தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வியாழன், 13 மே, 2021

சோனரிசம் – உண்மையைப் பொய்யாக்கும் கலை – Zohnerism – misleading art

 


சோனரிசம் – உண்மையைப் பொய்யாக்கும் கலை – Zohnerism –  misleading art

உண்மைகளைத் திரித்துச் சொல்லி மக்களைத் தவறான எண்ணத்தை ஊட்டும் கலைக்கு ‘சோனரிசம்’ என்று. பெயர். “ இரு கால் மிருகம் அது ; நாய் போல் குரைக்கும் ; புலி போல் பாயும்  ; நரிபோல் தந்திரம் செய்யும் ;  கழுதை போல் கத்தும் ; பாம்பு போல் சீறும் ; எருமை போல் வழி மறிக்கும். அது மட்டுமல்ல, அது எப்போது? எந்த மிருகமாக மாறும் என்பதே தெரியாது. முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்கவும் முடியாது. அந்த மிருகத்தை நாட்டில் உலவ விடலாமா? எனக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வேண்டவே வேண்டாம் என்றுதானே சொல்வீர்கள்.

அந்த மிருகம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள். நாயென்றும் ; கழுதையென்றும் ; நரி என்றும், நீங்கள் அவ்வப்போது உங்களுடன் செல்லமாகப் பழகுபவர்களைக் குறிப்பிடுவீர்கள்தானே?  ஆம்! உங்கள் செல்லமான தோழிகளையும், நண்பர்களையும், எதிரிகளையும் அவ்வாறுதானே அழைப்பீர்கள்? குழாயடிச்சண்டையில் எதிர்வீட்டுக்காரி சீறினாள் ; முனைவீட்டுக்காரி புலிபோல் பாய்ந்தாள் எனக் கூறுவதும் உண்டுதானே. சாலையைச் சோலையாக எண்ணி நடக்கும் மனிதர்களைப் பார்த்து, ஓட்டுநர்கள் ‘எருமை போகுது பாரு’ எனத்திட்டிக்கொண்டு செல்வதும்? அன்றாட வாடிக்கைதானே? ஆம்! மனிதனே அந்த மிருகம். இப்போது என்ன சொல்வீர்கள்?  

எப்படி நம்மையே நாம் வெறுக்கும் அளவிற்கு நம்மைக் குழப்பி ; தவறான எண்ணத்தை ஊட்டி ; நல்லனவற்றை மறைத்து; அறிவுக்கண்ணை இருளாக்கியிருக்கின்றன இவ்வினாக்கள் என்று நீங்கள் தலையில்  அடித்துக்கொள்கிறீர்களா?.  இப்படிப்பட்ட கலைக்குத் தான் ‘சோனரிசம்’ என்று பெயர்.

கயவர்கள் இக்கலையைப் பயன்படுத்தி எத்தனையோ குடும்பங்களை ; ஊரை ; நாட்டைப் பிரித்து பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். பணமிருந்தால் இக்கலையைப் பயன்படுத்தி எதையும் நீங்கள் சாதித்துக்கொள்ளமுடியும். படித்தவர்கள் சில பேர் அதற்காகவே காத்திருக்கிறார்கள். படிக்காதவர்கள் மிகவும் குறைவே. அப்படி விலைபோகும் மனிதர்களே  இந்த ‘சோனரிசிகள்’. அவர்களை ‘விலை மனிதர்கள்’ எனவும் குறிப்பிடலாம்தானே. “படித்தவன்  சூதும் வாதும் செய்தால் போவான்  ; போவான் ஐயோ  என்று போவான்” என்னும் மகாகவியின் வரிகள் இவர்களுக்கு சாட்டையடி கொடுக்கிறது.  

ஊடகங்களில் செய்திகள் வந்தாலே உண்மை என நம்பிய காலம்  மலையேறி விட்டது இந்த ‘சோனரிசத் தாக்கத்தால் சில  ஊடகங்கள் இப்பணியை தாரளமாகச் செய்துவருகின்றன. அப்பணத்தில்வயிறு வளர்க்கும் ஊடகங்கள் மலிந்துவருவது சமூகக்கேடுதானே? இப்போது புரிந்துவிட்டதல்லவா? இனி நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடைய பேச்சின் ; செய்தியின், உண்மைத்தன்மையை அறியத்தொடங்கிவிடுவீர்கள்.

சரி, இந்தச் சொல் எப்படி வந்தது என்று தானே கேட்கிறீர்கள்? 

‘நாதன் சோனர்’ என்னும் பதினான்கு வயது சிறுவன், 1997 ஆம் ஆண்டு ‘இடாஹோ’ என்னும் இடத்தில் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றான். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் அதிக விஷமுள்ள திரவம் எது? என்னும் பொருளில் அக்கண்காட்சி நடைபெற்றது. அவ்வரங்கில்  ‘எப்படி  உண்மையைப் பொய்யாக்கும் எத்தர்களால் ஏமாற்றப்படுகிறோம்?” என்னும் தலைப்பில் ஆய்வுத்திட்டக் கட்டுரை எழுதி வெற்றிபெற்றான்.

“டை ஹைட்ரஜன் மோனாக்ஸைடு’ ஓர் அறியப்படாத கொல்லி” என்னும் தலைப்பில் ஐம்பது மாணாக்கர்களுக்கிடையே தன் ஆய்வை எடுத்துவைத்தான்.  1. அந்த திரவம் வாயுவாக இருக்கும்போது புண்களை ஏற்படுத்தும். 2. இரும்பு போன்ற கடினமான பொருள்களையும் துருப்பிடிக்க வைத்துவிடும். 3. நமது உடலில் உண்டாகும் கட்டிகளுள்  இருக்கும். 4. அமில மழைக்கும் காரணமாகும் 5. அதிக சிறுநீர் கழிக்கவும் காரணமாகும். 5. நிறைய புகுந்தபின் வெளியேற்றாவிடில் வயிற்றை வீங்கவைத்து மக்களைக் கொன்றுவிடும். எனத் தான் தடைசெய்யப்படவேண்டிய திரவத்தின் அறிவியல் உண்மையைக் கூறிவிளக்கினான்.  வகுப்புத் தோழர்கள் ஐம்பது பேரில்  நாற்பத்து மூன்று பேர் தடைசெய்யப்பட வேண்டும்’ என அவனுடைய கருத்துக்கு உடன்பட்டனர்.  உடனே, “டை ஹைட்ரஜன் மோனாக்ஸைடு’ என்னும் அத்திரவத்தைத்தான் ‘தண்ணீர்’ என்று குறிப்பிடுகிறோம் எனக் கூறித்தன் ஆய்வுத்திட்டக்கட்டுரையை முடித்தான்.  பிறகுதான் அனைவரும் தாங்கள் முட்டாளாக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.

இப்படி, உண்மைகளை மறைத்து உயிர்காக்கும் திரவமான தண்ணீரையே நஞ்சாக மாற்றிக்காட்டமுடியும் எனத் தன் கட்டுரையின்வழி வெளிப்படுத்தினான். மனிதனை எவ்வாறெல்லாம்  எளிதில் ஏமாற்றமுடிகிறது? என்பதனை வெளிப்படுத்தினான்.  அச்சிறுவனைப் பாராட்டும் வகையில் உண்மையைப் பொய்யாகக் காட்டும் பயன்பாட்டிற்குச் ‘சோனரிஸம்’ எனப்பெயரிட்டார் இதழாளர் ஜேம்ஸ் கே. க்ளாஸ்மேன் .

இனி விழிப்புணர்வுடன் வாழலாம்தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக