ஊக்கம் உடைமை உடைமையில் உயர்ந்தது. ஏனென்றால்
அது வெளியிலிருந்து வருவதில்லை. உள்ளிருந்து வருகிறது. வெளியிலிருந்து வரும் காற்று
நின்றுவிட்டால் மின்விசிறியை ஓட விடலாம். உள்ளிருந்து வரும் காற்று நின்றுவிட்டால்
…? அவ்வளவுதான். உவமை அச்சுறுத்துகிறதே என்கிறீர்களா? . நான் படித்ததைக் கூறினால் மகிழ்ச்சி
அடைவீர்கள். சொல்லட்டுமா?. முட்டை வெளியிலிருந்து உடைபட்டால் இறப்பு. உள்ளிருந்து உடைபட்டால்
பிறப்பு. சரிதானே?
ஊக்கம் மனிதனுக்கு வேண்டுமா ? என்னும் கேள்விக்கே
இடமில்லாத வகையில் மனிதனின் ஆளுமையே ஊக்கத்தால்தான் அமைகிறது என்பதனை உணர்த்தும் வகையில்
“ஆள்வினை உடைமை” எனப் பெயரிட்டிருக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
மடியுளான் புகழின்றி மடிவான் ; மடியிலான் புகழோடு
உயர்வான். ‘மடி’ என்னும் சோம்பல் எத்தகைய உயர்வையும் இழிவாக்கிவிடும். பணம், புகழ்,
பதவி அனைத்தும் சோம்பலால் சீரழிந்துபோகும். “குந்தி தின்றால் குன்றும் குறையும்” என்பது
தானே முன்னோர் மொழி. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றுவதுதானே அறிவுடைமை.
‘மடி’ என்னும் சோம்பல் இன்றி வாழ்பவன் வீட்டிற்கும்
நாட்டிற்கும் பெருமைசேர்ப்பான். ‘வாழ்பவன்’ மட்டும் தானா? ‘வாழ்பவள்’ இல்லையா? எனக்
கேட்காதீர்கள். ‘சிவத்துக்குள் சக்தி’ இருக்கிறதுதானே.
கடுமையாக உழைப்பவனுக்குத் திருமகளின் அருள்மழை அளவின்றி பொழியும். “எப்படி?” என்றுதானே
கேட்கிறீர்கள். நான் படித்ததைக்கூறினால் ஒத்துக்கொள்வீர்கள்.
கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவன்
பிரதாப் என்னும் ஏழை உழவரின் மகன். சிறுவயது முதலே வறுமை வாழ்வு. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, படிப்பதற்குக்
கிராமத்தில் வசதியில்லாத போதும் பக்கத்து ஊரில் கணினி மையத்தில் ‘ஏகலைவன்’ போல்
தானாகவே கற்றுக்கொள்கிறான். பொறியியல் கல்லூரியில் சேர வசதி இல்லாமல் இயற்பியல் பாடத்தைப்படிக்கிறான்.
இருப்பினும் அவனுடைய ‘எந்திரப் பறவை’ என்னும் “ட்ரோன்” குறித்த எண்ணம் நாளும் வளர்ந்துகொண்டே
இருந்தது. கல்லூரியில் பயிலும் காலத்தில் விடுதியில் பணம் கட்ட வசதியில்லாததால் துரத்தப்படுகிறார்.
மைசூர் பேருந்து நிலையத்தில் தங்கிக்கொண்டு கல்லூரிக்கு சென்றுவருகிறார். வசதியும்
வாய்ப்பும் இல்லாததால் வீணான மின்னணுக் கழிவுகளைத் தேடி மும்பாயிலும், விசாகப்பட்டினத்திலும்
அலைகிறான். அப்போதுதான் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக்கழகம்
(ஐ.ஐ.டி) தில்லியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி நடத்துகிறது. தொடர்வண்டியில்
பயணச்சீட்டுப் பதிவு செய்யக்கூடப்பணம் இல்லாமல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்கிறான்.
அத்தகைய பொருட்களைக் கொண்டு ‘எந்திரப்பறவை’யைப் பறக்கச்செய்கிறான். எண்பது முறை தோல்வி அடைகிறான். இறுதியில் வெற்றிபெறுகிறான்.
இந்திய அளவில் நடைபெற்ற அப்போட்டியில் இரண்டாம் இடம்பிடிக்கிறான். அவனுடைய அறிவியல்
மேதைமையை உணர்ந்துகொண்ட அறிஞர் ஒருவர் ஜப்பான் நாட்டு “டோக்யோ”வில் நடைபெறும் போட்டியில்
கலந்துகொள்ள அறிவுறுத்துகிறார்.
மைசூர் பேருந்து நிறுத்தத்தையே பார்த்து வியந்த
ஏழை மகனுக்கு “டோக்யோ” செல்லும் கனவினை நினைவாக்கும்
ஊக்கம் பிறந்தது. அப்போட்டியில் கலந்துகொள்ள பேராசிரியர் பரிந்துரைக்கும் தகுதிச்சான்றிதழ்
பெறவேண்டும் என்ற நிலையில் ஒரு பேராசிரியிடம் கேட்கிறான். “நீ படிக்கும் படிப்புக்கும்
இப்போட்டிக்கும் சம்பந்தமில்லை” எனப் பேராசிரியர் பரிந்துரைக்க மறுக்கிறார். கையில்
காசு இல்லாததால் பேருந்து நிலையங்களையே எங்கு சென்றாலும் இருப்பிடமாகக் கொள்கிறான்.
பொதுக்கழிப்பிடத்தையே பயன்படுத்துகிறான். ஒரு வேளைக்கு ஒரு ரொட்டிச் சாப்பிட்டு தண்ணீரைக்
குடித்து வயிற்றை நிரப்பிக்கொள்கிறான். எண்ணம் முழுதும் “டோக்யோவில் எழுபதாவது இடத்தையாவது
பிடித்துவிடவேண்டும்” என்னும் இலக்கு நோக்கியே இருந்தது
உணவும் இல்லை ; பணமும் இல்லை ; பரிந்துரை கடிதமும்
இல்லை. இப்படி எத்தனையோ தடைகள். ஊக்கத்தை மட்டும் இழக்கவில்லை. முப்பது நாட்கள் நாளும்
கடினமாக உழைக்கிறான். பரிந்துரைக் கடிதம் பெறுகிறான். சமயத்துறவி ஒருவர் உதவ முன்வருகிறார்.
ஆனால், அது விமானப் பயணக்கட்டணத்திற்குக் கூட போதவில்லை. தாயின் தாலிக்கொடியை விற்றுப்
பயணச்சீட்டு எடுத்துச் செல்கிறான்.
“டோக்யோ” சென்ற பிறகு போட்டி நடக்கும் இடத்திற்குச்
செல்ல வசதியான பேருந்து இருந்தாலும் கையில் காசு இல்லாததால் அத்தனைச் சுமைகளையும் எடுத்துக்கொண்டு
கட்டணம் குறைந்த பேருந்துகளில் ஏறி இறங்கி ; ஏறி இறங்கிச் செல்கிறான். உடல் வருந்த
உள்ளம் தளராமல் பல இன்னல்களைக் கடந்து போட்டியில்
கலந்துகொள்கிறான். பந்தயக் குதிரை கொள்ளைப்
பார்க்குமா? புல்லைப் பார்க்குமா? இலக்கு மட்டுமே தெரிகிறது.
முடிவுகள் வருகிறது. எழுபதாவது இடத்தில் இருந்து
தொடங்குகிறது. எழுபதாவது இடத்திலாவது பெயர்வந்துவிடவேண்டும்
என எண்ணுகிறான் : வரவில்லை. அறுபதாவது இடத்திலாவது பெயர்வந்துவிடவேண்டும் என எண்ணுகிறான்
: வரவில்லை. ஐம்பதாவது ; நாற்பதாவது ; முப்பதாவது ; இருபதாவது என எதிர்பார்த்துப் பார்த்து ஏங்கிவிடுகிறான். “இனி
அவ்வளவுதான்” என மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருக்கையில் முதல் பத்து இடங்களுக்கான
அறிவிப்பு வருகிறது. அமெரிக்காவின் ஸ்டான்ஸ்ஃபோர்டு தான் முதலிடம் பிடிக்கும் என அனைவரும்
எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்கின்றனர்ன்.
ஸ்டான்ஸ்ஃபோர்டு இரண்டாம் இடம் என அறிவிப்பு வருகிறது. முதல் இடம் யார்? என
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். “இந்தியாவின் பிரதாப் முதலிடம்” என அறிவிப்பு
வருகிறது.
இந்தியக்கொடி அனைத்து நாட்டுக்கொடிகளையும்
விட உயரே பறக்கிறது. ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகை கிடைக்கிறது. பிரதாப் ‘ட்ரோன்’ பிரதாப்
என அழைக்கப்பட்டார். இந்தியாவுக்குத் திரும்பும்போது
அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்று மகிழ்கின்றனர். ஊக்கத்தின் அருமை
பெருமை அனைத்தும் அந்தத் தாயின் கண்களில் கண்ணீராகி வறுமையை அழித்துக்கொண்டிருந்தது.
ஒரு நாளைக்கு (மாதத்திற்கல்ல) 60,000 ஆயிரம் சம்பளம் கொடுக்கிறோம் என ஃப்ரான்ஸ் அழைக்கிறது ; பல நாடுகள்
அழைக்கின்றன.
‘ஏவுகணை மனிதர்’ ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் போல்
“என் தாய்நாட்டிற்காகவே பணி செய்வேன்” எனக் கூறி அத்தனை வாய்ப்புகளையும் வேண்டாம் எனக்கூறுகிறார்
பிரதாப். இனி, அவன் எனச்சொல்வது தவறுதானே. இந்தியப்பிரதமர் மோடி அவர்கள் விருது வழங்கினார்.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பில் இணையக் கேட்டுக்கொண்டார்.
இன்று “இளைய அப்துல்கலாமாக” வலம்வருகிறார்.
ஊக்கம்
ஆக்கம் தந்துவிட்டதுதானே?. புகழ் ; பணம் ; பதவி எல்லாவற்றையும் மடியிலா மாணாக்கர் பெற்றுவிடுகிறார்.
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள் (திருக்குறள்:617)
என்னும்
தெய்வப்புலவரின் வாக்கே செல்வாக்குதானே.
பிரதாப் இந்தியத் தாயின் அருமை மகன். வளர்க.
பதிலளிநீக்கு