தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 25 மே, 2019

மகாகவியின் பெண்ணியக் கனவும் நினைவும் Mahakavi Bharathiyars feminism



முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், துணைப்பேராசிரியர், புதுவை அரசு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்புமையம், புதுச்சேரி – 605 008



உலகம் முழுதும் பெண்ணியத்துக்கான குரல் ஓங்கி வரும் நிலை இன்று பரவலாக்கப்பட்டு வருவதனைக் காணமுடிகிறது. பெண்ணியம் என்னும் சொல்லே, பாவமாகக் கருதப்பட்ட காலத்திலிருந்து மாறுபட்டு இன்று தலைநிமிர்ந்து பேசும் நிலைக்கு வளர்ந்துள்ளதனைக் காணமுடிகிறது. இதனைப்  பெண்ணிய வளர்ச்சிப்போக்காகவே நோக்கமுடிகிறது. பெண் விடுதலையினை விரிவாகப் பேச  சொற்களையும் பொருள்களையும் மிக அழுத்தமாக எடுத்துக் கூறியவர் மகாகவி பாரதியார். ”வருமுன் காப்பவன் தான் அறிவாளிஎன்னும் தமிழ்மூதாட்டியின் சொற்களுக்கு உரமூட்டியவர் ; வாழ்ந்து காட்டியவர் ; வழியும் காட்டியவர் மகாகவி பாரதியார். அவருடைய பெண் விடுதலைக்கான சொற்கள் இன்று எங்ஙனம் வளர்ச்சியுற்றுள்ளது என்பதனைக் காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

பெரியசாமியான மகாகவி

மகாகவி பாரதியைச் சின்னசாமி பெற்றெடுத்த பெரியசாமி என்றும் இலக்குமி பெற்றெடுத்த சரஸ்வதி என்றும் முண்டாசு கட்டிய பட்டாசு என்றும் குறிப்பிடுவர் சான்றோர். இவை மூன்றுமே பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தமைக்காக அடுக்கப்பட்ட அடைமொழிகளாகவே கருதமுடிகிறது. தன் குழந்தைகளை மட்டுமே பார்க்காது உலகத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்காகவும் போராடியதால் சாமியில் பெரிய சாமி எனவும், பெண் கல்விக்காகக் குரல்கொடுத்ததால் சரஸ்வதி என்றும் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் எனப் பல கொடுமைகளை இழைத்தோர்க்கு  பாட்டால் வேட்டு வைத்ததால் பட்டாசு எனக் காரணப்பெயராகவும் இவ்வடைகளை நோக்கமுடிகிறது. 

வையம் தழைக்கபெண்ணை மதிக்க

                பெண் நிலை உயர வேண்டும் என்னும் கருத்தில்லார் ஒருவருமிலர்.  அவ்வாறு நினைத்து தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர் ஒரு சிலர். அச்சிலருள் தம் குடும்பத்தில் பெண்ணிய உரிமையை நிலைநாட்டியவர் மிகமிகச் சிலர். அத்தகையோரில் மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பேறுபெற்றவர் மகாகவியே. ஏனெனில் வீடும் நாடும் சீராக முன்னேற வேண்டுமானால் ஆண் பெண் இருவருக்கும் நிகரான வாய்ப்புக் கொடுக்கப்படவேண்டும்.  பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணும் நிலையினைக் களைய வேண்டும். இதற்கு அடிப்படையாக அமையும் பெண் சிசுக்கொலையினை முற்றிலும் ஒழிக்கவேண்டும். இதற்கு ஒரே வழி

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்.



என்னும் அடிகளில் மகாகவி உணர்த்திவிடுகிறார். மகாகவியின் இக்கனவு இன்று நினைவானதாலேயே அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன் நின்று வழிநடத்துவதனைக் காணமுடிகிறது.

பதுமைகளல்ல புதுமைகள்

                பெண்கள் மெல்லியலார் என்பதனாலும் அவர்களின் குரல் ஈர்ப்பு கொண்டதென்பதனாலும் எப்பொருளை அறிமுகம் செய்வதனாலும் அதற்கான ஊடகக் கருவிகளாகப் பெண்களையே பயன்படுத்தப்படுவதனைக் காணமுடிகிறது.  ஆண்கள் ஓட்டும் வாகனத்திற்கும் பெண்களே பதாகைகளாகப் பயன்படுத்தப்படுவது இதற்குச் சிறந்ததொரு காட்டு. பெண்களை இவ்வாறு இழிவுபடுத்தும் போக்கினைக் கண்டு பெண்கள் உமிழ்ந்து தள்ளவேண்டும் எனப் புதுமைப்பெண் கூறுவதனை

                அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் ; அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும் ; உதய கன்னிகள் உரைப்பதைக் கேட்டீரோ



என்னும் அடிகளில் தெளிவுபடுத்துகிறார் மகாகவி.  பெண் நினைத்தால் எதையும் வெல்லமுடியும் எனத் தம் நிலையினை உணர்ந்துகொண்டபோது தம் இனத்தின் பெருமையைக் காத்தல் எளிதெனவும் தெளிந்துகொண்டதனை உணர்த்தியுள்ளார். இதற்கு ஆண் இனம் துணை செய்யத்தேவையில்லை. தடைக்கல்லாக இல்லாமல் இருந்தாலே நன்று. பெண்ணின் வலிமையினை

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம் ; சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்

சக்தி அனந்தம் எல்லையற்றது ; முடிவற்றது

எனச் சக்தியின் பெருமையை உணர்த்தியுள்ளார் மகாகவி. சக்தியைப் பெண்ணாகவும் ஞாயிற்றினை ஆணாகவும் எண்ணில் பெண்ணின் பெருமையை எளிதில் உணர்ந்துகொள்ள இயலும். அறிவியல் கருத்தின்படி பெண் உயிரே முதலில் படைக்கப்பட்டதென்பதும் ; பெண் இனம்  மட்டுமே உள்ள உயிர்கள் இன்றும் நிலைபெற்றிருப்பதனையும் அறிவதன்வழி இவ்வுண்மையின் பெருமையினை எளிதில் உணர்ந்துகொள்ள இயலும். எனவே இனியேனும் பெண்கள் சக்தியற்றவர்கள்  எனக்கூறும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் மகாகவி.

பழியைப் போக்குவோம்

குணம் எனின் அது ஆண் இனத்துக்கே உரியது என்றும் குற்றம் எனில் அது பெண் இனத்துக்கே உரியது என்றும் எண்ணும் காலத்தை மாற்ற விழைந்தார் மகாகவி. எனவேகற்பு நிலை எனச் சொல்ல வந்தால்  இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்றார். அந்நிலையிலும் பெண்ணே குற்றங்களுக்குக் காரணம் எனக் கூறியதைக் கேட்ட மகாகவி தம் கட்டுரையில் அடப் பரம மூடர்களே ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் பதிவிரதைகளாக எப்படி இருக்கமுடியும்என மிகவும் எளிதாக அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார். பெண்ணுக்கு மட்டுமே அறிவுரை கூறித் திருத்த எண்ணும் சமூகத்தில் ஆணுக்கு அறிவுரை கூறும் அழகினை இங்கு எண்ணி மகிழமுடிகிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஆண் குழந்தையினை பெருமிதம் கொண்டவர்களாகச் செல்லம் கொடுத்து வளர்ப்பதனாலேயே பெண் குழந்தைகளை இழிவானவர்களாகக் கருதும் போக்கு நிலவி வருவதனைக் காணமுடிகிறது. ஆண் குழந்தைகளை மிடுக்குடனும் பெண் குழந்தையை அடக்கத்துடனும் வளர்க்கவேண்டும் என்னும் எண்ணமே இருபாலருக்குமான பிற்போக்குத்தனத்தை வளர்த்துவிடுவதனைக் காணமுடிகிறது. அவ்வாறின்றி எக்குழந்தையாயினும் அன்பும் பண்பும் நிறைந்தவர்களாக வளர்க்கவேண்டிய பொறுப்பு குறித்து இன்று அனைவரும் விழிப்புணர்வு பெற்றுள்ளது போற்றத்தக்கதாகவே அமைகிறது. இத்தகைய நிலைக்கு முன்நின்று வழிகாட்டிய பெருமை மகாகவியையே சாரும்.

தன்னிலிருந்து தொடங்குக

                மாற்றம் வேண்டுமாயின் அதை உன்னிலிருந்து தொடங்குஎன்னும் மகாத்மாகாந்தியின் சொற்களை வாழ்க்கைப்பாடமாக்கிக்கொண்டவர் மகாகவி.  ஒரு முறை தனது மகள் தங்கம்மாவை மலைக்கோயிலுக்கு அழைக்க ;அவர் தனியாக வரும் இடர் கருதி மறுக்க ; கோழைத்தனம் எனக்கருதிய மகாகவி தன் அன்பு மகளை அடித்துவிடுகிறார்,  ஊருக்கு உபதேசம் என்றில்லாமல் தன் வீட்டிலேயே தன் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்தவர். காதலைப்பற்றிப் பெருமையாகப் பேசுவோர் கூட தங்கள் வீட்டில் காதல் எனின் மறுத்துவிடுவதும் உண்டு ; மடியச்செய்வதும் உண்டு. ஆனால் மகாகவி தன் மகளிடம் காதலுக்குத் தடையில்லை எனக்கூறியது தம் சொல்லுக்குத் தாமே செயல்வடிவம் கொடுத்த பெருமிதம் எனத்தெளியமுடிகிறது.  பின்னாளில் காதலனைத் தேர்வுசெய்தமைக்கு வருந்தாத அளவிற்குப் பெண்கள், தேர்வுசெய்யும் பக்குவமுடையவர்களாக ; திறமுடையவர்களாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் இதன்வழி உணர்த்தியுள்ளார். தெளிவின்றி கயவர்களிடம் சிக்குண்டு தம் வாழ்க்கையைத் தாமே அழித்துக்கொள்ளும் அறியாமைச் செயலினை இக்கூற்றுடன் ஒப்பு நோக்கலாகாது.

பெண்ணுக்காக நிற்பதே பெருமை

                பெண்ணிலிருந்து பிறந்த ஆண் அப்பெண்ணுக்கு எதிராகவே செயல்படுவது அறியாமையின் உச்சம் ; இழிநிலையின் எச்சம் ; கேடுகளின் உச்சம் என்பதனைத் தெளிவுபடுத்துகிறார் மகாகவி. எனவே தனக்காகத் தன் குடும்பத்தை ; இனத்தை ; சுற்றத்தை ; இல்லத்தை விட்டுவரும் பெண்ணைக் காக்கவேண்டிய கடமையினை ஆண்கள் நன்குணரவேண்டும் என்கிறார். “விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரி அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே; விஷ்ணுவும் இலட்சுமியும் போல எனக்கூறி பெண்களின் பெருமிதத்தை உணர்த்தியுள்ளார்.

                மனையாளைத்தவிர எப்பெண்ணையும் தாய், மகள் , தங்கை, தமக்கை, தோழி என்னும் நிலையிலேயே நோக்கவேண்டும். இவ்வாறு தன் வீட்டுப்பெண் என நினைத்தாலே தந்தையாக, மகனாக, சகோதரனாக, தோழனாக நின்று பெண் இனத்தைக் காத்துப் பெருமிதத்துடன் வாழ இயலும். அவ்வாறு வாழும் நிலை ஒவ்வொரு ஆணுக்கும் உண்டாக வேண்டும் ; உண்டாக்க வேண்டும். இதனையே ஆறிலும் சாவு நூறிலும் சாவு தர்மத்திற்காக மடிகின்றவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலினால் ஸகோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த ஷணத்திலேயே தர்மயுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றிபெறுவோம். நமக்கு மகாசக்தி துணை செய்வாள் என மிக அழகாகத் தம் கட்டுரையில் பதிவுசெய்துள்ளார்.  மேலும் பெண்களே பெண்களை அடிமைகொள்ளும் நிலையினையும் மாற்ற வேண்டும்.பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்என்னும் மந்திரத்தொடர் இன்று மெய்யாகி வையத்தில் பேதைமையகற்றி இருப்பதனைக் காணமுடிகிறது. எனவே மாமியாரை அம்மாவாகவும் மருமகளை மகளாகவும் கருதி அழைக்கும் போக்கு வளர்ந்து வருவதனைக் காணமுடிகிறது. பணியிடங்களிலும் அவ்வாறே ஒரே பணி ; ஒரே ஊதியம் என்னும் நிலைக்கு மாறியுள்ளதனையும் காணமுடிகிறது. இதன்வழி மகாகவி கண்ட கனவு நினைவாகியுள்ளதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

சித்தர்களும் பித்தர்களும்

ஆண் பெண் என்னும் வேறுபாடு மட்டுமின்றி உயர்திணை அஃறிணை  என்னும் திணை பாகுபாடுமின்றியும் உயிர்களை ஒன்றாக நோக்கியவர்கள் சித்தர்கள். தம் இனத்தில் தம் உடன் பிறந்தோரையே ஏற்றத்தாழ்வுடன் நோக்குவோர் பித்தர்கள். அறிவு கொண்ட உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் என்கிறார் மகாகவி. எந்தப் பெண்ணிலிருந்து தோன்றினானோ அதே பெண் இனத்தை அடிமையாக்க நினைக்கும் மூடர்கள் மூடத்தனத்தின் முழு உரு என்பதனை இக்கூற்றின் வழித்தெளியமுடிகிறது.

யாருக்குக் கற்பிப்பது

                எல்லா உயிர்களும் பெண்ணிலிருந்தே பிறக்கிறது. இதனை நன்குணர்ந்த ஆறறிவு படைத்த மக்கள் மட்டும் பெண் இனத்தைத் தாழ்த்தி நடத்துவது அவலத்திலும் அவலம். எனவே சிறுவயது முதலே பெண்ணைப் பெருமைப்படுத்தும் வகையில் நடத்துதல்  வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் அடிப்படையாக அமைவது தாயின் பாலே.  எனவேவலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடாஎனக் குழந்தை பருவத்திலேயே அடிப்படையினையை உணர்த்தி விடுகிறார்.  ஆண்களால் மட்டுமே குடும்பம் பொருளாதார நிலையில் உயர்வதால் அவர்களே உயர்வானவர்கள் எனக் கருதப்படுகிறது. ஆண்களுக்குக் கொடுக்கப்படும் அதே வாய்ப்பு பெண்களுக்குக் கொடுக்கப்படுமானால் ஆண்களை விஞ்சி பெருமை சேர்ப்பர் என்பதனை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடாஎன்கிறார். ஓய்வில்லாது இல்லறத்தைக் காக்கும் பெண்ணின் உழைப்பினைப் போற்றாது இல்லத்தின் பெருமைக்குத் தான் மட்டுமே காரணம் என என்னும் ஆண்களின் எண்ணத்தை மாற்றும் வகையில்மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் என்கிறார். பெண் பெருமையாகச் சொல்லாவிடில் ஆணுக்குப் பெருமையில்லை என்பதனை உணர்த்தியுள்ளார். மருமகளை மகளாக நோக்காது அடிமையாக எண்ணும் மாமியார்களிடமிருந்து காக்க வேண்டிய பொறுப்பு கணவனுக்கும் மாமனாருக்கும் இருப்பதனை உணர்த்துகிறார். மருவி வரக்கூடிய மகளே மருமகள் என்பதனை உணர்ந்து போற்றிக்காக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்த்துகிறார். அவ்வாறு மருமகளை மகளாக அரவணைத்து வாழ்ந்தால் பின் முதுமைக்காலத்தில் மகள் போல் அவளே தாங்குவாள். அத்தகைய குடும்பமே செழிக்கும் என்பதனைத்துன்பம் தீர்வது பெண்மையினாலடாஎன்னும்  கூற்றின் வழித் தெளிவுபடுத்துகிறார்.

திறம்பாத பெண்கள்

                நிமிர்ந்த நன்னடை ; நேர் கொண்ட பார்வையும் ; நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் ; திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்; செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என்னும் கூற்று இன்று மெய்ப்பட்டிருக்கிறது. காவல் துறை முதல் விமானப்படை வரை அஞ்சக்கூடிய துறைகள் அனைத்தும் இன்று பெண்களால் ஆளப்பட்டு வருகின்றன. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அன்று தனித்தேயாயினும் துணிந்து கற்றதால் இன்று மருத்துவத்துறையில் பெண்கள் பல சாதனைகளைச் செய்து வருவதனைக் காணமுடிகிறது.  பிறந்த பின் கள்ளிப்பாலும் நெல்லும் கொடுத்து  பச்சிளங்குழந்தைகளைக் கொன்ற பெண்களின் கரங்கள் இன்று மகப்பேற்றிற்காகத் தவிக்கும் பெண்களுக்குக் கரம் நீட்டுகின்றன. இதனால் பெண் அறம்  காக்கப்படும் என்னும் கனவு இன்று நினைவாகியுள்ளதனைக் காணமுடிகிறது.  

நாணும் அச்சமும்

                பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் நாணம், அச்சம் என்னும் இவ்விரண்டு நற்பண்புகளை ஆண்கள் கொச்சைப்படுத்தி தம் இச்சைக்கேற்றார் போல் பயன்படுத்திக்கொண்டு அடிமையாக்க முயன்றனர் ; அடிமையாக்கினர். கல்வி கற்கத் தடையும், குழந்தைத் திருமணமும், உடன்கட்டை ஏறுதலும் என அனைத்து மூடப்பழக்கங்களுக்கும் இப்பண்பையே எடுத்தாண்டனர். எனவே எதையும் துணிந்து கேட்கும் வல்லமை பெறவேண்டும் என்பதனாலேயேநாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்எனப் பாடினார் மகாகவி.

பெண்மை வெல்கவென்று

                வாழ்க வாழ்க என வாழ்த்தியும் அழகே அழகே எனப் போற்றியும் பெண்ணை அழகுப்பதுமைகளாகவும் விளம்பரப்பொருட்களாகவும் பயன்படுத்திய நிலையினை மாற்ற வேண்டும் என்னும் மகாகவியின் கனவு இன்று மெய்யானது. “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடாஎனப்போற்றிய மகாகவி அத்துடன் நில்லாமல் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் வெற்றி காணவேண்டும் என எண்ணி  பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடாஎனவும் பாடியுள்ளதனைக் காணமுடிகிறது.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்துஎன மணமுடிக்கும் உரிமையினையும் பெண்ணிடமே கொடுத்து விடுகிறார் மகாகவி. ஆனால் அதற்கு முன் அவள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதனையும் உணர்த்தியுள்ளார். கைகொடுத்து எனக்கூறி துணிவுடன் தன்னம்பிக்கையுடன்  சரிநிகர் சமானமாக வாழவேண்டியதன் அவசியத்தினையும் உணர்த்தியுள்ளார்.

பெண் மானல்ல மனிதப்பிறவி

                விலங்குகளைத் தன் விருப்பப்படி வளர்த்து விற்று விடுவதுபோல் பெண்ணைக் கட்டிக்கொடுப்பது கொடுமையிலும் கொடுமை எனக் குறிப்பிட்டுள்ளார் மகாகவி. எனவே வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்என்கிறார். மகாகவியின் இக்கனவு இன்று பரவலாக விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. இதன் விளைவாகவே இன்று பெண்கள் கணவனைத் தேர்வுசெய்து மணந்துகொள்ளும் நிலை  பெருகியுள்ளதனையும் எண்ணி மகிழமுடிகிறது.

மனையாளும் தெய்வம்

                தாலி கட்டி விடுவதால் வேலி போட்டுவிட்டதாக எண்ணிப் பெண்ணின்  வெளியினைக் குறுக்கிவிடும் நிலை ஆண்களிடம் இருந்ததனைக் கண்ட மகாகவி பெரிதும் வருந்தினார். விடுதலை உணர்வுடன் தாய் வீட்டில் வளர்ந்தவள் புகுந்த வீட்டில் அடிமை போல நிற்கும் நிலையினை மாற்றவேண்டும் என விழைந்தார் மகாகவி. எனவேமண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ  எனப்பாடி பெண்கள் மதிக்கப்பட வேண்டிய அவசியத்தினை உணர்த்தினார். அதன் விளைவாகவே இன்று மனையினை ஆளக்கூடியவளாக “மனையாள்எனக் குறிப்பிடும் நிலை உண்டாகிவிட்டதனைக் காணமுடிகிறது. மனையாளும் தெய்வம் என்பதனை மனையை ஆளும் தெய்வம் என விரித்துப் பொருள் கொள்வதன் வழி மேலும் பெண்ணின் பெருமையினை நன்குணர்ந்துகொள்ளமுடிகிறது.

கனவுகளும் நினைவுகளும்

                குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட வேண்டும் ; கைம்பெண்ணுக்கு மறுமணம் செய்ய வேண்டும் ; பெண்ணுக்குச்  சொத்தில் சம உரிமை கொடுக்கவேண்டும் ; பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் ; பெண்கள் சட்டங்கள் இயற்றவேண்டும் ; பெண்கள் பாரினை நடத்தவேண்டும் என்னும் கனவுகள் அனைத்தும் இன்று கண்முன்னே காணக்கிடப்பது மகாகவியின் பெருமைக்குச் சான்றாகிறது.

மகாகவி பாரதியாரைப் பெற்று மகிழ்ந்தவள் தாயார் இலக்குமி அம்மையார். காத்து மகிழ்ந்தவள் துணைவி செல்லம்மாள். மகிழ்ந்து காத்தவள்  மகள் தங்கம்மா. பெண்ணறிவை ஊட்டி மகிழ்ந்தவள் நிவேதிதா அம்மையார். கவிதை எழுத வந்தவள் கண்ணம்மா கவிதை எழுத நின்றவள் மகாசக்தி ,. எனப் பெண்களுடனேயே தம் வாழ்வைப் புதைத்துக்கொண்டவர் மகாகவி பாரதி. எனவே அவர் பெண்களைப் பேசுவதற்கான  படைப்புக்களாக தம் கவிதை நடையினையும் உரை நடையினையும் கட்டமைத்துக்கொண்டதனையும் அவையே இன்று  பெண்ணியத்திற்கான புதையலாகவும் திகழ்வதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

நிறைவாக

                மகாகவி பாரதியார்  நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி சமூக விடுதலைக்கும் வித்திடும் கவிதைகளை ; கட்டுரைகளைப் படைத்ததனால் இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களுள் முன்னோடிக் கவிஞராகத் திகழ்கிறார் எனத் தெளியமுடிகிறது.

                பெண்ணியம் என்பது பெண்களுக்காகப் பெண்களே போராட வேண்டும் என்னும் கொள்கையினை உடையதன்று. அது தன்னிலிருந்து பிறந்த ஆணினத்தையும் உள்ளடக்கியது . இக்கூற்றுக்கு வித்திட்ட மகாகவி பாரதியார் தம் படைப்புகளின் வழி இயன்ற இடங்களில் எல்லாம் பெண்ணின் பெருமையினை நிலைநாட்ட முயன்றுள்ளதனைக் காணமுடிகிறது.

                பூனைக்கு யார் மணி கட்டுவது என அனைவரும் ஒதுங்கி நின்ற வேளையில் துணிந்து நின்று பெண்ணுரிமைக்காகப் போராடிப் புதுமைப்பெண்களைப் படைத்து நல்ல விடியலுக்கு வழிவகுத்தவர் மகாகவி பாரதியார் என்பதனை அவருடைய படைப்புகள் உணர்த்திக்காட்டுகின்றன.

                தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்னும் அறிவியல் கூற்று மகாகவியின் படைப்புகளுக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. பெண்ணின் முழுமையான விடுதலைத் தேவைக்கு மகாகவியின் படைப்புகளே தாயாக நின்று சித்திரித்திருப்பதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

                நிமிர்ந்த நன்னடையும்  நேர் கொண்ட பார்வையும் உடைய மகாகவியின் எழுத்துக் கனவுகள் அனைத்தும் இன்று நினைவானதன் விளைவாகவே சரிநிகர் சமானமாக பெண்களும் ஆண்களும் பெருமிதத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதனை அவர் சொல்லாடல்கள் வழி நின்று உணர்ந்துகொள்ளமுடிகிறது.



****************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக