தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 23 மே, 2021

இனிக்கும் ஈழத்தமிழ்

 


தமிழின் அழகினைப் பழக்கிடுவோம்

தமிழ் என்றாலே அமிழ்தம். மூன்று முறை ‘தமிழ்’ என்னும் சொல்லைத் தொடர்ந்து கூறினால் முத்தமிழ் அமிழ்தாவதனை உணரமுடியும். அமிழ்தம் என்னும் சொல்லை ‘அம் + தமிழ்’  என எழுத்துக்களை மாற்றிப் பிரித்தால் “அழகான தமிழ்” எனப் பொருள்தரும்.  ஐந்து எழுத்துக்களையும் உள்ளடக்கியிருப்பதும் ஓர் அழகுதானே. அத்தகைய பெருமையுடைய உலகின் முதன்மொழி தமிழ்.

தமிழை எப்படிப் பேசினாலும் இனிக்கும்தானே. தேன் எங்கு தொட்டாலும் இனிப்பது அதன் இயல்பு. ஆனால் கொம்புத்தேன், மலைத்தேன் என எத்தனையோ தேன் இருக்கிறதல்லவா? அப்படித்தான் தமிழும் பல நாடுகளில்  இந்தியத்தமிழ், இலங்கைத்தமிழ், சிங்கைத்தமிழ், மலேயத்தமிழ் என  ஒலித்துக்கொண்டிருப்பதனைக் காணலாம்.

ஈழத்தமிழ் அன்னத்தால் பிரித்தெடுக்கப்பட்ட தமிழ். பிறமொழி கலவாத தூய்மையான தமிழ்ச்சொற்கள் அவை.  இன்பத்தால் இனிக்கும் ; பொருளால் சிறக்கும் ; அறத்தால்  அணைக்கும். எப்படி? எனக் கேட்க விழைகிறீர்களா? ‘கம்பவாருதி’ எனப் புகழப்பெறும் இலங்கை ஜெயராஜ் அவர்களுடைய தமிழ் இலக்கியச் சொற்பொழிவினைக் கேட்டுப்பாருங்கள். நான் சொல்வது துளி ; நீங்கள் கேட்டது கடல் என  உணர்வீர்கள்.

“ஈழத்தமிழை ஏன் உயர்வாகச் சொல்லவேண்டியிருக்கிறது?” என நினைக்கிறீர்கள். அப்படித்தானே? எப்போது ஒருவரை உயர்வாகச்சொல்லவேண்டி இருக்கிறது எனில், யாரோ ஒருவர் தாழ்வாக நடந்துகொள்ளும்போதுதான் உயர்வானவர்களை எடுத்துக்காட்டவேண்டியிருக்கிறது. அவ்வாறே, தமிழ்மொழியின் தரத்தைக் குறைக்கும் வகையில் பிறமொழியில் கலந்துபேசும் வழக்கம் பெருகிவருகிறது. தமிழில் ஆங்கிலம் கலந்துபேசும் நிலைமாறிவிட்டது. அப்படியா? எனக் கேட்டு பெருமைகொள்ளாதீர்கள். இன்று, ஆங்கிலத்தில் தமிழ்கலந்துபேசும் அளவிற்கு ஆங்கிலம் குழந்தைகளிடம் அடைக்கலப்பட்டுவிட்டது. “நாநுனியில் என் குழந்தை ஆங்கிலம் பேசும்” என உங்கள் நண்பர்கள் சொல்லக்கேட்டதுண்டுதானே? தாய்மொழியான தமிழின் நிலை என்ன? எனக் கேட்டுவிடாதீர்கள்.  தவறாமல்  கிடைக்கும் தேநீருக்குத் தடைவரலாம்.

மதிப்புமிக்க தமிழ் ஈழத்தமிழ். ஏனென்றால், அவர்கள் “வாங்க!,வாரும்” என்றே அழைப்பார்கள். ஒருமையில் பேசிப்பார்த்ததே இல்லை. சிறுகுழந்தைகளாக இருந்தாலும் சரி, கணவன், மனைவியாக இருந்தாலும் சரி, இத்தனை மரியாதையுடன் அழைப்பதை வேறேங்கும் பார்க்க இயலாது. சிறுவயதிலிருந்தே பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும்  கொடுக்கும்போது “பெண்களைப் பாதுகாக்கவேண்டும்” எனக் கற்பிப்பதே தேவையற்றதாகிவிடுகிறதுதானே? பண்பாட்டினை மொழியே கற்பித்துவிடும்தானே? மேலும் சில சான்றுகளைப் பார்ப்போமா?

 இயல்பான பேச்சுவழக்கு

ஈழத்தமிழ் - பேச்சுவழக்கு

என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

என்ன கதைக்கிறீர்கள்?

டீ

தேத்தண்ணி 

ஆம்

ஓம்

ஒன்னுமில்லை,காலி

வெறுமையாயிருக்கு

ரொம்ப

கனக்க

கலாட்டா

குழப்படி

தூக்கம்

நித்திரை

ஜுரம்

கா(ய்)ச்சல்

அழகு

வடிவு

ஓவியம் வரை

கீறு

படி

வாசி

ஷூ, செருப்பு

சப்பாத்து

ஆடை

உடுப்பு

பல்துலக்கு

பல்தீட்டு

உட்கார்

இரு

ஸ்கூல்

பள்ளிக்கூடம்

ஒழுங்காக

முறையாக

சொல்ல முடியாது

சொல்ல இயலாது

சமையல்

குசினி

புரிஞ்சுது

விளங்குது

சாய்ங்காலத்தில்

பின் நேரத்தில்

 

இப்படி ஒவ்வொரு சொல்லையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இச்சொற்களுள் மிகவும் வருந்தத்தக்க சொல் ஒன்று உண்டு. குழந்தைகள் ஸ்கூலுக்குப் போவதுதான். “ஸ்கூலுக்குப் போவதில் என்ன வருத்தம்?” எனக் கேட்காதீர்கள். பள்ளிக்கூடத்தை “ஸ்கூல்” என்றுதான் பல குழந்தைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதனை எண்ணிப்பார்த்தால் தமிழ்க்குழந்தைகள் தாய்மொழி மறந்ததைப் புரிந்துகொள்ளமுடிகிறதல்லவா?

தமிழில் உயர்ந்த சொல்லான “ஓம்” என்னும் சொல்லை ஈழத்தமிழர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு நாளில் பலமுறை சொல்லிக்கொண்டிருப்பது எத்தனை அழகு. தமிழில் ‘ஆம்’ என்பதைத்தான் அப்படிச்சொல்லிப் பழகியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ தமிழ்க்கடவுளின் அருளோடு தமிழ் வளம் குறையாமல் அவர்களுக்கு வசப்பட்டிருக்கிறது.

“நான் உங்களைக் கீறட்டுமா?” என ஒரு குழந்தை உங்களிடம் கேட்டால் அச்சம்தானே வரும். ஆனால், ஈழத்தமிழ் என அறிந்தால் மகிழ்ச்சி உண்டாகும். “நான் உங்களை ஓவியமாக வரையட்டுமா?” எனஒரு குழந்தைகேட்டால் மகிழாதவர்கள் யார்?

பற்களைத் துலக்குவது விட தீட்டுவது நல்லது என்று பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிலர் பற்களை பாத்திரம் துலக்குவதுபோல் துலக்கி பற்களுக்குத் தேவையான சத்தையும் துலக்கிவிடுவார்கள். இதனால் ஈறுகளும் கெட்டுவிடும். அப்படி இல்லாமல் ஈழத்தமிழில் தீட்டுவது அழகுதானே. பற்களுக்கு மட்டுமன்று ; மொழிக்கும்தான்.

ஈழத்தமிழ்க்குழந்தைகள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது. ஆங்கிலப்பள்ளியில் பயிலும் தமிழ்க்குழந்தைகள் ஆங்கிலம் சரளமாகப் (தடையின்றிப்) பேசுவதைப்போல.  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக