தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 15 மே, 2021

கண்ணகி கற்பித்த பெண்ணியம் –– Kannagi – The Feminist





 மதுரையை எரித்த தீபம் 


நாவிற்குச் சுவையூட்டும் காரத்தை அறிவோம். அறிவுக்குச் சுவையூட்டும் காரத்தை அறிவீரா? ஆம் அந்த காரம். நீங்கள் அறிந்த காரம்தான். சிலப்பதிகாரம். 5270 அடிகளைக் கொண்ட சிலப்பதிகாரம் முதல் காப்பியமாக மட்டுமின்றி முதன்மைக் காப்பியமாகவும் நிலைபெற்றுவிடுகிறது. ஐம்பெருங்காப்பியமே ஆயினும் இரட்டைக் காப்பியமே ஆயினும் சிலப்பதிகாரத்திற்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. அது தீபம் தீப்பந்தமான கதை. ஒவ்வொரு இலக்கியமும் இலக்கினைக் கொண்டுதானே அமைகிறது.
 
பெண்ணிய இலக்கணச் சேய்க்கு இலக்கியம் கற்பிக்கும் இலக்கியத் தாய் சிலப்பதிகாரம் எனலாம். இலக்கணமுடன் வாழும் வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வே இலக்கியமாகி வழிகாட்டுகிறது. இளங்கோவடிகள் பதிகத்திலேயே சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகளை எடுத்துக்காட்டி பத்தினி வாழ்க்கையின் பக்குவத்தினை அறிவுறுத்தியுள்ளார். இளங்கோவடிகள் பெண் குலத்தையே கதைத்தலைவியாக்கி ஊழ்வினை குறித்த எண்ணங்களைக் காவியமாக்கி உணர்த்தியுள்ள சிறப்பு எண்ணி வியக்கத்தக்கது.
 
இலக்கணம் என்றாலே விளக்கெண்ணெய் எனச்சிலர் சொல்வர். அதுவும் உண்மைதான். விளக்கு எரிய வேண்டுமானால் எண்ணெய் வேண்டும்தானே.  தமிழர்க்குரிய தமிழ் மொழியின் இலக்கணத்தை, இளைய தலைமுறைக்குக் கொண்டுசொல்ல வேண்டுமெனில், இலக்கிய விளக்கம் தேவைதானே. அவ்வகையில், பெண்ணிய இலக்கணத்தை படம்பிடித்துக்காட்டும் அரிய இலக்கியம் சிலப்பதிகாரம்.  இது பொருள் இலக்கணம் ; அதனால்தான் அகவாழ்க்கையை அழகாகச் சொல்கிறது.
       
        பெண்ணுக்குரிய நாற் குணங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த கண்ணகி அறத்தைக் காக்கும் சூழல் விளையும் போது பொங்கி எழுந்து தன்மானத்தையும் குலப்பெருமைகளையும் காக்கும் நிலையினை எடுத்துக்காட்டுகிறார் இளங்கோவடிகள். பெண்கள் எவ்வாறு துணிச்சலுடன் வாழ வேண்டும் என வழிகாட்டுகிறாள்.  கணவனைத் திருத்த முடியாத கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் எனக்கேட்பார்கள். ஆனால் அக்கால வழக்கத்தில் சில செல்வந்தர்களிடம் பிற பெண்டீரை நாடும் வழக்கமாக இருந்தது. என்செய்வது? மாதவியின்வழி  இதனை அறியலாம்தானே?   
 
ஒரு காலத்தில் “தீபம் தலை கீழாக எரியும்” எனக் கூறியபோது எல்லோரும் சிரித்தனர். ஆனால் இன்று எல்லா விளக்குகளும் தலைகீழாக மட்டுமல்ல எப்படி வேண்டுமானாலும் நீண்டும் வளைந்தும் எரிவதனைக் காணமுடிகிறது. அவ்வாறே பெண்ணின் நிலையும் எழுச்சியுறும் என்பதனை முன்னரே அறிந்தனர். எதிர்மொழி பேசா கண்ணகி பின்னாளில் வெஞ்சின மொழிபேசுவதன் வாயிலாக உணர்த்தினார் இளங்கோவடிகள். எவ்வாறெனினும் கண்ணகி தன்னுடைய சொல்லில் குற்றம் நிகழாதவாறு தன் முன் தோன்றிய தீக்குரிய கடவுளிடம் ‘தீத்திறத்தார் பக்கமே சார்க’ என்றே கூறினாள்.  இதுவும் ஒரு இலக்கணம்தானே.
 
        கருங்கயற் கண் விழித்து ஒல்கி நடந்தவெல்லாம் நின் கணவன்
        திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி
 
என்னும் அடிகளின் வழி காவிரியின் பெருமையினையும் மன்னனின் பெருமையினையும் கூறுகிறது. ஆணின் பெருமையான நடைக்குப் பெண்தான் காரணம் என்னும் இலக்கணத்தோடு, ஆணுடைய ஆளுமையாலேயே பெண்ணின் பெருமை சிறப்பதனையும் உணர்த்தியுள்ளார் இளங்கோவடிகள். செல்லாச்செல்வன், கருணை மறவன், இல்லோர் செம்மல் என வாழ்ந்த கோவலனின் வலம்புரி முத்தாயிற்றே கண்ணகி. பெண்ணை ஆற்றுடன் ஒப்பிட்டதும் செழிப்பின் உள்ளடக்கம்தானே? ஆட்சியாளர்களின் ஆளுமையினைக் கொண்டே ஆறுகள் ஓடுவதும் ஒடுங்குவதும் அமைகிறது எனக்கூறியுள்ளதும் எத்தனை அழகு.
 
கண்ணகி மதுரையை எரித்த மல்லிகை.  ‘வண்ணச் சீறடி மண் மகள் அறிந்திலள் ‘ என்னும் மெல்லினமாகத் தொடங்கி ‘செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றெழில் சிலம்பொன்றேந்திய கையள்’ என வல்லினமாக மாறிய தன்மையைக் காட்சிப்படுத்துகிறது.
 
நிறைவாக, எவ்வுயிர்க்கும் இடையினமாக நிற்கும் கடவுள் தன்மை எய்தியதனை ‘பூப்பலி செய்து  காப்புக் கடை நிறுத்தி ; வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்து’ என மாறி நின்றதனை எடுத்துக்காட்டுகிறார். இதன் வழி பெண்ணின் பொறுமை, அருமை, பெருமை என்னும் மூன்று பெண்ணிய இலக்கணத்தையும் சுட்டிக்காட்டுகிறார் இளங்கோவடிகள். கண்ணகி பெண்ணியத்தின் அழகியல். மாசறு பொன் மட்டுமன்று ; மாசறு பெண்ணும் கூட.
 

         

 

1 கருத்து: