தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 29 மே, 2021

தீங்கற்றதே வாய்மை – திருக்குறள்

 



தீங்கற்றதே வாய்மை – திருக்குறள்

     எல்லோருக்கும் கடவுளைப் பிடித்திருக்கிறது. உறவுகளில் தாயாரையும், பின் தந்தையையும், உடன்பிறந்தோரையும், சுற்றத்தாரையும் ; நட்புக்களையும், உடன் பணியாற்றுவோரையும், பயணம் செய்வோரையும் எனத் அடுத்தடுத்து வரிசை தொடர்கிறது. இது உண்மைதானே. “ஏன்? இவ்வாறு வரிசைப்படுத்தினீர்” எனக்கேட்டால் என்ன சொல்வீர்கள்?. முதலில் தயங்குவீர். “இதைக் கூறினால்தான் உங்களுக்கு அடுத்தவேளை உணவு” எனக்கூறிவிட்டால் என்ன செய்வீர்கள்?. வரிசைப்படுத்திவிடுவீர்கள்தானே. வரிசைப்படுத்தி எழுதியதைப் பாருங்கள். யாருக்கெல்லாம் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்களோ அவர்களைத்தான் வரிசைப்படுத்தியிருப்பீர்கள். உங்களிடம் உண்மையாக இருப்பவர்களை நீங்கள் மறந்தும் போயிருக்கலாம்தானே. இப்போது இரண்டு மூன்று பெயர்கள் நினைவுக்கு வருகிறதா? அவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பட்டியலில் உள்ள அனைவருமே வாய்மையின் விழுக்காட்டிற்கேற்ப முதல் இடத்தினையும் கடைசி இடத்தினையும் பெற்றிருப்பதைக் கண்டறியலாம்.

     வாய்மையுடன் வாழ்பவர்க்கே இல்லத்திலும் உள்ளத்திலும் இடம்கொடுக்கிறோம். “உன் பிள்ளைக்குப் படிப்பு ஏறாது” எனப் பள்ளிக்கூடத்தை விட்டுத் துரத்தியபோது மகனிடம் அச்செய்தியை மறைக்கிறாள் தாய். “உன்னுடைய மூளையின் வேகமான செயல்பாட்டிற்கு பள்ளிக்கூடம் தேவையில்லை. நானே கற்றுக்கொடுக்கிறேன்” எனக்கூறி உலகத்திற்கே ஒரு விஞ்ஞானியைக் கொடுத்தார். அவர்தான் எடிசன். இன்று உலகமே மின் வெளிச்சத்தில் இருக்க அவரே வழி செய்தார். இந்தத் தாயின் பொய்தான் புரைதீர்ந்த நன்மை பயத்தது. எனவே, இந்தப் பொய்மை வாய்மை இடத்ததே எனத் தெய்வப்புலவர் வழிநின்று உணரலாம்தானே?

     ஒரு கொள்ளையோ, கொலையோ, மானத்திற்கு இழுக்கோ நடந்தால் அதனைக் கூறிக்கூறி மகிழ்ச்சியடையக் கூடிய மக்களை ; ஊடகத்தை என்னென்பது? அதுவும் ஏழைகளாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கிழிகிழியென்றுகிழித்து வறுத்தெடுத்துவிடுவதனைக் காணமுடிகிறது. ஒரு முறை விளைந்த அவமானம் இத்தகைய சில கீழ்த்தரமான ஊடகத்தாரால் நாள்தோறும் அரங்கேறும். இந்த வாய்மை வாய்மையாகுமா? ஆகாது.

    பக்கத்து வீட்டுக் கூரை எரிவதைப் பார்த்து ரசிப்பவர்கள் தன் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள இயலும். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவமானம் எனில் அதனைத் திருத்துவதற்கு ஊடகங்கள் துணைசெய்யவேண்டும். தாக்குதலுக்குண்டானவர்களுக்கான இழப்பீடு, காப்பீடு, சட்ட உதவிகள் என உதவிசெய்வதற்கே ஊடகங்கள் துணைசெய்யவேண்டும். அதற்குத் துணைசெய்யும் ஊடகங்கள் போற்றத்தக்கனவே.  மாறாக யாரிடம் இருந்து பணம்பெறலாம்? செய்தியைத் தொடர்ந்து மெல்லுவதா?  தள்ளுவதா? எனத் தந்திரம் செய்யும் ஊடகங்களால் சமூகம் கெடும் ; தலைமுறைகள் தடுமாறும்.

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

     தீமை இலாத சொலல் (திருக்குறள் - 291) 

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்கினை அறியாத தமிழரே இருக்கமுடியாது.  அப்படி இருந்தும் எப்படி எல்லா இடங்களிலும் பொய்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.

நடக்கின்ற செயல்களெல்லாம் நல்லவையாக நடந்தால் ; அச்செய்தி சமூகத்திற்கு நன்மை பயந்தால், சொல்லலாம் ; தீமை பயக்குமெனில் மௌனமாய் இருத்தல் நன்று. எனவே, இத்திருக்குறள் சூழலைத் திருத்தி அறத்துடன் வாழவேண்டியதன் அவசியத்தினை உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

“எப்போது பேசுவது நல்லது?” எனக் குருவிடம் ஒரு சீடன் கேட்கிறார். அதற்குக் குரு “எப்பொழுது உன்னுடைய மௌனத்தை விட பேச்சு நன்மை தரும் என நினைக்கிறாயோ அப்பொழுது பேசுவதே நல்லது” என்கிறார். இதனையே மக்கள் அனைவரும் தாரக மந்திரமாகக் கொள்ளவேண்டும்.

நடந்த செயலாக இருந்தாலும், நடவாத செயலாக இருந்தாலும் அது தீமை பயக்குமாயின் அதனைச் சொல்வது வாய்மையாகாது. அவ்வாறே, நடந்த செயலாக இருந்தாலும், நடவாத செயலாக இருந்தாலும் அது நன்மை பயக்குமாயின் அதனைச் சொல்வது பொய்மையாகாது என உரையாசிரியருள் சிறந்தவரான பரிமேலழகரின் உரை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.  இனி, ஒவ்வொரு சொல்லையும் பேசும்பொழுது வாய்மை என்னும் கல்லில் சொற்களை உரசிப்பார்த்துப் பேசுவீர்தானே? அப்படிப்பேசினால் உங்கள் சொற்கள் தங்கமாகும் ; நீங்களும்தான்.

 

 

 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக