தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 8 மே, 2021

சிலப்பதிகாரம் - தமிழ்த்தாயின் சிலம்பு -Cilappathikaram - An ornament of Tamil Mother

 


மதுரையை எரித்த மல்லிகை

        என்றும் நிலைத்திருக்கும் அதிகாரம் சிலப்பதிகாரம்தானே. மற்ற அதிகாரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தமிழரின் பெருமைகளைக் காத்து நிற்கும் ஐம்பெருங்காப்பியங்களுள் தலை சிறந்ததாகத் திகழ்வது சிலப்பதிகாரம். தமிழ்த்தாத்தா உத்தமதானபுரம் வெங்கடப்பர் மகனாகிய சாமிநாதர் தான் 1892 ஆம் ஆண்டு ஓலைச் சுவடியில் இருந்த சிலப்பதிகாரத்தை நூல்வடிவில்  கொண்டு வந்து தமிழரின் பெருமைகளை ஆவணப் படுத்தினார். “என் உயிரைவிட தமிழ் பெரிது” எனத் தமிழ்ச்சுவடிகளைக் காப்பதற்காக பல ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்தவராயிற்றே. “தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன்” என்று பேசும் வழக்கம் இவரிடமிருந்தே வந்திருக்கவேண்டும். ஓலைச்சுவடியைக் காக்க ஒவ்வொரு ஊராக இரவுபகல் பாராது எத்தனையோ இடங்களுக்குச்சென்று சேகரித்தார். பின் இரவுபகல் பாராது படி எடுத்தார்.  அவரைத் தமிழ்த்தாத்தா என்பது மிகவும் பொருத்தம்தானே. அவருடைய சொத்தை அல்லவா இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அத்தகைய சொத்துக்களுள் சிலப்பதிகாரம் மிக்க சிறப்புடைத்து.

 

        சிலப்பதிகாரம் – சிலம்பினால் அதிகரித்த கதை மட்டுமல்ல. சிலம்பினால் அதிகாரம் பெற்ற கதையும் கூட. அதனால் தான்  காலாட் படை, குதிரைப் படை , யானைப் படை , தேர்ப்படை,  என எப்படையாலும் வெல்ல முடியாத பாண்டியன் நெடுஞ்செழியனை சிலம்பு வென்றது. அதுவும் போரால் அல்ல ஊழால். ஊழ் வினை மன்னனேயாயினும் விடுவதில்லை என்னும் அறத்தினை உணர்த்தி அறத்துடன் வாழ வழி காட்டுவதே சிலப்பதிகாரம்.

 

        காப்பியத்தின் பண்பு அறவழியில் நின்று பொருள் ஈட்டி இன்பம் துய்த்து வாழ வேண்டும் என்பதே. அவ்வாறு வாழ வழிகாட்டுவதுதான் சிலப்பதிகாரம்.  ஒருவர் அறவழியில் நிற்க வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்?.  ஒரு தாய் குழந்தைக்கு சோறு ஊட்ட வேண்டுமானால் என்ன சொல்லிச் சோறூட்டுகிறாள். நீ ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்றால் அஞ்சுகண்ணன் வந்து பிடித்துக்கொள்வான். பூதம் வந்து பிடித்துக்கொள்ளும் எனப்பொய்சொல்லி அச்சமூட்டித் தன்  குழந்தையை உண்ண வைப்பாள். அது போல மற்றொரு தாய், சாலையில் சென்றால் ஏதாவது வண்டி வந்து இடித்து விடும். கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும் என உண்மையைக் கூறி  அறிவுறுத்துகிறாள். அப்படித்தான் இளங்கோவடிகளும் தாய் போல நின்று வாழ்க்கை என்னும் பாதையைக் கடக்க கவனமாகச் செல்ல வேண்டுமென, சேய் போன்ற தமிழர்களுக்கு  ஊழ்வினையின் வழி நின்று வழி காட்டுகிறார்.

 

        நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் அதற்கான பலனை உங்களுக்குத் தருவது உறுதி. எனக் கூறி எல்லோரையும் நல்வழிப் படுத்த வேண்டும் என எண்ணுகிறார். அதன் விளைவாகவே இந்தக் காப்பியத்தில் மூன்று உண்மைகளை முன் வைக்கிறார்.

 

1. அரைசியல்பிழைத்தோர்க்குஅறங்கூற்றாகும் ,

2. உரைசால்பத்தினியைஉயர்ந்தோர்ஏத்துவர்

3. ஊழ்வினைஉருத்துவந்துஊட்டும். என்பன.

 

        ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் வீடு நன்றாக இருக்க வேண்டும். வீடு நன்றாக இருக்க வேண்டுமானால் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டுமானால் எல்லோரையும் வழிப்படுத்திக் கொண்டிருக்க ஒருவரால் மட்டுமே முடியும்.  நான் என்பவரே அவர். அவரவர் அவரவர்களையே திருத்த முயன்றால் மட்டுமே சமூகத்தில் குற்றம் நிகழாமல் பார்த்துக்கொள்ள முடியும் அந்த உணர்வை ஊட்டுவதற்குத் தான் நமக்கு ஒரு வழிகாட்டித் தேவைப்படுகிறார். அவர் தான் இளங்கோவடிகள். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் ஊழ்.

இத்தனையும் கற்பித்த தமிழை நாம் மகிழ்ச்சியுடன் கற்கலாம் ; கற்பிக்கலாம்தானே.

       தமிழ்த்தாய் நம்மை வளர்க்க எவ்வளவு பாடுபட்டாள். ஆனால் நாம் தமிழைக் காக்க என் செய்கின்றோம். சிலம்பு அணிந்த கால்களுக்கு விலங்கைப்பூட்டிச் சிறையிலிட்டோம். தமிழ்க்குழந்தைகள் தமிழின் வழி ஆங்கிலம் கற்கும் நிலை மாறிற்று. ஆங்கிலத்தின் வழியே தமிழைக் கற்கின்றனர். 'ஆறாம் வாய்ப்பாடு சொல்' என்றால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 'சிக்ஸ்த் டேபிளா' எனக் கேட்கிறார்கள். எத்தனை இடர்ப்பாடு. 

     ஒருகதை தான் நினைவுக்கு வருகிறது.  ஐம்பது வயது மகன் நொறுங்கி வளைந்த தட்டில்  இரண்டுபிடி சோறு, ஒரு ஓரத்தில் சாம்பார், ஒரு ஓரத்தில் ரசம், மற்றொரு ஓரத்தில் தயிர் என ஊற்றி, மீதமிருந்த இடத்தில் தொடுகறியோடு கொண்டு சொல்கிறான். பொறுப்புணர்வோடு அல்ல ; கடமைக்காக. அந்தத் தட்டினை, பக்கத்து அறையில் கட்டிலில் காத்திருந்த எண்பது வயது தாய்க்கு வேண்டா வெறுப்பாக  தட்டை ஒலியுடன் வைத்துவிட்டு வருகிறான். அந்த ஒலி தான் 'அம்மா ! சாப்பாடு" என்பதற்கானப் பொருளாக இருக்கவேண்டும்.

    பசியில் இருந்த தாய் மெதுவாகத் தேடித்தேடி கைகள் நடுங்க உண்ணத் தொடங்குகிறாள். அவன் வெளியே வரும்போது  மனைவி குழந்தைகளுக்குச் சோறூட்டுகிறாள். அதனைக் கண்டதும், இத்தனை நாள் கரையாத  உள்ளம் கரைகிறது. சிறு வயதில் வெள்ளித் தட்டில் வீதி வீதியாகத் தூக்கிச்சென்று பறவைகளையும் விலங்குகளையும் காட்டி, வானத்தையும்  மரங்களையும் காட்டி சிரித்து சிரித்து, கதை சொல்லிச் சோறூட்டிய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.  மீண்டும் தாய் இருந்த அறைக்குச் செல்கிறான். தாய்க்குச் சோறூட்ட வேண்டும் என நினைத்து அவள் காலடியில் அமர்கிறான். உடனே, நடுங்கிய கைகள் அவனுக்குச் சோறூட்டின.  கண்கள் குளமாயின. கண்ணீர் தாயின் கால்களில் சிந்தியது. இது தான் கண்ணீரால் கால்களைக் கழுவுவதோ.? 

    இப்படித்தான் தமிழ்த்தாய் நம் நலனை ; பெருமிதத்தைக் காக்கிறாள். அதனுள் சிலப்பதிகாரத்தின் அருமை பெருமை என அனைத்தையும் படித்து மகிழ்வோம். தொடர்வோம்.


1 கருத்து: