ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’
என்னை எங்காவது வெளியில் அழைத்துச்செல்கிறீர்களா?
எனக் கேட்காத குழந்தைகள் உண்டா? அல்லது பெரியவர்கள்தான் உண்டா? சுதந்திரமாகத் திரிவதில்
இருக்கும் சுகமே சுகம்தான். எல்லாவசதிகளும் இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் சிறைபட்டிருப்பது
கொடுமைதானே. அப்படித்தான் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதனை எதிர்த்துப்போராடியவர்கள் வேர்களைப் போல் அடையாமல்
காணப்படாமலே மறைந்துவிட்டனர். அவர்களைக் கண்டறிந்து நினைவுகொள்வது நல்லோர் கடமை.
ராணி காயிதின்லியு, நாகா இனத்தைச் சார்ந்த ஆன்மிகத்தலைவராகப்
போற்றப்பட்டவர். தம் மக்களை ஆங்கிலேயர்கள் மலைவாழ்மக்களின் சமயத்திலிருந்து மாற்றியதால்
அவர்களை எதிர்த்துப்போராடினார்.
ஆயுதமேந்தி வருபவர்களுக்கு நேராகப்
புறாக்களை விடுவதும் மலர்களைக் கொடுத்து அமைதிப்பேச்சு நடத்துவதும் தவறென எண்ணியவர்
அவர். எதிரிகள் எந்தமொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் பேசினால்தான் அவர்களுக்குப்
புரியும் என்னும் கொள்கையை முன்னிறுத்தியவர். ஆயுதத்தால் அடக்கிய ஆங்கிலேயரை ஆயுதம்
கொண்டே எதிர்த்தவர். 26 ஜனவரி 1915 இல் மணிப்பூர் அருகில் ‘நுங்கோ’ என்னும் இடத்தில் பிறந்தார். நாகா
மக்களிடையே பெரும் இனமாக விளங்கிய ‘ரோங்க்மீ’ என்னும் மலைவாழ்மக்கள் இனத்தில் பிறந்தார்.
கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வமும் திறமையும் உடையவராக இருந்தாலும் பள்ளிகள் இல்லாததால்
அவரால் முறையான கல்வியைக் கற்கமுடியவில்லை. ஆங்கிலேயர்கள் அங்குள்ள மக்களையெல்லாம்
தம்சமயத்துமக்களாக மாற்றுவதில் தீவிரம் காட்டினர். இதனை எதிர்த்து, இவருடைய உறவினர்
‘ஜெடாநங்க்’ தோற்றுவித்த ‘ஹெரேகா’ என்னும் இயக்கத்தில்தான் தம்மை இணைத்துக்கொண்டார்.
பழமையான ‘நாகா’ மக்களின் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இவருடைய
இனக்குழுவுடன் பிற இனக்குழுக்களும் தம் இனப் பண்பாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்பது
குறித்து எண்ணி ஆங்கிலேயருக்கு எதிராகப்போராடத்தொடங்கினர். ஆங்கிலேயர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக்
கண்டு வருந்தினர். எனவே, பெண்குழந்தைகளையும், மகளிரையும் இணைத்துக்கொண்டார். பெண்களும்
தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த இவ்வாய்ப்பை மகிழ்வுடன் ஏற்றுப் போராடினர்.
துப்பாக்கிகளைக் கண்டறியாத மலைவாழ்மக்களை
ஆங்கிலேயர்கள் அன்றைய புதியகண்டுபிடிப்புகளானத் துப்பாக்கிகளைக் கொண்டு கொன்றுகுவித்தனர்.
எனவே, மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையிலேயே ஆங்கிலேயரை எதிர்த்தனர். “சுதந்திரம் எங்களது பிறப்புரிமை” என்னும் விடுதலை
மந்திரத்தை முழக்கிய பாலகங்காதர திலகரின் பொன்மொழியினைப் பின்பற்றினார். “நாங்கள் சுதந்திரமான
மனிதர்கள். வெள்ளைக்காரர்கள் எங்களை அடிமைப்படுத்தக்கூடாது’ என்னும் முழக்கத்துடன்
போராடினார்.
1931 ஆம் ஆண்டு தமது உறவினரான
‘ஹெரேகா இயக்கத்தின் தலைவர் ஜடோனங்க்,-ஐ கைது செய்து தூக்கிலிட்டது. உடனே ஆங்கிலேயரைக் கண்டு அஞ்சாது, குருவாகத் தாம் எண்ணிய
ஜடோங்கின் தலைமைப்பொறுப்பினை கயிதான்லியு ஏற்றுக்கொண்டார். மக்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுவதற்காகவும்
தலைமையின்றித் தடுமாறாமல் இருக்கவும் தம்இனத்தைக் காப்பதே முதல் கடமை என விழிப்புணர்வூட்டினார்.
ஆங்கிலேயரின் சதி வலையில் சிக்காதீர். என மக்களுக்கு அறிவுறுத்தினார். தேசிய உணர்வினை
உண்டாக்கினார். நாட்டுப்பற்று இருந்தால்தான் பண்பாட்டினைக் காக்கமுடியும் எனத் தெளிவுறுத்தினார்.
மத அமைப்புகள் மக்களை அடிமைப்படுத்தும் வேளையில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக நின்றன. எனவே
இவர் மதத்துவ அமைப்புகளையும் எதிர்த்தார். இவரைக் கண்டுபிடிக்க முடியாமல் ஆங்கிலேய
அரசு திணறியது. மேலும், கண்டுபிடித்துத்தருவோர்க்கு 500 பணமும், பத்தாண்டுகளுக்கான
வரிவிலக்கும் அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் மக்கள் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை.
ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் நின்றனர். அத்தனை மதிப்புக்கொண்டிருந்தனர். அன்று அப்பகுதியில்
பலரும் இவருடைய பெயரையே வைத்திருந்தனர். இதனால் காவல்துறை திண்டாடியது. மக்கள் கொண்ட ஈடுபாட்டால் காவலர்களிடம் சிக்காமலே
போராடினார். மரத்தால் கோட்டை கட்டும் பணியில்
ஈடுபட்டிருக்கும் பொழுது ‘புலோமி’ கிராமத்தில் இவரை ஆங்கிலேயர் கைதுசெய்தனர்.
1932 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு வயது 16. ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. அவருக்குத் துணை நின்றவர்களுக்கும்
ஆயுள்தண்டனையும் தூக்குத்தணடனையும் வழங்கப்பட்டன. 1933 முதல் 1947 வரை பதினைந்து ஆண்டுகள்
பல்வேறு சிறைகளில் அடைத்துக் கொடுமை செய்தனர். பதினைந்து ஆண்டுகள் விடுதலைப்போராட்டத்திற்காக
சிறையில் அடைக்கப்பட்டவர் இவரே. நாட்டு விடுதலைக்குப்
பின்னரே விடுவிக்கப்பட்டார். விடுதலையான பின்னரும் இவர் ‘நாகா’ மக்களின் பண்பாடு மறைந்துபோவதனைக்
கண்டு மனம்வருந்தினார். மலைவாழ்மக்களின் பண்பாட்டை விட்டுவிட்டு ஆங்கிலேயர் மதத்திற்கு
‘நாகா’ மக்கள் மாற்றப்படுவதனை எதிர்த்துப் போராடினார். எனவே மக்கள் இவரை அவர்களுடைய கடவுளாகவே பார்த்தனர். வடகிழக்கு மாநிலங்களின் விடிவெள்ளியாகவே இவர் விளங்கினார்.
நாகா மக்களின் தெய்வமான ‘சேராச்சாமுண்டி’ -இன் வடிவமாகவே இவரைக்கண்டனர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடிய
இவரை 1937 இல் சிறையிலிருந்தபோது பண்டிட் ஜவஹர்லால்
நேரு சந்தித்து அவர் விடுதலைக்கு உறுதியளித்தார்.
‘ராணி’ என்னும் பட்டத்தை வழங்கினார். தியாகியான இவருக்கு 1982 ஆம் ஆண்டு ‘பத்மபூஷன்’
விருதும் வழங்கியது. ‘விவேகானந்தா’ சேவைவிருது 1972 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தியாகிகளுக்காக
வழங்கப்படும் ‘தாமரைப்பத்திர’ விருதும் வழங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் பதினேழாம் நாள்
78 வயதில் மறைந்தார். இவருக்கும் ‘பிர்ஸா முண்டா’ விருதும் இறப்புக்குப்பின் வழங்கப்பட்டது.
அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய வீரம் கொண்டாடப்படுகிறது.
‘மலையின் மகள்’ என ராணி கயிதன்லியு கொண்டாடப்படுகிறார். மக்களுக்காகப்
போராடியவர்களின் வரலாறுதான் மக்களுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. எத்தனையோ மழைத்துளிகளின்
தியாகத்தால்தானே நிலம் செழிக்கிறது. இப்படி எத்தனையோ தியாகிகளின் இரவு பகல் பாராத உழைப்பால்தான்
நாடு பாதுகாப்புடன் திகழ்கிறது.