தமிழர் விளையாடல்கள்
பொழுதைப்போக்கும் விளையாட்டுகள் அறிவையும், அன்பையும் வளர்ப்பனவாக அமைதல் நன்று. எந்திர விளையாட்டு உடல்நலத்தைக் கெடுத்துவிடுகிறது. குழந்தைகளை அடிமையாக்கி நரம்பு பிரச்சினைகளை உண்டாக்கிவிடுகிறது. தமிழர்களின் விளையாட்டு அன்பை ஊட்டும். அறிவை வளர்க்கும். உடல்நலத்தைப் பாதுகாக்கும் ; உள்ளத்தை தெளிவாக்கும்
விளையாட்டு, குழந்தைகள் நன்கு
விளைவதற்கு அல்லது வளர்வதற்கு வழிகாட்டுவது. பிறப்பு முதல்
இறப்பு வரை ஆடும் வழக்கம் இன்றும்
இருப்பதனைக் காணமுடிகிறது. நாட்டுப்புறப்பாடல்களில் ‘விளையாட்டுப்
பாடல்கள்’ எனத் தனிவகையே இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தையும்
உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே வளர்ப்பன. குழந்தைப்
பருவம் அனைத்தையும் கற்றுக்கொள்ளும் பருவம். ஏதேனும் ஒன்றைக்
கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என விழையும் பருவம். அப்பருவத்தில்
கற்றுக்கொடுக்காவிட்டால் வளர்ச்சி தடைபடும். ஆளுமையினை
வளர்க்கும் வகையில் விளையாட்டினை அமைத்த தமிழரின் அறிவுத்திறத்தை நாட்டுப்புற விளையாட்டுக்கள்
எடுத்துக்காட்டுகின்றன.
‘தாய்ச்சி’
வினாவிடைச் சங்கிலி : குழந்தைகள்
விளையாடும் ‘தாய்ச்சி’ என்னும் விளையாட்டு சொல் வளத்தைக்
கூட்டுவிக்கும். அது ’வினாவிடைச்சங்கிலி’ என்பதாக அமைகிறது. தாய்போல்
நின்று வழிபடுத்தும் கிழவிகளையே ‘தாய்ச்சி’ எனக் குறிப்பிடுவர். நல்ல பழக்கவழக்கங்களை
நினைவுறுத்தி நல்வழிகாட்டுவர். ‘பெரியோர் சொன்னால் பெருமாள் சொன்னா மாதிரி’ என்னும் வழக்கத்தையும்
இங்கு எண்ணலாம். குழந்தைகளுக்குத் ‘தலைக்குளிப்பாட்டுவது’ முதல் ‘இறந்தார்க்கு
சடங்குசெய்வது’ அனைத்தையும் ‘தாய்ச்சி’யே முன்நின்று
வழிகாட்டுவார். எனவே ‘தாய்ச்சி’யாக ஒரு குழந்தை மற்ற
குழந்தைகளை வழிப்படுத்தும். ’தாய்ச்சி’ விளையாட்டில் விளையாட்டாக
நல்ல பழக்க வழக்கங்களை விளையாட்டாகவே கற்றுக்கொடுத்துவிடுவர்.
தண்ணி தண்ணி – என்ன தண்ணி ? – பச்சைத் தண்ணி – என்ன பச்சை ? – எலை பச்சை – என்ன எலை ?
- மா எலை – என்ன மா ? – உப்பு மா – என்ன உப்பு ? – அரலி உப்பு – என்ன அரலி ? – சோத்து அரலி ? – என்ன சோறு ? – பொங்கச் சோறு – என்ன பொங்கல் ? – மாட்டுப்
பொங்கல் – என்ன மாடு ? – நாட்டு மாடு – என்ன நாடு ? – பாரத
நாடு – என்ன பாரதம் ? – வட பாரதம் – என்ன வட ? – ஆம வடை – என்ன ஆமை ? – குளத்தாமை – என்ன குளம் ? – கோயில் குளம் – என்ன கோயில் – சிவன் கோயில் – என்ன சிவன் ? – திரிசடை சிவன் – என்ன திரி – விளக்குத்திரி – என்ன விளக்கு? – குத்து விளக்கு – என்ன குத்து ? – கும்மாங்குத்து – எனக்கூறி
முன் நிற்பவரை விளையாட்டாகக் குத்திவிட்டு ஓடுவர். குத்து வாங்கியவர்
பின்னே துரத்திச்சென்று பிடிப்பர். குடும்பம்
நடத்தும் முறையோடு அன்றாட செயல்களை வெளிப்படுத்துவதாக இவ்விளையாட்டு அமையும். இதனால் மொழி
வளம் கூடும். இவ்வாறு ’தாய்ச்சி’ ஒவ்வொன்றாய்
கேட்டு விளக்கம் பெறுதல் அருமையான விளையாட்டாக அமையும். சொல்லழகையும் பொருளழகையும்
கற்பிக்கும் விளையாட்டு. கற்பித்தலை விளையாட்டாக அமைப்பது.
’கண்ணாமூச்சி’
தாய்ச்சியாக ஒரு குழந்தை நின்றுகொண்டு, ஒரு குழந்தையின்
கண்களைக் கைகளால் மூடும். மற்றவர்களை ஒளிந்துகொள்ளச்சொல்லும். ஒளிந்துகொண்டபின்
கைகளை விடுவித்து கண்டுபிடிக்கச்சொல்லும். குழந்தைகளின்
எண்ணிக்கைக்கேற்ப குழுக்களாகவும் விளையாடுவர். ஒரு குழு
தேட மற்றொரு குழு ஒளிந்துகொள்ளும்.
தாய்ச்சியான குழந்தையே நடுவராக நின்று இவ்விளையாட்டை வழிநடத்தும். கண்களைப்
பொத்தி ஆடுவதால் ‘கண்பொத்தியாட்டம்’ எனவும் ’கண்ணாமூச்சி’ எனவும் அழைப்பர். குழந்தை தவழும்
போதும், நடக்கக் கற்கும் போதும் தாயோ, பிறரோ ஒளிந்திருந்து
அழைப்பர். குழந்தை ஒளிந்திருப்பவரைத் தேடிவரும். நெருங்கி
வந்ததும் ‘அப்பூச்சி’ என ஒலியெழுப்பி மகிழ்வர். குழந்தையும்
சிரித்து மகிழும். இதனை, ‘அப்பூச்சிக்காட்டும் விளையாட்டு’ எனவும் அழைப்பர். தேடிப்
பழகுவது ; தன்னம்பிக்கை வளர்ப்பது ; அச்சத்தை நீக்குவது எனப் பல நிலைகளில் இவ்வாட்டம்
மனத்தை வளப்படுத்தும்.
’ஓடி விளையாடு பாப்பா’ என்றும் ’மாலை முழுதும்
விளையாட்டு’ என மகாகவி பாரதியார் பாடியுள்ளது இங்கு எண்ணத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக