சிரிப்பு - நோய் தீர்க்கும் இனிப்பு மருந்து
அன்பின் மொழி சிரிப்பு. உலகையே தன்வசப்படுத்தும் ஆற்றல் புன்னகைக்கு உண்டு. அதனை உணர்ந்தவர்கள் வாழ்க்கையை மலரவனமாக்கி மகிழ்கிறார்கள். சிரிக்க மறந்தவர்கள் வாழ்க்கையைச் சிறையாக்கிக் கொள்கிறார்கள்.
பொன்னகையைக் காட்டிலும் உயர்ந்தது புன்னகை. அதனால்தான் அது ஏழைகளுக்கும் வசப்பட்டு இருக்கிறது. எந்திர உலகில் மனிதன் தந்திரமாக வாழ்ந்து வாழ்ந்து நொந்து போகிறான். ஒவ்வொருவர்க்காகவும் அவன் ஒவ்வொரு முகமூடி அணிந்து தன் இயல்பான முகத்தையே மறந்துவிடுகிறான். அவனுடைய உண்மையான முகத்தை உண்மையான சிரிப்பின்போது மட்டுமே கண்டுகளிக்கமுடியும். ஒருவர் மற்றொருவரைப் பார்த்து மரியாதையுடன் சிரித்தால் மற்றவர்கள் மனம் நெகிழ்வது இயல்புதானே. கோபம், பதற்றம் உடையவரையும் அழுத்தம் குறையச்செய்யும் அற்புத மருந்து சிரிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் மே திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமையினை "உலக சிரிப்பு நாளாகக்" கொண்டாடுகிறோம். மும்பை வாழ் மருத்துவர் மதன் கதரியா, சிரிக்கும் யோகாவைத் தொடங்கினார். 2000- ஆண்டில் உலக நாடுகள் முழுதும் உலக சிரிப்பு நாளைக் கொண்டாடத்தொடங்கினர். அதனால்தான் இன்று பல பூங்காக்களில், காலையும் மாலையும் ; கூடியும் தனித்தும் சிரித்து மகிழ்கின்றனர். காரணமின்றி சிரிப்பது கடினம் என்றாலும் தன் குழந்தைப்பருவத்தில் கோலிக்காகவும் பம்பரத்திற்காகவும் அழுததை எண்ணினாலும் சிரிப்புவரும். இளமைப்பருவத்தில் நண்பர்களுடன் அரட்டை அடித்ததனை நினைத்துப்பார்த்தாலும் சிரிப்பு வரும். அழுத தருணங்கள் கூட புன்னகையாகி இதழ்களை விரிக்கும் ; ஆனந்த கண்ணீர் இதழ்பட்டு இனிக்கும்.
குழந்தை ஏன் அழகாக இருக்கிறது. அது சிரிப்புக்குத் தடை போடுவதில்லை. வயதாக ஆக சிரிப்பு குறைகிறது என்பது உண்மையல்ல. சிரிப்பு குறையக்குறைய வயதாகிறது என்பதே உண்மை. சிரித்து வாழ்வோம். வாழ்க்கையை மதித்து வாழ்வோம்.
மருத்துவர்கள் கைவிட்டவர்கள் கூட இதழ்விரித்துப் புன்னகையால் உயிர் வாழ்ந்த வரலாறுகள் பல. மருத்துவமனையில் மருத்துவத்துடன் புன்னகை சேரும்போது வீடுசேர்வதும் விரைவாகிவிடுகிறது. சிரிக்கும் முகங்கள் அழகாக இருப்பதால் தான் திருமணத்தில் கூட சிரிக்கும்படி புகைப்படக்காரர் வேண்டுகிறார். இனி சிரிப்பதற்கான வாய்ப்புகள் குறையலாம் என்பதற்காக அல்ல. அப்போதுதான் படம் அழகாகவரும் என்பதால்தான். சில நொடிகள் சிரிக்கும்போதே படம் அழகாக இருக்கிறது என்றால் வாழ்நாள் முழுதும் சிரித்து வாழக்கற்றுக்கொண்டால் வாழ்க்கை எத்தனை அழகாக இருக்கும்.
இறுக்கமான முகத்துடன் வாழ்வதால் எத்தனை நரம்புகள் முகத்தை முடக்கி விடுகின்றன. புன்னகைத்துப் பாருங்கள் பூவாய் முகம் மலரும். பெண்களுடைய முகத்தை மட்டும்தான் பூ என் கிறார்கள் கவிஞர்கள். புன்னகைக்கும்போது முகம் சிவப்பதாலா?. என்று தெரியவில்லை. ஆண்கள் முகத்தைச் சொல்வதில்லையே?. பெண்களிடம் காதலைச்சொல்லி பெண்ணின் கைகள் ஆணின் கன்னத்தைச் சிவக்கச்செய்தாலும் அப்படியே.
காளைப்பருவத்தில் விருப்பப்படி ஊரைச் சுற்றினால் கால்கட்டுப் போடுவார்கள்தானே? திருமணம் சில நேரங்களில் பெண்ணுக்கு நகைக்குரியதாகவும் ஆணுக்கு நகைப்புக்குரியதாகவும் மாறிவிடுகிறது. அதனை உணர்ந்தே திருமணம் செய்யும் ஐயர் கூட "நல்ல நேரம் முடியப் போகுது. சீக்கிரம் பொண்ணக் கூட்டிட்டு வாங்க" என்பார்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் தம்பதியரின் இருக்கையில் அமர்ந்திருக்கும் இடைவெளியைக் கொண்டே திருமணம் ஆன ஆண்டுகளைக் கணக்கிடமுடியும். பேசுவதைக்கொண்டும் கணக்கிடலாம். திருமணத்திற்கு முன் ஆசையாகப் பேசுவான். திருமணமான பின் கொஞ்சுவது குறையும். மனைவியே அதற்குக்காரணமாகிவிடுவதும் உண்டு. எப்படி எனக் கேட்ட மனைவிக்கு கணவனே விடை சொல்கிறான். முதல் இரவில் இனி நீங்கள் உண்மையை மட்டுமே பேசவேண்டும்" எனச் சத்தியம் வாங்கிக்கொண்டது நீதானே என்றான். பிறகு எப்படி "தங்கமே, மலரே:" என்றெல்லாம் வருணிக்கமுடியும் என்கிறான்.
"என் பொண்டாட்டி உண்மையிலே ஊருக்குப் போயிட்டா" என்னும் சொல் எத்தனை மன இறுக்கத்தைக் குறைத்துவிடுகிறது. லாக்டவுன் என்னும் வீட்டிருப்பு நேரத்தில் "ஞாயிற்றுக்கிழமை வெளியே போகக் கூடாது. இரவு நேரத்தில் வெளியே போகக்கூடாது. கண்டவர்களிடம் பேசக்கூடாது." என எத்தனையோ கட்டுப்பாடுகள். அனைத்தும் நன்மைக்குத்தான். ஆனால் இவை அத்தனையும் திருமணமானவர்களுக்கு திருமணமான நாட்களிலேயே மனைவியால் விதிக்கப்பட்டுவிடுகிறதுதானே. கொரோனோவுக்கும் முன்னரே கட்டுப்பாடுகளை விதித்த மனைவி தீர்க்கதரிசிதானே.
சிரிப்போம் . மற்றவர்களும் சிரிக்கும்படி இருந்தால் மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக