழிடங்களிலெல்லாம் தமிழர் வாழ இயலும் என்னும் அடிப்படை உணர்வை மறந்து சிலர் தமிழ் மொழிக்கு எதிராகச் செயல்படுவதனைக் காணமுடிகிறது.பண்பாட்டினையும் அறத்தையும் கற்றுக்கொடுத்த தமிழினம் இன்று பிற நாட்டினரைக் கண்டு மாறி வரும் நிலை ஏமாற்றத்திற்குரியதாகவே அமைகிறது.அவ்வாறின்றி தம் நிலையை உணர்ந்து வாழவும் அவ்வாறே பிறருக்கு வழிகாட்டவும் துணிதல் வேண்டும். எந்நிலையிலும் தமிழர் வாழ்வே சிறந்தது என்பதனை உணரவும் ; உணர்த்தவும் வேண்டும். இந்நிலையினை உணர்ந்து இன்று பல மொழிபெயப்பு நூல்கள் வெளிவருவதனைக் காணமுடிகிறது.தமிழ் இலக்கியங்கள் பிறர் கற்கும் வகையில் இணையத்தில் உலாவருவதனையும் நூலகங்கள் வழி இளையதலைமுறைக்கு வழிகாட்டி வருவதனையும் காணமுடிகிறது. இவ்வாறு வாழ்வதே தமிழரின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் என உணர்த்தியுள்ளதனை

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் :ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும் ;தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்

இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் :எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச்சொல்லித்

தலைமுறைகள் பல கழித்தோம் குறை களைந்தோமில்லை :தகத்தகாய தமிழைத் தாபிப்போம் வாரீர்.

(தமிழ் வளர்ச்சி -2)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.தமிழ்மொழியைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஆற்றல் தமிழுக்குண்டு என்பதோடு தமிழர்க்கும் உண்டென்பதனை நிறுவ வேண்டிய கடப்பாட்டினை இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.

பெண்ணினம் வாழட்டும்

        மானிட வளர்ச்சியில் ஆணுக்கு இணையான இடம் பெண்ணுக்கு உண்டென்பதனை வலியுறுத்துகிறார் பாவேந்தர்.இதனை உணராதுபெண்களுக்குக் கேடு செய்யும் ஆண்களின் ஆணவப்போக்கால் சமூகம் கேடடைந்து வருவதனையும் காணமுடிகிறது. வன்கொடுமை, வரதட்சணை, கொலை, கொள்ளை எனப் பெண்களுக்கு எதிராகப் பல கேடுகள் நிகழ்த்தும் ஆண்களை நோக்கி

பெண்கள் இட்ட பிச்சைதான் – ஆண்கள் பெற்ற இன்பம் அனைத்தும் (இன்பம் அனைத்தும்-1)

எனப் பாடியுள்ளதனைக் காணமுடிகிறது.இன்று ஆணுக்கு நிகராக எல்லா நிலைகளிலும் பெண்கள் உயர்ந்து நிற்பதற்கு இவ்வடிகளே அடித்தளமாக நிற்பதனையும் உணரமுடிகிறது.பெண்ணின்றி எவ்வுயிரும் பிறத்தல் இயலாது என்பதனை உணர்ந்து பெண்ணைப் போற்றும் சமூகம் பெருகி வருவதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.ஆண்கள் பெண்களின் கட்டுப்படுத்த இயலாத அறிவுத்திறத்தினை உணர்ந்துள்ளதே காரணம் எனத் தெளியமுடிகிறது.

கனவு தேசம்.

        ஒருவர் வாழ ஒருவர் வீழ வாழக்கூடிய வாழ்வு நல்வாழ்வாக அமையாது. எல்லோரும் நன்கு வாழ்தற்கான அடிப்படைத் தேவைகளை உடைய நாடாக அமைவதோடு அவற்றை முறையாக பகிர்ந்தளிக்கும் நாடே நல்ல நாடாக அமையும் என்பதனை உணர்த்துகிறார் பாவேந்தர். அவ்வாறின்றி வலியவர் வாழவும் எளியவர் வீழவும் வாழும் வாழ்க்கை நிலை ஏற்படின் அந்நிலை ஒழிதல் நன்று எனப்பாடுகிறார்.

ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் ; உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம் (புரட்சிக்கவி)

என்னும் அடிகள் பாவேந்தரின் உள்ளத்தை எடுத்துரைக்கின்றன.இவ்வாறு பாவேந்தரின் படைப்புகள் ஒவ்வொன்றிலும் பொதுவுடைமைச் சிந்தனை எங்கும் விரவியுள்ளதனைக் காணமுடிகிறது.இக்காலத் தமிழர் வாழ்விலும் இந்நிலை தொடர்ந்துவருவதனையும் காணமுடிகிறது.எல்லா உயிர்களுக்கும் இப்பூவுலகில் வாழ்தற்கு முழுமையான உரிமை உண்டு.எனினும் மானிட இனம் தம் ஆறறிவால் பிற உயிரினங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.இதனிலும் நிறைவடையாத மானிடர் தம்மைப் போலவே பிற மானிடரும் என எண்ணாது ஏழைகளை ஏய்த்து வாழும் சூழல் இருப்பதனையும் புலப்படுத்தியுள்ளார் பாவேந்தர். இக்கொடுமை மாற வேண்டுமென்பதனை

வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி ; மக்களெல்லாம் ஒப்புடையார்

ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? – இதை ; இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ (சாய்ந்த தராசு 1,2)

என்னும் அடிகளின் வழி அறிவுறுத்துகிறார்.பிறர் வீழ்வதைக்கண்டு மகிழ்ச்சியடையும் போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தினைப் புலப்படுத்தியுள்ளார் பாவேந்தர்.

மறு மணம் வேண்டும்

ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதே இல்லறத்தின் மாண்பாகக் கருதப்படுகிறது.எனினும் வாழ்க்கைத் துணையில் ஒருவர் மற்றொருவரை இழந்துவிட்டால் வாழ்க்கை இருளாக மாறிவிடும்; மாற்றிவிடும்.இச்சூழல் கொடுமையானதாகவே அமைந்துவிடுகிறது. இந்நிலையினை மாற்றவேண்டும் என்னும் நோக்கில்

தமிழர் வாழ்வுசிற்சில ஆண்டுகள் முற்படவே – ஒரு ; சின்னக் குழந்தையை நீ மணந்தாய்

குற்றம் புரிந்தனை இவ்விடத்தே – அலங் – கோலமென்றாள் அந்தச் சுந்தரன் தாய்

புற்றரவொத்தது தாயர் உள்ளம் – அங்குப் ;புன்னகை கொண்டது மூடத்தனம்

(காதல் குற்றவாளிகள்)

எனப்பாடியுள்ளார் பாவேந்தர்.பழமைவாதிகளின் எண்ணத்தால் புதிய இல்லற வாழ்வுக்கு வழியின்றி போகும் கைம்பெண் நிலையினை மாற்ற வேண்டும் என்னும் கனவு இன்று நினைவாகி உள்ளதனைக் காணமுடிகிறது. ஆண்கள் கைம்பெண்களை வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள அணியமாக நிற்கும் நிலையும் பெண்கள் அந்நிலையை ஏற்றுக்கொள்ளும் வகையில் துணிந்துள்ள திறனையும் காணமுடிகிறது.

உழைப்பின் பெருமையை உணர்

        உலகத்தையே மாற்றி அமைத்த பெருமை உழைப்பாளிகளையே சாரும்.உழைப்பின்றி எந்த வகை மாற்றத்தினையும் காண இயலாது.உழைப்பாளிகளின் உழைப்பால் பல்வேறு வசதிகளைப் பெற்றுப் பயனடையும் பலர் மேலும்மேலும் அவர்களின் உழைப்பைச் சுரண்ட எண்ணுகிறார்களேயன்றி அவர்கள் வாழ்வை உயர்த்த எண்ணுவதில்லை. இதனைக் கண்ட பாவேந்தர்

கையலுத்துக் காலலுத்துக் ; காலமெல்லாம் உழைப்பவர்

கண்டதில்லை ஒரு தானம் – ஆண்டைகள் வீட்டில் ; ஐயருக்கோ கோதானம் (உழைப்பவரும் ஊராள்பவரும்)

எனப் பாடியுள்ளார். எந்திரம் போல் உழைக்கும் மனிதரின் திறத்தைப் பாராட்ட மனமில்லாது மந்திரத்தை ஓதும் பார்ப்பனரின் செயலே பெரிதென எண்ணி மயங்கும் சூழல் இருப்பதனையே பாவேந்தர் படம்பிடித்துக்காட்டியுள்ளார். இன்றும் தமிழர் பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கிநிற்கும் நிலையினைக் காணமுடிகிறது.

ஆடம்பர பக்திநிலை

        இறைநிலைக்கோட்பாடு என்பது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் வரையறுக்கப்படுகிறது.இன்றைய ஆடம்பர உலகில் வழிபாட்டினைக் கூட கடமைக்காக மட்டுமே பின்பற்றும் நிலையாக உள்ளதனைக் காணமுடிகிறது.உள்ளத்தூய்மைக்கு வழிகாட்டும் ஒருமை நிலைப்பாட்டினை பின்பற்றும் முயற்சி இருப்பதில்லை.மாறாக இறைவனைக் காண ஆடம்பரமாகச் செல்லும் நிலையினையே காணமுடிகிறது. அணிகலன்களை அணிந்துகொண்டு தம் பகட்டை வெளிப்படுத்தும் இடமாகவே வழிபாட்டுத்தலங்களை எண்ணும் நிலையினை

நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப்பேயன்றி ; நீள் இமைகள் உதடு நாக்கு

நிறைய நகை போடலாம் கோயிலில் முகம் பார்க்க ; நிலைக்கண்ணாடியும் உண்டென

இலை போட்டழைத்ததும்  நகைபோட்ட பக்தர்கள் ; எல்லாரும் வந்து சேர்ந்தார்

ஏசுநாதர் மட்டும் அங்குவரவில்லையே ; இனிய பாரததேசமே (ஏசுநாதர் ஏன் வரவில்லை)

என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார்.அணிகலன்கள் அணியக்கூடாது என்றதும் வராத மக்கள் எதை வேண்டுமானாலும் அணியலாம். அத்தகைய அணிகலன்களைத் திருத்திக்கொள்ள நிலைக்கண்ணாடியும் வைக்கப்படும் என எள்ளல் சுவையுடன் பக்திநிலையைப் பாவேந்தர் எடுத்துக்காட்டியுள்ள திறத்தையும் காணமுடிகிறது.

விட்டுக்கொடுப்பதே வாழ்வு

        விட்டுக்கொடுப்பவர்களே வாழ்வில் நிறை வாழ்க்கை வாழ்கின்றனர்.எனவே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை துறவுக்காக மட்டுமின்றி இல்லற வாழ்வுக்கும் துணை நிற்கும் செயலாகவே இருப்பதனைக் காணமுடிகிறது.அவ்வாறின்றி மனக்கசப்புடன் வாழ்ந்தால் இல்லற வாழ்வில் ஒருவர் மற்றவர்க்குச் செய்யும் நற்செயல்கள் கூட தீயனவாகவே அமையும். இதனால் இல்லறமே பாழாகும் என்பதனை

மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏதோ ; மனக்கசப்பு வரல் இயற்கை தினையை நீதான்

பனையாக்கி நம்உயர்ந்த வாழ்வின்பத்தைப் ; பாழாக்க எண்ணுவதா? ….(மெய்யன்பு)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன.எந்தச் செயலையும் சிறிதாக எண்ணுவதன் வழி ஒருவர் மற்றொருவரிடம் அன்பு நிலையுடன் வாழ முடியும் என அறிவுறுத்தியுள்ளார்.இதற்காகவே திருமணம் முதலே பல்வேறு சடங்குமுறைகள் இருந்து வருவதனையும் இங்கு எண்ணிப்பார்க்கமுடிகிறது.



உழவரை எழச்செய்வோம்

        உணவிடும் உழவர் வாழ்க்கையைக் காத்தலே நாட்டினுடைய முதற் பணியாக அமைதல் வேண்டும்.அவ்வாறின்றி அவர்கள் நலனைக் கருத்தில் கொள்ளாது செயல்படும் செயல்பாட்டாலேயே செழித்த நிலங்கள் எல்லாம் வறண்ட நிலங்களாய் மாறி வருவதனைக் காணமுடிகிறது. பிறருக்கு உணவிட்ட குற்றத்திற்காக ஏழ்மை மட்டுமே பரிசாக இருக்கும் நிலையுள்ளதனை

அக்குடியானவன் அரசர் செல்வரோடு – இக்கொடு நாட்டில் இருப்பதும் உண்மை

அழகிய நகரை அவன் அறிந்ததில்லை; அறுசுவை உணவுக்கு – அவன் வாழ்ந்ததில்லை

அழகிய நகருக்கு- அறுசுவை உணவை ; வழங்குவது அவனது வழக்கம்; அதனை

விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம் (குடியானவன்)

என்னும் அடிகளின் வழி உணர்த்தியுள்ளார்.இன்றைக்குத் தாம் வளமாக வாழ்ந்தால் போதும் என எண்ணி உழவர் வாழ்வு குறித்த ஆர்வமின்றி வாழும் சூழல் வளர்ந்துவருகிறது. அடிமரம் வெட்டுப்படுவது குறித்த விழிப்புணர்வின்றி கிளைகள் தென்றலோடு அசைந்தாடி மகிழ்வது போல் உழவர்கள் வாழ்வினை வளமாக்க நினையாது தம் வாழ்வே பெரிதென வாழும் அறியாமை நிலையினை இப்பாடல் எடுத்துரைக்கிறது. உழவரைச் சுரண்டி வாழும் அவல நிலை மாற வேண்டும் எனப் பாடியுள்ள கவித்திறத்தையும் இங்கு காணமுடிகிறது.

மக்களை வார்க்கும் திரைப்படம்

        மக்களின் பொழுதுபோக்கிற்காக அமைந்த திரைப்படங்கள் இன்று மக்கள் பொழுதினையே விழுங்கி விடுவதனைக் காணமுடிகிறது.மக்களின் ஆக்க நிலைகளைப் படிப்படியாகத் தேய்த்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதனையும் காணமுடிகிறது.திறத்தை மேம்படுத்தும் ஆக்கச் செயல்களுக்கு துணை நிற்பதாக அமைந்த இலக்கியங்கள் இன்று அறிவை மழுங்கடிக்கும் காட்சிகளாக அமைந்துவிட்டதனையும் காணமுடிகிறது.அவ்வாறின்றி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கடப்பாடு திரைத்துறையினர்க்கு இருப்பதனை

சீரிய நற் கொள்கையினை எடுத்துக்காட்ட ; சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்

கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் ; கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்?

(நாடகம் சினிமா நிலை)

என்னும் அடிகளின் வழி புலப்படுத்தியுள்ளார்.பணத்தை ஆக்குவதற்காகவே மட்டுமே திரைத்துறையினர் செயல்படுவது கொடுமையான செயலாகும் என எடுத்துக்காட்டியுள்ளதும் இங்கு எண்ணத்தக்கது.

நிறைவாக

        பாவேந்தரின் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்கள் என்பதற்கு அவருடைய பாடல்களே சான்றாவதனை உணரமுடிகிறது.

        பாவேந்தரின் இலக்கிய வரிகள் இன்றைய நடைமுறை மாற்றங்களுக்கு நிமித்தங்களாக இருப்பதனை உணர்ந்துக்கொள்ளமுடிகிறது.

        கவிஞன் சமுதாயத்தை மாற்றும் வல்லமை கொண்டவன் என்பதனைப் பாவேந்தரின் பெண்ணடிமைத்தனம், மறுமணம், சமத்துவம் என்னும் கொள்கைகளின் வழி நிறுவியுள்ளதனைக் காணமுடிகிறது.

        சாதி மதவுணர்களால் அடிமைப்படுத்தும் நிலைகளிலிருந்து விடுபடுதல் கானல் நீராகும் என எண்ணிய நிலையினைப் பாவேந்தரின் பாடல்கள் சாடியுள்ளதனைக் காணமுடிகிறது.இந்நிலையிலிருந்து விடுபட்டு இன்று கல்வியாலும் திறத்தாலும் உயர்ந்த நிலையை சமுதாயம் அடைந்துள்ளதே அவருடைய பாடல்களின் திறம் எனத் தெளியமுடிகிறது.

        பொறுப்புணர்வு என்பது ஓர் இனத்திற்கோ குழுவிற்கோ உரியதன்று.ஒவ்வொரு தொழிலிலும் அதனுடைய பங்கு பெரிது என உணரவேண்டும் என்னும் பாவேந்தரின் வழிகாட்டுதல்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

        மொழியுணர்வும் மொழிப்பற்றும் ஓர் இனத்தின் மரபுகளையும் பண்பாட்டினையும் கட்டிக்காக்கும் பெருமையுடையன.எனவே அவற்றை மறந்து வாழ்வது அடிமை வாழ்வுக்கு ஒப்பாகும் என்பதனை உணர்த்தியுள்ளார் பாவேந்தர்.இதன்வழி துறைதோறும் தமிழ் வளர்க்கும் பணியினைச் செய்வதே அறம் என்பதனைப் பாவேந்தரின் பாடல்கள் தெளிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக