தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 30 மே, 2021

அரசியல் சாக்கடையல்ல – வாழ்க்கை – கம்பன் காட்டும் வழி


            கல்வி அமைச்சராக யார் இருக்கிறார்? எனக்கேட்டுப்பாருங்கள். உடனே, “எனக்கு அரசியலில் விருப்பம் கிடையாது” எனக் கூறும் இளைஞர்கள் பலரைக்காணமுடியும். “அரசியல்வாதிகளால்தான் கல்விக்கான திட்டங்களையும், பணிக்கான வாய்ப்புகளையும் பரிந்துரைக்கமுடியும். தெரியுமா?” எனக்கூறியதும் அரசியல் குறித்தும் ஆட்சி குறித்தும் அறியவேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்.

    “ஒரு நாளைக்கு, ஒரு ஏழைக்கேனும் உணவு கொடுக்கவேண்டும்” என நினைக்கும் சமூக அக்கறை கொண்டவர் அமைச்சராகிவிட்டால், அன்ன சத்திரங்களைக் கட்டி எத்தனையோ ஏழைகளின் பசியைப் போக்கிவிடுவார்கள்தானே?. “மக்கள் எவ்வாறு வாழவேண்டும்” என முடிவுசெய்வது அரசியல்வாதிகளுடைய செயல்பாட்டினைப் பொறுத்தே அமைகிறது. அத்தகைய வலிமையுள்ள அரசியலிலிருந்து இன்றைய இளைஞர்கள் விலகி நிற்பது நாட்டிற்கு நன்மையா?  அரசியல்வாதிகளைக் கயவர்களாகக்காட்டியே சில திரைப்படங்கள் வெறுப்பினை உண்டாக்கிவிட்டன. அந்நிலையிலிருந்து மாற்றவேண்டிய கடப்பாடும் அவர்களுக்குண்டு. கெடுப்பது எளிது ; ஆனால் திருத்துவது மிகக் கடினம். நாடு நலமாக அச்செயலை செய்துதானே ஆகவேண்டும்.


    தீயபழக்கங்களை. புகைபிடிப்பது ; மது குடிப்பது ; பெண்களைப் பகடி செய்வது என எத்தனைத் தீய பழக்கங்களைத் திரைப்படக்கதாநாயகர்கள் சிலர் கற்றுக்கொடுத்தனர் ; கொடுக்கின்றனர் ; கொடுப்பர். பொறுப்புணர்வுடனும் விழிப்புணர்வுடனும் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும். மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். அதனை அரசியல்வாதிகள் செய்துவிட்டால்போதும்.  அரசியல் சாக்கடையல்ல ; அதுவே வாழ்க்கை என்பதனை உணரமுடியும்.

    மக்கள் பொறுப்புடன் இருந்தால் தலைவனும் பொறுப்புடன்தானே இருக்கமுடியும். மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட தலைவன் மக்களை உயிர்போலும் தன்னை உடல்போலும் எண்ணவேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுகிறார் ‘கவிச்சக்கரவர்த்தி’ கம்பர்.

வயிரவான் பூணணி மடங்கன் மொய்ம்பினான்

உயிரெலாந் தன்னுயி ரொப்ப வோம்பலால்

செயிரில வுலகிற் சென்று நின்றுதீர்

உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்

 

என்னும் அடிகள் எத்தனை அழகானது. ‘மக்கள்’ எனக் கூறாமல் ‘உயிர்கள்’ எனக் கூறியது எத்தனை ஆழமானது.  மக்களை மட்டுமின்றி ஓரறிவு முதல் ஆறறிவு வரை அத்தனை உயிர்களையும் தன்னுயிராக எண்ணிக் காக்கும் அரசன் எத்தனைப் பெருமைக்குரியவன். அத்தகைய பெருமையுடைய அரசன் நாடாண்டால் மக்கள் மகிழ்ச்சியில்தானே திளைப்பார்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் ஆட்சிசெய்தால் ‘அரசியல் சாக்கடை’ எனக்குறிப்பிட இயலுமா?

     நாட்டு மக்களின் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகள் ஆட்சி செய்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்தானே? மக்கள் பணத்தை சூறையாடினால் என்னாகும்? ஏழ்மை பெருகும் ; பஞ்சம் ஏற்படும் ; கொள்ளை நடக்கும் ; தீய செயல்கள் படிப்படியாய் பெருகிக்கொண்டே இருக்கும்.


     எத்தனையோ ஏழைகள் அரசியலின் வழி பதவிபெற்று உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவதனையும் காணமுடிகிறது. அத்தகையோர் மக்களின் ஏழ்மையைப் போக்கி மகிழ்வர்.

ஒரு நல்ல நாட்டில் எவ்வாறு ஆட்சி நடைபெறவேண்டும்?. யார் செல்வந்தர்? யார் ஏழை? என அறிய இயலாத அளவிற்கு வறுமை இல்லாது மக்கள் வளமாக இருக்கவேண்டும்.  உடலை வலிமையாக்கிக்கொள்ளவேண்டும் என்னும் எண்ணமே ஏற்படாதவாறு அளவிற்குப் பகைமை இன்றி வாழவேண்டும். ஏமாற்றிப் பிழைக்கவேண்டும் என்னும் நிலையில்லாததால் பொய் என்பதனையே அறியாத மக்களாக இருக்கவேண்டும். எச்செயல் செய்தாலும் ஏன்? எதற்கு ? என ஆய்ந்து ஒவ்வொரு செயலையும் செய்வதால், அறியாமை அற்ற மக்களாக இருக்கவேண்டும். இத்தனைத் திறனும் ஒருநாட்டில் மொத்தமாக இருந்தால் எப்படி இருக்கும் அத்தகைய ஆட்சியினையே கம்பர் படம்பிடித்துக்காட்டுகிறார்.


“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை பொய்யுரை இலாமையால்

வெண்மை இல்லை, பல்கேள்வி மேவலால்”

 

என்னும் இவ்வடிகள் நாடு எவ்வாறு விளங்கவேண்டும் என்பதற்கு அழகிய எடுத்துக்காட்டு. "கம்பன் கவிக்கொம்பன்" என்பதனை இப்பாடலும் எடுத்துக்காட்டுகிறதுதானே?. 


            இத்தனைப் பயனையும் ஒரு நாட்டுக்கு அளிக்கும் வல்லமை அரசியல்வாதிகளுக்கே உண்டெனில் அந்த அரசியலை விட்டு விலகி நிற்கலாமா? இனி, “அரசியல் சாக்கடையல்ல ; வாழ்க்கை”. உணரலாம்தானே?

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக