தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 16 மே, 2021

கலியுகத்தில் வாழ்வதற்கான இரகசியங்கள் – Secrets to live in kaliyuga

 


உங்களைப்போல் யார் இருக்கிறார்கள்?

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வகையாக அசுர குணமும் , தேவ குணமும் மனிதர்களை ஆண்டுகொண்டிருக்கும். முதலில் தேவ குணம் என்னும் நற்குணம் மட்டுமே மக்களிடம் பரவி இருந்தது. பின்னர், சில மனிதர்களிடம் அசுர குணமும் சில மனிதர்களிடம் தேவ குணமும் இருந்தது.  இன்றைய கலியுகத்தில் ஒருவரிடத்திலேயே  இருகுணமும் ஒளிந்திருக்கிறது. யாரிடம் எந்த குணம் இருக்கிறது? எனக் கண்டறிதல் கடினம். எந்தக் கட்சிக்கு ஓட்டுக்குப் போட்டாய்? எனக் கேட்டால் வஞ்சம் இல்லாமல் ‘உங்கள் கட்சிக்குத்தான்’ எனச்சொல்லி, கேட்பவரை மகிழ்ச்சிப்படுத்தத் தெரிந்தவரே கலியுகத்தில் வாழத்தெரிந்தவர். “இல்லை, இல்லை, நான் உண்மைதான் சொல்வேன்”  என்று கூறிவிட்டால், இந்த உலகத்தில் வாழ்வதற்கான தகுதி இல்லை என்பதனை நீங்கள் முடிவு செய்யவேண்டிய அவசியம் இருக்காது. யார் மனமும் நோகாமல் அவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படுத்தும்வகையில், புன்னகையில் மட்டுமே விடைசொல்லத்தெரிந்தவர்கள் கலியுகத்தில் வாழ்வதற்கென்றே பிறந்தவர்கள்.

மனிதர்கள் அனைவரையும் நல்லவராக எண்ணி, சிரித்துப் பழகி உறவுகளை வளர்க்க மட்டுமே தெரிந்திருந்தால் நீங்கள்  இந்தக் கலியுகத்தில் வாழத்தகுந்தவரில்லை. சாலையில் சிரித்துப்பேசிக்கொண்டே ஒருவர் உங்களுடைய கவனத்தைத்  திருப்பி உங்கள் சட்டைப்பையிலிருக்கும் பணத்தை தன்னுடைய சட்டைப்பைக்கு உங்களுக்குத் தெரியாமலே இறக்குமதி செய்திருப்பார். சாலையில் நடக்கும்போது, நடைபோட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடிப்பவரைப் போல நடந்து வீடு சேர்வது நன்று. மொழி தெரியாதவர்களைப்போல் நடந்துகொண்டால் நீங்கள்தான் “கலியுக ஜித்தன்”.

பணம் எடுக்கும் எந்திரத்தை நம்பாமல், பக்கத்திலிருப்பவரை நம்பினால் அவர் உங்களின் தேவைக்குப் பணம் எடுத்துக் கொடுத்து உங்களை அனுப்பிவிடுவார். பின்னர், அவர் தேவைக்கும் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்வார். கலியுகத்தில் மனிதர்களைக் காட்டிலும் எந்திரத்தைப் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.   இது அனைத்து மின்னணு கருவிகளுக்கும் பொருந்தும்.

“பிச்சையிட்டால் பாவம் தொலையும்” எனக் கனிவுடன் பிச்சையிடும் கனிவான உள்ளம் கொண்டவரா நீங்கள்? “ஆம்! என் கிறீர்களா.”கேட்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், பிச்சை எடுப்பதையே ஒரு நிறுவனம் போல் நடத்தும் கயவர்கள் வளர்வதற்கு நன்கொடை அளிப்பவர்களாகவும் நீங்கள் மாறியிருக்கலாம்தானே? கலியுகத்தில், உங்கள் கருணை, புண்ணியத்திற்கு மாற்றாகப் பாவமும் கூட்டக்கூடும்.  ஆனால், “‘இல்லை’ என்று சொன்னால் அசிங்கமாகத்திட்டி மானத்தை வாங்கிவிடுவார்களே (அப்படியும் சில பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறேன்)” எனக் கையில் கிடைத்ததைக் கொடுத்து தப்பி ஓடி, மூச்சுவாங்கிக்கொள்ளத்தெரிந்தால் நன்றுதான்.

மற்றுமொருவழியுண்டு, ஒருவழிப்பாதையில் போக்குவரத்துக்காவலரைக் கண்டு, ஏதோ ஒரு முக்கியமான கோப்பினை (ஃபைல்) வீட்டில் மறந்துவிட்டுவந்ததுபோல் திரும்பிவிட்டாலும் நீங்கள் பிழைத்துக்கொள்வீர். இல்லாவிடில்,  திரும்பிக்கொண்டுகாதுகேளாதவர்போல் நடிக்கத்தெரிந்தால் இந்த உலகம்தான் நீங்கள் நடித்துக்காட்டி அசத்தவேண்டிய நாடகமேடை. பிச்சைக்காரரைக் கண்டு வருந்தியகாலம் மாறி அஞ்சும்காலம் வந்துவிட்டதால் இது கலியுகம்தானே. நல்லது செய்தாகவேண்டுமென்றால் அரசு மருத்துவமனைகளில்  உறவுகளைச்சேர்த்துவிட்டு,  ஓட்டலில் தங்க வசதியின்றி வெளியே காத்திருக்கும் மக்களுக்குத் தானம் செய்யலாம். பாவம் ! உள்ளமும் செத்து, உடலும் செத்து  வாழும் பலரை அங்கு பார்க்கலாம்.

                வீட்டில் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வழக்கம் உங்களுடையதா? உங்கள் குழந்தை அவ்வாறு இல்லையே என வருந்துகிறீரா? நீங்கள் இந்த யுகத்து மானிடர்  இல்லை. விருந்தினராக வந்தவர்களைப் பார்த்து வணக்கம் கூறினாலோ ; புன்னகை சிந்தினாலே போதும். “இப்படிப்பட்ட நல்ல குழந்தைகளை வளர்த்திருக்கிறீர்களே” எனப் பாராட்டத் தெரிந்திருக்கவேண்டும். குழந்தைகளில் வயதிற்கேற்ப  விளையாட்டில் வரும் கதை நாயகனின் பெயரைச்சொல்லி இதில் எந்த  “கேம்” பிடிக்கும் எனக் கேட்கத்தெரிந்தால்  உங்களுக்கு “கலியுகத்தில் வாழ்வதற்கான சிறந்த மனிதர்” விருதே கொடுக்கலாம்.

                படித்தவர்கள் வரிசையில் வராமல் சூழ்ந்து நின்றால், நீங்களெல்லாம் படித்தவரா? எனக் கேட்க கூடாது. கேட்டால் நீங்கள் பழைய யுகத்தில் வாழவேண்டியவர்கள். பேருந்து வந்து நின்றதும் வரிசையாகச் சென்று ஏறாமல் ஒருவரையும் ஏறவிடாமல் கைகளால்வேலிபோட்டுத் தடுப்பவர்களைப் பார்த்தால், “என்னே திறமைசாலி! தனக்கென ஒரு சீட்டைப் பிடிக்க எப்படி ஒரு தடுப்புபோட்டார் !” எனப்பாராட்டி, “கலியுகத்தின் சிறந்த பயணி” பட்டம் கொடுக்கலாம். பொறுத்திருந்து கூட்டம் குறைந்தபின் பேருந்தைப்பிடித்து இரண்டு மணி நேரம் காலதாமதமாகச் சென்றால் “நீங்கள் பிழைக்கத்தெரியாதா ஏமாளி” பட்டத்தை இலவச இணைப்பாகப் பெறுவீர்.  

 தங்க நகைக் கடையில் பொருள் வாங்கும்போது “மீதிச் சில்லறையை நீயே வைத்துக்கொள்” என நகைக்கடைப் பையனுக்குக் கொடுக்கத்தெரிந்த ஒரு வள்ளலுக்கு, கீரை விற்கும் முதியவரிடம்  ஒரு கட்டு பதினைந்தா? பத்துதானே? எனப்பேரம்பேசி ஐந்து ரூபாய் மிச்சம்பிடிக்கத் தெரிந்திருந்தால் கலியுகம்  அவருக்குத்தான் சொர்க்கம்.

தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து பால் கொடுக்கும் பால்காரர் ஒரு நாள் தாமதமாக வந்தால் ‘பாவம்! என்ன வேலையோ?” என நினைக்காமல், உங்களிடம் பால்வாங்குவதைவிட “பாக்கெட் பால்” வாங்கிவிடலாம் போலிருக்கு என அவரை அச்சுறுத்தத் தெரிந்தவர்க்கு “கலியுகத்தின் குடிமகன்” பட்டமே கொடுக்கலாம். ஏனென்றால், அவர்தான் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து குடிமகன்களோடு குடிமகனாக குடிக்கப்பழகியவர். அப்படிப்பட்டவர்களைக் கண்டால் உங்களைப்போல் கண்டிப்பா இருந்தால்தான் நாடு உருப்படும்” எனப் பாராட்டத்தெரிந்திருந்தால் கலியுகத்தில் நட்பை வளர்த்துக்கொள்வது எளிது. இடித்துரைத்தால் அடிவாங்கவேண்டியதுதான்.

ஆசிரியரை வழியில் பார்த்தால் ஓடி ஒளிந்துகொண்டு அவர் சென்ற பிறகு வெளியே வருவதும். பேருந்தில் பயணம் செய்யும்போது ஆசிரியரைப் பார்த்துவிட்டால் தூங்குவது போலும் நடிக்கத்தெரிந்த மாணவருக்கு ‘கலியுக மாணவர்’ எனச் சான்றளிக்கலாம். இறங்கும்போது பார்ப்பது தவிர்க்கமுடியாமல் வணக்கம் கூறினால், இந்தப் பேருந்திலா வந்தீர்கள்? எனக்கேட்டால், முந்திக்கொண்டு அவர்களை “நீ பார்த்திருந்தால் இடம் கொடுத்திருப்பாயே? எனப் பாராட்டத்தெரிந்திருக்கவேண்டும்.  அவரே கலியுகத்தின் சிறந்த ஆசிரியர். ஏழை ஆசிரியரின் நிலைமை அறிந்து அவருக்கு வீடு கட்டிக்கொடுத்த மாணாக்கர்களைக் கண்டால் அவர்கள் சென்ற யுகத்தின் எச்சம் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

இப்படி, அடுக்கிக்கொண்டேபோகலாம்தானே. இனி வாசகரே உம் சமத்து.

யாராவது உங்களை கண்டு கொள்ளவில்லையே என்றால் ‘முறைத்துப்பார்க்கவில்லையே’ என  நினைத்துக்கொள்ளுங்கள்.  முறைத்துப்பார்த்தார் என்றால் ‘ஏசவில்லையே’ என  நினைத்துக்கொள்ளுங்கள்.  ஏசினார் என்றால் ‘அடிக்கவில்லையே’ என  நினைத்துக்கொள்ளுங்கள்.  அடித்தார் என்றால் ‘கொல்லவில்லையே’ என  நினைத்துக்கொள்ளுங்கள். கொன்றார் என்றால் ‘இவ்வுலகிலிருந்து விடுதலை கொடுத்தார் என  நினைத்துக்கொள்ளுங்கள்., கலியுகத்தில் சகிப்புத்தன்மையுடன் வாழ முன்னோர்கள் கற்றுக்கொடுத்த இரகசியம்  இது.

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக