தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 22 மே, 2021

புறநானூற்றில் "செய்தி "அறம்

 


செய்தி என்னும் நன்றி மொழிதல்  – NEWS – Thanking Words

செய்தியாளர்கள், மக்களைக் காப்பதற்கென்றே அறப்பணி செய்யவந்த அருமனிதர்கள் ; எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து செய்திகளைத் தொகுத்துத் தரும் அவர்களின் உழைப்பால்தான் நாடு நலமாகிறது ; கடவுளுக்குப் பயப்படாதவர்கள் கூட செய்தியாளர்களின் ஒளிப்பதிவுக்குப் பயப்படுகிறார்கள். பெற்றோர்களிடம் பிள்ளைகள் நன்றியுணர்வுடன் இருப்பதுதானே அறம். ஏனென்றால், பிள்ளைகளை மட்டுமே பெற்றோர்கள் முழுமையாக நம்புவர். அப்படித்தான், இந்தச் சமூகம் செய்திகளை நம்புகிறது. அப்படியென்றால அந்நன்றியைப் போற்றுவதுதானே செய்தி அறம்.

                நான் செய்தியாளராக என்ன செய்யவேண்டும்? எனக் கேட்கிறார் ஒருவர். நீங்கள் செய்திகளை ‘மை’நிரப்பி எழுத வேண்டும் என்றார் ஓர் அறிஞர். என்ன மை? எனக்கேட்டபோது நேர்மை, வாய்மை, உண்மை எனக் கூறினார் அறிஞர். இக்கூற்று செய்தி அறத்தைச் சுட்டிக்காட்டுகிறதுதானே? அப்படியென்றால் செய்தியாளர்களின் எழுத்து எத்தனைப் பெருமையுடையதாக இருக்கவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செய்தியாளர்களுக்கிடையில் அச்சுறுத்தும் செய்தியாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள்தான் ஆபத்தானவர்கள்.

                செய்தி இல்லாமல் உலகம் இயங்குமா? இந்த உலகமே செய்திகளால்தானே நிரம்பியிருக்கிறது. அதன் மெய்ம்மையே உலகின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும். அதனால்தான், பெரியவர்கள் முதலில் கேட்கக் கூடிய கேள்வி “என்ன சேதி?”. ஒரு மனிதனைப் பற்றி செய்திதானே ஆளுமையின் அளவுகோலாகிறது. எனவே, எத்தனை திறமையும் புலமையும் இருந்தாலும் அதனைச் செய்தியாக்கத் தெரியாவிட்டால், பணி வாய்ப்புகளை இழக்கநேரிடுகிறது. அதுமட்டுமன்று, இல்லாததை இருப்பதாகச் சொல்லிவிட்டாலும் துன்பம்தானே.  உண்மை தெரியும்போது விரட்டிவிடுவார்கள்தானே? சொல்வதனை விளக்கமாகச் சொல்வதில் தவறில்லை. உண்மையை மறைத்து பொய்மையைப் பெருக்கிச்சொன்னால் அதனால் விளையும் துன்பத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும்.

                “இந்தப் பகுதி ஆபத்தானது” “இந்த வளைவு ஆபத்தானது” “மெதுவாகச் செல்லவும்” “இது ஒருவழிப்பாதை” “இங்கு பள்ளி உள்ளது” “ இது மருத்துவமனைப் பகுதி” “சத்தம்போடாதே” “பூக்களைப் பறிக்காதீர்கள்” “குப்பை போடாதீர்கள்” “வரிசையில் நிற்கவும்” “முதியோர்கள் மட்டும்” “வாகனத்தை நிறுத்தாதீர்” என எத்தனைப் பதாகைகள் செய்திகளைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. ஓரிடத்தில் நிற்கும் பதாகைகளே எத்தனையோ உயிர்களைக் காக்கின்றன ;  நாட்டை நல்வழிப்படுத்துகின்றன. அப்படியெனில் செய்தியாளர்கள் தவறான செய்திகளை வெளியிட்டு அச்சத்தை விளைவிக்கலாமா? உயிரோடு இருக்கும் பெரியவர்களை இறந்துவிட்டதாகச் செய்தி அனுப்புவது ; காவல்துறைக்குத் தவறான செய்திகளை அனுப்புவது ; உண்மையான செய்திகளைத் திரித்துச்சொல்வது ; குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு உண்மைச் செய்திகளை மறைத்துவிடுவது  என எத்தனை   செய்திகளைக் காணமுடிகிறது. இப்படிப் பொறுப்பற்ற செய்திகளை வெளியிடும் சில செய்தியாளர்களால்தான் உண்மையாக வாழும் செய்தியாளர்களுக்கு மதிப்பு இருப்பதில்லை.

                எத்தனையோ தலைவர்கள், செய்திகளை மக்களுக்குத் தெரிவிப்பதனையே முக்கியப்பணியாக எண்ணி நாட்டுப்பணிகளுக்கிடையே செய்தி நிறுவனங்களையும் நடத்தியும், எழுதியும் வந்தனர். அதனால்தானே நாடு விடுதலைபெற்றது. ஆங்கிலச் செய்தித்தாள்களும், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை ; மக்களின்  உண்மையான மன நிலையினை ; ஆங்கிலேயர்கள் செய்த கொடுமையினை அப்படியே விளம்பியது. அதுதான் செய்தி அறம். ‘செய்தி’ என்றால் ‘நன்றி’ என்றும் பொருள் உண்டு. மக்களால் வளரும் செய்தி நிறுவனங்கள் மக்களுக்குத் தெரிவிக்கும் நன்றிதான் செய்தி. அதனை எப்படி பொறுப்புணர்வுடன் அளிக்கவேண்டும் என்பதனைச் சங்க இலக்கியப்பாடல் எளிதாக உணர்த்திவிடுகிறது.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்,

மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,

வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன,

நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ …’

 

என்கிறது ஆலத்தூர் கிழாரின் புறநானூற்றுப்பாடல்(34).                                                                                                                      

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக